“நீ இப்பொழுது சாகப் போகிறாய்!”—கற்பழிப்பவன் ஒருவன் கிறிஸ்தவ வீட்டில் நுழைகிறான்
முரட்டுக் கைகள் என்னை நெறித்தன. நான் கூச்சல் போடுவதற்குப் போராடினேன்.
“அதை நிறுத்து! உன் கூச்சலை நிறுத்தினால், நான் உன்னைக் காயப்படுத்த மாட்டேன்” என்று என் கழுத்தை அதிக கடினமாக நெருக்கி என்னைப் பயமுறுத்தினான்.
ஆனால் நான் அவனை நம்பவில்லை, அவனுக்குக் கீழ்ப்படியவுமில்லை. கூச்சல் போடுவதற்கு முயற்ச்சித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய முகத்தைக் கீறினேன், அவன் போட்டிருந்த கண்ணாடியைக் கீழே தள்ளினேன், அவனுடைய போலிப் பற்களைப் பிடித்து இழுத்தேன். என்னைத் தொடுவதற்கும் என்னை அடக்குவதற்கும் முயற்சி செய்தபோது, என்னுடைய கைவிரல் நகங்களை அவனுடைய கண்களின் குழிக்குள் ஆழமாகப் பதித்தேன். மேலும் நான் சப்தமாக கூச்சலிட்டேன். அவனுடைய விரல்கள் என்னுடைய வாய் அருகே வந்தபோது, எனக்கிருந்த முழு பலத்தோடு கடித்தேன்.
நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் பயப்படவில்லை—பயம் பிறகுதானே வந்தது. இப்பொழுது நான் அதிக கோபமாக இருந்தேன். இந்தச் சண்டாளன் என் வீட்டிற்குள்ளே புகுந்து என்னைக் கற்பழிக்க முடியாது! இங்கேயும் அதைச் செய்யமுடியாது வேறு எங்கேயும் அதைச் செய்ய அவன் முடியாது!
ஆனால் அவன் தொடர்ந்து முயற்சித்தான். அருகேயிருந்த ஒரு பெல்டை எடுத்து முதல் தடவையாக என்னுடைய கைகளை முதுகுக்குப் பின்னாலே கட்டினான்—நான் அதைச் சுலபமாக அவிழ்த்துவிட்டதன் காரணமாக, பல தடவைகள் அவன் என்னை அவ்வாறு கட்ட முயற்சி செய்ய வேண்டியதாக இருந்தது. என்னுடைய கழுத்தைச் சுற்றி ஒரு கையை போட்டுக் கொண்டு, தன்னுடைய பல் வரிசையையும் கண்ணாடியையும் கண்டுபிடிக்க தரையில் தேடினான். தீடிரென்று நான் என்னை விடுவித்துக் கொண்டு, விஸ்தரிக்க முடியாத வகையில் சாமான்களை இங்குமங்கும் தூக்கி எரிய ஆரம்பித்தேன். எனக்குப் பைத்தியம் பிடித்ததைப் போன்று அர்த்தமற்றவிதத்தில் கூச்சலிட்டேன்.
என்னை எதிர்த்தவன் சிறிது நேரம் திகைத்துப் போனான், பிறகு சற்று நிறுத்தி, “உனக்கு என்ன ஆகிவிட்டது?” என்றான். அவன் நிறுத்திய போது, நான் தப்பித்து ஓட பார்த்தேன், ஆனால் அவன் என்னைப் பிடித்துக் கொண்டு படுக்கை அறைக்கு பலவந்தமாக அழைத்துச் சென்று, படுக்கையில் என்னைக் கிடத்தினான். என் கைகளை மறுபடியும் கட்டிய பிறகு, என்னுடைய ஆடைகளை ஓரளவு கழற்றினான். நான் நெளிந்து, அவன் என்னை விட்டுவிடும்படிச்செய்ய உதைத்தேன். அவனுடைய ஆபாசமான பேச்சையும், அவன் பலாத்காரமாக என்னை ஈடுபடுத்தும்படி முயற்சித்துக் கொண்டிருந்த அந்த கேவலமான செயலையும் நான் வெறுத்தேன்!
கடைசி முறையாக, பெல்ட் கட்டப்பட்ட நிலையிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு, வெளியிலுள்ள கதவினிடமாக செல்வதற்கு மெதுவாக நகர்ந்தேன். கைப்பிடியைப் பற்றினேன், ஆனால் அதைத் திருப்பியபோது, என்னைப் பின்னாலிருந்து பிடித்து இழுத்து தரையில் வீசினான். நான் அருகிருந்த ஒரு சமையல் கத்தியைப் பிடித்து, அவனுடைய கால்களில் விட்டெறிந்தேன். “முடிந்தது உன் கதை,” என்று அவன் உறுமினான். “இப்போது நீ சாகப் போகிறாய்!” என்னுடைய தலையைப் பிடித்து, சுவற்றில் இடிக்க ஆரம்பித்த போது, நான் உணர்ச்சியில்லாமல் கீழே விழுந்தேன்.
நான் அதிக கவனமாக இருந்திருக்க வேண்டுமென்று உணர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு வெளியே தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்கு நான் அதிக ஜாக்கிரதையாக இருந்தேன். என்னுடைய கிறிஸ்தவ கணவனோடே நான் எப்போதும் பயணம் செய்தேன். இவ்வகையான குற்றவாளிகள் இருந்த இடங்களைத் தவிர்த்தேன், நான் எப்போதும் ஒழுக்கமான ஆடைகளையே அணிந்தேன். கற்பழிக்கும் ஒருவன் எங்களுடைய வீட்டிற்குள்ளே வந்து என்னைத் தாக்கும் நச்சுப் பண்புடையவனாக இருப்பான் என்று நான் சற்றும் நினைக்கவேயில்லை.
எங்களுடைய அயலக மனையில் இந்த மனிதன் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தான். வேலை நடக்கும் மனையிலுள்ள இயந்திர கருவிகளுக்குத் தேவையான மின் சக்தியைப் பெறுவதற்கு எங்களுடைய வீட்டிலிருந்து ஒரு மின்சார இணைப்பை எடுப்பதற்காக கட்டிட காண்ட்ராக்டர் ஏற்பாடு செய்திருந்தார். எப்போதாவது, இணைப்பின் மின் அளவு அதிகரிக்கும் போது, வேலையாள் ஒருவன் எங்களுடைய தளத்திலிருக்கும் மின் தடையை சர்கியூட் தடையை சரியாக பொருத்திட வருவான். அது நடைமுறையான ஏற்பாடாகதான் இருந்தது, ஆனால் ஞானமுள்ள ஒன்றாக இல்லை.
பாதுகாப்பு இல்லாத சமயத்தில் என்னைப் பிடிக்க தந்திரமாகத் திட்டமிட்டிருந்தான். அதிர்ச்சியடைந்த நிலையில், நான் பயந்து, கவலைப்படாமல் இடம் கொடுப்பேன் என்று அவன் எதிர்பார்த்திருக்கக்கூடும். அவன் என்னை அணைக்க வந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் பயந்து இடம் கொடுக்கவில்லை. அதைக் குறித்து யோசிக்க நான் சற்றும் நிற்கவில்லை. நான் உடனே பிரதிபலித்தேன், அதாவது கூச்சலிடுவது, கீறுவது, உதைப்பது மற்றும் கடிப்பது போன்ற காரியங்களைச் செய்தேன். நான் செய்திருக்கக் கூடிய சிறந்த காரியம் இதுவே, ஏனெனில் நான் கடுமையாகத் திரும்ப தாக்கினதானது, அவன் ஆச்சரியப்படும்படி செய்தது. தன் மீதோ அல்லது என் மீதோ முழு அதிகாரத்தையுடையவனாக இல்லை என்று அறிந்து கொண்டதானது எனக்கு மன அளவில் விசேஷ ஒரு கட்டியெழுப்புதலை அளித்தது. நான் அவனை எதிர்க்க அதிக தீர்மானமானேன், நான் வெற்றிப் பெறுவேன் என்ற நம்பிக்கையை அதிகமாய் அளித்தது.
நான் மறுபடியும் உணர்வைப் பெறுகையில், கூட்ட நெருக்கடியின் மத்தியில் செல்லும் ஒரு காரின் முன் இருக்கையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டேன். அதே பெல்ட் இப்போது என் கழுத்தைச் சுற்றி நாய்வார் போன்று இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. ஓட்டும் போது, அவன் அதை இறுக பிடித்திருந்தான். என்னுடைய மனது தெளிவான பிறகு, நான் எங்கிருக்கிறேன், நான் இங்கே எப்படி வந்தேன் போன்வற்றை யோசிக்க ஆரம்பித்தேன்.
கார் வீதியை விட்டு ஒரு பக்கமாக வந்துவிடும்படிச் செய்ய, என் கைமுட்டியைக் கொண்டு, ‘ஸ்டீயரிங்’ சக்கரத்தை நான் திருப்பிவிட முயற்ச்சித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் மூளைகுழம்பிய இந்த மனிதன் என்னைக் கற்பழிப்பதைவிட, என்னை ஒழித்துக் கட்டுவதில் தானே இப்போது அதிக கவனமுள்ளவனாக இருந்தான் என்று நான் உறுதியாக இருந்தேன். நான் அவனைக் காட்டிக் கொடுத்துவிடாதபடி அவன் என்னைக் கொன்றுவிடக்கூடும். ஒருமணி நேரமாக என் முட்டியைக் கொண்டு மோதிக் கொண்டு, நான் விடாப்பிடியாக போராடினது அவனையும் களைப்படையச் செய்தது. முற்றிலும் தளர்ச்சியடைந்து மனங்குழம்பிய நிலையில், கடைசியில் காரை தெரு ஓரத்தில் நிறுத்தி, என்னை வெளியே தள்ளினான். இன்னொருவர் தன் காரை நிறுத்தி, என்னை அதில் ஏற்றிக்கொண்டு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால் நான் வென்றுவிட்டேன்! நான் கற்பழிக்கப்படவில்லை! என்னுடைய மனச்சாட்சி சுத்தமாக இருந்தது, என்னுடைய சுய-மரியாதையையும் கெளரவத்தையும் நன்றாக காத்துக்கொண்டேன். சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவுக்கு என்னுடைய உத்தமத்தைக் காத்துக் கொண்டேன்!
நான் மருத்துவ மனையில் தங்கின அடுத்த சில நாட்களின்போது, பெருமிதம் கொண்டவளாகவும் பெருந்தன்மையான உணர்வை உடையவளாகவும் இருந்தேன் என்று சொல்ல முடியாது. நான் அதிக குலுக்கப்பட்ட நிலையில் இருந்தேன், உடம்பு முழுவதும் வேதனை அனுபவித்து, பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தேன். தாக்கப்பட்ட போது எனக்கு இல்லாத பயம் இப்போது பெரும் அலைகளைப்போல் என்மீது வந்தது. என்ன நடந்திருக்கக்கூடும் என்ற பயனற்ற எண்ணங்கள் என் மனதை நெருக்கியது. இந்தச் சமயத்தில் தானே, காவல்துறை கண்டுபிடிப்பாளர்களால் வினாவப்பட்டேன். இந்த அரக்கன் கற்பழித்த குற்றத்திற்காகத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஆறு வாரங்களுக்கு முன்பு தானே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான் என்பதை அறிந்தபோது அது என்னைத் திடுக்கிடச்செய்தது.
மருத்துவமனையிலிருந்து நான் வெளிவந்த அன்று, காவல் நிலயத்திற்குச் சென்று இந்தமனிதன் யார் என்று அடையாளம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம், குற்றச்சாட்டுகளை அழுத்தி காண்பிப்தே என் நோக்கமாக இருந்தது. அவன் தணடனை பெறுவதை நான் பார்ப்பதானது, அவன் தாக்கும் மற்ற பெண்களுக்கு நான் செய்யும் ஒரு காரியமாகவும், தவறை சரி செய்வதற்கு ஒரு வழி என்றும் என்னுடைய வாழ்க்கையை முழு கட்டுக்குள் வைத்திருக்கிறேன் என்பதைக் காண்பிப்பதாகவும் இருந்தது. வரிசையாக நின்றவர்களில் அவனைக் கண்டு கொள்வது சுலபமாக இருந்தது, முகத்தில் கட்டுகளையும் கையில் கயிற்றையும் உடையவனாக இருந்தவன் அவனே.
அதைத் தொடர்ந்து வந்த வாரங்கள் மருத்துவமனையிலும் சரி, வீட்டிலும் சரி, அனேக கார்டுகள், கடிதங்கள் மற்றும் யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் சபைகளிலுள்ள உடன் சாட்சிகளின் விஜயங்கள் என்னை உற்சாகப்படுத்தியது. சிலர் என்னைக் குறித்துப் பெருமையாக இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். சிலர் என்னைக் கதாநாயகி என்று அழைத்தனர், நான் அப்படி இல்லை. தீங்கான வழியிலிருந்து நான் வெளியேற முடியாத போது, நான் வெறுமென பைபிள் படிப்பிலிருந்து கற்ற காரியங்களை வாழ்க்கையில் பொருத்தினேன், அது உண்மையிலேயே பயனுள்ளதாயிருந்தது.
நான் ஒரு சாதாரண ஆளாக இருந்ததினால், நான் குணமடைந்து வந்த சமயத்தில் எனக்கு உறுதியளிக்கப்பட வேண்டியதாயிருந்தது. சோர்வுண்டாக்கும் சில நாட்களும் இருந்தன. சில நாட்களுக்கு என்னால் வெளியே போகவுங்கூட முடியவில்லை. சில நாட்களில் தைரியமாக இருப்பது போன்ற வேஷம் போட முடிந்தது. ஆனால் நான் சில சமயங்களில் நடுங்கியதையும், என்னுடைய மனதும் இருதயமும் இந்தக் கொடுங்கனவினால் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டு மறக்க முடியாமல் அதிக அழுத்தம் இருந்ததையும் என் கணவர் உங்களுக்குச் சொல்லமுடியும். நான் குணமடைவதற்கு ஒரே பெரிய உதவியானது, யெகோவா தேவனுடைய உதவியோடு, என்னால் முடிந்த அளவுக்குச் சரியானதைச் செய்தேன் என்பதாகும். நான் சந்தோஷமாக இருந்த சமயங்களின் போதும் அதற்கான காரணத்தையும் கண்டடைந்தேன். பின்வரும் பைபிள் வசனங்கள் தானே அடிக்கடி எனக்கு ஆறுதலாயிருந்தது:
“கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவனை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தான், அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய் அவர்கள் மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன். பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது. வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று.”—உபாகமம் 22:23-27.
இந்த எளிமையான வார்த்தைகளை நான் அறிந்திருப்பதற்கு ஆழ்ந்த விதத்தில் நன்றியுள்வளாக இருக்கிறேன். ஒழுக்க சம்பந்தமாக என் கடமை என்ன என்பதை அவை கற்பித்திருக்கின்றன. குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் அவை தடுத்திருக்கிறது. அவற்றின் காரணமாக, நான் என்ன செய்ய வேண்டுமென்று நிச்சயமாக அறிந்திருந்தேன். நான் கூச்சல் போடவும், அதற்கு மேலாக என்னால் எதிர்த்துப் போராடவும் முடிந்தது. பைபிளின் அறிவுரைகளை நம்பினேன், அவற்றை அஸ்திபாரங்களாக உணர்ந்தேன். நானும் என் கணவரும் அடிக்கடி ஜெபம் செய்தோம்; மீண்டும் எனக்குப் பலமும் திட மனதும் ஏற்பட்டது.
எந்த ஒரு பெண்ணும் கற்பழித்தலுக்கும் ஒரு கற்பழித்தல் முயற்சிக்கும் பலியாகக்கூடாது என்பது என் விருப்பம். ஆனால் ஐக்கியமாகாணங்களில் 7 நிமிடத்திற்கு ஒரு கற்பழிப்பு நடக்கிறது என்று ஐ.மா. குற்றவியல் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட ஒரே மாதிரியான குற்றச்செயல்கள்—ஐக்கிய மாகாணங்களில் குற்றச்செயல்-ன் (1983-ம் வருட பதிப்பு, பக்கம் 5) மூலம் தெரியவருகிறது. என்னுடைய விஷயத்தில், நான் யெகோவாவின் மீது சார்ந்திருந்தேன், அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்தேன், நான் கூச்சல் போட்டேன். அதற்கு மேலும் நான் போராடினேன்.
சில நாட்களுக்குப் பின்பு என்னைத் தாக்கின இந்தக் கற்பழிக்கும் பேர்வழி விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டான். இந்த வருடம் பிப்ரவரி 7, அன்று பின்வரும் குற்றங்களை அவன் நடப்பித்ததாக தீர்ப்பளிக்கப்பட்டான்: கொலை செய்ய முயற்சித்தல், இரண்டாம் நிலை; திருடு, முதல் நிலை; கற்பழிக்க முயற்சித்தல், முதல் நிலை; கடத்திச் செல்லுதல், இரண்டாம் நிலை; கடவுள் மீதுள்ள தைரியமும் நம்பிக்கையும் மனிதனைப் பற்றிய எந்தப் பயத்தைவிட மேலாக நிற்க வேண்டும். தாவீதுடைய சங்கீதம் நம்முடைய சங்கீதமாகவும் இருக்கட்டும், பின்வரும் வார்த்தைகளில் திடநம்பிக்கையுடையவர்களாயிருப்போமாக: “தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?—சங்கீதம் 56:11.—அளிக்கப்பட்டது. (g86 5/22)
[பக்கம் 21-ன் பெட்டி]
உங்களைத் தாக்குபவனை நீங்கள் ஏன் முதலிலிருந்தே எதிர்த்துப் போராட வேண்டும்:
1. தாக்குபவன் மிரண்டு உங்களை விட்டுவிடுவான்
2. தாக்குபவனைச் செயலற்றவனாக்கி நீங்கள் ஓடிவிட முடியும்
3. தாக்குபவன் காமத் தூண்டுதலை இழந்து, சோர்ந்து, பின்வாங்கிடக்கூடும்
4. மற்றவர்கள் உங்கள் உதவிக்கு வர அவர்களுடைய கவனத்தைத் பெற்றிடக்கூடும்
5. உங்களுடைய மனச்சாட்சி தெளிவாயிருக்கும் (நீங்கள் கற்பழிக்கப்பட்டாலுங்கூட உங்களுடைய சுய மரியாதையை அல்லது கடவுளுக்கு முன்னால் சுத்தமாயிருக்கும் நிலையை இழந்துவிடமாட்டீர்கள்)
6. தாக்குபவனைக் காயப்படுத்துவது, காவல்துறையினர் அவனை அடையாளங்கணடுகொள்ள உதவும் (உதாரணமாக, உங்கள் நகங்களில் அவனுடைய தோல் அல்லது சதைத் துணுக்குகள்)