பனியோ மழையோ பெருமளவோ தபால் பட்டுவாடாவை நிறுத்துவதில்லை
“தபால்காரர்கள் இருக்கும்வரை, வாழ்க்கை மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும்.” —உவில்லியம் ஜேம்ஸ், ஐ.மா.-வின் தத்துவஞானி (1842-1910)
பெரும்பாலும் ஒவ்வொருவருக்கும் தபால் சேவையைப்பற்றி சொல்வதற்கு ஒரு கோபக்கதை இருக்கும். அவர் போட்ட கடிதம் எதிர்பார்த்ததைவிட வாரங்கள் அல்லது மாதங்கள் கழித்துக் கிடைத்தது, தபால் கட்டணங்கள் மிக வேகமாக உயர்ந்துகொண்டே போகின்றன, அல்லது தபால் நிலையத்தில் வரிசையில் காத்திருப்பது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. அக்டோபர் 1966-ல், பேரழிவு ஓர் அஞ்சல் அமைப்பை அச்சுறுத்தியது. “சிகாகோவின் க்ராஸ்ரோட்ஸில் உள்ள, ஐ.மா.-வின் அந்நாளைய மிகப் பெரிய தபால் நிலையம், நெருக்கடியினால் செயலற்றுப்போய், தபால்களைக் கையாளமுடியாமல், அநேகமாய் முழுவதும் அடைக்கப்பட்டது,” என ஐ.மா.-வின் தபால்சேவையின் பிரதிநிதி ஒருவர் விழித்தெழு! பத்திரிகைக்குச் சொன்னார்.
தபால் போக்குவரத்துத் தடைபடாமல் இருப்பதையும், உங்களுடைய கடிதம் அதற்கு உரிய இடத்திற்குச் சென்று சேருவதையும் நிச்சயப்படுத்திக்கொள்ள என்ன செய்யப்பட்டிருக்கிறது? நீங்கள் பெறும் சேவையை முன்னேற்றுவிக்க உங்களால் ஏதாவது செய்யக்கூடுமா? கடித பட்டுவாடா முறைகளிலும், நம்பகத்திலும் பல நூற்றாண்டுகளாக, குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
பண்டைக்கால தபால் சேவை
தொடக்க காலத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட தபால் சேவைகள் அரசாங்க உபயோகத்துக்காக மட்டுமே இருந்துவந்தன. அதேபோன்ற அமைப்புகள் பண்டைக்கால சீனா, எகிப்து, அசீரியா, பெர்சியா, கிரீஸ் போன்ற நாடுகளில் இருந்துவந்தன. ரோம அஞ்சல் அமைப்பு கர்ஸஸ் பப்ளிகஸ் (cursus publicus) என்று பெயரிடப்பட்டது. இதன் நேர்ப்பொருள் “பொது வழி” என அர்த்தப்படும்; எனினும், இது முக்கியமாக அரசாங்கத்தின் தனிப்பட்ட சேவையாக இருந்தது. ஆர்வமூட்டும்வகையில், எபேசுவிலும், கொலோசேயிலும் உள்ள சபைகளுக்கும் மற்றும் பிலேமோனுக்கும் பைபிள் எழுத்தாளர் பவுலால் எழுதப்பட்ட கடிதங்கள், ரோம அரசு தபால் சேவைமூலம் அல்ல ஆனால் சொந்த ஏற்பாட்டின்மூலம் அனுப்பப்பட்டன.—எபேசியர் 6:21, 22; கொலோசெயர் 4:7-9; பிலேமோன் 21, 22.
போக்குவரத்தும், கடித பட்டுவாடாவும் 19-ம் நூற்றாண்டு வரை வெகு குறைவான மாற்றத்தையே அடைந்துள்ளன. ஆனால் தனியார் தபால் சேவையைக் கட்டுப்படுத்துவது அல்லது ரத்து செய்வது போன்றவற்றைப்பற்றிய கருத்துக்கள் முன்னதாகவே உருவாகத் தொடங்கின. ஏன்? ஏனென்றால் அதிகாரங்கள் தனியார் தொலைத்தொடர்பு விவகாரத்தின்மீது அதிகாரம் செலுத்தும் தேவையை உணர்ந்தன. தி யுனிவர்சல் போஸ்டல் யூனியன் என்ற தனது புத்தகத்தில், ஜார்ஜ் A. காடிங், இளையவர் தபால் சேவையின்மீது அரசாங்க தனியுரிமையை ஏற்படுத்துவதற்கான இரண்டு பெரிய காரணங்களைக் கொடுக்கிறார். முதலாவது, கிடைக்கக்கூடிய வருமானம் “அரசாங்க சேவையை ஊக்குவிக்க ஒரு மிகச் சிறந்த வழியாக இருந்தது.” இரண்டாவது, அதனால் ஏற்படும் பாதுகாப்பு தேசத்தின் எதிரிகளிடமிருந்து வரும் கடிதப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதில் ஓர் உதவியாக இருந்தது.
இதன் காரணமாக, பிரெஞ்சு ராஜாங்க தபால் 1464-ல் பொதுமக்களின் சில அஞ்சல் தொகுதிகளைக் கையாளத் தொடங்கிற்று. இங்கிலாந்தின் சார்லஸ் I, 1635-ல் ராஜாங்க தபால் சேவையைப் பொதுமக்களுக்குத் திறந்துவைத்தார். மற்ற அரசாங்கங்களும் இதேபோல நடவடிக்கை எடுத்தன. இதனால் தபால் சேவையின்மீது தனியுரிமை பெற்று, மக்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்பாட்டுக்குக்கீழ் கொண்டுவந்தன.
ரோமப் பேரரசு தன்னுடைய தபால் இணைப்பமைப்பைப் பிரிட்டனுக்குள் விரிவுபடுத்தியதுபோலவே, பிரிட்டன் முற்கால அமெரிக்க தபால் அமைப்பைக் கட்டுப்படுத்தியது. ரோம தபால் அமைப்புப் பெரும்பாலான பெர்சிய தபால் ஏற்பாட்டையே கடைப்பிடித்தது. இது இடைமாற்றீடு ஏற்பாட்டில் குதிரைகள் மூலம் தகவல்களைக் கொண்டுச்செல்லும் தபால் அமைப்பாகும். இது பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு, அநேக தபால் அமைப்புகள் பெர்சியாவைத் தோற்றமாகக் கொண்டுள்ளதைக் காணமுடியும்.
குடியேற்ற அமெரிக்க தபால் அமைப்பு 1639-ல் வெளிநாட்டுத் தபால்களையும், 1673-ல் பாஸ்டன் மற்றும் நியூ யார்க் நகரங்களுக்கிடையே உள்நாட்டுத் தபால்களையும் அலுவல்முறையில் கையாளத் தொடங்கியது. குறுகிய காலமே நிலைத்திருந்த அந்தத் தபால்வழி, இப்பொழுது ஐ.மா. நெடுஞ்சாலை 1-ன் பாகமாயிருக்கிற, பாஸ்டன் போஸ்ட் ரோடு என்றழைக்கப்பட்டது. பின்னர் 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதியில், குதிரையால் இழுக்கப்படும் தபால் வண்டிகளிலும் நீராவிப்படகுகளிலும் இருப்புப்பாதை மூலமாகவும் தபால் கொண்டுச்செல்லப்பட்டது. நியூ யார்க்கிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவுக்கும், கலிபோர்னியாவுக்கும் கப்பல் மூலம் தபால் பட்டுவாடா செய்ய ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட காலமும், குதிரையால் இழுக்கப்படும் தபால் வண்டியானால் அதைவிட அதிக காலமும் தேவைப்பட்டது.
குதிரை விரைவு தபால் அமைப்பு
ஐக்கிய மாகாணங்களில் கண்டங்கள் கடந்து சென்று பட்டுவாடா செய்வதைத் துரிதப்படுத்த, குதிரையால் இழுக்கப்படும் தபால் வண்டி அல்லது கப்பல் ஆகியவற்றைவிட வேறு ஏதாவது தேவைப்பட்டது. பிரச்னையை எது தீர்த்துவைக்கும்? நூற்றாண்டுகள் பழக்கமுடைய தபால் கொண்டுச்செல்லும் குதிரை மற்றும் சவாரிக்காரர் முறை பயன்படுத்தப்பட்டது. ஹிஸ்டரி ஆஃப் தி யு.எஸ். போஸ்டல் சர்வீஸ் 1775-1984, மார்ச் 1860-ன் செய்தித்தாள் விளம்பரத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறது:
“தேவை: மெலிந்த, தளர்வடையாத, 18 வயதிற்கு மேற்படாத இளம் வயதினர். திறமைமிக்க சவாரிக்காரர்களாயும், தினமும் மரண ஆபத்தை எதிர்ப்பட மனமுள்ளவராயும் இருக்கவேண்டும். அனாதைகள் முன்னுரிமை பெறுவர்.”
அமர்த்தப்பட்டோர் “உண்மையாய் நடந்துகொள்வர் என்றும், தங்களுடைய விலங்குகளை ‘இழிவுபடுத்தவோ,’ சண்டைக்கு ஏவவோ, அல்லது துர்ப்பிரயோகம் செய்யவோ போவதில்லை என்றும் பைபிள்மீது ஆணையிட வேண்டியிருந்தது.” இதுதான் பிரபலமான அந்தக் குதிரை விரைவு தபால் அமைப்பு. இது மிஸ்ஸெளரியின் செயின்ட் ஜோசப்புக்கும் ஐக்கிய மாகாணங்களின் மேற்குக் கடற்கரைக்கும் இடையில் உள்ள 3,200 கிலோமீட்டர் வழியின் பட்டுவாடா சமயத்தைப் பத்து நாட்களுக்குக் குறைத்தது. உச்ச வேகமாக 15 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் சவாரிசெய்து, தாமதமின்றி குதிரைகளை மாற்றி, இந்த இளஞ்சவாரிக்காரர்கள் மலைகளின்மீதும், சமவெளிகளிலும், நதிகளிலும், எல்லா தட்பவெப்பநிலைகளிலும் விரைந்து சென்றனர். இந்தக் குதிரை விரைவு தபால் அமைப்பு உபயோகத்தில் இருந்த காலமெல்லாம், அதிவேகக் குதிரைகளைக் கொண்டிருந்ததன் காரணத்தால், துணிச்சலுள்ள இந்தச் சவாரிக்காரர்கள், அமெரிக்க இந்தியர்களையும், வழிப்பறிக் கொள்ளைக்காரர்களையும் முந்திக்கொண்டு செல்லமுடிந்தது; இருப்பினும், ஒரு சவாரிக்காரர் கொல்லப்பட்டார்.
ஏப்ரல் 3, 1860-லிருந்து அக்டோபர் 26, 1861 வரை மட்டுமே நடைமுறையிலிருந்த இந்தத் துணிச்சலான தபால் சேவையைக் கட்டுக்கதை மிகைப்படுத்திவிட்டிருக்கிறது. கண்டங்கள் கடந்துசெல்லும் தந்திசேவை தொடங்கியதோடு, இது நடைமுறையிலில்லாது போய்விட்டது. அமெரிக்காவின் தபால் வரலாற்றின் வண்ணமிகு அத்தியாயங்களில் ஒன்று இவ்வாறு முடிவுக்குக் கொண்டுவரப்படுகிறது.
நவீன முறைகள்
இன்று ஒரு கடிதத்தை அஞ்சல் செய்து, அது எவ்வாறு கையாளப்படுகிறது என்பதைப் பார்க்கலாம். நீங்கள் அந்தச் சேவையை எப்படிப் பயன்படுத்துகிறீர்களோ அதைப்பொறுத்துப் பட்டுவாடா சமயம் மாறலாம்.
அந்த நாளுக்குரிய உங்களுடைய வேலைகளை முடிக்கும்போது, சேர்ந்துகிடக்கும் கடிதங்கள் அஞ்சல் செய்யப்படுகின்றன. இது நம்மில் அநேகருடைய வழக்கமுறையாதலால், அந்நாளின் பிற்பகுதியில் அஞ்சல் ஓடையில் ஓர் அஞ்சல் வெள்ளம் உட்புகுகிறது. இதனால், முன்னதாகவே அஞ்சல் செய்வது, உங்களுடைய கடிதங்கள் ஒரு சில மணிநேரங்களை அனுகூலமாக பெற்று, அனுதின அஞ்சல் அலையின் முன் வைக்கப்படுகிறது. ஐக்கிய மாகாணங்களில், 1991-ல் தபால் போக்குவரத்தின் அனுதின சராசரி அளவு 45 கோடியே 40 லட்சம் கடிதங்களாக இருந்தது; நியூ யார்க் நகரத்தில் 1 கோடியே 33 லட்சம் கடிதங்கள். பிரான்ஸில், 7 கோடியே 10 லட்சம் கடிதங்கள்; பாரிஸில் 55 லட்சம் கடிதங்கள். ஜப்பானில், 6 கோடியே 25 லட்சம் கடிதங்கள்; டோக்கியோவில், 1 கோடியே 70 லட்சம் கடிதங்களாகும். பிரிட்டனில், 6 கோடி கடிதங்களாக இருந்தது.
தெருவில் அல்லது ஒரு சிறிய தபால் நிலையத்திலுள்ள தபால் பெட்டியில் அஞ்சல் செய்யப்பட்ட கடிதங்கள், ஒரு பெரிய தபால் நிலையத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. தபால்பெட்டி திறக்கப்படும் நேரத்திற்குச் சற்றுமுன்போ, நடைமுறையானால் பெரிய தபால் நிலையங்களுக்கருகில் உள்ள பெட்டியிலோ கடிதங்களை அஞ்சல் செய்வது பட்டுவாடா நேரத்தை முன்னேற்றுவிக்கிறது.
உள்ளூர் தபால் நிலையத்தில், உங்களுடைய கடிதம் பையில் அடைக்கப்பட்டுப் பிரிவு மையம் (sectional center) என்றழைக்கப்படும் தபால் அலுவலகத்திற்கு ஊர்தியில் கொண்டுச்செல்லப்படுகிறது. இங்குத் தானாக இயங்கும் அஞ்சல் பிரிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு, அறிவுக்கூர்மையோடு உண்டாக்கப்பட்ட இயந்திரங்களை உபயோகித்து, கடத்தும்பட்டைகளில் (conveyor belts) போய்க்கொண்டிருக்கும்போது கடிதங்கள் தானாக சுண்டி புரட்டிவிடப்பட்டு, பொறுக்கியெடுத்தல், முகம் மேலாகக் காட்டப்படுதல், அஞ்சல் தலைகள் கோடிட்டழித்தல், பிரித்தல், அடுக்குதல் போன்ற நிலைகளைக் கடந்து செல்கின்றன. முகம் மேலாகக் காட்டி தபால் தலைகளைக் கோடிட்டழிக்கும் இயந்திரம் (facer-canceler) என்றழைக்கப்படும் இதைப்போன்ற ஓர் இயந்திரம், ஒரு மணிநேரத்திற்கு 27,000 கடிதங்களைக் கோடிட்டழித்து அஞ்சல் அடையாளக்குறியிடுவதற்காக வேகமாகக் கையாளுகிறது.
அனுப்புக் கடிதங்கள் (outgoing mail) பிற்பகலின்போதும், தொடர்ந்து இரவிலும் பிரிக்கப்படுகின்றன. எளிதில் வாசிக்கப்படமுடிந்த—தட்டச்சுசெய்யப்பட்ட, அச்சடிக்கப்பட்ட, அல்லது கையால் எழுதப்பட்ட—விலாசங்களைக்கொண்ட கடிதங்கள் இயந்திரத்தால் பிரிக்கப்படலாம். புதிய இயந்திரங்கள் அஞ்சல் பட்டுவாடா பிரிவு எண் அல்லது அஞ்சல் குறியீட்டு எண்; நகரம், மாநிலம், அல்லது மாகாணம்; தெரு விலாசம் போன்றவை அடங்கியுள்ள இரண்டு வரிகளை அடையாளம் கண்டுகொள்கிறது.
இப்படிப்பட்ட இயந்திரங்களும் சம்பந்தப்பட்ட தளவாடங்களும், மணிக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களிலுள்ள விலாசங்களைத் தானாகவே “வாசித்து,” விசேஷித்த அஞ்சல் குறியீடுகளை அவற்றின்மேல் தானாகவே அச்சடிக்கின்றன. இயந்திரங்களால் இவ்விதம் கையாளப்படமுடியாத முதல்-வகுப்புக் கடித அஞ்சல்கள், மணிக்குச் சராசரியாக 800 கடிதங்கள் கையால் பிரிக்கப்படவேண்டும். ஐக்கிய மாகாணங்களில் அஞ்சல் பட்டுவாடா பிரிவு எண்ணோடு (மற்ற அநேக நாடுகளில் அஞ்சல் குறியீடு) எளிதில் வாசிக்கப்படமுடிகிற விலாசம், உங்களுடைய கடிதம் துரிதமான, வெகுதிறம்பட்ட முறைகளில் கையாளப்படுவதை அனுமதிக்கின்றன.
அனுப்புக் கடிதங்கள் விமானம் அல்லது சாலைப் போக்குவரத்து மூலம் அனுப்பப்படுகின்றன. முதல்-வகுப்பு அஞ்சல்கள் குறிப்பிடப்பட்ட நகரங்களுக்கும், பிரிவு மையங்களுக்கும் ஓரிரவுக்குள்ளும், பெயரால் குறிக்கப்பட்ட உள்ளூர் மாநிலங்களுக்கு இரண்டு நாட்களிலும், ஐக்கிய மாகாணங்களில் வேறு எந்த இடத்திற்கும் மூன்று நாட்களிலும் பட்டுவாடா செய்யப்படுகின்றன. பிரிட்டனில், முதல்-வகுப்பு அஞ்சல்களின் 90 சதவீதம் அடுத்த வேலைநாளிலும், இரண்டாம்-வகுப்பு அஞ்சல்களின் 97.4 சதவீதம் மூன்றாம் நாளிலும் பட்டுவாடா செய்யப்படவேண்டும். உள்ளூர் கடிதங்களின் 81 சதவீதம் ஓரிரவுக்குள்ளும், மற்ற அஞ்சல் வகைகளின் 96.3 சதவீதம், ஞாயிற்றுக் கிழமைகளையும் விடுமுறை நாட்களையும் சேர்க்காமல், இரண்டு நாட்களுக்குள்ளும் பட்டுவாடா செய்யப்பட்டது என்று மே 1992-ல் வெளியிடப்பட்ட பிரெஞ்சு அஞ்சல் சுற்றாய்வு காட்டுகிறது. இவ்வாறு, எல்லை-அஞ்சல் செயல்முறை மையங்களிலும், சேரிட தபால் நிலையங்களிலும் இந்த அனுப்பு அஞ்சல்தொகுதி நள்ளிரவில் வரப்பெறும் அஞ்சல்தொகுதியாக மாறுகிறது. இரவிலிருந்து அதிகாலை வரை, வரப்பெறும் அஞ்சல்தொகுதி பட்டுவாடா செய்வதற்காகப் பிரிக்கப்படுகிறது.
உவாட்ச்டவர் சங்கம் போன்ற பெருமளவு அஞ்சல் செய்யும் வாடிக்கையாளர்கள், தபால் நிலையம், அனுப்புநரின் பணிமனையிலிருந்தே இழுவைவண்டி சுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், தங்களுடைய அஞ்சல்தொகுதியைத் தயார்செய்கின்றனர். இந்த அஞ்சல்தொகுதி தபால் நிலையத்தினரால் நேரடியாக பட்டுவாடா பணியாளர்களுக்கு நாட்டின் குறுக்கே கொண்டுச்செல்லப்படுகிறது. தபால் சேவை எலக்ட்ரானிக் அஞ்சல் போன்ற திறம்பட்ட நவீன தொலைத்தொடர்பு முறைகளைப் பேரளவில் பயன்படுத்துகிறது. பிரெஞ்சு அஞ்சல் அமைப்பு கடந்த வருடம் மட்டும் ஒரு கோடி தொலைக்கட்டுப்பாட்டு அச்சடி சாதனங்களை [remote printing (E-mail)] அனுப்பியுள்ளது.
அஞ்சல் நடைமுறைகள் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டாலும், உலகின் பெரும்பாலான அஞ்சல்தொகுதிகள், உலக அஞ்சல்தொகுதிகளின் அளவில் 40 சதவீதத்தைக் கையாளுகின்ற ஐ.மா.-வின் அஞ்சல் சேவையை விவரித்ததுபோலவே கையாளப்படுகின்றன.
மற்ற தபால் சேவைகள்
அஞ்சல் அமைப்புகள் வெறுமனே அஞ்சல்தொகுதியைச் செயல்முறைக்கு உள்ளாக்குவதைவிட, அதிக சேவைகளைச் செய்கிறது. ஐ.மா.-விலுள்ள ஒரு தபால் நிலையம் கடவுச் சீட்டுப் (passport) பெறுவதற்கு உங்களுக்கு உதவி செய்யும். ஜப்பானிய தபால் நிலையம் ஒன்றிலோ (முன்பு பிரிட்டிஷ் தபால் சேவைக்குச் சொந்தமாயிருந்த) பிரிட்டிஷ் ஜைரோபேங்க்கிலோ நீங்கள் சேமித்து வைக்கலாம். மேலும், அஞ்சல் செய்யப்பட்ட வணிகப் பொருட்கள் இழக்கப்பட்டாலோ சேதமடைந்தாலோ, அதன் விலையை ஈடுசெய்வதற்குக் காப்பீட்டுறுதி அல்லது பதிவு செய்துகொள்ளலாம். ஓர் அஞ்சலை அஞ்சல் செய்ததற்கான அல்லது பட்டுவாடா செய்ததற்கான அத்தாட்சி மட்டும் தேவையாயிருந்தால், அஞ்சல் அனுப்புகைச் சான்றிதழில் அனுப்புவது, பதிவு அஞ்சலில் அனுப்புவதைவிட குறைந்த செலவேயாகும். ஜப்பானிய தபால் சேவையிலிருந்து மக்கள் ஆயுள் ஈட்டுறுதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
வேண்டுதலின்பேரில், ஐக்கிய மாகாணங்களில் உள்ளதைப்போன்ற சில தபால் சேவைகள் விலாசம்-சரிசெய்யும் விவரங்களை உங்களுக்குக் கொடுக்கின்றன. “விலாசம் சரிசெய்ய வேண்டப்படுகிறது” அல்லது “அனுப்பாதீர்” என்று உறையின் முன்பக்கம் அனுப்புநர் விலாசத்திற்குச் சற்றுக் கீழே எழுதுங்கள். முதல்-வகுப்பு அஞ்சல், கூடுதல் கட்டணமேயின்றி, (ஒரு வருடத்திற்குள் இருந்தால்) புதிய விலாசத்துடனோ, பட்டுவாடா செய்யாததற்குரிய மற்ற காரணத்தோடோ உங்களுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது.
இந்தச் சேவைகளுக்கும், இதர சேவைகளுக்கும், இந்த உலகம் தபால் அமைப்பை அதிகம் சார்ந்திருக்கிறது. இவாலுவேஷன் ஆஃப் தி யுனைட்டட் ஸ்டேட்ஸ் போஸ்டல் சர்வீஸ் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “தபால் சேவை பேரளவான அஞ்சல்தொகுதிகளைக் கையாளுவதன் மூலம் நல்ல ஒரு சேவையைச் செய்துவருகிறது. ஆனால் நீக்கமுடியாத தவறுகள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அப்பொழுதுதான் தபால் சேவையிடமிருந்து எதை எதிர்பார்ப்பது நடைமுறையானது என மக்கள் தெரிந்துகொள்வார்கள்.” ஐக்கிய மாகாணங்களில், தினசரி அளவான கிட்டத்தட்ட 25,00,00,000 முதல்-வகுப்பு கடிதங்களில் வெறுமனே 5 சதவீதம் தாமதிக்குமானால், அது ஒவ்வொரு நாளும் 1,20,00,000-க்கும் அதிகமான கடிதங்களுக்குச் சமமாகும். இது அநேக தாமத பட்டுவாடா புகாரில் விளைவடைகிறது.
இக்கட்டான பொருளாதார நிலைமைகள் அஞ்சல் அமைப்புகளைப் பாதித்திருக்கின்றன. கட்டண உயர்வு, சேதமடைந்த அஞ்சல்கள், தாமதித்த அஞ்சல்தொகுதி, நவீன தொழில்நுட்பம் போன்றவை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுக்கெதிரான போட்டியை அதிகம் வளர்த்துவிட்டிருக்கின்றன. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கையாளுமுறைகள் அஞ்சல்தொகுதி செயல்முறைப்படுத்தப்படுவதை முன்னேற்றுவித்திருந்தாலும், அனைத்து அமைப்புகள்மேலும் வரும் அழுத்தங்கள் அஞ்சல் அமைப்புக்கு இக்கட்டான சமயங்களை ஏற்படுத்துகின்றன. ஐ.மா. தபால் சேவை 1991-ன் வருமானத்தில் சுமார் 1,50,00,00,000 டாலர் குறைவை எதிர்ப்பட்டிருக்கிறது. தற்போதைய சேவையைத் தொடர தபால் கட்டண அதிஉயர்வு, ஆள்குறைப்புப் போன்ற கடுமையான நடவடிக்கைகள் அவசியப்படலாம்.
பழங்காலத்தில் ஓர் அருவியாக இருந்து இன்று வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஓர் ஆறாக ஆகிவிட்டிருக்கிற இந்தத் தபால் போக்குவரத்து, பிரச்னைகளின் மத்தியிலும் தொடர்ந்திருந்து, இவ்வாறு தொடர்பு கொள்வதற்கான ஓர் உள்ளார்ந்த தேவையைப் பூர்த்தி செய்கிறது.—ஓர் அஞ்சலகப் பணியாளரால் அளிக்கப்பட்டது.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
பெர்சிய-முறை தபால் பட்டுவாடா
பின்னணி பண்டைக்கால பெர்சிய பேரரசாகும். எழுதப்பட்ட ஆவணங்கள் கவனமாக தயாரிக்கப்பட்டு, அலுவல் முறையில் முத்திரையிடப்பட்டு, அரசாங்க தபால் சேவையினால் அனுப்பப்பட்டது. அந்த ஆணை உடனடியாக ஒப்படைக்கப்பட்டு அதன்பேரில் காலந்தாழ்த்தாது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அநேக உயிர்கள் இழக்கப்படும். ஆனால் அந்த அஞ்சல் எவ்வாறு பட்டுவாடா செய்யப்படக்கூடும்? அந்தக் “கடிதங்கள் ராஜாங்க கொட்டில்களின் குதிரைகள்மீது சவாரிசெய்யும் அஞ்சற்காரர்கள் மூலம் அனுப்பப்பட்டன. . . . ஆகவே ராஜாங்க குதிரைகள்மீது சவாரிசெய்யும் அஞ்சற்காரர்கள், ராஜாவின் அவசர கட்டளையின்பேரில் மிக விரைவில் அனுப்பப்பட்டனர்,” என்று தி நியூ இங்கிலிஷ் பைபிள், எஸ்தர் 8:10, 14-ல் கூறுகிறது.
பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின்போது யூதர்களை இனஅழிவிலிருந்து காப்பாற்றவிருந்த அகாஸ்வேரு ராஜாவின் எதிராணையைக் கொண்டுச்செல்ல தெரிந்துகொள்ளப்பட்ட வழி, சுமார் 23 கிலோமீட்டர் இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருந்த, அந்த நம்பகமான இடைமாற்றீட்டு சவாரிக்காரர்களே ஆகும். இந்த அஞ்சற்காரர்கள் “போகவேண்டியிருந்த அந்தத் தூரத்தை உச்ச வேகத்தில் கடந்து செல்வதில் பனியினாலோ, மழையினாலோ, உஷ்ணத்தினாலோ, இரவின் இருளினாலோ தடைசெய்யப்படவில்லை,” என வரலாற்று ஆசிரியர் ஹெரோடோடஸ் எழுதினார். பெர்சிய பேரரசு முழுவதும் உபயோகத்தில் இருந்த அனுதின அரசாங்க தகவல் தொடர்பு அமைப்பு இதுவே.
[பக்கம் 17-ன் படம்]
இயந்திரங்கள் மணிக்கு ஆயிரக்கணக்கான கடிதங்களைத் தானாகவே வாசித்துப் பிரித்தெடுக்கின்றன