மனிதனின் யுத்தங்களில் மதத்தின் பங்கு
“ஏதோ ஒரு வடிவில் மதத்தைக் கொண்டிராத ஒரு ஜனம் ஒருபோதும் இருந்ததில்லை,” என தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா (1970-ன் பதிப்பு) சொல்கிறது. எனினும் வரலாற்று ஆசிரியர்கள் உவில் மற்றும் ஏரியல் ட்யூரன்ட், “யுத்தம் வரலாற்றின் நிலையான அம்சங்களில் ஒன்று,” என்பதாக எழுதினர். யுத்தம், மதம் ஆகிய இவ்விரண்டு நிலையான அம்சங்களும் எப்படியேனும் சம்பந்தப்பட்டிருக்கின்றனவா?
உண்மையிலேயே, வரலாறு முழுவதிலும், யுத்தமும் மதமும் பிரிக்கப்படமுடியாதவையாய் இருந்திருக்கின்றன. வரலாற்றின் முதல் உலகப் பேரரசுகளில் ஒன்றான எகிப்தைப்பற்றி, லையனல் காசன், ஏன்ஷியன்ட் ஈஜிப்ட் என்ற புத்தகத்தில் இவ்வாறு விவரித்தார்: “ஒவ்வொரு இராணுவ வெற்றிக்கும் கடவுட்கள் போற்றப்பட்டனர்; மற்றும் மென்மேலும் அயல்நாடுகளை வெல்ல பார்வோன்கள் ஆர்வமுடன் இருந்ததைப்போலவே, பேரளவு செல்வத்திற்கான வேட்கையின் காரணத்தால் ஆசாரியர்கள் அதே அளவு ஆர்வங்காட்டினர்.”
அதைப்போலவே, மற்றொரு முற்கால உலகப் பேரரசாகிய அசீரியாவைப்பற்றி பாதிரி W. B. உவ்ரைட் கூறினார், “சண்டையிடுவதே தேசத்தின் தொழிலாக இருந்தது. ஆசாரியர்கள் இடைவிடாது யுத்தத்தைத் தூண்டிவிடக்கூடியவர்களாக இருந்தனர். பெரும்பாலும் வெற்றியில் கொள்ளைகொண்ட பொருட்களால் அவர்கள் ஆதரிக்கப்பட்டனர்.”
“காட்டுமிராண்டி ஐரோப்பா” என்று தான் அழைத்ததைப்பற்றி ஜெரல்ட் சைமன்ஸ் எழுதினார்: “அவர்களுடைய சமுதாயம் எளிய ஒன்றாகும். இது போரிடுதல் என்ற ஒரே செயலுக்காக, திட்டவட்டமாய் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு.” மேலும், மதம் உட்பட்டிருந்தது. “பட்டயங்கள் பேய்களால் ஆட்கொள்ளப்பட்டிருந்ததைப்பற்றியோ, அல்லது கடவுட்களின் இயக்கிகளாகப் பயன்படுவதைப்பற்றியோ அநேகப் புராணக்கதைகள் சொல்கின்றன,” என குறிப்பிட்டார் சைமன்ஸ்.
எனினும், மிகவும் நாகரிகமடைந்த ஒன்று என அறியப்பட்ட, ரோம பேரரசிலும் நிலைமை இதைப்போன்றே இருந்தது. “ரோமர்கள் யுத்த மனநிலையோடே வளர்க்கப்பட்டனர்,” என்று இம்பீரியல் ரோம் என்ற புத்தகத்தில் விவரித்தார், மோசஸ் ஹடாஸ். ரோம போர்வீரர்கள் தங்களுடைய கடவுட்களின் சின்னம் தாங்கிய கொடிகளைப் போரில் சுமந்து சென்றனர். ஒரு சொற்களஞ்சியம் குறிப்பிட்டது: “ஒரு படைத் தலைவன் ஒரு போர்க்கொடியைப் பகைவரின் சேனை மத்தியில் தூக்கி எறியும்படி தன் படைவீரர்களுக்கு ஆணையிடுவது வழக்கத்திற்கு மாறானதாக இருந்ததில்லை. இது அந்தக் கொடியைத் திரும்பப் பெறுவதற்குத் தூண்டுவதன் மூலம், தன்னுடைய படைவீரர்களின் கடுமையான தாக்குதலோடு, வைராக்கியத்தைக் கூட்டுவதற்காகவேயாகும். காரணம் அவர்கள் தங்களுடைய கொடி இந்தப் பூமி பெற்றுள்ள மிகப் புனித காரியம் என கருதினர்.”
யுத்தமும் கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டுபவர்களும்
உலக அரங்கில் கிறிஸ்தவ மண்டலத்தின் தோற்றம் காரியங்களை மாற்றிவிடவில்லை. உண்மையில், “இதுவரை மனிதர்கள் நடத்திய யுத்தங்களில் எல்லாம், ஒரு விசுவாசத்தின் சார்பில் நடத்தப்பட்ட யுத்தங்களைத் தவிர வேறு எந்த யுத்தங்களும் அவ்வளவு அதிக வைராக்கியத்தோடு நடத்தப்படவில்லை. மேலும் இந்தப் ‘புனித போர்களில்,’ எல்லாம் இடைக்காலங்களின் கிறிஸ்தவ சிலுவைப்போர்களைப்போன்று நீண்ட காலம் நடந்ததும், அதிக இரத்தம் சிந்தியதுமான போர் வேறு எதுவும் இல்லை,” என்பதாக ஏஜ் ஆஃப் ஃபெய்த் என்ற புத்தகத்தில் அனி ஃப்ரிமேண்டல் எழுதினார்.
வியப்பூட்டும்வகையில், இன்றும்கூட அதிக மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை. டைம் பத்திரிகை இவ்வாறு அறிக்கை செய்தது: “மதக் கொடிகளின்கீழ் சண்டையிட்டு மடிவது, விடாப்பிடியான வன்முறையுடன் தொடர்ந்திருக்கிறது. அல்ஸ்டரில் புராட்டஸ்டன்டுகளும் ரோமன் கத்தோலிக்கர்களும், வெளியிலிருந்து நிறுத்தும் ஆற்றல் பெறாவிடில் முடிவில்லாமல் செயற்படத்தக்க பிரயோஜனமற்ற ஒருவகை இயக்கத்தில் ஒருவரையொருவர் கொல்லுகின்றனர். அரபியர்களும் இஸ்ரவேலரும், எல்லை, பண்பாடு, மதம் போன்றவற்றில் ஏற்படும் சச்சரவுகளைப் பதற்றத்துடன் கவனித்துக்கொண்டிருக்கின்றனர்.” மேலும், முன்னாள் யுகோஸ்லாவிய குடியரசுகளிலும் ஆசிய நாடுகளிலும் ஏற்பட்ட கொடூரமான படுகொலைகளுக்கு, இன மற்றும் மத வேறுபாடுகள் காரணமாக இருந்திருக்கின்றன.
நம்பமுடியாதவகையில், கிறிஸ்தவர்களென்று உரிமைபாராட்டுபவர்கள் அடிக்கடி தங்களுடைய சொந்த விசுவாசத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களுக்கு எதிராகவே போரிடுகின்றனர். இவ்வாறு போர்க்களங்களில் கத்தோலிக்கர்கள் கத்தோலிக்கர்களைக் கொல்லுகின்றனர். கத்தோலிக்க வரலாற்று ஆசிரியர் E. I. உவாட்கன் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “பொய்யாக கட்டியெழுப்புவதற்காக அல்லது நேர்மையற்ற உண்மைத்தவறாமைக்காக, பிஷப்புகள் தங்களுடைய நாட்டின் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட எல்லா யுத்தங்களையும் எப்பொழுதுமே ஆதரித்துவந்திருக்கின்றனர் என்ற வரலாற்று உண்மையை மறுக்கவோ அசட்டை செய்யவோ முடியாது. இது ஒப்புக்கொள்வதற்கு வேதனையாகவே இருக்கவேண்டும். தேசிய குருக்களாட்சி, எந்தப் போரையும் அநீதி என்று கண்டனம் செய்த ஓர் உதாரணத்தைக்கூட உண்மையில் நான் அறியேன் . . . அதிகாரப்பூர்வமான கோட்பாடு என்னவாக இருந்தாலும் சரி, நடைமுறையில் ‘என்னுடைய நாடு எப்போதும் சரியானதையே செய்யும்,’ என்ற அடிப்படை கோட்பாடே போர்க்காலங்களில் கத்தோலிக்க பிஷப்புகளால் பின்பற்றப்பட்டிருக்கிறது.”
எனினும், அந்த அடிப்படை கோட்பாடு கத்தோலிக்கருடையது மட்டுமல்ல. கனடாவில் வான்கூவரின் சன் செய்தித்தாள் கட்டுரை குறிப்பிட்டது: “இந்தத் தேசிய பிரிவினை சக்திகளிலிருந்து தப்பித்துக்கொண்டதாக புராட்டஸ்டன்டினரும் நிச்சயமாக எவ்வழியிலும் உரிமைபாராட்டமுடியாது. சர்ச் கொடியைப் பின்பற்றுவதென்பது, ஒருவேளை ஒழுங்கமைக்கப்பட்ட எல்லா மதத்தினுடைய பலவீன அம்சமாகும் . . . கடவுள் தங்கள் பக்கம் இருக்கிறார் என்று ஒவ்வொரு அணியினரும் உரிமைபாராட்டாமல் எப்போதாவது நடத்தப்பட்ட போர் எது?”
சந்தேகமின்றி, ஒன்றுகூட இல்லை! “நம்முடைய சர்ச்சுகளிலுங்கூட நாம் போர்க்கொடிகளைப் பறக்கவிட்டோம் . . . நம்முடைய வாயின் ஒரு முனையில் சமாதான பிரபுவைத் துதித்து மற்றொரு முனையில் போரைப் புகழ்ந்து போற்றியிருக்கிறோம்,” என்று புராட்டஸ்டன்ட் பாதிரி ஹேரி எமர்ஸன் ஃபாஸ்டிக் ஒப்புக்கொண்டார். மேலும் கிறிஸ்தவர்கள் “மற்ற கிறிஸ்தவர்களுடன் போர் தொடுப்பதைக் குறித்து ஒருபோதும் எவ்வித அருவருப்பான உணர்ச்சியையும் கொண்டிருந்ததில்லை,” என பத்திரிகையாளர் மைக் ராய்க்கோ கூறினார். “அவ்வாறு உணர்ந்திருப்பார்களேயானால், ஐரோப்பாவில் நடந்த மும்முரமான யுத்தங்களில் பெரும்பாலானவை ஒருபோதும் சம்பவித்திருக்காது,” என்று அவர் மேலும் விவரித்தார். இவற்றில் குறிப்பிடத்தக்கது ஜெர்மனியில் புராட்டஸ்டன்டினருக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையே முப்பது வருடங்களாக நடைபெற்ற போராகும்.
நிச்சயமாக, உண்மைகளெல்லாம் தெளிவாகவே இருக்கின்றன. மதம் யுத்தங்களை ஆதரிக்கும், ஏன் சிலசமயங்களில், தோற்றுவிக்கும் ஒன்றாகக்கூட இருந்துவந்திருக்கிறது. இதன் காரணமாக, அநேகர் பின்வரும் கேள்விகளைக் கேட்டிருக்கின்றனர்: யுத்தகாலத்தில் உண்மையில் கடவுள் ஒரு தேசத்தைவிட மற்றொரு தேசத்தை ஆதரிக்கிறாரா? தேசங்கள் போரிடும்போது அவர் எப்பக்கத்தையாவது ஆதரிக்கிறாரா? யுத்தமே இல்லாத ஒரு காலம் எப்போதாவது வருமா?
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
ரோம போர்வீரர்கள் தங்களுடைய கடவுட்களின் சின்னம் தாங்கிய கொடிகளை, பகைவர் சேனைகளின் மத்தியில் தூக்கி எறிகின்றனர்