மறுபிறப்பு நிகழ்ச்சி விளக்கப்படுகிறது
பூமியின் மீதுள்ள பெரும்பாலான ஆட்களுக்கு முன்பு வாழ்ந்ததைப் பற்றிய எந்த நினைவும் இல்லாதிருப்பது மறுபிறப்பு கோட்பாட்டின் ஆட்சேபணைகளில் ஒன்றாக இருக்கிறது. மேலுமாக, முற்காலங்களில் வாழ்ந்திருக்கக்கூடும் என்பதாக அவர்கள் நினைப்பதும்கூட இல்லை.
நாம் முதல் முறையாகச் சந்திக்கும் ஒரு நபரை அடையாளங்கண்டுகொள்ளும் விநோதமான ஓர் உணர்வு சிலசமயங்களில் நமக்கு ஏற்படுவது உண்மையே. நாம் அங்கு முதல் முறையாக சொல்வதாக இருந்தபோதிலும், குறிப்பிட்ட ஒரு வீடு, ஒரு பட்டணம் அல்லது இயற்கை காட்சியுடைய நிலப்பகுதி நமக்கு பழக்கப்பட்டதாக தோன்றக்கூடும். இருப்பினும், இந்தக் காரியங்களை மறுபிறப்பு கோட்பாட்டின் உதவியில்லாமல் விளக்கமுடியும்.
உதாரணமாக, தொலைதூரங்களால் பிரிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களிலுள்ள சில இடங்கள் சிறிதளவு ஒரே மாதிரியாக இருக்கக்கூடும், ஆகவே புதிய ஓர் இடத்துக்கு நாம் செல்லும்போது, நாம் இதற்கு முன்னால் அங்கு சென்றிராவிட்டாலும் அங்கு சென்றிருப்பது போல உணரக்கூடும். அநேக வீடுகள், அலுவலகங்கள், கடைகள், பட்டணங்கள் மற்றும் உலகில் சில இடங்களிலுள்ள இயற்கை காட்சியுள்ள பிரதேசங்கள் மற்ற இடங்களில் ஒத்த பகுதிகளிலுள்ளதைப் போலவே தோற்றமளிக்கக்கூடும். நாம் முன்பு பார்த்திருப்பவற்றைப் போன்று அவை தோன்றுவதானது, முற்கால ஒரு வாழ்க்கையில் அந்த இடங்களில் நாம் இருந்திருக்கிறோம் என்பதற்கு நிரூபணமாக இல்லை. அவை வெறுமனே நாம் பழக்கப்பட்டிருக்கும் இடங்களைப் போன்று இருக்கின்றன.
மக்களைப் பொருத்ததிலும்கூட இது உண்மையாக இருக்கிறது. ஒரேவிதமாக இருக்கும் இருவர் என்பதுபோலவும்கூட சிலர் சரியாக தோற்றத்தில் மற்றவர்களைப் போலவே இருக்கிறார்கள். இன்னும் உயிரோடிருக்கும் அல்லது மரித்துவிட்டிருக்கும் ஒருவரைக்கூட நமக்கு நினைப்பூட்டும் செயற்கைப் பழக்கங்கள் ஒரு நபருக்கு இருக்கலாம். ஆனால் இந்த ஆட்களை ஏதோ ஒரு முன்னாள் வாழ்க்கையில் அல்லாமல் தற்போதைய வாழ்க்கையில்தானே அறிந்தவர்களாக இருக்கிறோம். தோற்றத்தில் அல்லது ஆளுமையில் ஒரேவிதமாக இருத்தல், இந்த ஆட்கள் நமக்கு ஒரு முற்கால வாழ்க்கையில் அறியப்பட்டவர்கள் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. ஒருவேளை நாம் அனைவருமே ஒரு நபரை தவறாக வேறொரு நபராக சிலசமயங்களில் நினைத்ததுண்டு. ஆனால் அந்த நபர்களில் இருவருமே உங்களைப் போன்றே ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள், ஏதோ முற்கால வாழ்க்கையில் அல்ல. இதற்கு மறுபிறப்போடு எந்தச் சம்பந்தமுமில்லை.
அறிதுயில் நிலையின் செல்வாக்கு
அறிதுயில் நிலை செல்வாக்கின்கீழ் பெற்ற அனுபவங்களும்கூட, மறுபிறப்பு கோட்பாட்டின் உதவியின்றி விளக்கப்பட முடியும். நம்முடைய அடிமனது, நாம் கற்பனைச் செய்திருப்பதைக் காட்டிலும் அதிக பரந்த தகவலின் களஞ்சியமாக இருக்கிறது. புத்தகங்கள், பத்திரிகைகள், டிவி, வானொலி மற்றும் ஏனைய அனுபவங்கள் மற்றும் கவனித்தல் மூலமாக தகவல் இந்தக் களஞ்சியத்தை வந்துசேர்கிறது.
இந்தத் தகவலில் பெரும்பகுதி நேரடியாக அல்லது உடனடியாக நமக்கு பயனுள்ளதாக இல்லாத காரணத்தால் நம்முடைய அடிமனதின் ஒரு மறைவான மூலையில் சேர்த்துவைக்கப்பட்டுவிடுகிறது. தற்போது அவற்றிற்கு அதிக தேவை இல்லாத காரணத்தால் தனியே இருக்கும் ஓர் அலமாரி நிலையடுக்கில் வைக்கப்பட்டுவிட்ட நூல் நிலைய புத்தகங்களைப் போன்று ஓரளவு நம்முடைய அடிமனது இருக்கிறது.
இருப்பினும் அறிதுயில் நிலையில், அந்த நபரின் மறக்கப்பட்டுபோன நினைவுகள் மேலெழுந்துவரும்படிக்கு அவரின் உணர்வு மாற்றப்படுகிறது. சில ஆட்கள் மறக்கப்பட்டுபோன இந்த நினைவுகளை முற்கால வாழ்க்கைக்குரியதாக அர்த்தம் கற்பிக்கிறார்கள். ஆனால் அவை தற்காலிகமாக மறக்கப்பட்டுபோன தற்போதைய வாழ்க்கை அனுபவங்களைக் காட்டிலும் வேறெதுவுமில்லை.
ஆனால் ஒருசிலருடைய விஷயங்களை இயற்கையான வழியில் விளக்குவது அதிக கடினமாக இருக்கலாம். இதற்கு ஓர் உதாரணம் அறிதுயில் நிலை செல்வாக்கின்கீழ் ஒருவர் வேறொரு “மொழி”யைப் பேச ஆரம்பிக்கையிலாகும். சிலசமயங்களில் மொழியைப் புரிந்துகொள்ள முடிகிறது, ஆனால் பல சமயங்களில் அது முடிவதில்லை. மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்கள் இது அந்த நபர் முற்கால வாழ்க்கையில் பேசிய மொழி என்பதாகச் சொல்லக்கூடும்.
எனினும், புரிந்துகொள்ள முடியாத அல்லது மத சம்பந்தமாக பரவச நிலையில் ஆட்கள் இருக்கையிலும்கூட அந்நிய பாஷைகளைப் பேசுவது நிகழ்கிறது என்பது நன்கு அறியப்பட்டதே. இப்படிப்பட்ட அனுபவங்களை உடையவர்கள், இது முற்கால வாழ்க்கையோடு எவ்விதத்திலும் சம்பந்தப்பட்டதில்லை என்பதையும் தற்கால வாழ்க்கையில் அவர்கள் ஏதோ காணக்கூடாத ஒரு சக்தியால் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் உறுதியாக நம்புகிறார்கள்.
இந்தச் சக்தி என்ன என்பது பற்றியதில் கருத்துக்கள் வித்தியாசப்படுகின்றன. ஃபெளன்டன் ட்ரஸ்ட் மற்றும் இங்கிலாந்து சர்ச்சின் சுவிசேஷக குழு சேர்ந்து வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்நிய பாஷைகள் பேசுவதன் சம்பந்தமாக இவ்வாறு சொல்லப்பட்டிருந்தது: “இதே போன்ற நிகழ்ச்சிகள் மாயமான/பேய் செல்வாக்கின்கீழ் நிகழலாம் என்பதையும்கூட நாங்கள் அறிந்திருக்கிறோம்.” இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நாம் முற்காலத்தில் வாழ்ந்திருப்பதற்கு அத்தாட்சி என்று ஊகிப்பது அவசரப்பட்டு தவறான முடிவுக்கு வருவதாக இருக்கும்.
மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்கள்
ஆனால் மக்கள் கொண்டிருந்ததாகச் சொல்லும் மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி என்ன? சரீரம் மரித்தப்பின்பு தொடர்ந்து உயிர்வாழும் ஆத்துமா ஒன்று மனிதனுக்கிருப்பதற்கு நிரூபணமாக இதைச் சிலர் விளக்கியிருக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட அனுபவங்களைப் பல்வேறு இயற்கையான வழிகளில் மேம்பட்ட விதமாக விளக்கமுடியும்.
அறிவியலும் வாழ்க்கையும் (Science & Vie) என்ற பிரெஞ்சு அறிவியல் பத்திரிகையின் மார்ச் 1991 இதழில், மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்களின் பல்வேறு கட்டங்கள் நீண்ட காலமாக அறியப்பட்டிருக்கும் “பிரமையின் பொதுவான மாதிரி” என்றழைக்கப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற அனுபவங்கள் மரணதறுவாயான நிலைமைகளில் இருப்பவர்களுக்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. “களைப்பு, காய்ச்சல், வலிப்புநோய் தாக்குதல், போதைப்பொருள் துர்ப்பிரயோகம்” இவற்றின் சம்பந்தமாகவும்கூட அவை ஏற்படலாம்.
ஓரிடத்தில் மட்டுமே மயக்கமருந்து கொடுத்து வலிப்பு நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சை செய்த ஒரு நரம்பியல் அறுவை மருத்துவ முன்னோடி வில்டர் பென்ஃபீல்ட் அக்கறையூட்டும் ஒரு கண்டுபிடிப்பைச் செய்தார். ஒரு மின்வாயைக்கொண்டு மூளையின் பல்வேறு பாகங்களைத் தூண்டி இயக்குவதன் மூலம், தன்னுடைய சொந்த சரீரத்துக்கு வெளியே இருந்துகொண்டு ஒரு குகையினூடாக பயணம்செய்து மரித்துப்போன உறவினர்களைச் சந்திக்கும் ஓர் உணர்வை நோயாளியில் ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டிருக்கும் பிள்ளைகள் மரித்துப்போன தங்கள் உறவினர்களை அல்ல, ஆனால் உயிரோடிருக்கும் பள்ளி சகாக்களையும் ஆசிரியர்களையுமே சந்திப்பது இந்த வகையில் ஓர் அக்கறையூட்டும் விவரமாக உள்ளது. இப்படிப்பட்ட அனுபவங்கள் குறிப்பிட்ட கலாச்சார தொடர்பைக் கொண்டிருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. ஏற்படும் அனுபவம் மரணத்துக்குப் பின்னானதோடு அல்ல, ஆனால் தற்போதைய வாழ்க்கையோடுதானே சம்பந்தப்பட்டிருக்கிறது.
டாக்டர் ரிச்சர்ட் ப்ளாச்சர், தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் பத்திரிகையில் இவ்வாறு எழுதுகிறார்: “மரித்துக்கொண்டிருப்பது அல்லது வேதனை நிறைந்த உடல்நிலையில் துன்புறுவது என்பது மாற்றங்களை உட்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. மரணம் ஒரு நிலைமையாக இருக்கிறது.” ஓர் உதாரணத்துக்கு, ப்ளாச்சர் ஐக்கிய மாகாணங்களிலிருந்து ஐரோப்பாவுக்கு முதல் முறையாக விமானம் மூலம் பயணம்செய்யும் ஒரு நபரைப் பற்றி பேசுகிறார். “விமானம் மூலம் பயணம்செய்வதுதானே ஐரோப்பா [ஐரோப்பாவில் இருப்பது] அல்ல,” என்று அவர் எழுதுகிறார். ஐரோப்பாவுக்குப் புறப்படும் ஒரு சுற்றுலாப் பயணியின் விமானம் புறப்பட்ட ஒருசில நிமிடங்களுக்குள் திரும்பி வந்துவிடுமேயானால், ஐரோப்பாவைப் பற்றி மக்களிடம் அதிகத்தை அவரால் சொல்லமுடியாது. அதேவிதமாகவே உணர்வற்ற நிலையிலிருந்து திரும்பும் எவரும் மரணத்தைப் பற்றி சொல்லமுடியாது.
வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், மரணதறுவாயில் இருந்தவர்கள் உண்மையில் மரித்திருக்கவில்லை. அவர்கள் இன்னும் உயிரோடு இருக்கும்போதே எதையோ அனுபவித்திருக்கிறார்கள். ஒரு நபர் அவருடைய மரணத்துக்கு ஒருசில விநாடிகளுக்கு முன்புகூட உயிரோடிருக்கிறார். அவர்கள் மரணதறுவாயில் இருந்தார்கள், ஆனால் இன்னும் மரிக்கவில்லை.
குறுகிய நேரத்துக்கு இருதயம் நின்றுவிட, பின்னர் காப்பாற்றப்பட்டிருக்கும் ஆட்களும்கூட, அவர்கள் “மரித்து”விட்டிருந்ததாக சொல்லப்படக்கூடிய உணர்வற்ற அந்த விநாடியிலும்கூட நடந்த எதையும் உண்மையில் ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது. அவர்களால் எதையாகிலும் ஞாபகத்தில் வைக்கமுடிந்தால் அந்தக் குறுகிய இடைவேளையை நெருங்கிய சமயத்தில் நடந்ததாக மட்டுமே அது இருக்கமுடியும். அந்தச் சமயத்தின்போது நடந்தவை அல்ல.
வெளியிடப்பட்டுள்ள மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்கள் பெரும்பாலும் எப்பொழுதும் சாதகமானதாகவே சித்தரிக்கப்படுகின்றன. எதிர்மறையான அனுபவங்கள் சம்பவிப்பது அறியப்பட்டிருந்தபோதிலும்கூட இது இவ்வாறு இருக்கிறது. பிரெஞ்சு மனோதத்துவ பகுப்பாய்வாளர் கேத்தரீன் லிமேர் இதை இவ்விதமாக விளக்குகிறார்: “மரணதறுவாய் ஆய்வுக்கான சர்வதேச சங்கம் (IANDS [International Association for Near-Death Studies]) வற்புறுத்தும் மாதிரிக்குப் பொருந்துகிற [மரணதறுவாயில் ஏற்பட்ட] அனுபவங்களைப் பெறாதவர்கள் தங்கள் அனுபவத்தைச் சொல்வதில் அக்கறையற்றவர்களாக இருக்கின்றனர்.”
நினைவாற்றல் இல்லை
உண்மை என்னவென்றால், இப்பொழுது வாழ்கிற வாழ்க்கையைத் தவிர, முற்கால வாழ்க்கையோ மரணத்துக்குப் பின்னான வாழ்க்கையோ பற்றிய வேறு வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு எதுவும் இல்லை. ஆகவே, நாம் உண்மையில் வாழ்ந்திருக்கும் வாழ்க்கையைத் தவிர எதையும் பற்றிய நியாயமான நினைவாற்றல் நமக்கு இல்லை.
நம்முடைய நிலைமையை மேம்படுத்திக்கொள்வதற்கு ஒரு புதிய வாய்ப்பை பெறுவதே நாம் மறுபடியுமாக பிறப்பதன் அர்த்தம் என்பதாக மறுபிறப்பில் நம்புகிறவர்கள் சொல்கிறார்கள். நாம் உண்மையில் முற்காலங்களில் வாழ்ந்தவர்களாக இருந்து, ஆனால் அவற்றை மறந்துவிட்டிருப்போமானால் இப்பேர்ப்பட்ட ஒரு நினைவாற்றல் இழப்பு மிகப் பெரிய தடையாக இருக்கும். நம்முடைய தவறுகளை நினைவில் வைத்திருந்தால்தானே நாம் அவற்றிலிருந்து பயனடைய முடியும்.
மேலுமாக, மறுபிறப்பு சிகிச்சையை ஆதரிப்பவர்கள், அறிதுயில் நிலையின் மூலமாக உங்கள் முற்கால வாழ்க்கையை உங்களால் நினைவுகூர முடிந்தால், நீங்கள் தற்கால பிரச்னைகளை நல்லவிதமாக சமாளிக்க முடியும் என்பதாக நம்புகிறார்கள். எதையோ மேம்படுத்திக்கொள்வதற்காக நாம் மறுபடியும் பிறக்கிறோம் என்பதாக கோட்பாடு சொல்கிறது, இருந்தாலும் அந்த எதையோ என்பதை நாம் மறந்துவிட்டிருக்கிறோம்.
தற்கால வாழ்க்கையில் நினைவாற்றல் இழப்பு என்பது ஒரு தடையாக கருதப்படுகிறது. இந்த விஷயத்திலும் இது அவ்விதமாகவே இருக்கவேண்டும். நல்ல ஆட்கள் மாத்திரமே மனிதர்களாக மறுபிறவி எடுப்பதன் காரணமாக இப்படிப்பட்ட மறதி பரவாயில்லை என்று சொல்லி மறுப்பது, எக்காலத்தையும்விட உலக காட்சியில் பொல்லாப்பு மேலோங்கியிருக்கும் இந்த நவீன காலங்களில், ஒரு நல்ல விவாதமாக இல்லை. நல்ல ஆட்கள் மாத்திரமே மனிதர்களாக மறுபிறவி எடுக்கிறார்களேயானால், பொல்லாத ஆட்கள் எல்லாரும் எங்கிருந்து வந்தார்கள்? பொல்லாதவர்கள் குறைவாகவும் மிகக் குறைவாகவும் இருக்கவேண்டுமல்லவா? உண்மை என்னவென்றால்: எவருமே, நல்லவரோ கெட்டவரோ, மனிதராகவோ அதைப்பொறுத்தவரையில் வேறு எதுவாகவோ மற்றொரு வாழ்க்கையைத் துவங்குவதற்கு ஒருபோதும் மறுபிறவி எடுப்பதில்லை.
இருப்பினும், ‘மறுபிறப்பு ஒரு பைபிள் போதகமல்லவா?’ என்பதாக நீங்கள் ஒருவேளை சொல்லக்கூடும். இந்தக் கேள்வியை அடுத்தக் கட்டுரையில் நாம் சிந்திப்போமாக.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
ஒரு பக்கமாக வைத்துவிட்டு பின்னால் நினைவுபடுத்திக்கொள்ளக்கூடிய தகவல் நிறைந்த ஒரு நூலகம் போல நம் அடிமனது உள்ளது
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
மாற்றங்களை உட்படுத்தும் ஒன்றாக இல்லாமல், “மரணம் ஒரு நிலைமையாக இருக்கிறது.”
—தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்-ல் டாக்டர் ரிச்சர்ட் ப்ளாச்சர்