பைபிளின் கருத்து
நாம் துன்புறுவதைக் காண்பது கடவுளுக்குப் பிரியமா?
மரத்தாலான பெரிய சிலுவையின் பாரத்தின்கீழ் போராடிக்கொண்டு தன்னுடைய தலையின் மீதுள்ள முள்கிரீடத்திலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட ஜனக்கூட்டத்தின் நடுவில் தடுமாறிக்கொண்டு ஒரு மனிதன் செல்கிறான். ‘தண்டனைத் தீர்ப்பு நிறைவேற்றப்பட’ இருக்கும் இடத்துக்கு வந்துசேர்ந்த பின்பு அவன் ஒரு சிலுவையின் மீது நீளமாக கிடத்தப்படுகிறான்; பெரிய ஆணிகள் அவனுடைய கைகளுக்குள் அடிக்கப்படுகின்றன. ஆணி சதையைத் துளைத்துச் செல்லும்போது அவன் வேதனையில் நெளிகிறான். சிலுவை நேராக நிமிர்த்தி வைக்கப்படுகையில் வேதனை மிகுதியாகிறது. பனோரமா என்ற பிலிப்பீன்ஸ் நாட்டு பத்திரிகையின்படி, பிலிப்பீன்ஸில் இப்படிப்பட்ட வேதனைமிகுந்த சடங்குகள் வழக்கமாக பரிசுத்த வாரத்தின்போது செய்யப்படுகின்றன.
இப்போது விவரிக்கப்பட்டது இயேசுவின் துன்பங்களைப் பற்றிய ஒரு நவீன நாளைய விளக்கக் காட்சியாக இருக்கிறது. ஆனால் இந்த மனிதன் ஒரு நாடகத்திலிருந்து ஒரு காட்சியை வெறுமனே நடித்துக்கொண்டில்லை. ஆணிகள், இரத்தம், வலி—அவை அனைத்தும் முற்றிலும் மெய்யானவை.
வேறு இடங்களில், ரோமன் கத்தோலிக்க பக்தர்கள் கிறிஸ்துவின் துன்பங்களை அனுபவிக்கும் ஆசையில் வெளிப்படையாக தங்களைச் சவுக்கினால் அடித்துக்கொள்வதைக் காணமுடிகிறது. ஏன்? தங்களுடைய துன்பங்கள், நோயுற்றிருக்கும் தங்களுடைய அன்பானவர்கள் குணமடைதல் போன்ற அற்புதங்களை உண்டுபண்ணக்கூடும் என்ற நம்பிக்கையில் சிலர் இதைச் செய்கிறார்கள். மற்றவர்கள் தங்களு டைய பாவங்களை நிவிர்த்தி செய்துகொள்வதற்காக இதைச் செய்கிறார்கள், தங்களுடைய சொந்த இரத்தம் சிந்தப்பட்டாலன்றி மன்னிப்பு கிட்டாது என்பதாக அவர்கள் பயப்படுகிறார்கள். தி ஃபிலிப்பின்னோஸ் புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “வலி என்பது மனதையும் ஆத்துமாவையும் நன்றாக சுத்திகரிக்கிறது. . . . பாவி பாவங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்டவனாயும் பாரம் குறைந்தவனாயும் வலியிலிருந்து வெளிவருகிறான்.”
சுயமாக வலியை வருவித்துக்கொள்வது என்பது பிலிப்பீனிலுள்ள கத்தோலிக்கர்கள் மட்டுமே செய்யும் ஒன்றல்ல. பல்வேறு மதங்களிலும் வித்தியாசமான தேசங்களிலுமிருந்து வரும் ஆட்கள் தாங்களாகவே துன்பங்களுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வது கடவுளிடம் நன்மதிப்பைப் பெற்றுத்தருவதாக நம்புகின்றனர்.
உதாரணமாக, சத்தியத்தைத் தேடிச் செல்லும் முயற்சியில் புத்தர், சித்தார்த்த கெளதமர் தன் மனைவியையும் மகனையும் விட்டு பாலைவனத்துக்கு ஓடிப்போய் அங்கே ஆறு ஆண்டுகளாக ஒரு கடுந்துறவு வாழ்க்கை வாழ்ந்தார். அசெளகரியமான மற்றும் நோவுண்டாகும் நிலையில் நீண்டநேரம் நின்று நாளொன்றுக்கு ஒரே ஒரு அரிசியை மட்டுமே உண்டு அத்தனை ஒல்லியாக ஆனதால் அவர் பின்னர் இவ்வாறு சொன்னார்: “பசியினால் என் வயிறு ஒட்டிப்போனது.” ஆனால் சுயமாக வருவித்துக்கொண்ட எந்த அளவு சித்திரவதையும் தேடிய அந்த அறிவொளியை அவருக்குக் கொண்டுவர முடியவில்லை.
அதேப்போலவே, இந்தியாவிலுள்ள இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகள் சில சமயங்களில் அளவுக்கு மிஞ்சியதாக இருந்த பல்வேறு நோன்புகளுக்குத் தங்களை ஆளாக்கிக்கொண்டார்கள்—நெருப்பின் நடுவே படுத்துக்கொள்வது, முற்றிலும் குருடாகும்வரை சூரியனை உற்றுநோக்குவது, ஒரே காலில் அல்லது அசெளகரியமான ஒரு கோணலில் நீண்ட நேரம் நிற்பது. ஒருசில கடுந்துறவிகளின் நல்லொழுக்கமானது விரோதியின் தாக்குதலிலிருந்து ஒரு நகரத்தையே பாதுகாக்கும் என்ற அளவுக்கு அத்தனை பெரியதாக கருதப்பட்டது.
அதைப்போலவே பைபிள், பாகால் வணக்கத்தார் வீணாகவே தங்களுடைய கடவுளின் கவனத்தைக் கவருவதற்காக “தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்”கொண்டதைப் பற்றி பேசுகிறது.—1 இராஜாக்கள் 18:28.
“உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்”
“உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்,” என்பதாக யெகோவா தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட தேசத்துக்குக் கட்டளையிட்டது உண்மையாக இருந்தபோதிலும், இது பொதுவாக உபவாசத்தைக் குறிப்பதாகவே புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. (லேவியராகமம் 16:31) இப்படிப்பட்ட உபவாசம் துக்கத்துக்கும் பாவங்களிலிருந்து மனந்திரும்பியதற்கும் அல்லது இக்கட்டான நிலைமைகளின்கீழ் செய்யப்பட்டதாக இருந்தது. இதன் காரணமாக உபவாசம் தானாக ஒருவர் தன்மீது வருவித்துக்கொள்ளும் ஒரு வகையான தண்டனையாக இல்லாமல் கடவுளுக்கு முன்பாக ஒருவர் தன்னைத்தானே தாழ்த்துவதைக் குறிக்கிறது.—எஸ்றா 8:21.
என்றபோதிலும், ஆத்துமாவைத் தாழ்த்திக்கொள்வதில் உட்பட்டிருக்கும் அசெளகரியம்தானே மதிப்புடையதாக இருந்து அதற்குப் பதிலாக எதையாவது தங்களுக்குக் கொடுக்க கடவுளை ஒரு கட்டாயத்தின்கீழ் வைத்தது என்பதாக தவறாக நினைத்துக்கொண்டிருந்த ஒருசில யூதர்கள் இருந்தனர். இப்படிப்பட்ட எந்தப் பலனும் வராதபோது, அவர்கள் துணிந்து தாங்கள் பெற்றுக்கொள்ள தகுதியாயிருந்ததாக அவர்கள் நினைத்த கூலியைக் கடவுளிடம் கேட்டார்கள்: “நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன?”—ஏசாயா 58:3.
ஆனால் அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந்தார்கள். சரியான மதசம்பந்தமான உபவாசம் என்பது சரீரப்பிரகாரமான வலி அல்லது அசெளகரியம்தானே ஏதோ மதிப்புள்ளது போல பசியினால் சரீரத்தை ஒடுக்கிக்கொள்வதை, கடுந்துறவை உட்படுத்தவில்லை. பலமான உணர்ச்சி அவர்களுடைய பசியைக் குறைத்திருக்கலாம். மனதை அழுத்துகின்ற பிரச்சினைகளின் பிடியில் இருக்கையில் உடலுக்கு உணவுக்கான அவா இல்லாமல் போகலாம். இது உபவாசம் செய்யும் நபரின் தீவிரமான உணர்ச்சிகளைக் கடவுளுக்குத் தெரியப்படுத்துகிறது.
சுயமாக வருவித்துக்கொள்ளும் வலியில் கடவுள் பிரியப்படுகிறாரா?
மக்கள் தங்களையே சித்திரவதைச் செய்துகொள்வதைப் பார்த்து அன்புள்ள படைப்பாளர் ஏதாவது மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்கிறாரா? சில சமயங்களில் கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்துவின் பாடுகளுக்குப் பங்காளிகளாக இருப்பதற்கு,’ நிர்ப்பந்தப்படுத்தப்படுவது உண்மையாக இருக்கையில், தொந்தரவை அனுபவிக்கும் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக அல்லது உயிர்த்தியாகியின் அந்தஸ்தைப் பெறுவதற்காக அலைந்துகொண்டிருப்பதில்லை.—1 பேதுரு 4:13.
இயேசு நிச்சயமாகவே ஒரு துறவியாக இருக்கவில்லை. அவருடைய சீஷர்கள் உபவாசியாமலிருப்பதைக் குறித்து மதத் தலைவர்கள் குறைகூறினர், “போஜனப்பிரியனும் மதுபானப் பிரியனுமான மனுஷன்” என்பதாகக்கூட அவரைக் குற்றஞ்சாட்டினர். (மத்தேயு 9:14; 11:19) இயேசு எல்லாவற்றிலும் மிதமாக இருப்பதைக் காண்பித்தார், நியாயமாக இருப்பதைவிட அதிகத்தைத் தம்மிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ அவர் வற்புறுத்தவில்லை.—மாற்கு 6:31; யோவான் 4:6.
தேவைகளை அல்லது வாழ்க்கையின் வசதிகளையும்கூட நமக்குநாமே மறுத்துக்கொள்வது கடவுளுடைய தயவைக் கொண்டுவரும் என்பது போல துறவு வாழ்க்கைக்கு எந்த ஆதாரத்தையும் நாம் வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலும் காண்பதில்லை. இப்படிப்பட்ட நோவுண்டாக்கும் பழக்கவழக்கங்களைப்பற்றிய அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.”—கொலோசெயர் 2:23.
மார்ட்டின் லூத்தர் ஒரு சந்நியாசியாக இருந்தபோது, தன்னைத்தானே உண்மையில் சித்திரவதை செய்துகொண்டார். ஆனால், பின்னால் அவர் இப்படிப்பட்ட பழக்கங்களை நிராகரித்து, இவை கடவுளிடம் செல்ல உயர்ந்த ஒன்றும் தாழ்ந்த ஒன்றும், இரண்டு வழிகள் என்ற கருத்தையே ஊக்குவிக்கையில், வேதாகமம் இரட்சிப்புக்கு ஒரே ஒரு வழி மாத்திரமே—இயேசு கிறிஸ்துவிலும் அவருடைய தகப்பனாகிய யெகோவாவிலும் விசுவாசத்தைக் காண்பிப்பதன் மூலமாகவே—இருப்பதாக போதிக்கிறது என்று சொன்னார். (யோவான் 17:3) மறுபட்சத்தில், நோவுண்டாக்கும் சடங்குகளை சிலர் ஒருவகையான சுய இரட்சிப்பின் வகையாகக் கருதினர்.
துறவு வாழ்வைப்பற்றி சர்ச் ஹிஸ்ட்ரி இன் ப்ளெயின் லாங்வேஜ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சந்நியாச வாழ்வை ஆதரிப்பது மனிதனின் பிழையான கருத்தாக இருந்தது. சந்நியாசிகளின் கருத்துப்படி, கைதி பிணத்தோடு கட்டப்பட்டிருப்பதற்கு ஒப்பாக ஆத்துமா சரீரத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அது மனித வாழ்வைப் பற்றிய பைபிள்பூர்வமான ஒரு கருத்து இல்லை.” ஆம், சுயமாக ஒருவர் வருவித்துக்கொள்ளும் நோவு கடவுளைப் பிரியப்படுத்த முடியும் என்ற கருத்து வேதாகமத்துக்கு அந்நியமான ஒன்று. சரீரத்தோடு சம்பந்தப்பட்ட அனைத்துமே தீயவை என்றும் ஒருவர் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு அதை முடிந்தவரை துர்ப்பிரயோகம் செய்யவேண்டும் என்ற தவறான மறையியல் ஞான தர்க்கத்தை ஆதாரமாக கொண்டிருக்கிறது.
நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று யெகோவா விரும்புவதன் காரணமாக, இப்படிப்பட்ட மகிழ்ச்சிநிரம்பிய கடவுளை வணங்குவது ஒரு துறவியாகும் விஷயமல்ல. (பிரசங்கி 7:16) இதன் காரணமாக, சுயமாக சுமத்திக்கொள்ளும் இப்படிப்பட்ட துன்பங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வழியாக இருப்பதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் நமக்கு சொல்லப்படவில்லை. மறுபட்சத்தில், கிறிஸ்துவின் இரத்தமும், அதோடு அதில் நம்முடைய விசுவாசமுமே நம்மை எல்லா பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கின்றன என்பதைக் கடவுளுடைய வார்த்தை தெளிவாகச் சொல்கிறது.—ரோமர் 5:1; 1 யோவான் 1:7.