உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 10/8 பக். 20-21
  • துறவறம் ஞானத்திற்கு திறவுகோலா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • துறவறம் ஞானத்திற்கு திறவுகோலா?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பொய்யான ஊகங்களின் அடிப்படையில்
  • துறவறம் தேவையில்லை
  • நாம் துன்புறுவதைக் காண்பது கடவுளுக்குப் பிரியமா?
    விழித்தெழு!—1995
  • பூமி பரதீஸாக மாறுமென நம்பலாம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • ஆத்துமாவுக்கு ஒரு மேம்பட்ட நம்பிக்கை
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 10/8 பக். 20-21

பைபிளின் கருத்து

துறவறம் ஞானத்திற்கு திறவுகோலா?

“துறவிகள் இரும்பு விலங்குகளையும், சங்கிலிகளையும், கூர்மையான பொருட்கள் பொருத்தப்பட்ட அரைக்கச்சைகளையும், கூர்முனையுள்ள கழுத்துப் பட்டைகளையும் அணிந்திருந்தார்கள் . . . மற்றவர்கள் முட்களின்மீதும் முட்செடிகளின்மீதும் உருண்டார்கள்; வேண்டுமென்றே பூச்சிகள் தங்களை கடிக்கும்படி அனுமதித்தார்கள்; தங்களுக்குத்தாங்களே சூடு போட்டுக் கொண்டு, தங்களுடைய காயங்களில் எப்போதும் சீழ்வடிந்து கொண்டிருப்பதற்காக அதை குத்திக் கொண்டிருந்தார்கள். ஓரளவு பட்டினிநிலை இயல்பான போக்காக இருக்க, சிலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று கெட்டுப்போன அல்லது அருவருப்பான உணவை சாப்பிட்டனர்.”—த செயின்ட்ஸ், ஈடத் சய்மன் எழுதியது.

இவர்களே துறவிகள். இவர்கள் ஏன் தங்களை இவ்வளவு மோசமாக நடத்திக் கொண்டார்கள்? உலகின் நன்மைக்காக—புத்த மற்றும் கிறிஸ்தவ துறவறத்தின் மனப்பான்மை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், அதன் எழுத்தாளர்கள் இவ்வாறு விளக்குகின்றனர்: “குறைந்தபட்சம் சாக்ரடீஸின் காலந்தொட்டு, (பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டு) அத்தியாவசியமானதைத்தவிர மற்றதை நீக்கிவிட்டு, புலன்சார்ந்த மற்றும் பொருள்சார்ந்த சுகபோகங்களின்றி வாழ்வதே உண்மையான ஞானத்திற்கான முன்நிபந்தனை என்று பரவலாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தது.” உடலை அடக்கி ஒடுக்குவது தங்களுடைய ஆவிக்குரிய கூருணர்வை உயர்வாக்கி மெய்ஞானத்திற்கு வழிநடத்துகிறது என்று துறவிகள் நினைத்தனர்.

துறவறத்தை சரியாக வரையறுப்பது கடினம். சிலர் அதை சாதாரணமாக, சுயகட்டுப்பாடு அல்லது தன்னலம் துறத்தல் என்று பொருள்கொள்கின்றனர். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இத்தகைய ஒழுக்கங்களை உயர்வாக கருதினர். (கலாத்தியர் 5:22, 23; கொலோசெயர் 3:5) பொருளாசை நிறைந்த வாழ்க்கைமுறை கொண்டுவரக்கூடிய கவலைகள் முட்டுக்கட்டையாக இல்லாத எளிய வாழ்க்கையைத்தான் இயேசு கிறிஸ்துவும் பரிந்துரைத்தார். (மத்தேயு 6:19-33) இருப்பினும், துறவறம் என்பது பெரும்பாலும் மேலே விவரிக்கப்பட்டவற்றைப் போல, மிக அதிக கண்டிப்பு, அளவுக்குமீறிய நிலை போன்றவற்றுடன் இணைக்கப்படுகிறது. இத்தகைய துறவறப் பழக்கங்கள், விசேஷமாக அவற்றின் கடும் கட்டுப்பாட்டு முறைகளில், உண்மையிலேயே ஞானத்திற்கு திறவுகோலாக உள்ளனவா?

பொய்யான ஊகங்களின் அடிப்படையில்

பொருள்சம்பந்தமான காரியங்களும் உடல்சார்ந்த இன்பங்களும் இயல்பாகவே கெட்டவையாக இருப்பதால், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றன என்ற கருத்தே துறவறம் தோன்றுவதற்கு காரணமான தத்துவங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு உடலோடும் ஆத்துமாவோடும் உருவாக்கப்பட்டிருப்பவனே மானிடன் என்ற பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நம்பிக்கை துறவறத்துக்கு வழிநடத்திய மற்றொரு கோட்பாடாக உள்ளது. சடப்பொருளான உடல், ஆத்துமாவின் சிறையென்றும், மாம்சமே அதன் எதிரி என்றும் துறவிகள் நம்புகின்றனர்.

பைபிள் என்ன சொல்லுகிறது? இந்த பூமியை படைத்துமுடித்த பின்பு, கடவுள் தாம் உண்டாக்கியிருந்த ஒவ்வொன்றும்—தம்முடைய எல்லா இயற்பொருள், சடப்பொருள் சிருஷ்டிப்பும்—“மிகவும் நன்றாயிருந்தது” என்று அறிவித்தார். (ஆதியாகமம் 1:31) ஏதேன் தோட்டத்தில் மனிதனும் மனுஷியும் சடப்பொருட்களை அனுபவிக்க வேண்டுமென்று கடவுள் நோக்கங்கொண்டார். ஏதேன் என்ற பெயர்தானே “இன்பம்” அல்லது “மகிழ்ச்சி” என்று பொருள்படுகிறது. (ஆதியாகமம் 2:8, 9) ஆதாமும் ஏவாளும், தாங்கள் பாவம் செய்யும்வரையாக பரிபூரணராகவும் தங்களுடைய சிருஷ்டிகருடன் நல்ல உறவை அனுபவிப்போராகவும் இருந்தார்கள். பாவம்செய்த சமயத்திலிருந்து, அபூரணம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு தடையாக ஆனது. இருப்பினும், நியமங்களுக்கு இசைவான மனித ஆசைகளைப் திருப்திசெய்வதோ, கடவுள் அனுமதித்துள்ள சரீர இன்பங்களை அனுபவிப்பதோ, அவருடைய ஒழுக்கச் சட்டங்களுக்கு இசைவாக இருக்கும்போது, அவருக்கும் அவருடைய வணக்கத்தாருக்கும் இடையே உள்ள பேச்சுத்தொடர்புக்கு ஒருபோதும் தடையை உருவாக்காது!—சங்கீதம் 145:16.

கூடுதலாக, தூசியிலிருந்து சிருஷ்டிக்கப்பட்டு, மாம்ச உடலால் ஆன மனிதனே ஒரு ஆத்துமாவாக இருக்கிறான் என்று பைபிள் தெளிவாக போதிக்கிறது. ஆத்துமா என்பது மாம்ச உடலுக்குள்ளே அடைபட்டிருக்கும், உருவமும் அழிவும் இல்லாத ஒருவகை தனித்திருக்கும் வஸ்து என்ற எண்ணத்தையோ அல்லது கடவுளோடு ஒரு நெருங்கிய உறவை அனுபவிப்பதை மாம்சம் ஏதோ விதத்தில் தடை செய்கிறது என்ற கருத்தையோ வேதவசனங்கள் ஒருபோதும் ஆதரிக்கிறதில்லை.—ஆதியாகமம் 2:7.

தெளிவாகவே, துறவறத்தைப் பற்றிய கொள்கை, மனிதன் கடவுளோடு கொண்டிருக்கும் உறவுக்கு ஒரு உருக்குலைந்த காட்சியை அளிக்கிறது. கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டும் சிலர், அடிப்படை பைபிள் சத்தியங்களுக்கு பதிலாக வஞ்சனையான மனித தத்துவங்களை முன்னேற்றுவிப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (1 தீமோத்தேயு 4:1-5) இத்தகைய கருத்தையுடைய சிலரைக் குறித்து ஒரு மதசரித்திர ஆசிரியர் இவ்வாறு சொல்லுகிறார்: “சடப்பொருள் தீயதென்றும் . . . சடப்பொருளின் சிக்கலிலிருந்து மனிதனின் ஆத்துமாவை விடுதலை செய்யவேண்டும் என்ற நம்பிக்கை கடும் துறவறத்தை ஊக்குவித்தது; அது மாம்சம் சாப்பிடுவது, உடலுறவு கொள்ளுவது இன்னும் இதுபோன்றவற்றை தடைசெய்தது; விசேஷ சடங்குகளை மேற்கொண்ட உயர்ந்தோரான, ‘பரிபூரணவாதிகள்’ அல்லது பெர்ஃபெக்டி போன்றவர்களால் மட்டுமே இவை கடைப்பிடிக்க முடிந்தவை.” இப்படிப்பட்ட சிந்தனைக்கு பைபிள் ஆதாரம் இல்லை; எனவே ஆரம்பகால கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாகவும் இது இருக்கவில்லை.—நீதிமொழிகள் 5:15-19; 1 கொரிந்தியர் 7:4, 5; எபிரெயர் 13:4.

துறவறம் தேவையில்லை

இயேசுவும் அவருடைய சீஷர்களும் துறவிகளாக இருக்கவில்லை. அவர்கள் அநேக சோதனைகளையும் துன்பங்களையும் சகித்தபோதிலும், இத்தகைய துன்பங்கள் சுயமாக அவர்களே வருவித்துக் கொண்டவையாக ஒருபோதும் இருக்கவில்லை. கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டுமென்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார்; இல்லையென்றால் இந்த வஞ்சனையான மனித தத்துவங்கள், அவர்களை கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்திலிருந்து விலகச்செய்து நியாயமற்ற, மட்டுக்குமீறிய பழக்கங்களுக்கு வழிநடத்தும். பவுல், “சரீரத்தை அடக்கி ஒடுக்குவதை” முக்கியமாக குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி [“சரீரத்தை அடக்கி ஒடுக்குவதைப்பற்றி,” NW] ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.” (கொலோசெயர் 2:8, 23) துறவறம் விசேஷித்த பரிசுத்தத்திற்கோ அல்லது மெய்ஞானத்திற்கோ வழிநடத்தாது.

உண்மைதான், கிறிஸ்தவ கீழ்ப்படிதலைத் தேவைப்படுத்தும் வாழ்க்கைமுறை மும்முரமான பிரயாசத்தையும் சுயகட்டுப்பாட்டையும் தேவைப்படுத்துகிறது. (லூக்கா 13:24; 1 கொரிந்தியர் 9:27) கடவுளைப் பற்றிய அறிவை அடைவதற்காக ஒருவர் கடுமையாக பிரயாசப்படவேண்டும். (நீதிமொழிகள் 2:1-6) அதோடு, “இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும்” அடிமைப்பட்டிருப்பதற்கும், ‘தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராய்’ இருப்பதற்கும் எதிராக பைபிள் கடுமையாக எச்சரிக்கிறது. (தீத்து 3:3; 2 தீமோத்தேயு 3:4, 5) இருந்தபோதிலும், இத்தகைய வேதப்பூர்வ பகுதிகள் துறவறம் மேற்கொள்வதை ஆதரிப்பதில்லை. பரிபூரண மனிதனாகிய இயேசு கிறிஸ்து, உணவு, பானம், இசை, நடனம் ஆகியவற்றை உட்படுத்திய மகிழ்ச்சிகரமான சமயங்களை அனுபவித்தார்.—லூக்கா 5:29; யோவான் 2:1-10.

மெய்ஞானம் நியாயத்தன்மையுள்ளது; அது மட்டுக்குமீறி செல்லாது. (யாக்கோபு 3:17) யெகோவா தேவன் நம்முடைய உடலை வாழ்க்கையின் அநேக இன்பங்களை அனுபவிக்கத்தக்க திறனோடு படைத்திருக்கிறார். நாம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். அவருடைய வார்த்தை நம்மிடம் இவ்வாறு சொல்கிறது: “மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.”—பிரசங்கி 3:12, 13.

[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]

குகைக்குள்ளே புனித ஜெரோம் /The Complete Woodcuts of Albrecht Dürer/Dover Publications, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்