உலகத்தைக் கவனித்தல்
வாகன திருட்டினால் பேரிழப்பு
ஸ்டேட்டிஸ்டிக்ஸ் கனடா என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் 1992-ல் 1,46,846 வாகனங்கள் திருடப்பட்டன. இது ஒரு புதிய பதிவாகும். இது ஒவ்வொரு 1,000 வாகனங்களுக்கும் திருட்டு வீதம் 8.4-ஆக இருந்தது; ஆனால் ஐக்கிய மாகாணங்களிலோ இந்த வீதம் சுமார் 8.3-ஆக இருந்ததென தி வான்கூவர் சன் என்ற செய்தித்தாள் கூறிற்று. திருடப்பட்ட வாகனங்கள் ஒருபோதும் அவை எந்நிலையில் இருந்தனவோ அந்நிலையில் திருப்பிக் கொடுக்கப்பட்டதில்லை. மேலும் அந்த அறிக்கை குறிப்பிட்டதாவது: “1992-ல் வாகன திருட்டினாலும், வாகனத்திலுள்ள சாமான்கள் திருட்டினாலும், வாகனங்களை அழிப்பதனாலும் ஏற்பட்ட நஷ்டம் $160 கோடியாக இருந்தது.” இந்த இழப்புகள் கடன் அட்டை (credit cards) மோசடியாலும் திருட்டாலும் ஏற்படும் நஷ்டத்தைவிட சுமார் 30 மடங்கு அதிகமாகவும், வங்கிக் கொள்ளைகளால் ஏற்படுவதைவிட ஏறக்குறைய 500 மடங்கு அதிகமாகவும் இருக்கின்றன. வாகன திருட்டுகளுக்கு உல்லாச சவாரி மிகப் பொதுவான காரணமாகக் குறிப்பிடப்பட்டது. “வாகனம் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதிப்பேர் 12 முதல் 17 வயது நிறைந்த இளைஞர்களாக இருந்தனர்,” என்று சன் மேலுமாக கூறியது.
சாப்பாட்டுத் திருடன்
நியூ யார்க்கைச் சேர்ந்த மனிதன் ஒருவன் ஒரே குற்றத்திற்காக, சாப்பாட்டை திருடியதற்காக, 31 தடவை சிறை சென்று வந்தான். 36 வயதுள்ள அந்த மனிதன் உணவுவிடுதி ஒன்றிற்குள் நுழைவான். பசியுண்டாக்கும் ஒரு நல்ல மதுபானத்தையும் வாய்க்கு ருசியான சாப்பாட்டையும் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுவிட்டு கடைசியில் ஒரு கடுங்காப்பியும் குடிப்பான். பில் வரும்போது, தன்னிடம் பணமில்லை என்று சர்வரிடம் சொல்லிவிட்டு, கைது செய்யப்படும்படி காத்திருப்பான். ஏன் அப்படி செய்கிறான் அவன்? “ஜெயிலுக்கு வெளியே வாழ்க்கை கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது,” என்று வீடற்ற அந்த மனிதன் சொல்கிறான். ஜெயிலுக்குள் ஒழுங்கு இருக்கிறது, வேளாவேளைக்குச் சாப்பாடு கிடைத்துவிடும், சாப்பாடும் வாய்க்கு ருசியாக இருக்கும் என்று அவன் அடித்துச் சொல்கிறான். அது மட்டுமல்லாமல், மக்களிடமிருந்து கொள்ளையடிக்கவோ அவர்களைப் புண்படுத்தவோ அவனுக்கு இஷ்டமில்லை; அவனுக்கு ஏதோ நன்றாக சாப்பிடவேண்டும், சுத்தமான படுக்கையும் தூங்க அமைதியான இடமும் வேண்டும், அவ்வளவுதான். ஆகவே ஒவ்வொரு முறையும் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு, முழு தண்டனையையும் கொடுக்கும்படி வேண்டிக்கொள்கிறான். அவனை சிறையில் வைத்திருக்க, வரி செலுத்துவோர் நாளொன்றுக்கு $162 செலுத்தவேண்டி இருக்கிறது. உண்மையில், சமீபத்தில் அவன் சாப்பிட்ட $51.31 சாப்பாடு, அவனை 90 நாட்களுக்கு சிறையில் வைத்திருப்பதற்கு, அவர்களை $14,580 செலவு செய்யவைத்தது. அவன் கடந்த ஐந்து வருடங்களின்போது நியூ யார்க்கில் வரி செலுத்துபவர்கள் $2,50,000-க்கும் அதிகமாக செலவு செய்யும்படி வைத்தான். “வறுமை அல்லது பசியின் பிடியிலிருந்து தப்பித்து சிறைச்சாலையில் தஞ்சம் புகும் நோக்கத்தோடு, அற்பமான குற்றங்கள் செய்கிற சிலர் இருப்பதாகவும், அவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சட்டப் பாதுகாப்பமைப்பு வக்கீல்கள் கண்டிருக்கின்றனர்,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது.
உங்கள் பல் டாக்டரை கேளுங்கள்
பல்மருத்துவ முறைகள் மூலம் எய்ட்ஸ் வைரஸ் பரவ வாய்ப்பு இருக்கிறது என்ற சமீபத்திய கற்பனை ஜனங்களை நடுநடுங்க வைக்கிறது. பல் நோயாளிகளில் 83 சதவீதத்தினர் பல் சிகிச்சை பெறும்போது தொற்றுநோய் வந்துவிடுமென பயப்படுகின்றனர் என்று அமெரிக்க பல் சுகாதார நிபுணர்களின் சங்கத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி வெளிப்படுத்தியது. அமெரிக்கன் ஹெல்த் என்ற பத்திரிகை சொல்லுகிறபடி, பல் மருத்துவ ஊழியர்கள் கையுறைகளையும் முகமூடிகளையும் அணிந்துகொள்ளும்படி மட்டுமல்லாமல், ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சையளிப்பதற்கு முன்னும் அவற்றை மாற்றும்படியும் நோயாளி பார்த்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சையளித்தபின், மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் கருவிகளில் உள்ள கிருமிகளை வெப்பத்தினால் அழிக்கவேண்டும். “சாராயத்தை உபயோகித்து கருவிகளைத் துடைப்பது போன்ற குளிர்-கிருமியழிப்பு முறைகள் (cold-sterilization methods) போதுமானவையல்ல” என்பதாக அமெரிக்கன் ஹெல்த் குறிப்பிடுகிறது. “நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பல் டாக்டர் பதிலளிக்கத் தயாராக இல்லையெனில், வேறொரு பல் டாக்டரைப் பாருங்கள்,” என்றும் அந்தப் பத்திரிகை மேலும் சொல்கிறது.
மாசுபடுத்தப்பட்ட பயணிகள்
ஒவ்வொரு வருடமும் பயணம் செய்யும் 400 கோடி மக்களில், 20 முதல் 50 சதவீதத்தினர் வழக்கமாக மாசுபடுத்தப்பட்ட உணவு மற்றும் தண்ணீரின் காரணமாக வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கணக்கிடுகிறது. பயணச் சோர்வு அல்லது உணவு மற்றும் காலநிலை மாற்றம் பயணிகளின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்து இந்தப் பிரச்சினையை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்குக்கான வாய்ப்பைக் குறைக்க, பின்வருமாறு WHO சிபாரிசு செய்கிறது: உணவு சரிவர சமைக்கப்பட்டிருக்கிறதா என்றும் சுடச்சுட பரிமாறப்படுகிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். குடிநீர் ஒருவேளை பாதுகாப்பற்றதாய் இருக்குமானால், அதைக் கொதிக்க வையுங்கள்; அல்லது மருந்துக்கடைகளில் கிடைக்கும் நம்பகரமான மாத்திரைகளைப் பயன்படுத்தி கிருமிகளைக் கொல்லுங்கள். உரித்தெடுக்கக்கூடிய அல்லது ஓட்டை உடைத்தெடுக்கக்கூடிய பழங்கள் அல்லது காய்கறிகளைத் தவிர, பச்சையாக உண்ணும் உணவுவகைகளைத் தவிருங்கள். WHO சொல்லுகிறது: இந்த “நியமத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்: அதை சமையுங்கள், அதை உரியுங்கள் இல்லையென்றால் தூக்கியெறியுங்கள்.”
கத்தோலிக்க பாவங்கள்
தி நியூ யார்க் டைம்ஸ் சொல்லுகிறபடி, கத்தோலிக்கர்கள் கடந்த 2,000 வருடங்களுக்கு மனிதகுலத்திற்கு எதிராக செய்த பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யும்படி போப் இரண்டாம் ஜான் பால் அவர்களை உத்வேகப்படுத்துகிறார். “தனது அங்கத்தினர்கள் பாவத் தன்மையுடையவர்களாக இருக்கிறார்கள்” என்பதை சர்ச் முழுவதுமாக உணர்ந்திருக்க வேண்டும் என்று போப் சொன்னார். தெளிவாகவே, இந்தப் பாவங்கள், கொடூரமான ஸ்பானிய கத்தோலிக்க ஒடுக்குமுறை விசாரணையிலும் நாசி படுகொலையிலும் கத்தோலிக்கர்கள் வகித்த பங்கோடு சம்பந்தப்பட்டவையாகவே இருக்கின்றன. “கத்தோலிக்கர்களின் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யும் விஷயம்தானே உணர்ச்சிவேகப்படுத்துவதாக இருக்கிறது; ஏனென்றால் சத்தியத்தைப் பற்றிய சர்ச்சின் விளக்கத்தில் தப்பு இருக்கிறது என்பதையே இது மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது,” என்பதாக டைம்ஸ் குறிப்பிடுகிறது. “நவீனகால ஒழுக்க நெறிகளில் தவறுவதை ஆராய்ந்து பார்ப்பது அதைவிட முக்கியம்,” என்று சில கார்டினல்கள் உணர்ந்தனர் என்பதாகவும் அந்தச் செய்தித்தாள் மேலுமாக கூறிற்று.
அமெரிக்காவில் துப்பாக்கிகள்
சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி, ஐக்கிய மாகாணங்களில் பொதுமக்கள் மத்தியில் சுமார் 20 கோடி துப்பாக்கிகள் புழக்கத்தில் இருக்கின்றன. சராசரியாக, ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் யாராவது ஒருவர் சுடப்படுகிறார். ஒவ்வொரு 14 நிமிடங்களுக்கும் யாராவது ஒருவர் துப்பாக்கி சூட்டினால் இறக்கிறார். ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் ஒரு குழந்தையோ வாலிபரோ துப்பாக்கியால் தற்கொலை செய்துகொள்ளுகிறார். அமெரிக்கக் குழந்தைகள் எந்தவொரு நாளிலும் சுமார் 2,70,000 துப்பாக்கிகளைப் பள்ளிக்குக் கொண்டு வருகின்றனர். “1979-க்கும் 1991-க்கும் இடையே, கிட்டத்தட்ட 50,000 பிள்ளைகள் துப்பாக்கிகளால் கொல்லப்பட்டனர்—இது, வியட்நாம் போரில் கொல்லப்பட்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கைக்கு ஏறக்குறைய சமமாக இருக்கிறது,” என்று ரெட்புக் என்ற பத்திரிகை விவரிக்கிறது.
இந்திய தம்பதிகள் நெருக்கப்படுகின்றனர்
இந்தியாவில், திருமணமானது, “‘நான்-முதல்’ சமுதாயமாக விரைவில் மாறிவரும் சமுதாயத்தில் நெருக்கப்படுகிறது,” என்பதாக இந்தியா டுடே ஆங்கில பத்திரிகை கூறுகிறது. அதிகமான மற்றும் இளம் தம்பதிகள் தங்களுடைய சண்டைகளை நீதிமன்றத்திற்குச் சென்று தீர்த்துக்கொள்கின்றனர். இந்தியா டுடே சொல்லுகிறபடி, “திருமணத்தின் முதல் சில வருடங்களில் நிபுணர்களின் ஆலோசனையைத் தேடி வரும் ஜனங்களுடைய எண்ணிக்கை, கடந்த ஐந்து வருடங்களில் இரு மடங்காகியிருக்கிறது,” என்பதாக ஆலோசகர் டாக்டர் நாராயண ரெட்டி அறிவிக்கிறார். சில தம்பதிகள் திருமணம் முடிந்து ஒருசில நாட்களிலேயே நிபுணர்களின் உதவியை நாடி வந்திருக்கின்றனர். இந்தியத் திருமணங்கள் பெரும்பாலானவற்றைச் சீரழிக்கும் காரணிகள் ஒன்றும் புதியவையல்ல: விபசாரம், குடிப்பழக்கம், பணம் மற்றும் சொத்துத் தகராறுகள், துணைவரின் குடும்பத்தாரோடுள்ள மனக் கசப்புகள், பாலுறவுப் பிரச்சினைகள் போன்றவையே. மன இறுக்கமானது “இந்தியக் குடும்பங்களில் எங்கும் வியாபித்திருக்கும், காணப்படாத, தீங்கு விளைவிக்கும் அன்னியனாக ஆகிவிட்டிருக்கிறது.”
கொசுவிரட்டி ரேடியோவா?
வெகுகாலமாக தொல்லை கொடுத்துவரும் கொசுவை ஒழித்துக்கட்ட, போலாந்தில் உள்ள வானொலி நிலையமொன்று புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. போலாந்தில் கொசு முட்டை பொரிக்கும் ஒரு பருவத்தின்போது ஆயிரக்கணக்கான வானொலி நேயர்கள் பூச்சிக் கொல்லிகள் ஒன்றும் உபயோகிக்காமலேயே எரிச்சலூட்டும் இந்தப் பூச்சிகளுக்கு எதிராக போராட முடிந்ததாக டெர் சோவாஷ் என்ற பிரெஞ்சு நாட்டு இயற்கை பத்திரிகை அறிவிக்கிறது. அவர்கள் தங்களுடைய ரேடியோக்களை ரேடியோ ஸெட் என்ற வானொலி நிலைய அலைவரிசைக்கு வெறுமனே திருப்பி வைத்தனர். டெர் சோவாஷ் சொல்லுகிறபடி, இந்த வானொலி நிலையம் மனிதர்களால் கேட்கமுடியாத ஆனால் கொசுக்களால் மட்டும் கேட்கமுடிந்த ரேடியோ அலைகளை இடைவிடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருக்கும். இந்த ஒலிபரப்பானது கொசுக்களை உண்ணும் வௌவால்களால் போடப்படும் உயர்ந்தளவு அலைகளைக்கொண்ட சப்தங்களைப் போன்று எலக்ட்ரானிக் முறையில் உண்டாக்கப்படும் சப்தங்களாகும். இந்த ஒலியைக் கேட்கமுடிகிற தொலைவிலுள்ள எந்தக் கொசுவையும் விரட்ட போதுமானதாக இருந்தது.
அதிகம்பேர் வயோதிபராகின்றனர்
மனித குடும்பம் வயோதிபமடைந்து வருகிறது. “65 வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் அடைந்தவர்களின் உலகளாவிய மொத்த எண்ணிக்கை தற்போது 36 கோடியாக இருக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் 8,00,000 ஆட்கள் என்ற வீதத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் பத்திரிகையான, உவர்ல்ட் ஹெல்த் விவரிக்கிறது. அடுத்த 30 வருடங்களின்போது, வயோதிபரின் எண்ணிக்கை தோராயமாக 85 கோடியை எட்டலாமென எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் “மகப்பேறு வீதம் தொடர்ந்து குறைவாகவே இருந்து வருவதனாலும், ஆயுசுகால எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதனாலும்,” இந்நாடுகளில் உள்ள வயதானவர்களின் சதவீதம் ஒரு திடீர் அதிகரிப்பைக் கொண்டிருக்கிறது என்பதாக கூறுகிறது உவர்ல்ட் ஹெல்த். “தற்போது ஸ்வீடன்தான் உலகிலேயே ‘மிக அதிக வயதான’ மக்களைக் கொண்டிருக்கிறது. அதன் குடிமக்களில் 18 சதவீதத்திற்கும் அதிகமான ஆட்கள் 65 வயதையும் அதற்கு மேற்பட்ட வயதையும் அடைந்தவர்களாக இருக்கின்றனர்,” என்பதாகவும் அந்தப் பத்திரிகை கூறுகிறது.
பிரிட்டனில் உணவும் ஆரோக்கியமும்
“மிக மோசமான ஆரோக்கியத்தை உடைய ஐரோப்பியர்கள் மத்தியில் பிரிட்டனைச் சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்” என்கிறது தி இகானமிஸ்ட் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை. பிரிட்டனில் வயதுவந்தவர்களில் சுமார் பாதிக்கு மேல், “மருத்துவ நியமங்களுக்கு மீறிய எடையுள்ளவர்களாய் அல்லது தடியர்களாய் இருக்கின்றனர்; இது மற்றெந்த நாட்டினரையும்விட, செக்கோஸ்லோவாகியருக்கு அடுத்ததாக, பிரிட்டிஷ் ஜனங்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதன் காரணத்தை விளக்கலாம்,” என்பதாக சமீபத்திய ஆராய்ச்சியொன்று வெளிப்படுத்தியதாக தி இகானமிஸ்ட் கூறுகிறது. இந்நிலைமையை முன்னேற்றுவிக்க, உணவுக் கொள்கையின் மருத்துவ அம்சங்களின் பேரிலான அரசாங்கக் குழு அநேக சிபாரிசுகளை செய்திருக்கிறது. “மீன், ரொட்டி, காய்கறிகள், உருளைக்கிழங்கு” போன்றவற்றை அதிகம் உட்கொள்வதும், உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதும் அதன் ஆலோசனைகளில் உட்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஓசோன் தேய்மானம்
பூமியைச் சுற்றியிருக்கும் ஓசோன் படலத்திற்கு ஏற்படும் தீய பாதிப்பைக் குறைக்க முயற்சிகள் எடுக்கப்படுகிறபோதிலும், இந்தப் பாதுகாப்புப் படலத்தின் தேய்மானம், 20-ம் நூற்றாண்டு முடிவுவரையாவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் என்பதாக ஸ்விட்ஸர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள உலக வானிலை ஆராய்ச்சி கழகம் (OMM) முன்னறிவிக்கிறது. ஃப்ரான்ஸ்-ப்ரஸ் செய்தியிதழ் கூறுகிறபடி, OMM-ன் முடிவுகள், கடந்த நான்கு வருடங்களாக 29 நாடுகளில் 266 விஞ்ஞானிகள் நடத்திய ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. ஓசோனைப் பாழாக்கும் தொழிற்சாலை கழிவுகளைக் குறைக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தெளிவாகவே விரும்பிய பலன்களைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் பூமியின் சீரடுக்கு மண்டல (stratosphere) ஓசோன் படலத்தின் நிலையானத் தன்மையில் “உலகளாவிய மற்றும் தொடர்ந்து குறைவுபடுதல்” இருந்துவருகிறது என்று வெளிப்படுத்தி, மிகவும் ஆபத்தான காலப்பகுதி “இன்னும் நம்முன் இருக்கிறது,” எனவும் OMM-ன் அறிக்கை எச்சரித்தது.