உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 10/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தண்டனைக் குறைப்பு சலுகைகள்
  • கமுக்கமான நோய்
  • பறக்கும்போதும் கலாட்டா
  • ஏறுது சவஅடக்கச் செலவு
  • மறைந்துவரும் புதைபடிவங்கள்
  • வலியின்றி பல்லைத் தொடும் டாக்டர்களா?
  • நியூக்ளியர் கழிவு
  • வார்த்தை பிடிபட சைகை
  • வேலைத்தலத்தில் மரணம்
  • வாய் புற்றுநோய்
  • துன்பத்தின் பாதையில் சவைத்தல்
    விழித்தெழு!—1996
  • புற்றுநோய் என்பது என்ன? எதனால் அது வருகிறது?
    விழித்தெழு!—1987
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2000
  • பல் மருத்துவரிடம் ஏன் செல்ல வேண்டும்?
    விழித்தெழு!—2007
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 10/22 பக். 28-29

உலகை கவனித்தல்

தண்டனைக் குறைப்பு சலுகைகள்

ஆயிரமாண்டுக் காலத்தைக் கொண்டாடும் வகையில், வருஷம் 2000-ஐ இரண்டாம் போப் ஜான் பால் புனித ஆண்டாக அறிவித்திருக்கிறார். ரோமுக்கு புனிதப் பயணம் செல்பவர்களது பாவத்துக்குத் தண்டனைக் குறைப்பு சலுகை வழங்கவும் முன்வந்திருக்கிறார் என்பதாக லாஸேர்வாட்டோரே ரோமானோ செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. தண்டனைக் குறைப்புச் சலுகை என்பது கத்தோலிக்கரிடையே பின்பற்றப்படும் ஒரு பழக்கமாகும். இது, பாவத்துக்கு உரிய தண்டனையைக் குறைத்து சலுகை வழங்குவதைக் குறிக்கும். வத்திகன் செய்தித்தாள் கூறுவதாவது: “கடவுள் கிருபையால் செய்யும் நற்செயல் எதுவும் வீண்போகாது.” என்றாலும் இந்தப் பழக்கம், “கடவுள் கிருபையால் எல்லாருக்குமே மன்னிப்பு வழங்கப்பட்டால், தண்டனைக் குறைப்புச் சலுகையை சர்ச் வழங்க வேண்டியதன் அவசியம் என்ன?” அத்துடன், “முழு தண்டனையையும் ரத்துசெய்யும் சலுகையை வழங்க சர்ச்சுக்கு உரிமை இருந்தால், அரைகுறை தண்டனைக் குறைப்பைப் பற்றி சர்ச் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்?” போன்ற ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகளையும் எழுப்புகிறது என்பதாக அதே செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

கமுக்கமான நோய்

ஆஸ்டியோபோரோஸிஸ் என்பது கமுக்கமான ஒரு நோய். இது, “அமெரிக்கர்களில் 2,80,00,000-⁠க்கும் மேற்பட்டவர்களையும், கனடாவைச் சேர்ந்தவர்களில் சுமார் 14 லட்சம் பேரையும் பயமுறுத்துகிறது” என டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இது ஆண்களையும் பெண்களையும், இளைஞரையும் முதியவரையும் பாதிக்கிறது. மேலும், “புதிய எலும்புகள் மாற்றீடு செய்யும் வேகத்தைவிட அதிக வேகத்தில் பழைய எலும்புகள் தேய்வதால் ஏற்படுகிறது.” எலும்பு முறியும்வரை தங்களுக்கு இந்நோய் இருந்ததே அவர்களுக்குத் தெரியாது. அதிகமதிகமான டீனேஜர்களும் கல்லூரி விளையாட்டு வீரர்களும் டயட் கன்ட்ரோல் செய்வதால், “பெரியவர்களுக்கு முக்கியமாக எந்த எலும்புகள் பலமாய் இருக்க வேண்டுமோ அந்த எலும்புகளை இந்நோய் அரித்துவிடுகிறது. தங்கள் எலும்புக்கூட்டை வலுவாக்கத் தேவைப்படும் உணவை இளம் டயட் கன்ட்ரோலர்கள் தவிர்க்கின்றனர்.” அந்த அறிக்கையின்படி, “ஒருவரது எலும்பின் முழு நிறையில் சுமார் 90 சதவீதம், 18 வயது ஆவதற்குள் தேறுகிறது; 30 வயதாகும்போது முழு நிறையும் தேறிவிடுகிறது.” எலும்பின் தடிமனைக் கூட்டுவதற்காக ‘போதியளவு கால்சியத்தையும் வைட்டமின் டி-யையும் பெற்றுக்கொள்ளுங்கள்; ஒழுங்காக உடற்பயிற்சி செய்யுங்கள்; புகைப்பதை அறவே தவிருங்கள்; உங்கள் குடிப்பழக்கத்தை மிதமாக வைத்துக்கொள்ளுங்கள்’ என அந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது.

பறக்கும்போதும் கலாட்டா

“விமானத்தில் கோபம்” எனப்படும், விமான பயணிகளின் கட்டுக்கடங்கா நடத்தை, “கடந்த ஐந்து ஆண்டுகளில் 400 சதவீதமாக அதிகரித்திருக்கிறது” என பிஸினஸ் டிராவலர் இன்டர்நேஷனல் பத்திரிகை கூறுகிறது. இந்தத் திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம்? டென்ஷன் ஒரு முக்கிய காரணம். விமானப் போக்குவரத்து தாமதமாதல், ரத்து செய்யப்படுதல், நெரிசல், பயணம் பத்திரமாய் இருக்குமோ என்று பயப்படுதல்​—⁠இவை யாவும் சேர்ந்து பயணிக்கு டென்ஷனை ஏற்படுத்தி, அது கோபமாய் வெடிக்கும்படி செய்யலாம். “பயணம் துரிதமாகவும் சுமுகமாகவும் இருப்பதற்கு பல்வேறு முன்னேற்றங்களைச் செய்யவே ஒவ்வொரு ஏர்லைனும் பாடுபடுகிறது. ஆனால் உண்மையில் அது நடப்பதில்லை” என இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் ஃபெடரேஷனைச் சேர்ந்த ஸ்டூவர்ட் ஹாவர்ட் கூறுகிறார். விமானத்தில் கோபம் வெடிப்பதற்கு மற்றொரு காரணம், புகைப்பதற்குத் தடைவிதித்துள்ள விமானங்கள் பெருகிவிட்டதுதான் என்பதாக பிரசித்திபெற்ற ஏர்லைன் பிரதிநிதி ஒருவர் கூறுகிறார். அந்த அறிக்கையின்படி, 1997-⁠ல் ஒரு ஏர்லைனில் “பயணிகளின் ரவுடித்தனமான நடத்தை சம்பந்தப்பட்ட சம்பவங்களில் பாதிக்கு மேற்பட்டவற்றுக்குக் காரணம் புகைபிடிப்பவர்கள் ஏமாற்றமடைந்ததுதான்” எனத் தெரியவருகிறது. மற்றொரு காரணம், மது அருந்துவது. ஏனெனில், உயரத்தில் பறக்கும்போது மதுமயக்கம் அதிகமாகலாம். உடன் பயணி ஆச்பூச்சென்று கத்திக் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தால், என்ன செய்ய வேண்டுமென்று அந்த அறிக்கை சிபாரிசு செய்கிறது? “விமானப் பணியாளர்களைக் கூப்பிடாதீர்கள். அதற்குப் பதிலாக, உங்கள் இருக்கையை விட்டு எழுந்து, விவேகத்துடன் இந்தப் பிரச்சினையை அவர்கள் கவனத்துக்குக் கொண்டுசெல்லுங்கள்.” கையடக்கமான ஸ்டீரியோவில் “இதமான இனிய இசையைக் கேட்டு மகிழ்வதன் மூலமாகவோ, சுவாரஸ்யமான புத்தகத்தை வாசித்து மகிழ்வதன் மூலமாகவோ, வம்புச்சண்டையில் மாட்டிக்கொள்ளாமல் உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” என அது மேலும் ஆலோசனை வழங்குகிறது.

ஏறுது சவஅடக்கச் செலவு

இறந்த உடலைப் புதைப்பதற்கு ஆகும் செலவைக் குறைப்பதற்காக அதிகமதிகமானோர் சவத்தை எரிக்கின்றனர். தேசிய சவ அடக்க இயக்குநர்கள் சங்கத்தின்படி, ஐக்கிய மாகாணங்களில் பாரம்பரிய முறையில் செய்யப்படும் ஒரு சவஅடக்க நிகழ்ச்சிக்கு 1996-⁠ல் சராசரியாக 4,600 டாலர் செலவானது. அதற்கு முரணாக, “எரிப்பதற்கென பயன்படுத்தும் கன்டெய்னரைப் பொறுத்தும், சாம்பல் பாத்திரத்தைப் பொறுத்தும் சவத்தை எரிப்பதற்கு 500 டாலர் முதல் 2,000 டாலர் வரை செலவாகிறது” என சிகாகோ சன்-டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. மேலும், சவத்தை எரிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தோட்டமோ, அடையாளம் காட்டுவதற்கு கல்லறைக் கற்களோ தேவையில்லை. ஏனெனில் பாரம்பரிய முறைப்படி புதைத்தால், வழக்கமான செலவுடன், இவற்றிற்கே 40 சதவீதம் கூடுதல் செலவாகிறது. ஐக்கிய மாகாணங்களில் 1997-⁠ல் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 23.6 சதவீத சடலங்கள் எரிக்கப்பட்டன; அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் அது 42 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாய் அந்த செய்தித்தாள் சொல்கிறது.

மறைந்துவரும் புதைபடிவங்கள்

திருட்டு, அடாவடி, பேரார்வமிக்க டூரிஸ்ட் பார்வையாளர்கள் ஆகிய காரணங்களால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டிருந்த புதைபடிவ தலங்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றன என்பதாக நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “மிகப் பெரிய சொத்தாக கருதப்படும் புதைபடிவங்களை அருங்காட்சியகங்களுக்கு மாற்றவோ, அல்லது அப்படிப்பட்ட புதைபடிவ தலங்களுக்கு பார்வையாளர்களை வராமல் தடுக்கவோ புவியியலாளர்கள் சிலர் விரும்புகின்றனர்” என அந்தப் பத்திரிகை கூறுகிறது. என்றாலும், பொதுமக்களுக்கு புதைபடிவங்களை அவற்றின் இயற்கைச் சூழலில் பார்க்கும் உரிமை இருக்கிறதே என மற்றவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தப் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில், உலகளவில் மறைந்துவரும் தலங்களின் பட்டியலை சர்வதேச தொல்லுயிரியியல் கழகம் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இதுவரை சுமார் 50 தலங்களை மட்டுமே அந்தப் பட்டியலில் காணமுடிகிறது.

வலியின்றி பல்லைத் தொடும் டாக்டர்களா?

பல் டாக்டர் பல்லைக் குடைந்து சிகிச்சை செய்வதற்கு என்றைக்குத்தான் விடிவுகாலம் வருமோ என்று புலம்பும் பல் நோயாளிகள் அநேகர் உள்ளனர். எஃப்டிஏ கன்ஸ்யூமர் பத்திரிகை கூறுவதன்படி, அது விரைவில் ஓரளவு நனவாகலாம். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த உணவு மற்றும் மருந்து நிர்வாகம், சமீபத்தில் எர்பியம்:யாக் லேசர் கருவியைப் பல் அறுவை சிகிச்சையில் பயன்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளது. இப்போது மிகச் சிறிய டிரில்லிங் மெஷினை வைத்து பற்சிதைவை அகற்றுவதற்குப் பதிலாக, லேசரை டாக்டர்கள் பயன்படுத்தலாம் என்பதாக அந்தப் பத்திரிகை கூறுகிறது. குறிப்பாக சிதைந்த பல் திசுவை இது ஆவியாகச் செய்துவிடுகிறது. சாதாரணமாய் செய்துவரும் டிரில்லிங் முறையில் இல்லாத அதிகளவான பயன் இந்த லேசர் முறையில் கிடைக்கிறது. அவற்றில் ஒன்று, லேசர் சிகிச்சை வலியில்லாதது. இவ்வாறு, அநேக நோயாளிகளுக்கு இனி உணர்வகற்ற வேண்டிய தேவையோ, உணர்வை மரத்துப்போகச் செய்யும் ஊசிகளோ தேவையில்லை. மற்றொன்று, வாய் மரத்துப்போகும்வரை டாக்டர்கள் காத்திருக்க வேண்டியதில்லை; உடனடியாக சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். அத்துடன், அதிவேக டிரில்லிங்கால் ஏற்படும் எரிச்சல் மூட்டும் அதிர்வு இருப்பதில்லை. என்றாலும், இதில் ஒரு முக்கியமான சிக்கல் இருக்கிறது; அதாவது, ஏற்கெனவே பல் அடைக்கப்பட்டிருந்தால் இந்த லேசரை பயன்படுத்த முடியாது.

நியூக்ளியர் கழிவு

1960-களிலிருந்து உலக அணுக்கருவாற்றல் தொழிற்சாலைகள் 2,00,000 மெட்ரிக் டன் கழிவுப்பொருட்களை குவித்துவிட்டதாக நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. அத்துடன் வருடாவருடம் 10,000 டன் கழிவுகள் அக்குவியலுடன் சேர்க்கப்படுகின்றன. மரணத்தை உண்டாக்கும் இக்கழிவுகள் அனைத்தும் எங்கே செல்கின்றன? “இவற்றுள் பெரும்பாலானவை அணுக்கருவுலை வைக்கப்பட்டிருக்கும் இடங்களைச் சுற்றியே குவிக்கப்படுகின்றன” என அந்தப் பத்திரிகை கூறுகிறது. என்றாலும், கழிக்கப்பட்ட கதிரியக்கப் பொருட்களை சில பத்தாண்டுகளுக்கு மட்டுமே குவித்துவைக்கும்படியாக இவ்விடங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. எனவே நெடுங்காலமாய் குவித்துவைப்பதற்காக இந்த அணுக்கருவாற்றல் சார்ந்த கழிவுப்பொருட்களை ஏதாவது ஒரு கட்டத்தில் வேறு எங்காவது மாற்றத்தான் வேண்டும். ஆனால் எந்த நாட்டிலும், கதிரியக்க கழிவுப்பொருட்களை பாதுகாப்பாக குவித்து வைப்பதற்கு ஏற்ற பாதாள சேமிப்புக் கிடங்குகள் இல்லாதது ஒரு பெரும் சிக்கல். இதனால் “அணுக்கருவாற்றல் தொழிற்சாலை தான் விரித்த வலையிலேயே வசமாக மாட்டிக்கொண்டது” என நியூ ஸைன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது.

வார்த்தை பிடிபட சைகை

“பேச்சாளர்களுக்கு அடுத்தடுத்து வார்த்தைகள் கொப்பளிக்க வேண்டும். இதற்கு சைகைகள் உதவுகின்றன. சைகை செய்துகொண்டே பேசினால், நினைவில் புதைந்துகிடக்கும் வார்த்தைகள் வெளிவந்துவிடுவதாக புதிய ஆய்வு காட்டுகிறது” என நியூஸ்வீக் பத்திரிகை அறிக்கை செய்கிறது. ஒரு பொருளின் அளவையோ உருவத்தையோ குறிப்பிடுவதற்காக சைகை செய்வது வழக்கம்தான். அதே சமயத்தில் “பேசிக்கொண்டிருக்கும்போது கையை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவதும்” வேறுவிதத்தில் உதவுகிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணிபுரியும் ராபர்ட் கிரௌஸ் கூறுவதன்படி, இதுபோன்ற சைகைகள், “மக்களுக்கு சட்டென்று சொல்ல வராத வார்த்தைகளை ஞாபகப்படுத்த உதவுகிறது,” இதை “சொற்களஞ்சிய நினைவாற்றல்” என அவர் அழைக்கிறார். இந்த நினைவாற்றலிலிருந்தே இதுபோன்ற வார்த்தைகளை வெளிக்கொண்டுவர சைகை உதவுகிறது. இந்த நினைவாற்றலை, ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியோடு சம்பந்தப்பட்ட வாசனை, சுவை அல்லது ஒலியை நினைவில் வைத்துக்கொள்வதற்காக மூளையில் ஏற்படும் மாற்றத்துடன் ஆய்வாளர்கள் ஒப்பிடுகின்றனர். உதாரணமாக, ஏதாவது ஒரு வாசனை திரவியத்தின் குப்பென்ற வாசனையை முகர்ந்ததுமே, உங்கள் பாட்டியம்மாவின் ஞாபகம் உங்களுக்கு வரலாம். அதைப்போலவே ஒரு வார்த்தையை நினைவிற்குக் கொண்டுவர, சைகை சிறந்ததோர் “வழியாக” அமையலாம் என்பதாக நரம்பியல் வல்லுநர் பிரையன் பட்டர்வர்த் கூறுகிறார்.

வேலைத்தலத்தில் மரணம்

உலகமுழுவதும், வேலை செய்யுமிடத்தில் ஏற்படும் விபத்தின் காரணமாக ஒவ்வொரு நாளும் 3,000 பேர் இறப்பதாக பிரெஞ்சு செய்தித்தாளான ல மாண்ட் அறிக்கை செய்கிறது. சர்வதேச தொழில் செயலகத்தின்படி, வருடத்திற்கு சுமார் 25 கோடி பணியாளர்கள் காயமடைகின்றனர்; அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்துவிடுகின்றனர். “வேலை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை, சாலை விபத்துகளாலும் (9,90,000), ஆயுதத்தைக் கையில் எடுத்துச் சண்டைபோடுவதாலும் (5,02,000), வன்முறை சம்பவங்களாலும் (5,63,000), எய்ட்ஸ் நோயாலும் (3,12,000) ஆண்டுதோறும் இறப்பவர்களைவிட அதிகம்” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

வாய் புற்றுநோய்

இந்தியாவிலுள்ள டெல்லியில், வாய் புற்றுநோய் வரும் சாத்தியம் கலிபோர்னியாவைச் சேர்ந்த லாஸ் ஏஞ்சலிஸை விட நான்கு மடங்கு அதிகம் என தி இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. தற்போது, டெல்லியில் வசிக்கும் ஆண்களுக்கு புதிதாக வந்துள்ள புற்றுநோய்கள் அனைத்திலும் 18.1 சதவீதம் வாய் புற்றுநோய்தான். இது 1995-⁠ல் பத்து சதவீதமாக மட்டுமே இருந்தது. வாய் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணங்கள், புகையிலை, பீடா (புகையிலை, பாக்குத்தூள், இன்னும் பிறபொருட்கள் சேர்த்து வெற்றிலையில் சுற்றியிருப்பது) சவைத்தல், பீடி (இந்திய சிகரெட்டுகள்) புகைத்தல் ஆகியவையே. விவரம் தெரியாத பள்ளிப்பிள்ளைகள் பீடாவை அதிகமதிகமாய் சவைப்பதை ஆபத்தானதாக அந்தச் செய்தித்தாள் கருதுகிறது. “வாய் புற்றுநோய்” இந்தியா முழுவதையும் வாரிக்கொண்டு போகப்போகிறது என ஒரு நிபுணர் எச்சரித்துள்ளார்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்