இளைஞர் கேட்கின்றனர் . . .
என்னால் ஏன் சகஜமாக பழக முடியவில்லை?
“கூச்ச சுபாவம் ஒருத்தர கோழையா ஆக்கிடும். அதில இருந்து வெளியே வர்றதுங்கிறது சாதாரண விஷயமில்லை, நெஜமாவே ரொம்ப ரொம்ப கஷ்டம்.”—ரிச்சர்ட். a
“என்னோட வளரும் பருவத்தில கூச்ச சுபாவத்தினால நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏதோ வேற ஒரு உலகத்துல நாமட்டும் தனியா வாழ்ந்தா மாதிரி இருந்துச்சு.”—18 வயது எலிசபெத்.
‘என் கிட்ட என்ன குறை? மத்தவங்க மாதிரி என்னால ஏன் எல்லார்கிட்டயும் சகஜமா பழக முடியல?’ இப்படிப்பட்ட கேள்விப் பொறிகள் உங்கள் மனதிலும் எப்போதாவது பறந்திருக்கலாம். முன்பு ரிச்சர்ட் சொன்னதுபோல, அறிமுகமில்லாத புதிய நபரை நீங்கள் சந்திக்கும்போது சிறிது கூச்சம், நடுக்கம் அல்லது ஆர்வமில்லாமை இருக்கலாம். அதிகாரத்திலுள்ளவர்கள் மத்தியில் இருக்கும்போது ஐயோ! ஏதாவது கேட்டுவிடுவார்களோ என்று பயந்து சாகலாம். உங்களுடைய அபிப்பிராயங்களை கேட்கும்போது அல்லது விருப்புவெறுப்புகளை கேட்கும்போதும்கூட தப்பாக ஏதும்சொல்லிவிடுவோமோ என்ற கவலை உங்களை வாட்டி வதைக்கலாம். அதனால், எதுக்கு வம்பை விலைக்கு வாங்குவானேன் என்று மௌனமாக ஒதுங்கி நிற்பதையே விரும்புகிறீர்கள். “எனக்கு முன்னபின்ன சரியா பழக்கமில்லாத ஆளுங்ககிட்ட போய் பேசவே முடியல, ரொம்ப சங்கடமா இருக்கு” என்று புலம்புகிறாள் ட்ரேஸி.
இப்படிப்பட்ட உணர்வுகளுக்கான காரணம்தான் என்ன? இந்த பிரச்சினையை மேற்கொள்வதற்கான முதல்படி, அதைப் பற்றி புரிந்துகொள்ளவது. (நீதிமொழிகள் 1:5) “ஜனங்கள் மத்தியில் இருந்தபோது நான் ஏன் சங்கோஜமாக உணர்ந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. ஆனால் இப்போது என்னுடைய பிரச்சினை என்ன என்பதையும் தெரிந்துகொண்டேன், அதோடு அந்த பிரச்சினையை முற்றிலுமாக நீக்கிவிடவும் கற்றுக்கொண்டேன்” என்கிறார் ஒரு வீரப் பெண்மணி. சுதந்திரமாய் பறக்க வேண்டிய இந்த இளம் சிட்டுக்கள் ஏன் சில சமயம் கூனிக் குறுகி ஒதுங்கிவிடுகின்றன அல்லது ஏன் எல்லாரோடும் சகஜமாக பழகுவதில்லை? இதற்கான சில காரணங்களை கவனிப்போம்.
கூச்ச உணர்வின் பிரச்சினை
பெரும்பாலும் அநேகர் சகஜமாக பழகாததற்கு காரணம் கூச்ச உணர்வே. எல்லாரோடும் சகஜமாக பழகும் ஒரு இளைஞர் வித்தியாசமான நண்பர்களுடன் தன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணுகிறார், ஆனால் கூச்ச சுபாவமுள்ள ஓர் இளைஞர் தனிமையாக அல்லது ஒதுக்கப்பட்டவராகவே உணர்கிறார். “என்னோட வளரும் பருவத்தில கூச்ச சுபாவத்தினால நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஏதோ வேற ஒரு உலகத்துல நாமட்டும் தனியா வாழ்ந்தா மாதிரி இருந்துச்சு” என்கிறார் 18 வயது இளங்குமரி எலிசபெத். மேல்நிலைப் பள்ளியின் முதல் ஆண்டின்போது தான் எதிர்ப்பட்ட அழுத்தத்தையும் உணர்வுகளையும் தன் மூளையின் ஒரு மூலையில் இருந்த பழைய நினைவுகளை நினைவுகூருகிறார் டையேன். “மற்றவர்கள் என்னை கவனிப்பதை நான் விரும்பவில்லை. என் பள்ளி ஆசிரியை ஒருவர், பாப்புலராய் இருப்பது எந்தளவு முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம் என்பதை, எங்களுக்கு நாங்களே மதிப்பிட்டுக்கொள்ளும்படியாக சொன்னார். ஜீரோ முதல் ஐந்திற்குள் எங்களுக்கு மார்க் போடச் சொன்னார்; ஜீரோ என்பது முக்கியமற்றவள் அல்லது கவனிக்கப்படாதவள் என்றும் ஐந்து என்பது முக்கியமானவள் அல்லது கவனிக்கப்படுபவள் என்றும் அர்த்தம். பாப்புலராக கருதிய பெண்கள் எல்லோரும் ஐந்து மார்க் போட்டுக்கொண்டார்கள். நான் எனக்கு போட்டுக்கொண்டதோ ஒரு பெரிய முட்டை. எனக்கோ பாப்புலராய் இருப்பதைப் பற்றிய பயமே, கூச்ச உணர்விற்கான காரணமாக இருந்தது. மற்றவர்கள் உங்களை விரும்பமாட்டார்கள் என்று நினைத்துக்கொள்வதால், மற்றவர்கள் உங்களை கவனிக்க அல்லது அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பவராக இருக்க நீங்கள் விரும்புகிறதில்லை.”
நிச்சயமாகவே, இந்த கூச்ச உணர்வு அல்லது நாணம் ஒட்டுமொத்தமாக மோசமானது, தவறானது என்று சொல்லிவிட முடியாது. இப்படிப்பட்ட கூச்ச உணர்வும், நம்முடைய வரம்புகளை அறிந்திருப்பதற்கு அடையாளமான அடக்கமும் நெருங்கிய தொடர்புடையது. இன்னும் சொல்லப்போனால் ‘நம் தேவனோடு அடக்கமாய் நடக்க’ நாம் பைபிளில் கட்டளையிடப்பட்டிருக்கிறோம். (மீகா 6:8, NW) அடக்கமற்ற, ரவுடித்தனமான, மற்றவர்களை மிரட்டும் அல்லது வற்புறுத்தும் ஒருவரோடு இருப்பதைவிட, அடக்கமுள்ள அல்லது ஒருவகையில் கூச்ச சுபாவமுள்ளவருடன் இருப்பது மிக எளிது. “பேச ஒரு காலமுண்டு” அதேபோல் “மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு” என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. (பிரசங்கி 3:7) இவ்வாறு கூச்ச உணர்வுடையவர்கள் எப்போதும் மௌனமாய் இருப்பதால் அவர்கள் பிரச்சினைகளை விலைகொடுத்து வாங்குவதில்லை. இப்படிப்பட்டவர்கள் “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருப்பதால் இவர்கள் நன்கு செவிகொடுப்பவர்கள் என்று மற்றவர்களால் பெரும்பாலும் போற்றப்படுகின்றனர்.—யாக்கோபு 1:19.
இருப்பினும், இப்படிப்பட்ட கூச்ச சுபாவமுள்ளவர் அல்லது வெட்க உணர்வுள்ளவரால் பெரும்பாலும் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ள முடிவதில்லை. ஆனால் மிக அதிகமான கூச்ச உணர்வுகள் இருந்தால் ஒரு எழுத்தாளர் சொல்வதுபோல “ஒருவகையில் மனநல விஷயத்தில் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும்” நிலைக்கு அவர் தள்ளப்படுகிறார்—அதுவே சமூகத் தொடர்பின்மை.—நீதிமொழிகள் 18:1.
கூச்ச உணர்வு—பொதுவான பிரச்சினையே
நீங்கள் கூச்ச உணர்வு எனும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், தைரியமாக இருங்கள்; இந்தப் பிரச்சினையால் நீங்கள் மட்டும் அவதிப்படுவதில்லை; உங்களைப் போன்றே அநேகர் அவதிப்படுகின்றனர். இது ஒரு பொதுவான பிரச்சினையே. மேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, “82 சதவீத மாணவர்களின் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்திலாவது கூச்ச உணர்வு அவர்களை தழுவியிருக்கிறது.” (ஈஸ்ட்வுட் அட்வாட்டர் என்பவரின் வளரிளமைப் பருவம் [ஆங்கிலம்]) இந்த கூச்ச சுபாவம் பைபிள் காலங்களில் வாழ்ந்த சிலருக்குக்கூட ஒரு பெரிய பிரச்சினையாக இருந்திருக்கிறது. உயர்ந்த நிலையிலிருந்த மனிதர்களாகிய மோசே, தீமோத்தேயு போன்றவர்களும்கூட இதற்கு எதிராக போராடியிருக்கின்றனர்.—யாத்திராகமம் 3:11, 13; 4:1, 10, 13; 1 தீமோத்தேயு 4:12; 2 தீமோத்தேயு 1:6-8.
பண்டைய இஸ்ரவேல் தேசத்தின் முதல் அரசனாகிய சவுலைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். சாதாரணமாக சவுல் ஒரு தைரியசாலியே. அவருடைய தந்தையின் மிருக ஜீவன்களின் மந்தை காணாமல் போனபோது, சவுல் தைரியமாக ஒரு மீட்புப்பணியில் குதித்தார். (1 சாமுவேல் 9:3, 4) ஆனால் அவர் அந்த தேசத்தின் ராஜாவாக நியமிக்கப்பட்டபோதோ, இந்த கூச்ச உணர்வு அவரை பிடித்துக்கொண்டது. மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அந்த ஜனக்கூட்டத்தாரை சந்திப்பதற்கு பதிலாக, சவுல் மூட்டை முடிச்சுகளுக்கிடையில் வெட்கப்பட்டு ஒளிந்துகொண்டார்!—1 சாமுவேல் 10:20-24.
சவுலின் இந்த உணர்வு அல்லது தன்னம்பிக்கையின்மை ஒருவேளை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். பைபிள் அவரைப் பற்றி சொல்லும்போது அவர் வீரமான, அழகான இளம் மனிதர் என்றும் வர்ணிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், “எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழேயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான்”! (1 சாமுவேல் 9:2) கூடுதலாக, சவுலின் ஆட்சியை யெகோவா அசீர்வதிப்பார் என்று கடவுளுடைய தீர்க்கதரிசி அவரிடம் உறுதியளித்தார். (1 சாமுவேல் 9:17, 20) அப்படியிருந்தும், சவுல் நம்பிக்கையாக இல்லை, தன்னை பற்றியே உறுதியற்றவராக உணர்ந்தார். அவர் ராஜாவாக ஆட்சிசெய்வார் என்று சொன்னபோது, அடக்கமாக இவ்வாறு மறுமொழி அளித்தார்: “நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன்.”—1 சாமுவேல் 9:21.
சவுலைப் போன்ற ஒரு தைரியசாலியே தன்னம்பிக்கையை இழக்கும்போது, சில சமயங்களில் நீங்களும் உங்கள் தன்னம்பிக்கையை இழப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஒரு இளைஞராக, உங்கள் உடலில் வேகமாக அநேக மாற்றங்கள் ஏற்படும் கட்டத்தில் இப்போது இருக்கிறீர்கள். பெரியவர்கள் மத்தியில் எவ்வாறு நடந்துகொள்வது என்பதை கற்றுக்கொள்ளும் பள்ளியில் இப்போதுதானே காலடி எடுத்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் சில சமயம் கூச்சமாயும் பாதுகாப்பில்லாமலும் உணருவது இயல்பே. பேரன்ட்ஸ் என்ற பத்திரிகையில் டாக்டர் டேவிட் எல்கின்ட் இவ்வாறு எழுதினார்: “வளரிளமைப் பருவத்தின் துவக்கத்தில், இளைஞர்கள் தாங்களாகவே கற்பனை பார்வையாளர்களை உருவாக்கிக்கொள்ளும்போது—அதாவது மற்றவர்கள் தன்னை கவனிப்பதாக நினைத்துக்கொள்ளும்போது, பெரும்பாலானவர்கள் கூச்ச உணர்வு எனும் அத்தியாயத்தை சந்திக்கின்றனர், அதனால் தங்களுடைய தோற்றத்திலும் செயலிலும் அதிக கவனம் செலுத்துகின்றனர்.”
சாதாரணமாக, இளவட்டங்களை அவர்களுடைய சகாக்கள் தோற்றத்தை வைத்தே எடைபோடுவதால், அநேகர் தங்களுடைய தோற்றத்தை குறித்து அதிக கவலைப்படுகின்றனர். (ஒப்பிடுக: 2 கொரிந்தியர் 10:7.) ஒருவருடைய தோற்றத்தை பற்றி அதிகமாக கவலைப்படுவதும் நல்லதல்ல, அது ஆபத்திலேயே முடியும். பிரான்ஸிலிருக்கும் இளம் பெண் லிலேயா இதைக்குறித்த தன்னுடைய மலரும் நினைவுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்: “நிறைய இளைஞர்களுக்கு இருக்கிற பிரச்சினைதான் எனக்கும் இருந்தது. அதுதான் முகப்பருக்கள், என் முகத்துல பருக்கள் ரொம்ப அசிங்கமா இருந்தது! உங்களுடைய அழகைப் பற்றி நீங்க ரொம்ப கவலைப்படறதால, மத்தவங்ககிட்ட போறதுக்கு உங்களுக்கு தைரியமே இருக்காது.”
குட்டிபோடும் பிரச்சினை
இவ்வாறு கூச்ச சுபாவமுள்ளவர்கள் பெரும்பாலும் தவறாக புரிந்துகொள்ளப்படுகையில், அவர்கள் தனிமை எனும் திக்குத்தெரியா காட்டுக்குள் அடிக்கடி கண்ணை கட்டி விடப்படுகின்றனர். வளரிளமைப் பருவம் என்ற புத்தகம் சொல்கிறது: “கூச்ச சுபாவமுள்ள வளரிளமை பருவத்தினருக்கு நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது ஒரு சவாலாகவே இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலும் மற்றவர்கள் இவர்களை சாதகமற்ற வழியில் தவறாக புரிந்துகொள்வதே இதற்கு காரணம். கூச்ச சுபாவமுள்ளவர்கள் தனியான, சலிப்பான, அக்கறையற்ற, தாழ்வான, யாருடனும் ஒட்டாத ஒருவராக, விரோதியைப் போன்று கருதப்படுவதாக நினைக்கின்றனர். அவ்வாறே நடத்தப்படுகையில், மேலுமதிகமாக ஒதுக்கப்பட்டதாகவும், தனியாகவும், சோர்வாகவும்தான் உணரக்கூடும்.” இது சந்தேகத்திற்கிடமின்றி, அவர்கள் இன்னும் அதிக கூச்சமாக நடந்துகொள்ள வழிநடத்துகிறது. இது கடைசியில் அந்த நபர் தலைகனம் பிடித்தவர் அல்லது இறுமாப்புள்ளவர் என்ற தவறான அபிப்பிராயத்தை இன்னும் ஊர்ஜிதப்படுத்துவதாக இருக்கிறது.
கிறிஸ்தவராக நீங்கள் இந்த ‘உலகத்திற்கு வேடிக்கை பொருளாக’ இருப்பதால், உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு என்ன அபிப்பிராயத்தை கொடுக்கிறீர்கள் என்பதைப் பற்றி கவனமாக இருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 4:9, NW) நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது அவர்களுடைய கண்களை பார்த்து பேசுவதை தவிர்க்கிறீர்களா? உங்கள் தோரணையும் சரீர மொழியும் ‘என்னை தனியே விட்டுவிடுங்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறதா? அப்படியானால் மற்றவர்கள் உங்களை தவறாக புரிந்துகொண்டு உங்களை தவிர்க்க நினைக்கலாம் என்பதை நினைவில் வையுங்கள். ஒருவேளை அப்படி செய்தால் நண்பர்கள் உங்களை தேடி வரும் வழியை நீங்களே அடைத்து விடுகிறீர்கள் என்று அர்த்தம்.
மற்ற காரணிகள்
பொதுவாக காணப்படும் மற்றொரு காரணம் ‘எங்கே நான் தோற்றுவிடுவேனோ அல்லது தவறாக செய்துவிடுவேனோ’ என்ற பயம். உண்மைதான், உங்களுக்கு பழக்கமில்லாத ஏதாவது ஒன்றை முதல் தடவையாக செய்யும்போது கொஞ்சம் பயமாயும் தயக்கமாயும் உணர்வது இயல்பே; இது எல்லாருக்கும் வரும் இயற்கையான உணர்வே. ஆனால் சில இளைஞர்கள் இந்த விஷயத்தில் அளவில்லாமல் மிதமிஞ்சி செயல்படுகின்றனர். இளம் கெய்ல் அழைப்பதுபோல அவள் சமூக பயத்தை (social phobic) கொண்டிருந்தாள். அவள் சொல்கிறாள்: “நான் பள்ளியில் பதிலே சொல்லமாட்டேன். ‘அவள் கையை உயர்த்தி பதில் சொல்வதில்லை. அவள் எதையுமே பேசுவதில்லை’ போன்ற வார்த்தைக் கணைகளால் என் பெற்றோர் அடிக்கடி தாக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டுக்கேட்டு அவர்களுக்கு காதே புளித்துவிட்டது. ஆனால் அவர்கள் சொல்வதுபோல இருப்பது எனக்கு அதிக சங்கடமாயும் கவலையாயும் இருந்தது. இப்போதும்கூட அவ்வாறு இருப்பது எனக்கு கடினமாக இருக்கிறது.” தோல்வியைப் பற்றிய பயம் ஒருவரை செயலிழக்கச் செய்யக்கூடும். “எதையாவது தப்பா செஞ்சிடுவேனோன்னு ரொம்ப கவலைப்படறேன், நான் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியவில்லை” என்கிறார் பீட்டர் என்ற வாலிபர். மனசாட்சி இல்லாமல் ஒருவரை கிண்டல் செய்வது, குத்தலாக பேசுவது அல்லது தொடர்ந்து குறைகூறுவது அந்த கூச்ச சுபாவமுள்ள நபரில் பயத்தை கொளுந்துவிட்டு எரியச்செய்யும், இது இளைஞர்களின் தன்னம்பிக்கையை குழிதோண்டி புதைத்துவிடும்.
இதற்கு பொதுவாக காணப்படும் மற்றொரு காரணம், சமுதாயத்தில் வாழ்வதற்கு தேவைப்படும் திறமைகள் இல்லாமையே. சிலசமயம் ஒரு புதியவரிடம் உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளக்கூட நீங்கள் தயங்கலாம்; அதற்கு காரணம் ஒருவேளை உங்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாததால் இருக்கலாம். சிலசமயம் வயதானவர்கள்கூட இவ்வாறு சகஜமாக பழக சங்கடப்படுகின்றனர் என்பதை கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம். தொழிலதிபரான ஃப்ரெட் சொல்கிறார்: “தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில், இப்போது நான் செய்துவருவது போலவே என்ன செய்ய வேண்டும் என்று நன்கு தெரிந்திருக்கிறேன். நான் தொழிலைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும், நல்ல அபிப்பிராயத்தை அளிக்க அல்லது நன்றாக பேசுவதிலிருந்து, எதுவுமே என்னை தடுக்க முடியாது. ஆனால் அதே ஆட்களுடன் சமூக விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தால் எனக்கு வாயே வராது, தடுமாற ஆரம்பித்துவிடுவேன். அப்போது நான் ஒரு அறுவை, புத்தகப் புழு, தொழில் மட்டுமே தெரிந்தவன் அல்லது ஒரு சரியான ரம்பம் என்றெல்லாம் முத்திரை குத்திவிடுகின்றனர்.”
நீங்கள் கூச்ச சுபாவமுள்ளவராகவோ, ஒதுங்கியே இருப்பவராகவோ அல்லது மற்றவர் முன்னிலையில் சங்கடப்படுபவராகவோ இருந்தால், அதை மேற்கொண்டு எல்லாரோடும் எப்படி சகஜமாய் இருப்பது என்பதை கற்றுக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது உங்களுக்கு நன்மை அளிக்கும். மற்றவர்களை நன்கு தெரிந்துகொள்ள ‘உங்கள் இதயக்கதவுகளை திறந்து வையுங்கள்’ என்று பைபிள் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:13, பொது மொழிபெயர்ப்பு) ஆனால் நீங்கள் அதை எவ்வாறு செய்யலாம்? இதைப் பற்றி இனிவரும் எமது இதழில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 26-ன் படம்]
கூச்ச சுபாவமுள்ளவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுகின்றனர்
[பக்கம் 26-ன் படம்]
தோல்வி என்ற பயமே சகஜமாக பழகுவதற்கு முட்டுக்கட்டை