ஆப்பிரிக்காவில் கஷ்ட காலத்தில் கண்மணிகளை வளர்த்தேன்
கார்மென் மக்லக்கி சொன்னது
ஆண்டு 1941. இரண்டாவது உலக யுத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த எனக்கு அப்போது வயது 23. கையிலே பச்சிளம் குழந்தை. இருந்தபோதிலும் எனது ஐந்துமாச குழந்தையுடன் தெற்கு ரொடீஷியாவிலுள்ள க்வாலோ (இப்போது க்வேரு, ஜிம்பாப்வி) சிறையில் அடைக்கப்பட்டேன். எனது கணவரோ சாலிஸ்பரி (இப்போது, ஹராரே) சிறையில் வாடிக்கொண்டிருந்தார். இரண்டு வயதும் மூன்று வயதும் நிரம்பிய இரண்டு பிள்ளைகளும் எங்களுக்கு இருந்தார்கள். இந்த இரண்டு மழலைகளையும் இளவயதிலிருந்த எனது மாற்றாங் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் கவனித்துக் கொண்டார்கள். இந்த சோகமான நிலைமைக்குள் நான் எப்படி வந்தேன் என்பதை இப்பொழுது சொல்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு ஏறக்குறைய 50 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் போர்ட் கெம்ப்லாவில் எனது அம்மா அப்பாவோடு நான் இருந்தேன். 1924-ல் க்ளேர் ஹனிசெட் என்ற பெண்மணி என்னுடைய அம்மாவை சந்தித்து, ‘கர்த்தருடைய ஜெபத்தின் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா’ என்ற கேள்வியை கேட்டார்கள். அவ்வளவுதான், பைபிள் போதகங்கள்மீது அம்மாவின் ஆவல் பற்றியெரிந்தது. கடவுளுடைய பெயரை பரிசுத்தப்படுத்துவதன் அர்த்தத்தை க்ளேர் விளக்கினார்கள். பின்பு, கடவுளுடைய ராஜ்யம் எவ்வாறு பூமியில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றும் என்பதைப் பற்றியும் சொன்னார்கள். (மத்தேயு 6:9, 10) அம்மாவுக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. ஆனால் அப்பாவுக்கோ இந்த விஷயங்கள் பிடிக்காததால் கடுமையாக எதிர்த்தார். இருந்தபோதிலும், பைபிள் சத்தியம் எனும் கடலில் முத்துக்களை எடுப்பதற்கான ஆராய்ச்சியில் முழுமையாக அம்மா மூழ்கிவிட்டார்கள்.
அதன்பின் சீக்கிரத்திலேயே, சிட்னியின் புறநகர் பகுதிக்கு நாங்கள் குடிபெயர்ந்தோம். பைபிள் மாணாக்கரின் கூட்டங்களுக்கு அம்மாவும் நானும் ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் நடந்து செல்வோம். யெகோவாவின் சாட்சிகள் அப்போது பைபிள் மாணாக்கர்கள் என்பதாக அழைக்கப்பட்டார்கள். அப்பா, கடைசிவரை ஒரு சாட்சியாகவில்லை. என்றபோதிலும் எங்கள் வீட்டில் பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு அனுமதித்தார். அப்பாவின் சகோதரரில் இருவரான மாக்ஸும் ஆஸ்கார் ஸீடலும் சாட்சிகளானார்கள். மாக்ஸின் குடும்பத்தாரில் சிலரும் என் இளைய சகோதரன் டெரியும் என் இளைய சகோதரி மில்டாவும்கூட சாட்சிகளானார்கள்.
1930-ல் 16 மீட்டர் நீளமுள்ள பாய்மரக் கப்பலை உவாட்ச் டவர் சொஸையிட்டி, விலைக்கு வாங்கியது. பின்னால் இதற்கு லைட்பியரர் என்ற மறுபெயர் சூட்டப்பட்டது. இந்தக் கப்பல் எங்களுக்குச் சொந்தமான இடத்திற்கு அருகிலிருந்த ஜியார்ஜஸ் நதியில் இரண்டு ஆண்டுகள் நங்கூரமிடப்பட்டிருந்தது. இந்தோனீஷிய தீவுகளில் பிரசங்க ஊழியம் செய்வதற்கு யெகோவாவின் சாட்சிகளால் பயன்படுத்தப்படுவதற்காக அது பழுதுபார்க்கப்பட்டது. என் சகோதரி காரலும் நானும் கப்பலின் கேபினையும் டெக்கையும் சில சமயங்களில் சுத்தம் செய்வோம். இறால் பிடிப்பதற்காக பாய்மர உச்சி விளக்கை இரவல் வாங்குவோம்.
ஆப்பிரிக்காவுக்குச் செல்வதும் திருமணமும்
1930-களின் பத்தாண்டுகளின் இடையில், பொருளாதார வீழ்ச்சியால் ஆஸ்திரேலியா பாதிக்கப்பட்டது. நாங்கள் குடியேறுவதற்கு தென் ஆப்பிரிக்கா பொருத்தமானதாக இருக்குமா என்பதை அறிந்துகொள்வதற்கு அம்மாவும் நானும் அந்த நாட்டிற்கு பயணப்பட்டோம். யெகோவாவின் சாட்சிகளின் ஆஸ்திரேலியா கிளை அலுவலகத்திலிருந்து ஜியார்ஜ் ஃபிலிப்ஸுக்கு எழுதப்பட்ட அறிமுகக் கடிதம் எங்களிடமிருந்தது. அப்போது ஜியார்ஜ் ஃபிலிப்ஸ் தென் ஆப்பிரிக்காவில் பிரசங்க ஊழிய வேலையை மேற்பார்வை செய்து வந்தார். எங்களை வரவேற்பதற்காக கேப் டௌன் துறைமுகத்திற்கு ஜியார்ஜ் வந்திருந்தார். நாங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளுவதற்கு வசதியாக ரிச்சஸ் (ஆங்கிலம்) என்ற உவாட்ச் டவர் சொஸையிட்டியின் புத்தகத்தை தன்னுடைய கையில் வைத்திருந்தார். அதே நாளில், அதாவது ஜூன் 6, 1936-ல், ராபர்ட் எ. யங் மக்லக்கி a என்பவர் உட்பட, கிளை அலுவலகத்தில் வேலை செய்த ஐந்து உறுப்பினர்களுக்கும் அவர் எங்களை அறிமுகப்படுத்தினார். ராபர்ட் எ. யங் மக்லக்கியை நாங்கள் பேர்ட்டி என்பதாக அழைத்தோம். நானும், பேர்ட்டியும் ஓர் ஆண்டுக்குள் மணம் செய்துகொண்டோம்.
பேர்ட்டியின் கொள்ளுப் பாட்டனார் உவில்லியம் மக்லக்கி. இவர் 1817-ல், ஸ்காட்லாந்திலுள்ள பெயர்ஸ்லேவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு வந்துசேர்ந்தார். உவில்லியம் தனது தொடக்க கால பயணங்களில், ராபர்ட் மாஃபெட்டுடன் அறிமுகமானார். b இவர் ட்ஸ்வானா மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கி, பைபிளை அந்த மொழியில் மொழிபெயர்த்தார். அந்தத் தொடக்க நாட்களில், உவில்லியமும் அவருடைய தோழர் ராபர்ட் ஸ்கூனும் மாத்திரமே பிரசித்திப்பெற்ற ஜூலு தலைவர் ஷக்காவின் சேனையில் முதன்மை போர்வீரரான மிஸிலெக்கேஸியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வெள்ளையராக இருந்தார்கள். இதன் பலனாக, உவில்லியமும் ராபர்ட்டும் மாத்திரமே, மிஸிலெக்கேஸியின் க்ராலுக்குள் அனுமதிக்கப்பட்ட வெள்ளையராக இருந்தார்கள். தென் ஆப்பிரிக்காவிலுள்ள பிரிடோரியா பட்டணம் அந்த இடத்தில்தான் தற்போது கம்பீரமாக நிற்கிறது. பின்னால், மிஸிலெக்கேஸி அரசியல் நிர்வாகியானார். இவரே 19-ம் நூற்றாண்டின் மத்திபத்தில், பல மரபினரை ஆப்பிரிக்க ராஜ்யமாக ஒரு மைய ஆட்சிக்கு ஒருமுகப்படுத்தினார்.
நான் பேர்ட்டியைச் சந்தித்தபோது, அவர் தனது மனைவியை இழந்திருந்தார். அவருக்கு 12 வயதில் லீயல் என்ற பெயருடைய மகளும், டொனோவன் என்ற 11 வயது மகனும் இருந்தனர். பேர்ட்டி, தன் மனைவி எட்னாவை இழந்து சில மாதங்களுக்குப் பின்பு, 1927-ல் பைபிள் சத்தியங்களை முதன் முதலாக கற்றிருந்தார். அடுத்த ஒன்பது ஆண்டுகளின்போது அவர், கடற்தீவுகளாகிய மாரிஷியஸிலும் மடகாஸ்கரிலும், மேலும் அவற்றோடுகூட (இப்போது மலாவியாக இருக்கும்) நயாஸாலாந்து முழுவதிலும், (இப்போது மொஸாம்பிக்காக இருக்கும்) போர்த்துகீஸ் கிழக்கு ஆப்பிரிக்காவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்.
நானும் பேர்ட்டியும் திருமணம் செய்து சில மாதங்களுக்குப் பின்பு, லீயலோடும் டொனோவனோடும் ஜோஹன்ஸ்பர்க்குக்கு இடம் மாறிச் சென்றோம். அங்கு ஒரு வேலையைக் கண்டுபிடிப்பது பேர்ட்டிக்கு எளிதாக இருந்தது. ஒரு பயனியராக நான் சிறிது காலம் சேவை செய்தேன். யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர ஊழியர்கள் இப்படித்தான் அழைக்கப்படுகின்றனர். பின்பு எனது மகனாகிய பீட்டரை கர்ப்பந்தரித்தேன்.
தெற்கு ரொடீஷியாவுக்கு இடம் மாறிச் செல்லுதல்
முடிவில் பேர்ட்டியின் சகோதரர் ஜாக், தெற்கு ரொடீஷியாவில், ஃபிலபூஸிக்கு அருகிலுள்ள தங்க சுரங்கத்தில் தன்னுடன் வேலை செய்ய வருமாறு எங்களை அழைத்தார். அப்போது பீட்டருக்கு ஒரு வயதுதான் ஆகியிருந்தது. பேர்ட்டியும் நானும் குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கு பயணப்பட்டோம். லீயலையும் டொனோவனையும் என் அம்மா தற்காலிகமாக கவனித்துக்கொண்டார்கள். மிஸிங்வானி நதிக்கருகில் நாங்கள் வந்தபோது, அந்நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஒரு கரையிலிருந்து மறுகரை வரைக்கும் கட்டப்பட்டிருந்த கம்பியில் தொங்கிய ஒரு பெட்டியில் அந்த ஆற்றை நாங்கள் கடந்து சென்றோம். அப்போது, எனது மகளாகிய பாலினை என் வயிற்றில் சுமக்க ஆரம்பித்து ஆறுமாதம்தான் ஆகியிருந்தது. பீட்டரை என் மார்போடு இறுக அணைத்துக் கொண்டேன்! படபடவென்று நெஞ்சு அடித்துக்கொண்டது. நாங்கள் பயணம் செய்த பெட்டி தொங்கிய கம்பி, நட்டாற்றில் தண்ணீரைத் தொட்டபோது எங்களுடைய இருதயமே ஒரு கணம் நின்று விட்டது. அதுமட்டுமல்லாமல், அது நடுராத்திரியாக இருந்ததால் கும்மிருட்டாக இருந்தது. மழை வேறு சோவென்று பெய்துகொண்டிருந்தது! ஒரு வழியாக நதியைக் கடந்து விட்டோம். ஆனால் எங்கள் உறவினருடைய வீட்டிற்குச் செல்வதற்கு ஏறக்குறைய இரண்டு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டியதாக இருந்தது.
பின்பு, கரையான்கள் குடியிருந்து காலிசெய்த பழைய பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்தோம். எங்கள் வீட்டிற்குத் தேவையான தட்டுமுட்டு பொருட்கள் வெகு சொற்பமாகவே இருந்தன. அவற்றில் சில, சுரங்க வெடிகள், கம்பிகள் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்ட பெட்டிகளைக் கொண்டு நாங்களாகவே செய்தவை. இருமல், மூச்சுத் திணறலால் எங்கள் மகள் பாலின் சதா அவதிப்பட்டாள். மருந்து வாங்க எங்களிடம் பணமே இல்லை. என் இதயமே வெடித்து விடும்போல இருந்தது. ஆனால் ஒவ்வொரு சமயத்திலும் பாலின் எப்படியோ தப்பித்துக்கொண்டே வந்தது மனதிற்கு சற்று நிம்மதியளித்தது.
பேர்ட்டியும் நானும் சிறையில்
எங்களுடைய தங்கத்தை பேங்க்கில் விற்பதற்காக, ஏறக்குறைய 80 கிலோமீட்டர் தொலைவிலிருந்த புலவாயோ பட்டணத்திற்கு மாதத்தில் ஒருமுறை நாங்கள் செல்வோம். மேலும், உணவு பொருட்களை வாங்குவதற்கும், ஊழியத்தில் பங்குகொள்வதற்கும், ஃபிலபோஸிக்கு அருகிலிருக்கும் சிறிய பட்டணமாகிய குவாண்டாக்கும் சென்றோம். முதல் உலக யுத்தம் தொடங்கிய பிறகு, அடுத்த ஆண்டிலேயே, அதாவது 1940-ல், எங்கள் பிரசங்க ஊழியத்திற்கு தென் ரொடீஷியாவில் தடையுத்தரவு போடப்பட்டது.
கொஞ்ச காலம்தான் கடந்திருந்தது. நான் குவாண்டாவில் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டேன். அந்தச் சமயத்தில் என் மூன்றாவது குழந்தையாகிய எஸ்ட்ரெல்லாவைக் கர்ப்பந்தரித்திருந்தேன். என்னுடைய அப்பீல் விசாரிக்கப்பட்டு வரும்போதே பேர்ட்டி, பிரசங்க ஊழியம் செய்ததற்காக கைதுசெய்யப்பட்டார். நாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து 300-க்கும் அதிக கிலோமீட்டர் தூரத்தில் இருந்த சாலிஸ்பரி சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்தச் சமயத்தில், பீட்டர் தொண்டை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு புலவாயோவிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தான்—இப்படித்தான் எங்களுடைய நிலைமை இருந்தது. அவன் உயிர்ப் பிழைப்பதே சந்தேகமாக இருந்தது. எனக்கு அப்போதுதான் எஸ்ட்ரெல்லா பிறந்திருந்தாள். பேர்ட்டியின் புதிய மகளை அவருக்குக் காண்பிப்பதற்காக ஒரு நண்பர் என்னை மருத்துவமனையிலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றார். பிறகு எனது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் இந்தியரான பணக்கார கடைக்காரர், தயுவுபண்ணி என்னை விடுவிப்பதற்கு ஜாமீன் பணத்தைக் கட்டினார். அது முடிந்தபின்பு, என்னை சிறைப்படுத்துவதற்கு மூன்று போலீஸ் அதிகாரிகள் சுரங்கத்திற்கு வந்தார்கள். எனக்கு முன்பாக இரண்டு வாய்ப்புகள் இருப்பதாகவும் அதில் ஏதாவதொன்றை தெரிந்துகொள்ளும்படி சொன்னார்கள்: என் ஐந்துமாத குழந்தையை நான் என்னுடன் சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினால் அவ்வாறு செய்யலாம் அல்லது டீனேஜர்களாக இருந்த எங்கள் பிள்ளைகளாகிய லீயலும் டொனோவனும் அந்த பிஞ்சு குழந்தையை கவனித்துக்கொள்ளும்படி விட்டுச் செல்லலாம். நானோ என் கண்மணியை எடுத்துச் செல்லும்படி தீர்மானித்தேன்.
சிறைச்சாலையில் ஆடைகளைத் தைத்துச் சீர்ப்படுத்துவதும், சுத்தப்படுத்துவதுமே என்னுடைய வேலை. மேலும், எல்ட்ரெல்லாவைக் கவனிப்பதற்கும் உதவிசெய்வதற்கும் ஒரு தாதி நியமிக்கப்பட்டாள். அவளுடைய பெயர் மட்டோஸி. தனது கணவனை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்தாள். நான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது, மட்டோஸி ஓ-வென்று கதறி அழுதுவிட்டாள். ஏனெனில் அவளால் இனிமேலும் என் குழந்தையை தாலாட்டி சீராட்ட முடியாது என்பதை நினைத்து கண்ணீர் விட்டாள். அச்சிறைச்சாலையின் வார்டனாக இருந்த பெண்மணி, என்னை சாப்பாட்டிற்காக அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்பு சாலிஸ்பரி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எனது கணவரை நான் பார்ப்பதற்காக என்னை ரயிலேற்றிவிட்டார்.
பேர்ட்டியும் நானும் சிறைச்சாலையில் இருந்தபோது, சிறுசுகளாக இருந்த பீட்டரையும் பாலினையும், லீயலும் டொனோவனும் கவனித்துக்கொண்டார்கள். அப்போது டொனோவனுக்கு 16 வயதே நிரம்பியிருந்தது. இருந்தபோதிலும், எங்களோடு சுரங்க வேலைகளை விடாப்பிடியாக தொடர்ந்து செய்துவந்தான். இறுதியில் பேர்ட்டி சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது, அந்தச் சுரங்கம் ரொம்பவும் பயனற்றுபோனதால், புலவாயோவுக்கு மாறிச் செல்ல தீர்மானித்தோம். ரயில்வேயில் பேர்ட்டிக்கு வேலை கிடைத்தது; தையல் வேலையில் எனக்கு கிடைத்த திறமையைப் பயன்படுத்தி, எங்கள் வருவாயை சற்று கூட்டினேன்.
ரயில்வேயில் ரிவெட்டராக பேர்ட்டி வேலை செய்தார். அந்த வேலை மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டதால் அவருக்கு இராணுவ சேவையிலிருந்து விலக்குரிமை அளிக்கப்பட்டது. அந்தப் போர் காலங்களில், புலவாயோவிலிருந்த வெள்ளையரான சாட்சிகள் டஜன் கணக்கில் கூடிவந்து எங்கள் வீட்டிலிருந்த படுக்கையறையில் கூட்டங்களை நடத்தினார்கள். அந்த அறை மிகவும் சிறியதாக இருந்தது. கருப்பர்களான நமது சகோதர சகோதரிகள் சிலர், அந்தப் பட்டணத்தில் வேறு எங்கேயோ கூடினார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்! கருப்பரும் வெள்ளையரும் அடங்கிய யெகோவாவின் சாட்சிகள் நூலிழைபோல பின்னிப்பிணைந்திருக்கிறார்கள். 46-க்கு மேற்பட்ட எங்களுடைய சபைகள் புலவாயோவில் முளைத்திருகின்றன!
போருக்குப் பிற்பட்ட எங்கள் ஊழியம்
போர் முடிந்த பின்பு, (இப்போது ம்யூட்டேரா) உம்டாலிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யும்படி ரயில்வே அதிகாரிகளை பேர்ட்டி கேட்டுக்கொண்டார். இது, மொஸாம்பிக் எல்லையிலுள்ள ஓர் அழகு கொஞ்சும் பட்டணம். ராஜ்ய அறிவிப்பாளர்கள் அதிகமாக தேவைப்படும் இடத்தில் சேவிக்கும்படி நாங்கள் விரும்பினோம்; உம்டாலியில் சாட்சிகள் ஒருவர்கூட இல்லை. ஆகவே அந்தப் பட்டணம் மிகவும் பொருத்தமான தெரிவாக இருந்தது. ஆனால் நாங்கள் அங்கு சொற்ப காலமே குடியிருந்தோம். அச்சமயத்தில் ஐந்து குமாரர்கள் அடங்கிய ஹோல்ட்ஸ்ஹாஸன் குடும்பத்தினர் சாட்சிகளானார்கள். இப்போது அந்தப் பட்டணத்தில் 13 சபைகள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
1947-ல், எனது கணவர் பேர்ட்டி மறுபடியும் பயனியர் ஊழியம் செய்ய முடியுமா என்பதைப் பற்றி நாங்கள் குடும்பமாகக் கலந்து பேசினோம். தென் ஆப்பிரிக்காவில் பயனியர் ஊழியத்தை ருசிபார்த்திருந்த லீயல் அந்த எண்ணத்தை ஆதரித்தாள். டொனோவன் அந்தச் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் பயனியர் ஊழியம் செய்துவந்தான். மறுபடியுமாக பயனியர் ஊழியம் செய்ய வேண்டுமென்ற பேர்ட்டியின் விருப்பத்தை கேப் டௌன் கிளை அலுவலகத்தினர் தெரிந்துகொண்டனர். பயனியர் செய்வதற்கு பதிலாக புலவாயோவில் ஒரு புத்தக டெப்போவை திறக்கும்படி அவருக்குச் சொன்னார்கள். ஆகவே, பேர்ட்டி தனது ரயில்வே வேலையை ராஜினாமா செய்துவிட்டார்; நாங்கள் மீண்டுமாக புலவாயோவுக்கு திரும்பிச் சென்றோம். அதன்பின் சீக்கிரத்திலேயே தென் ரொடீஷியாவுக்கு அனுப்பப்பட்ட முதல் மிஷனரிகளான, எரிக் கூக், ஜியாஜ் மற்றும் ரூபி ப்ராட்லி, ஃபிலிஸ் கீட், மெர்ட்டில் டேய்லர் ஆகியோர் புலவாயோவிற்கு வந்து சேர்ந்தார்கள்.
1948-ல், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் மூன்றாவது பிரெஸிடென்ட், நேதன் ஹெய்ச். நார் தனது செக்ரெட்டரி, மில்ட்டன் ஜி. ஹென்ஷலுடன் புலவாயோவுக்கு விஜயம் செய்தார். அந்தப் புத்தக டெப்போவை ஒரு கிளை அலுவலகமாக்கி, சகோதரர் கூக்கை அதற்கு மேற்பார்வையாளராக ஏற்படுத்தினார். அடுத்த ஆண்டில் எங்கள் மகள் லின்ட்செ பிறந்தாள். பின்பு, 1950-ல் கிளை அலுவலகம், தென் ரொடீஷியாவின் தலைநகராகிய சாலிஸ்பரிக்கு மாற்றப்பட்டது. நாங்களும் அங்கு இடம் மாறிச் சென்றோம். அங்கே ஒரு பெரிய வீட்டை வாங்கினோம். பல ஆண்டுகளை அந்த வீட்டில்தான் கழித்தோம். பயனியர்களும், விசிட்டர்களும் எப்போதும் எங்கள் வீட்டில்தான் தங்குவார்கள்; ஆகையால் எங்கள் வீடு மக்லக்கி ஹோட்டல் என்பதாக அழைக்கப்பட்டது!
1953-ல், நியூ யார்க் நகரத்தின் யாங்கி ஸ்டேடியத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் பேர்ட்டியும் நானும் கலந்துகொண்டோம். அந்த அனுபவம் இன்னும் எங்களது நினைவைவிட்டு மறையவில்லை! ஐந்து ஆண்டுகளுக்குப் பின்பு, 1958-ல், யாங்கி ஸ்டேடியத்திலும் அதற்கு அருகிலிருந்த போலோ கிரௌண்ட்ஸிலும் சர்வதேச மாநாடு நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற எட்டு நாட்களிலுமே லீயலும், எஸ்ட்ரெல்லாவும், லின்ட்செயும், பிறந்து 16 மாதமே கடந்திருந்த குழந்தை ஜெரேமியும் எங்களுடன் இருந்தார்கள். மாநாட்டின் கடைசி நாளில் கொடுக்கப்பட்ட பொதுப்பேச்சை கேட்பதற்கு இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குழுமியிருந்தனர். இந்த எண்ணிக்கை ஒரு ‘ரெக்கார்டு பிரேக்’ என்று சொல்லுவதில் ஆச்சரியமேதுமில்லை.
எங்கள் ஊழியத்தின் புதிய அத்தியாயம்
சாலிஸ்பரி கிளை அலுவலகத்தில் பேர்ட்டி, ஏறக்குறைய 14 ஆண்டுகள் சேவை செய்தார். அந்த வருடங்களின்போது அவர் வீட்டிலிருந்து கிளை அலுவலகத்திற்கு தினந்தோறும் வந்துபோய்க்கொண்டு இருந்தார். ஆனால் தேவை அதிகமாக இருந்த இடமாகிய ஸேசேல்ஸில் சேவை செய்வதற்கு நாங்கள் தீர்மானித்தோம். எங்கள் வீட்டையும் தட்டுமுட்டு பொருட்களையும் விற்று விட்டோம். மிச்சமீதியான எங்கள் உடைமைகளை எங்கள் ஓபல் காரில் ஏற்றினோம். எங்களுடன் 12 வயதான லின்ட்செவும் 5 வயதான ஜெரேமியும் இருந்தார்கள். மிகவும் கரடுமுரடான, தூசி நிரம்பிய பாதையில் எங்கள் பயணம் தொடர்ந்தது. வட ரொடீஷியா (இப்போது ஜாம்பியா), டாங்கனீகா (இப்போது டான்ஜானியாவின் பாகமாக இருக்கிறது), கென்யா வழியாக ஏறக்குறைய 3,000 கிலோமீட்டர் நாங்கள் பயணம் செய்தோம். கடைசியாக, துறைமுகப் பட்டணமாகிய மொம்பாஸாவுக்கு வந்து சேர்ந்தோம்.
மொம்பாஸாவில் தாங்க முடியாத அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது, ஆனால் அங்கே கண்ணைப்பறிக்கும் அழகிய கடற்கரை இருந்தது. எங்களுடைய காரை அந்த இடத்தில் இருந்த சாட்சி ஒருவரிடம் விட்டுவிட்டோம். அங்கிருந்து ஸேசேல்ஸுக்கு மூன்று நாட்கள் படகில் கப்பற்பயணம் சென்றோம். நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்தபோது, நார்மன் கார்ட்னெர் என்பவர் எங்களை வரவேற்றார். இவர், டாங்கனீகாவிலுள்ள தார் எஸ் சலாமில் வசித்துவந்த ஒரு சாட்சியிடமிருந்து பைபிள் சத்தியத்தின் அடிப்படை அறிவைப் பெற்றிருந்தார். சான்சஸ் ஸூஸி கணவாயில் இருந்த வீட்டை நாங்கள் வாடகைக்கு எடுக்கும்படி அவர் ஏற்பாடு செய்திருந்தார். அது, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆர்ச் பிஷப் மக்காரியாஸுக்கு பாதுகாப்பளித்த போலீஸாருக்காகக் கட்டப்பட்டது. அவர் 1956-ல் சைப்ரஸிலிருந்து நாடுகடத்தப்பட்டார்.
எங்களது வீடு மிகவும் ஒதுக்குப்புறத்தில் தனித்திருந்தது. ஆகவே ஒரு மாதத்திற்குப் பின்பு, போ வாலோனில் கடற்கரையோரத்தில் இருந்த வீட்டில் நாங்கள் குடியேறினோம். எங்கள் வீட்டு வராந்தாவில் பேர்ட்டி கொடுத்த பேச்சுகளைக் கேட்பதற்கு ஜனங்களை அழைத்தோம். பைன்ட்ஷீலர்களோடு பைபிள் படிப்பை தொடங்கினோம். சில மாதங்களுக்கு பிறகு அவர்களையும், அவர்கள் தத்தெடுத்து வளர்த்த மகளையும், நார்மன் கார்ட்னெரையும் அவருடைய மனைவியையும்கூட பேர்ட்டி முழுக்காட்டினார். மேலும் நார்மன் தனது படகில் எங்களை செர்ஃப் தீவுக்கு கூட்டிக்கொண்டு சென்றார். அங்கிருந்த ஒரு படகு மனையில் பேர்ட்டி, பைபிள் பேச்சுக்களை கொடுத்தார்.
ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஸேசேல்ஸில் நாங்கள் இருந்தோம். அப்போது, போலீஸ் தலைமை அதிகாரி நாங்கள் பிரசங்கிப்பதை நிறுத்திவிட வேண்டும், இல்லாவிடில் வெளியேற்றப்படுவோம் என்று எங்களுக்குச் சொன்னார். எங்களிடம் பணம் கொஞ்சமாகத்தான் இருந்தது, மேலும் நான் மறுபடியுமாக கர்ப்பமாக வேறு இருந்தேன். இருப்பினும் எங்கள் பிரசங்க ஊழியத்தைத் தொடர தீர்மானித்தோம். எப்படியிருந்தாலும் சீக்கிரத்தில் நாங்கள் இங்கிருந்து அனுப்பிவிடப்படுவோம் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். சுமார் ஒரு மாதத்திற்குப் பின், இந்தியாவிலிருந்து அடுத்த படகு வந்து சேர்ந்தபோது, நாங்கள் வெளியேற்றப்பட்டோம்.
ஆபத்தான நிலையில் திரும்பிச் செல்லுதல்
மொம்பாஸாவில் வந்து சேர்ந்தபோது, எங்கள் காரை மீண்டுமாக எடுத்துக்கொண்டு, மணற்பாங்கான கடற்கரையோர பாதையில் தெற்கு நோக்கி பயணம் செய்தோம். டாங்காவுக்கு வந்தபோது, எஞ்ஜின் மக்கர் செய்ததால் எங்கள் கார் நின்றுவிட்டது. எங்களுடைய பாக்கெட்டும் காலியாகி விட்டது. ஆனால், உறவினர் ஒருவரும் மற்றொரு சாட்சியும் எங்களுக்கு உதவிக்கரத்தை நீட்டினார்கள். நாங்கள் மொம்பாஸாவில் இருந்தபோது ஒரு சகோதரர் எங்களை சந்தித்தார். நாங்கள் ஊழியம் செய்வதற்காக வடக்கே சோமாலியாவுக்குச் சென்றால், பண உதவி செய்வதாக அவர் சொன்னார். ஆனால் நான் அப்போது சுகவீனமாக இருந்தேன். ஆகவே, தென் ரொடீஷியாவிலுள்ள வீட்டிற்கு சென்றுவிட்டால் போதுமென தீர்மானித்தோம்.
நாங்கள் டாங்கனீகாவிலிருந்து நயாஸாலாந்துக்கு சென்றோம். அங்கிருந்து நயாஸா ஏரியின் மேற்கு புறமாகக் கீழ்நோக்கிப் பயணப்பட்டோம். அந்த ஏரி இப்போது மலாவி என்று அழைக்கப்படுகிறது. நான் மிகவும் கடுமையாக நோயுற்றிருந்தேன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. ‘பேசாமல் நான் செத்துத்தொலைகிறேன். என்னை எங்கேயாவது ரோட்டில் விட்டுவிடுங்கள்’ என்பதாக பேர்ட்டியிடம் புலம்பினேன். அச்சமயம் நாங்கள் லிலோங்வி பட்டணத்தை நெருங்கிக்கொண்டிருந்தோம். ஆகையால், அங்கிருந்த மருத்துவமனைக்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். மார்ஃபின் ஊசிபோட்டது வேதனையை சற்று தணித்தது. இருப்பினும் என்னால் காரில் பயணத்தை தொடர முடியவில்லை. பேர்ட்டியும் பிள்ளைகளும் மாத்திரம் காரில், ஏறக்குறைய 400 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ப்ளான்டயருக்குச் சென்றார்கள். சில நாட்களுக்குப் பின்பு, ப்ளான்டயரிலிருந்து சாலிஸ்பரிக்கு நான் விமானத்தில் சென்று என் குடும்பத்தினரை சந்திப்பதற்கு ஒரு உறவினர் ஏற்பாடு செய்தார். பேர்ட்டியும் பிள்ளைகளும் வீட்டிற்கு திரும்புவதற்கான தங்களுடைய பயணத்தை காரில் தொடர்ந்தனர்.
சாலிஸ்பரியில், எங்கள் மகள் பாலினும் அவளுடைய கணவரும் இருந்த வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது, அப்பாடா! நாங்கள் எல்லாரும் எவ்வளவாய் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம் தெரியுமா! 1963-ல், எங்களுடைய கடைக்குட்டி ஆண்ட்ரூ பிறந்தான். ஆனால் அவனுடைய நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. ஆகவே தொடர்ந்து உயிர்வாழ்வானா என்ற பெருத்த சந்தேகம் எழுந்தது. இருப்பினும் நல்ல வேளையாக அவன் உயிர்ப் பிழைத்துக்கொண்டான். கடைசியாக, நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் மாறிச் சென்று, பீயட்டர்மாரிட்ஸ்பர்க்கில் குடியேறினோம்.
அன்பு பொங்கி வழியும் குடும்பம்
1995-ல் பேர்ட்டி, 94 வயதில் அமைதியாக கண்ணை மூடினார். அந்த சமயத்திலிருந்து நான் எங்கள் வீட்டில்தான் வாழ்கிறேன். எனினும் நான் தனித்தவளாக இல்லை! லீயலும் பாலினும், இங்கே தென் ஆப்பிரிக்காவில் தங்கள் குடும்பத்துடன் யெகோவாவைச் சேவிக்கிறார்கள். அவர்களில் சிலர் இங்கே இந்த பீயட்டர்மாரிட்ஸ்பர்க்கில்தானே வாழ்கிறார்கள். லின்ட்செயும் அவளுடைய குடும்பமும் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த கலிபோர்னியாவில் இருக்கிறார்கள். அங்கே அவளும் அவளுடைய குடும்பமும், எல்லாருமே சுறுசுறுப்பான சாட்சிகளாக இருக்கிறார்கள். எங்கள் கடைசி இளம் பிள்ளைகள், ஜெரேமியும் ஆண்ட்ரூவும், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார்கள். அங்கு இருவரும் சந்தோஷமாக திருமணம் செய்துகொண்டு அவரவருடைய சபையில் மூப்பர்களாகச் சேவிக்கிறார்கள்.
எங்களுடைய எட்டு பிள்ளைச் செல்வங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் பயனியர் ஊழியத்தை செய்திருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் கிளை அலுவலகங்களில் சேவித்திருக்கிறார்கள். டொனோவன், பிப்ரவரி 1951-ல் உவாட்ச்டவர் பைபிள் பள்ளியாகிய கிலியட்டின் 16-வது வகுப்பில் பட்டம் பெற்று, அமெரிக்காவில் பயணக் கண்காணியாகச் சேவித்தான். பிறகு தென் ஆப்பிரிக்காவின் கிளை அலுவலகத்தில் வேலைசெய்வதற்காக அந்நாட்டிற்கு திரும்பிச் சென்றான். அவன் இப்போது, பீயட்டர்மாரிட்ஸ்பர்க்கில் இருந்து ஏறக்குறைய 700 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் க்ளெர்க்ஸ்டிராப் என்ற டவுனில் கிறிஸ்தவ மூப்பராக இருக்கிறான். எஸ்ட்ரெல்லா தன் கணவர், ஜாக் ஜோன்ஸுடன், புரூக்லின், நியூ யார்க்கில், யெகோவாவின் சாட்சிகளின் உலகத் தலைமை அலுவலகத்தில் சேவை செய்கிறாள்.
என்னுடைய மூத்த பையனாகிய பீட்டர், சில வருடங்களை முழுநேர ஊழியனாக பயனியர் சேவையிலும், ரொடீஷியாவிலுள்ள உவாட்ச் டவர் கிளை அலுவலகத்திலும் செலவிட்டான். எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பாக, கிறிஸ்தவ சபையின் கூட்டுறவை அவன் உதறித் தள்ளிவிட்டான். இது எனக்கு பெரும் வேதனையளித்தது.
என் வாழ்க்கையை நான் இப்போது பின்னோக்கிப் பார்க்கிறேன். டீனேஜராக நான் எனது அம்மாவுடன் ஆப்பிரிக்காவுக்குச் சென்றதற்காக உண்மையில் சந்தோஷப்படுகிறேன் என்பதை நான் சொல்ல முடியும். உண்மைதான், வாழ்க்கை எப்போதும் பஞ்சு மெத்தையில் நடப்பதை போன்று இருக்கவில்லை. ஆனால், என் கணவருக்கு ஓர் உறுதுணையாக நடந்தது, தென் ஆப்பிரிக்காவில் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி வீறுநடை போடுவதற்கு உதவிசெய்திருக்கிற ஒரு குடும்பத்தை வளர்ப்பது—இவற்றை ஈடிணையற்ற பாக்கியமாக கருதுகிறேன்.—மத்தேயு 24:14.
[அடிக்குறிப்புகள்]
a ராபர்ட் மக்லக்கியின் சரிதை பிப்ரவரி 1, 1990 தேதியிட்ட காவற்கோபுரம் (ஆங்கிலம்) இதழில், பக்கங்கள் 26-31-ல் காணப்படுகிறது.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற புரோஷரில் பக்கம் 11-ஐ காண்க.
[பக்கம் 22, 23-ன் வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
தென் ஆப்பிரிக்கா
கேப் டௌன்
பீயட்டர்மாரிட்ஸ்பர்க்
க்ளெர்க்ஸ்டிராப்
ஜோஹன்ஸ்பர்க்
பிரிடோரியா
ஜிம்பாப்வி
குவாண்டா
புலவாயோ
ஃபிலபோஸி
க்வேரு
ம்யூட்டேரா
ஹராரே
ஜாம்பியா
மொஸாம்பிக்
மலாவி
பியன்டைர்
லிலோங்கி
டான்ஜானியா
தார் எஸ் சலாம்
டாங்கா
கென்யா
மொம்பாஸா
ஸேசேல்ஸ்
சோமாலியா
[பக்கம் 20-ன் படம்]
எஸ்ட்ரெல்லாவுடன் சிறைக்கு செல்வதற்கு முன்பாக எஸ்ட்ரெல்லா, பீட்டர், பாலினுடன் நான்
[பக்கம் 21-ன் படம்]
ஃபிலபோஸிக்கு அருகிலிருந்த பண்ணை வீட்டிற்கு முன்பு லீயலும் டொனோவனும்
[பக்கம் 22-ன் படம்]
பேர்ட்டி, லீயல், பாலின், பீட்டர், டொனோவான்—உடன் நான்
[பக்கம் 24-ன் படம்]
இன்று கார்மெனுடன் அவரது ஐந்து செல்வங்கள்: (இடமிருந்து வலஞ்சுழியாக): 1951-ல் கிலியட் பட்டம் பெற்ற டொனோவன், ஜெரேமி, லின்ட்செ, எஸ்ட்ரெல்லா, ஆண்ட்ரூ