உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 7/8 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘கடைசி வரம்பற்ற ஆட்சிமுறை’
  • சீக்கிரத்தில் வயதாவதைத் தடுத்தல்
  • உடம்பைத் துளையிடுவது சுகநலக்கேடு
  • மதிப்பிழந்த சர்ச்
  • போரின் பரம்பரைச் சொத்து
  • ஒட்டுண்ணி மீன்
  • தொல்லையிலுள்ள பல்கலைக்கழகங்கள்
  • வீட்டுவேலை செய்வது யார்?
  • காசநோய் போராட்டத்தில் தோல்வி
  • வெனிசுவேலாவும் எய்ட்ஸும்
  • எய்ட்ஸ் ஓர் அனைத்துலகக் கொலையாளி
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
  • புதிய ஏய்ட்ஸ் அபாயங்கள்?
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 7/8 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

‘கடைசி வரம்பற்ற ஆட்சிமுறை’

சமீபத்தில் ஜான் பால் II நியமித்த 30 புதிய கார்டினல்களுக்குப் பிறகு, “வாடிகனின் பழைமைவாத போக்கைக் குறித்து ஜெர்மன் கத்தோலிக்க சர்ச்சிலுள்ள அதிருப்தி உயர்ந்துகொண்டு வருகிறது,” என ரோம் தினசரி லா ரிபப்ளிக்கா அறிக்கை செய்கிறது. அடுத்த போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, “உண்மையிலேயே முழு கத்தோலிக்க சர்ச்சின் பிரதிநிதியாக இருக்கிற வாக்காளர்களின் குழு ஒன்றிற்கான அவசரத் தேவை” இருக்கிறது என்று மாறுபட்ட கருத்துள்ள பிரபல இறையியலாளர் ஹான்ஸ் கூங் உறுதியாக கூறுகிறார். “போப்பாண்டவர் பெரும்பான்மையான உண்மையுள்ள அங்கத்தினர்களின் நம்பிக்கையை தெளிவாகவே இழந்துவிட்டார்,” என்பதாக கூங் நம்புகிறார். கூங் தொடர்ந்து சொல்கிறார்: “ஸ்டாலினியக் கொள்கையின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரோம கத்தோலிக்க முறையே மேற்கத்திய உலகில் கடைசியாக உள்ள வரம்பற்ற ஆட்சிமுறை என்பதைப் புறக்கணிக்க முடியாது.”

சீக்கிரத்தில் வயதாவதைத் தடுத்தல்

“வீடுகளைக் குழந்தைகளுக்காக மக்கள் மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். அவற்றை ஏன் வயதானவர்களுக்காக மாற்றியமைத்துக்கொள்ளக் கூடாது?” என்று கேட்கிறார் பிரேஸிலிலுள்ள சாவோ பாலோ யூனிவர்சிடியைச் சேர்ந்த மூப்பியல் நிபுணர் வில்சன் ஜாக்கப் ஃபிலியோ. வயோதிபருக்கான பாதுகாப்புள்ள வீடுகளைத் தவிர, விழுந்துவிடும் ஆபத்தைக் குறைப்பதற்காக, அவர்கள் தசைநார் மண்டலத்தைப் பலப்படுத்த உடற்பயிற்சி செய்யவேண்டும் என அவர் ஆலோசனை தெரிவிக்கிறார். தீர்க்காயுசுவின் மிகப் பெரிய விரோதிகள் யாவை? பிளாஸ்டிக் அறுவைசிகிச்சையாளரும் சாவோ பாலோ யூனிவர்சிடியைச் சேர்ந்தவருமாகிய ரோஸரியோ இஸார் நெவெஸ் சொல்கிறபடி, அமர்ந்தே வேலை செய்யும் வாழ்க்கை முறை, சமநிலையற்ற போஷாக்கு (விசேஷமாக கொழுப்புசத்துள்ள உணவுகள்), புகைபிடித்தல், சாராயச் சத்துள்ள மதுபானங்களை மிதமிஞ்சி பயன்படுத்துதல், அழுத்தம், உறக்கமின்மை” ஆகியவையே விரோதிகள். மிதமிஞ்சிய அழுத்தம் நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது. “இது பல்வகை நோய்களின் ஆரம்பத்துடன் மிக நெருங்கிய விதமாக தொடர்புடையதாகவும் அதன் விளைவாக வயோதிபத்துடனும் தொடர்புடையதாக இருக்கிறது,” என்று ஜர்னல் டா டார்ட விளக்குகிறது. டாக்டர் நெவெஸ் மேலுமாக கூறுகிறார்: “வாழ்க்கையில் வெறுப்பு சீக்கிரத்தில் வயதாவதற்கான முக்கிய காரணமாகும்.”

உடம்பைத் துளையிடுவது சுகநலக்கேடு

“சில ஆண்டுகளுக்கு முன்பு துளையிடப்படாத அளவுக்கு, ஆட்கள் தங்களுடைய உடலின் பாகங்கள் துளையிடப்படும்படி செய்திருக்கிறார்கள்,” என்று சொல்கிறார் கனடாவிலுள்ள கல்கரி சுகாதார சேவைகளுக்கான சுற்றுச்சூழல் சுகாதார இயக்குநர் ஜான் பெல்ட்டன். தி வான்கூவர் சன் பத்திரிகையிலுள்ள அறிக்கையின்படி, புருவங்கள், உதடுகள், நாக்குகள், தொப்புள்கள் ஆகியவற்றையும் இது உட்படுத்துகிறது. வளர்ந்துவரும் இந்தத் தீவிரப்பற்று எய்ட்ஸையும் ஈரல் அழற்சி பி மற்றும் சி-யையும் கடத்தக்கூடும் என்ற பயவுணர்ச்சிகள், உடலைத் துளையிடுவதைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டுக் குறிப்புகளை அறிமுகப்படுத்தும்படி ஆல்பர்ட்டா ஹெல்த் என்ற இடத்திலுள்ள சுற்றுச்சூழல் சுகாதார சேவைகளைத் தூண்டியிருக்கின்றன. “சூட்டினால் குறிபோடுதல், மெழுகிடுதல், பச்சைகுத்துதல், எலக்ட்ரோலிசிஸ், உணர்வூக்கிகளைப் பறித்தல் போன்ற ஒழுங்குபடுத்தப்படாத தனிப்பட்ட சேவைகளின் முழு பரப்பளவையும் புதிய தராதரங்கள் கடைசியாக உள்ளடக்கும்.” இந்த முறைகளுக்கான திட்டக் குறிப்புகள் பொதுநல சுகாதார அதிகாரிகளாலும் அந்த நிறுவனத்தாலும் மறுபார்வை செய்யப்படும் என்பதாக அந்த அறிக்கை மேலுமாகச் சொல்கிறது. உடலைத் துளையிடுவதற்கு காது குத்துகிற கருவியைப் பயன்படுத்துவதன் சம்பந்தமாக, இந்த முறையைக் கையாளுகிற ஒருவர் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “தொற்றுவியாதிகளுடன் ஆஸ்பத்திரிக்கு மக்கள் செல்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். அது உண்மையில் திகிலூட்டுவதாய் இருக்கிறது.”

மதிப்பிழந்த சர்ச்

கனடாவின் மிகப் பெரிய புராட்டஸ்டன்ட் மதப் பிரிவாகிய யுனைட்டெட் சர்ச் ஆஃப் கேனடா “வேகமாக பழமையாகி வருவதையும் அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் அனுபவிக்கிறது. மேலும் அதன் தலைவர்களும் திருச்சபையினரும் சர்ச்சில் எது முதலிடம் வகிக்கவேண்டும் என்பதைக் குறித்து கருத்து வேறுபாடுள்ளவர்களாய் இருக்கிறார்கள்,” என்று சொல்கிறது தி டோரன்டோ ஸ்டார். 30,00,000-க்கும் மேற்பட்டவர்கள் அந்தச் சர்ச்சை பின்பற்றுகிறவர்களாக இருக்கிறபோதிலும், 7,50,000 பேர் மட்டுமே சர்ச் பதிவேட்டில் இருக்கிறார்கள். அதன் பெரும்பான்மையான மிகச் சிறந்த ஆதரவாளர்கள் 55 வயதைத் தாண்டியவர்கள், ஆனால் அங்கத்தினர்களுடைய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அதற்கு கவர்ந்திழுக்கப்படுவதில்லை. சர்ச் அதன் போக்கை சரிசெய்வதற்கு உடனடியான நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது மரித்த நிலைக்குள்ளாகிவிடும் என்று எச்சரிக்கப்பட்டது. வணக்கத்திற்கும் ஆவிக்குரியத் தன்மைக்கும் முதலிடம் கொடுக்கும்படி அங்கத்தினர்கள் விரும்புகிறார்கள், ஆனால் சர்ச் தலைவர்கள் சமூக மற்றும் உலகப் பிரச்சினைகளுக்கு அதிக கவனத்தைக் கொடுக்கும்படி விரும்புகிறார்கள். சர்ச் வீழ்ச்சியடைந்தால், “யுனைட்டெட் சர்ச்சுக்கு முக்கியமானதாக இருந்திருப்பது, கனடா நாட்டு மக்களுக்கு முக்கியமானதாக இல்லை என்பதையும் இது அர்த்தப்படுத்தும்,” என்று எச்சரிக்கிறார் ஆல்பர்ட்டா சமூகநல நிபுணர் ரிஜினால்ட் பிப்பி. “அவர்களுடைய நேரம், பணம் அல்லது கவனிப்புக்கு அது தகுதியானதாய் இல்லை.”

போரின் பரம்பரைச் சொத்து

51 வருடங்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பாவின் நேசநாட்டுப் படையெடுப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஏழாயிரம் படை வீரர்கள், ஜூன் 1994-ல் நார்மன்டி கடற்கரைகளுக்குத் திரும்பி வந்தார்கள். ஆனால் அந்தக் கொண்டாட்டம் அவர்களுக்கு உண்டுபண்ணிய கவலையை சமாளிக்க மனநோய் மருத்துவ உதவி கொடுக்கப்பட வேண்டிய அளவுக்கு அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு அந்த நினைவுகள் மிகவும் கவலைக்குரியதாக இருந்தன. படையிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கு உதவுகிற ஓர் அறக்கொடை ஸ்தாபனமாகிய கம்பேட் ஸ்ட்ரெஸ் சார்பாக பேசுகையில், டாக்டர் கிரஹாம் லூக்கஸ் இவ்வாறு விளக்கினார்: “ஓய்வுபெற்ற படைவீரர்கள் சிலர், டி-டே-க்குப் பிறகு மிதமிஞ்சிய துயரமடைந்தவர்களாய் ஆனார்கள். அவர்களுக்கு குற்றவுணர்வுகளும், மற்றவர்கள் மரித்திருக்கும்போது தாங்கள் உயிர்பிழைத்திருப்பதற்கு தகுதியில்லை என்ற உணர்வுகளும் இருந்தன, மேலும் கொடுங்கனவுகளாலும் அலைக்கழிக்கப்பட்ட தூக்கத்தாலும் அவதியுற்றுக் கொண்டிருந்தார்கள்.” பல ஆண்டுகளாக அடக்கிவைக்கப்பட்டிருந்த இப்படிப்பட்ட உணர்ச்சிகள் குடற்புண்கள், ஆஸ்துமா, தோல் வியாதிகள் ஆகியவற்றிற்கு வழிநடத்தியிருக்கின்றன என்று லண்டனிலுள்ள தி ஸன்டே டைம்ஸ் அறிக்கை செய்கிறது. வயதுசென்ற படைவீரர் ஒருவருக்கு அவருடைய நினைவுகள் இன்னும் அவருக்கு கொடுங்கனவுகளைத் தருகின்றன, அவர் சொல்கிறார்: “இப்படிப்பட்ட நாட்களை நினைவுகூருவதில் நீங்கள் மிதமிஞ்சி செல்லலாம். அங்கு இருந்திராத மக்கள் அது எதைப் போலிருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.”

ஒட்டுண்ணி மீன்

கேன்டிரு என்பது ஒரு ஒட்டுண்ணி மீன்; அது அமேசான் நதிப்படுகைகளில் இனப்பெருக்கம் செய்கிறது. அது 2.5 சென்டிமீட்டர் நீளமுடையது; விலாங்கு மீனைப் போன்ற ஒளி ஊடுருவுகிற இந்த உயிரி, பொதுவாக மிகப் பெரிய மீன்களின் செவுள்களில் காணப்படுகிறது, அங்கு அது அவற்றின் இரத்தத்தைக் குடித்து வளருகிறது. மனித புழைவாய்களிலும்கூட அது நுழைய முடியும்; அழற்சியையும் இரத்தக்கசிவையும், பலியானவருக்கு சிலசமயங்களில் மரணத்தையும் உண்டாக்கக்கூடும். அந்த மீனின் நீளத்தில் சுமார் பாதியளவுடைய, மிகச் சிறியதும் அதிக வேட்கையுடையதுமான ஒரு வகை, சமீபத்தில் பிரேஸிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனுடைய வாயின் பின்புறத்தில் கொக்கிபோன்ற வடிவமுள்ள இரண்டு பற்கள் அதற்கு இருக்கிறது, அவை பலம்வாய்ந்த பிடிப்பை அதற்கு அளிக்கின்றன, இதனால் உதறித்தள்ளப்படுவதை சாத்தியமற்றதாக்குகிறது. “குறைந்தளவு அல்லது எந்தவித மருத்துவ வசதியே இல்லாத நதிக்கரையோரமுள்ள சமுதாயத்தினரை, அது கவலைக்கிடமான தொற்றுநோய்களுக்கு வழிநடத்தக்கூடும்,” என்று நியூ சயன்டிஸ்ட் அறிக்கை செய்கிறது.

தொல்லையிலுள்ள பல்கலைக்கழகங்கள்

“புறக்கணிக்கப்பட்ட ஆப்பிரிக்க பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியடையும் தறுவாயில் உள்ளன,” என்று அறிக்கை செய்கிறது ஜோஹன்ஸ்பர்கிலுள்ள வீக்கென்ட்ஸ்டார். நிதிப்பற்றாக் குறையின் காரணமாக, அங்கு ஒருசில கம்ப்யூட்டர்களே உள்ளன. சிலவற்றில் தொலைபேசிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஒரு பல்கலைக்கழகத்தில் 35,000 பதிவுசெய்யப்பட்ட மாணாக்கர்கள் இருக்கின்றனர், ஆனால் அது ஆரம்பத்தில் 5,000 பேருக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. உகாந்தாவிலுள்ள புகழ்பெற்ற முன்னாள் பல்கலைக்கழகம் ஒன்றில், விரிவுரையாளருக்கான இடங்களில் பாதி மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. இந்த வளாகத்திலுள்ள ஒரு விரிவுரையாளரின் சம்பளம், உண்மையில் ஒரு மாதத்திற்கு சுமார் 19 டாலரே ஆகும். விரிவுரையாளர்கள் அல்லது மாணவர்களின் வேலைநிறுத்தத்தினால் சில பல்கலைக்கழகங்கள் மாதக்கணக்காக மூடப்பட்டுள்ளன. கென்ய நாட்டு பேராசிரியர் ஒருவர் சொன்னார்: “ஆப்பிரிக்காவிலுள்ள கல்வியின் தன்னழிவு மோசமான நிலையிலிருந்து படுமோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.”

வீட்டுவேலை செய்வது யார்?

இத்தாலிய குடும்பங்கள் நேரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி மத்திய புள்ளியியல் நிறுவனம் செய்த சுற்றாய்வின்பேரில் அறிக்கை செய்கையில், “[ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே உள்ள] சமத்துவம் குடும்பச் சூழலில் இன்னும் நுழையவில்லை என்பதாக தெரியும்,” என்று சொல்கிறது கோரீரே டேல்லா சேரா. அவளுக்கு வெளிப்புற வேலை ஒன்று இருக்கிறதோ இல்லையோ, வீட்டுவேலைக்கு அவளுடைய துணைவர் செலவிடுகிற 1 மணிநேரம் 48 நிமிடத்துடன் ஒப்பிடுகையில்—அவளுக்கு குழந்தைகள் இருக்குமானால்—சராசரியாக 7 மணிநேரம் 18 நிமிடத்தை அர்ப்பணித்து, பெண்ணே “குடும்ப அமைப்பில் சுமையை எடுத்துக்கொள்ள” வேண்டியதாயிருக்கிறது. முரண்பட்ட விதமாக, விவாகமாகாத தாய்மார்கள் மேம்பட்ட விதத்தில் செய்வதாக தோன்றுகிறது, அவர்கள் காரியங்களை ஒழுங்குபடுத்தி ஒவ்வொரு நாளும் வீட்டுவேலைக்கு இரண்டு மணிநேரமே குறைவாக அர்ப்பணிக்கிறார்கள். “சிறுபிராயம் முதற்கொண்டு, தாய்மார்கள் தங்களுடைய சிறு பெண்பிள்ளைகளை வீட்டுவேலைகளுக்கென்று ‘நிர்ணயித்துவிடுகிறார்கள்,’” என்பதாக லா ரிபப்ளிக்கா மேலும் சொல்கிறது.

காசநோய் போராட்டத்தில் தோல்வி

பாரிஸிலுள்ள லா பிட்டியே சால்பேட்ரியர் மருத்துவமனையைச் சேர்ந்த நுண்ம ஆய்வியல்-நோய் நுண்ம ஆய்வியல் துறை தலைவராகிய பேராசிரியர் ஸாக் க்ராஸே சொல்கிறபடி, நோய்க்கு எதிரான யுத்தத்தில், காசநோயுடன் செய்த போராட்டம் “உலகளாவிய விதத்தில் படுதோல்வி”யாக இருந்திருக்கிறது. நோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால், காசநோய்க்கான சாவு வீதம் சுமார் 50 சதவீதமாக இருக்கிறது. உலகில் டிபி-யால் அவதியுறுகிறவர்களில் ஏறக்குறைய பாதிப்பேருக்கு நோய் அறிதலும் சிகிச்சையும் கிடைக்காதிருக்கையில், நுண்ணுயிர்க் கொல்லிகள் தாராளமாக கிடைக்கும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றமடைந்த நாடுகளில், அந்நோயுள்ளவர்களில் பாதிப்பேர் மட்டுமே பூரண குணமடையும் வரையாக தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதே உண்மையான பேரழிவாகும் என்று பேராசிரியர் க்ராஸே சுட்டிக்காட்டினார். “மற்ற பாதிப்பேர் தங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை, அல்லது மிகவும் ஒழுங்கற்ற விதத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். அது மிக அதிகளவான சாவு வீதத்தை (சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 25 சதவீதத்தை) உண்டுபண்ணுகிறது. மேலும் நுண்ணுயிர்க் கொல்லிகளை எதிர்ப்பவையாக இருக்கிற காசநோயை உண்டுபண்ணுகிற நோய் நுண்ம மரபுக்கூறு ஒன்றையும் உண்டுபண்ணுகிறது.”

வெனிசுவேலாவும் எய்ட்ஸும்

பிரேஸில் மற்றும் மெக்ஸிகோவுக்குப் பிறகு, லத்தீன் அமெரிக்காவிலுள்ள வெனிசுவேலா எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது என்று வெனிசுவேலாவின் காரகாஸிலுள்ள எல் யூனிவர்ஸல் சொல்கிறது. சுகாதாரத் துறை அமைச்சகம் 3,000 பேர் என்பதாக மட்டுமே ஒப்புக்கொள்கிறபோதிலும், அந்நாட்டிலுள்ள 3,50,000 மக்கள் சாவுக்கேதுவான வைரஸ்களினால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதாக டாக்டர் ஆரயாநோ மெடிசி மதிப்பிடுகிறார். மெடிசி சொல்கிறபடி, நோய் தொற்றப்பட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும், ஒருவேளை நோய் தொற்றப்பட்டுள்ள நூறுபேருக்கும் அதிகமானோர் அதை அறியாமலிருப்பதற்குக் காரணம், “நம்முடைய சமுதாயத்தில் குறிப்பிடத்தக்க விதமாகவுள்ள வரைமுறையற்ற பாலுறவேயாகும்.” நோய் தொற்றப்பட்டுள்ள ஆட்கள் ஒழுக்க சம்பந்தமாக சுத்தமான வாழ்க்கை வாழவேண்டும், மற்றவர்களுக்கு நோய் தொற்றிக்கொள்ளும் அபாயத்தின் காரணமாக மட்டுமல்ல, ஆனால் பலவிதமான எய்ட்ஸ் வைரஸ்கள் இருப்பதன் காரணமாகவுமாகும் என்று மெடிசி சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் வித்தியாசமான வைரஸ்களினால் எளிதில் தொற்றப்பட்டவர்களாக ஆகமுடியும், அது அவர்களுக்கு தற்போதுள்ள உடல்நலப் பிரச்சினையை மோசமாக்கக்கூடும். 2000 ஆண்டுக்குள்ளாக, உலகிலுள்ள ஒவ்வொரு குடும்பமும் எய்ட்ஸ் நோயுடைய ஒரு அங்கத்தினரைக் கொண்டிருக்கும் என்று ஒரு தகவல்மூலம் கணக்கிடுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்