பெருமளவில் எய்ட்ஸ் பரவியுள்ள இடம்
பதினைந்து வருடங்களுக்குள், எய்ட்ஸ் தன்னுடைய நிழலை புவியின் ஒவ்வொரு கண்டத்திலும் பரப்பியுள்ளது. ஒரு சில வருடங்களுக்குள் இந்த உயிரியல் குண்டு வெடித்து பெருமளவில் பரவியுள்ளது. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு நாளும் 5,000 மக்கள் பீடிக்கப்படுவதாக WHO (உலக சுகாதார நிறுவனம்) கணக்கிட்டது. அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் மூன்று பேருக்கும் அதிகமானோர்! பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பவை வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகள் என்று பெயரளவில் அழைக்கப்படுகிற உலகத்தின் ஏழைநாடுகளே. இந்த நாடுகளில் 2000-ம் ஆண்டிற்குள் HIV தொற்றியோரில் 90 சதவிகிதம் இருப்பார்கள் என்றும் நாளடைவில் முழு 90 சதவிகிதமும் எய்ட்ஸ் நோயாளிகளாவார்கள் என்றும் WHO கணித்துள்ளது.
கொடூரமாகப் பாதிக்கப்பட்டோர்
திருமணமாகி மூன்று குழந்தைகளையுடைய ரோஸிற்கு வயது 27, அவருடைய கணவர் திடீரென்று வியாதிப்பட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் அவர் மரித்துவிட்டார். அந்தச் சமயத்தில் அவருடைய கணவரின் மரணத்தின் காரணம் தெளிவாக இல்லை. டாக்டர்கள் காசநோய் என்று நிர்ணயித்தார்கள். அவருக்கு மந்திர செய்வினை வைக்கப்பட்டதாக உறவினர்கள் கூறினார்கள். அவருடைய கணவரின் உறவினர்கள் ரோஸின் சொத்துக்களை அபகரிக்க ஆரம்பித்தார்கள். அவர் இல்லாத சமயத்தில் கணவர் வீட்டார் பிள்ளைகளை பலவந்தமாக எடுத்துச் சென்றார்கள். ரோஸ் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு திரும்பிச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார். இரண்டு வருடங்களுக்குப்பின்னர் வாந்தி பேதி நோய்வீச்சுக்கு ஆளானார். அந்தச் சமயத்தில்தான் தன் கணவர் எய்ட்ஸினால் மரித்தார் என்றும், தானும்கூட அந்நோயால் பீடிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்துகொண்டார். மூன்று வருடங்களுக்குப்பின்னர், 32-ம் வயதில் ரோஸ் மரித்துப்போனார்.
தற்போது இதுபோன்ற பரிதாபகரமான கதைகள் சகஜமாக உள்ளன. சில இடங்களில் முழுக்குடும்பங்களும் கிராமங்களும்கூட துடைத்தழிக்கப்பட்டுள்ளன.
“நமது காலத்தின் மிகப்பெரிய ஆரோக்கியப் பிரச்சினை”
இந்தப் பிரச்சினையை சமாளிக்க முயலும்போது வளரும் நாடுகளின் அரசாங்கங்கள் வெகுவாய் வசதியற்ற நிலையில் உள்ளன. ஏனென்றால், வருவாய் மூலங்கள் இன்மையும், அதிக செலவை உட்படுத்தும் உடனடியாக செய்யப்படவேண்டிய மற்ற முன்னுரிமைகள் நிலைத்திருப்பதாலும், எய்ட்ஸ், ஒட்டகத்தின் மேல் வைக்கப்பட்ட கடைசி வைக்கோல் என்னும் பழமொழியை ஒத்துள்ளது. உலகளாவிய பணவீழ்ச்சி, உணவு பற்றாக்குறை, இயற்கை பேரழிவுகள், போர்கள், பண்பாட்டு பழக்க வழக்கங்கள், மூடபழக்கங்கள் பிரச்சினையை இன்னும் கூட்டத்தான் செய்கின்றன. அடிக்கடி பாதிக்கப்படும் எய்ட்ஸ் நோயாளிகளுக்குத் தேவையான பிரத்தியேக கருவியையும் மருத்துவத்தையும் உட்படுத்தும் விசேஷித்த பராமரிப்பை அளித்தல் அதிக செலவை உட்படுத்துகிறது. பல பெரிய மருத்துவமனைகள், இப்போது மக்கள் நெருக்கடிமிக்கதாயும், சேதமடைந்த நிலையிலும், குறைவான பணியாளர்களைக் கொண்டவையாயும் உள்ளன. எப்போதும் அதிகரித்துவரும் எண்ணிக்கையிலுள்ள, பராமரிப்பு தேவைப்படுத்தும் மற்ற நோயாளிகளுக்கு இடமளிக்க வேண்டி, இப்போது பெருவாரியான எய்ட்ஸ் நோயாளிகள் வீட்டிற்குச் சென்று இறந்துபோக அனுப்பப்படுகிறார்கள். எய்ட்ஸ் மட்டுமின்றி, அதையடுத்து காசநோய் போன்ற இரண்டாம் நிலை தொத்து நோய்களும் திடுக்கிடச்செய்யும் அளவில் அதிகரித்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் காசநோய் மரணங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது என்றும், மருத்துவமனையில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் 80 சதவீதத்தினர் காசநோய் உடையவர்களாக உள்ளனர் என்றும் சில நாடுகள் அறிக்கைசெய்திருக்கின்றன.
எய்ட்ஸின் சமுதாயப் பாதிப்பு
பெருமளவில் பரவியுள்ள எய்ட்ஸ் பாதிப்பது சுகாதார-நல அமைப்பை மட்டுமல்ல, ஆனால் பொருளாதாரத்தின் மற்றும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளும்கூட பாதிக்கப்படுகின்றன. நோயால் பீடிக்கப்பட்டுள்ளோரில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் 16-லிருந்து 40-வயதிற்குட்பட்டவர்கள், சமுதாயத்தின் அதிக ஆக்கத்திறனுடைய வயது-வகுப்பினர். குடும்பத்தில் சம்பாதிப்போரில் பெரும் எண்ணிக்கையினர் இந்த வயதினர் தொகுதியைச் சேர்ந்தவர்கள்தாம். அநேக குடும்பங்கள் இவர்களைச் சார்ந்துள்ளன. ஆனால் அவர்கள் வியாதிப்பட்டு இறுதியில் இறந்துபோகையில், சிறுபிள்ளைகளும் பெரியவர்களும் ஆதரவு ஏதுமின்றி கைவிடப்படுகின்றனர். ஆப்பிரிக்காவின் எந்தச் சமுதாயத்திலும், ஒரு பிள்ளையின் பெற்றோர் இறந்துவிட்டால், பாரம்பரியமாக அந்தப் பிள்ளை தத்தெடுக்கப்பட்டு, நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே எடுத்துக்கொள்ளப்படுகிறது. என்றபோதிலும், இன்றோ, பெற்றோர் மரித்துவிட்டால், தாத்தா பாட்டிமார்கள் அல்லது உயிருடனிருக்கும் மற்ற உறவினர்கள் பெரும்பாலும் அதிக வயதானவர்களாகவோ அல்லது ஏற்கெனவே தங்களுடைய சொந்தப் பிள்ளைகளின் தேவைகளுக்கு ஏற்பாடு செய்யவேண்டிய பாரத்தை உடையவர்களாகவோ இருக்கின்றனர். இந்த நிலைமைதான் அனாதைகளின் பிரச்சினைகளுக்கும் தெருக்களில் வாழும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கும் வழிநடத்தியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் தெற்கு சஹாரா பகுதியில் மட்டும், இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் ஒரு கோடிக்கும் அதிகமான பிள்ளைகள் அனாதைகளாவார்கள் என்று WHO முன்னறிவிக்கிறது.
பெண்கள் எய்ட்ஸின் கொடுமையை இரட்டிப்பாக வேதனைதருவதாயும் பாரமானதாயும் காண்கின்றனர். நோயுற்ற, இறந்துகொண்டிருக்கிறவர்களுக்குத் தேவையான 24-மணிநேர மருத்துவ பராமரிப்பைக் கொடுப்பதற்காக முதலில் கூப்பிடுவது பெண்களைத்தான். இதை மற்ற அனைத்து குடும்ப காரியங்களைச் செய்வதோடு செய்யவேண்டியுள்ளது.
என்ன செய்யப்படுகிறது
ஆரம்ப 1980-களில், பல அரசாங்க அதிகாரிகள், எய்ட்ஸுடன் இணைந்திருக்கும் சிறப்பியல்புக்கூறுகளைக் குறித்து தப்பெண்ணம் கொண்டிருந்தனர். அது பரவக்கூடிய வேகத்தை அறியாதிருந்தனர், அவர்கள் அக்கறையற்றும் தன்னிறைவுடனும் இருந்து விட்டார்கள். ஆயினும் 1986-ல் உகாந்தா அரசாங்கம் எய்ட்ஸுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், “நிகழும் காலத்திற்கேற்ப எய்ட்ஸை கட்டுப்படுத்தும் முயற்சியில் புதுமுறைகளை வளர்த்துள்ளது,” என்னும் பெருமை உகாந்தாவிற்கு கிட்டியுள்ளது.
இன்று உகாந்தாவில், 600-க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச அமைப்புகளும் ஏஜன்ஸிகளும் எய்ட்ஸ் பரவாமல் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த மனிதாபிமான ஏஜன்ஸிகள் நாடு முழுவதும் ஒரு கட்டமைப்பில் இணைக்கப்பட்ட எய்ட்ஸ் தகவல் பரப்பும் மையங்களை நிறுவியுள்ளன. நாடகங்கள், நடனங்கள், பாடல்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்தித்தாள்கள், தொலைபேசி ஆகியவற்றின் மூலம் எய்ட்ஸ் கொடுமை பற்றிய விழிப்புணர்வு மக்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. வீட்டுப்பராமரிப்பு மற்றும் பொருள் சம்பந்தமான உதவியுடன்கூட எய்ட்ஸ் உடையவர்களுக்கும், விதவைகளுக்கும் அனாதைகளுக்கும் அறிவுரைகளும் வழங்கப்படுகிறது.
யெகோவாவின் சாட்சிகள் மத்தியில், அனாதைகளையும் விதவைகளையும் கவனித்துக்கொள்ளுவது, கிறிஸ்தவ வணக்கத்தின் ஒரு பாகமாகக் கருதப்படுகிறது. (யாக்கோபு 1:27; 2:15-17; 1 யோவான் 3:17, 18) தங்களுடையவர்களை பராமரிக்க வேண்டிய குடும்ப அங்கத்தினர்களின் சொந்தப் பொறுப்பைச் சபை எடுத்துக்கொள்ளுவதில்லை. ஆனால், ஒருவேளை நெருங்கிய குடும்ப அங்கத்தினர் இல்லை என்றால் அல்லது அனாதைகளும் விதவைகளும் பொருள்சம்பந்தமாக தங்களால் சமாளிக்க இயலவில்லை என்றால், உதவுவதற்குச் சபையானது அன்பாக முன்வருகிறது.
உதாரணமாக யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஜாய்ஸ், உகாந்தாவின் தலைநகராகிய கம்பாலாவில் வாழ்ந்துவந்தார். அவர் எய்ட்ஸுக்கு இரையாகி, ஆகஸ்ட் 1993-ல் மரணமடைந்தார். அவர் மரிப்பதற்குமுன் கீழ்வரும் பதிவை எழுதினார்: “நான் ஒரு புராட்டஸ்டண்டாக வளர்ந்தேன், பிறகு கத்தோலிக்கர் ஒருவரை மணந்தேன். ஆயினும், என்னுடைய சர்ச்சில் பலர் ஒழுக்கங்கெட்டு நடப்பதைப்பார்த்தேன், எனவே அங்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். என்னுடைய அக்கா, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்துக்கொண்டிருந்தார், அவர் என்னைச் சந்திக்க வந்தபோது, தான் பைபிளில் கற்றுக்கொண்டிருந்தக் காரியங்களை எனக்குக் கூறினார்.
“நான் பைபிள் படிப்பதை என்னுடைய கணவர் மிகவும் எதிர்த்தார். என்னுடைய பெற்றோரும்கூட, விசேஷமாக என்னுடைய அப்பா எதிர்க்க ஆரம்பித்தார். இந்த எதிர்ப்பு, இரண்டு வருடங்களுக்குத் தொடர்ந்தது. ஆனாலும் நான் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று உறுதியாக நம்பினதால், அது என்னை ஆர்வம் இழக்கச்செய்யவில்லை, நான் முழுக்காட்டப்பட விரும்புவதை என் கணவரிடத்தில் கூறியபோது, அவர் கடுங்கோபம் கொண்டார். என்னை அடித்து, வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறினார். ஆகவே வீட்டைவிட்டு வெளியேறி, சிறிய வாடகை அறையில் தனியாக வாழ்ந்தேன்.
“கொஞ்சகாலத்திற்குப் பின்னர் திரும்பிவரும்படி என் கணவர் அழைத்தார். நான் திரும்பிய கொஞ்சகாலத்திற்குள், அவர் பலவீனமடையவும் நோயுறவும் துவங்கினார். அவர் எப்போதும் நல்ல ஆரோக்கியத்தை உடையவராக இருந்ததனால் நான் ஆச்சரியமடைந்தேன். அவருக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்பதை நாளடைவில் அறியவந்தோம். அவர் 1987-ல் இறந்துபோனார். அதற்குள்ளாக நான் ஒரு ஒழுங்கான பயனியராக [முழுநேர சுவிசேஷகர்] இருந்தேன். ஐந்து பிள்ளைகளோடு விதவையாக விடப்பட்டபோதிலும், பயனியர் சேவையைத் தொடர்ந்தேன்.
“என் கணவரிடமிருந்து, எய்ட்ஸ் எனக்கு தொற்றியிருந்ததை நான்கு வருடங்களுக்குப் பின்னர், 1991-ல் அறிந்துகொண்டேன். உடல்சம்பந்தமாக சீரழியத் துவங்கினேன். சருமத்தில் வேனற்கட்டிகள், வேகமான எடைக்குறைவு, தொடர்ச்சியான காய்ச்சல் நோய்வீச்சால் வேதனைப்பட்டேன். அப்போதும் நான் பயனியர் ஊழியத்தை தொடர்ந்தேன், 20 பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தேன். ஆனால் என் பலம் குன்றிக்கொண்டுச் செல்லவே, அவற்றை 16-க்கு குறைத்தேன். இவற்றில் ஏழு மாணாக்கர்கள் கடைசியாக முழுக்காட்டுதலைப் பெற்றார்கள்.
“சபையானது அத்தகைய உண்மையான ஆதரவாக இருந்ததன் காரணமாக, தனிமையையோ, மனச்சோர்வையோ என்றுமே நான் உணரவில்லை. கடைசியில், உடல் பலவீனத்தின் காரணத்தால், சில கூட்டங்களை தவறவிடவேண்டியதாயிற்று. சகோதரர்கள் அவற்றை எனக்காக ஆடியோ கேசட்டுகளில் பதிவுசெய்தார்கள், நான் தொடர்ந்து ஆவிக்குரிய விதத்தில் போஷிக்கப்பட்டேன். அப்போது ஆவிக்குரிய என் சகோதரிகள் என்னை கவனிப்பதிலும் என்னோடுகூட இரவில் தங்குவதிலும் மாறி மாறி முறையெடுத்து செய்வதற்காக சபையின் மூப்பர்கள் ஒரு பட்டியலைத் தயாரித்தார்கள். என்னை கவலையுறச் செய்த ஒரே காரியம் என் பிள்ளைகள்தான். ‘நான் போய்விட்டால் அவர்களுக்கு என்ன நேரிடும்?’ என்று நான் சிந்தித்தேன்.
“ஆப்பிரிக்காவில், இறந்துபோனவருடைய சொத்துக்கள் பெரும்பாலும் உறவினர்களால் எடுத்துக்கொள்ளப்படும். ஆகவே இதைக்குறித்து யெகோவாவிடம் தொடர்ந்து ஜெபித்தேன். என்னுடைய வீட்டை விற்று, சிறு சிறு வாடகை அறைகளாக கட்டுவதற்குத் தீர்மானம் எடுத்தேன். அப்போது பிள்ளைகளுக்கு எப்போதும் தங்குவதற்கு இடமும், தொடர்ச்சியான வருமானமும் கிடைக்கும். சபையில் உள்ள சகோதரர்கள் எனக்காக வீட்டை விற்று, மற்றொரு நிலத்தையும் வாங்கினார்கள். எனக்காக சிறு சிறு அறைகளையும் கட்டிக்கொடுத்தார்கள். நான் ஒரு அறையில் தங்கினேன், பிள்ளைகள் கவனித்துக்கொள்ளப்படுவார்கள் என்று அறிந்து மன அமைதியடைந்தேன்.
“வீட்டை விற்றதற்காக, என் உறவினர்கள் மிகவும் கோபம்கொண்டு, சட்டப்பூர்வமாக என்மீது வழக்கு தொடுத்தார்கள். மீண்டும் சகோதரர்கள் எனக்கு உதவிசெய்தார்கள், காரியங்களை எனக்காகச் செய்தார்கள். சட்டப்பூர்வமான வழக்கை நாங்கள் வென்றோம். இப்போது பலவீனமாக உணர்ந்தபோதிலும், யெகோவாவின் அன்பான அமைப்பும் ராஜ்ய நம்பிக்கையும் தொடர்ந்து எனக்கு உதவுகின்றன. என்னுடைய நிலைமையின் காரணமாக, இப்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளேன். மருத்துவமனை தேவையான உணவு, படுக்கை வசதி செய்துகொடுக்க முடியாத காரணத்தால், என்னுடைய தேவைகளை இரவும் பகலும் கவனிக்க என் ஆவிக்குரிய சகோதரிகளை என்னருகே இப்பொழுதும் உடையவளாய் இருக்கிறேன்.”
ஆறு மாதங்களை மருத்துவமனையில் கடத்தியபின்னர் ஜாய்ஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து அவர் மரணமடைந்தார். அவருடைய ஐந்து பிள்ளைகளும் சபையில் உள்ள ஒரு பயனியர் சகோதரியால் பராமரிக்கப்படுகிறார்கள், இந்தப் பயனியர் சகோதரிதானே மூன்று பிள்ளைகளை உடையவராய் இருக்கிறார்.
இதற்குத் தீர்வு
உகாந்தாவில் ஏற்கெனவே எய்ட்ஸ் பெருமளவில் பரவியுள்ளது. “எய்ட்ஸ் மற்றும் மற்ற பால்சம்பந்தமாகப் பரப்பப்படும் வியாதிகள் கொடுக்கும் அச்சுறுத்துதலுக்கு மிகச் சிறந்த பிரதிபலிப்பு ஒவ்வொரு நபரும் தன்னுடைய அயலானுக்கு பெரும் மதிப்பையும், மரியாதையையும், பொறுப்பையும் உடையவராக இருக்கிறார் என்பதைப் பொதுப்படையாகவும், தயங்காமலும் உறுதிசெய்வதுதான் என்பதாக நான் நம்புகிறேன்,” என்று ஜனாதிபதி யோவர்ரீ காகூட்டா மூசெவனீ கூறினார். சுருங்கக்கூறின், திருமண ஏற்பாட்டில், ஒரே ஒரு துணையுடன் வாழும் ஒழுக்கநெறிக்குத் திரும்பிச் செல்வதற்கு அவசியம் இருக்கிறது. இதுமட்டுமே பாதுகாப்பான வழி, எய்ட்ஸைக் கட்டுப்படுத்தும் ஒரே வழியும் இதுவே என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர். ஆயினும் அத்தகைய ஒழுக்க தராதரத்தை அடையமுடியும் என்பதைச் சிலரே நம்புகிறார்கள்.
அத்தகைய ஒழுக்கம் சாத்தியமானது என்பதை நம்புவதுமட்டுமின்றி, அதை கடைப்பிடிப்போராகவும் இருப்பவர்களில் யெகோவாவின் சாட்சிகள் உள்ளனர். மேலும் ஜாய்ஸ் நம்பியதைப்போல், கடவுளுடைய வாக்குத்தத்தத்தின்படி நீதி வாசமாய் இருக்கப்போகும் புதிய வானத்தையும் புதிய பூமியையும் நம்புகிறார்கள். (2 பேதுரு 3:13) துன்மார்க்கம் முற்றிலும் துடைத்தெடுக்கப்பட்ட உலகத்தில், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது,” என்று வெளிப்படுத்துதல் 21:4-ல் பதிவு செய்துள்ள வாக்குத்தத்தத்தை யெகோவா நிறைவேற்றுவார்.
[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]
ஒரு தகப்பன் எய்ட்ஸ் நோயின் காரணமாக இறந்துபோன தன் மகனைப் புதைப்பதற்காக எடுத்துச் செல்கிறார்
[படத்திற்கான நன்றி]
WHO/E. Hooper