யெகோவாவின் சாட்சிகளுடைய 1996 வருடாந்தர புத்தகத்திலிருந்து அனுபவங்கள்
எல்லா வகையான வாழ்க்கைத் துறையிலிருந்தும் வரும் மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இனிமேலும் பொய் மதத்துடன் தாங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுவதை விரும்புவதில்லை; அவர்களில் சிலர் இளைஞர். சிலியிலுள்ள சாட்சிகள், தங்கள் பிராந்தியத்தின் தொலைக்கோடியிலுள்ள ஒரு பகுதியாகிய ரெக்வினோயாவுக்குச் சென்றார்கள்; தூசி படிந்த ரோட்டில் நெடுந்தூரம் நடந்த பின்னரே அதைச் சென்றடைய முடியும். ஒரு வீட்டை நெருங்குகையில், அவர்களைச் சந்திப்பதற்காக ஒரு வயதான பெண் ஏற்கெனவே எதிர்கொண்டு வந்தார். “எங்களை வாழ்த்துவதற்காக நீங்கள் வந்தது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது!” என்று அந்த சாட்சி சொன்னார். அவர் பதிலளித்தார்: “சிறிது காலத்திற்கு முன் செத்துப்போன என் பேரனுக்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவே அப்படி செய்தேன்.” 12 வயதாக மட்டுமே இருந்த அவரது பேரன் எப்போதெல்லாம் சாட்சிகள் வருவதைக் கண்டானோ, அவரிடம் ஓடிச் சென்று இப்படி சொல்லுவான்: “பாட்டியம்மா, இதோ லாஸ் டி லா பிப்ளியா [பைபிள்காரர்கள்] வர்றாங்க.” பத்திரிகைகள் வாங்குவதற்காக பணம் கேட்பான். “அவன் எப்போதும் அவற்றை வாசிப்பான்,” என்று அவர் நினைவுகூர்ந்தார்; “ஆனால் அவனுக்கு மிகவும் இஷ்டமானது ஒரு பரதீஸைக் காண்பிக்கிற சிவப்பு நிற புத்தகம் [நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்]. அவன் எனக்கு அதை வாசித்துக் காண்பித்து, எனக்குச் சொல்லித் தருவான், ஏனென்றால் எப்படி வாசிப்பது என்று எனக்குத் தெரியாது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ஏதோவொரு அறியப்படாத காரணத்திற்காக அவனுக்கு சுகமில்லாமல் போனது. அவனுக்கு உதவுவதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யப்பட்டது; ஆனால் அவனுடைய கடைசி மணிநேரங்களை எங்களுடன் செலவிடும்படி டாக்டர்கள் அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவன் சாகப்போகும் நிலையில் இருந்தான்.”
அவனுடைய படுக்கையைச் சுற்றி தன் குடும்பத்தினர் இருக்கையில், அவன் தன் கண்களை மூடினான். அவர் தொடர்ந்தார்: “அவன் செத்துவிட்டான் என்று நாங்கள் நினைத்து, துக்கத்தால் அழுதுகொண்டிருந்தோம்; அப்போது திடீரென்று அவன் தன் கண்களைத் திறந்து, எங்களிடம் இவ்வாறு சொன்னான்: ‘அம்மா, பாட்டியம்மா, நான் கத்தோலிக் இல்லைன்னு என்கிட்ட சொல்லுங்க. நான் கத்தோலிக் இல்லை, நான் கத்தோலிக்கா என்ன?’ ‘இல்ல, நீ கத்தோலிக் இல்ல,’ என்று நாங்கள் சொன்னோம். ‘நான் கத்தோலிக் இல்ல,’ என்று அவன் தொடர்ந்தான்; ‘ஏன்னா, நான் அந்த ரோட்டில் வர்ற லாஸ் டி லா பிப்ளியாவைச் சேர்ந்தவன், நான் அந்த பரதீஸில வாழப் போறேன்.’ அதற்குப்பின் அவன் தன் சிவப்பு புத்தகத்தை எடுத்து எங்களுக்கு படங்களைக் காட்டினான். என் பக்கம் திரும்பி, அவன் சொன்னான்: ‘பாட்டியம்மா, லாஸ் டி லா பிப்ளியா ரோட்டில வர்றத நீங்க பார்க்கும் போதெல்லாம், எனக்காக நீங்க அவங்கள போய் வரவேற்பேன்னு எனக்கு வாக்குக் கொடுங்க.’ நான் செய்வேன் என்று சொன்னேன். பின்னர் அவன் சொன்னான்: ‘நான் கத்தோலிக் அல்ல, நான் லாஸ் டி லா பிப்ளியாவில் ஒருவன்; நான் பரதீஸில வாழப் போறேன்,’ என்று சொல்லியவாறு செத்துப் போனான். அதனால்தான் நீங்கள் ரோட்டில் வருவதைப் பார்த்தபோது உங்களைச் சந்திக்கும்படி நான் வந்தேன்.” உயிர்த்தெழுதலைப் பற்றிய வசனங்களைப் பயன்படுத்தி அந்தச் சகோதரர் அவருக்கு ஆறுதலளித்தார். ஓர் உறுதியான விசுவாசத்தை வளர்த்துக் கொள்வதற்கு அந்தக் குடும்பம் உதவப்படும் என்று நாம் நம்பலாம்; அப்போது, யெகோவா அனுமதித்தாரானால், அவர்களும் அவர்களுடைய பேரனுடன்கூட பரதீஸில் வாழ முடியும்.
வயதானவர்கள், யெகோவாவுக்கான தங்கள் உண்மைப்பற்றுறுதியை நிரூபிக்க வேண்டும் என்பதுபோலவே, இளைஞரும் எதிர்ப்பின் மத்தியில் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கும்படி அடிக்கடி கேட்கப்படுகிறார்கள். கோஸ்டா ரிகாவிலுள்ள பதினான்கு வயது மைக்கல், ஒருசில மாதங்களுக்கு மட்டுமே பைபிளைப் படித்திருந்தான்; அப்போது அவன் பைபிளிலிருந்து எவற்றைப் படித்திருந்தானோ அவற்றிற்கு விரோதமானவையாய் அவன் உணர்ந்த சடங்குகளில் பங்கெடுக்கும்படி அவனது உயர்நிலைப் பள்ளி தேவைப்படுத்தியது. இன்னும் முழுக்காட்டப்படாத போதிலும், அவன் ஒரு உறுதியான நிலைநிற்கையை எடுத்தான்; அவனும் அவனுடைய வகுப்பிலுள்ள ஆறு சாட்சிகளும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மைக்கலுக்கு அதிகமான சோதனைகள் காத்திருந்தன. அவனுடைய தந்தை இறுதியான எச்சரிக்கையை விடுத்தார்: “அந்த மதத்தைத் துறந்துவிடு, அல்லது நீ என்னுடைய மகன் அல்ல என்று நான் மறுதலித்துவிடுவேன்.” மற்றொரு முறை, அவன் தந்தை அவனை நகரத்திற்கு காரில் கொண்டுசென்று, காரை நிறுத்திவிட்டு, ஒரு பெட்டியை அவனிடம் காண்பித்து இவ்வாறு சொன்னார்: “பார், மகனே, இந்தப் பெட்டியில் $8,500.00 (ரூ. 2,90,000.00) இருக்கிறது. நீ அவர்களுடைய விசுவாசத்தை விட்டுவிட்டு, நம்முடைய மதத்திற்குத் திரும்பி வந்துவிட்டால் இதெல்லாம் உன்னுடையது.” மைக்கல் மறுத்தபோது, அவனுடைய தந்தை அவனுடைய முகத்தில், கையால் அறைந்தார். பின்னர் அவர் அவனை ஒரு கத்தோலிக்க சர்ச்சுக்குக் கொண்டுபோய், அவன் முழங்காற்படியிட்டு, கன்னி மரியாளுக்கு முன்பாக சிலுவை அடையாளத்தைப் போட வேண்டும் என்றும், இல்லையென்றால், அவ்வாறு செய்ய மறுத்ததற்காகக் கடுமையான தண்டனையை எதிர்ப்பட வேண்டும் என்றும் கத்தினார். அவன் தன் பெற்றோரை மதிக்கும்படி கடமைப்பட்டிருக்கிறபோதிலும், அவனுடைய தனிப்பட்ட பக்தி யெகோவாவுக்கே என்று அந்த இளைஞன் பதிலளித்தான். அவனுடைய தந்தை, தான் யெகோவாவை அறிந்திருக்கவில்லை என்றும், மேலுமாக, யெகோவா தனக்கு எவ்வித முக்கியத்துவமுடையவரும் இல்லை என்றும் பதிலளித்தார். அதற்குப் பின்னர், மைக்கலின் தந்தை இரண்டு வருடங்களுக்கு அவனைக் காண மறுத்தார்! என்றபோதிலும், வருடங்கள் கழித்து, அவனுடைய தந்தை சாவதற்குச் சற்று முன்னர், அவர் மைக்கலிடம் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டு, யெகோவாவைச் சேவிப்பதைத் தொடரும்படி உற்சாகப்படுத்தி, ஒரு பைபிள் படிப்புக்காகவும் கேட்டுக்கொண்டார்.