வெனிசுவேலாவிலிருந்து அனுபவங்கள்
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தென் அமெரிக்காவின் வடக்கே கரையோரத்தில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி எட்டும்படியாக முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதிலும், ராஜ்ய மன்றங்கள் நிரம்பி வழிகின்றன, யெகோவாவைத் துதிப்போரின் எண்ணிக்கையும் வளர்ந்துவருகிறது. 1995-ல் ராஜ்ய பிரஸ்தாபிகளின் உச்சநிலை 71,709-ஆக இருந்தது. 1996 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகத்தில் (ஆங்கிலம்) இருந்து எடுக்கப்பட்ட வெனிசுவேலாவிலிருந்து வந்த ஒருசில அனுபவங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
◻ வலென்ச்சியாவுக்குத் தென்மேற்கிலுள்ள டினக்விலோவில் முதன்முதலாக சத்தியத்தின் செய்தி எட்டியபோது, மக்கள் ஆரம்பத்தில் சிநேகப்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிறிய தொகுதியினர் அந் நகரில் ஊழியம் செய்ய ஆரம்பித்தபோது, அந்த உள்ளூர் மதகுரு, “பெருந்தகை” கிரனடில்லோ, மக்களை எச்சரிக்க ஒலிபெருக்கியை ஏற்பாடு செய்திருந்ததை மரினா நினைவுகூருகிறார். “டினக்விலோவில் மஞ்சள் காய்ச்சல் வந்துசேர்ந்துள்ளது! இவர்களுக்குச் செவிகொடாதீர்கள்! இந் நகரத்தையும் உங்கள் மதத்தையும் காப்பாற்றுங்கள்! புனித திரித்துவத்தின் இரகசியத்தை ஆதரியுங்கள்!” என்று அவர் கத்தினார். மரினா அம் மதகுருவைச் சந்திக்கத் தீர்மானித்தார். அவர் வீட்டிற்குச் சென்று அவர் வீடுதிரும்பும்வரை காத்திருந்தார்.
“இன்று காலையில் நீங்கள் தாக்கிப் பேசின ‘மஞ்சள் காய்ச்சல்’-ஐச் சேர்ந்தவள் நான். நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதைத் தெளிவாக்க நான் விரும்புகிறேன். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய ஒரு முக்கியமான செய்தியை, சர்ச் பிரசங்கிக்க வேண்டிய, ஆனால் பிரசங்கிக்கத் தவறிய ஒரு செய்தியை நாங்கள் பிரசங்கித்துவருகிறோம்” என்று கூறி திறமையாகப் பேசினார். அவருடைய பைபிளைத் தைரியமாகக் கேட்டு வாங்கி, அதில், யெகோவா ஜனங்களினின்று “தமக்கென்று ஒரு ஜனத்தை” தெரிந்தெடுப்பார் என்று முன்கூறப்பட்டிருக்கும் வசனமாகிய அப்போஸ்தலர் 15:14-ஐ எடுத்து அவரிடம் காட்டினார். அவரது மனப்பான்மை மாறியது. தான் வருத்தப்படுவதாகவும், நாம் எப்பேர்ப்பட்ட ஜனங்கள் என்று உணராதிருந்ததாகவும் அவர் கூறினார். அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில், அச் சகோதரி அழைப்பு கொடுத்திருந்த அந்தப் பொதுப் பேச்சிற்கு அவர் ஆஜரானார். இதற்குப் பிறகு பல சந்தர்ப்பங்களில் பொதுவிடத்தில் வைத்து பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டார். இதைக் கவனித்த மற்றவர்களும் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர். 1995-ல் டினக்விலோவில் நான்கு சபைகள் இருந்ததோடு, அவையனைத்திலும் மொத்தமாக 385 பிரஸ்தாபிகள் இருந்தனர்.
◻ பியாட்ரிஸ் என்பவர், எப்படியாவது பைபிளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் எண்ணிக்கொண்டிருந்தார். அவர் திருமணம் செய்தார், தன் கணவருடன் காரகாஸுக்கு மாறிச் சென்றார், அங்கு அவர்கள் உயர் சமுதாயத்தின் பாகமாயினர். தலைநகரில், சர்ச்சின் அடிப்படைப் போதனைகளுடன் ஒத்துப்போக முடியாததால் குருத்துவத்தை விட்டுவிட்டிருந்த வயதானவராயிருந்த ஒருவரோடு அவர் நட்பு கொள்ளலானார். “யெகோவாவின் சாட்சிகள் செய்து வரும் முழுமையான முழுக்குதலே முறையான ஒரே ஞானஸ்நானம்” என்று அந்த வயதானவர் ஒரு சந்தர்ப்பத்தில் அவரிடம் கூறினார்.
பல்லாண்டுகளுக்குப் பிறகு, அவரது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவராய், பியாட்ரிஸ் கடுந்துயரை ஏற்படுத்தும் ஒரு தனிப்பட்ட பிரச்சினையை எதிர்ப்பட்டார். நம்பிக்கை இழந்தவராய், அவர் கடவுளிடம் ஜெபம் செய்தார். குறிப்பாக ஓர் இரவு—டிசம்பர் 26, 1984—மணிக்கணக்கில் அவர் ஜெபம் செய்தார். மறுநாள் காலையில் கதவுமணி ஒலித்தது. எரிச்சலுடன், அவரது அபார்ட்மெண்ட் கதவிலிருந்த துவாரத்தின் வழியாக எட்டிப்பார்த்தபோது, இரண்டு பேர் பிரீஃப்கேஸுடன் நிற்பதைக் கண்டார். தொந்தரவு செய்யப்பட்டதால் நிலைகுலைந்து, தான் ஏதோ அந்த வீட்டில் வேலைக்கு இருப்பவரைப் போல், “அம்மா வீட்டில் இல்லை, நான் கதவைத் திறக்க முடியாது” என்று கதவு இடுக்கின் வழியே கூறினார். தாங்கள் அங்கிருந்து போவதற்குமுன், அந்தத் தம்பதி ஒரு கைப்பிரதியைக் கதவின்கீழ் தள்ளிவிட்டுச் சென்றனர். பியாட்ரிஸ் அதை எடுத்துப் பார்த்தார். “உங்கள் பைபிளை அறிந்துகொள்ளுங்கள்” என்று அது கூறினது. அம் முதிய முன்னாள்-மதகுருவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். சந்திக்கும்படி இப்போது வந்திருந்தவர்கள், யெகோவாவின் சாட்சிகளென்று அவர் பேசியிருந்த அந்த ஆட்களாயிருப்பார்களோ? அவர்களின் சந்திப்பு முந்தின இரவு தான் செய்திருந்த ஜெபத்தோடு தொடர்புடையதாய் இருக்குமோ? அவர் கதவைத் திறந்தார், ஆனால் அவர்களோ போய்விட்டிருந்தனர். படிக்கட்டுகளில் இறங்கிச் சென்று மேலே வரும்படி அவர்களை மீண்டும் அழைத்தார், தான் முதலில் அவ்விதம் நடந்துகொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, அவர்களை உள்ளே வரவேற்றார். உடனே ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது; சிறிது காலம் கழித்து, பியாட்ரிஸ் யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சியாக முழுக்காட்டப்பட்டார்.
தன் வாழ்நாள் முழுவதிலும் கொண்டிருந்த ஆவலைத் தான் நிறைவேற்றியிருந்ததற்காக முடிவில் மகிழ்ச்சியுற்றவராய் பியாட்ரிஸ், தங்கள் பைபிளைப் புரிந்துகொள்ளும்படி மற்றவர்களுக்கு உதவுவதில் தன் நேரத்தின் பெரும்பகுதியை இப்போது செலவழிக்கிறார்.