100 வருடங்களாக சினிமா
பிரான்ஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
சினிமா என்பது ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பின் விளைபொருள் என்பதைவிட சுமார் 75 வருடங்களாக நடத்தப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையின் விளைவு என்பதாகவே சொல்லவேண்டும். 1832-ல் பெல்ஜிய நாட்டை சேர்ந்த ஜோசஃப் ப்ளாடோவினால் கண்டுபிடிக்கப்பட்ட ஃபினகிஸ்டோஸ்கோப்பு, வெவ்வேறு அசைவுகளையுடைய தொடர்ச்சியாக வரும் சித்திரங்களை ஓடும்படமாக வெற்றிகரமாய் மாற்றியமைத்தது. பிரான்ஸில், ஜோசஃப் நையப்ஸ் மற்றும் லூயி டேகரின் முயற்சியால் 1839-க்குள்ளாக உயிர்த்தோற்றத்தை உருவப்படமாக மாற்றும் புகைப்பட செய்முறை ஒன்று சாத்தியமாயிற்று. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஏமில் ரெநாட் இந்தக் கண்டுபிடிப்பை இன்னும் விரிவாக்கினார், ஒளிபுகுபடச்சுருளை திரையில் உயிருள்ளதாய் தோன்றச் செய்தார். அதை 1892-க்கும் 1900-க்கும் இடையே லட்சக்கணக்கான ஜனங்கள் பார்த்தனர்.
சினிமாக்களின் குறிப்பிடத்தக்க எழுச்சி வெறும் 100 வருடங்களுக்கு முன்புதானே ஏற்பட்டது. 1890-ல், புகழ்பெற்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளரான தாமஸ் எடிசன், அவரது ஆங்கிலேய உதவியாளரான வில்லியம் டிக்சன் ஆகிய இருவரும் செங்குத்தாக நிற்கும் ஒரு சிறிய பியானோவின் அளவுக்கும் எடைக்கும் ஒத்த ஒரு காமராவை உருவாக்கினர். அதைப் பின்தொடர்ந்த வருடத்தில் கினிட்டோஸ்கோப்பு (kinetoscope) என்று அழைக்கப்பட்ட, ஒருவர்-பார்க்கும் கருவிக்கான காப்புரிமைக்காக எடிசன் விண்ணப்பித்தார். 35 மில்லிமீட்டர் அளவுள்ள துவாரங்களுடைய நிழற்படத்தாள்களில் பதிவு செய்யப்பட்டவையாய், திரைப்படக் காட்சிகள் நியூ ஜெர்ஸியில் இருக்கும் வெஸ்ட் ஆரஞ்சிலுள்ள ப்ளாக் மரியா என்ற உலகத்தின் முதல் திரைப்பட ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டன. இந்தப் படங்கள் பல்வேறு பல்சுவை கேளிக்கைக் காட்சி, சர்க்கஸ், கோமாளித்தன காட்சிகள் மற்றும் வெற்றிபெற்ற நியூ யார்க் நாடகங்களிலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளையும்கூட சிறப்பித்துக் காண்பித்தன. முதல் கினிட்டோஸ்கோப்பு நிலையம் 1894-ல் நியூ யார்க்கில் திறக்கப்பட்டது, அதே வருடத்தில் பல இயந்திரங்கள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
திரையின்மீது ஒளி தோன்றச் செய்வதன்பேரில் ஆரம்பத்தில் அக்கறை காண்பிக்காத எடிசன், பின்பு போட்டியை தடுப்பதற்கென்று படக்காட்சி இயந்திரம் ஒன்றைத் தயாரிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏப்ரல் 1896-ல் அவரது விடாஸ்கோப், நியூ யார்க்கில் முதலில் இயக்கப்பட்டது. பின்னர் அவர் ஆரம்பித்து வைத்த அந்தக் காப்புரிமைக்கான போட்டி, சினிமா துறையின்மீது முழுமையாகவே ஆதிக்கம் செலுத்துவதற்காக கூட்டுநிறுவனம் ஒன்று நிறுவப்படுவதில் விளைவடைந்தது.
காட்சிகளை படம்பிடிப்பதற்கும் திரையில் தோன்றச் செய்வதற்குமான ஆற்றலைப் பெற்ற, கைகளால் இயற்றப்படும் ஒரு காமராவை கண்டுபிடிக்க பிரான்ஸிலுள்ள லயான்ஸ் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்களான ஆகஸ்ட் லூமியருக்கும் லூயி லூமியருக்கும் எடிசனின் கினிட்டோஸ்கோப்பினுடைய ஒரு காபி (copy) தூண்டுதலளித்தது. அவர்களது திரைப்படக் கருவி (cinématographe) (கிரேக்கில் கினெமா [kinema] என்பது “இயங்கு நிலை” என்ற அர்த்தத்தையும் க்ராஃபன் [graphein] என்பது “படமாக்கிக் காட்டுதல்” என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது) 1895 பிப்ரவரியில் காப்புரிமையைப் பெற்றது; டிசம்பர் 28-ல் “சினிமா துறையின் உத்தியோக சம்பந்தமான உலக ப்ரீமியர் ஷோ நடைபெற்றது.” அது நடைபெற்ற இடமானது: க்ரான் கஃபே, 14 பூல்வார் டெ காபுஸின், பாரிஸ். அடுத்த நாள், பாரிஸைச் சேர்ந்த 2,000 பேர் அறிவியலின் இந்த நவீன அதிசயத்தைக் காண க்ரான்ட் கஃபேக்குத் திரண்டு வந்தனர்.
விரைவில் லூமிர் சகோதரர்கள் சினிமா தியேட்டர்களைத் திறந்து உலகம் முழுவதுமாக காமராமேன்களை அனுப்பினர். அவர்கள் சில வருடங்களுக்குள்ளாக, உலகப் புகழ்பெற்ற இடங்களின் காட்சிகளையோ ரஷ்யாவின் சார் நிக்கலஸ் II-ன் முடிசூட்டல் போன்ற சம்பவங்களையோ சார்ந்த சுமார் 1,500 திரைப்படங்களை உருவாக்கியிருந்தனர்.
ஊமை சகாப்தம்
ஜால வித்தைக்காரரும் பாரிஸ் தியேட்டரின் உரிமையாளருமான ஷார்ஷ் மேல்யெஸ், தான் பார்த்தவற்றால் கவரப்பட்டார். அவர் திரைப்படக் கருவியை வாங்க முன்வந்தார். பதில் தெளிவாகவே இவ்வாறு இருந்தது: “இல்லை, திரைப்படக் கருவி விற்பனைக்கு இல்லை. அதற்காக எனக்கு நீ நன்றி சொல்லு தம்பி; இந்தக் கண்டுபிடிப்பிற்கு எதிர்காலம் இல்லை.” எனினும், இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட கருவியை வைத்து மேல்யெஸ் துணிவுடன் படமெடுக்க துவங்கினார். விசேஷ செயல்பாடுகள் (special effects) மற்றும் திரைக்கதையுடன் மேல்யெஸ் திரைப்பட உருவாக்கத்திற்கு கலை வடிவம் கொடுத்தார். 1902-ல் அவரது திரைப்படமான லெ வ்யாயாஷ் டான் ல லூன் (சந்திரனுக்குப் பயணம்) சர்வதேச வெற்றியைப் பெற்றது. பாரிஸின் புறத்தே இருக்கும் மான்ட்ரயுலில் உள்ள அவரது ஸ்டூடியோவில் 500-க்கும் அதிகமான திரைப்படங்களை அவர் தயாரித்தார், அவற்றில் அநேகம் கைகளால் வண்ணம் தீட்டப்பட்டவை.
சுமார் 1910-குள்ளாக, உலகம் முழுவதுமாக ஏற்றுமதி செய்யப்பட்ட படங்களில் 70 சதவீதம் பிரெஞ்சு மூலத்தைக் கொண்டிருந்தன. இதன் முக்கிய காரணம், சினிமா “நாளைய தியேட்டராகவும் செய்தித்தாளாகவும் பள்ளியாகவும்” ஆக வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருந்த பாடே சகோதரர்கள் சினிமாவை தொழில்மயமாக்கியதுதான்.
1919-ல், சார்லி சாப்லின், டோக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ், டேவட் டபிள்யூ. க்ரிஃபத், மேரி பிக்ஃபர்ட் ஆகியோர், கூட்டுநிறுவனத்தின் பொருளாதார முதன்மை செல்வாக்கை தகர்ப்பதற்கு யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ்-ஐ நிறுவினர். 1915-ல், க்ரிஃபத்தினுடைய ஒரு தேசத்தின் பிறப்பு (ஆங்கிலம்) ஹாலிவுட்டின் மாபெரும் வெற்றிபெற்ற முதல் படமாக இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப்போரைப் பற்றிய அதிக வாதத்திற்குரிய இப்படம், அதன் இனப்பிரிவு சம்பந்தமான கருத்துக்களின் காரணமாக, வெளியிடப்பட்டவுடன் கலகங்களையும் சில மரணங்களையும்கூட உண்டாக்கியது. எனினும் அது மாபெரும் வெற்றிப்படமாக, பத்து கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருந்த, சரித்திரத்திலேயே மிகப் பெரிய லாபத்தைத் தேடித்தந்த படமாக இருந்தது.
முதல் உலக போருக்குப் பின்பு, திரைப்படங்கள் “நைட் கிளப்புகளையும் புறநகர் கிளப்புகளையும் சட்டவிரோதமான மதுபான விற்பனைக்கடைகளையும் இவ்விடங்களில் காணப்படும் ஒழுக்கசம்பந்தமான அற்ப காரியங்களையும் அமெரிக்கா முழுவதற்கும் அறிமுகப்படுத்தின.” அமெரிக்காவில் எந்த அயல்நாட்டுத் திரைப்படங்களும் திரையிடப்படாத அதே சமயத்தில், உலகத்தின் மற்ற இடங்களில் திரையிடப்படும் சினிமா படங்களில் 60-லிருந்து 90 சதவீதம் அமெரிக்கத் திரைப்படங்களாக இருந்தன. சினிமா துறை, அமெரிக்க வாழ்க்கை முறையையும் அமெரிக்க பொருட்களையும் மேன்மைப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. அதே சமயத்தில், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “ஸ்டார் சிஸ்டம்” ரூடால்ஃப் வாலன்டினோ, மேரி பிக்ஃப்ர்ட், டோக்ளஸ் ஃபேர்பாங்க்ஸ் போன்ற ஆட்களை உண்மையிலேயே தெய்வத்தன்மை வாய்ந்தவர்களாக ஆக்கியது.
ஒலியும் வண்ணமும்
“அம்மா, இதைக் கேளுங்களேன்!” இந்த வார்த்தைகளுடன் 1927-ல் தி ஜாஸ் சிங்கர் என்ற திரைப்படத்தில், ஆல் ஜோல்சன், ஊமைப் படங்களின் பொற்காலத்தை முடிவிற்கு கொண்டுவந்து பேசும் படங்களை உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். இணக்க ஒலிப்பதிவு தட்டுகளை (synchronized phonograph records) பயன்படுத்தி செய்யப்பட்ட பரிசோதனைகள் சினிமாவின் வெகு ஆரம்ப காலத்திலிருந்தே நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் மின் ஒலிப்பதிவு மற்றும் வால்வு ஒலிப்பெருக்கிகள் ஆகியவற்றின் வருகையோடு 1920-களில்தான் ஒலிப்பதிவு பொருள் நன்கு வளர்ச்சியடைந்தது. அதன் அறிமுகம் பிரச்சினைகளின்றி இல்லை.
சினிமாவில் கலர், முதன்முதலில் கையால் டின்ட் செய்யப்பட்ட படச்சுருள்கள் மூலம் ஆரம்பமானது. பின்பு ஸ்டென்ஸில்கள் உபயோகிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன. திறம்பெற்ற கலர்படச்சுருள் செய்முறை இல்லாததன் காரணமாக படச்சுருள்கள் டின்ட் செய்யப்பட்டன. 1935-ல் மூன்று-கலர் செய்முறையோடுகூடிய கலர்படங்களின் வெற்றி வரையாக அநேக முறைகள் பயன்படுத்தப்பட்டன. எனினும், 1939-ல் கான் வித் தி வின்ட்-ன் மாபெரும் புகழுக்குப் பின்புதான் பாக்ஸ்-ஆஃபிஸின் மிகப் பெரிய ஈர்ப்பு சக்தியாக கலர் கருதப்பட்டது.
போர்க்கால பிரச்சாரம்
1930-களில் ஏற்பட்ட பொருளாதார மந்தத்தின்போது, சினிமா “பொதுமக்களின் அபினியாக” சேவித்தது. ஆனால் உலகம் போரை நோக்கி நகர்ந்தபோது, சினிமா பணி சூழ்ச்சியும் பிரச்சாரமும் நிறைந்த ஒன்றாயிற்று. முசோலினி சினிமாவை “லார்மா ப்யூ ஃபோர்டெ” அல்லது “மிகப் பலமுள்ள ஆயுதம்” என்பதாக அழைத்தார். சினிமா, ஹிட்லரின்கீழ், முக்கியமாக இளைஞர்களுக்குள் கொள்கையைப் புகுத்துவதற்காக நாசி கட்சியின் சார்பாக பேசும் ஒன்றாக ஆனது. டெர் ட்ரியும்ஃப் டெஸ் விலன்ஸ் (மனவுறுதியின் ஜெயம்) மற்றும் ஓலும்ப்யா போன்ற திரைப்படங்கள் நாசி தலைவர்களை ஆற்றல் வாய்ந்த விதத்தில் தெய்வங்களாக்கின. மறுபட்சத்தில், யூட் ஸ்யுஸ் (Jew Süss), யூதர்களுக்கு எதிரான விரோதத்தை தூண்டிவிடக்கூடியதாக இருந்தது. பிரிட்டனில், லாரன்ஸ் ஆலிவியரின் ஹென்ரி V, ‘டி’ நாளிற்கும் (D day) அதன் விளைவாக ஏற்படவிருந்த இழப்புகளுக்கும் தயாராகும்படி மன உறுதியை பலப்படுத்தும் ஒன்றாக சேவித்தது.
நெருக்கடி
இரண்டாம் உலகப் போரைத் பின்தொடர்ந்து, தொலைக்காட்சிப் பெட்டிகள் அதிக பரவலாய் கிடைக்க ஆரம்பித்தபோது, சினிமாவிற்குச் செல்வதற்குப் பதிலாக ஜனங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டனர். ஐக்கிய மாகாணங்களில் சினிமாவிற்கு செல்பவர்களின் எண்ணிக்கை பத்து வருடங்களில் திடீரெனப் பாதியாக குறைந்தது. ஆயிரக்கணக்கான சினிமா தியேட்டர்கள் மூடப்படும்படி நிர்ப்பந்தப்படுத்தப்பட்டன; 1950-களில் அகல-திரை சினிமாக்களும் டைரக்ஷனல் ஸ்டீரியோ சௌண்டும் அறிமுகப்படுத்தப்பட்டபோதிலும் திரைப்பட தயாரிப்பு மூன்றில் ஒரு பகுதிக்கு குறைந்தது. ஸெஸில் பி. டெ மில்லியினுடைய டென் கம்மான்ட்மென்ட்ஸ் (1956) போன்ற பலகோடி டாலர்கள் செலவில் எடுக்கப்பட்ட வெற்றிப்படங்கள், இந்தப் போட்டியை முறியடிக்க முயற்சி செய்வதற்காக தயாரிக்கப்பட்டன. ஐரோப்பாவிலும் சினிமா பார்க்க செல்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது.
சமூக பாதிப்பு
சினிமா, சமூகத்தின் கண்ணாடி என்பதாக அழைக்கப்படுகிறது. மெய்யாக, 1970-களில் வெளிவந்த அநேக படங்கள், அந்தச் சமயத்தில் இருந்த “மன அமைதியின்மை, அதிருப்தி, ஏமாற்றம், கவலை, அறிவுப் பிறழ்ச்சி” ஆகியவற்றை பிரதிபலித்தன. திகில் படங்களின் மறுமலர்ச்சியும் “சாத்தானிய வழிபாட்டினிடமாகவும் மாய மந்திரத்தினிடமாக முன்னொருபோதும் இராத மோகமும்” இதைக் காண்பிக்கின்றன. அழிவுகளை காண்பித்த சினிமாக்கள் “மெய் வாழ்வின் பேரழிவுகளிலிருந்து கவனத்தை திசைதிருப்புவதாய்” இருந்தன. (உலக சினிமா—ஒரு சுருக்கமான சரித்திரப்பதிவு) மறுபட்சத்தில், “முறைகேட்டை இயல்பானதாக செய்வதற்கு தெரிந்தே எடுக்கப்பட்ட முயற்சி” என்பதாக பிரெஞ்சு பத்திரிகையாளர் ஒருவர் அழைத்த ஒன்றை 1980-கள் கண்டது. 1983-ல் கான்னஸில் நடைபெற்ற திரைப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட சினிமாக்களில் பாதி, ஒத்த பாலினத்தவர் புணர்ச்சியையோ அல்லது முறைதகாப் புணர்ச்சியையோ அவற்றின் கருப்பொருளாக கொண்டிருந்தன. வன்முறை, சமகாலத்திய படங்களின் மேலோங்கிய செய்தியாக அல்லது திரும்பத்திரும்ப வரும் கருப்பொருளாக ஆகியிருக்கிறது. 1992-ல், ஹாலிவுட் திரைப்படங்களில் 66 சதவீதம் வன்முறைக் காட்சிகளைக் கொண்டிருந்தன. கடந்த காலத்தில் வன்முறை காண்பிக்கப்பட்டதற்கு பொதுவாக ஒரு நோக்கமிருந்தபோதிலும், இப்போது அது முழுமையாகவே நியாயமில்லாததாக இருக்கிறது.
அப்படிப்பட்டவற்றை பார்ப்பதன் விளைவு என்னவாக இருந்திருக்கிறது? அக்டோபர் 1994-ல், எந்த விதமான குற்றயியல்புள்ள பின்னணியும் இல்லாத இளவயது தம்பதி பாரிஸில் ஆத்திரத்துடன் 4 பேரைக் கொன்றனர். ஒரு தம்பதி 52 பேரைக் கொல்வதாக காண்பிக்கும் திரைப்படமான நாச்சுரல் பார்ன் கில்லர்ஸ், இச்சம்பவத்துடன் நேரடியாகவே சம்பந்தப்பட்டிருந்தது. முக்கியமாக சினிமா காட்சிகளை நடத்தைக்கான மாதிரிகளாக எடுத்துக்கொள்ளும் இளைஞர்களின்மேல் வன்முறைக்கு இருக்கும் செல்வாக்கைக் குறித்து, சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் அதிகமதிகமாக கவலை தெரிவிக்கின்றனர். உண்மையில், எல்லா திரைப்படங்களும் வன்முறையையோ அல்லது ஒழுக்கக்கேட்டையோ மேன்மைப்படுத்துவதில்லை. தி லையன் கிங் போன்ற சமீபத்திய திரைப்படங்கள் சரித்திரம் படைத்துவிட்டன.
சென்ற 100 வருடங்களாக சமுதாயத்தை சினிமா எவ்வாறு பாதித்திருக்கிறது என்பதாக பாரிஸ் செய்தித்தாளான ல மான்ட் கேட்டபோது, புகழ்பெற்ற படத்தயாரிப்பாளரும் நடிகருமான ஒருவர் இவ்வாறு பதிலளித்தார்: “சினிமா, போரை மேன்மைப்படுத்தி, கொள்ளைக் கூட்டத்தாரை வீரர்களாக போற்றி, எளிமையாக்கப்பட்ட தீர்வுகளையும் உபதேசங்களையும் முன்வைத்து, பொய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி, செல்வம், உடைமைகள், சலிப்பூட்டும் சரீர அழகு ஆகியவற்றின் வணக்கத்தையும் மற்ற எட்டமுடியாததும் தகாததுமான பெருந்திரளான இலக்குகளை முன்னேற்றுவித்துள்ளபோதிலும்,” அது கோடிக்கணக்கானோருக்கு தினசரி வாழ்வின் கொடூரமான உண்மைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக இருந்திருக்கிறது.
விளக்குகள் அணைக்கப்பட்டு வெள்ளித்திரை உயிரூட்டப்படும்போது, 100 வருடங்களுக்கும் மேலாக ஜனங்களை அந்தளவுக்கு வசீகரித்திருக்கும் வித்தையை நம்மால் இன்னும் ஒருவேளை உணர முடியும்.
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
“சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடகம்”
1914-ன் முடிவிற்குள்ளாக, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, நியூ ஜீலாந்து, வட அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்த சுமார் 90 லட்சம் ஜனங்கள் உவாட்ச் டவர் சொஸைட்டியின் “சிருஷ்டிப்பின் புகைப்பட-நாடகம்” என்ற ஆங்கில அளிப்பை இலவசமாக பார்த்திருந்தனர். நான்கு பகுதிகளையுடைய எட்டு மணிநேர நிகழ்ச்சிநிரல், குரல் மற்றும் இசை ஒத்திருக்கும் இயங்கு படக்காட்சிகளையும், ஸ்லைடுகளையும் கொண்டிருந்தது. ஸ்லைடுகள், படச்சுருள்கள் ஆகிய இரண்டுமே கைகளால் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. “புகைப்பட-நாடகம், பைபிளின் பேரிலும் அதில் விவரிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய நோக்கத்தின் பேரிலும் போற்றுதலை வளர்ப்பதற்காக” வடிவமைக்கப்பட்டது. டைம்-லாப்ஸ் ஃபோடோகிராஃபி மூலம் படச்சுருளின்மீது பதிவுசெய்யப்பட்ட பூ விரியும் காட்சியும், குஞ்சு பொரிக்கும் காட்சியும் சிறப்பம்சங்களாக இருந்தன.
[பக்கம் 19-ன் படம்]
பிப்ரவரி 1895-ல் காப்புரிமை பெற்ற “லூமியர் திரைப்படக் கருவி”
[படத்திற்கான நன்றி]
© Héritiers Lumière. Collection Institut Lumière-Lyon
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
© Héritiers Lumière. Collection Institut Lumière-Lyon