கருப்பையை வெளிப்படுத்தும் ஜன்னல்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
பிறவாத குழந்தை ஒன்றினுடைய உடல்சம்பந்தமான அல்லது மனசம்பந்தமான அநேக குறைகளை அதிகரிக்கும் துல்லியத்துடன் மருத்துவர்கள் அறிந்துகொள்வதைப் பேறுகாலத்துக்கு முந்திய மேம்பட்ட பரிசோதனைகள் தற்போது சாத்தியமாக்குகின்றன. கேளாப்புற ஒலி, பனிக்குடத் துளைப்பு ஆகியவை, மிகப் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகிற உபகரணங்களில் அடங்கும்.
கேளாப்புற ஒலி என்பது கருப்பையிலுள்ள சிசுவின் பிம்பத்தைக் கம்ப்யூட்டர் உதவியால் உருவாக்குவதற்கு, கேட்க முடியாத உயர் அதிர்வெண் ஒலி அலைகளைப் பயன்படுத்தும் ஒரு செய்முறையாகும். பனிக்குடத் துளைப்பு என்பது கருப்பையினுள் சிசு மிதந்துகொண்டிருக்கும் திரவமாகிய பனிக்குடப் பாய்மத்திலிருந்து கொஞ்சத்தை ஒரு ஸிரிஞ்சின்மூலமாக எடுத்து, டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பு போன்ற குறைகள் உருப்பெற்ற கருவில் இருப்பதைக் குறிக்கும் ரசாயன அறிகுறிகள் இருக்கின்றனவா என்று பரிசோதிப்பதை உட்படுத்துகிறது.
குளத்தில் ஒரு பாறையை எறிவதுபோல, சமுதாயத்தினுள் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகையான மருத்துவ தொழில்நுட்பம், தெரிவுசெய்யப்பட்ட கருக்கலைப்புடன் கூடசேர்ந்து, மருத்துவ நெறிமுறைகளின் தண்ணீரில் சில பேரலைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. a கவலைக்குரியவிதத்தில், இந்த உலகின் மதிப்பீட்டு அமைப்புமுறை, ஒழுக்க மற்றும் நெறிமுறை பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத்தக்கதோர் நிலையான கோட்பாட்டு அடிப்படையாக இல்லை; மேலும் இது மோதியடிக்கும் அலைகளில் அங்குமிங்குமாகத் திசைமாறிச் செல்லும் தோணிகளைப் பெரிதும் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது.
தொழில்நுட்பத்தால் தூண்டுவிக்கப்பட்ட தெரிவுசெய்யப்பட்ட கருக்கலைப்பு, சில நாடுகளில் சட்ட சீர்திருத்தத்தையும் முந்திக்கொண்டு செல்கிறது. சமீபத்திய 15-வருட காலப்பகுதியின்போது ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட 13 சுற்றாய்வுகளில், பதிலளித்தவர்களில் 75 முதல் 78 சதவீதமானோர், மோசமாக குறைபட்டதாய் இருப்பதற்கு பலமான அறிகுறிகளைத் தரும் ஒரு சிசுவைக் கலைப்பதற்கான சட்டப்பூர்வமான உரிமையை கருவுற்றிருக்கும் ஒரு பெண் கொண்டிருக்க வேண்டும் என்று நம்பினர். சில நாடுகளில் ‘குறைபாடு முன்கணிக்கப்படுவதுதானே’ கருக்கலைப்பை அனுமதிப்பதற்குப் போதுமானதாக இருக்கிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில், ஒரு தாய் அவளது கருத்தரிப்பின் ஆரம்ப காலப்பகுதியில், அவளுடைய மருத்துவர் ருபெல்லா (ஜெர்மன் மணல்வாரி) நோயை கண்டறிய தவறியதற்காக அவர்மீது வழக்கு தொடுத்து வெற்றியடைந்தார். இந்த நோய், கருத்தரிப்பின் ஆரம்ப நாட்களில் தொற்றப்பட்டால், பிறவாத குழந்தையில் கடுமையான ஊனமுறுதல்களுக்கு வழிநடத்தலாம். மருத்துவர் அதை அறிய தவறியது, அந்தத் தாய் தன் சிசுவைக் கருக்கலைப்பதற்கான வாய்ப்பை இழக்கச் செய்ததாக அவள் வாதாடினாள்.
இந்த வழக்கின் சட்டப்பூர்வமானதும் நெறிமுறை சார்ந்ததுமான கிளை அம்சங்களைப்பற்றி குறிப்புத் தெரிவிப்பவராய், ஏப்ரல் 1995-னுடைய க்வீன்ஸ்லாந்தின் சட்ட சமுதாய பத்திரிகையில் (ஆங்கிலம்) ஒரு கட்டுரையில் சட்ட ஆய்வாளர் ஜெனிஃபர் ஃபிட்ஸ்ஜெரல்ட் சொன்னார்: “அவள் [கருத்தரித்திருக்கும் ஒரு பெண்], ‘எனக்கு ஒரு பிள்ளை வேண்டுமா?’ என்று தீர்மானிப்பது மட்டுமல்ல, ‘எப்படிப்பட்ட பிள்ளை எனக்கு வேண்டும்?’ என்றும் அவள் தீர்மானிக்க வேண்டும்.” ஆனால், ஃபிட்ஸ்ஜெரல்ட் கேட்கிறார், எந்தக் குறைபாடு, சட்டப்பூர்வ கருக்கலைப்பிற்குப் போதுமான அடிப்படையை அளிக்கிறது? “பிளவுபட்ட உதடு, அண்ணப்பிளவு, மாறுகண், டௌன்ஸ் நோய்க் குறித்தொகுப்பு, முதுகெலும்புப் பிளவு ஆகியவையா?” உலகின் சில பாகங்களில், பிள்ளையின் பாலினம், முக்கியமாக அது பெண்ணாக இருந்தால்!
கருப்பையிலேயே ‘தீண்டத்தகாதவர்களா’?
அறிவியலாளர்களுக்கு முன்பாக மனித மரபணுத் தொகுதி படிப்படியாகத் திறக்கப்பட்டு, கருப்பையைக் காணும் ஜன்னல், இறுதியில் கருப்பையைக் காணும் நுண்ணோக்கியாகும்போது, பிறவாத குழந்தையின் நிலை என்னவாகும்? குறைந்தளவு குறைபாடுகளுள்ளவை நீக்கப்படுவதற்காகத் தெரிவு செய்யப்படுமா? உண்மையில், சமீபத்திய பத்தாண்டுகளின் போக்கு, குறைந்தளவு கருக்கலைப்புகளிடமாக அல்ல, அதிகளவு கருக்கலைப்புகளிடமாகவே போய்க்கொண்டிருக்கிறது. உயர்ந்தெழும்பும் இந்த அலைபோன்ற எழுச்சியையும் அதன் விளைவாக நுரைபோன்று திரண்டுள்ள வழக்குகளையும்—முன்னர் குறிப்பிடப்பட்ட வழக்கைப் போன்றதை—எதிர்ப்படுகிறவர்களாய் மருத்துவர்கள் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். புரிந்துகொள்ளத்தக்க விதமாகவே, தாய் மற்றும் பிள்ளையை அவ்வளவாய் கருத்தில்கொள்ளாமல் தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் குறிப்பிட்ட பரிசோதனைகளைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளுதல் என்பதுபோன்ற இன்னுமதிகமான பாதுகாப்பு அணுகுமுறையை மருத்துவத்திடமாக மேற்கொள்ளும்படி இது அவர்களை வற்புறுத்தக்கூடும். ஃபிட்ஸ்ஜெரல்ட் எழுதுகிறார், அதன் விளைவாக, “பேறுகாலத்துக்கு முந்தின பரிசோதனைகளின் எண்ணிக்கையும், அதன் காரணமாக தெரிவுசெய்யப்பட்ட கருக்கலைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.” “ ‘தீண்டத்தகாதவர்கள்,’ ‘தள்ளிக்கழிக்கப்படுகிறவர்களாக’ ஆகும் சாதி அமைப்புமுறையை ஒத்த ஒன்றையே” இது அறிமுகப்படுத்தும் என்று அவர் மேலுமாகக் கூறுகிறார்.
ஒரு தாய்க்கு, அவள் அந்தக் கருவைக் கலைப்பதற்காக எல்லா வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தும்—உற்சாகமளிக்கப்பட்டிருந்தும்கூட—அவள் ஓர் ஊனமுற்ற பிள்ளையைப் பெற்றெடுத்தால் அப்போது என்ன? “பெற்றோர்கள் தங்கள் ஊனமுள்ள பிள்ளைகளின் தேவைகளைக் கவனிப்பதற்கு ஆதரவை எதிர்பார்க்க முடியாது, ஏனென்றால் அந்தப் பிள்ளையைக் கருக்கலைப்பதற்கான வாய்ப்பிருந்தபோதிலும் அவர்கள்தாமே அதைக் கொண்டிருக்கும்படி தெரிவு செய்தனர் என்று அவர்களிடம் சொல்லப்படும் காலம் ஒருவேளை வரும்,” என்று ஃபிட்ஸ்ஜெரல்ட் சொல்லுகிறார்.
தெரிவுசெய்யப்பட்ட கருக்கலைப்பானது நம் சமுதாயங்களிலுள்ள ஊனமுற்றோருக்கு என்ன செய்தியைக் கொடுக்கும் என்பதையும் கவனிக்க தவறக்கூடாது. குறைகளின் காரணமாக ஒரு சமுதாயம், பிறவா குழந்தைகளைத் தள்ளிக்கழித்துவிடுகிறதென்றால், அது ஊனமுற்றவர்களை, தாங்கள் மற்றவர்கள்மீது அதிகப்படியாக ஒரு பாரம் என்பதுபோல உணர வைக்குமா? ஏற்கெனவே அவர்கள் தங்களைக் குறித்து வைத்திருக்கக்கூடிய எதிர்மறையான கருத்தைச் சமாளிப்பதை இது அதிக கடினமானதாக்குமா?
ஓர் உற்பத்தி இயக்க தொடர்வரிசையில் குறையுள்ள பாகங்களைக் கழித்துவிடுவது போல நவீன சமுதாயம் பிறவா குழந்தைகளைக் கழித்துவிடுவது, இந்தப் பொல்லாத உலகின் “கடைசிநாட்களில்” வாழும் மக்களைப் பற்றி பைபிள் விவரிக்கும் ஆளுமை சித்தரிப்புக்குப் பொருந்துகிறது. பெருமளவில், மக்கள் ‘சுபாவ அன்பில்லாதவர்களாய்’ இருப்பார்கள் என்று அது முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1-5) ‘சுபாவ அன்பில்லாதவர்களாய் இருத்தல்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையாகிய அஸ்டர்காய் (aʹstor·goi ), ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் வைத்திருக்கும் அன்பு போன்றதான குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் கொண்டிருக்கும் இயல்பான பிணைப்பைக் குறிக்கிறது.
“பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிற” இந்த உலகின் குறிக்கோளற்ற மக்கள், நிச்சயமாகவே நம்பகமான கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றுகிறவர்களிலிருந்து தனித்து வேறுபட்டவர்களாக முரண்பட்டு நிற்கிறார்கள். (எபேசியர் 4:14) ஆத்துமாவுக்கு நங்கூரம்போல, புயல்மிக்க கடல்களில் பைபிள் நம்மை ஒழுக்கப்பூர்வமாக உறுதியாகவும் நிலையாகவும் வைத்துக்கொள்கிறது. (எபிரெயர் 6:19-ஐ ஒப்பிடுக.) இதன் காரணமாக, மிகுந்த குறைபாடுள்ள ஒரு கரு அல்லது சிசுவை ஒரு பெண் இயல்பாகவே வெளியேற்றக்கூடும் என்பதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறபோதிலும், ஒரு குழந்தையை வைத்துக்கொள்வதற்கு அது போதுமான ஆரோக்கியம் உடையதாய் இருக்கிறதா என்பதைக் காண கருப்பையினுள் உற்றுநோக்கும் வெறும் அந்த எண்ணம்தானே, அவர்களுக்கு முற்றிலும் ஒவ்வாததாக இருக்கிறது. b—யாத்திராகமம் 21:22, 23-ஐ ஒப்பிடுக.
உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கான ஒரு கிறிஸ்தவனின் தீர்மானத்தைப் பலப்படுத்துவது, ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாமலிருக்கும்’ ஒரு காலத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியாகும். (ஏசாயா 33:24; 35:5, 6) ஆம், ஊனமுற்றவர்களுக்கு தற்போது கஷ்டங்கள் இருக்கிறபோதிலும் அவர்களைக் கவனிக்கிறவர்கள் தியாகங்களைச் செய்யவேண்டி இருக்கிறபோதிலும், “உண்மையான கடவுளுக்குப் பயந்திருப்பவர்களுக்கு அது நன்மையான பயனில் விளையும்.”—பிரசங்கி 8:12, NW.
[அடிக்குறிப்புகள்]
a தெரிவுசெய்யப்பட்ட கருக்கலைப்பு என்பது பெற்றோர் (அல்லது பெற்றோர்கள்) விரும்பிய தனிப்பண்புகளை ஒரு சிசு கொண்டிராததால் அதைக் கலைக்கிற பழக்கமாகும்.
b பிறவாத ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்டறிவதற்காக ஒரு கிறிஸ்தவர் பரிசோதனைகளை மேற்கொள்வது சரியற்றது என்பதை நிச்சயமாகவே இது அர்த்தப்படுத்துவதில்லை. ஒரு மருத்துவர் அத்தகைய ஒரு நடவடிக்கையை ஏன் பரிந்துரை செய்வார் என்பதற்கு வேதப்பூர்வமாக ஏற்கத்தக்க பல மருத்துவ காரணங்கள் இருக்கக்கூடும். என்றபோதிலும், சில பரிசோதனைகள் குழந்தைக்கு ஆபத்துக்களை உட்படுத்தலாம்; ஆகவே இவற்றைக் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுவது ஞானமானதாக இருக்கும். அப்படிப்பட்ட பரிசோதனைகளுக்குப்பின், அந்தக் குழந்தை கடுமையான குறைகளைக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டால், சில நாடுகளிலுள்ள கிறிஸ்தவ பெற்றோர்கள், அந்தக் குழந்தையைக் கருக்கலைப்புச் செய்யும்படியான அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். ஆகவே, பைபிள் நியமங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்க தயாரானவர்களாக இருப்பது ஞானமான காரியமாக இருக்கும்.