உலகை கவனித்தல்
2,123 மொழிகளில் பரிசுத்த வேதாகமம்
வெட்டரௌவர் ட்ஸைட்டுங் அறிக்கை செய்ததன்படி, பரிசுத்த வேதாகமம் 2,100-க்கும் மேலான மொழிகளில் கிடைக்கிறது என்பதாக ஜெர்மன் பைபிள் சொஸைட்டியின் செய்தித்தொடர்பு செயலராகப் பணியாற்றும் ஹானா கிகல்-ஆண்ட்ரா சமீபத்தில் அறிவித்தது. மனிதகுலம் சுமார் 6,000 மொழிகளையும் கிளைமொழிகளையும் பேசுகிறது என்பதாக மதிப்பீடு செய்யப்படுகிறது. பேசப்படும் அனைத்து மொழிகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேல் குறைந்தபட்சம், கடவுளுடைய வார்த்தையின் சில பகுதிகளாவது, கிடைக்கிறது என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. பீபல்ரிப்போர்ட் பத்திரிகை கூறுவதன்படி, முழு பைபிளும் இப்போது 349 மொழிகளில் பிரசுரிக்கப்படுகிறது. “புதிய ஏற்பாடு” கூடுதலான 841 மொழிகளிலும், பைபிளின் பிற பகுதிகள் 933 மொழிகளிலும், ஆக மொத்தம் 2,123 மொழிகளில் கிடைக்கின்றன. மொழிபெயர்ப்பு குழுக்கள் பலவற்றுக்கு, ‘புதிய ஏற்பாட்டை’ மொழிபெயர்க்க சுமார் நான்கு ஆண்டுகளும் ‘பழைய ஏற்பாட்டை’ மொழிபெயர்க்க சுமார் எட்டு ஆண்டுகளும் தேவைப்படுகின்றன. 600 பிற மொழிபெயர்ப்புத் திட்டங்களுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நச்சுள்ள திமிங்கிலம்
டென்மார்க்கின் வடக்குக் கடற்கரைப் பகுதிக்கு அப்பால் உள்ள சுறுசுறுப்பான கடல் மார்க்கங்களில் செத்துக்கிடந்த ஒரு ஸ்பெர்ம் திமிங்கிலம், “அதன் குடலில் அவ்வளவு பாதரசத்தையும் காட்மியத்தையும் உடையதாய் இருந்ததால் ஆபத்தை விளைவிக்கும் கழிவுப்பொருட்களுக்கான ஒரு பிரத்தியேக நிலத்தில் புதைக்க வேண்டியதாயிருந்தது” என்பதாக இன்டர்நேஷனல் ஹெரல்ட் டிரிப்யூன் செய்தித்தாள் கூறுகிறது. இந்த நச்சுத்தன்மையுடைய உலோகங்கள் எங்கிருந்து வந்தன என்பது இன்னும் அறியப்படவில்லை. இதே நிகழ்ச்சியைப் பற்றிப் பேசுகையில், கடல்கள் தூய்மைக்கேடு அடைந்திருப்பதற்கு ஒரு தெளிவான அடையாளமாய் இதைச் சிலர் கருதுகையில், இயற்கைக் காரணங்களின் சாத்தியத்தை விலங்கியலார்கள் குறிப்பிடுகின்றனர் என்று டைம் பத்திரிகை கூடுதலாகச் சொல்கிறது. இயற்கையாகவே அதிகளவு காட்மியத்தைக் கொண்ட கடல் சிலந்திகளை ஸ்பெர்ம் திமிங்கிலங்கள் உணவாகக் கொள்வதை கோபன்ஹேகன் ஸுவாலாஜிகல் மியூஸியத்தைச் சேர்ந்த திமிங்கில ஆய்வாளர் கார்ல் கின்ஸா குறிப்பிட்டுக் காட்டுகிறார்.
சூதாட்டத்தின் துயரார்ந்த விலை
ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சௌத் வேல்ஸில், சூதாட்டத்தின் விளைவுகள் சம்பந்தமான அதிர்ச்சியூட்டும் சில புள்ளி விவரங்களை அரசாங்க ஆதரவால் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு காட்டியது. தி சன்டே டெலிகிராஃப்-ன்படி, சுற்றாய்வு நடத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தினர், தாங்கள் வாரந்தோறும் சூதாடுவதாகக் கூறினர். அவர்களில், 10-ல் 2 பேருக்கு மேற்பட்டவர்கள் அப் பழக்கத்தின் காரணமாக ஒரு வாரத்தில் 100 டாலருக்கு மேல் பணம் செலவழிப்பதை ஒத்துக்கொண்டனர். “இயந்திரங்களின் மூலமாக சூதாடுவதையோ, பிற பந்தயத்தின் மூலமாக சூதாடுவதையோ தெரிவு செய்யும் இளம் தனி ஆண்களே” பெரும்பாலும் சூதாட்டப் பிரச்சினையை வளர்க்கும் தொகுதி. அதிக ஆபத்தான பிற தொகுதிகள், “ஓர் ஆண்டுக்கு 20,000 டாலருக்கும் குறைவாக சம்பாதிக்கும் மக்களையும், ஓய்வு பெற்ற அல்லது வேலையில்லாமல் இருந்தவர்களையும் உள்ளடக்கின.” மேலுமாக, “NSW [நியூ சௌத் வேல்ஸ்]-ஐச் சேர்ந்த கிட்டத்தட்ட 15 சதவீத குடும்பங்கள் மிதமிஞ்சி சூதாடுவதனால் ஏற்படும் சிரமங்களை அனுபவித்துள்ளன” என்று அந்தச் சுற்றாய்வு காட்டியது. அதோடு, “உற்பத்தி வீத இழப்பு, நொடிப்பு மற்றும் மணவிலக்கு ஆகியவற்றில் இழக்கப்படும் பணத்தின் மூலம், சூதாட்டத்துக்கு அடிமைப்படுவோர், NSW-க்கு ஓர் ஆண்டில் 5 கோடி டாலர் செலவு வைக்கின்றனர்” என்று மதிப்பிடப்படுகிறது.
கத்தோலிக்க தீண்டத்தகாதோர்?
இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக, தீண்டத்தகாதோர் என்று அழைக்கப்படும் பலர், இந்து மதத்தினுடைய ஜாதி வேறுபாட்டிலிருந்து தப்பிக்கும் நம்பிக்கையோடு, கத்தோலிக்கராய் மதம் மாறியிருக்கின்றனர். “ஆனால், தாழ்ந்த-ஜாதி வகுப்பிலிருந்து அவர்கள் தப்ப முடிந்திருப்பதை அது அர்த்தப்படுத்தவில்லை” என்று பாரிஸ் செய்தித்தாளான ல மாண்ட் கூறுகிறது. உயர்ந்த-ஜாதி இந்திய கத்தோலிக்கர்கள் தாழ்ந்த-ஜாதி கத்தோலிக்கரை தீண்டத்தகாதோரைப் போலவே தொடர்ந்து நடத்தியுள்ளனர். “இதன் விளைவாக, தாழ்ந்த மற்றும் உயர்ந்த-ஜாதி கத்தோலிக்கர்கள் ஜெபிப்பதற்காக சர்ச்சுக்குச் செல்லுகையில், தனித்தனி பகுதிகளிலுள்ள இருக்கைகளில் உட்காருகின்றனர்” என்று ல மாண்ட் கூறுகிறது.
போலிப் பட்டங்கள்
ஐக்கிய மாகாணங்களில், “உணவூட்டவியலார்,” “மருத்துவர்,” “உணவியலார்” என்ற பட்டங்கள் தாங்களாகவே கூறிக்கொள்ளும் தகுதி பெறாதவர்களால் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி டயட் அண்ட் நியூட்ரிஷன் லெட்டர்-ன்படி, பல மாநிலங்களில் கல்விப் பயிற்சி என்னவாயிருந்தாலும் எந்தவொரு நபரும், சட்டத்தின் வரம்புக்குட்பட்ட உரிமையைக் குறித்து பயமில்லாமல் ஓர் உணவூட்டவியலாராக உரிமைபாராட்டிக்கொள்ளக்கூடும்.” சமீபத்தில், ஆய்வாளர்கள் 32 மாநிலங்களிலுள்ள டெலிஃபோன் டைரக்டரிகளைச் சோதித்தபோது, “ ‘உணவூட்டவியலார்கள்,’ ‘மருத்துவர்கள்’ என்ற தலைப்பின் கீழிருந்த பட்டியலில் தொழில் வல்லுநராய் அழைக்கப்படுபவர்களில் பாதிப் பேருக்கும் குறைவானவர்களே, உணவூட்ட தகவலை பிழையில்லாமலும் விஞ்ஞான அடிப்படையிலும் அளிக்க முடிந்ததை” கண்டறிந்தனர். எல்லோ பேஜ்களில் (வணிக தொலைபேசி பட்டியல்), பட்டியலிடப்பட்ட “பி.எச்.டி” உணவூட்டவியலார்களில், சுமார் 70 சதவீதத்தினர் போலிப் பட்டங்களை வைத்திருந்ததாக அல்லது தவறான தகவலை அளித்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
பிள்ளை செல்வாக்கு
“பிரேஸிலைச் சேர்ந்த சிறார்கள் வீட்டில் அதிகாரம் செலுத்துபவர்களாய், தங்கள் பெற்றோருடைய தீர்மானங்களின்மீது செல்வாக்கு செலுத்தி, கிட்டத்தட்ட 5,000 கோடி டாலரை (ஐ.மா.) ஓர் ஆண்டில் செலவழிக்கின்றனர்,” என்று வேஸா பத்திரிகை அறிக்கை செய்கிறது. “பெரியவர்கள் பிற வேலைகளில் மூழ்கியிருப்பதால், சிறார்கள் தாங்களாகவே டிவி நிகழ்ச்சிகளை தெரிவு செய்கின்றனர். தகப்பனின் அல்லது தாயின் மேற்பார்வையின்றி பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்படும் கேம்ப்புகளில் இருக்கும்படி அவர்கள் செல்கின்றனர். . . . பார்ட்டிகளில் தனியே விட்டுவிடப்படுகின்றனர், மேலும் நண்பர்களின் வீட்டிலேயே தங்கிவிடுகின்றனர்.” “முன்னாளைய சந்ததியைச் சேர்ந்த சிறார்களைவிட குறைந்தளவு கீழ்ப்படிதலைக் காட்டுபவர்களாய் இருந்தாலும், தன்னம்பிக்கையுள்ள மற்றும் சுயேச்சையாக செயல்படும் சிறார்களையே இன்று பல பெற்றோர் விரும்புகின்றனர்.” ஆனால், மன-நலத் துறையில் தொழில் வல்லுநரான ஆல்பெர்ட்டூ பரேயிரா லீமா ஃபில்யோ கூறுவதன்படி, “கல்வியாளர்களாயிருக்க வேண்டிய தங்களது பொறுப்பை விட்டுவிடுகையில், [பெற்றோர்] தங்களுடைய பிள்ளைகளுக்காக தெளிவான கட்டுப்பாடுகளை வைக்க முடியாது.” “40 சதவீத பிள்ளைகள், தங்கள் பெற்றோரை உயர்வாய் எண்ணுவதைவிட, கால்பந்து விளையாட்டு வீரர்களை உயர்வாய் எண்ணுகின்றனர்” என்று ஓர் ஆய்வு காட்டுவது ஆச்சரியப்படுவதற்கில்லை.
பில்லி சூனியம் அரசு அங்கீகாரத்தைப் பெறுகிறது
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின், ‘பில்லி சூனிய பழக்கத்துக்கு’ “அதிகாரப்பூர்வ அங்கீகாரம்” வழங்கியிருக்கிறது என்பதாக தி கார்டியன் அறிக்கை செய்கிறது. அச் செய்தித்தாளின்படி, எந்தவொரு அரசாங்கமும் ஓர் ‘ஆப்பிரிக்க பாரம்பரிய மதத்துக்கு’ அதிகாரப்பூர்வ தகுநிலை அளித்திருப்பது இதுவே முதல் தடவை.’ அப்படிப்பட்ட அங்கீகாரம், பில்லி சூனியப் பழக்கம் உடையவர்களுக்கு, வணக்கத்துக்காகவும், கண்காணா ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காகவும் கோயில்களைக் கட்டுவதற்கு ஒரு சட்டப்பூர்வமான உரிமை இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. பெனினைச் சேர்ந்த மக்களில் 70 சதவீதத்தினருக்கு பில்லி சூனியப் பழக்கம் இருப்பதாய் மதிப்பீடு செய்யப்படுகிறது.
செலவு பிடிக்கும் போர்க்கருவி ஒழிப்பு
“1985-க்கும் 1994-க்கும் இடையே ராணுவ செலவுகள் உலகளவில், ‘வெறுமனே’ 80,000 கோடி ஐ.மா. டாலர்களாக, சுமார் 30 சதவீதம் குறைந்தது” என்று ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வுண்மைகளை, கன்வெர்ஷன் சர்வே 1996 என்று தலைப்பிடப்பட்ட அதன் முதல் வருடாந்தர புத்தகத்தில் பான் இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் கன்வெர்ஷன் (BICC) பிரசுரித்தது. 151 நாடுகளில், 82 நாடுகள் அவற்றின் ராணுவ செலவைக் குறைத்திருக்கின்றன; அதே சமயத்தில் 60 நாடுகள் அதை அதிகரித்திருக்கின்றன. ஃபோகஸ் என்ற ஜெர்மானிய பத்திரிகையின்படி, “ ‘சமாதான ஈவுத்தொகை’-க்கான நம்பிக்கை; அதாவது, நூற்றுக்கோடிக்கணக்கான டாலர்களை வளர்முக நாடுகளின் வளர்ச்சிக்கென்றும், சமூக திட்டங்களுக்கென்றும் மறுவிநியோகம் செய்வதற்கான நம்பிக்கை நிறைவேறாதிருக்கிறது.” BICC நிபுணர்கள் இவ்வாறு கூறினர்: “ராணுவ கருவிகளின் குறைப்பு, ராணுவ படைபலப் பகுதிகளில் மிச்சப்படுத்திய பணத்தை ஈடுசெய்யும் அளவுக்கு செலவுபிடிப்பதாய் இருந்திருக்கிறது.”
பாத்திரம் துடைக்கும் துணிகள் உங்களை நோயுறச் செய்யலாம்
பாத்திரம் துடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட துணிகளிலும் சமையலறையில் பயன்படுத்தப்பட்ட தேய்ப்புப்பஞ்சுகளிலும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் குறிப்பிடத்தகுந்த அளவில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். யூசி பார்க்லீ வெல்நெஸ் லெட்டர்-ன்படி, பரிசோதிக்கப்பட்ட 500 ஈரத்துணிகள் மற்றும் தேய்ப்புப்பஞ்சுகளில் “மூன்றில் இரு பங்கு, மக்களை நோயுறச் செய்யும் பாக்டீரியாவைக் கொண்டிருந்தது” என்று ஒரு சமீபத்திய ஆய்வு காட்டியது. ஐக்கிய மாகாணங்களில், சுமார் நான்கில் ஒரு பங்கு துணிகள் மற்றும் தேய்ப்புப்பஞ்சுகளில் “உணவால் கடத்தப்படும் நோய்களை ஏற்படுத்தும் இரு முக்கிய பாக்டீரியாக்களான சால்மனெல்லா அல்லது ஸ்டாஃபிலோகாகஸ் அடங்கியிருந்தன.” தேய்ப்புப்பஞ்சுகள் ஒழுங்காக மாற்றப்படுமாறும், பாத்திரம் துடைக்கும் துணிகள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுமாறும் நிபுணர்கள் சிபாரிசு செய்கின்றனர். “பாத்திரம் துடைக்கும் துணிகளையும் தேய்ப்புப்பஞ்சுகளையும், அழுக்குப் பாத்திரங்களோடு டிஷ் வாஷரிலோ, அல்லது வாஷிங் மெஷினிலோ நீங்கள் போடலாம்” என்று வெல்நெஸ் லெட்டர் கூறுகிறது. சமைக்கப்படாத இறைச்சியைத் தொட நேரிட்டதற்குப் பிறகு, மறுபடியுமாக பயன்படுத்தப்படும் துணிகள் அல்லது தேய்ப்புப் பஞ்சுகளுக்குப் பதிலாக பேப்பர் துண்டுகளால் மேற்பரப்புகள் சுத்தம் செய்யப்படலாம்.
திறந்த இருதய வீடியோ அறுவை சிகிச்சை
பாரிஸிலுள்ள ஒரு மருத்துவமனை, 30 வயதான ஒரு பெண்ணுக்கு திறந்த இருதய வீடியோ அறுவை சிகிச்சையை சர்வதேச அளவில் முதலாவது முறையாக சமீபத்தில் செய்தது என்பதாக பாரிஸின் செய்தித்தாளான ல மாண்ட் அறிக்கை செய்தது. வழக்கமான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு, மார்பு எலும்புக்கு (sternum) இணையாக மார்புக் கூட்டில் (thoracic cage) சுமார் 20 சென்டிமீட்டர் திறப்பு தேவைப்படுகிறது. என்றபோதிலும், இப் புதிய முறைக்கு, நான்கு சென்டிமீட்டர் வெட்டுதான் தேவை; அதே சமயத்தில், அறுவை மருத்துவருக்கு வழிநடத்தும் தகவலளிக்கும் வகையில் ஒரு ஃபைபர்-ஆப்டிக் காமிராவைச் செலுத்த மற்றொரு சிறிய துளை அனுமதிக்கிறது. இந்த அறுவை மருத்துவ முறையில், இரத்த இழப்பு, அறுவைக்குப் பின் ஏற்படும் மனச்சோர்வு, நோய்த்தொற்றின் அபாயம் ஆகியவை கணிசமான அளவில் குறைக்கப்பட்டன. அந் நோயாளி அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெறுமனே 12 நாட்களில் ஆஸ்பத்திரியை விட்டு வெளியேற முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் சுமார் பத்து லட்சம் பேர் வழக்கமான முறையில் திறந்த இருதய அறுவை சிகிச்சைக்குள்ளாகின்றனர்.
காச நோய் கொள்ளைநோய்
“உலக ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு TB-யால் [காச நோய்] தொற்றப்பட்டிருக்கிறது,” மேலும் அந்நோய் இப் பத்தாண்டில் மூன்று கோடி பேரைக் கொல்லவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது, என்று லண்டனின் தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. பெயரிடப்பட்டுள்ளபடி, இப் புதிய கொள்ளைநோய், மிகவும் அதிகளவில் பரவலாய் இருக்கும் என்றும், எய்ட்ஸ்-ஐக் காட்டிலும் அழிவுக்கேதுவானதாய் இருக்கும் என்றும், அடுத்த பத்தாண்டுகளில் 30 கோடி பேரைத் தொற்றவிருப்பதாய்த் தோன்றுகிறது என்றும் உலக சுகாதார நிறுவனம் அழுத்திக் காட்டுகிறது. நீள நுண்ணுயிரிகள் (bacilli) காற்று மூலம் பரவுபவை என்ற உண்மையானது, TB மிக அதிக தொற்றுத்தன்மை உடையது என்பதை அர்த்தப்படுத்துகிறது. TB ஏற்கெனவே ரஷ்யாவின் சில பகுதிகளில் தொற்றுநோயாய் இருக்கிறது. TB நோயாளிகள் பலர், தாங்கள் ஆறு மாதமாய்த் தொடர்ச்சியாக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளெடுக்க வேண்டியதை முடித்திராதிருப்பதால் மருந்தை எதிர்க்கும் வகையான நீள நுண்ணுயிரிகள் தோன்றியுள்ளன என்று பிரிட்டிஷ் மருத்துவ நிவாரண ஏஜென்ஸி ஒன்று அறிக்கை செய்கிறது. இதன் விளைவாக, நீள நுண்ணுயிரிகள் நோய் எதிர்ப்புத் திறனை உண்டாக்கி, தப்பிப்பிழைக்கின்றன.