பலர் கடனில் மூழ்கக் காரணம்
மைக்கேலும் ரீனாவும் தேன்நிலவுக்கு சென்ற இடத்திற்கே திரும்ப சென்று அவர்களது முதல் திருமண ஆண்டை கொண்டாடினார்கள். ஆனால் இரண்டாம் ஆண்டின் துவக்கத்தில் ஒரு கசப்பான நிஜத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. எவ்வளவுதான் சிக்கனமாக இருந்தாலும் எல்லா கடனையும் அடைக்க முடியாமல் அவர்கள் திண்டாடினார்கள்.
இதோ மற்றொரு தம்பதி. ராபர்ட், ராண்டாவை கல்யாணம் செய்தபோது, கல்வி பெற அவர் வாங்கிய கடனில் இன்னும் கொஞ்சம் பாக்கி அடைப்பதற்கு இருந்தது; ராண்டா தன்னுடைய காருக்கான தவணைகளைச் செலுத்தவேண்டியிருந்தது. ராபர்ட் சொல்கிறார்: “நாங்கள் முழுநேரம் வேலைசெய்து, இருவருமாக மாதத்திற்கு $2,950 சம்பாதித்தோம். ஆனால் அவ்வளவாக ஒன்றும் எங்களால் முன்னேற முடியவில்லை.” ராண்டா குறிப்பிடுகிறார்: “நாங்கள் ஒன்றும் அதிகமான பொருட்களையும் வாங்கவில்லை அதேசமயம் வீண்செலவும் செய்யவில்லை. அப்படியிருந்தும் காசு எங்குதான் போனதோ எனக்குப் புரியவில்லை.”
ராபர்ட்டும் ராண்டாவும் சோம்பேரிகள் அல்ல. அதேபோல் மைக்கேலும் ரீனாவும்கூட சோம்பேரிகள் அல்ல. அப்படியென்றால் அவர்களது பிரச்சினைதான் என்ன? அதுதான் கிரெடிட் கார்டு கடன். கல்யாணமான முதல் வருடத்திற்குள் மைக்கேலும் ரீனாவும் தங்களுடைய கிரெடிட் கார்டுகளில் $14,000 கடன் பாக்கி கொடுக்கவேண்டியிருந்தது. கல்யாணமான இரண்டு வருடங்களுக்குப்பின் ராபர்ட், ராண்டாவின் கார்டுகளில் கடன் தொகை $6,000-ஆக இருந்தது.
நடுத்தர வயதுள்ள ஒரு குடும்பஸ்தர்தான் ஆன்டனி, அவரும்கூட தன் வாழ்க்கையில் பண நெருக்கடிகளை எதிர்ப்பட்டார். இருப்பினும் அவரது பிரச்சினை கிரெடிட் கார்டோடு தொடர்புடையது அல்ல. 1993-ல் அவர் வேலைசெய்துகொண்டிருந்த கம்பெனி, சிறிய அளவில் உற்பத்தி செய்ததால், வருடத்திற்கு $48,000 சம்பளம் அளித்த தன்னுடைய மானேஜர் பதவியை அவர் இழந்தார். அதற்குப்பின் நான்குபேர் அடங்கிய தன் குடும்பத்தைப் பராமரிப்பது அவருக்குப் பெரும்பாடாக ஆனது. அதேபோல், நியூ யார்க் நகரில் ஒற்றை பெற்றோராக வாழ்ந்து வரும் ஜனட் என்பவரும் சுமார் $11,000-ஐ வருடாந்தர வருமானமாய் வைத்து வயிற்றை கழுவ திணறிக்கொண்டிருக்கிறார்.
பணத்தைச் சரியாக நிர்வகித்தாலேபோதும் அநேக பணப் பிரச்சினைகளைக் குறைத்துவிடலாம் என்பது சரிதான், ஆனால் உண்மை என்னவென்றால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இக் காலத்தில், பலர் “தங்கள் வீணான சிந்தையிலே” நடப்பதால் கஷ்டத்தில் மாட்டி தவிக்கிறார்கள். (எபேசியர் 4:17) தி லைஃப்டைம் புக் ஆஃப் மணி மானேஜ்மென்ட் என்ற தன்னுடைய புத்தகத்தில் கிரேஸ் டபிள்யூ. வின்ஸ்டைன் குறிப்பிடுகிறார்: “பணம் ஈட்டும் பல விதிமுறைகள் முற்றிலும் தலைகீழாக மாறிவிட்டன, அதற்கு காரணம், முன்னுரைக்க முடியாத பொருளாதாரமும், செலவு செய்வதிலும் சேமிப்பதிலும் எழுந்துள்ள புதிய மனப்பான்மைகளும், மாறிவரும் வாழ்க்கை பாணிகளுமே ஆகும்.” நாம் வாழ்ந்துவரும் தலைகீழான இந்த உலகில், சொந்த மற்றும் குடும்ப வரவு செலவுகளைச் சமாளிப்பது என்பது மேலும் மேலும் கஷ்டமாவதை அதிகமதிகமான ஆட்கள் உணருகிறார்கள்.
மகிழ்ச்சி தரும் செய்தி என்னவென்றால், மைக்கேல், ரீனா, ராபர்ட், ராண்டா, ஆன்டனி, ஜனட் ஆகியோர் தங்களது வரவுசெலவை இப்போது வெற்றிகரமாகச் சமாளிக்கிறார்கள். அவர்களுக்கு எது உதவியது என்று சிந்திப்பதற்கு சற்று முன், பணப் பிரச்சினைகளை அதிகரித்த அந்த ரெடிமேடு பணத்தை—அதாங்க கிரெடிட் கார்டுகளைப் பற்றி கொஞ்சம் ஆராயலாம்.