பேராசையில்லாத ஓர் உலகம்
“மனித சிந்தனையில் உலகளாவிய புரட்சி ஏற்பட்டாலேயொழிய மனிதவர்க்கம் மேம்படுவதற்கு வாய்ப்பே இல்லை; மேலும் நம் உலகம் எதிர்ப்படவிருக்கும் ஆபத்தை . . . தடுக்கவே முடியாது.”—வாட்ஸ்லாஃப் ஹாஃபல், செக் குடியரசின் ஜனாதிபதி.
தற்போதைய உலக ஒழுங்குமுறை தப்பிப்பிழைக்காது என்பதாக அநேகர் நினைக்கின்றனர். வாட்ஸ்லாஃப் ஹாஃபலைப்போன்ற சிலர், உலகத்தினர் முழுவதும் மனித சிந்தனையிலும் நடவடிக்கைகளிலும் மாற்றம் செய்வதே ஒரே தீர்வு என்பதாக நினைக்கின்றனர். உதாரணத்திற்கு, தற்போதைய உலக நிலவரத்தைக் கவனித்த ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “நம்பிக்கையிழந்த கோடிக்கணக்கான ஏழைகளுக்கு, உணவும் வாழ்க்கையின் மற்ற அன்றாட தேவைகளும் கிடைக்குமென்ற எதிர்பார்ப்பே இல்லை . . . தற்போதைய போக்குகளை மாற்ற உலக நாடுகள் தீர்வான நடவடிக்கை எடுத்தாலொழிய அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாது.”—உணவு வறுமை மற்றும் அதிகாரம்.
எனினும், நாம் தப்பிப்பிழைப்பதற்கு, மனித இயல்பில் ஏதாவதொரு விதமான அடிப்படை மாற்றம் ஏற்பட வேண்டுமென நம்புவது அர்த்தமுள்ளதா? அரசாங்கங்கள் ‘தற்போதைய போக்குகளை மாற்ற தீர்வான நடவடிக்கை எடுக்குமென’ நாம் நம்பலாமா? சிலர் நம்புகின்றனர். ‘கடவுள் நமக்கு சுயாதீனத்தைக் கொடுத்திருக்கிறார், காரியங்களை மாற்றுவது நம் பொறுப்பு,’ என்பதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால் சரித்திரத்தின் கசப்பான உண்மைகள், தேவைப்படும் மாற்றங்களைச் செய்வதற்கு மனிதனுக்கிருக்கும் ஆவலைப் பற்றியும் திறனைப் பற்றியும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்தக் கருத்து, தீமையையே எதிர்பார்க்கும் மனப்பான்மையோடு சொல்லப்படுவதில்லை, ஆனால் இதுதான் நிஜம். ஓர் அறுவை மருத்துவர் சிகிச்சையளித்த எல்லா நோயாளிகளும் இறந்துவிட்டனர் என்பதை நீங்கள் அறியவந்தால் அதே மருத்துவரது கைகளில் உங்கள் உயிரையும் பணயம் வைப்பீர்களா?
அறிவு புகட்டுதல் சம்பந்தமான பிரச்சினையா?
டெவலெப்ட் டு டெத்—ரீதிங்கிங் தர்ட் உவர்ல்ட் டெவலப்மன்ட் என்ற புத்தகத்தில், “பிரச்சினை அறிவு புகட்டுதல் சம்பந்தப்பட்டது,” என்பதாக டெட் ட்ரேனர் சொல்கிறார். அடிப்படை மாற்றம் தேவைப்படுகிறது என மக்களுக்கு அறிவூட்டவில்லையென்றால், “சீராக செயல்படும் உலக ஒழுங்குமுறை வருமென நாம் எதிர்பார்க்கவே முடியாது” என்பதாக அவர் சொல்கிறார். உலகம் தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் மனநிலைகளிலும் நடவடிக்கைகளிலும் மாற்றம்செய்வது முக்கியம் என மக்களுக்கு அறிவூட்டுவது அவசியம் என்பதில் சந்தேகமில்லை. உண்மையில், அது முக்கியமானது; அப்படிப்பட்ட அறிவுபுகட்டும் திட்டத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. பூமி “கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” என்பதாக அது சொல்கிறது. அப்போது, பூமியில் எங்குமே ‘தீங்குசெய்வோரோ கேடுசெய்வோரோ’ இருக்க மாட்டார்கள்.—ஏசாயா 11:9.
ஆனால் எந்த விதமான அறிவுபுகட்டுதலும், கடவுளுடைய கல்வித் திட்டமும்கூட, அதிக தீங்கையும் பரவலான நாசத்தையும் உண்டுபண்ணும் பேராசை பிடித்த ஆட்களை பூமியிலிருந்து நீக்காது. அறிவுபுகட்டுதல் என்பது, தங்களை மாற்றிக்கொள்ள மனமுள்ள ஆட்களில்தான், கடவுளுடைய தராதரங்களுக்கு ஏற்ப வாழ விரும்பும் ஆட்களில்தான் மாற்றத்தை உண்டாக்கும். இயேசு கிறிஸ்துவைப் பொருத்தவரையில், அவர்கள் சிறுபான்மையினர். (மத்தேயு 7:13, 14) ஆகவே ஒருநாள் முழு மனிதவர்க்கத்தினரும் இந்தப் பிரச்சினை எவ்வளவு மோசமானது என்பதை மனமார உணர்ந்து தங்களது வழிகளை மாற்றிக்கொள்வார்கள் என்ற ஏதோவொரு பொய்யான எதிர்பார்ப்பை அடிப்படையாகக்கொண்டு பைபிள் வாக்குறுதி அளிப்பதில்லை. பூமியிலிருந்து பேராசை பிடித்த மக்களை அழிப்பதற்கு கடவுள் நேரடியான நடவடிக்கை எடுப்பாரென்று அது சொல்கிறது.
கடவுளின் தலையீடு
கடவுள் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பார் என்பதை அநேகர் ஒரு கனவாக அல்லது பிரமையாக கருதுகின்றனர். “பதினெட்டாவது நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவாற்றல் சார்ந்த முன்னேற்றங்கள், மனிதவர்க்கத்தை சீர்படுத்த கடவுள் தலையிடுவார் என்ற ஆறுதலளிக்கும் எண்ணத்தை கைவிடுமாறு நம்மை வற்புறுத்தின,” என்பதாக உலகப் பசி: பன்னிரண்டு கட்டுக்கதைகள் சொல்கிறது. ஆனால் “கடவுள் தலையிடுவார்” என்ற நம்பிக்கையை இழந்திருப்போரது அறிவாற்றல் சம்பந்தமான வாக்குவாதங்களிலும் தத்துவங்களிலும் நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமா? அவர்களது தீர்வுகள் பிரமை அல்லவா?
கடவுள் தம் பங்கில் தலையிடுவார் என்பதைச் சுட்டிக்காண்பிக்கும் இம்மியும் பிசகாத பைபிள் தீர்க்கதரிசனங்களின்பேரில் நாம் நம்பிக்கை வைப்பது எவ்வளவோ ஞானமானது. கடவுளுடைய வாக்குறுதிகளை நம்புவது வெறுமனே ஒரு ‘ஆறுதலளிக்கும் எண்ணம்’ மாத்திரம் அல்ல; அது, தப்பிப்பிழைப்பதற்கு நமக்கிருக்கும் ஒரே உண்மையான நம்பிக்கை ஆகும்!
‘பூமியைக் கெடுப்பவர்களைக் கெடுத்தல்’
கடவுள் உண்மையில் எதை வாக்களிக்கிறார்? ஒரு காரியம் என்னவென்றால், சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்தி அழிப்பவர்களை பூமியிலிருந்து அகற்றிவிடப்போவதாக அவர் வாக்களிக்கிறார். ‘பூமியைக் கெடுப்பவர்களைக் கெடுப்பதற்கு’ அவர் ஒரு ‘காலத்தை’ குறித்து வைத்திருப்பதாக வெளிப்படுத்துதல் 11:18 சொல்கிறது. அது எதை அர்த்தப்படுத்தும்? இப்போது ஏழைகளையும் பலவீனர்களையும் அடக்கி ஒடுக்கும் அனைவருக்கும் இது அழிவைக் குறிக்கும். “ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் [கடவுள்] நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.” பேராசைக்காரர்களை அவர் அழித்துவிட்டு, பாவம் அறியாத மக்களை செழிப்படையச் செய்வார். “கூப்பிடுகிற எளியவனை . . . அவர் விடுவிப்பார். . . . அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்.”—சங்கீதம் 72:4, 12-14.
அது எப்பேர்ப்பட்ட ஒரு மாற்றத்தைக் கொண்டுவரும்! அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்ன பிரகாரம், இந்த மாற்றம் அந்தளவுக்கு முழுமையாக இருக்கப்போவதால் அது ‘புதிய வானங்களையும் புதிய பூமியையும்’ உண்டாக்கும். (2 பேதுரு 3:13) இந்தப் ‘புதிய பூமியில்,’ அனைவருமே பூமியின் விளைச்சலை போதுமானளவு பெற்று மகிழ்ச்சியடைவார்கள். (மீகா 4:4) இப்போதும்கூட, அனைவருக்குமே ஏராளமான உணவு இருக்கிறது. சமமாக பங்கிடப்படாததே பிரச்சினை. உணவு வறுமை மற்றும் அதிகாரம் என்ற புத்தகத்தில், “பூமியின் பண்படுத்தப்பட்ட நிலத்தில் 3,800-4,800 கோடி மக்களுக்கு உணவளிக்குமளவுக்கு பயிர்களை விளைவிக்க முடியும் என கணக்கிடப்பட்டிருக்கிறது,” என்பதாக ஆன் புச்சனன் சொல்கிறார்.
இந்தக் கிரகம் தப்பிப்பிழைக்கும். அதைப் படைத்தவர் ‘வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்தார்.’ (ஏசாயா 45:18) பேராசைக்காரர்களுக்கு எதிராக கடவுள் எடுக்கும் நடவடிக்கை, கொஞ்ச காலம் “மிகுந்த உபத்திரவம்” இருக்குமென்பதைக் குறிக்கிறது. (மத்தேயு 24:21) அந்த உபத்திரவத்தில் தப்பிப்பிழைப்பவர்கள், கொஞ்சமும் பேராசையில்லாத மக்களால் நிரப்பப்பட்டிருக்கும் பரதீஸான பூமியில் வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிப்பார்கள். (சங்கீதம் 37:10, 11; 104:5) பைபிள் வாக்களிப்பதுபோல் அது இருக்கும்: ‘கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைப்பார்.’—ஏசாயா 25:8.
கடவுள் பேராசையை நீக்கி பூமியை சுத்திகரிக்க எடுக்கும் நடவடிக்கையிலிருந்து நன்மைபெற்று சந்தோஷமடைபவர்களில் நீங்கள் ஒருவராக இருக்க முடியும். உண்மையிலேயே நீங்கள் கடவுளுடைய சித்தத்தை செய்ய விரும்பினால், இப்போது பேராசை நிறைந்த இந்த உலகிலிருந்து தப்பிவாழ உங்களுக்கு அளிக்கப்படும் எல்லா உதவியையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ தப்பிப்பிழைக்க நடவடிக்கை எடுங்கள். நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியவற்றை உங்களுக்குக் கற்றுக்கொடுத்து உதவ யெகோவாவின் சாட்சிகள் தயாராக இருக்கின்றனர். உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் அவர்களோடு தயங்காமல் தொடர்புகொள்ளுங்கள்; அல்லது பக்கம் 5-ல் கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் உங்களுக்கு அருகாமையிலிருக்கும் ஒன்றிற்கு எழுதுங்கள்.