பேராசை நிறைந்த உலகில் பிழைத்தல்
“நான் எப்படிப் பிழைப்பது?” இமய மலைகளில் திக்கு தெரியாமல் தொலைந்துபோன ஜேம்ஸ் ஸ்காட் இந்தக் கேள்வியை எதிர்ப்பட்டார். ஒன்று, உறைந்துபோக வேண்டும் அல்லது பட்டினிகிடந்து சாக வேண்டும் என்ற மிக ஆபத்தான நிலையில் அவர் இருந்தார். காராத்தே போட்டிகளில் சண்டையிடுபவர்களுக்கு நேரிடுவதை அவர் நினைத்துப் பார்த்தார்: அவர்கள் “படிப்படியாக சக்தி இழக்கின்றனர்; ஒவ்வொரு அடியும் அவர்களது தெம்பை படிப்படியாக குறைத்து, கடைசியில் . . . அவர்கள் முழுமையாகவே தற்காப்பை இழந்துவிடுகின்றனர்.” அவர் சொன்னார்: “என் தலையணையின் ஜிப்பைத் திறந்து கொஞ்சம் பனியை சக்தியில்லாமல் எடுத்து சாப்பிட்டபோது நான் அப்படித்தான் உணர்ந்தேன். எனக்கிருந்த தெம்பெல்லாம் எங்கோ ஓடிவிட்டது, வாழ வேண்டுமென்ற ஆவல்கூட போய்விட்டது. இந்தளவுக்கு நான் ஒருபோதுமே மனம் நொந்துபோனதில்லை.”—லாஸ்ட் இன் த ஹிமாலயாஸ்.
ஒரு விதத்தில், இன்றுள்ள அநேகர் அவரைப் போன்றே இருக்கின்றனர்; அதாவது, பேராசை நிறைந்திருக்கும் உலகில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர். நீங்களும் மெல்லமெல்ல சக்தியை இழந்து மனம் நொந்துபோவதுபோல் ஒருவேளை உணர்வீர்கள். பேராசையின் உடனடியான விளைவுகளிலிருந்து முழுமையாக தப்பித்துக்கொள்பவர்களைப் பார்ப்பது அரிது. உலகில் நீங்கள் வாழும் இடத்தைப் பொருத்து, நீங்கள் எதிர்ப்படும் பிரச்சினைகளும் அளவிட முடியாதபடி வித்தியாசப்படும்—வளர்முக நாடுகளிலும் செல்வசெழிப்பான நாடுகளிலும் பேராசை மக்களை வித்தியாசமாக பாதிக்கிறது. இருந்தபோதிலும், கஷ்டங்கள் என்னவாக இருப்பினும், உதவி கிடைக்கும்வரை உடல்ரீதியிலும் மனரீதியிலும் ஆன்மீகரீதியிலும் ஓரளவுக்கு பாதிக்கப்படாமல் எவ்வாறு வாழலாம் என்பதை ஒருவேளை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். எவ்வாறு? தப்பிப்பிழைக்க உதவும் நிபுணர்களால் கொடுக்கப்படும் அடிப்படை ஆலோசனையை பின்பற்றுவதன் மூலமே.
அவர்களது ஆலோசனையில் இரண்டு குறிப்புகள் முதன்மையானவை. ஏற்கெனவே மோசமாயிருக்கும் ஒரு நிலைமையை இன்னும் மோசமாக்காமல் இருக்க வேண்டுமென்பதே முதலாவது ஆலோசனை. “வேண்டாத அபாயங்களைத் தவிர்த்து . . . உங்களால் தவிர்க்க முடியாதவையால் ஏற்படும் சேதத்தைக் குறைக்க நீங்கள் கவனமாக திட்டமிட வேண்டும்,” என்பதாக தி அர்பன் சர்வைவல் ஹான்ட்புக் சொல்கிறது. இரண்டாவது ஆலோசனை மனப்பான்மையை சார்ந்திருக்கிறது; இது ஒருவேளை அதிக முக்கியமானது. “சகிப்புத்தன்மையையும் அறிவையும் போலவே தப்பிப்பிழைத்தலும் மனப்பான்மைமீதே சார்ந்திருக்கிறது,” என்பதாக தி எஸ்ஏஎஸ் சர்வைவல் ஹான்ட்புக் சொல்கிறது.
அந்தச் சூழ்நிலைகளில் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள்
“ஐக்கிய மாகாணங்களில், ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கு ஒரு கொலையும், ஒவ்வொரு 47 நொடிகளுக்கு ஒரு திருட்டும், ஒவ்வொரு 28 நொடிகளுக்கு ஒரு கடுமையான தாக்குதலும் நடக்கின்றன,” என்பதாக உயிர்வாழ்தல்—குற்றச்செயல் தடுப்பு வழிகாட்டி என்ற ஆங்கில புத்தகம் அறிக்கை செய்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்கள் என்ன செய்யலாம்? மிஞ்சிமிஞ்சிப்போனால், அதற்கு எளிதில் இலக்காவதையோ சுலபமாக பலியாவதையோ தவிர்த்திட நீங்கள் முயற்சி செய்யலாம். விழிப்புடனும் விவேகத்துடனும் நடந்துகொள்ளுங்கள். ஆபத்தைக் குறைக்க உங்களால் ஆனதை செய்யுங்கள். a
உதாரணத்திற்கு, ஏமாளியாக இருப்பதன் மூலம் நிலைமையை இன்னும் மோசமாக்காதீர்கள். 18 சதவீத அமெரிக்கர்கள் தாங்கள் ஏமாந்து பலியாட்களானதாக ஒப்புக்கொள்கின்றனர்—எளிதில் ஏமாந்துவிடும் ஆட்களைத் தேடி அலையும் போக்கிரிகளிடம் அவர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களைப் பறிகொடுத்திருக்கின்றனர் என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. ஏமாறுபவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள்; எடுத்துக்காட்டாக, 68 வயது விதவை ஒருவரிடமிருந்து $40,000 திருடப்பட்டது. அவருக்கு நேர்ந்தது இவ்வாறு தலைப்புச்செய்தியாக வெளிவந்தது: “கிழடுதட்டியவர்களிடம் கில்லாடிகள் தட்டிச்செல்லப் பார்ப்பது நோட்டுகளை.”
ஆனால் சுரண்டப்படும்வரை காத்திருக்கும் ஒன்றுமறியாத உதவியற்ற பலியாட்களில் இன்னொருவராக நீங்கள் இருக்க வேண்டியதில்லை. “பசுத்தோல் போர்த்திய புலிகள் ஜாக்கிரதை,” என்பதாக உயிர்வாழ்தல் புத்தகம் எச்சரிக்கிறது. 70 வயது பாட்டியம்மா ஒருவர் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டார். மாதாமாதம் வெறுமனே $10 பணம் கட்டினால் அவரது மருத்துவ செலவுகள் அனைத்திற்கும் முழுமையாகவே இன்சூரன்ஸ் அளிப்பதாக ஒரு ஆள் சொன்னான். “அந்தப் பாட்டியம்மா செய்ய வேண்டிய ஒரே காரியம் $2,500-ஐ முன்பணமாக அந்த விற்பனையாளனுக்கு கொடுப்பதுதான்.” அவர் கொடுக்கவில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிக்கு போன் செய்வதன்மூலம் அந்த ஆள் மோசடி செய்வதை அவர் கண்டுபிடித்தார். “அவர் அந்த விற்பனையாளனுக்கு ஆற அமர டீ கொடுத்துக்கொண்டிருக்கையில், போலீஸ் வந்து அவனை இழுத்துச் சென்றது.”
உங்களைப் பாதுகாத்துக்கொள்ள உங்களால் ஆனதைச் செய்வது, பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனையில் அடங்கியிருக்கிறது. “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15; 27:12) பைபிள் பழங்காலத்திய நடைமுறைக்கு ஒவ்வாத புத்தகம் என நினைத்து அநேகர் அதைப் புறக்கணிக்கின்றனர். ஆனால் அதன் நடைமுறை ஆலோசனை தப்பிப்பிழைப்பதற்கு உங்களுக்கு உதவும். ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “செல்வமேபோல ஞானமும் [பைபிளில் காணப்படுவது] வேலியாம், ஞானமோ தன்னை உடையவர்க்கு உயிர் தரும்; இதுவே அறிவின் சிறப்பாகும்.”—பிரசங்கி 7:12, திருத்திய மொழிபெயர்ப்பு.
விழித்தெழு! வாசகர்கள் அநேகர் இதை உண்மையென கண்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, கற்பழிப்பையோ மற்ற வன்முறையையோ எதிர்ப்படுகையில் உரக்கக் கத்துவதன் மூலம் சிலர் ஓரளவு பாதுகாப்பைப் பெற்றிருக்கின்றனர்; இது உபாகமம் 22:23, 24-ல் சொல்லப்பட்டிருப்பதற்கு ஒத்திசைவாய் உள்ளது. வேறுசிலர், ‘மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியையும்’ தவிர்த்திடச் சொல்லும் பைபிள் ஆலோசனையைப் பின்பற்றியிருக்கின்றனர். (2 கொரிந்தியர் 7:1) இவ்வாறு மக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவித்து தங்களையே பணக்காரர்களாக்கிக்கொள்ளும் புகையிலை மற்றும் போதைப்பொருள் வியாபாரிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர். பணத்திற்காக அலையும் டிவி பிரசங்கிகள் மற்றும் அதிகாரப் பசிகொண்ட அரசியல்வாதிகளின் கண்ணிகளிலிருந்தும் அநேக வாசகர்கள் தப்பித்திருக்கின்றனர். (பக்கம் 7-ல் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியைக் காண்க.) பைபிளை வாசியுங்கள். எந்தளவுக்கு நடைமுறை ஆலோசனையை அது அளிக்கிறதென்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியமடையலாம்.
பேராசையால் பாதிக்கப்படுவதைத் தவிருங்கள்
சந்தேகமில்லாமல், பேராசையால் இன்னொரு ஆபத்தும் இருக்கிறது—நீங்களே பேராசை பிடித்தவர்களாக மாறிவிடலாம். மிருகங்களிலிருந்து உங்களை வித்தியாசப்படுத்தும் நல்லொழுக்கங்களை அது உங்களிடமிருந்து பறித்துவிடும். எல்லா வாய்ப்பையும் லாபம் சம்பாதிக்க பயன்படுத்தும் வியாபாரிகளைக்கொண்ட கட்டுப்பாடில்லாத வர்த்தகத்தை விவரிக்கையில், ஒருவர் இவ்வாறு சொன்னதாக மேற்கோள் காட்டப்பட்டது: “இந்தப் பேராசைப் பன்றிகள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் லாபம் லாபம் என்று லோலோவென அலைந்து அதை வாய்க்குள் சுருட்டிப் போட்டுக்கொள்கின்றன. பேராசையின் அளவு . . . கட்டுப்படுத்த முடியாதளவுக்கு சென்றுவிட்டது.” இந்த வாக்கியம், வியாபார சந்தர்ப்பவாதிகளைவிட பன்றிகளுக்கே அவமதிப்பாய் உள்ளது! இயேசு கிறிஸ்து அளித்த நல்ல ஆலோசனையை அந்த வியாபாரிகள் நிச்சயமாகவே புறக்கணித்துவிட்டதாக தோன்றுகிறது: “பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.”—லூக்கா 12:15.
பேராசையின் பிடிக்குள் நீங்கள் அகப்படும்போது அது எந்தளவுக்கு உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்ததால் அந்தப் புத்திமதியை அளித்தார். பொருட்களை மாத்திரமல்ல அதிகாரத்தையோ பாலியலையோகூட இச்சிப்பது உங்களது வாழ்வில் எல்லாவற்றையும் ஆட்டிப்படைக்கும் காமமாக ஆகலாம். பிறருக்கோ ஆவிக்குரிய காரியங்களுக்கோ கவனம் செலுத்த முடியாதபடி உங்கள் நேரத்தையும் விருப்பத்தையும் அது பறித்துவிடும். த மிடாஸ் டச் என்ற புத்தகத்தில் ஆன்தனி ஸாம்ஸன் இவ்வாறு சொல்கிறார்: “பணம் மதத்தின் அநேக பண்புகளை எடுத்துக்கொண்டுவிட்டது.” எவ்வாறு? பணம் தெய்வமாகிவிடுகிறது. மற்ற அனைத்துமே பேராசை மற்றும் ஆதாயம் என்னும் பலிபீடத்தில் பலியிடப்படுகின்றன. எல்லாவற்றையும்விட முக்கியமானது லாபமாகும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் கிடைக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. எனினும், அதிகப்படியான பொருளாசை இருந்தால், உண்மையில் நீங்கள் அதற்கு எவ்வளவு நேரம் செலவிட்டாலும் ஒருபோதுமே முழுமையாக திருப்தியடையமாட்டீர்கள். பிரசங்கி 5:10 இவ்வாறு சொல்கிறது: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை.” அதேவிதமாக, அதிகாரத்தின்மீதோ உடைமைகள்மீதோ பாலியல்மீதோ ‘பிரியம் வைப்பவர்கள்’ எவ்வளவு கிடைத்தாலும் ஒருபோதும் திருப்தியடைய மாட்டார்கள்.
விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்
பிழைப்பதற்கு நாம் செய்யவேண்டிய முக்கிய காரியம் நம்பிக்கையும் உறுதியுமுள்ள மனநிலையைக் காத்துக்கொள்வதாகும். சிலசமயங்களில் பேராசை பிடித்த மக்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள உங்களால் எதுவும் செய்ய முடியாது. உதாரணத்திற்கு, பட்டினியால் வாடும் மக்கள் தங்களது மோசமான நிலையிலிருந்து விடுபட பெரும்பாலும் எதுவும் செய்ய முடியாதவர்களாய் இருக்கின்றனர். எனினும், விட்டுக்கொடுக்காதீர்கள்; பணிந்துவிடாதீர்கள். பகைமை நிறைந்த அல்லது ஆபத்தான சூழ்நிலையை எதிர்ப்படுகையில் “விட்டுக்கொடுத்துவிட்டு, மனம் முறிந்து, தன்னிரக்கத்தில் மூழ்கிவிடுவது சுலபம்,” என்பதாக தி எஸ்ஏஎஸ் சர்வைவல் ஹான்ட்புக் சொல்கிறது. எதிர்மறையான நினைவுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஆளாகிவிடாதீர்கள். உங்களால் எந்தளவுக்கு சகித்துக்கொள்ள முடிகிறதென்பதைப் பார்க்கையில் நீங்களே ஆச்சரியப்படலாம். “மிக மோசமான சூழ்நிலைகளில்கூட பிழைக்க முடியுமென்பதை ஆண்களும் பெண்களும் காட்டியிருக்கின்றனர்,” என்பதாக அதே ஹான்ட்புக் சொல்கிறது. அதை அவர்கள் எவ்வாறு செய்தனர்? “பிழைக்க வேண்டுமென்ற தீர்மானத்தோடு அவர்கள் இருந்ததால்தான்” அவர்களால் தப்பிப்பிழைக்க முடிந்ததென்பதாக அது சொல்கிறது. பேராசைமிக்க இந்த ஒழுங்குமுறையால் தோற்கடிக்கப்படக்கூடாது என்பதில் தீர்மானமாயிருங்கள்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஜேம்ஸ் ஸ்காட், இமய மலையானது தனது கல்லறையாக ஆகும் நிலையிலிருந்து இறுதியில் காப்பாற்றப்பட்டார். தப்பிப்பிழைப்பதற்கான அவரது போராட்டம் ஒரு முக்கிய பாடத்தையாவது தனக்குக் கற்றுக்கொடுத்ததாக அவர் சொன்னார். அது என்ன? “எதிர்ப்படவே முடியாத சவாலென்று வாழ்க்கையில் எதுவுமே இல்லை,” என்பதாக அவர் சொன்னார். மலை ஏறுவதில் அனுபவம்பெற்றவரான டிம் மகார்ட்னி-ஸ்னேப், ஜேம்ஸ் ஸ்காட் அவ்வளவு காலம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இன்னும் உயிரோடிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்; அவரும்கூட ஒரு பாடத்தை அதிலிருந்து கற்றுக்கொண்டார். அவர் சொன்னதாவது: “நம்பிக்கைக்கு ஒரு சின்ன அறிகுறி தெரிந்தாலும், நீங்கள் விட்டுக்கொடுத்துவிடுவதை நினைத்துக்கூட பார்க்கக்கூடாது.” ஆகவே, காரியங்கள் எவ்வளவு சமாளிக்க முடியாதவையாய் தோன்றினாலும், நீங்கள் நம்பிக்கை இழந்துவிட்டால் அது இன்னும்தான் மோசமாகும். விடுதலை கிடைக்குமென்ற நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடாதீர்கள்.
ஆனால் பேராசை வெறிபிடித்து அலையும் இந்த உலகில் விடுதலைக்கு உண்மையிலேயே ஏதாவது வாய்ப்பு, “நம்பிக்கைக்கு ஒரு சின்ன அறிகுறி” இருக்கிறதா? இந்தக் கிரகத்தை சேதப்படுத்தி பல கோடிக்கணக்கானோரின் வாழ்வைக் கெடுத்துவரும் பேராசைக்காரர்கள் எப்போதாவது இல்லாமல் போவார்களா? உண்மையில், விடுதலைக்கான எதிர்பார்ப்பு நிச்சயமாகவே இருக்கிறது. பின்வரும் கட்டுரையில் பைபிள் தரும் பதிலைக் கவனியுங்கள்.
[அடிக்குறிப்பு]
a “வன்முறை—உங்களையே நீங்கள் காத்துக்கொள்ளலாம்” என்ற கட்டுரையை ஏப்ரல் 22, 1989 விழித்தெழு! ஆங்கிலப் பிரதியில் பக்கங்கள் 7-10-ஐக் காண்க.
[பக்கம் 7-ன் பெட்டி]
பைபிளின் காலத்துக்கேற்ற எச்சரிப்புகள்
நீதிமொழிகள் 20:23 “வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.”
எரேமியா 5:26, 28 “குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள். கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.”
எபேசியர் 4:17-19 “ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.”
கொலோசெயர் 3:5 “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.”
2 தீமோத்தேயு 3:1-5 “மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”
2 பேதுரு 2:3 “பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.”