வைரத்துக்கு—ஏன் அவ்வளவு விலை?
ஸ்பெய்னிலிருந்து விழித்தெழு! நிருபர்
சில சமயங்களில் அழகு கண்டுபிடிக்கப்படலாம். மற்ற சமயங்களில் அது உருவாக்கப்பட வேண்டும். என்றாலும், வைரத்தையோ கண்டுபிடிக்கவும், உருவாக்கவும் வேண்டும்.
சந்தேகமின்றி, மெருகூட்டப்படாத வைரங்கள், இயற்கையின் ஓர் அழகிய படைப்பே ஆகும். புவியோட்டின் கீழ் இருக்கும் அதிக அழுத்தமும் உயர் வெப்பநிலைகளும் சாதாரண கார்பனை, கடின, ஒளிபுகும் படிகங்களாக மெதுமெதுவாய் வடிவமைக்கின்றன. ஆனால் இந்த அரிய மணிக்கற்களைக் கண்டுபிடிப்பது பெரும்பாலும் சவாலாயிருக்கிறது. பூமியில் மனிதன் இட்டுள்ள பெரிய துளைகளில் சில—ஆஸ்திரேலிய, சைபீரிய, தென் ஆப்பிரிக்கப் பகுதிகளில் இடப்பட்டவை—இம் மதிப்புமிக்க கற்களைத் தேடி தோண்டப்பட்டிருக்கின்றன. வெறுமனே சுமார் ஆறு கிராம் எடையுள்ள வைரக் கற்களைக் கண்டுபிடிப்பதற்காக, நூறு டன் மண்ணைத் தோண்டி எடுத்து சலிக்க வேண்டியிருக்கிறது!
வைரத்தைக் கண்டுபிடித்ததும், அது ஒரு மோதிரத்தையோ அல்லது நெக்லஸையோ அலங்கரிப்பதற்கு முன்பு, திறமைவாய்ந்த கைவினைஞர்கள் அதற்குள் மறைந்திருக்கும் அழகை வெளிக்கொண்டுவர, அதிக சிரமமெடுத்து நுணுக்கமாய் பட்டைதீட்ட வேண்டும்.
இயல்பாகவே, இத்தனை முயற்சியினாலும் தொழில்திறமையினாலும் கிடைக்கிற ஒன்று, அத்தனை மலிவாக கிடைப்பதில்லை. ஆனால், இதற்கு ஆகும் செலவு, குறிப்பாக, ஒரு விவாக துணைக்கு அல்லது ஒரு மணமகளுக்கு பரிசாகக் கொடுக்கப்படும் வைரம், நிலையான பாசத்தின் ஓர் அடையாளமானதால் பெறுமானம் உடையது என்று பெரும்பாலான பெண்கள்—ஆண்களும்—உணருகின்றனர். வைரத்தின் அழகும், காதலும், உலகிலேயே விலைமதிப்பு மிக்க படிகக் கல்லாக அவற்றை ஆக்கியிருக்கின்றன. a
ஆன்ட்வர்ப்புக்குப் பயணம்
வைர விற்பனையினாலேயே செல்வ வளத்தைப் பெற்றிருக்கும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஆன்ட்வர்ப் நகருக்குப் பயணமானபோது, இணையற்ற இக் கற்களின்பேரில் எனக்கிருந்த ஆர்வம் தூண்டப்பட்டது. ‘எது வைரத்தை அவ்வளவு கவர்ச்சிமிக்கதாய் ஆக்குகிறது? வைரத்தை உருவாக்குவதில் அடங்கியிருக்கும் மர்மம் என்ன?’ என்று என்னைநானே கேட்டுக்கொண்டேன்.
அக் கேள்விகளுக்குப் பதிலைப் பெறுவதற்காக, மூன்று தலைமுறைகளாக வைரத் தொழிலில் அனுபவம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த டர்க் லோட்ஸிடம் இதைப் பற்றிப் பேசினேன். “ஆன்ட்வர்ப்பை வைரத்தின் ஒரு மிகச் சிறந்த நண்பனாக நாங்கள் அழைக்கிறோம். ஏனெனில், வைரம் வெட்டியெடுக்கப்படும், உலகின் முக்கிய இடங்களில் இந்த நகரமும் ஒன்று. ஆகவே வைர உற்பத்தியாளரின் மர்மங்களைக் கண்டுபிடிக்க சரியான ஓர் இடத்திற்குத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்” என்று அவர் விளக்கினார்.
முதன்முதலில், சற்று முன்பாக அவர் வாங்கிவந்திருந்த மெருகேற்றப்படாத வைரங்களைக் கைநிறைய எடுத்து என்னிடம் காட்டினார். 3,50,000 டாலர் மதிக்கப்பட்டபோதிலும், முதலில் பார்த்தபோது, அவை அவ்வளவு கவர்ச்சிமிக்கவையாய் தோன்றவில்லை; அதற்கு மாறாக அவை, கைநிறைய உள்ள கண்ணாடி வில்லைகளைப் போன்றே தோன்றின. ஆனால் கூர்ந்து பார்த்தபோதோ, மறைந்திருந்த உட்புற மினுமினுப்பு தெரிந்தது. வைரத்துக்குப் பட்டை தீட்டுபவர் அந்த அழகையே வெளிக்கொண்டு வருவார். நான் அவற்றின் கவர்ச்சியை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.
“எப்பொழுதாவது மெருகேற்றப்படாத ஒரு பெரிய வைரக்கல்லை நான் பார்க்கும்போது, உணர்ச்சிப்பூர்வ பற்றுதலைப் போன்ற ஏதோவொரு வசியத்தன்மை அதற்கிருப்பதை நான் உணருகிறேன்” என்று டர்க் கூறினார். “உள்ளுணர்வால் அக் கல்லை வாங்க விரும்புகிறேன். ஒரு முத்து அவ்வளவு நேர்த்தியாய் இருந்ததால் அதை வாங்குவதற்காக தனக்குண்டான எல்லாவற்றையும் விற்குமளவுக்குத் தயாராய் இருந்த வியாபாரியைப் பற்றிய இயேசுவின் உவமையை இது எனக்கு நினைப்பூட்டுகிறது. மிதமிஞ்சிய அப்படிப்பட்ட எந்தச் செயலையும் நான் செய்துவிடவில்லை” என்று கூறி சிரித்தார்; “ஆனால், தரமிக்க கற்கள் சிலவற்றுக்கு ஒரு தனி கவர்ச்சி இருப்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். எங்கள் வாழ்நாள் முழுவதையுமே வைரத்தை வாங்குவதிலும் விற்பதிலும் செலவழிக்கும் எங்களுக்கும்கூட அவ்வாறு தோன்றுகிறது. மெருகேற்றப்படாத ஒரு கல்லிலிருந்து ஒரு மணிக்கல்லை உருவாக்குவது, எவ்வளவுதான் கவர்ச்சியாய் இருந்தாலும், அதற்கென்றே உரிய குறைபாடுகளையும் உடையதாய் இருக்கிறது என்பது மெய்யே.”
மெருகேற்றப்படாத வைரத்தை மெருகேற்றுவது
மதிப்புமிக்கதோர் வைரக்கல்லும்கூட, கவனக்குறைவாக பட்டைதீட்டும் ஒருவரால் வீணாக்கப்படக்கூடும் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன். அடிக்கடி அவ்வாறுதான் நேர்ந்திருக்குமோ என யோசித்தேன். “அதுவொன்றும் அந்தளவுக்கு அரிதாய் ஏற்படுவதில்லை” என்று டர்க் ஒத்துக்கொண்டார். “வைரக்கல்லைச் சிறுசிறு துண்டுகளாகப் பிளக்கும்போது மட்டும் இவ்வாறு ஏற்படும் சாத்தியமில்லை; வைரத்துக்கு மெருகேற்றும் தொழிலாளிகூட, எப்போதாவது ஒரு க்ளெட்ஸ் அல்லது உட்புறத்திலிருக்கும் விரிசலையோ, அல்லது வேறு ஏதாவது மாசுவையோ சரிப்படுத்த வேண்டி அந்த இடத்தைத் தட்டிவிடும்போதுகூட அந்தக் கல்லைப் பாழாக்கிவிடலாம். மெருகேற்றப்படாத கல்லில், எவ்விடத்தில் மாசு இருக்கிறது என்பதைக் காட்டும் ஒருமுக ஒளிக்கதிரின் மூலம் எப்பொழுதுமே நாங்கள் கவனத்துடன் சோதிக்கிறோம்; ஆனால் விசனகரமாக, சோதனை செய்யும் எந்தவொரு முறையும் முழுவதும் நம்பத்தக்கதல்ல.
“ஒரு வைரக்கல் வீணாக்கப்படுவது எங்களுக்கு பயங்கரமான ஒரு கொடுங்கனவாய் இருந்தாலும், சிரமத்திற்குரிய விஷயம் அது மட்டுமல்ல. சில சமயங்களில், பட்டைதீட்டப்பட்டு, மெருகேற்றப்பட்டதற்குப் பிறகு, அந்தக் கல்லின் நிறம் அடர்த்தியாய் மாறி, அதன் மதிப்பு குறைந்துவிடுகிறது. வைரக்கல்லை முதல் தரமான கல்லாக ஆக்குவதற்காக, மெருகேற்றப்படாத அந்தக் கல்லில் 60 சதவீதத்தையோ, அல்லது அதற்கும் அதிகமானதையோ வெட்டியெடுக்க வேண்டியிருக்கிறது என்பதை நீங்கள் நினைவில் வைக்க வேண்டும்.”
ஒரு வைரக்கல்லை வடிவமைப்பதில் உட்பட்டிருக்கும் எல்லாவற்றையும் பற்றி நான் நன்றாக விளங்கிக்கொண்டதற்கு முன்பு, பெருவாரியான பணத்தை வீணடிப்பதைப் போல் அது எனக்குத் தோன்றியது. சற்று முன்பு செதுக்கப்பட்டு மெருகேற்றப்பட்ட ஒரு பெரிய இதய வடிவான வைரக்கல்லை டர்க் என்னிடம் காட்டினார். “இது எப்படி ஜொலிக்கிறது என்று பார்க்க முடிகிறதா?” என்று என்னிடம் கேட்டார். “இந்தக் கல்லுக்கு உட்புறத்தில் ‘பிழம்பு’ இருப்பதைப் போல் தெரிவது, பிரதிபலிக்கப்பட்ட ஒளியேயன்றி வேறல்ல.
“வைரத் தொழில்நுட்பக் கலைஞன் செய்யவேண்டியது என்னவென்றால், ஒளியானது, இந்தக் கல்லுக்கு உட்புறத்தில் சிக்கிக்கொண்டு, பார்ப்பவர் கண்களை நோக்கித் திரும்பவும் பிரதிபலிக்கும் வகையில் இந்தப் பட்டை எல்லாவற்றையும் தீட்ட வேண்டும். வழக்கமாகச் செய்யப்படும் உருவங்களான, வட்ட வெட்டு போன்றவை, திறம்பட்ட விதத்தில் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், இந்த இதய வடிவு போன்ற அலங்கார வடிவமைப்புகளும், முடிந்தவரை அதிகளவு ஒளியைப் பிரதிபலிக்கும்படி செய்யப்படுகின்றன. அதுவே வைரக்கல் பட்டைதீட்டும் தொழிலாளியின் கைவண்ணமாய் இருக்கிறது. உண்மையில், ‘உற்பத்தியில் தான் மந்திரம் உள்ளது’ என்ற கொள்கையை ஒரு புகழ்வாய்ந்த வைரத் தொழிலாளி தெரிந்தெடுத்திருக்கிறார்.”
“இன்னின்ன வைரம் இன்னின்ன வடிவத்தில் வெட்டப்பட வேண்டுமென்பதை நீங்கள் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்?” என்று டர்க்கைக் கேட்டேன். “நாங்கள் முதன்முதலாக வாங்கும் கல்லை கவனத்துடன் பார்க்க ஆரம்பித்தோம், அதாவது, அதிக கவனத்துடன் என்று சொல்கிறேன்! ஒரு பெரிய வைரக்கல்லை, அது எந்த வடிவத்தில் வெட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒரு மாதமாக நாங்கள் ஆராய்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. சில சமயங்களில், மெருகேற்றப்படாத கல்லை எந்த வடிவில் வெட்ட வேண்டும் என்பதை எளிதில் காண அந்தக் கல்லின் அமைப்பே உதவி செய்யும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அந்தக் குறிப்பிட்ட கல்லை எந்த வடிவில் வெட்டினால், குறைந்தளவு சேதாரம் ஏற்படும் என்பதைத் தீர்மானிப்பதே எங்கள் குறிக்கோள். ஆனால் நாங்கள் தீட்டும் ஒவ்வொரு பட்டையும்—உதாரணமாக, ஒரு வைரக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட பட்டைகள் இருக்கின்றன—எடை இழப்பைக் குறிக்கிறது” என்று அவர் சொன்னார்.
ஒரு குறிப்பிட்ட கல்லை கவனத்துடன் பார்க்கும்படி டர்க் என்னிடம் சொன்னார். நகைக்காரரது உருப்பெருக்கிக் கண்ணாடியை என் கையில் கொடுத்து, “இந்தக் கல்லின் வலது பக்கத்தில் மாசு இருப்பதை உங்களால் காண முடிகிறதா?” என்று கேட்டார். சரிசமமாய் இராத கோடுகள் சிலவற்றை அதில் நான் பார்த்தேன்; அவை, அந்தக் கல்லின் ஒரு மூலையின் உட்புறத்தில், கண்ணாடியில் கீறல் விழுந்திருப்பதைப் போல் இருந்தன. “அதுபோன்ற மாசு, வைரத்தின் மதிப்பை மிகவும் குறைத்துவிடுகிறது. இதை வெட்டியெடுத்து விடலாம் என்பது உண்மையாய் இருந்தாலும், இவ்வாறு செய்யும்போது, இந்தக் கல்லின் பெரும்பாகம் வீணாகிவிடும். உருப்பெருக்கிக் கண்ணாடியில்லாமல் வெறும் கண்களால் இந்தக் குறைபாட்டைப் பார்க்க முடியாத பட்சத்தில், சற்று குறைந்த விலையில் அந்தக் கல்லை விற்றுவிட முடியும்.”
இந்தச் சின்னஞ்சிறு கற்களுக்கு ஏன் அவ்வளவு மவுசு என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தேன். தெளிவாகவே, பல அம்சங்கள் உட்பட்டிருக்கின்றன.
“ ‘வைரம் என்றென்றைக்குமானது’ என்ற வழக்கச்சொல்—ஒரு விளம்பரக் கொள்கைக் குரலாய் இருந்தாலும்—பொதுவாய் உண்மையாகவே இருக்கிறது” என்று டர்க் கூறினார். “வைரங்கள் பழமையாகி விடுவதுமில்லை, அவற்றின் ஜொலிப்பு மங்குவதுமில்லை. அவை அரிதானவைதான். ஆனாலும் முன்பிருந்த அளவு இப்போது அரிதானவையாய் இல்லை; அவை அழகியவை—அதில் எந்தச் சந்தேகமுமில்லை! ஆனால், வைரக் கற்களின் மதிப்புக்கான மிக முக்கியமான அம்சம், உலகளவில் அவற்றுக்கு இருக்கும் கிராக்கியின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. இது விளம்பரத்தைப் பெரிதும் சார்ந்திருக்கிறது.
“ஒரு பெண் வைர மோதிரம் ஒன்றை அணிய விரும்புவது ஏன்?” என்று டர்க் சிந்தனைக்குள் ஆழ்ந்தார். “அவள் ஒருவேளை வைரங்களை அன்புக்கும் காதலுக்கும் உரிய சின்னங்களாக நினைத்துக்கொள்கிறாள். ஒரு வைரக்கல், ஒரு பிரத்தியேகமான, நித்திய பொக்கிஷமாய்க் கருதப்பட வேண்டிய, நிலைத்திருக்கும் வைரத்தைப் போன்றே காலாகாலமாய் நம்பிக்கைக்குப் பாத்திரமான விதத்தில் நிலைத்திருக்கும் ஓர் அன்பை அவளுக்கு நினைப்பூட்டும் ஒரு பொருளாகும். இந்தக் கருத்து, அல்லது, பிறர் அழைக்க விரும்புவதற்கிசைய, இந்த மர்ம உணர்வு (mystique) திறமையுடன் முன்னேற்றுவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் வைரங்களை மக்கள் வாங்கச் செய்யும் இந்த அடிப்படைக் கருத்தை விளம்பரப்படுத்த 1995-ல் சுமார் 18,00,00,000 டாலர் பணம் செலவழிக்கப்பட்டது.”
ஒரு வைரத்தின் மதிப்பு
“முற்றுப்பெற்ற வைரத்தின் மதிப்பு, அதன் உருவத்தைப் பொறுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று நான் சொன்னேன். “அது அந்தளவுக்கு எளிதாக மதிப்பிடப்படுவதில்லை” என்று டர்க் பதிலுரைத்தார். “வைர வணிகர்கள், வைரத்தின் மதிப்பு நான்கு அம்சங்களைப் பொறுத்திருக்கிறது என்று கூறும் மனச்சாய்வைக் கொண்டுள்ளனர். அவையாவன: வெட்டு, காரட், நிறம், தெளிவு. ஒவ்வொன்றும் அந்தக் கல்லினுடைய அழகின்மீது—ஆகவே அதன் மதிப்பின்மீதும்—செல்வாக்கு செலுத்துகிறது.
“வைரக் கல்லை வெட்டுவதைக் குறித்து நாம் பேச ஆரம்பிப்போம். நல்லதொரு வெட்டு என்பது ஒரு கலைநுணுக்கம்; சிறிதளவிலான ஒரு செதுக்குவேலை என்று சொல்லலாம். நீங்கள் விருப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அந்த இதய வடிவ வைரக்கல்லை சற்று கூர்ந்து பாருங்கள். இந்த வடிவத்தை உருவாக்குவது என்பது அவ்வளவு சுலபமல்ல; இந்த வடிவத்தை உருவாக்கும்போது, பிற வடிவங்களை உருவாக்கும்போது வீணாகுவதைக் காட்டிலும் பெருமளவில் மெருகேற்றப்படாத கல் வீணாகும். இந்தக் கல்லின் அழகைக் கூட்டுவதற்காக பட்டைகள் அனைத்தும் ஒன்றுபோல் வெட்டப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். இந்தக் குறிப்பிட்ட வைரத்துக்கு மிக நேர்த்தியாக பட்டை தீட்டப்பட்டிருப்பதாக நாங்கள் சொல்வோம்.
“இதன் உருவத்தைப் பார்த்து நீங்கள் முதலில் ஆச்சரியப்பட்டீர்கள்; அது புரிந்துகொள்ள வேண்டிய விஷயம்தான், ஏனெனில் இது 8 காரட் எடையுள்ள ஒரு பெரிய கல். ஒரு காரட் என்பது, அடிப்படையில், 0.2 கிராம் எடைக்குச் சமமானது. ஆகவே இந்தக் காரட் மதிப்பை வெறுமனே கல்லை எடைபோட்டுப் பார்ப்பதன் மூலம் நாங்கள் தீர்மானிக்கிறோம். பொதுவாக, அதிகளவு காரட் மிக அதிக மதிப்புள்ள வைரக்கல்லைக் குறித்துக் காட்டுகிறது; ஆனால், அதன் மதிப்பு அதன் நிறத்திலும் தெளிவிலும்கூட பெருமளவு சார்ந்திருக்கிறது.
“வைரங்கள் எல்லா உருவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கின்றன; நாங்கள் காட்டிய மெருகேற்றப்படாத கற்களில் நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள். நாங்கள் செய்யும் முதல் வேலை, இந்தக் கற்களை இவற்றின் நிறத்திற்கேற்ப பிரித்தெடுப்பதே. அதிக வெண்மையாய் இருந்தால், அவற்றுக்கு மதிப்பு அதிகம். என்றாலும், ஃபேன்ஸி நிறங்கள் என்று நாங்கள் அழைக்கும் பிங்க், நீலம், அல்லது சிவப்பு நிறக் கற்கள் சில உள்ளன; அவை வெண்ணிற கற்களைவிட அதிக விலைபோகின்றன. ஏனெனில் அவை கிடைப்பது மிக மிக அரிது.
“முடிவாக, ஒரு கல்லை நாங்கள் அதன் தெளிவான தோற்றத்திலிருந்து தரம் பிரிக்கிறோம். மாசற்றதாக ஒரு கல் வகைப்படுத்தப்பட்டால், நீங்கள் அந்தக் கல்லுக்குள்—உருப்பெருக்கிக் கண்ணாடியின் மூலமாகவும்கூட—பார்க்கும்போது, எந்தவொரு மாசுவையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை அது அர்த்தப்படுத்தும். இவ்வாறு, ஒரு வைரத்தின் வெட்டு, தெளிவு, நிறம் ஆகியவையும் அதன் காரட் எடையைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்தவையாய் இருக்கலாம். உதாரணமாக, 1995-ல், இதுவரை மெருகேற்றப்பட்ட வைரங்களிலேயே மிகப் பெரிய (546.67 காரட்) வைரக்கல், காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன் உருவம் அவ்வளவு பெரியதாய்—கிட்டத்தட்ட ஒரு கோல்ஃப் பந்தின் அளவாய்—இருந்தாலும் உலகிலேயே மதிப்பு வாய்ந்த வைரமாக இது இருக்கவில்லை; ஏனெனில், அதன் தோற்றம் தெளிவற்றதாய் இருந்தது; அதன் நிறம் மஞ்சள் கலந்த பழுப்பாய் இருந்தது.”
ஆன்ட்வர்ப்பிலிருந்து திரும்புவதற்கு முன்பு, ஆன்ஸ் வின்ஸிடம் பேசினேன்; அவர் 50 ஆண்டுகளாக இந்த வைரத் தொழில் செய்பவராய் இருந்திருக்கிறார். ஒரு வைரத்தை அவ்வளவு விசேஷமானதாக ஆக்குவது எது என்ற ஒரே ஒரு கேள்வியைக் கடைசியாகக் கேட்க விரும்பினேன்.
“சிறிய கற்கள் அவ்வளவு கிளர்ச்சியூட்டுபவையாய் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை—அவற்றை மெஷின் மூலமாகவும் வெட்டி, மெருகேற்றலாம்” என்று அவர் பதில் கூறினார். “ஆனால், பெரிய வைரக் கற்கள் என்னை வசீகரிக்கின்றன. ஒவ்வொரு கல்லும் வித்தியாசமானது—கோடிக்கணக்கான ஆண்டு எரிமலை அழுத்தத்தால் கார்பனிலிருந்து அழுத்தி எடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஓர் இணையற்ற படைப்பு. இந்தக் கல்லை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், ஒரு மரத்தின் அடிமரத்தில் காண்பதைப் போலவே, வளர்ச்சிக் கோடுகளை நீங்கள் மெய்யாகவே பார்க்கலாம். எந்தச் சுரங்கத்திலிருந்து அது வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது என்றும்கூட அனுபவம் வாய்ந்த ஒரு வியாபாரி சொல்லிவிடுவார்.
“வைரக் கற்களை உருவாக்குபவர், அப்படிப்பட்ட ஒரு கல்லை, பளிங்குப் பாளத்தை ஒரு சிற்பி பார்ப்பதைப் போல் பார்க்கிறார். தான் எதை உருவாக்க முடியும் என்று ஏற்கெனவே தன்னுடைய மனக்கண் மூலமாகக் காண்கிறார். அவருடைய கற்பனையில், வெட்டி மெருகேற்றுகிறார்; அப்போது ஒரு மகத்தான வைரக்கல் உருவாகிறது. வைரம், ஒரு மோதிரத்திலோ அல்லது ஒரு நெக்லஸிலோ முடிவாக பொருத்தப்பட்ட பிறகு, அதே இன்பம் அதை உடையவருக்கும் இருக்கும் என்பதை நினைக்கையில் சந்தோஷப்படுகிறேன்.”
இவையெல்லாவற்றையும் எண்ணிப்பார்க்கையில், வைரம் அதை உடையவருக்கு இன்பமூட்டும் காரணத்தால், அதை உருவாக்குவது மிகவும் மதிப்புவாய்ந்த ஒரு வேலையே.
[அடிக்குறிப்பு]
a வைரங்களின் அதிக விலைக்கான ஒரு முக்கியக் காரணம், அவை, தனியுரிமை பெற்றிருக்கும், மத்திய விற்பனை சங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதே.
[பக்கம் 15-ன் படங்கள்]
எட்டு காரட் எடையுள்ள இதய வடிவ வைரக்கல் (கற்கள் வீதமுறைப்படி ஒரேசீராக இல்லை)
பேரிக்காய் வடிவ வெட்டு
“கார்டினலின் தொப்பி” வெட்டு
வெட்டப்படாத கற்களின் காரட்டைக் கண்டுபிடித்தல்
நிறத்தின் அடிப்படையில் மெருகேற்றப்படாத வைரங்களைப் பிரித்தல்
இன்னும் மெருகேற்றப்பட வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க, பட்டைகளை ஆய்வுசெய்தல்