நீங்கள் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய முடியும்
உண்மையான மதிப்பைக் கண்டுகொள்வது கடினமாக இருக்கலாம். வைரக்கற்களைக் குறித்ததில் அவ்வாறே உள்ளது. மெருகூட்டப்பட்ட வைரக்கல் மினுமினுங்கினாலும், பட்டைதீட்டப்படாத வைரக்கல் வெறும் மங்கலாகவே பிரகாசிக்கிறது. இருப்பினும், பட்டைதீட்டப்படாத வைரக்கல்லின் ஆழங்களில் அழகிய மணிக்கல் இருப்பதற்கான சந்தேகமேதுமில்லை.
கிறிஸ்தவர்கள், பல வழிகளில், பட்டைதீட்டப்படாத வைரக்கற்களுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். பரிபூரணத்தில் நாம் இன்னும் குறைவுபட்டாலும், யெகோவா உயர்வாக கருதுகிற ஓர் உள்ளான மதிப்பு நமக்கு இருக்கிறது. வைரங்களைப்போல், நாம் எல்லாரும் அவரவருக்குரிய தனிப்பட்ட பண்புகளை உடையோராக இருக்கிறோம். மேலுமான ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வது நம் இருதயப்பூர்வமான ஆவலாக இருக்கிறதென்றால் நாம் ஒவ்வொருவரும் அவ்வாறு செய்ய முடியும். யெகோவாவின் மகிமைக்காக, நம் தனிப்பட்ட பண்புகள், மேலும் அதிக ஒளியுடன் பிரகாசிப்பதற்கு ஏதுவாக மெருகூட்டும்படி அவற்றை மேம்படுத்த முடியும்.—1 கொரிந்தியர் 10:31.
ஒரு வைரக்கல்லை பட்டைதீட்டி, மெருகூட்டியப் பின்பு, ஒளிக்கதிர்களை பிரதிபலிக்கிற அதன் பண்புகளை மிகைப்படுத்தும் பின்னணியமைப்பில் அது வைக்கப்படுகிறது. அவ்வாறே, நாம் ‘மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வோமானால்,’ யெகோவா நம்மை வெவ்வேறுபட்ட பின்னணி அமைப்புகளில் அல்லது ஊழிய நியமிப்புகளில் பயன்படுத்தலாம்.—எபேசியர் 4:20-24.
ஒரு வைரக்கல் அதன் இயல்பான நிலையில், மணிக்கல்லைப் போல் மினுமினுங்குவது அரிதாக இருப்பதுபோல், இத்தகைய ஆவிக்குரிய முன்னேற்றம் தானாக வந்துவிடாது. நம்மில் இன்னும் இருக்கும் ஏதோ பலவீனத்தை நாம் விட்டொழித்து, பொறுப்பை ஏற்பதற்குத் தக்கவாறு நம் மனப்பான்மையைச் சரிசெய்ய வேண்டியதாக இருக்கலாம் அல்லது ஆவிக்குரியப் பிரகாரமாய் முன்னேறாமல் அதே நிலையில் இருப்பதிலிருந்து வெளியேறி முன்னேறும்படி உழைக்க வேண்டியதாக இருக்கலாம். ஆனால், ‘இயல்புக்கு மீறிய வல்லமையை’ யெகோவா தேவன் நமக்கு அளிக்க முடியுமாதலால், நாம் உண்மையில் விரும்பினால், நம்மால் படிப்படியாக முன்னேற்றம் செய்ய முடியும்.—2 கொரிந்தியர் 4:7, NW; பிலிப்பியர் 4:13.
யெகோவா தம்முடைய ஊழியர்களைப் பலப்படுத்துகிறார்
வைரக்கற்களைப் பட்டைதீட்டி மெருகிடுவதற்கு, துல்லியமான அறிவின் பயனாக வரும் திடநம்பிக்கை அவசியமாய் இருக்கிறது; ஏனெனில் பட்டைதீட்டப்படாத வைரக்கல்லின் ஒரு பாகம் வெட்டியெடுக்கப்பட்ட பின்பு, அது பொதுவாய் பயனற்றதாக ஆகிவிடுகிறது. விரும்பப்படுகிற வடிவத்தை உருவாக்குவதற்கு, பட்டைதீட்டப்படாத இந்த விலையுயர்ந்தக் கல்லில் 50 சதவீத அளவானது, சிலசமயங்களில் வெட்டியெடுக்கப்பட வேண்டியதாக ஆகிவிடுகிறது. நம்முடைய பண்பியல்பை உருப்படுத்தி, ஆவிக்குரியப் பிரகாரம் முன்னேறுவதற்கு, திருத்தமான அறிவின் பலனாக உண்டாகும் திடநம்பிக்கை நமக்கும் தேவை. முக்கியமாய், யெகோவா நம்மைப் பலப்படுத்துவார் என்ற திடநம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.
எனினும், நம்மால் இயலாது என நாம் ஒருவேளை உணரலாம் அல்லது நம்மால் அதிகம் செய்ய முடியவில்லையே என நினைக்கலாம். முற்காலங்களில் இருந்த கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் சில சமயங்களில் அவ்வாறே உணர்ந்தார்கள். (யாத்திராகமம் 3:11, 12; 1 இராஜாக்கள் 19:1-4) “புறஜாதியாருக்குத் தீர்க்கதரிசியாக” இருக்கும்படி கடவுளால் நியமிக்கப்பட்டபோது, எரேமியா இவ்வாறு திகைப்புடன் கூறினார்: “ஐயோ, . . . நான் பேச அறியேன், நான் சிறுவன்.” (எரேமியா 1:5, 6, தி.மொ.) எரேமியா அவ்வளவாய்த் தயங்கினபோதிலும், பகைமையுள்ள ஜனத்திற்கு நேரடியாக செய்திகளை அறிவித்த தைரியமுள்ள ஒரு தீர்க்கதரிசியாக பின்னர் ஆனார். இது எவ்வாறு சாத்தியமானது? யெகோவாவின்மேல் நம்பிக்கை வைக்க அவர் கற்றுக்கொண்டார். பின்னால் எரேமியா இவ்வாறு எழுதினார்: “யெகோவாவில் நம்பிக்கைவைத்து, யெகோவாவையே தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷனோ பாக்கியவான்.”—எரேமியா 17:7, தி.மொ.; 20:11.
இன்று, யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்போரை அவர் அவ்வாறே பலப்படுத்துகிறார். நான்கு பிள்ளைகளையுடைய தகப்பனும், ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதில் தாமதமாயிருந்தவருமான எட்வர்ட், a இது உண்மையாயிருப்பதைக் கண்டார். அவர் விளக்குகிறார்: “ஒன்பது ஆண்டுகளாக நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக இருந்துவந்திருக்கிறேன், ஆனால் ஆவிக்குரியப் பிரகாரமாய் நான் முன்னேறாமல் இருந்ததாகத் தோன்றினது. பிரச்சினை என்னவென்றால், எனக்கு அகத்தூண்டுதல் குறைவாகவும் நம்பிக்கை இல்லாமலும் இருந்தது. பின்பு ஸ்பெய்னுக்கு மாறிச் சென்றேன்; அங்கே, ஒரே ஒரு மூப்பரும் ஒரே ஒரு உதவி ஊழியரும் இருந்த ஒரு சிறிய சபையில் இருந்தேன். அங்கிருந்த தேவையின் காரணமாக, கூட்டங்களில் பல பாகங்களைக் கையாளும்படி அந்த மூப்பர் என்னிடம் சொன்னார். என் முதல் பேச்சுகளை கொடுக்கையிலும், கூட்டத்தில் பாகங்களைக் கையாளுகையிலும் நடுங்கினேன். எனினும், யெகோவாவில் நம்பிக்கை வைத்து சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டேன். அந்த மூப்பர் எப்போதும் என்னைப் பாராட்டி, முன்னேறுவதற்குரிய சாதுரியமான ஆலோசனைகளை அளித்தார்.
“அதே சமயத்தில், வெளி ஊழியத்தில் அதிகமாக ஈடுபட்டு, என் குடும்பத்தில் மேலும் நல்ல முறையில் ஆவிக்குரிய தலைமை வகிப்பை செலுத்தினேன். இதன் பலனாக, குடும்பத்தில் இருந்த எல்லாருக்கும் சத்தியம் அதிக அர்த்தமுள்ளதாக இருந்தது, நான் அதிக திருப்தியடைந்தவனாக உணர்ந்தேன். இப்போது நான் ஓர் உதவி ஊழியனாக இருக்கிறேன், கிறிஸ்தவ கண்காணிக்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ள கடினமாய் உழைக்கிறேன்.”
‘பழைய மனிதப் பண்பியல்பைக் களைந்துபோடுங்கள்’
எட்வர்ட் உணர்ந்ததுபோல், ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு யெகோவாவில் நம்பிக்கை வைப்பது அவசியமாக இருக்கிறது. கிறிஸ்துவினுடையதைப் போன்ற ‘புதிய மனிதப் பண்பியல்பை’ வளர்த்து முன்னேற்றுவிப்பதும் இன்றியமையாததாக இருக்கிறது. இதை எவ்வாறு செய்ய முடியும்? முதற்படியானது, நம்முடைய பழைய மனிதப் பண்பியல்பின் பாகமாக இருக்கிற குணங்களைக் ‘களைந்துபோடுவதாகும்.’ (கொலோசெயர் 3:9, 10, NW) பட்டைதீட்டப்படாத வைரக்கல்லை, மினுமினுங்கும் ஒரு மணிக்கல்லாக ஆக்குவதற்கு அதன்மீதுள்ள மற்ற தாதுப்பொருட்களை நீக்க வேண்டியதுபோல், நம்முடைய புதிய மனிதப் பண்பியல்பு வெளிப்பட்டு பிரகாசிக்கச் செய்ய, ‘இவ்வுலகத்திற்குரிய’ மனப்பான்மைகளை விலக்கி ஒழிக்க வேண்டும்.—கலாத்தியர் 4:3, NW.
நம்மிடம் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் என்ற பயத்தால், பொறுப்பை ஏற்பதற்கு மனமில்லாமல் தயங்குவது அத்தகைய மனப்பான்மையில் ஒன்றாக உள்ளது. உண்மைதான், பொறுப்பேற்பது அதிகமான வேலையைக் குறிக்கிறது, ஆனால் இது திருப்திதரும் வேலையாக இருக்கிறது. (அப்போஸ்தலர் 20:35-ஐ ஒப்பிடுக.) தேவபக்தியானது, ‘நாம் கடினமாக உழைத்து மும்முரமாக ஈடுபடுவதைத்’ தேவைப்படுத்துகிறது என்று பவுல் ஒப்புக்கொண்டார். அவர் சொன்னபடி, “ஜீவனுள்ள கடவுள்மேல் நன்னம்பிக்கை வைத்திருக்கிறபடியால்,” இதை நாம் மகிழ்ச்சியுடன் செய்கிறோம். நம்முடைய உடன் கிறிஸ்தவர்களின் நிமித்தமாகவும் மற்றவர்களின் நிமித்தமாகவும் நாம் செய்யும் வேலையை அவர் ஒருபோதும் மறவாதவர்.—1 தீமோத்தேயு 4:9, 10, தி.மொ; எபிரெயர் 6:10.
சில வைரக்கற்கள், அவை உருவாகையில் ஏற்படும் உறுதியற்ற பாகங்களை உடையவையாக இருக்கின்றன; அவற்றைக் கவனமாய்க் கையாளவேண்டியிருக்கிறது. எனினும், அதை மெருகேற்றுபவர், போலரைஸ்க்கோப் எனப்படும் ஒரு கருவியின் உதவியால் அந்தப் பாகங்களைக் கண்டுபிடித்து அந்தக் கல்லைச் சரிப்படுத்த முடியும். ஒருவேளை நாம், நம்முடைய பின்னணியின் காரணமாக அல்லது ஒரு வேதனையான அனுபவத்தின் காரணமாக, உள்ளுக்குள் புழுங்குபவராகவோ குணநலன்களில் குறைவுபடுகிறவராகவோ இருக்கலாம். அப்போது என்ன செய்யலாம்? முதலாவதாக, அந்தப் பிரச்சினை நமக்கு இருக்கிறதென்று நாம்தாமே ஒப்புக்கொண்டு, நம்மால் இயலும் வரையில் அதை மேற்கொள்ளும்படி தீர்மானமாய் இருக்கவேண்டும். நிச்சயமாகவே ஜெபத்தில் யெகோவாமீது நம் பாரத்தைப் போட வேண்டும், தேவைப்பட்டால் ஒரு கிறிஸ்தவ மூப்பரின் ஆவிக்குரிய உதவியையும் நாடலாம்.—சங்கீதம் 55:22; யாக்கோபு 5:14, 15.
இவ்வாறு உள்ளுக்குள் புழுங்குபவராக இருந்தவர்தான் நிக்கொலஸ். “என் அப்பா ஒரு குடிகாரர். அவர் என் தங்கைக்கும் எனக்கும் மிகுந்த தொல்லை கொடுத்தார்” என்று அவர் விளக்குகிறார். “நான் பள்ளியை விட்டு நின்ற பின்பு, பட்டாளத்தில் சேர்ந்துகொண்டேன், ஆனால் என் கலகத்தனப் போக்கு என்னை விரைவில் தொந்தரவுக்குள்ளாக்கியது. போதைப் பொருட்களை விற்றதற்காக படை அதிகாரிகள் என்னை ஜெயிலில் அடைத்தார்கள்; மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் படையிலிருந்து ஓடிவிட்டேன். கடைசியாக, படையிலிருந்து விலகிக் கொண்டேன், ஆனால் இன்னும் தொந்தரவு ஓய்ந்தபாடில்லை. போதைப் பொருட்களைத் தவறாகப் பயன்படுத்தினதாலும் மிதமீறிய குடிவெறியினாலும் என் வாழ்க்கை குளறுபடியாக இருந்தபோதிலும், பைபிளில் எனக்கு அக்கறை இருந்தது; வாழ்க்கையில் ஒரு நோக்கத்தை உடையவனாக இருக்க மிகுந்த ஆவலோடிருந்தேன். முடிவில், யெகோவாவின் சாட்சிகளோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, என் வாழ்க்கைப் போக்கை மாற்றி, சத்தியத்தை ஏற்றேன்.
“எனினும், என் குணநலன்களில் குறைபாடுள்ளதை உணர்ந்து அதை திருத்தும் நிலைக்கு நான் வருவதற்குள் பல ஆண்டுகள் சென்றன. என்மீது அதிகாரம் செலுத்துவதை நான் முற்றிலும் வெறுத்தேன்; எனக்கு அறிவுரை கொடுத்தபோது எரிச்சலடைந்தேன். யெகோவா என்னை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினபோதிலும், இந்தப் பலவீனம் எனக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. கடைசியாக, புரிந்துகொள்ளும் இரண்டு மூப்பர்களின் உதவியால், என் பிரச்சினையை நான் ஒப்புக்கொண்டு, அவர்களுடைய அன்புள்ள வேதப்பூர்வ அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கினேன். அவ்வப்போது கோபம் சற்றே தலைதூக்குகிறபோதிலும், என் கலகத்தன இயல்பை இப்போது கட்டுப்படுத்துகிறேன். என்னை யெகோவா பொறுமையாக கையாண்ட விதத்திற்காகவும் மூப்பர்களின் அன்புள்ள உதவிக்காகவும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். என் ஆவிக்குரிய முன்னேற்றத்தின் காரணமாக, சமீபத்தில் உதவி ஊழியனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன்.”
நிக்கொலஸ் கண்டறிந்ததுபோல், ஆழமாய் வேரூன்றிய மனப்பான்மைகளை மாற்றுவது எளிதல்ல. இதைப்போன்ற சவாலை நாம் எதிர்ப்படலாம். நாம் ஒருவேளை சட்டென்று உணர்ச்சியில் புண்படுவோராய் இருக்கலாம். ஏதோ மனவருத்தத்தை மனதில் வைத்து வரக்கூடும், அல்லது சுதந்திரமாய் இருப்பதன்பேரில் மட்டுமீறிய அழுத்தம் வைத்திருப்போராக இருக்கலாம். இதனால், நம்முடைய கிறிஸ்தவ முன்னேற்றம் மட்டுப்படுத்தப்படலாம். வைரக்கல்லை மெருகூட்டுவோர், நாட்ஸ் என்று அவர்கள் அழைக்கும் கற்களைக் குறித்ததில் இதற்கொப்பான ஒன்றை அனுபவிக்கின்றனர். இவை உண்மையில், வைரக்கற்கள் உருவாகிறபோது உருகி ஒட்டிக்கொள்கிற இரண்டு கற்களே. இதன் விளைவாக, நாட்ஸ் என்பவற்றிற்கு, ஒன்றுக்கொன்று முரணான இரு வகை வளர்ச்சி படிவங்கள் இருக்கின்றன; இவை, அதன் இழை அமைப்பின்படி அதை பட்டைதீட்டுவதை மிகக் கடினமாக்குகிறது. நம்முடைய காரியத்தில், ஆர்வமுள்ள மனப்பான்மையின் ‘இயல்பு,’ அபூரண மாம்சத்தின் ‘இயல்பு’க்கு எதிராகப் போரிடுவதைக் காண்கிறோம். (மத்தேயு 26:41; கலாத்தியர் 5:17) நம்முடைய குணநலன்களில் அபூரணங்கள் அவ்வளவு முக்கியமானதல்ல என்று விளக்கம் சொல்லி, போராட்டத்தை முற்றிலுமாக விட்டுவிடும்படி நாம் சில சமயங்களில் தட்டிக்கழிக்க மனம் சாய்வோராக உணரலாம். ‘எப்படி இருந்தாலும், என் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்மேல் அன்பிருக்கிறது’ என்று நாம் ஒருவேளை சொல்லலாம்.
எனினும் நாம், நம்முடைய சகோதரர்களுக்கு சேவை செய்யவும், நம்முடைய பரலோகத் தகப்பனை மகிமைப்படுத்தவும் வேண்டுமானால், புதிய மனித குணநலன்களைத் தரித்துக்கொள்பவர்களாய் ‘நம்முடைய மனதை தூண்டுவிக்கும் சக்தியில் புதிதாக’ வேண்டும். நிக்கொலஸும் எண்ணற்ற மற்றவர்களும் உறுதியளிக்க முடிகிறபடி இதற்காக எடுக்கும் முயற்சிகள் பயனுடையவையே. ஒரே ஒரு கறையுங்கூட வைரக்கல்லின் மொத்த தோற்றத்தையும் கெடுக்கக்கூடும் என்று வைரக்கல்லை மெருகூட்டுபவர் அறிந்திருக்கிறார். அவ்வாறே, நம்முடைய குணநலன்களில் ஒரு பலவீன அம்சத்தைக் கவனியாமல் விட்டால், நம்முடைய ஆவிக்குரிய தோற்றத்தின் மொத்த அழகையே அது கெடுத்து விடும். இன்னும் மோசமாக, வினைமையான ஒரு பலவீனம் நம்முடைய ஆவிக்குரிய வீழ்ச்சிக்கு வழிநடத்தக்கூடும்.—நீதிமொழிகள் 8:33.
நமக்குள் “சுடரொளியைப்” போல்
வைரக்கல்லை மெருகூட்டுபவர் அந்த வைரக்கல்லுக்குள் இருக்கும் சுடரொளியைப் பாதுகாக்க நாடுகிறார். வைரக்கல்லின் பட்டைகள் வானவில் தோற்றம் என்று அழைக்கப்படுவதை உண்டாக்கும்படியாக அவற்றை சீராக அமைப்பதால் இது செய்யப்படுகிறது. வைரக்கல்லின் உட்புறத்தில் இந்தப் பலநிற ஒளி முன்னும் பின்னுமாக பிரதிபலித்து, வைரக்கற்களை மினுமினுங்கச் செய்யும் சுடரொளியை உண்டாக்குகிறது. அவ்வாறே கடவுளுடைய ஆவி நமக்குள் ஒரு ‘சுடரொளியைப்’ போல் இருக்கலாம்.—1 தெசலோனிக்கேயர் 5:19; அப்போஸ்தலர் 18:25; ரோமர் 12:11; NW.
ஆனால் உள்ளத்தில் ஆவிக்குரியப் பிரகாரமான தூண்டுவித்தல் நமக்குத் தேவைப்படுவதாக நாம் உணர்ந்தால் என்ன செய்வது? இது எவ்வாறு செய்யப்படலாம்? நாம் ‘நம் வழிகளைச் சிந்திக்க’ வேண்டும். (சங்கீதம் 119:59, 60) இது, நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்வதையும், பின்பு தேவராஜ்ய நடவடிக்கைகளில் எதை நாம் இன்னும் அதிக ஊக்கத்துடன் நாடித்தேட முயற்சி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதையும் உட்படுத்தும். தவறாத தனிப்பட்ட படிப்பின் மூலமும் ஊக்கமான ஜெபத்தின் மூலமும், நம்முடைய ஆவிக்குரிய மதித்துணர்வை அதிகரிக்கச் செய்யலாம். (சங்கீதம் 119:18, 32; 143:1, 5, 8, 10) மேலும், விசுவாசத்தில் கடினமாக உழைப்போருடன்கூட கூட்டுறவு கொள்வதன்மூலம், யெகோவாவை ஆர்வத்துடன் சேவிப்பதற்கான நம் தீர்மானத்தை மேலுமாக உறுதிப்படுத்துவோம்.—தீத்து 2:14.
ஓர் இளம் கிறிஸ்தவப் பெண்ணாகிய லூயிஸ், இவ்வாறு ஒப்புக்கொண்டாள்: “பயனியராக, அல்லது முழுநேர பிரஸ்தாபியாக, நான் உண்மையில் ஆவதற்கு முன்பு, ஒழுங்கான பயனியர் செய்வதைக் குறித்து இரண்டு ஆண்டுகள் சிந்தித்தேன். எனக்கு தடையாக எதுவும் இல்லை, ஆனால் நான் சௌகரியமாக வாழ்ந்து கொண்டிருந்தேன். அதிலிருந்து வெளியேற முயற்சி எதுவும் செய்யவில்லை. பின்பு என் தகப்பன் திடீரென்று இறந்தார். வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது என்பதையும், என் வாழ்க்கையை நல்ல முறையில் பயன்படுத்தாமல் இருந்ததையும் உணர்ந்தேன். ஆகையால் ஆவிக்குரியவிதமாக எனக்கிருந்த மனப்போக்கை மாற்றி, என் ஊழியத்தை அதிகரித்து, ஒழுங்கான பயனியரானேன். இதன் சம்பந்தமாக எனக்கு முக்கியமாய் உதவி செய்தவர்கள், வெளி ஊழிய ஏற்பாடுகளை எப்போதும் ஆதரித்தவர்களும் ஊழியத்தில் தவறாமல் என்னோடு கலந்து கொண்டவர்களுமான என் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுமே. நல்லதோ கெட்டதோ எதுவாயினும், நம்முடைய மதிப்பீடுகளையும் இலக்குகளையும் நம் சகாக்களுடன் பகிர்ந்துகொள்கிறோம் என்பதை கற்றேன்.”
இரும்பால் கூராக்கப்பட்டதுபோல்
பூமியில் இயற்கையாய் உருவாகும் பொருட்களில் வைரக்கற்களே மிகக் கடினமானவை. ஆகையால், ஒரு வைரக்கல்லை வெட்டுவதற்கு மற்றொரு வைரக்கல் தேவைப்படுகிறது. இது, பின்வருமாறு சொல்லும் நீதிமொழியை பைபிள் மாணாக்கருக்கு நினைப்பூட்டலாம்: “இரும்பால் இரும்புதானே கூர்மையாக்கப்படுகிறது; அப்படியே ஒரு மனிதன் மற்றொருவனின் முகத்தைக் கூர்மையாக்குகிறான்.” (நீதிமொழிகள் 27:17, NW) ஒருவனின் முகம் எவ்வாறு ‘கூர்மையாக்கப்படுகிறது’? ஒரு இரும்புத் துண்டு அதே உலோகத்தில் செய்யப்பட்ட பிளேடைக் கூராக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதைப்போல், ஒருவர் மற்றொருவரின் அறிவாற்றலையும் ஆவிக்குரிய நிலையையும் கூராக்குவதில் வெற்றிபெறலாம். உதாரணமாக, ஏதோ ஏமாற்றத்தின்பேரில் நாம் மனச்சோர்வுற்றிருந்தால், மற்றொருவரின் ஊக்கமூட்டுதல் அதிக உற்சாகமூட்டுவதாய் இருக்கலாம். நம்முடைய விசனகரமான முகத்தோற்றம் இவ்வாறு மகிழ்ச்சியைப் பிரதிபலிப்பதாக மாறலாம்; மறுபடியுமாக ஆர்வ நடவடிக்கைக்கு நாம் எழுச்சியூட்டப்படலாம். (நீதிமொழிகள் 13:12) முக்கியமாய், சபை மூப்பர்கள் வேதப்பூர்வ ஊக்கமூட்டுதலையும் முன்னேற்றத்திற்கான அறிவுரையையும் அளிப்பதன்மூலம் நம்மைக் கூராக்குவதற்கு உதவிசெய்யலாம். சாலொமோன் கூறின இந்த நியமத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள்: “ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.”—நீதிமொழிகள் 9:9.
நிச்சயமாகவே, ஆவிக்குரிய பயிற்றுவிப்பிற்கு அதிக காலமெடுக்கிறது. பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அப்போஸ்தலன் பவுல், தன்னுடைய அனுபவத்தையும் போதக முறைகளையும் தீமோத்தேயுவுடன் பகிர்ந்துகொண்டார். (1 கொரிந்தியர் 4:17; 1 தீமோத்தேயு 4:6, 16) 40 ஆண்டு காலத்திற்கும் மேலாக, மோசே யோசுவாவுக்குக் கொடுத்த நீண்டகால பயிற்றுவிப்பு, இஸ்ரவேல் ஜனத்திற்கு வெகு காலமாக நன்மையில் விளைவடைந்தது. (யோசுவா 1:1, 2; 24:29, 31) எலிசா, தீர்க்கதரிசியாகிய எலியாவுடன்கூட பெரும்பாலும் 6 ஆண்டுகள் சென்று, சுமார் 60 ஆண்டுகள் நீடித்திருக்கவிருந்த தன் சொந்த ஊழியத்திற்குச் சிறந்த பயிற்றுவிப்பைப் பெற்றார். (1 இராஜாக்கள் 19:21; 2 இராஜாக்கள் 3:11) மூப்பர்கள், பொறுமையுடன் தொடர்ந்து பயிற்றுவிப்பை அளிப்பதன் மூலம், பவுலும், மோசேயும், எலியாவும் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.
பாராட்டுதல் பயிற்றுவிப்பின் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறது. நியமிக்கப்படும் பொறுப்புகள் நன்றாகக் கையாளப்பட்டதற்காக அல்லது போற்றத்தக்கச் செயல்களுக்காக உள்ளப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவிப்பது, கடவுளை மேலுமதிக முழுமையாய்ச் சேவிக்க மற்றவர்களை தூண்டலாம். பாராட்டுதல் நம்பிக்கையைக் கட்டியெழுப்புகிறது; அது, தன் பங்கில், ஒருவர் தன் பலவீனங்களைப் போக்குவதற்காக முயற்சி எடுப்பதற்கான தூண்டுதலை அளிக்கிறது. (1 கொரிந்தியர் 11:2-ஐ ஒப்பிடுக.) சத்தியத்தில் முன்னேறும்படியான ஊக்குவிப்பு, ராஜ்ய பிரசங்க ஊழியத்திலும் சபையின் மற்ற நடவடிக்கைகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருப்பதிலிருந்து உண்டாகிறது. (அப்போஸ்தலர் 18:5) சகோதரரின் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு மூப்பர்கள் அவர்களுக்குப் பொறுப்பளிக்கையில், இது அவர்களுக்குப் பயனுள்ள அனுபவத்தை அளித்து, தொடர்ந்து ஆவிக்குரிய வகையில் முன்னேறும்படியான அவர்களுடைய ஆவலைப் பெரும்பாலும் பலப்படுத்தலாம்.—பிலிப்பியர் 1:8, 9.
ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு நல்ல காரணம்
வைரக்கற்கள் மதிப்பு மிகுந்தவையாக கருதப்படுகின்றன. யெகோவாவின் வணக்கத்தாராலான உலகளாவிய குடும்பத்துடன் இப்போது ஒன்றுசேர்ந்து வருவோரை குறித்ததிலும் அதுவே உண்மையாக இருக்கிறது. உண்மையில், கடவுள்தாமே அவர்களை, சகல ஜாதியாரின் ‘விரும்பத்தக்கவை’ அல்லது “அருமையானவை” என்று அழைக்கிறார். (ஆகாய் 2:7, UV; தி.மொ.) சென்ற ஆண்டில் 3,75,923 பேர் முழுக்காட்டப்பட்டு, யெகோவாவின் சாட்சிகளானார்கள். இந்தப் பெருக்கத்திற்கு இடமுண்டாக்க, ‘கூடாரத்தின் இடத்தை விசாலமாக்குவது’ தேவையாக இருக்கிறது. ஆவிக்குரியப் பிரகாரமாய் படிப்படியாக முன்னேறுவதாலும்—கிறிஸ்தவ ஊழிய சிலாக்கியங்களுக்காகத் தகுதிபெற முயற்சி செய்வதாலும்—இந்தப் பெருக்கத்தைக் கவனிப்பதில் பங்குகொள்வது சாத்தியமாக இருக்கிறது.—ஏசாயா 54:2; 60:22.
வங்கிகளின் பெட்டகங்களில் வைக்கப்பட்டு, காண்பதற்கு அரிதாக இருக்கிற விலைமதிப்புள்ள பல வைரக்கற்களைப்போல் இராமல், நம்முடைய ஆவிக்குரிய மதிப்பை பிரகாசமாக ஒளிவீசலாம். நம்முடைய கிறிஸ்தவ பண்புகளைத் தவறாமல் மெருகூட்டி வெளிப்படுத்துகையில், யெகோவா தேவனை மகிமைப்படுத்துகிறோம். இயேசு தம்மைப் பின்பற்றினோருக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16) ஆவிக்குரிய விதத்தில் முன்னேற்றம் செய்வதற்கு, நல்ல காரணத்தை அது நிச்சயமாகவே அளிக்கிறது.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில் மாற்றுப்பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.