யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பை நீங்கள் உயர்வாய் மதிக்கிறீர்களா?
நன்றாய் வெட்டப்பட்ட, நேர்த்தியான வைரக்கல்லைப் பாருங்கள், என்ன காண்கிறீர்கள்? உண்மையில் அழகுவாய்ந்த உயர்மதிப்புள்ளக் கல். இப்பொழுது அந்த வைரக்கல்லை ஒரு பூதக்கண்ணாடியினூடே கூர்ந்து நோக்குங்கள், என்ன காண்கிறீர்கள்? பெரும்பாலும் கீறல்கள், வெடிப்புகள், உட்கூறான பொருள்கள், அல்லது மற்றக் குறைபாடுகள் அதில் இருக்கலாம்.
ஒரு பூதக்கண்ணாடியின்கீழ் அது இவ்வாறு தோன்றும் இந்த வெறும் காரணத்தால் அந்த வைரக்கல்லை நீங்கள் நொறுக்கிப் போட்டுவிடுவீர்களா அல்லது எறிந்துவிடுவீர்களா? நிச்சயமாகவே இல்லை! அந்தப் பூதக்கண்ணாடியிலிருந்து தூர விலகுங்கள், அந்த வைரக்கல்லை மற்ற விலைமதிப்புள்ள கற்களுக்குள் முனைப்பாய்த் தோன்றிநிற்கும்படி செய்கிற அந்த அழகையும் அசாதாரண மினுமினுப்பையும் நீங்கள் இன்னும் உயர்வாய் மதித்துணர முடிகிறது.
ஒரு வைரக்கல்லைப்போல், யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பு பல வழிகளில் முனைப்பாய்த் தோன்றிநிற்கிறது. பூமியில் வேறு எந்த அமைப்பும் சிருஷ்டிகருடன் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழ்கிறதில்லை. பரலோக நம்பிக்கையை மனதில் பேணிவைத்திருந்த முதல்-நூற்றாண்டு அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதின ஒரு கடிதத்தில், அப்போஸ்தலன் பேதுரு இந்தத் தனிப்பட்ட உறவைக் குறிப்பிட்டான். அவன் சொன்னதாவது: “நீங்களோ, . . . தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) இன்று, பூமியில் நித்திய ஜீவனையடையும் நம்பிக்கையுடைய, “மற்றச் செம்மறியாடுக”ளின் ஒரு திரள் கூட்டமானோர், கடவுளை வணங்குவதில் அந்தப் “பரிசுத்த ஜாதி”யின் மீதிபேர்களைச் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். (யோவான் 10:16, NW) இந்த இரண்டு தொகுதிகளும் ஒன்றாக ஓர் அமைப்பாகின்றனர், அது அழகிய மற்றும் அசாதாரண மினுமினுப்பு ஒளிவீசும் உயர்மதிப்புள்ள கல்லைப்போல் முனைப்பாய்த் தோன்றிநிற்கிறது.
மற்றவர்களைக் குறைகாணும் கண்ணுடன் நோக்குவதைத் தவிருங்கள்
ஆனால் இந்த உலகளாவிய அமைப்பு அபூரண மனிதர்கள் அடங்கியதென்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகையால், இதை அடையாளக் குறிப்பான பூதக்கண்ணாடியினூடாகக் காண்போமானால் என்ன நடக்கும்? ஆம், அதன் பாகமாயிருக்கும் ஆட்கள் ஒவ்வொருவரிலும் பாவமுள்ள போக்குகளையும் அவரவர் பண்பியல்புகளில் குறைபாடுகளையும் நாம் காண்போம்.—ரோமர் 3:23.
அப்போஸ்தலன் பவுல் தனக்கு அத்தகைய குறைபாடுகள் இருந்ததென ஒப்புக்கொண்டான். அவன் சொன்னதாவது: “நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற[தைக்] . . . காண்கிறேன்.” (ரோமர் 7:21) ஒவ்வொரு கிறிஸ்தவனும் இதே போராட்டத்தை அனுபவிக்கிறான். எல்லாரும் தவறு செய்கிறார்கள். மேலும், முன்னோ பின்னோ எப்போதாயினும் பலர் மற்றொருவரின் தவறுகளினிமித்தம் துன்பப்படுகின்றனர். உடன் கிறிஸ்தவர்களின் குறைபாடுகளும் அபூரணங்களும் வெளியாகுகையில் நாம் மனச்சோர்வடைய அல்லது சந்தேகங்கொள்ள வேண்டுமா? அது யெகோவாவின் அமைப்பின்மீதுள்ள நம்முடைய உயர் மதிப்பைக் குறைக்க வேண்டுமா? நிச்சயமாகவே இல்லை! அதற்கு மாறாக, நாம் அந்த பூதக் கண்ணாடியினூடே நுட்பங்களை நோக்கிக்கொண்டிருப்பதை விட்டு விலகவேண்டும், தனி நபர்களின் அபூரணங்களின்மீது பார்வையை ஊன்றவைப்பதை விட்டுவிடவேண்டும்.
பரிசுத்த ஆவி தங்கள்மீது செயல்படுகிற ஆட்களை அடையாளங்காட்டும் பல தனிப்பண்புகளை வேத எழுத்துக்கள் வரிசையாகக் கொடுக்கின்றன. அவற்றில் சில: “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்,” ஆகியவை. (கலாத்தியர் 5:22, 23) இதற்கு நேர்மாறாக, இவ்வுலகத்தின் மத, அரசியல், மற்றும் வியாபார அமைப்புகள், மாம்சத்தின் கிரியைகளென பைபிள் குறிப்பிடுகிற: “பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், . . . வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளை” அடிக்கடி வெளிப்படுத்திக் காட்டுகின்றன. (கலாத்தியர் 5:20, 21) இவ்வாறு, சாதாரண கற்பாறைகளின் மத்தியில் பளிச்சென மினுமினுக்கும் வைரத்தைப்போல், யெகோவாவின் ஜனங்கள் ஆவிக்குரியபிரகாரம் கறைப்பட்டுள்ள உலகத்தின் மத்தியில் முனைப்பாய்த் தோன்றுகின்றனர்.—மத்தேயு 5:14-16.
“ஒரே மனதில் பொருத்தமாய் ஒற்றுமைப்பட்டிருத்தல்”
வைரத்தை வேறுபடுத்திக் காட்டும் ஒரு தனிப்பண்பு அதன் நெருங்கிய-ஒன்றிணைந்த, உறுதியாய்க் கட்டுப்பட்ட அணு இயக்க அமைப்பாகும். அவ்வாறே, யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பும் கோட்பாட்டிலும் சகோதரத்துவத்திலும் இணையற்ற ஒற்றுமையைக் காட்டுகிறது. இந்த அமைப்பின் பாகமாயிருப்போர் பைபிளில் 1 கொரிந்தியர் 1:10-ல் (NW) காணப்படும் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துகின்றனர், அது சொல்வதாவது: “சகோதரரே, நீங்கள் எல்லாரும் கருத்தொற்றுமையுடன் பேசவேண்டுமென்றும், உங்களுக்குள் பிரிவினைகள் இருக்கக்கூடாதென்றும், ஆனால் ஒரே மனதிலும் ஒரே சிந்தனைப்போக்கிலும் பொருத்தமாய் ஒன்றுபட்டிருக்கும்படி, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இப்பொழுது நான் உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன்.”
மேலும் யெகோவாவின் சாட்சிகள் ஜாதிபேத தப்பெண்ணங்களுக்கும் தேசீய பெருமைக்கும் கட்டுப்பட்டிராமல் மேம்பட்டு விளங்குகின்றனர். “பரத்திலிருந்து வருகிற ஞானத்தை” உடையோராய் அவர்கள் “பட்சபாதமில்லாத”வர்களாய் இருக்கிறார்கள். (யாக்கோபு 3:17) அபூரண மானிடர்கள் அமைந்த ஓர் அமைப்பில் இந்தக் காரியத்தில் யெகோவா நிறைவேற்றியிருப்பவற்றிற்காக நாம் அவருக்கு மகிமை செலுத்துகிறோம்.
இதற்கு நேர்மாறாக, கிறிஸ்தவ நூற்றாண்டு (The Christian Century), 1990-ம் ஆண்டைப்பற்றிப் பேசி, பின்வருமாறு கூறினது: “இந்த உலகம் முன்னோருபோதும் இராத மிகைப்பட்ட முறையில் மதப் பிரிவுகளாலும், மத நம்பிக்கைகளோடு நெருங்க இணைக்கப்பட்ட ஜாதிபேத மற்றும் தேசீய உணர்ச்சிப்பான்மையிலும் பிரிக்கப்பட்டதாகத் தோன்றினது. இந்தியாவிலிருந்து ஐரோப்பாவரையிலும் மற்றும் மத்திய கிழக்கிலிருந்து பசிபிக் வரையிலும், மதம் ஜாதிபேத மற்றும் தேசீய பற்றுறுதிகளோடு ஒன்றுசேர்ந்துள்ளது—அடிக்கடி அரசியல் கிளர்ச்சியில் விளைவடைகிறது.” கடவுளை சேவிக்க விரும்புவோர் யெகோவாவின் ஆவியையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்து மகிழும் அந்த ஒரே அமைப்பினிடம் மாத்திரமே திரும்ப முடியுமென்பது தெளிவாயுள்ளது.
‘உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன்’
வைரக்கல் மனிதன் அறிந்துள்ள இயல்பாய்க் கிடைக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் மிகக் கடினமானதாகும். கடினமான பொருட்களின்மீது கீறுவதற்கு அல்லது எழுத்துக்களைச் செதுக்கித்தீட்டுவதற்கு வைரங்கள் பயன்படுத்தப்படுவதை பைபிள் குறிப்பிடுகிறது. (எரேமியா 17:1) யெகோவா எசேக்கியேலுக்குக் கூறின பின்வரும் வார்த்தைகளையும் கவனியுங்கள்: “இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்தைப்போலவும் உன் நெற்றியை அவர்கள் நெற்றியைப்போலவும் கடினமாக்குவேன்; உன் நெற்றியைக் கடுங்கல்லிலும் கடினமான வச்சிரக்கல்லைப்போலாக்குவேன்.” (எசேக்கியேல் 3:8, 9, தி.மொ.) பிடிவாதமுள்ள ஜனங்களுக்குத் தீர்க்கதரிசனங் கூறும்படி எசேக்கியேலுக்கு உதவிசெய்த வைரக்-கடினம்வாய்ந்த தீர்மானத்தை யெகோவா அவனுக்குக் கொடுத்தார்.—எசேக்கியேல் 2:6.
அவ்வாறே இன்றும், பெரும் எதிர்ப்புக்கெதிரில் வைரத்தைப்போன்ற உறுதியை யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு அளித்திருக்கிறார். யெகோவாவின் சாட்சிகள், சட்டப்பூர்வ தடையுத்தரவுகளையும், கலகக் கும்பல்களின் தாக்குதல்களையும், சட்டவிரோதமான தீர்ப்பளிப்புகளையும், அடிகளையும், அநீதியான சிறையிருப்புகளையும், வதைக்கப்படுதலையும், மரண தண்டனைகளையுங்கூட சகித்திருக்கின்றனர். எனினும், அவர்கள் தங்கள் விசுவாசம் முறிக்கப்படாததென காட்டியுள்ளனர்.
“என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள்”
ஜனங்கள் “தெய்வபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் வல்லமையையோ மறுதலிக்கிறவர்க”ளாக நிரூபிக்கும் ஒரு காலத்தைப் பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1, 5, தி.மொ.) “புராட்டஸ்டன்டுகள், ரோமன் கத்தோலிக்கர்கள் மற்றும் யூதர்கள் யாவரும்” தங்கள் சர்ச்சுகள் மற்றும் ஜெபாலயங்களில் “எண்ணிக்கை குறைந்துகொண்டிருப்பதை குறித்து கவலைப்படுகிறார்கள்,” என ஒரு செய்தித்தாள் அறிவிக்கிறது. மறு பட்சத்தில், யெகோவாவின் சாட்சிகள் பைபிளைக் கருத்துடன் படிப்போராயிருக்கின்றனர். பெருகிக்கொண்டே போகும் எண்ணிக்கைகளில், இளைஞரும் முதியோரும், ஆண்களும் பெண்களுமான, அவர்கள் எல்லாரும் வாராந்தரக் கூட்டங்கள் பலவற்றிற்கு ஆஜராகிறார்கள். “அவர்களுடைய மதம் அவர்களுக்கிருக்கும் மிக அதிக விலைமதியா காரியமாகும், அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதே அவர்களுடைய ஒரே அக்கறை” என ஒரு செய்தித்தாளுக்கு எழுதப்பட்ட கடிதம் அவர்களைப்பற்றிக் கூறினது.
இத்தகைய மனப்பான்மை யெகோவாவின் அமைப்பை விலையுயர்ந்த ஒரு வைரத்தைப்போல் முனைப்பாய்த் தோன்றிநிற்கச் செய்கிறது. அதற்குரிய நன்மதிப்பு, தம்முடைய பரிசுத்த ஆவியைக் கொண்டு அபூரண ஆட்களைப் பலப்படுத்தி வழிநடத்துகிறவருக்கே செலுத்தப்படுகிறது.
தீர்க்கதரிசியான ஏசாயா பின்வருமாறு முன்னறிவித்தான்: “கர்த்தராகிய [யெகோவாவாகிய தி.மொ.] ஆண்டவர் சொல்லுகிறார்; இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், . . . இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், . . . இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், . . . இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே [நல்ல இருதய நிலையினால், NW] கெம்பீரிப்பார்கள்.”—ஏசாயா 65:13, 14.
இன்று நாம் இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் காண்கிறோம். கடவுள் தம்முடைய ஜனங்களை அசாதாரணமான ஒரு முறையில் கவனித்துக்காக்கிறார்! ஆகையால், நீங்கள் அவர்களுடன் கூட்டுறவுகொண்டால், எதிர்மறையான சிந்தனை உங்கள் சந்தோஷத்தைக் கெடுத்துப்போட அனுமதியாதீர்கள். முழுமையான தோற்றத்தைக் கண்டு: பூமியில் வேறு எந்த அமைப்பும் கடவுளுடைய தனிப்பட்ட கவனிப்பையும் பாதுகாப்பையும் அனுபவித்து மகிழ்கிறதில்லை என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அதன் ஒரு பாகமாயிருக்கும் உங்கள் சிலாக்கியத்தை உயர்வாய் மதித்துக் காப்பதை ஒருபோதும் நிறுத்திவிடாதீர்கள். (w91 11/1)