மண்ணிலிருந்து மகுடத்திற்கு
பெல்ஜியத்திலிருந்து விழித்தெழு! நிருபர்
ஆண்டாண்டு காலமாக தனக்கே உரித்தான பேரழகினால் நவரத்தினங்களின் பேரரசனாக திகழ்ந்து வருகிறது இது. கடினத்தன்மைக்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டு. மனிதனுக்குத் தெரிந்திருக்கும் இயற்கை கனிமப்பொருட்களில், இதை விட கடினமானது எதுவுமில்லை. ஆகவே இயந்திரங்களிலும் கருவிகளிலும் இது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உள்ளத்தைக் கொள்ளைக்கொள்ளும் அந்த கள்வன்தான் வைரம்.
பிரபலமான வைரங்களுக்கு கிளர்ச்சியூட்டும் பின்னணிகள் இருக்கின்றன. கோஹினூர் என்று அழைக்கப்படும் வைரக்கல், ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரத்தின் பெயருக்கு அர்த்தம் “ஒளிகளின் தீபம்.” ஒரிஜினலாக இந்த பெரியகல் 191 காரட்டாக இருந்தது, பின்பு 109 காரட்டாக பட்டை தீட்டப்பட்டது. a புகழ்பெற்ற வைரங்களின் அணிவரிசையில் அடுத்தது நிற்பது கல்லினன் என்பதாகும். இது பிரிட்டனின் கிரீட ஆபரணங்களில் அங்கம் வகிக்கிறது. உலகிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு, பட்டை தீட்டப்பட்ட மிகப்பெரிய வைரமாகும் இது.
கல்லெல்லாம் வைரமாக
வைரங்கள் அழகிய இரத்தினக் கற்களாக பிறப்பதில்லை. இவற்றில் அநேகம் நிலத்திற்கு அடியிலிருந்து தோண்டி எடுக்கப்பட வேண்டும். ஒரு காரட் சுத்தமான வைரத்தை பெறுவதற்கு சராசரியாக 250 டன் மண்ணை தோண்டி, சலித்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நான்கிலிருந்து ஐந்து கோடி காரட் வைரக்கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. இருப்பினும் அவற்றில் வெறுமனே மிகக்குறைவான அளவே ஆபரணங்களுக்கு தேறுகின்றன.
தோண்டி எடுக்கப்படும் கச்சா வைரங்கள் அளவு, சுத்தம், நிறம், வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன. இயற்கையில் ஏறக்குறைய எல்லா வைரக்கற்களும் மாசு படிந்ததாக இருக்கின்றன. ஆனால் சில சமயங்களில் வைரத்தின் ஒரு பகுதி இதற்கு விதிவிலக்காக இருக்கலாம் அல்லது ஓரளவிற்கு மாசின்றியிருக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்தில் சுத்தமாக இருக்கும் பகுதி மாத்திரம் தனியாக வெட்டப்பட்டோ அல்லது அறுக்கப்பட்டோ பிரிக்கப்படும். பெரிய மற்றும் விலைமதிப்புவாய்ந்த கற்கள் உட்பட்டிருந்தால், வைரங்களை செதுக்குபவர்கள் தங்களது வேலையை ஆரம்பிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே அவற்றை கூர்ந்து கவனித்து, எவ்விதம் பட்டை தீட்டினால் அதிக சேதாரம் இருக்காது என்பதாக யோசிக்கிறார்கள். ஏனெனில் செதுக்குவதில் ஒரு சிறிய தவறு ஏற்பட்டாலும் அந்த வைரக்கல்லின் மதிப்பு வெகுவாக குறைத்து விடும் அல்லது அந்த முழுக்கல்லே நாசமாகிவிடும்.
கடைசியாக வைரத்தின் வடிவத்திற்கேற்ப பட்டைத் தீட்டப்பட்டு மெருகூட்டப்படுகிறது; இதனால் அதனுடைய வடிவம் தெளிவாகிறது. மினுமினுப்பதற்கு பேர்போன வைரத்திற்கு, வெளிச்சத்தை பிரதிபலிக்கும் திறமையை இந்த பட்டைகள் அளிக்கின்றன.
மினுமினுக்கும் அழகான வைரக்கல்லை அடுத்த தடவை நீங்கள் பார்த்தால், இதை ஞாபகத்தில் வையுங்கள். சுரங்கத் தொழிலாளர்கள் கடுமையாக சிந்திய வேர்வையை நினைத்துக்கொள்ளுங்கள். வைரத்தை செதுக்கிய கைவினைஞர்களின் துல்லியமான, திறமைகளையும் மறந்து விடாதீர்கள். இவர்கள் இல்லையென்றால் கண்ணாடியைப் போன்ற கவர்ச்சியற்ற இந்தக்கல், மண்ணிலிருந்து மணிமகுடத்திற்கு ஒருக்காலும் உயர்ந்திருக்காது.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு கிராமில், ஐந்தில் ஒரு பங்குதான், ஒரு காரட் என்பதாக அழைக்கப்படுகிறது.