உலகை கவனித்தல்
இளையோர் மரணம்
தொழில்மயமாக்கப்பட்ட மற்ற 25 நாடுகளில் உள்ள பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது, ஐக்கிய மாகாணங்களில் உள்ள பிள்ளைகள், துப்பாக்கி வெடிகளால் மரிப்பதற்கான சாத்தியம் 12 தடவையும், மனிதனால் கொலைசெய்யப்படுவதற்கான சாத்தியம் 5 தடவையும், தற்கொலை செய்துகொள்வதற்கான சாத்தியம் இரண்டு மடங்கும் இருக்கிறது என்று த டல்லாஸ் மார்னிங் நியூஸ் அறிக்கை செய்கிறது. “ஐ.மா. உயர்ந்தளவு விகிதத்தைக் கொண்டிருக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் இவ்வளவு குறைந்த வித்தியாசத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியமடைந்தோம்” என்று ஜார்ஜியாவிலுள்ள அட்லாண்டாவின் நோய் தடுப்பு மையங்களுக்கான இந்த அறிக்கையின் ஒத்திசைவாளர் ஏட்யன் குரூக் சொல்கிறார். போதைப் பொருள், வறுமை, பிளவுபட்ட குடும்பங்கள், மற்றும் கல்விக்கு குறைந்தளவான வாய்ப்பு ஆகியவை பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் கொடூரமான மரணத்துடன் தொடர்புடைய மற்ற காரணங்களாகும்.
உணவினால் பரவும் தொற்றுநோய்கள்
வாடிக்கையாளர் மத்தியில் “வருடந்தோறும் வேறுபட்ட புதிய பொருட்களுக்கான” தேவை அதிகரித்துவருவதும் “உலகமுழுவதற்குமாக ஒரே இரவில் பொருட்களை அனுப்பும் உலகளாவிய சந்தையும்” ஐக்கிய மாகாணத்தில் உணவினால் பரவும் புதிய வியாதிகள் தோன்றுவதற்கு காரணமென ஜாமா (த ஜர்னல் ஆப் த அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்) அறிக்கையிடுகிறது. உணவினால் பரவும் நுண்ணுயிரிகள் “65 லட்சத்திலிருந்து 8.1 கோடி வரையான மக்களை வியாதிப்படுத்தி, ஐக்கிய மாகாணத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 9,000 மரணத்தை விளைவிக்கின்றன” என்று கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர். கரியச் சேர்க்கைப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவுகள் (மிருகத்தின் எருவைக் கொண்டு உரமூட்டப்பட்ட உணவுகள்) இந்தப் பிரச்சினைக்கு பங்களிக்கின்றன என்றும்கூட சில நிபுணர்கள் நம்புகின்றனர். ஜாமா-வின் அறிக்கை குறிப்பிடுகிறபடி, “வெப்பத்தையோ உப்பு போன்ற சேர்க்கைப்பொருட்களையோ அல்லது பதப்படுத்தும் பொருட்களையோ பயன்படுத்தி இ கோலி (E coli) என்ற நுண்ணுயிரியை கொல்லாவிடில், அது மாட்டின் எருவில் 70 நாட்கள் உயிருடன் இருக்கவும், அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுகளிலும்கூட பெருகவும் முடியும்.”
“புனித” குரங்குகள்—ஒரு தொந்தரவு
எவருக்காவது நினைவிருக்கிறவரை, ரீஸஸ் குரங்குகள் இந்தியாவிலுள்ள விருந்தாவனத்தில் எத்தனையோ ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றன என்று மனிதன்-குரங்கு உள்ளிட்ட உயிரின ஆராய்ச்சியாளர் இக்பால் மாலிக் சொல்கிறார். அநேகர் இக்குரங்குகளைப் புனிதமாக கருதுவதால், பிடிக்கப்படுவோம் என்ற பயமில்லாமல் அவை இந்துக்களின் இப்புனித நகரில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வருகின்றன—இன்று வரையிலுமாக அவ்வாறு தான் நடக்கிறது. நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறபடி, இந்த ரீஸஸ் குரங்குகள், அவற்றிற்கு உணவளிக்கும் யாத்திரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதன் காரணமாக, சமீப காலங்களில் எண்ணிக்கையில் அதிகரித்திருக்கின்றன. இந்த குரங்குகளுக்கு உணவளிப்பது செல்வச்செழிப்பைக் கொண்டுவரும் என்பதாகக் கருதப்படுகிறது. ஆண்டுகளினூடாக, இந்தக் குரங்குகள் இவ்வாறு கிடைப்பதை தின்பதிலே ஏறக்குறைய முழுவதும் சார்ந்திருப்பவையாக ஆகிவிட்டன; ஏனென்றால், பச்சை செடிகொடிகள் மிகவும் சிறிதளவுதான் கிடைக்கின்றன. “அவை ஷாப்பிங் பைகளைத் திருடவும், உணவிற்காக வீடுகளில் நுழையவும் ஆரம்பித்திருக்கின்றன.” இந்தக் குரங்குகளின் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவற்றைப் பிடித்து, நாட்டுப்புற பகுதிகளுக்கு அனுப்பிவிடுவதற்கு அக்குடிமக்கள் ஒத்துக்கொண்டிருக்கின்றனர். “இந்தக் கடவுட்கள் இப்போது தொந்தரவாக ஆகிவிட்டன” என்று மாலிக் சொல்கிறார்.
இறுக்கமாக இருக்கின்றனவா?
பிந்திய வளரிளமையில், நம்முடைய காலின் எலும்புகள் வளருவது நின்றுவிட்டாலும்கூட, நம்முடைய வாழ்நாள் முழுவதுமாக நம் பாதங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. கனடியன் போடியாட்ரிக் மெடிசின் அஸோசியேஷனின் தலைவர் நீல் கோவன் இவ்வாறு சொல்கிறார்: “நமக்கு வயதாகும்போது, நம் பாதங்கள் கொஞ்சம் தட்டையாகவும் விரிவாகவும் ஆவதற்கு முயல்வதால் அவை நீளமாகவும் அகலமாகவும் ஆகின்றன. இது ஏனென்றால் நம் பிணையங்கள் (ligaments) கொஞ்சம் அதிகம் லூசாகவோ அல்லது தளர்ந்ததாகவோ ஆகின்றன. வயதுவந்தவர்களில் பாதிபேர் தவறான அளவு ஷூக்களை அணிகின்றனர் என்று காலணி நிபுணர்கள் கணக்கிட்டிருக்கின்றனர்—அகலம் தானே அதிக பொதுவான பிரச்சினையாக இருக்கிறது—இது காய்ப்பு, மேல்தோல் தடிப்பு, பெருவிரல் முண்டு, மற்றும் பாதங்களின் அழகைக் குலைத்தல் போன்றவற்றிற்கு பங்களிக்கிறது. உங்களுடைய ஷூக்கள் அதிக டைட்டாக உள்ளனவா? “வெறும் பாதங்களோடு ஒரு துண்டு பேப்பரின்மீது நின்று பாதங்கள் இரண்டையும் சுற்றிலுமாக வரைந்தெடுங்கள். பிறகு பேப்பரின்மேலே ஷூக்களை வைத்து அவற்றையும் அதேவிதமாக வரைந்தெடுங்கள். இரண்டு படங்களையும் ஒப்பிடுவதன்மூலமாக ஷூக்களுக்குள்ளே உங்கள் பாதங்களை எந்தளவுக்கு திணிக்கிறீர்கள் என்பதை உங்களால் பார்க்க முடியும்” என்று த டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள் கூறுகிறது. சரியான அளவை பெற்றுக்கொள்வதற்காக, நீங்கள் ஷூக்கள் வாங்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் உங்கள் பாதங்களை அளந்திடுங்கள்; மேலும் அதிக நேரம் நடமாடிய பிறகு, மத்தியானத்திலோ, சாயங்காலத்திலோ வாங்குவதற்கு செல்லுங்கள்.
“அறியப்படாத எதிரிகளுக்காக” தேடுதல்
1997-ல், இத்தாலியிலுள்ள ரோமில் வாழும் மக்களுக்கு, அலர்ஜி அல்லது வைக்கோல் சளிக்காய்ச்சல் வழக்கத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டது என்று கோரீரே டேல்லா சேரா அறிவிக்கிறது. மகரந்தம் சீக்கிரமாக தாக்கியிருப்பதற்கு காரணம், “குளிர்காலத்தின் அளவை குறிப்பிடத்தக்க விதமாக குறைத்திருக்கும், கிரகத்தின் சராசரி சீதோஷ்ண நிலையில் பொதுவான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதே” என்று அலர்ஜி நிபுணர் ஒருவரால் கருதப்படுகிறது. “நல்ல சீதோஷ்ணநிலையுள்ள நாட்களிலும்கூட, அறியப்படாத மகரந்தங்கள் வந்துள்ளன. அந்தத் துறையில் நிபுணர்களாக இருப்பவர்களும்கூட இதை மறுதலிக்க முடியவில்லை” என்று அந்த செய்தித்தாள் குறிப்பிடுகிறது. எனவே “அறியப்படாத இந்த காரணத்தை தேடுவது” ஏற்கெனவே தொடங்கிவிட்டது, ஆனால் அதே சமயத்தில், “காரணங்கள் எவையென்று தீர்மானிக்கபட முடியாத அலர்ஜிகளால் நோயாளிகள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.”
அப்பத்தைக் கண்காணிக்கிறவர்கள்
மிஸ்ஸிஸிபி, பிகியூனிலுள்ள புனித சார்லஸ் கத்தோலிக்க சர்ச்சில், ஒருவரும் நன்மைவாங்கிய அப்பத்தை விழுங்காமல் சர்ச்சைவிட்டு செல்லாதபடிக்கு, அதை நிச்சயப்படுத்திக் கொள்ள காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கத்தோலிக்கர் புனிதமாக கருதும் இந்த அப்பத்துடன், அல்லது கம்யூனியன் அப்பத்துடன் மக்கள் சர்ச்சைவிட்டு செல்வது அதிகமாக நடக்கிறது என்ற புகார்கள் வர ஆரம்பித்தபிறகு இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “சாத்தான் வணக்கத்தார் கம்யூனியன் அப்பத்தின் புனிதத்தன்மையைக் கெடுக்கவேண்டும் என்பதற்காகத் தான் அதை பெற்றுக் கொள்கிறார்கள்” என்று பாதிரி ஜான் நூன் குற்றம்சாட்டுகிறார் என்பதாக த டல்லாஸ் மார்னிங் நியூஸ் குறிப்பிடுகிறது. நன்மை வாங்குபவர்களை கண்காணிக்கும் காவலர்களின் வேலை சர்ச் அங்கத்தினர்கள் அதை உண்மையில் விழுங்குகிறார்களா என்பதை கவனிப்பதே. அப்படி இல்லையென்றால், ஒன்று அந்த அப்பத்தை சாப்பிடவேண்டும் அல்லது அதை அவர்களிடம் திருப்பி கொடுத்துவிடவேண்டும் என்று சர்ச்சுக்கு வருகிறவர்கள் மரியாதையுடன் கேட்கப்படுகிறார்கள்.
வீடியோ பிளாஷ் பேக்
பெடியாட்ரிக்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, “இசை வீடியோக்கள் வன்முறையினிடமாக பார்வையாளர்கள் கொண்டிருக்கும் உணர்ச்சியை மழுங்கச் செய்வதன்மூலமும் திருமணத்துக்கு முன்பான பாலுறவை பருவவயதினர் ஏற்றுக் கொள்வதை அதிக சாத்தியமாக்குவதன்மூலமும், நடத்தையின்மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அநேக சோதனைமுறை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெற்றோர் அதிகளவாக கவலைகொள்ள வேண்டியது ஹெவி மெட்டல் மற்றும் கேங்ஸ்டா ராப் பாடல்களிலுள்ள வரிகளைக் குறித்துதான். “பருவவயதினரின் ஒரு சிறிய கிளைத் தொகுதியினருக்கு, இசையைத் தேர்ந்தெடுப்பது அவர்களைப் பற்றி அதிகமாக சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம். ஹெவி மெட்டல் இசையைத் தேர்ந்தெடுப்பதானது, பருவவயதினர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, போதைப் பொருட்களை துர்ப்பிரயோகிப்பது, மனக்கோளாறுகள், தற்கொலை செய்துகொள்வதற்கான அபாயம், ஆண் பெண் பாத்திரபடைப்புகளைப் பற்றி இவர்களாகவே மனதில் உருவாக்கும் மாற்றமுடியாத கருத்து, அல்லது வளரிளமையின் போது அபாயத்துக்குள்ளாக்கும் நடக்கைகளைக் கொண்டிருப்பது போன்றவற்றிற்கு ஒரு குறிப்பிடத்தக்க அறிகுறி என்பதாக அநேக ஆய்வுகள் காண்பிக்கின்றன. எட்டு டாக்டர்களால் 1995-க்கும் 1996-க்கும் இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட இந்த அறிக்கை சொல்கிறது: “பார்வையாளர்கள் இந்த வீடியோ தொகுப்பை பார்த்தபிறகு பாட்டைக் கேட்பார்களானால், அந்த வீடியோவில் பார்த்த காட்சிகளின் ‘பிளாஷ் பேக்’ மனதில் தோன்றுகிறது.”
யானைச் சாணம் பேப்பர்
மைக் புகாரா தன்னுடைய கொல்லைப்புறத்தில் யானைச் சானத்தை சட்டிகளில் கொதிக்கவைத்துக் கொண்டிருந்ததை அவருடைய அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் கவனித்தபோது, அவர்கள் ஓரளவு கவலையடைந்தது புரிந்துகொள்ளத்தக்கதே. அவர் மாயமந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார் என்று சிலர் நினைத்தனர்; ஆனால் அவர் உண்மையில் பேப்பர் தயாரித்துக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் திரு. புகாரா வாழைப்பழத்திலிருந்தும், சோளத்திலிருந்தும், யூகலிப்டஸ் இலைகளிலிருந்தும் பேப்பரைத் தயாரித்தார். ஆனால் கென்யாவின் யானைக்கூட்டத்திலிருந்து தாராளமாக கிடைத்த உயர்ந்தளவு நாருள்ள சாணம், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் ஆர்வமுள்ள இவருக்கு, அதைப் பேப்பர் தயாரிக்க பயன்படுத்துவதைக் குறித்து யோசிக்க வைத்தது. “உயிரினங்களை உயிரோடு வைக்கவேண்டியதன் அவசியத்தைக் குறித்து மக்களுக்கு விழிப்பூட்டுவதற்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று அவர் தீர்மானித்தார்” என்று நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. இப்போது, கென்யா வனவிலங்கு சேவைகளின் இந்த 50-ம் ஆண்டுவிழாவின் அழைப்பிதழ்களுக்காக இந்த யானைச் சாணத்தாலான பேப்பர் பயன்படுத்தப்படுகிறது.
சாப்பிடும் பழக்கவழக்கங்கள்
டிவியே “அதி நவீன பழக்கவழக்கங்களின் குவிமையமாக” திகழ்கிறது என்று த நியூ யார்க் டைம்ஸ் சொல்லுகிறது. அதில் கொடுக்கப்பட்டிருந்த ஒரு உதாரணமானது டெலிவிஷனைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது—உலகமுழுவதிலுமுள்ள நாடுகளில் இப்போது ஒரு பழக்கமாக உள்ளது. உதாரணமாக, மெக்ஸிகோவில், அநேக குடும்பங்கள் தொடர் நாடகநிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டே இரவு உணவைச் சாப்பிடுகிறார்கள். பிரான்ஸில் சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பு “62 சதவீதமானோர் டிவியை பார்த்தவாறே சாப்பிடுகிறார்கள்” என்று வெளிப்படுத்தியது. சீனாவில் வறுத்த தர்பூசணி விதைகளைக் கொறித்துக் கொண்டே முக்கியமான டிவி நிகழ்ச்சிகளை அனுபவித்துக் களிக்கின்றனர். இந்த கருப்பு விதைகளோடுகூட, சூரியகாந்தி விதைகளும், பிஸ்தா பருப்புகளும், இஸ்ரேலில் டிவி பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றன. பிலிப்பீன்ஸில் டிவி நேர நொறுக்குத்தீனியில் வாட்டப்பட்ட கோழிக்கால், பன்றியின் காதுகள், மற்றும் பற்றுக்கரண்டியால் சுடப்பட்ட கோழிக்குடல் ஆகியவை உள்ளடங்குகின்றன. இஷ்டமாக சாப்பிடப்படும் ஒரு சிற்றுண்டி பாலூட்—“குஞ்சுபொறிக்காத வாத்துமுட்டைக்கருவை வேகவைத்து, அதன் ஓட்டோடு அதை இரண்டாக பிளந்து, அதன்மீது உப்பை தூவி சாப்பிடுவது” என்று டைம்ஸ் சொல்லுகிறது.
செலவில்லாத காலரா தடுப்புமுறை
காலராவைத் தடுப்பதற்கென்று ஒரு செலவில்லாத முறையைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்—குடிநீரை புடவைகளின் வாயிலாக வடிகட்டுதல்! காலராவை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள், நீரில் வாழும் கோப்பிபோடுகள் (copepods), சென்னாக்கோனி போன்ற நீத்தும் சிற்றுயிரிகளின் (planktonlike crustaceans) குடல்களில் குடியேறுகின்றன என்பதாக ஐக்கிய மாகாணங்களிலுள்ள மேரிலாண்ட் யூனிவர்சிட்டியிலும் வங்காள தேசத்தின் தாக்காவிலுள்ள வயிற்றுப்போக்குடன் சம்பந்தப்பட்ட நோயின் ஆராய்ச்சிக்கான உலகளாவிய மையத்திலும் உள்ள ஆராயச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். புடவைத் துணியை நான்காக மடித்து தண்ணீர் ஊற்றுவதன் மூலம், 99 சதவீதத்திற்கும் அதிகமான காலரா நுண்ணுயிரிகள் நீக்கப்பட முடியும். பிறகு, அந்த புடவை சூரியவொளியில் நேரடியாக இரண்டுமணிநேரம் வைக்கப்படுவதனாலோ, அல்லது, மழைக்காலங்களில், விலைக்குறைவான கிருமிநாசினியைக் கொண்டோ சுத்தப்படுத்திவிட முடியும். இந்த செயல்முறை மக்கள் மத்தியில் செய்துகாட்டப்படுவது இந்த வருடம் துவங்கும்; அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த முறையை எப்படிச் செயல்படுத்துவது என்பதைக் குறித்து கற்றுக்கொடுக்கப்படும் என்று லண்டன் செய்தித்தாள் த இண்டிபென்டன்ட் குறிப்பிடுகிறது.
துப்பாக்கிகளில் அமெரிக்காவின் தீவிர ஆர்வம்
“தேசியளவான ஒரு கணக்கெடுப்பின்படி, அமெரிக்காவில் வாழும் வயதுவந்த 10 பேரில் நான்கு பேர் துப்பாக்கிகள் உள்ள குடும்பங்களில் வாழ்கின்றனர்; அந்த குடும்பங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கின்றன” என்று நியூயார்க்கின் டெய்லி நியூஸ் அறிக்கை செய்கிறது. “அந்தக் கணக்கெடுப்பில் 25 சதவீதத்தினர் தங்களிடம் ஒரு பிஸ்டல் இருப்பதாகவும், 27 சதவீதத்தினர் தங்களிடம் ஒரு வேட்டைத்துப்பாக்கி இருப்பதாகவும், 29 சதவீதத்தினர் தங்களிடம் ஒரு ரைபில் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.” அநேக வீடுகளில், ஒரு வகை மட்டுமல்ல, பல வகையான துப்பாக்கிகள் இருக்கின்றன.