மதக் கண்காட்சி
இத்தாலியிலிருந்து விழித்தெழு! நிருபர்
பிப்ரவரி 1995-ல், நவீனகால அற்புதம் என நம்பப்பட்ட ஒரு செய்தி உலகமெங்கும் பரவியது. அது, சிவிட்டாவெக்யாவில் மரியாளின் சிலை ரத்தக் கண்ணீர் வடித்ததாக காணப்பட்ட செய்தி. அது முதற்கொண்டு, உலகம் முழுவதிலுமுள்ள கத்தோலிக்கர்கள் அந்தச் சிலையை தரிசிக்க யாத்திரை சென்றிருக்கின்றனர்.
இருந்தபோதிலும், லா ரேப்பூப்ளிக்கா என்ற செய்தித்தாளின்படி, அநேக கத்தோலிக்கர்கள் அந்தச் சுற்றுலா மையத்தில் நிலவும் ‘கண்காட்சி சூழலால்’ எரிச்சலடைந்துள்ளனர். அந்தச் சிலையை வணங்க திரண்டு வரும் மக்கள் கூட்டத்தினரைக் குறித்து சில இறையியலாளர்களும்கூட கலக்கமடைந்திருக்கின்றனர். உதாரணத்திற்கு, மிலான் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் ஆசிரியராய் பணியாற்றும் லூயிஜி பிட்ஸோலாட்டோ என்பவர், “உணர்ச்சிப்பூர்வமாய் எழுப்பப்பட்ட” விசுவாசத்தில் மட்டுமே திருப்தியடைந்திருக்கும் சர்ச்சை குறைகூறுகிறார். அற்புதம் என சொல்லப்படும் இச்சம்பவத்தால் ஏற்படும் விளைவுகள், “மூடநம்பிக்கையால் மோசமாக்கப்படுகின்றன” என அவர் சொல்கிறார். மற்றொரு இறையியலாளரான கார்லோ மலாரி நமக்கு இதை நினைப்பூட்டுகிறார்: “சீமோன் என்ற ஒரு மந்திரவாதி தனக்கிருந்த மாய சக்திகளை சொந்த லாபத்திற்காக—இன்றைய வழக்கில், பணம் சம்பாதிப்பதற்காக—பயன்படுத்தினான் என புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.”—அப்போஸ்தலர் 8:9-24.
“பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும்” செய்வோரைக் குறித்து ஜாக்கிரதையாய் இருக்கும்படி இயேசு தமது சீஷர்களை எச்சரித்தார். (மத்தேயு 24:3, 24) அப்படிப்பட்ட அடையாளங்கள் நம்பத்தகுந்தவையாய் தோன்றினாலும், ஒரு கிறிஸ்தவனது விசுவாசம் அற்புதங்கள் என சொல்லப்படுபவற்றை ஆதாரமாகக் கொண்டிருக்க முடியாது. (எபிரெயர் 11:1, 6) மாறாக, கடவுளது வார்த்தையின் திருத்தமான அறிவைப் பெற்றுக்கொண்டு அதன் அறிவுரைகளை வாழ்க்கையில் பொருத்துவதன் மூலமாகவே பலமான விசுவாசத்தைப் பெறமுடியும். (யோவான் 17:3; ரோமர் 10:10, 17; 2 தீமோத்தேயு 3:16) அப்படிப்பட்ட விசுவாசம் உங்களுக்கு வேண்டுமா? அடுத்த முறை யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்திக்கையில், அவர்கள் உங்களுக்கு உதவிசெய்ய ஏன் அனுமதிக்கக்கூடாது?
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
AGF/La Verde