உலகை கவனித்தல்
பிறப்புறுப்பு அக்கி அதிகரித்தல்
ஐக்கிய மாகாணங்களில், “எய்ட்ஸ் வராமல் பாதுகாத்துக் கொள்வதற்காக, பாதுகாப்பான பாலுறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளபோதிலும், 1970-களின் பிற்பகுதியிலிருந்து வெள்ளைக்கார டீனேஜர்களிடையே பிறப்புறுப்பு அக்கி ஐந்து மடங்கு அதிகரித்திருக்கிறது” என அசோஸியேட்டட் பிரஸ் அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனாலும், இதே காலப்பகுதியின்போது, பாலுறவால் கடத்தப்படும் வெட்டைநோய் (gonorrhea) போன்ற நோய்கள் குறைந்துவிட்டன என்றும் குறிப்பிடப்பட்டது. ஏன் அக்கி அதிகரித்துவிட்டது? அவற்றுக்கான காரணங்களுள் ஒன்று, திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்வோரும், பலருடன் பாலுறவு கொள்வோரும் அதிகரித்துவிட்டமையே. அமெரிக்க நாட்டவரில் 4.5 கோடி பேருக்கு அக்கி வைரஸ் தொற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் அதை அறியாமலே இருப்பதாகவும் இப்போது கணக்கிடப்படுகிறது. இந்த வைரஸ், புண்களை அல்லது அரிப்பை எப்பொழுதாவது பிறப்புறுப்பிலும், சில சமயங்களில் பிட்டத்தைச் சுற்றியோ அல்லது தொடைகளிலோ ஏற்படுத்துகிறது.
இங்கிலாந்து திருச்சபை நலிவுறுகிறது
இங்கிலாந்து திருச்சபையைச் சேர்ந்த சர்ச்சுகளில் ஆராதனைக்கென ஒவ்வொரு ஞாயிறும் சென்றுவருவோரின் எண்ணிக்கை பத்து லட்சம் என அதிகாரப்பூர்வமாய் கணிக்கப்படுகிறது. ஆனால் இரகசியமாகவோ, சர்ச்சுகளுக்கு சென்றுவருவோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைக் காட்டிலும் 25 சதவீதமாவது அது குறைவாக இருக்கலாம் என்று உயர்பதவி வகிக்கும் சில குருமார்கள் ஒத்துக்கொள்கின்றனர். என்றபோதிலும், நற்கருணை பெற்றுவரும் அடிப்படை அங்கத்தினரின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்தைக் காட்டிலும் குறைவாய், முதல் முறையாக சரிந்துவிட்டது என முறைப்படியான ஒரு சுற்றாய்வு காட்டுகிறது. தங்கள் சர்ச்சுக்கு வருவோரின் எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்வதில் குருமார் ஏன் தயங்குவதேயில்லை? மிக முக்கியமாக, தங்களது சர்ச்சுகள் மூடப்படாமல் காப்பதற்காகவே அவ்வாறு மிகைப்படுத்திச் சொல்கின்றனர். அவ்வாறு சர்ச்சுகள் மூடப்பட்டால், குருமார்களது பங்குகள் ஒன்றாகச் சேர்க்கப்படும்; சில குருமாரே தேவைப்படுவர். லண்டனின் த சன்டே டைம்ஸ் பின்வருமாறு அறிக்கை செய்வதன்படி, ஒரு பங்குத்தந்தை இவ்வாறு உண்மையை ஒத்துக்கொண்டார்: “எண்ணிக்கையை மிகைப்படுத்திச் சொல்வதே எனக்குப் பழக்கமாகிவிட்டது. மிகக் குறைவானவர்கள் ஆஜராவது உற்சாகமிழக்கச் செய்கிறது; ஆகவே, உண்மையில் அதிகம் பேர் ஆஜராகியிருப்பதுபோல் பதிவுசெய்கையில், அது என்னை நானே உற்சாகப்படுத்திக்கொள்ள உதவுகிறது.”
புகைக்கும் மனைவிமீது கணவனின் வழக்கு
தன் மனைவி புகைப்பதை நிறுத்தச்செய்யும் முயற்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ரிச்சர்ட் டாமஸ் கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்தார்; ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. ஆகவே மனைவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தான் நேசித்த பெண்ணின் அன்பையும் ஆதரவையும் தோழமையையும் இழப்பதிலிருந்து தன்னை அரசு காக்கும்படி விரும்புவதாக திரு. டாமஸ் கூறினார். அவருடைய அம்மா இதய நோயால் ஏற்கெனவே இறந்துவிட்டார்கள்; அப்பாவுக்குப் பக்கவாதம் வந்துவிட்டதால் ஏழு ஆண்டுகளாக படுத்தபடுக்கை ஆகிவிட்டார். அவரது பெற்றோர் இருவருமே மிதமிஞ்சி புகைபிடித்தவர்கள், எனவே தன் மனைவியும் நிக்கட்டினுக்கு அடிமையாகி இறப்பதை தான் விரும்பவில்லை என்பதாக அவர் கூறினார். என்றாலும், நீதிமன்ற தீர்ப்பிற்கு முன்னதாகவே, திரு. டாமஸ் நல்ல செய்தியுடன் திரும்பி வந்தார். “புகைப்பதை நிறுத்த என் மனைவி ஒத்துக்கொண்டுவிட்டாள்” என அவர் சொன்னார். திருமதி டாமஸ் மறுவாழ்வு மையம் ஒன்றில் சேர்ந்து, சிகரெட்டுகளை இனி தான் என்றுமே தொடப்போவதில்லை என சபதம் செய்தார். த நியூ யார்க் டைம்ஸ் கூறுவதன்படி, டாமஸ் தம்பதியினர் கைகளைக் கோர்த்துக்கொண்டு நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.
ஆஸ்திரேலிய காட்டு ஒட்டகங்கள்
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டன; அந்நாட்டில் சமாளிக்கக் கடினமான நாட்டுப்புறத்தின் குறுக்கே தந்தி மற்றும் ரயில் மார்க்கம் போடப்பட வேண்டிய வேலைக்காக அவை பயன்படுத்தப்பட்டன. பலமிக்க இவ் விலங்குகளின் இடத்தை டிரக்குகள் பிடித்துக்கொண்டதும், அவற்றின் ஆப்கானிய எஜமானர்களில் அநேகர் அவற்றைக் கொன்று உண்பதற்குப் பதிலாக காட்டுக்குள் அவிழ்த்துவிட்டனர். ஒட்டகங்கள் வறண்ட மத்திப ஆஸ்திரேலியாவில் புஷ்டியானதுடன், இன்றைய கணக்குப்படி, அங்கு 2,00,000 ஒட்டகங்கள்வரை காணப்படுகின்றன. ஒட்டகங்கள், மதிப்புவாய்ந்த தேசிய சொத்தாக மாறலாம் என சிலர் இப்போது நம்புகின்றனர் என்பதாக தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. ஒட்டக மாமிசம் ஏற்கெனவே சந்தைகளில் விற்பனைக்கென பரிசோதிக்கப்பட்டிருக்கிறது; அது, மாட்டு மாமிசத்தைப் போலவே இளசாயும், கொழுப்புச்சத்து குறைவாயும் இருப்பதாய் சொல்லப்படுகிறது. ஒட்டகத்தின் பிற பொருட்கள், தோல், பால், ரோமம் ஆகியவற்றையும், சோப்பு மற்றும் அழகு சாதனங்களில் பயன்படுத்தப்படும் கொழுப்பையும் உள்ளடக்கும். உயிருள்ள ஒட்டகங்களுக்கும் மவுசு அதிகம். மத்திப ஆஸ்திரேலிய ஒட்டகத் தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பீட்டர் ஸைடல் சொல்வதன்படி, “ஏராளமான சர்வதேச மிருகக்காட்சி சாலைகளும் சுற்றுலா வனவிலங்கு பூங்காக்களும் ஆஸ்திரேலிய ஒட்டகங்களையே விரும்புகின்றன; ஏனெனில் எங்களிடம் உள்ள ஒட்டகங்கள் நோயற்றவை.”
ஆர்சனிக் நச்சு
“கிட்டத்தட்ட 1.5 கோடி பங்களாதேஷ் மக்களும், கல்கத்தா மக்கள் உட்பட, 3 கோடி மேற்கு வங்காள மக்களும் ஆர்சனிக் நச்சுக்கு ஆளாகி இருக்கின்றனர்” என த டைம்ஸ் ஆஃப் இண்டியா அறிக்கை செய்கிறது. பசுமை புரட்சியின் எதிர்பாரா உப பொருளே பிரச்சினைக்குக் காரணம். பயிர்களுக்கென பாசன வசதி செய்யும்பொருட்டு ஆழ்கிணறுகள் தோண்டப்பட்டபோது, பூமிக்குள்ளிருக்கும் ஆர்சனிக் இயற்கைப் படிவம் நீரின் மேற்பரப்புக்கு வந்தது; அதுவே குடிநீருக்கென பயன்படுத்தப்படும் கிணற்றுக்குள் காலப்போக்கில் கசிந்தது. அ.ஐ.மா.-வின் கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் நிபுணர் வில்லார்ட் சாப்பல், பாதிக்கப்பட்ட பகுதிகளை சமீபத்தில் பார்வையிட்டார்; இந்தப் பிரச்சினையை, “உலகிலேயே மிகப் பெரிய ஒட்டுமொத்த நச்சு சம்பவம்” என்று விளக்கினார். ஆர்சனிக் நச்சின் ஓர் அறிகுறியான தோல் உருக்குலைவால் 2,00,000-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே தவிக்கின்றனர். “பசிக்கொடுமையை (பசுமைப் புரட்சியால்) ஒழித்துவிட்டதாக நாம் எண்ணினோம்; ஆனால் அதைச் செயல்படுத்தும் பாதையிலோ, அதிக தொல்லையை உருவாக்கியிருக்கிறோம்” என பங்களாதேஷ் அரசு அதிகாரி ஒருவரான ஈஷாக் அலி கூறினார்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள்
“1990-ன் மத்திபத்தில், [அமெரிக்க] பெண்களில் ஆரம்பப் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைகளை உடையவர்களில் 65 சதவீதத்தினரும், பள்ளிக்குச் செல்லும் வயதுள்ள பிள்ளைகளை உடையவர்களில் 77 சதவீதத்தினரும் பணியில் அமர்த்தப்படுவர்” என வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான தேசிய கழகம் 1991-ல் கணக்கிட்டது. அவர்களது கணிப்பு எந்தளவுக்கு திருத்தமாக இருந்தது? 1996-ல், ஐ.மா. சென்சஸ் பீரோவினால் எடுக்கப்பட்ட கணக்கின்படி, ஐந்து வயதுக்குக் கீழான பிள்ளைகளையுடைய 63 சதவீத பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டதாக த வாஷிங்டன் போஸ்ட் அறிக்கை செய்கிறது. பள்ளி செல்லும் வயதுள்ள பிள்ளைகளையுடைய தாய்மார்களில் 78 சதவீதத்தினர் வேலைக்குச் செல்பவர்களாய் இருந்தனர். ஐரோப்பாவைப் பற்றியென்ன? ஐரோப்பிய யூனியனின் புள்ளிவிவர அலுவலகத்தால் தொகுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், 1995-ன்போது ஐரோப்பிய நாடுகளில் “5 முதல் 16 வயது பிள்ளைகளை உடையவர்களாயும் அதே சமயத்தில் வேலைக்குச் செல்பவர்களாயும் இருந்த தாய்மார்களின் விகிதமானது,” போர்த்துகல் 69 சதவீதம், ஆஸ்திரியா 67, பிரான்ஸ் 63, பின்லாந்து 63, பெல்ஜியம் 62, பிரிட்டன் 59, ஜெர்மனி 57, நெதர்லாந்து 51, கிரீஸ் 47, லக்ஸம்பர்க் 45, இத்தாலி 43, அயர்லாந்து 39, ஸ்பெய்ன் 36 என இருந்தது.
திவால் சர்வசாதாரணம்
1996-ல், “இதுவரையில் பெரும் எண்ணிக்கையான 12 லட்சம் அமெரிக்கர்கள் திவால் ஆனதாக அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டது; இது 1994-ல் இருந்ததைவிட 44 சதவீதம் அதிகம்” என நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிடுகிறது. “திவால் ஆவது சர்வசாதாரணம் ஆகிவிட்டதால், அது அவமானத்துக்குரியதாய்த் தோன்றுவதில்லை.” திவால்களின் அதிகரிப்புக்குக் காரணங்கள் யாவை? “தெரிவு செய்யப்படும் மற்றொரு வகை வாழ்க்கைப்பாணி என திவாலை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் அதிகரிப்பது” ஒரு காரணம் என நியூஸ்வீக் கூறுகிறது. “திவாலைப் பற்றிய மாறுபட்ட மனோபாவம், திவாலைத் தவறாக பயன்படுத்திக்கொள்ளத் துணைபோகிறது என கடன் கொடுத்தவர்கள் கூறுகின்றனர்: திவாலாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாய் அறிவிக்கப்பட்டவர்களில் 45 சதவீதத்தினர் தங்கள் கடனை திரும்பச் செலுத்த முடிந்தவர்கள் என ஓர் ஆய்வு கூறுகிறது.” ஆனால் தாங்கள் பட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் விருப்பத்தையும் அவமான உணர்வையும் வெளிக்காட்டுவதற்குப் பதிலாக, ‘என் கடன் யாவும் ரத்து செய்யப்பட்டு புதுக் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்’ என அநேகர் வெறுமனே சொல்கின்றனர். திவாலை ஒரு சாக்காக பயன்படுத்தும் தனிநபர்களும் கூட்டு நிறுவனங்களும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர், இவர்களும் வழக்கறிஞர்களது பின்வரும் விளம்பரங்களால் செல்வாக்கு செலுத்தப்படுகின்றனர்; அதாவது, “உங்கள் கடன் தொல்லைகளை விரைவாகவும் எளிதாகவும் தீர்ப்பீர்!!” பொருளியல் முன்னேற்றத்தின்போது, திவால் ஆனவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதானது, இருப்புச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டாலோ, பொருளாதார மந்தம் ஏற்பட்டுவிட்டாலோ என்ன நேரிடுமோ என வல்லுநர்களை திடுக்கிடச் செய்கிறது.
நாசப்படுத்தும் மீன்பிடி பழக்கங்கள்
எண்ணிக்கையில் குறைந்துகொண்டே வரும் மீன்களைப் பிடிக்க, கடலின் அடித்தளத்தில் மூலைமுடுக்கெல்லாம் தேடும் ஒரு கருவியில் வணிக மீன்பிடி கப்பல்கள் முதலீடு செய்துவருகின்றன. இக் கடல்படுகைக் கருவி, நடமாடும் கருவி என அழைக்கப்படுகிறது; இது, 1,200 மீட்டர் வரையான ஆழத்திலிருக்கும் சமுத்திர அடித்தளம் முழுவதிலும் இழுத்துச் செல்லப்படுகிறது; இவ்வாறு செய்வது, முன்பெல்லாம் புறக்கணிக்கப்பட்ட மீன் இனங்களைச் சேகரிக்க உதவுகிறது. இதனால் ஏற்படும் பிரச்சினை என்னவெனில், எண்ணிக்கையில் மிக அதிகமான “குழாய் புழுக்களும், கடற்பஞ்சுகளும், அனிமோன்களும், ஹைட்ரோஸோவன்களும், அர்ச்சின்களும் எண்ணற்ற பிற கடல் உயிரிகளும்” தெரியாமலே பிடிக்கப்பட்டு, “கழிவுப்பொருட்களாக நீக்கப்படுகின்றன” என சயன்ஸ் நியூஸ் அறிக்கை செய்கிறது. இவற்றை அழிப்பது, மீன் இருப்பைக் குறைக்கும் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்குகிறது. ஏனெனில் இவ்வுயிரிகள் சிறுசிறு மீன்களுக்கு உணவையும் உறைவிடத்தையும் அளிக்கின்றன. இந்த மீன்பிடி முறையினால் கடல்வாழிடத்தை அழிப்பது, “நிலப்பகுதியிலிருக்கும் காடுகளை ஒட்டுமொத்தமாய் அழிப்பதற்கு” சமம் என அ.ஐ.மா., வாஷிங்டன் மாகாணத்தைச் சேர்ந்த ரெட்மண்ட் நகர கடல்துறை காப்பு உயிரியல் நிலைய இயக்குநரான எலியட் நார்ஸ் கூறுகிறார்.
பிரிட்டனில் டீனேஜர் ஒழுக்கநெறி
பிரிட்டனிலுள்ள மத நிறுவனங்கள் பாலியல் ஒழுக்கநெறியை டீனேஜர்களுக்கு அறிவுறுத்தும் போராட்டத்தில் தோல்வியடைந்து வருகின்றன என சமீபத்திய அறிக்கை ஒன்று குறிப்பு தெரிவிக்கிறது. லண்டன் பல்கலைக்கழகம், நீண்ட காலமாய் “தொடர்பு வைத்திருக்கும் மணமாகாத ஒரு தம்பதியர் உடலுறவில் ஈடுபடுவது ஒழுக்கம் சம்பந்தப்பட்டதில் தவறா” என 3,000 டீனேஜர்களைக் கேட்டது. எதிர்பார்த்தபடியே, தங்களை நாத்திகர்கள் என்றோ அறியொணாமைக் கொள்கையினர் என்றோ அழைத்துக்கொள்பவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே தவறில்லை என்றனர். என்றாலும், ரோமன் கத்தோலிக்கர்களில் 85.4 சதவீதத்தினரும் ஆங்கலிக்கன் பிரிவினர்களில் 80 சதவீதத்தினரும்கூட அது தவறில்லை என்றனர். ஒரு தொகுதியாக, முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் இன்னும் பிற மதத்தினர் ஆகிய அநேகரிலும் ஏறக்குறைய அதே எண்ணிக்கையினர் அவ்வாறே கூறினர். இந்தச் சுற்றாய்வு, “பாலியல் ஒழுக்கநெறியில் பாரம்பரிய தராதரத்தை நிலைநிறுத்துவதாக சொல்லிக்கொள்ளும் சர்ச்சுகளுக்குச் செல்பவர்களின் உற்சாகத்தை இழக்கச் செய்யும் தகவல்” என லண்டனின் த டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பு தெரிவிக்கிறது.