உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 9/22 பக். 28-29
  • உலகை கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகை கவனித்தல்
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மணத்துறவு—ஏன்?
  • மீன்வலை படுகொலை
  • பொம்மைகளில் இரசாயனம்
  • சாமியாரில்லாத சர்ச்சுகள்
  • அர்மகெதோன் சூதாட்டம்
  • வியர்வை நாற்றமற்ற துணிமணிகள்
  • தண்ணீர் கவலைகள்
  • ஐ.மா.-வின் அதிகரிக்கும் சிறைக்கைதிகள்
  • திவால்கள்—அதிகரிப்பு
  • இரசாயனங்கள்—நண்பனா, பகைவனா?
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1998
  • விளையாட்டுச் சாமான்கள் அன்றும் இன்றும்
    விழித்தெழு!—2005
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 9/22 பக். 28-29

உலகை கவனித்தல்

மணத்துறவு—ஏன்?

“மணத்துறவைப் பற்றி கத்தோலிக்க சர்ச்சில் நடக்கும் சூடான விவாதமே குருமார்கள் எதிர்ப்படும் சவால்களில் மிகப் பெரியது” என வேஸா பத்திரிகை தெரிவிக்கிறது. “1970-⁠ல், திருமணம் செய்துகொள்வதற்காக 10,000 பாதிரிமார்கள் தங்களுடைய பதவியையும் துறந்துவிட்டனர். இன்று, அந்த எண்ணிக்கை 1,20,000 என உயர்ந்திருக்கிறது. 12 மடங்கு அதிகம். பிரேஸிலில், அதே காலப்பகுதியில் இந்த மாதிரி தீர்மானத்தை எடுத்த பாதிரிமார்களின் எண்ணிக்கை 20 மடங்கு அதிகமாகும்.” ரோமன் கத்தோலிக்க சர்ச் தலைவர்களுடைய தர்க்கங்களுக்கு வேதப்பூர்வ ஆதாரமில்லை. என்றபோதிலும், இவர்கள் மணத்துறவை ஆதரித்து வாதிடுகின்றனர். “கடவுளுடைய காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்து”வதற்கும் தங்களுடைய வேலைகளை பொறுப்போடு செய்வதற்கும் பாதிரிமார்களுக்கு துறவி வாழ்க்கையே சிறந்தது என சொல்கின்றனர். “மணத்துறவைப் பற்றி நடக்கும் இந்த தர்க்கம் உப்புச்சப்பில்லாதது” என வேஸா குறிப்பிடுகிறது. “இந்தக் கருத்து இடைநிலைக்காலத்தில் முளைத்ததே. சர்ச்சுக்கு சொந்தமான நிலம், மற்ற உடைமைகள் வாரிசுகளுக்கு செல்லாமல் தடுப்பதற்காகவே இந்தக் கருத்து தோன்றியது.”

மீன்வலை படுகொலை

“ஒவ்வொரு வருடமும், கனடாவின் பரப்பளவைவிட அதிகமான அளவில் கடலின் அடிப்பரப்பில் வலை போடப்படுகிறது” என த க்ளோப் அண்ட் மெயில் பத்திரிகையில் ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. “கடலின் அடிப்பரப்பில் பெரிய வலைகள் போடப்படுகின்றன. இவை, கடல்வாழ் உயிரினங்களின் உணவு சுழற்சிக்கு அவசியமான எல்லா உயிரினங்களையும் மீன்களோடு சேர்த்து கண்மூடித்தனமாக கொன்றுவிடுகின்றன. மீனவர்களுக்கு தேவையில்லாத மற்ற உயிரினங்களும் இந்த வலைகளில் அகப்பட்டு கொல்லப்படுகின்றன.” “பிடிக்கப்படும் ஒவ்வொரு இரால் மீனோடும் 10 அல்லது அதற்கும் மேற்பட்ட சிறிய டர்பாட் என்னும் மீன்களும் அல்லது காட் என்னும் மீனின் குஞ்சுகளும் வலைகளில் சிக்கி சாகின்றன” என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். கடலின் அடிப்பரப்பிலும் வலை போடப்படுவதால், கடற்பாசிகள், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் ஆகிய எல்லாமே ஏறக்குறைய சுத்தமாக துடைத்தழிக்கப்படுகின்றன என அறிக்கை தெரிவிக்கிறது. “இந்த வகை மீன்பிடிக்கும் முறை கடல்வாழ் உயிரினங்களை பூண்டோடு அழித்துவிடும் என்பதை அறிந்துகொள்ள ஒரு கடல் உயிரியலாளர் தேவையில்லை. கடலையே கல்லறையாக மாற்றிடும் இச்செயல், மனிதனால் இழைக்கப்படும் மிக மோசமான கேடு” என மாய்ன் பல்கலைக்கழகத்தின் கடற்பரப்பியல் பேராசிரியர் லெஸ் வாட்லிங் விளக்குகிறார். நிலப்பகுதியில் காடுகள் மொட்டையடிக்கப்படுவதற்கு இந்த நாசத்தை ஒப்பிடலாம். எனவே, நிலங்களில் செய்வதுபோலவே கடலிலும் சில பாகங்களை அழியாமல் பாதுகாப்பது அவசியமென உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.

பொம்மைகளில் இரசாயனம்

“குழந்தைகளின் பொம்மைகளை மிருதுவாக்க பயன்படுத்தப்படும் சில இரசாயனங்கள், முன்பு நினைத்ததைவிட கிட்டத்தட்ட 20 மடங்கு அதிக ஆபத்தானவை” என லண்டன் செய்தித்தாள் தி இண்டிப்பென்டன்ட் அறிவிக்கிறது. கெட்டியான பிளாஸ்டிக்கை மிருதுவாக்க பாலிவினைல் குளோரைடு போன்ற குழைமப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. பல் முளைப்பு பருவத்தில் பிள்ளைகள் வாயில் மெள்ளுவதற்காக கொடுக்கப்படும் பிளாஸ்டிக் வளையங்களிலும் மற்ற விளையாட்டு பொம்மைகளிலும் இவைக் காணப்படுகின்றன. இவற்றைப் பிள்ளைகள் வாயில் வைத்து மெள்ளும்போது, இவற்றிலுள்ள இரசாயனங்கள் எச்சிலோடு கலந்துவிடுகின்றன. பொதுவாக பயன்படுத்தப்படும் இந்த இரண்டு குழைமப் பொருட்களால் “ஈரல், சிறுநீரக கேன்ஸர், விரை அல்லது விந்தகம் சுருங்குதல் போன்ற வியாதிகள் ஏற்படக்கூடும்” என நெதர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு காண்பிக்கிறது. குறிப்பாக, இளம்பிள்ளைகள் அதிக அபாயத்திற்குள்ளாகின்றனர். ஏனென்றால், அவர்களுடைய “குறைவான எடை, வளரும் பருவம், பொம்மைகளை வைத்து அதிக நேரம் விளையாடுதல் ஆகிய காரணங்களால் பிள்ளைகள் சீக்கிரம் இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்படுகின்றனர்” என அக்கட்டுரை குறிப்பிடுகிறது. யூரோப்பியன் கமிஷனுக்காக இப்பிரச்சினையை மறுபரீசிலனை செய்யும் பிரிட்டிஷ் விஞ்ஞானி, புரொஃபசர் ஜேம்ஸ் ப்ரிட்ஜஸ் இதைக் குறித்து கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக, “மோசமான நிலையில் இருக்கும் பிள்ளைகள் பராமரிப்பு மையங்களிலோ அல்லது ஆஸ்பத்திரியிலோ சேர்க்கப்படும் பிள்ளைகள், செய்வதற்கு வேறேதும் இல்லாததால் வெறுமனே இந்தப் பொம்மைகளை மென்றுகொண்டிருக்கின்றனர்.” இப்படிப்பட்ட இரசாயனப் பொருட்களை பயன்படுத்தி பொம்மைகள் செய்வதை ஏற்கெனவே ஆறு நாடுகள் தடைசெய்துள்ளன. இன்னும் நான்கு நாடுகளும் தடைசெய்ய இருக்கின்றன.

சாமியாரில்லாத சர்ச்சுகள்

இத்தாலியில் கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கத்தில் இருக்கும் அநேக சர்ச்சுகள்—சரியாக சொல்லப்போனால் 3,800 வட்டாரங்கள்—சாமியார் இல்லாமல் இருக்கின்றன என்று சர்ச்சின் பாஸ்டரல் ஓரியன்டேஷன் சென்டர் நடத்திய ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. கிராமத்திலோ அல்லது ஒதுக்குப்புறமான இடத்திலோ இருக்கும் வட்டாரங்களல்ல இவை. “நடுத்தர அளவில் உள்ள நகர்ப்புற மையங்களில் (ஒன்று முதல் மூன்று ஆயிரம் குடிமக்கள் வசிக்கும் பகுதிகள்) அந்தப்பகுதியிலேயே நிரந்தரமாக தங்கியிருந்து சேவை புரியும் ஒரு சாமியார்கூட இல்லை” என லா ரேப்பூப்ளிக்கா செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சினையை மூடி மறைக்க, சில வட்டாரங்களின் பொறுப்பை ஒரே ஒருவரிடமோ அல்லது சாமியார்களின் ஒரு குழுவிடமோ ஒப்படைக்கப்படுகிறது. “ஆனால், இந்த முறையில் அந்த வட்டாரங்களில் உள்ளவர்களோடு சாமியார் நேரடியான, அனுதின கூட்டுறவை இழக்கிறார், மேலும் . . . ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டாரத்திற்கு அரிபரியாக அல்லாட வேண்டி இருக்கிறதென” அந்த செய்தித்தாள் விளக்குகிறது. இந்தப் பிரச்சினையைக் கையாள பல யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன. ரோம் போன்ற பெரிய நகரங்களில், வெளிநாட்டில் இருந்து சாமியார்கள் வரவழைக்கப்பட்டு இருக்கின்றனர். இத்தாலியிலுள்ள இப்படிப்பட்ட இரண்டு வட்டாரங்களில் சாமியார்களுக்கு பயிற்சி பெறாத சாதாரண ஆட்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுக்கு பூசை (Mass) நடத்த தெரியாது. ஆனால், அப்பத்தையும் திராட்சரசத்தையும் அனுப்புவது அல்லது அவசர நேரங்களில் குழந்தைக்கு முழுக்காட்டுதல் அளிப்பது, பெயர் வைப்பது போன்றவை மட்டுமே செய்யத் தெரியும்.

அர்மகெதோன் சூதாட்டம்

ஒவ்வொரு வாரமும், பிரிட்டனில் நிறைய ஜனங்கள் “அர்மகெதோன் மேல் பந்தயம் கட்டுகின்றனர்” என த கார்டியன் செய்தித் தாள் அறிவிக்கிறது. 1,001 பேரை ஆய்வு கண்டதில், உலகத்தின் முடிவு உலக யுத்தத்தால் வரும் என 33% நினைப்பதாகவும், பூமி வெப்பமடைவதால் உலகம் அழிந்துவிடும் என 26% நினைப்பதாகவும் தெரியவந்தது. பூமி ஏதாவது ஒரு குறுங்கோளோடு மோதி அழிந்துவிடும் என மற்றவர்கள் ஊகிக்கின்றனர். ஆய்வு செய்யப்பட்டவர்களில் 59% “தேசிய லாட்டரி குலுக்கலில் பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, உலக அழிவை எதிர்ப்படுவது அதிக நிச்சயம் என்று நினைப்பதாக” த கார்டியன் குறிப்பிடுகிறது. அர்மகெதோனைப் பற்றி ஏன் இந்த ஊகம்? “இரண்டாயிரமாவது ஆண்டின் துவக்கத்தைப் பற்றியும் அதே சமயத்தில் அந்த வருடத்தில் உலகமே அழிந்துவிடும் என்ற கருத்தாலும் ஒருவேளை” மக்கள் இப்படி ஊகிக்கலாம் என அதே செய்தித் தாள் குறிப்பிடுகிறது.

வியர்வை நாற்றமற்ற துணிமணிகள்

“இரண்டு வருடங்களாக, பாக்டீரியாக்கள் எதிர்ப்பு ஆடைகள் . . . அல்லது உடல் வாடை எதிர்ப்பு ஆடைகள் என வித்தியாசமான பெயர்களில் வரும் பாக்டீரியாக்களை விரட்டியடிக்கும் ஆடைகளின் முக்கியத்துவத்தை துணி நெசவில் தேர்ச்சி பெற்றவர்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்” என லா மான்ட் எனும் ஃபிரெஞ்சு செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இவ்வகையான பாக்டீரியா எதிர்ப்பு துணிகளுக்கு கிராக்கி அதிகரித்துவருகிறது. படுக்கை விரிப்புகள், கம்பளங்கள் போன்றவை இவ்வகையில் தயாரிக்கப்படுகின்றன. அதோடு, சாக்ஸ், உள்ளாடைகள் ஆகியவையும் இப்போது இதேமுறையில் தயாரிக்கப்படுகின்றன. இருப்பினும், ஃபினால், கன உலோகங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆடைகளை அணிந்துகொள்வதில் அதிகம் பேர் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால், இவ்வகைப் பொருட்கள் மனிதனுக்கு நன்மை பயக்கும் அநேக பாக்டீரியாக்களையும் பாதிக்கின்றன. “தோல் அதனுடைய வேலைகளை சரிவர செய்ய, நன்மை பயக்கும் ‘இயற்கை விருந்தாளிகளான’ பாக்டீரியாக்கள் அவசியம்” என லா மான்ட் சுட்டிக்காட்டுகிறது. “பாக்டீரியா-எதிர்ப்பு துணிகளை தயாரிப்பவர்கள் இந்தப் பிரச்சினையை அறிந்து அதனை சமாளிக்க வழி தேட வேண்டும்.” அதாவது, நோய்களை எதிர்க்கும் நன்மைதரும் பாக்டீரியாக்களைக் கொல்லாமல், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வழியை அறிய வேண்டும்.

தண்ணீர் கவலைகள்

“நாம் குடிக்கும் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகள் மட்டுமல்ல; இப்போது மருந்துகளும் இருப்பதாக தெரியவந்துள்ளது” என நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை தெரிவிக்கிறது. பல வழிகளில் மருந்துகள் தண்ணீரில் கலக்கின்றன. தேவையில்லாத மருந்துகள் சில சமயங்களில் டாய்லெட்டில் தூக்கியெறியப்படுகின்றன. மேலும், சிறுநீர் மூலமாகவும் மருந்துகள் வெளியேற்றப்படுகின்றன. “மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் கொடுக்கப்படும் பெரும்பாலான ஆண்டிபயாடிக்குகளில் 30 முதல் 90 சதவீதம் சிறுநீரில் வெளியேற்றப்படுகின்றன” என ராயல் டேனிஷ் ஸ்கூல் ஆஃப் ஃபார்மஸி-ஐச் சேர்ந்த பென்ட் ஹாலிங்-சோரன்ஸன் சொல்லுகிறார். விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் மிருகங்களின் சிறுநீரையும் எருவையும் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மருந்துகள் சுற்றுச்சூழலை அடையும்போது, அவை முதலில் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலையில் அல்லது மனிதனுடைய உடலின் மூலமாக மாற்றங்கள் அடைந்தோ இருக்கலாம். முதலில் இருந்ததைவிட அதிக தீங்கை உண்டாக்கும் நிலையிலோ அல்லது அதிக நச்சுத்தன்மையோடு விரைவில் நீரில் கலந்துவிடும் நிலையிலோ இருக்கலாம். “நாம் சரியாக கண்காணிக்காமல் விட்டுவிடும் இரசாயனங்களுள் மருந்துகளும் ஒன்று” என பிரிட்டனின் சுற்றுச்சூழல் ஏஜென்ஸியைச் சேர்ந்த ஸ்டீவ் கிலீன் குறிப்பிடுகிறார்.

ஐ.மா.-வின் அதிகரிக்கும் சிறைக்கைதிகள்

“சிறைக்கு செல்லும் ஆட்களின் எண்ணிக்கை எந்தக் குடியாட்சியையும்விட அமெரிக்காவில் கணக்கிலடங்கா வண்ணம் இருக்கிறது. மேலும், எந்த சர்வாதிகார ஆட்சியிலும் இருப்பதைவிட மிக அதிக எண்ணிக்கையாகும்” என தி எகானமிஸ்ட் பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது. “போனவருடம் ஒவ்வொரு 150 [ஐ.மா.] பேருக்கு ஒருவர் (பிள்ளைகள் உட்பட) என்ற விகிதத்தில் சிறைக்கு சென்றனர்.” இங்கு சிறைக்கு செல்வோரின் எண்ணிக்கை ஜப்பானைக் காட்டிலும் 20 மடங்கும், கனடாவைக் காட்டிலும் 6 மடங்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் 5 முதல் 10 மடங்கும் அதிகமாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் சிறைப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1980 முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. இப்போது சிறையில் இருப்பவர்களில் 4,00,000-⁠க்கும் அதிகமானோர் போதைப் பொருள் சம்பந்தமான குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கின்றனர். இருந்தாலும், 1988 முதல் போதைப் பொருட்களை துர்ப்பிரயோகம் செய்பவர்களின் எண்ணிக்கையில் எந்தவித மாறுதலும் இல்லை. ஆனால், தி எகானமிஸ்ட் பத்திரிகை எழுப்பும் கேள்வி இதுவே: “குற்றச்செயலை கட்டுப்படுத்தும் உபகரணமாக சிறை இருக்கிறதோ இல்லையோ, அடிக்கடி சிறையை பார்வையிடும் அதிக எண்ணிக்கையான ஆட்களை அமெரிக்கா எவ்வளவு காலம் நிர்வகிக்க முடியும்?”

திவால்கள்—அதிகரிப்பு

“திவால்களின் நெருக்கடியில் அமெரிக்க சிக்கித் தவிக்கிறது” என ஐ.மா. செனட் உறுப்பினர் சார்ல்ஸ் க்ராஸ்லி சொல்கிறார். ஐ.மா.-வின் திவால்கள் பற்றிய சட்டங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இயற்றப்பட்டன. எனவே, இதுவரை திவாலாகிய சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் பாதிக்கும் அதிகமான ஆட்கள் 1985-⁠ம் ஆண்டுக்கு பிறகு வழக்கு பதிவு செய்தவர்கள். 1997-⁠ம் வருட மத்தியிலிருந்து 1998-⁠ம் வருட மத்திவரையான 12 மாதங்களில், திவாலாப் பதிவுகள் 14.2 லட்சம் என்ற மைல்கல்லை எட்டின. ஏன் இந்த அதிகரிப்பு? “திவாலாகும்போது எதிர்ப்படும் அவமானம்” பற்றிய கருத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்த திடீர் அதிகரிப்புக்கு ஒரு காரணம் என ஐ.மா. கூட்டாட்சி வைப்புநிதியின் தலைவர் அலன் க்ரீன்ஸ்பேன் தெரிவிக்கிறார். “கடனுக்கு மேல் கடன் வாங்கி தனிப்பட்ட கடன் சுமையை அதிகரித்துக் கொண்டே போவதற்கு பழக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்ட் கலாச்சாரமே” மற்றொரு காரணம் என சொல்லப்படுகிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்