சொத்துக்களைப் பங்கிடுதல் முன்யோசனையும் நன்மைகளும்
பீட்டர்சன் தம்பதியினரின் முகத்தில் ஏமாற்றத்தின் ரேகைகள் அப்பிக்கிடந்தன.a ஏன்? அவர்களுடைய சொத்துக்களை விற்பதில் கிடைக்கும் தொகைமீது முழு நம்பிக்கையும் வைத்திருந்தனர். வேலையிலிருந்து ஓய்வு பெற்றபிறகும் தங்களுடைய காலத்தை ஓட்ட அத்தொகை உதவும் என நம்பினர். அதில் தங்களுடைய பிள்ளைகளுக்கு அன்பளிப்புகளை கொடுக்கவும் எண்ணியிருந்தனர். ஆனால், இவ்வெல்லா எதிர்பார்ப்புகளும் மனக்கோட்டைகளும் தவிடு பொடியாகிவிட்டன. சொத்துக்களை விற்றபோது அவர்கள் கட்டவேண்டிய சொத்துவரி மலைபோல நின்றதே அதற்கு காரணம்.
ஸ்மித் தம்பதியினரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் சொத்துக்கள் இருந்தன. வருடங்கள் செல்ல செல்ல அதன் மதிப்பும் கூடிக்கொண்டே இருந்தது. ஆனால், அச்சொத்துக்களை ஒரு விசேஷ ஏற்பாட்டில் விற்பதால் கிடைக்கும் தொகையில், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் வருவாய் கிடைப்பதற்கான ஏற்பாட்டை செய்தனர்; தங்கள் பிள்ளைகளுக்கும் கணிசமான தொகையை அன்பளிப்பாக கொடுக்க ஏற்பாடு செய்தனர்; அதுமட்டுமா! அவர்களுக்கு பிடித்த தர்மஸ்தாபனத்துக்கு நன்கொடை அளிக்கும் ஏற்பாடும் செய்திருந்தனர்.
ரோஸ் ஜோன்ஸின் பரிதாப நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். வாழ்க்கை கயிற்றின் நுனியில் தொங்கிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய கணவன் அகால மரணமடைந்தார். அதன்பிறகு, மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து ஒன்றன்பின் ஒன்றாக தஸ்தாவேஜுக்கள் வந்தவண்ணமாய் இருந்தன. இவையனைத்தும் அவளுக்கு புரியாத புதிராக இருந்தன. வரி செலுத்துதல், பண விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளுதல், லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிஸி பெறுதல், இன்னும் இதுபோன்றவற்றை அவளுடைய கணவன் ஜானே அதுவரை கவனித்து வந்தார். ‘எல்லாத்தையும் நான் நல்லபடியா கவனிச்சுக்கறேன், அதனால நீ எதப்பத்தியும் கவலைப்பட வேணாம்’ என்று எப்பொழுதும் சொல்லுவார். ஆனால், உயில் ஏதும் எழுதிவைக்காமலேயே அவர் இறந்துவிட்டார். அதனால், வருவாய் வரும் என அவள் எதிர்பார்த்த சொத்துக்கள் சில முடக்கப்பட்டன. எனவே, ஒரு வக்கீலை வைத்து, அவளுடைய கணவர் என்னென்ன சொத்துக்களை விட்டுச்சென்றார் என்பதையும், அதில் எவற்றை அவளுடைய பெயருக்கு மாற்றமுடியும் என்பதையும் தெரிந்துகொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள். மேலும், இந்த சொத்துக்களில் சில, சட்டப்படி அவளுடைய கணவனின் முதல் தாரத்து பிள்ளைகளுக்குப் போய் சேருமென்றும் கூறினார்கள். ஆனால், அவளுடைய கணவனுடைய விருப்பம் அதுவல்ல என்பதை அவளும் அறிவாள். விதவையாக்கப்பட்ட இந்த பெருஞ்சுமை போதாதென்று, இப்படிப்பட்ட பிரச்சினைகளும் சேர்ந்து அவளை மிகவும் அழுத்தின. குருவித் தலையில் பனங்காயை வைத்ததுபோல், அவளுடைய நிலைமை இன்னும் மோசமாகியது. என்ன செய்வதென தெரியாமல் அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. எல்லாவற்றை ஒரு சீருக்குக் கொண்டுவர எவ்வளவு செலவாகும் என்ற கவலையும் அவளை வாட்டி வதைத்தது.
இதற்கு முற்றிலும் நேர்மாறான அனுபவத்தை கவனியுங்கள். இது மேரி ப்ரௌனுடையது. இவளுடைய கணவனும் எதிர்பாராமல் அகால மரணமடைந்தார். ஆனால், அவளுடைய கணவன் ஏற்கனவே அவளுக்காகவும் அவளுடைய இரண்டு பிள்ளைகளுக்காகவும் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். லைஃப் இன்ஷுரன்ஸ் பாலிஸி எடுப்பதன்மூலம் பண சம்பந்தமான தேவைகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். இது ஓரளவுக்கு தெம்பை மேரிக்கு அளித்தது. கணவனுடைய சாவிற்குப்பிறகு, உடனடியாக என்னென்ன சொத்துக்கள் அவளுடைய பெயருக்கு வரும் என்பதையும் கணவனுடைய உயிலின்மூலம் என்னென்ன சொத்துக்கள் அவளுக்கு வந்து சேரும் என்பதையும் அறிந்திருந்தாள். கணவனை இழந்து விதவையாக அவஸ்தைகளை அனுபவித்தபோதிலும், அவளோ அவளுடைய பிள்ளைகளோ பண நெருக்கடிக்கு ஆளாகவில்லை. அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவளுடைய கணவன் முன்யோசனையோடு செய்ததற்காக மனம் நெகிழ்ந்து போனாள்.
ஸ்மித் தம்பதியினரும் மேரி ப்ரௌனும் நிலைமைகளை எப்படி சமாளிக்க முடிந்தது? சொத்துக்களை பங்கிட முன்யோசனையோடு திட்டமிட்டதினாலேயே.
சொத்துக்களை பங்கிட திட்டமிடுதல்—எப்படி?
சொத்துக்களை பங்கிட திட்டமிடுதல் என்றால் என்ன? நீங்கள் இறந்தபிறகு உங்களுடைய சொத்துக்களை எப்படி பங்கிடுவதென்பதை தீர்மானிப்பதும், அத்தீர்மானத்தை சிக்கனமாகவும் சிறப்பாகவும் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுமே. அந்நடவடிக்கைகள் எதை உட்படுத்துகிறது? சொத்துக்களின் உரிமையாளரைக் குறிப்பிடுதல், அனுபவ பாத்தியதை உடையவர்களின் பெயர்களைக் குறிப்பிடுதல், உயில்கள், பொறுப்புரிமை (trust) போன்ற ஆவணங்களை எழுதுதல் ஆகியவையே. சிக்கல்கள் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டால், இன்னும் அதிகப்படியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டி வரும்.
இப்படிப்பட்ட ஏற்பாடுகளை முன்யோசனையோடு செய்வதை அநேகர் உளமார வரவேற்றபோதிலும், ஒருசிலரே அதை நடைமுறைப்படுத்தி இருக்கின்றனர். அமெரிக்க மாகாணங்களில் வயது வந்தோரில் 70 சதவீதம் பேர் உயிலே எழுதாமல் இருக்கின்றனர். இது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா! இதற்கு சொல்லப்படும் சாக்குப்போக்குகள் இவையே! “நான் ரொம்ப பிஸியா இருக்கேன்; அதை அப்புறம் பாத்துக்கலாம்.” “உயில் எழுதற அளவுக்கு எங்கிட்ட பணமோ பொருளோ இல்ல.” “எனக்கு வக்கீலே இல்ல.” “என் சாவைப்பத்தி யோசிக்க நான் விரும்பல.” “அதை எப்படி ஆரம்பிக்கறதுன்னே எனக்கு தெரியல.”
சொத்துக்களைப் பங்கிடவேண்டுமென்கிற நினைப்பே ஒருவேளை சிலருக்கு அச்சத்தை தரலாம். ஆனால், அப்படி பயப்படவேண்டிய அவசியமில்லை. நீங்கள் எடுக்கவேண்டிய தீர்மானங்களை புரிந்துகொண்டு அதற்கான ஏற்பாடுகள் செய்வதையே இது குறிக்கிறது. சொத்துக்களை பங்கிட திட்டமிடுதல் அப்படியொன்றும் கம்பசூத்திரமல்ல. நீங்கள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக, நிதானமாக செயல்படுத்துங்கள்.
மேற்கொள்ளவேண்டிய படிகள்
உங்களிடத்தில் இருக்கும் சொத்துக்களை பட்டியலிடுங்கள். இதுவே நீங்கள் எடுக்கவேண்டிய முதல் படி. சொத்துக்களின் பட்டியல்மட்டுமல்ல, அவை ஒவ்வொன்றின் மதிப்பும், அவற்றை எப்படி பெற்றீர்கள் அல்லது யாருடைய பெயரில் இருக்கின்றன என்பதையும் பட்டியல் போடுங்கள். (“சொத்துக்களின் நிகர மதிப்புப் பட்டியல்” பெட்டியைக் காண்க.) சொத்துக்களை பலவகையாக பிரிக்கலாம். அவை: கடனீட்டு பத்திரங்கள் (பங்குகள், பாண்டுகள், பரஸ்பர நிதிகள்), இடம்பெயரா சொத்துக்கள் (உங்களுடைய வீடு, வாடகை அல்லது முதலீட்டுச் சொத்துக்கள்), வங்கி கணக்குகள் (சேமிப்பு கணக்கு, வங்கி வைப்புகள், பணச் சந்தை நிதிகள்), தனிநபர் சொத்துக்கள் (கலைப் பொருட்கள், ஓவியங்கள், நகைகள், கார்கள், பர்னிச்சர்கள்), லைஃப் இன்ஷுரன்ஸ், ஓய்வு தொகை, வியாபாரங்கள் ஆகியனவே. உங்களுடைய சொத்துக்களைப் பற்றிய விவரங்களை பட்டியலிட்ட பிற்பாடு, உங்களுக்கிருக்கும் கடன்களை பட்டியலிடுங்கள். அடமானங்கள், கடன்கள், கிரெடிட் கார்டு பாக்கிகள் முதலானவை இதில் அடங்கும். உங்களுடைய சொத்துக்களின் மொத்த மதிப்பிலிருந்து இந்த கடன்களை கழித்தால், உங்கள் சொத்துக்களின் நிகர மதிப்பு கிடைக்கும். மரணத்திற்கு பிறகு மற்றொருவரின் பெயருக்கு மாற்றப்படும் சொத்துகளுக்கு பல நாடுகளில் வரி விதிக்கப்படுகிறது. மாற்றப்பட்ட சொத்துக்களின் நிகர மதிப்பைப் பொருத்தே இந்த வரி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, உங்களுடைய சொத்துக்களின் நிகர மதிப்பைத் தீர்மானிப்பது மிக முக்கியம்.
உங்களுடைய முடிவான குறிக்கோள்களை தீர்மானிப்பதே இரண்டாவது படி. உங்களுக்கும் உங்களுடைய சொத்துக்களில் அனுபவ பாத்தியதை உடையவர்களுக்கும் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதே. ஆனால், அது பணமாகத்தான் இருக்கவேண்டுமென்கிற அவசியமில்லை. உதாரணமாக, கல்யாணமான ஒரு நபர் தன்னுடைய துணைக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டுமென விரும்புவார். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு ஓரளவு பண சம்பந்தமாக பாதுகாப்பு அளிக்க விரும்புவர். வயதான பெற்றோரின் பராமரிப்புக்காக பிள்ளை சில ஏற்பாடுகள் செய்ய விரும்பலாம். இத்திட்டத்தில், உங்களுடைய நண்பர்களில் ஒருசிலரையோ அல்லது தர்ம ஸ்தாபனங்களையோ சேர்த்துக்கொள்ள விரும்பலாம். உங்களுடைய சொத்து பங்கீட்டு திட்டத்தில் யாரை சேர்க்க விரும்புகிறீர்களோ அவர்களுடைய பெயர்களையும் அவர்களுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்பதையும் எழுத மறந்துவிடாதீர்கள்.
இத்திட்டத்தை பாதிக்கும் எதிர்பாரா சம்பவங்களையும் மனதில் கொள்ளுங்கள். உதாரணமாக, உங்களுடைய சொத்துக்களுக்கு அனுபவ பாத்தியதை உடையவர் உங்களுக்கு முன்னால் இறந்துவிட்டால்? அப்பொழுது, அந்த பாகம் அவள் அல்லது அவருடைய துணைக்கோ, பிள்ளைகளுக்கோ, அல்லது வேறே ஒருவருக்கோ போய்சேர வேண்டுமென விரும்புகிறீர்களா?
உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற பொறுப்புள்ளவர்களை தேர்ந்தெடுப்பதே மூன்றாவது படி. பெரும்பாலான சமயங்களில், உங்களுடைய திட்டத்தை நிறைவேற்றுபவர் (Executor) ஒருவரும், பொறுப்புரிமையர் (Trustee) ஒருவரும், ஒரு கார்டியனும் தேவை. நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும்சரி, உங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதை ஆதரிக்கும் இன்னொரு நபரின் பெயரையும் அதில் குறிப்பிடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுத்த ஒவ்வொருவரும் அவ்வேலையை செய்ய விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். எக்ஸிக்யூட்டர் என்பவர் உங்களுடைய சாவிற்கு பிறகு, உங்களுடைய சொத்துக்களை எல்லாம் சேர்த்து, தேவைப்படும் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுப்பார். முடிவில், உங்களுடைய விருப்பத்திற்கேற்ப உங்கள் சொத்துக்களை பிரிப்பார். இதற்கு, குடும்ப அங்கத்தினரில் ஒருவரை தேர்ந்தெடுப்பதே சாலச் சிறந்தது. சிக்கல்கள் இருப்பின், வங்கி பொறுப்புரியமைப்பு போன்ற நிறுவனங்களின் உதவியை நாடலாம். உங்களுடைய பிள்ளைகள் மைனர்களாக இருக்கும்போதே நீங்கள் இருவரும் இறக்கநேர்ந்தால், அவர்களை வளர்க்க கார்டியனின் பெயரையும் குறிப்பிட வேண்டும். உங்களுடைய திட்டத்தில் பிள்ளைகளுக்காக பொறுப்புரிமையமைப்பு சேர்க்கப்பட்டிருந்தால், அப்பொழுது கார்டியனையே பொறுப்புரிமையராக ஆக்கலாம். ஆனால், அவருக்கு நிதிகளை நிர்வகிக்கும் திறமை இருக்கவேண்டும். இல்லையென்றால், வங்கி பொறுப்புரிமையமைப்பு போன்ற நிறுவனங்களை தனி பொறுப்புரிமையராக குறிப்பிடலாம்; அல்லது கார்டியனோடு சேர்த்து கூட்டுப்பொறுப்புரிமையராகவும் குறிப்பிடலாம்.
உங்கள் திட்டங்களை நிறைவேற்ற உதவும் வழிகளை தெரிந்துகொள்ளுவதே நாலாவது படி. பயனாளிக்கு (beneficiary) நிபந்தனையற்ற அன்பளிப்பாக, நேரடியாக கொடுக்க விரும்புகிறீர்களா? அல்லது பயனாளி நன்மைபெறும் வகையில் சொத்தை பொறுப்புரிமையமைப்பு நிர்வகிக்க விரும்புகிறீர்களா? இவை இரண்டிற்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமள்ள வித்தியாசம் இருக்கிறது. சொத்துக்களை நேரடியாக பயனாளிக்கு கொடுத்தால், அத்துடன் சொத்தின்மீதுள்ள உங்கள் உரிமை முடிவுக்கு வந்துவிடும். ஆனால், உங்களுடைய சாவிற்குப் பிறகும் சொத்துக்களின்மேல் அதிகாரம் செலுத்த நீங்கள் விரும்பினால், அதை பொறுப்புரிமையமைப்பு நிர்வாகத்தின்கீழ் விடவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொறுப்புரிமையர் சொத்துக்களை நிர்வகிப்பார். உங்களுடைய அறிவுரைக்கேற்ப பயனாளியின் நன்மைக்காக அவற்றை நிர்வகிப்பார். உதாரணமாக, மைனர் பிள்ளைகளின் விஷயத்தில் அவரவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப சொத்துக்களை பொறுப்புரிமையமைப்பு நிர்வகிக்க முடியும். பின்னர், எந்த வயதில் பிள்ளைகளுக்கு சொத்துக்களின்மீதான உரிமை கிடைக்குமென அது சொல்லும்.
யாருடைய உதவியை நாடுவது?
உங்களுடைய குறிக்கோள்களை நிறைவேற்ற உதவும் வழிகளை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்; அதற்கு, சொத்து பங்கீட்டு திட்டத்தில் அனுபவம் வாய்ந்த ஒருவரை அணுகி ஆலோசனை கேளுங்கள். உங்களுடைய தனிப்பட்ட இலக்குகளுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளுக்கும் ஏற்ற திட்டத்தை போடுங்கள். இதில், கணக்கர், நிதியை திட்டமிடுபவர், இன்ஷுரன்ஸ் ஏஜென்ட் போன்ற பலதரப்பட்ட ஆலோசகர்கள் உதவமுடியும். இத்திட்டத்தில் தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளும் இருக்கின்றனவா? அப்படியென்றால், இத்தர்ம ஸ்தாபனங்களே அவற்றினுடைய திட்டமிட்ட நன்கொடை பிரிவின்மூலம் இது சம்பந்தமாக இலவசமாக அளிக்கும் ஆலோசனையையும் உதவியையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாக, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியும் திட்டமிட்ட நன்கொடை பிரிவைக் கொண்டிருக்கிறது. சொத்துக்கள் பங்கீட்டு திட்டத்தில் சொஸைட்டியை சேர்க்க விரும்பும் நபர்களுக்கு தேவையான ஆலோசனையையும் உதவியையும் இது அளிக்கிறது. இப்பிரிவு தரும் ஆலோசனைகளால் அநேகர் நன்மை அடைந்திருக்கின்றனர். வரியை முடிந்த அளவு குறைக்கவும் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயை இயன்ற அளவு அதிகரிக்கவும் ஆலோசனைகளைத் தந்திருக்கிறது. இப்படி கொடுத்த தெளிவான ஆலோசனைகள், அவர்களுடைய அன்பானவர்களுக்கும் சொஸைட்டிக்கும் அதிகபட்ச பலன்களை அளித்திருக்கின்றன.b
திட்டம் தீட்டும்போது பலருடைய சேவை தேவைப்படுகிறது. என்றபோதிலும், முடிவான திட்டத்தையும் அதற்கு தேவையான எல்லா ஆவணங்களையும் தயாரிக்க ஒரு வக்கீல் மிக முக்கியம். இவர், சொத்து பங்கீட்டு திட்டத்தில் கைதேர்ந்த நிபுணராக இருக்க வேண்டும். இவருடைய தொழில் அனுபவத்தையும் தொழில் பின்னணியையும் குறித்து ஏதாவதொரு ஆலோசகரிடம் தீர விசாரிக்க வேண்டும். குறிப்பாக சில காரியங்களை நீங்கள் செய்ய வேண்டுமென யோசிக்கலாம். உங்களுடைய தொழிலை உங்களுக்கு பிறகு குடும்ப அங்கத்தினர் ஒருவரின் பெயருக்கு மாற்ற நினைக்கலாம்; அல்லது ஊனமுற்ற ஒரு உறவினரை கவனிக்கும் பொறுப்பாக இருக்கலாம். இது சம்பந்தமாக உங்களுடைய வக்கீலுக்கு முன் அனுபவம் இருக்கிறதா என்பதை ஆலோசகரிடம் கேளுங்கள். இந்த எல்லா வேலைகளுக்கும் அவருக்கு எவ்வளவு ஃபீஸ் கொடுக்க வேண்டும் என்பதைக் கேளுங்கள். இதை எழுத்து வடிவிலான ஒப்பந்தமாக செய்துகொள்ளுங்கள்.
சொத்து பங்கீட்டு திட்டத்தில் அறிவு அரைகுறையாய் இருந்தால் நஷ்டம்தான். இதைப் புரிந்துகொள்ள ஒரு தம்பதியினரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுவோம். அத்தம்பதிக்கு பால், மேரி என்று பெயரிடுவோம். அவர்களுடைய சொத்துக்கள் அனைத்தையும் மூன்று மகள்களுக்கு சரிசமமாக கொடுக்க விரும்பினார்கள். அவர்களுடைய மகள் சாராள் பக்கத்திலேயே வசித்து வந்தாள். அதனால், சொத்துக்களின் உரிமையாளர் பெயரில் தங்களுடைய பெயரோடு அவளுடைய பெயரையும் சேர்த்தனர். ‘நம்ம படுத்த படுக்கையா விழுந்துட்டாகூட சாரா நம்ம சொத்துக்கள பாத்துக்குவா’ என்றே நினைத்தனர். அதுமட்டுமல்ல, ஜாய்ண்ட்டாக எழுதுவதால் தங்களுடைய சாவிற்கு பிறகு சொத்துக்களின் ஏகபோக உரிமை சாராவுக்கே போகும் என்றும் நினைத்தனர். இதன்மூலம் உயில் எழுதுவதையும் அதை சட்டப்பூர்வமாக நிறைவேற்றுவதையும் தவிர்க்கலாமென எண்ணினர். அவர்கள் விட்டுச்செல்லும் சொத்துக்களை அவள் தன் சகோதரிகளுடன் பங்கிட்டுக் கொள்வாள் என்றும் நினைத்தனர்.
ஆனால், பாலும் மேரியும் திட்டமிட்டதுபோல் நடக்கவில்லை. சாராவின் பெற்றோர் இறந்தபிறகு, சொத்துக்களை என்னவோ அவளும் அவளுடைய மற்ற சகோதரிகளும்தான் பிரித்துக்கொண்டனர். ஆனால், அவற்றை மாற்றும்போது போடப்பட்ட வரி சாராவின் பங்கில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டது. ஜாய்ன்ட் உரிமையாளராய் சாரா இருந்தபோதிலும், அவளுடைய பெற்றோர் நினைத்ததுபோல் நடக்கவில்லை. அவர்கள் விரும்பியதுபோல் எல்லா நிர்வாக உரிமைகளும் அவளுக்கு கிடைக்கவில்லை. பாலுக்கும் மேரிக்கும் இருந்த எண்ணம் என்னவோ நல்லது தான். அவர்களுடைய இயலாத காலத்தில் தாங்கள் நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டுமென விரும்பினர். அதுமட்டுமல்ல, அதிக செலவோ, சிக்கல்களோ இல்லாமல் சொத்துக்கள் பிள்ளைகளுக்கு மாற்றப்படவேண்டும் என்றும் விரும்பினர். ஆனால், தவறு எங்கே நேர்ந்தது? இந்த ஆசைகளை நிறைவேற்ற அவர்கள் தேர்ந்தெடுத்த ஏதுக்களிலேயே.
சொத்து பங்கீட்டு திட்டம் வாழ்க்கையில் எப்போதோ ஒரு முறை செய்வதோடு முடிந்துவிடுவதல்ல. அவ்வப்போது அதில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம் ஏற்படலாம். ஏனெனில், வரிச்சட்டங்கள் மாறலாம்; வாரிசு சட்டங்கள் மாறலாம்; வாழ்க்கையில் சந்தர்ப்பசூழ்நிலைகள் மாறலாம். உங்களுடைய சொத்து பங்கீட்டு திட்டத்தில் செய்யப்படும் மாற்றங்களுக்கு நிறைய நிகழ்ச்சிகள் காரணங்களாக இருக்கலாம். உறவினர் ஒருவரின் மரணமோ, பேரக்குழந்தைகளின் பிறப்போ, பரம்பரை சொத்து ஏதாவது கிடைத்ததோ, சொத்துக்களின் மதிப்பு கூடிக்கொண்டே போவதோ காரணங்களாக அமையலாம்.
ஆம், சொத்து பங்கீட்டு திட்டம் தீட்டுதல், நிச்சயமாகவே ஒரு பெரிய சவால்தான். உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் கொடுத்து, முழுமூச்சாக செயலில் இறங்குவதை தேவைப்படுத்துகிறது. கடினமான சில தீர்மானங்கள் எடுப்பதையும் இது பெரும்பாலும் உட்படுத்துகிறது. உங்களுடைய உணர்ச்சிகளை பாதிக்கும் விஷயமிது. உங்களுடைய அன்பானவர்கள்மீதும் அவர்களுடைய எதிர்காலத்தின்மீதும் உங்களுக்கிருக்கும் அக்கறையையும் காட்டுகிறது. உங்களுடைய சொத்துக்களை நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்ற அடிமனசின் ஆசைகளை வெளிக்கொணர்கிறது. இந்த ஆசைகளை நிறைவேற்ற மிகச் சிறந்த வழியை தீர்மானிப்பதையும் குறிக்கிறது. இருப்பினும், ஒரு நபர் இதற்கு சரியான கவனம் கொடுக்கவில்லை என்றால், அது பிரச்சினைகளுக்கு வழிநடத்தும். இக்கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் வாசித்த அனுபவங்களே அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆம், முன்யோசனையோடுகூடிய திட்டமிடுதல், கைமேல் பலன் கொடுக்கும். இதற்காகும் செலவை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள். உங்களுடைய அன்பானவர்களின் எதிர்கால பாதுகாப்பிற்காக நேர்த்தியான திட்டம் போட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்தாலே போதும் நிம்மதி பெருமூச்சு தானாக வரும். எல்லாவற்றிற்கும் மேலாக, இதனால் வரும் மன அமைதி உங்களுக்கு கிடைக்கும் அரிய சொத்தாகும்.
[பக்கம் 26-ன் பெட்டி]
எடுக்கவேண்டிய படிகள்
• உங்களுடைய சொத்துக்களின் பட்டியலை தயாரித்தல்; உங்களுக்கிருக்கும் கடன்களையும் பட்டியலிடுதல்
• உங்களுடைய மற்றும் உங்களுடைய குடும்பத்தின் இலக்குகளையும் குறிக்கோள்களையும் தேவைகளையும் தீர்மானித்தல்
• உங்களுடைய விருப்பங்களை பூர்த்திசெய்யும் நிறைவேற்றுபவர் (Executor), பொறுப்புரிமையர், கார்டியனை உங்கள் பிள்ளைகளுக்காக தேர்ந்தெடுத்தல்; அவர்கள் இந்த பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுதல்
• சொத்து பங்கீட்டு திட்டத்தின் பல முறைகளை தெரிந்துகொள்ள அதில் அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆலோசனையை நாடுதல்
[அடிக்குறிப்புகள்]
a இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள உதாரணங்கள் புனையப்பட்டவையென்றாலும், உண்மை வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டவை. மேலும், இக்கட்டுரையிலுள்ள தகவல்கள் ஐ.மா. சட்டத்தை சார்ந்தவையாக இருந்தாலும், அவற்றில் சொல்லப்படும் நியமங்கள் பல நாடுகளுக்கு பொருந்தும்.
b கூடுதல் தகவல்களுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட உலகளாவிய ராஜ்ய சேவையை ஆதரிக்க திட்டமிட்ட நன்கொடை (ஆங்கிலம்) சிற்றேட்டைக் காண்க.
[பக்கம் 25-ன் அட்டவணை]
சொத்துக்களின் நிகர மதிப்பு பட்டியல்
சொத்துக்கள் உங்களுடைய பெயரில் துணையின் பெயரில் ஜாய்ண்ட்டாக
வீடு (தற்போதைய
நிலவர விலை) ரூ. ரூ. ரூ.
மற்ற சொத்துக்கள் ரூ. ரூ. ரூ.
வங்கி கணக்குகள்
(வைப்பு மற்றும்
சேமிப்புகள்) ரூ. ரூ. ரூ.
மற்ற
ரொக்கங்கள் ரூ. ரூ. ரூ.
பங்குகள், கம்பெனி
பாண்டுகள், மற்றும்
பரஸ்பர நிதிகள் ரூ. ரூ. ரூ.
லைஃப் இன்ஷுரன்ஸ்
(பாலிஸியின்
முகப்பு மதிப்பு) ரூ. ரூ. ரூ.
கூட்டு வியாபாரத்தின்
வட்டி ரூ. ரூ. ரூ.
ஓய்வு தொகை ரூ. ரூ. ரூ.
தனிநபர் சொத்துக்கள் ரூ. ரூ. ரூ.
மற்ற சொத்துக்கள்
(தனித்தனியே குறிப்பிடுதல்) ரூ. ரூ. ரூ.
மொத்த சொத்துக்கள் ரூ. ரூ. ரூ.
கடன்கள்
அடமானங்கள் ரூ. ரூ. ரூ.
மற்ற லோன்கள்
அல்லது கடன்கள்
(தனிப்பட்ட கடன்கள்,
கிரெடிட் கார்டுகள்
முதலானவை) ரூ. ரூ. ரூ.
மொத்த கடன்கள் ரூ. ரூ. ரூ.
நிகர சொத்து
(சொத்துக்களிலிருந்து
கடன்களை கழிக்கவும்) ரூ. ரூ. ரூ.
[பக்கம் 25-ன் படம்]
உங்களுடைய அன்பானவர்களின் எதிர்காலத்திற்காக திட்டமிடுவதை சொத்து பங்கீட்டு திட்டம் உள்ளடக்குகிறது