விண்ணுலக விந்தைகள்
விண்ணுலக விந்தைகளிலேயே மிகவும் வியப்பூட்டுவன வட்டவடிவ நட்சத்திர கொத்துகளே ஆகும். வட்டவடிவமுள்ள இவை ஒவ்வொன்றிலும் பத்தாயிரம் முதல் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் வரை இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! நம்முடைய பால்வீதி மண்டலத்தில் மட்டும் சுமார் 100 வட்டவடிவ கொத்துகள் உள்ளன.
பால்வீதி மண்டலத்திற்கு அக்கம்பக்கத்திலுள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இடையே சராசரியாக 4 முதல் 5 ஒளியாண்டு இடைவெளி இருக்கிறது.a இந்த ஒவ்வொரு வட்டவடிவ கொத்திலும் எக்கச்சக்கமான நட்சத்திரங்கள் கூட்டம் கூட்டமாக இருக்கின்றன. அவற்றிற்கு இடைப்பட்ட தூரம் ஓர் ஒளியாண்டில் பத்தில் ஒரு பாகம் மட்டுமே.
நீங்கள் படத்தில் பார்க்கும் கொத்தின் பெயர் ஒமேகா சென்டாரை. சாதாரணமாக பார்ப்பதற்கு இது ஒரு தனி நட்சத்திரம்போல் தோன்றும். ஆனால் ஒரு பெரிய தொலைநோக்கி மூலம் பார்த்தால் சுமார் 10 லட்சம் நட்சத்திரங்களுள்ள பளபளக்கும் கொத்தாக காட்சியளிக்கும். தென் அரைக்கோளத்தில் இருப்பவர்களுக்குத்தான் ஒமேகா சென்டாரை மிகவும் தெளிவாக தென்படும். இருந்தாலும், பூமியின் வட-மத்திப அட்சரேகை வரை வாழ்பவர்களுக்கு, இளவேனில் மற்றும் கோடை கால மாலைநேரங்களில் தென் தொடுவானில் தென்படும்.
ஒமேகா சென்டாரையின் விட்டம் சுமார் 150 ஒளியாண்டு ஆகும். அதாவது, படத்தின் கீழிருந்து மேல்வரை பயணம் செய்ய ஒளிக்கு ஏறக்குறைய 150 வருடங்கள் எடுக்கும்! பூமியிலிருந்து ஒமேகா சென்டாரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது தெரியுமா? 17,000 ஒளியாண்டு என கணக்கிடப்பட்டிருக்கிறது!
பல நூற்றாண்டுகளாக ஒமேகா சென்டாரை ஒரு தனி நட்சத்திரம் என்றே நினைத்தனர். 17-வது நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த பொழுதுபோக்கு வானியலாளர் யோஹான் பையர், ஒமேகா (ω) என்ற கிரேக்க எழுத்தையே அதற்கு பெயராக சூட்டினார். ஆனாலும், 1677-ல் ஆங்கிலேய வானியலாளர் எட்மண்ட் ஹேலி என்பவர்தான் அது வட்டவடிவ கொத்தாக இருப்பதை முதலில் பார்த்தவர்.
வட அரைக்கோளத்திலுள்ள எழில்கொஞ்சும் கொத்துகளில் M13-ம் ஒன்று. இது ஹெர்குலெஸ் விண்மீன் தொகுதியில் அமைந்திருக்கிறது. அதில் சுமார் 10 லட்சம் நட்சத்திரங்கள் உண்டு. ஒமேகா சென்டாரைவிட அது 4,000 ஒளியாண்டு அதிக தொலைவில் இருப்பதால் பார்ப்பதற்கு சிறியதாக தோன்றும்.
ஓரளவு பெரிய தொலைநோக்கி மூலம் வட்டவடிவ கொத்து ஒன்றைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், என்ன ஆனாலும்சரி அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். இரவுநேர வானில் கண்ணைக் கவரும் காட்சிகளில் அதன் அழகே அழகு!
[அடிக்குறிப்புகள்]
a ஓர் ஒளியாண்டு என்பது 9,46,053,00,00,000 கிலோமீட்டர் ஆகும்.
[பக்கம் 31-ன் படம்]
ஒமேகா சென்டாரை
[படத்திற்கான நன்றி]
National Optical Astronomy Observatories
[பக்கம் 31-ன் படங்கள்]
M13
[படத்திற்கான நன்றி]
பால்வீதி மண்டலமும் M13-ம்: நன்றி: United States Naval Observatory