உலகை கவனித்தல்
வாழ்க திருமணம்!
திருமண வாழ்க்கை ஆண் பெண் இருபாலருக்குமே “நீண்ட ஆயுட் காலத்தை அளிக்கிறது. உடல் மற்றும் உணர்ச்சி ரீதியில் நல் ஆரோக்கியத்தை தருகிறது, அது மட்டுமா, வருமானத்தையும் பெருக்குகிறது” என்பதாக த நியு யார்க் டைம்ஸ்-ல் ஒரு ஆய்வாளர் குறிப்பிடுகிறார். திருமணமான பெண்களுக்கு மனஉளைச்சல் அதிகம் என 1972-ல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை, யுனிவர்சிட்டி ஆஃப் சிகாகோவின் பேராசிரியர் லிண்டா ஜெ. வெய்ட் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு தவறென நிரூபிக்கிறது. “திருமணம் மக்களுடைய நடத்தைகளை நல்லவிதமாக மாற்றுகிறது” அதில் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் குறைந்தளவு மதுபானமே குடிக்கின்றனர் என டாக்டர் வெய்ட் கண்டுபிடித்திருக்கிறார். திருமணத்தால் மனச்சோர்வும்கூட குறைந்திருப்பதுபோல் தெரிகிறது. “திருமணமாகாமல் இருந்த ஆண்கள் மனஉளைச்சலை அனுபவித்தனர் என இந்த ஆராய்ச்சி ஆரம்பித்த சமயத்தில் கண்டறியப்பட்டது. அவர்கள் தொடர்ந்து கட்டை பிரம்மச்சாரிகளாக இருந்தபோதோ மனஉளைச்சல் அதிகரிக்கத்தான் செய்தது.” இருந்தபோதிலும் யுனிவர்சிட்டி ஆஃப் மின்னிசோடாவைச் சேர்ந்த வில்லியம் ஜெ. டோரட்டி பின்வருமாறு குறிப்பிட்டார், இந்த புள்ளிவிபரங்கள் வெறுமனே சராசரியைத்தான் குறிப்பிடுகின்றன. மணமான எல்லாருமே மகிழ்ச்சிக் கடலில் திளைக்கலாம் என்றோ தன்னுடைய குணத்திற்கு பொருத்தமில்லாதவரை மணந்தவர்களின் இல்லற வாழ்க்கை இன்பமயமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் என்றோ இது அர்த்தப்படுத்தாது”.
வில்லத்தனமான ஹீரோக்கள்
ஆக்ஷன் பட ஹீரோக்கள்தான் இளஞ்சிட்டுகளின் பிரபலமான மாடலாக இருக்கிறார்கள். மீடியாவில் வன்முறை தலைவிரித்தாடுவதன் விளைவை ஆராய்ந்த ஐ.நா. கல்வி, அறிவியல், கலாச்சாரக் கழகம் இக்கருத்தைத் தெரிவித்தது. 23 நாடுகளைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய ஐயாயிரம் சிறுசுகளிடம் ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. நீங்கள் யாரைப் போல வாழ ஆசைப்படுகிறீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அதில் 26 சதவிகிதத்தினர் சினிமா ஹீரோக்கள் மாதிரி என்பதாக குறிப்பிட்டனர். “பாப் ஸ்டார்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் (18.5 சதவிகிதம்), மதத்தலைவர்கள் (8 சதவிகிதம்), அரசியல்வாதிகள் (3 சதவிகிதம்) என மற்றவர்களெல்லாம் அதற்கு அப்புறம்தான்” என பிரேஸிலின் ஜர்னல் டா டார்டி குறிப்பிட்டது. இந்த ஆய்வின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜோ க்ரோய்பெல், இக்கட்டான நிலைமைகளை சமாளிப்பதற்கு ஹீரோக்கள் செய்யும் அதே முரட்டுத்தனமான சாகசங்களை பிள்ளைகளும் ஈ அடிச்சான் காப்பிபோல பின்பற்ற விரும்புகிறார்கள் என்பதாக குறிப்பிடுகிறார். பிள்ளைகள் வன்முறை சம்பவங்களை எந்தளவுக்கு பார்க்கிறார்களோ அந்தளவுக்கு ரௌடிகளாக ஆவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதாக க்ரோய்பெல் எச்சரிக்கிறார். “வன்முறை என்பது இயல்பானதுதான், இப்படிச் செய்தால்தான் எல்லாம் ஒழுங்கிற்கு வரும் என்ற எண்ணத்தை மீடியா வளர்க்கிறது” என்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். கனவுலகத்திற்கும் உண்மை வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை பிள்ளைகள் கண்டுபிடிக்க பெற்றோர் உதவ வேண்டும். இது அவர்களின் முக்கியமான கடமையாகும் என்பதாக க்ரோய்பெல் வலியுறுத்திக் கூறினார்.
ஜோடிகளை இணைக்கும் எலக்ட்ரானிக் கருவி
தனிமையில் வாடும் உள்ளங்கள் துணையை தேடிக்கண்டுபிடிக்க வேண்டுமா? ஜப்பானில், “லவ் பீப்பர்“ என்ற ஒலி எழுப்பும் புதிய கண்டுபிடிப்பு இதற்கு உதவி செய்கிறது என்பதாக மைனிச்சி டெய்லி நியூஸ் அறிவிக்கிறது. இந்த பீப்பரை தேவைக்கேற்ப பலவகையில் பயன்படுத்தலாம். காரஓக்கிற்கும் (பதிவு செய்யப்பட்ட இசையோடு சேர்ந்து பாடுவது) நண்பர்களை தேடுவதற்கும் அரட்டை அடிப்பதற்கும் கூட பயன்படுகிறது. உதாரணமாக ஒரு வாலிபன் அரட்டை அடிப்பதற்கு இளம் பெண்ணொருத்தியை தேடுகிறான் என வைத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய உள்ளங்கை அளவான எலக்ட்ரானிக் பீப்பரை “அரட்டை அடிப்பதற்காக” செட் செய்கிறான். இந்த வாலிபனைப் போலவே தன்னுடைய பீப்பரை “அரட்டை அடிப்பதற்காக” செட் செய்த இளம் பெண் இவனருகே நடந்து சென்றால் போதும். இருவரிடமும் உள்ள பீப்பர்கள் க்ரீன் சிக்னலைக் கொடுத்து, பீப்பீப் என்று ஒலி எழுப்புகின்றன. ஜப்பானில் ஏற்கனவே 4,00,000 பேர் இந்த பீப்பருக்கு சொந்தக்காரர்கள். சந்திக்கப்போகும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் என்ன செய்வது? பீப் சவுண்டை ஆஃப் செய்துவிட்டு க்ரீன் சிக்னலை வைத்து அவர்களை எடை போட வேண்டியதுதான். ‘இந்த நடுத்தர வயது ஆள் நமக்கு ஒத்துவர மாட்டான், இவனிடம் என்ன பேச வேண்டியிருக்கிறது என்பதாக நீங்கள் நினைத்தால், பேசாமல் அந்த இடத்தைவிட்டு நழுவி விடலாம்’ என இக்கருவியை தயாரிக்கும் கம்பெனியின் திட்ட இயக்குநர் டகேயா டகாபுஃஜி கூறுகிறார்.
இளம் பெண்களின் நம்பர்.1 கொலையாளி
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் 65 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களைத்தான் காசநோய் பெரிதும் தாக்குகிறது என நான்டோ டைம்ஸ் தெரிவிக்கிறது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின்படி உலகளாவிய விதத்தில் “இளம்பெண்களின் நம்பர்.1 கொலையாளி” காசநோய்தான் என்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. “மனைவிகள், அம்மாக்கள், வேலைபார்த்து குடும்பத்தைக் காப்பவர்கள் ஆகியோரது வாழ்வின் முக்கியமான காலக்கட்டத்தில் அவர்களுடைய உயிரை சூறையாடிவிடுகிறது” என்பதாக WHO-ன் உலகளாவிய காசநோய் திட்டத்தின் டாக்டர் பால் டோலின் குறிப்பிட்டார். ஸ்வீடனில் உள்ள கோடேபோர்க்கில் நடந்த மெடிகல் செமினாரில் 90 கோடிக்கும் அதிகமான பெண்கள் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வல்லுநர்கள் கூறினார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய பத்து லட்சம் பேர் மரணமடையலாம். இவர்களில் பெரும்பான்மையோர் 15 முதல் 44 வயது நிரம்பியவர்கள்தான். இந்த சாவு வீதத்திற்கான ஒரு காரணத்தை பிரேஸிலின் செய்தித்தாளாகிய ஓ எஸ்டாடோ டா எஸ் பவுலு குறிப்பிடுகிறது: நோய் குணமடைவதற்கு முன்பே அநேகர், டாக்டர் எழுதிக்கொடுத்த எல்லா மருந்து மாத்திரைகளையும் உருப்படியாக சாப்பிடாமல் நிறுத்திவிடுகின்றனர்.
காரிலிருந்து புகையா, அப்படின்னா என்ன?
உலகின் மிகப்பெரிய நகரங்களில் காற்று தூய்மைக்கேடு அடைவதற்கு முக்கிய காரணமே கார்கள்தான். இப்பிரச்சினையை தீர்க்க பிரான்ஸ் நாட்டு என்ஜினியர் ஒருவர் நகர்ப்புறத்தில் ஓடும் புதிய காரை கண்டுபிடித்திருக்கிறார். இது சத்தமேயில்லாமல் ஓடுகிற கார். புகையும்கூட வருவதில்லை. “வெறுமனே நம்மைச் சுற்றியுள்ள காற்றால் இயங்குகிறது” என்பதாக லண்டனின் தி கார்டியன் வீக்லி அறிக்கை செய்கிறது. அதன் என்ஜின் வடிவமைப்பாளர் கி நிக்ரா உயர் அழுத்த காற்றினால் இயங்கக்கூடிய ஒரு மோட்டாரைக் கண்டுபிடித்திருக்கிறார். இந்த காரின் உயர் அழுத்த காற்று டேங்கை நிரப்புவதற்கு ஆகும் மின்சாரத்தின் செலவு எவ்வளவு தெரியுமா? அதிகம் ஒன்றுமில்லை. 80 ரூபாய்க்கும் கம்மிதான். ஆனால் நகர்ப்புறங்களில் மணிக்கு ஏறக்குறைய 100 கிலோமீட்டர் வேகம் வரை இந்த கார் பத்து மணிநேரம் சவாரிசெய்கிறது. இந்தக் காரில் பிரேக் பிடிக்கும்போதெல்லாம் வெளியில் உள்ள காற்றை இழுத்துக்கொள்கிறது. இதிலுள்ள கார்பன் ஏர்-பில்டரிங் சிஸ்டம் ஒரு அதிசயத்தையே நிகழ்த்துகிறது. எப்படியெனில் அசுத்தமான காற்றை உறிஞ்சி சுத்தமான காற்றை வெளியிடுகிறது. மெக்ஸிகோவின் அதிகாரிகள் தூய்மைக்கேடு இல்லாத மற்ற கார்களை கொண்டு பல சோதனைகளை நடத்தினார்கள். விளைவு? அந்நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் 87,000 டாக்ஸிகளை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு, இப்புதிய கார்களை உலாவவிட அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
மாசுபடுத்தப்பட்ட ஆல்ப்ஸ்
பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு உக்ரேனிலுள்ள செர்னோபில்லில் மின்னணு உலை விபத்து ஏற்பட்டது. இதிலிருந்து வெளிவந்த கதிரியக்கத்தால் மிக மோசமாக மாசுபடுத்தப்பட்ட இடங்களில் ஒன்று ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலையிலுள்ள வளர்பிறை போன்ற சிகரம். சமீபத்திய ஆய்வு காண்பிக்கிறபடி ஒரகத் தனிம சீசியம்-137-ன் (Isotope Cesium-137) கதிரியக்க தாக்குதல் படுபயங்கரமாக இருப்பதாய் பிரெஞ்சு செய்தித்தாளாகிய லா மாண்ட் அறிவிக்கிறது. சில இடங்களில் இந்தக் கதிரியக்கத்தின் தாக்குதல் ஐரோப்பாவில் அனுமதிக்கப்பட்ட அணு கழிவுகளின் அளவுகளைப் பார்க்கிலும் 50 மடங்கு அதிகமாக இருக்கிறது. பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியிலுள்ள மெர்கான்டூர் தேசிய பூங்கா, ஸ்விஸ்-இத்தாலியின் எல்லைக்கருகில் உள்ள மாட்டர்ஹார்ன், இத்தாலியிலுள்ள கார்டினா, ஆஸ்டிரியாவிலுள்ள ஹோஹி டெளர்ன் பூங்கா ஆகிய இடங்களிலிருந்து மிக மோசமாக மாசுபடுத்தப்பட்ட பொருட்களின் சாம்பிள்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தண்ணீரிலும் உபயோகத்திலுள்ள உணவுப் பொருட்களாகிய காளான், பால் போன்றவற்றிலும் கதிரியக்கத்தின் அளவை கண்காணிக்குமாறு பாதிக்கப்பட்ட நாடுகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
செவிடாக்கும் வாக்மேன்கள்
வாக்மேன் ஸ்டீரியோவை நார்மலாக பயன்படுத்துவோரும்கூட போகப்போக செவிடாகலாம். இவ்வாறு ஆஸ்திரேலியாவின் நேஷனல் அகோஸ்டிக் லேபரேட்டரி நடத்திய ஆய்வின் முடிவை பிரிஸ்பேனின் த கூரியர்-மெயில் வெளியிட்டது. இருப்பினும் இளைஞர்களுக்கு இந்த எச்சரிக்கைகளெல்லாம் செவிடன் காதில் ஊதின சங்குபோலத்தான். “இவர்கள் அதிக சப்தமான ஒலியையும் இசையையும் பலவருடங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இவைகளினால் பாதிப்பு ஒன்றுமில்லை என நினைக்கிறார்கள்” என்பதாக ஆய்வாளர் டாக்டர் எரிக் லபேஜ் கூறினார். ஒரு ஆய்வின்படி “கேட்கும் திறமை குறைந்து செவிடாகிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணருகிறவரைக்கும், இந்த எச்சரிக்கைகளை மக்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள்” என்பதாக அச்செய்தித்தாள் குறிப்பிட்டது. ஜெர்மனியில் நடத்திய புதிய ஆய்வின்படி, இராணுவத்தில் புதிதாகச் சேர்ந்த 16 முதல் 24 வயது வரையிலான வீரர்களில், நான்கில் ஒரு பங்கினர் ஏற்கெனவே கேட்கும் திறனை ஓரளவு இழந்துவிட்டனர். மிகவும் சப்தமான இசையை கேட்டதே இதற்கு காரணம். “ஏறக்குறைய 16 முதல் 18 வயதுள்ள வாலிபரில் 10 சதவிகிதத்தினர் சாதாரணமாக பேசுவதைக்கூட புரிந்துகொள்வதற்கு முடியாத அளவுக்கு, அவ்வளவு மோசமாக அவர்களது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருக்கிறது.”
குடும்பமாக சாப்பிடுகிறீர்களா?
பருவவயதினர் 527 பேரை வைத்து ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. இதில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஐந்து தடவைகள் தங்களுடைய குடும்பத்தோடு சாப்பிடும் இளசுகள் “போதைப்பொருட்களின் பக்கம் அவ்வளவாக எட்டிப் பார்ப்பது கிடையாது. மனஉளைச்சலினால் அவதிப்படுவது கிடையாது. பள்ளியில் துடிப்பாக செயல்படுகிறார்கள். கூடப் படிப்பவர்களோடு கலகலவென இருக்கிறார்கள்” என்பதாக கனடாவின் செய்தித்தாளாகிய டோரன்டோ ஸ்டார் கூறுகிறது. “ஒரு வாரத்தில் மூன்று அல்லது அதற்கும் குறைவான நாட்கள் தங்களது குடும்பத்தினரோடு சாப்பிடும் பருவவயதினர் ‘ஒழுங்கற்றவர்கள்’ என்ற பெயரைத்தான் சம்பாதிக்கிறார்கள்.” குடும்பமாக சாப்பிடுவது “ஆரோக்கியமான குடும்பத்திற்கு அடையாளம்” என்பதாக சைகாலஜிஸ்ட் புரூஸ் ப்ரைன் அடித்துக் கூறுகிறார். இவ்வாறு செய்வது குடும்ப பிணைப்பையும் பேச்சுக் கலையையும் மற்றவர்களுக்கு உரியவராயிருக்கும் தன்மையையும் பாலூட்டி வளர்க்கிறது. சாப்பாட்டு மேசையில் பின்பற்றவேண்டிய நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொடுக்கிறது. குடும்பத்தினரோடு கலந்துரையாடவும், ஜோக் அடிப்பது, ஜெபம் செய்வது போன்றவற்றை கற்றுக் கொள்ளவும் உதவுகிறது. “நான் இன்னிக்கு எங்க குடும்பத்தோட ரொம்ப நெருக்கமா இருக்கேன். இதுக்கு என்ன காரணம் தெரியுமா? எப்பவுமே எங்க வீட்ல எல்லாரும் ஒன்னா சேர்ந்து சாப்பிட்டதுதான்” என்பதாக சேர்ந்து சாப்பிடும் வழக்கமுள்ள குடும்பத்திலிருந்து வந்த ஓர் இளம் பெண் பூரிப்புடன் கூறுகிறாள்.
இந்தப் போட்டியின் விளம்பரதாரர். . ..
புகையிலை உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுகிறார்கள். இது “விளையாட்டுகளுக்கும் சிகரெட் குடிப்பதற்கும் இடையே நல்லுறவை” உருவாக்குகிறது என்பதாக ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியன் ஹெல்த் பிரமோஷன் பவுண்டேஷனின், ராண்டா கேல்பலி தெரிவிக்கிறார். இதன் விளைவாக விளையாட்டு நிகழ்ச்சிகளில் இடையே வரும் தந்திரமான புகையிலை விளம்பரங்கள் மக்களிடையே புகைக்கும் ஆசையைத் தூண்டுகிறது. பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின்படி, “பார்முலா ஒன் கார் பந்தயத்தை சின்னத்திரையில் பார்த்து ரசிக்கும் வாலிபர்கள் ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக சிகரெட் புகைக்க ஆரம்பிக்கிறார்கள்” என்பதாக பானோஸ் செய்தி நிறுவனம் அறிவிக்கிறது. “ஐரோப்பா முழுவதும் கார் பந்தயங்களை ஆதரிப்பதற்காக மட்டுமே புகையிலை கம்பெனிகள் ஒவ்வொரு வருடமும் பலகோடி டாலரை செலவழிக்கின்றன.” சந்தேகமில்லாமல், சின்னத்திரையில் தோன்றும் நடமாடும் விளம்பர பலகைகள் வேறுயாரும் அல்ல கார்கள்தான்.
ஆதி விவசாயிகள்
ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு, வளமான மத்திய கிழக்கு பகுதியில் உள்ள காடுகளில் ஆராய்ச்சி நடத்தினர். அங்கு கிடைத்த காட்டு கோதுமையின் டிஎன்ஏ-ஐ ஆராய்ந்தனர். இது உலகின் மற்ற பாகங்களில் விளைகிற கோதுமை இரகங்களைப் போலவே இருந்ததாக பிரெஞ்சு செய்திதாள் லா மாண்ட் அறிவிக்கிறது. இப்பிராந்தியத்தில் கோதுமை மற்றும் பல “ஆரம்பகால தானியங்களை” வளர்த்தனர். கூடுதலாக இங்கே முதன் முதல் பழக்கப்பட்ட வீட்டு விலங்குகளாகிய செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், மாடுகள் போன்றவையும் வளர்க்கப்பட்டன. இங்கிருந்தே ஐரோப்பா, ஆசியா முழுவதும் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் தானியங்கள் பரவியதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அக்காலத்தில் கோதுமை பயிர்செய்யப்பட்ட பூர்வீக விவசாய கிராமங்கள் இப்போது கண்டறியப்பட்டுள்ளன. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இக்கிராமங்கள் வேன் ஏரி மற்றும் அரராத் மலைகளுக்கு தென்மேற்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.