லட்சோப லட்சம்பேர் செல்வார்கள்—நீங்களும் செல்வீர்களா?
வருடா வருடம் வையகம் முழுவதும் எண்பது லட்சத்திற்கும் அதிகமானோர் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர மாநாட்டிற்கு வருகை தருகின்றனர். “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தை”—இதுவே இவ்வருட மாநாட்டின் தலைப்பு. இந்த மாவட்ட மாநாடுகள் இந்தியாவில் 27 இடங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. ஒருவேளை நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே ஒரு மாநாடு நடைபெறலாம். வெள்ளிக்கிழமை காலை 9:30 மணிக்கு இன்னிசையுடன் இனிதே ஆரம்பமாகும் நிகழ்ச்சிநிரலுக்கு வருகை தரும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
காலை நிகழ்ச்சியில் வரவேற்புரையும் “கடவுளின் தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்” என்ற சிறப்பு பேச்சும் இருக்கும். பிற்பகல் கொடுக்கப்படும் தொடர்பேச்சின் தலைப்பு: “கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதில் பேரானந்தம் அடையுங்கள்.” பைபிள் வாசிப்பை எவ்வாறு பயனுள்ளதாகவும் இனிமையாகவும் ஆக்கலாம் என்பதன் பேரில் நடைமுறை ஆலோசனைகள் வழங்கப்படும். அந்நாளின் இறுதி பேச்சு, “தேவனுக்கு எதிராக போர் புரிவோர் வெற்றிபெற மாட்டார்கள்.” நவீன காலங்களில் கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போருக்கு விரோதமாக தொடுக்கப்பட்ட சண்டையை அது எடுத்துரைக்கும்.
சனிக்கிழமை காலை நிகழ்ச்சியில் முக்கிய அம்சம் முழுக்காட்டுதல் பேச்சு. தகுதிபெற்றோர் முழுக்காட்டுதல் பெறுவதற்கு இது வாய்ப்பளிக்கும். பிற்பகலில் ஊக்கமூட்டும் அறிக்கைகள் அள்ளி வழங்கப்படும். இவை லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆசியாவிலேயே பெரிய நாடாகிய கஸகஸ்தான் ஆகிய நாடுகளில் வாழும் மக்கள், பைபிள் சத்தியத்திற்கு வியக்கத்தக்க விதத்தில் பிரதிபலித்ததைப் பற்றிய அறிக்கைகள். இந்தப் பாகம், “யெகோவாவின் வீடு ‘விரும்பத்தக்கவைகளால்’ நிரம்புகிறது” என தலைப்பிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை நிகழ்ச்சி பின்வரும் இரண்டு சொற்பொழிவுகளோடு நிறைவுறும்: “விழிப்புடனிருக்க தீர்க்கதரிசன வசனங்கள் நம்மை எச்சரிக்கின்றன,” “முடிவின் காலத்தில் தீர்க்கதரிசன வார்த்தை.” கடைசி பேச்சு பைபிள் புத்தகமாகிய தானியேல் புத்தகத்தின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி, அந்தத் தீர்க்கதரிசனத்திற்கு கவனம் செலுத்துவதற்கான காரணங்களை அளிக்கும்.
ஞாயிறு காலை, “குறிக்கப்பட்ட காலத்திற்கான தீர்க்கதரிசன வார்த்தைகள்” என்ற மூன்றுபாக தொடர்பேச்சு; இது அறுபது நிமிட பேச்சு. ஆபகூக் தீர்க்கதரிசனத்தை இது கலந்தாராயும். இன்றைய கிறிஸ்தவர்களுக்கு பைபிளிலிருக்கும் இந்தச் சிறிய புத்தகம் எப்பேர்ப்பட்ட உற்சாகமளிக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள். அதன் பிறகு, பைபிள் விவரப்பதிவாகிய யாக்கோபு, ஏசாவை பற்றிய பைபிள் நாடகம் அரங்கேற்றப்படும். அதன் தலைப்பு “ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல்.” “நம்முடைய மதிப்புமிக்க ஆஸ்தி உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?” என்ற புத்துயிரளிக்கும் பேச்சுடன் ஞாயிறு காலை நிகழ்ச்சி நிறைவடையும். பின்பு பிற்பகலில், “முன்னறிவித்தபடி சகலத்தையும் புதிதாக்குதல்” என்ற பொதுப் பேச்சை நீங்கள் கேட்டு மகிழ்வீர்கள்.
கலந்துகொள்ள இப்பொழுதே திட்டமிடுங்கள். உங்களுடைய வீட்டிற்கு அருகே மாநாடு நடைபெறும் இடத்தைத் தெரிந்துகொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகளுடைய உள்ளூர் ராஜ்ய மன்றத்துடன் தொடர்புகொள்ளுங்கள், அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு எழுதுங்கள்.