பாய்ந்தோடும், பறக்க முடியாது, கண்ணைக் கவரும்—நெருப்புக்கோழி
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
பரந்து விரிந்து கிடக்கும் ஆப்பிரிக்க சமவெளியில் திரியும் ஒட்டகச்சிவிங்கி, வரிக்குதிரை, மான் போன்ற மிருகங்களோடு, கடவுள் படைத்த, தனிச்சிறப்புடைய அநேக உயிரினங்களும் வலம்வருகின்றன. அவற்றின் பிரமாண்டமான உருவத்தையும், பிரமிப்பூட்டும் உயரத்தையும், வலிமை மிக்க கால்களையும், சொக்கவைக்கும் அழகிய, மென்மையான இறகுகளையும் கண்டு மலைக்காதோர் இல்லை. 2.5 மீட்டர் உயரமும் 155 கிலோகிராம் எடையும் கொண்ட இவையே பறவையினங்களில் மிகப் பெரியவை. இது ஸ்வாஹிலி மொழியில், ம்பூனி என்று அழைக்கப்படுகிறது. ஆனால், நெருப்புக்கோழி என்ற இதனுடைய பொதுவான பெயரை சொன்னதும் நம் எல்லாருக்குமே தெரியும்.
ஒட்டகத்தைப் போன்ற பெருமித நடை
வெகு காலத்திற்கு முன், நெருப்புக்கோழிக்கு ஸ்ட்ரதோகேமலஸ் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருந்தது. கிரேக்கு, லத்தீன் மொழிகள் இரண்டும் கலந்த பெயர் இது. ‘ஒட்டகங்களைப் போன்ற தோற்றம் உடைய’ என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது. ஒட்டகத்தைப் போலவே, நெருப்புக்கோழியும் பாலைவன நாடுகளில் அதிக உஷ்ணத்தை தாங்கி, உயிர் வாழ்கிறது. இதற்கு நீளமான, பெரிய கண்ணிமைகள் இருக்கின்றன. புல்வெளியின் தூசியில் இருந்து இதன் பெரிய கண்களை இந்த இமைகள் காக்கின்றன. இப்பறவை நீளமான, உறுதியான கால்களை கொண்டிருக்கிறது. இரண்டே விரல்களை உடைய அதன் பாதங்கள், சதைப்பற்றும் உறுதியும் மிக்கவை. திறந்த சமவெளியில், கம்பீரமான இதன் வீறுநடையைப் பார்த்து மலைப்பவர்கள் அநேகர். இதன் வேகம், நிதானம் மற்றும் சில பண்புகள் ஒட்டகத்தைப் போன்றே இருக்கிறது.
இதன் கூட்டாளிகளான மற்ற குளம்பின மிருகங்கள் ஒருபுறம் மேய, நெருப்புக்கோழியோ ஊர்வன எல்லாவற்றையும் மேய்கிறது. இது ஓர் அனைத்துண்ணி. பூச்சிகள், பாம்பு, எலி, வேர்கள், தாவரங்கள் என அனைத்தையும் உண்கிறது. அதுமட்டுமல்ல, மரம், ஓடு, கற்கள், குச்சிகள் மற்றும் பளிச்சென்று தெரியக்கூடிய வேறு எந்த சிறிய பொருளையும் டபக்கென்று விழுங்கிவிடும்.
இதன் பெரிய உருவமும் எடையும் இது பறப்பதற்கு தடையாக இருக்கின்றன. இருந்தபோதிலும், தசைப்பற்றுள்ள இதன் கால்கள் வலிமை வாய்ந்தவை. மிக வேகமாக ஓடும் பிராணிகளில் ஒன்றாக இது திகழ்வதற்கு இதன் கால்களே காரணம். பாலைவனங்களில்கூட, இவை மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும்! “குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் பண்ணும்” என நெருப்புக்கோழியைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (யோபு 39:18) இந்த வர்ணிப்புக்கு இசைய, விரைந்தோடும் இந்த இரண்டு கால் பறவை, மின்னல் வேகத்தில் நீண்ட தூரம் சளைக்காமல் ஓடும் உடலுரம் உடையது. அதிவேகமாக துரத்திவரும் நாலுகால் எதிரியிடமிருந்து தப்பிக்க இதன் கால்களே தற்காப்பு!
இனப்பெருக்கம்
இணைச்சேரும் காலத்தில், ஆண் நெருப்புக்கோழி பிரமாதமாக, கவர்ச்சிமிக்க காதல் நடனம் ஆடும். பெண் நெருப்புக்கோழிக்கு முன், கருமையும் வெண்மையும் கலந்த தனது இறக்கைகளை விரித்து, குலுக்கி அபிநயத்தோடு ஆடும். இரண்டு பிரமாண்டமான விசிறிகளைப்போன்ற அதன் இறக்கைகளை இப்படியும் அப்படியும் ஆட்டும். இறகுகள் இல்லாத அதன் கழுத்தும் கால்களும் சிவக்க ஆரம்பித்து, பளீர் இளஞ்சிவப்பு நிறமாக மாறும். அதன் பளபளக்கும் மைபோன்ற கருமை நிற சிறகுகளும் இளஞ்சிவப்பாக மாறிய கழுத்தும் கால்களும் சேர்ந்து மிக அழகாக தோற்றமளிக்கும். இதன் நீண்ட கழுத்தை பக்கவாட்டில் இப்படியும் அப்படியும் ஆட்டி, நிலத்தைக் காலால் ஓங்கி மிதித்து ஒய்யாரமாக ஆடும்.
மங்கிய நிறமுடைய பெண் நெருப்புக்கோழியை கவர்ந்திழுக்கவே, இறக்கைகளை விரித்து ஆடும் கலைநயம் மிக்க, கவர்ச்சியான இந்த நடனம். ஆண் பறவை இந்தக் காதல் நடனத்தை தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்தாலும், பெண் பறவை தான்பாட்டுக்கு நிலத்தைக் கிளறிக்கொண்டு, தன்னைச் சுற்றி நடக்கும் இந்த சந்தடிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் அசட்டையாக இருக்கும்.
ஏற்ற ஜோடி கிடைத்ததும், ஆண் பறவை கூட்டை தேர்ந்தெடுக்கிறது. திறந்த புல்வெளியில், புழுதியில் ஏதாவது ஒரு இடத்தில் அகலமான, ஆழமற்ற குழியை தோண்டுகிறது. அந்தக் குழிக்கு பல பெண் தோழிகளை கூட்டி வருகிறது. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, இந்தப் பெண் பறவைகள் இட்ட, இரண்டு டஜன் அல்லது அதற்கும் மேற்பட்ட முட்டைகளைக் காணலாம்.
இந்த முட்டைகளை ஆறு வாரங்கள் இவை அடைகாக்கின்றன. இரவில் ஆண் பறவையும் பகலில் பெண் பறவையும் அடைகாக்கும். இந்த சமயத்தில்தான் இந்த முட்டைகளைத் தேடி, பசியோடிருக்கும் சிங்கங்கள், நரிகள், கழுதைப்புலிகள் வரும். கற்களை எறிந்து, ஓட்டை உடைத்து, அதை சாப்பிட எகிப்திய பிணந்தின்னி கழுகுகளும் வரும்.
இராட்சத முட்டைகளும் இராட்சத குஞ்சுகளும்
சாம்பலும் வெண்மையும் கலந்த அல்லது மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருக்கும் இந்த முட்டைகள்தான் உலகிலேயே மிகப் பெரியவை. இது ஒவ்வொன்றின் எடையும் சுமார் 1.5 கிலோகிராம். பளபளப்பான, கடினமான இதன் ஓடு, பீங்கான் போல் வழவழப்பானது. நெருப்புக்கோழியின் ஒவ்வொரு முட்டையும் 25 கோழி முட்டைகளுக்கு சமம். இது சத்துள்ளது, சுவைமிக்கது. சில சமயங்களில், காலி முட்டை ஓடுகளை தண்ணீர் நிரப்பும் தொட்டிகளாக ஆப்பிரிக்க நாடோடி மக்கள் உபயோகிக்கின்றனர்.
இந்தப் பெரிய முட்டை, பொரியும் சமயத்தில், வெளியே வருவது மிகப் பெரிய குஞ்சு! புதியதாக பொரித்த குஞ்சுகள் நிராயுதபாணிகள். ஆனால், வெகு விரைவாக வளருகின்றன. இவை பிறவி ஓட்டக்காரர்கள். ஒரே மாதத்திற்குள், இவற்றின் உறுதியான கால்கள் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுவதற்கு உதவுகின்றன!
குஞ்சுகளைக் காக்கும் பொறுப்பு பெற்றோருடையதே. ஆபத்து வரும்போது, நெருப்புக்கோழி தன் தலையை மணலுக்குள் புதைத்துக் கொள்ளும் என்பது கட்டுக்கதையே. மாறாக, தங்கள் குஞ்சுகளைக் காப்பதற்காக, தாய்ப்பறவையோ தந்தைப்பறவையோ எதிரிகளை பலமாக எட்டி உதைத்து, மூர்க்கமாகவும் ஆக்ரோஷமாகவும் தாக்கி சண்டையிட்டு விரட்டும். எதிரிகளின் கவனத்தை வேறு திசையில் திருப்ப, காயம்பட்டதுபோல இவை நடிக்கும். இப்படி செய்து, கவனத்தை குஞ்சுகளிடம் இருந்து தங்கள் மேல் திருப்பிவிடும். இருந்தபோதிலும், எதிரி மிக அருகில் வந்துவிட்டால், பொதுவாக இப்பறவைகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, குஞ்சுகளை அம்போ என விட்டுவிட்டு, புறமுதுகிட்டு ஓடிவிடும். இந்த சமயங்களில், அது “தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்” என்ற பைபிள் வாக்கியத்தை நிரூபிக்கிறது.—யோபு 39:16.
எழில்வீசும் இறகுகள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மனிதன் நெருப்புக்கோழியின் அழகை வியந்து போற்றியிருக்கிறான். பூர்வ எகிப்திய ராஜாக்கள், வில்லுகளோடும் அம்புகளோடும் நெருப்புக்கோழியை வேட்டையாடுவது போன்ற சித்திரங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. சில பண்டைய நாகரிகங்களில், நெருப்புக்கோழி புனிதமாக கருதப்பட்டது. அழகிய, சீரான இதன் முட்டைகளை சீனர்கள் வெகுவாக மதித்தனர். இவற்றை விலை உயர்ந்த பரிசாக ராஜாக்களுக்கு அளித்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, படைத் தளபதிகள், ராஜாக்கள், ஆப்பிரிக்கத் தலைவர்கள் ஆகியோரின் தலைப்பாகைகளை நெருப்புக்கோழியின் எழில்வீசும் இறகுகள் அலங்கரித்தன.
14-ம் நூற்றாண்டில், நவீன பாணியை விரும்பிய ஐரோப்பியர்கள், நெருப்புக்கோழியின் இறகுகளை விலையேறப்பெற்றதாய் கருதினர். இருந்தாலும், ஈட்டிகளையும் அம்புகளையும் கொண்டு இவற்றை வேட்டையாடுவது சுலபமல்ல. ஏனெனில், கூரிய பார்வை உடைய இவை ஆபத்து வரும்போது, மின்னல் வேகத்தில் தப்பி ஓடக்கூடியவை. அந்தக் காலங்களில், நெருப்புக்கோழியினம் அழிந்து போகும் ஆபத்து இல்லை.
பிறகு, 19-ம் நூற்றாண்டில், நெருப்புக்கோழியின் இறகுகளுக்கு மீண்டும் மவுசு அதிகமாகியது. அதை வைத்துக்கொள்வது ஃபேஷனானது. அதனால், நவீன ஆயுதங்களின் உதவியால், வேட்டையாளர்கள் நெருப்புக்கோழிகளை கோடிக்கணக்கில் கொன்று குவித்தனர். நெருப்புக்கோழிப் பண்ணைகளின் வருகையால், பறக்க முடியாத இந்தப் பெரிய பறவையினம் முற்றிலுமாக அழியாமல் காக்கப்படுகிறது. இப்போது, இவை கூண்டுக்குள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இறகுகள் நவீன பாணி உடைகளில் உபயோகிக்கப்படுகின்றன. தூசியை துடைக்க உதவும் டஸ்டர்களாகவும் பயன்படுகின்றன. இவற்றின் தோலில் இருந்து மென்மையான கையுறைகள், கைப்பைகள் செய்யப்படுகின்றன. இதன் மாம்சம் சில ரெஸ்டாரண்டுகளில் பரிமாறப்படுகின்றன.
ஆப்பிரிக்க சமவெளிகளில் இன்றும் நெருப்புக்கோழிகள் கம்பீரமாக சுற்றித் திரிகின்றன. வழக்கமான அவற்றின் வசிப்பிடங்கள் குறைந்துகொண்டோ அல்லது சில இடங்களில் முழுவதுமாக இல்லாமலோ போகின்றன. இருந்தாலும், அவற்றிற்கு விருப்பமான வறண்ட புதர்கள் நிறைந்த இடங்களில் தொடர்ந்து வாழ்கின்றன. அங்கே, அவை பிரமாண்டமான இறக்கைகளை விரித்துக் கொண்டு, சமவெளியில் படுவேகமாக ஓடுவதையும், கவர்ந்திழுக்கும் காதல் நடனம்புரிவதையும், அல்லது பெரிய முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். விரைந்தோடும் காலுடைய, ஆனால் பறக்க முடியாத இந்தப் பறவை, பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தி, சந்தோஷத்தில் திளைக்கச் செய்யும். இறக்கைகளையுடைய மற்றுமொரு அதிசயப் படைப்பு!
[பக்கம் 16-ன் படம்]
ஆண் நெருப்புக்கோழி
[பக்கம் 16-ன் படம்]
மிக வேகமாக ஓடும் உயிரினங்களில் நெருப்புக்கோழியும் ஒன்று
[பக்கம் 16-ன் படம்]
அவற்றின் பாதங்களே வலிமைமிக்க ஆயுதங்கள்
[பக்கம் 18-ன் படம்]
பெண் நெருப்புக்கோழி