டான்யூப்—வாய் மட்டும் இருந்தால்!
ஜெர்மனியிலிருந்து விழித்தெழு! நிருபர்
கீழே பாய்வது பிரசித்திபெற்ற டான்யூப் நதி. மேலிருந்து பார்ப்பது ஜெர்மானியர்கள். இவ்வாறு கண்ணிமைக்காமல்—ஆனால் கண்மூடித்தனமாக—நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்திருக்கின்றனர். இது எப்படி முடியும்? எப்படியென்றால், பவெரிய அரசர் முதலாம் லூட்விக், பழங்காலத்து கிரேக்கக் கலையைப் பயன்படுத்தி 1842-ல் பளிங்கால் கட்டிய கோவில் வல்ஹல்லா என்பதாகும். a இது மறைந்த ஜெர்மானிய மாமக்களை கௌரவிக்கும் நோக்குடன் கட்டப்பட்டது.
இந்த ஜெர்மானிய நினைவாலயம், ஜெர்மனியில் பாயும் டான்யூப் நதிக்கு மேலே மலைப்பாங்கான இடத்தில், ரீகன்ஸ்பர்க்குக்கு அருகில் அமைந்துள்ளது. இது, ஆதன்ஸ் நகரில் உள்ளரணில் அமைந்துள்ள பார்த்தினானைப் பார்த்து காப்பியடிக்கப்பட்டது. ஏனெனில் இதிலும் புகழ்பெற்ற ஆண்கள் பெண்களின் மார்பளவு உருவச்சிலைகள் ஏராளமாய் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழலும் பொருத்தமானதே. அறிவொளி சுடராய் திகழ்ந்த பீத்தோவன், ஐன்ஸ்டீன், கோத்தே, கூட்டன்பர்க், கெப்ளர், லூதர் உள்ளிட்ட இளவரசர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கு டான்யூப் தண்ணீர்பட்ட பாடம். இவர்களில் அநேகர் இதன் கரைகளில் வசித்திருக்கின்றனர்; இதன் தண்ணீரைக் கடந்து சென்றிருக்கின்றனர். இதைப் புகழ்ந்து பாடியிருக்கின்றனர். இந்த டான்யூப்புக்கு மட்டும் வாயிருந்தால் என்னென்னவோ கதைகளை பேசிவிடும்!
நதி மட்டுமல்ல
“ஆறுகள் புவியியலாளர்களுக்கு வண்டல்மண்ணையும் வாணிகத்தையும் அள்ளி வழங்கும்” என சரித்திராசிரியர் நார்மன் டேவிஸ் எழுதினார். “சரித்திராசிரியருக்கோ கலாசாரத்தையும், கொள்கைகளையும், சில சமயங்களில் சச்சரவுகளையுமே படம்பிடித்துக் காட்டும். இவை பேசாமல் பேசும்.” பத்து நாடுகளின் வழியாக இந்த டான்யூப் நதி பாய்கிறது. அவையாவன: ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி, க்ரோயேஷீயா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, ருமேனியா, மால்டோவா, உக்ரேன். இந்நதி சில நாடுகளில் தைரியமாய் உள்ளே பாய்ந்தோடுகிறது. பிற நாடுகளிலோ எல்லையோரத்திலேயே பயந்தோடுகிறது. ஆகவேதான் அந்தந்த நாட்டு கலாச்சாரம், கொள்கைகள், சச்சரவுகளை சுமந்து வந்திருக்கிறது எனலாம். டான்யூப் நதிக்கரையில் அமைந்துள்ள பல நகரங்கள் ஐரோப்பிய சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத்திலேயே பெரும்பங்கை வகித்துள்ளன என்பதில் ஆச்சரியமில்லை.
உதாரணமாக ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவை எடுத்துக்கொள்ளுங்கள். உலகிலேயே தலைசிறந்த கலாசார மையமாய்த் திகழ்ந்தவற்றுள் இந்நகரும் ஒன்று என்பதை எல்லாரும் ஒப்புக்கொள்வர். அத்துடன் இசைநாடக அரங்குகளும், கேளிக்கை அரங்குகளும், அருங்காட்சியகங்களும், சரித்திரப் புகழ்வாய்ந்த கட்டடங்களும், நூல்நிலையங்களும் அந்நகரத்தில் நிரம்பியிருந்தன. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கிளப்புகளுக்கும் பார்களுக்கும் பிரசித்திபெற்றதாக இருந்தது. வியன்னா இசைக் கச்சேரி அரங்கு உலகிலேயே அருமையானது என கருதப்படுகிறது. வியன்னா பல்கலைக்கழகம் 1365-ல் ஸ்தாபிக்கப்பட்டது. இது உலகிலேயே மிகப் பழமையான ஜெர்மன் மொழி பல்கலைக்கழகம்.
கொள்கைகளைப் பொருத்தவரை, புதிய நூற்றாண்டு வியன்னாவை, “நல்லதோ, கெட்டதோ, நவீன உலகை உருப்படுத்தத் தேவையான கொள்கைகளின் வளமான பிறப்பிடம்” என்று த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா அழைக்கிறது. அங்கு செலவிட்ட வருடத்திற்கு ஏற்றாற்போல் அநேகர் செல்வாக்கு செலுத்தப்பட்டுள்ளனர். அவர்களில், யூத தாயக இயக்கத்தைத் தோற்றுவித்த டேயோடோர் ஹெர்ஸல் ஒருவர்; உளப்பகுப்பின் தந்தையான ஸிக்முண்ட் ஃபிராய்ட் மற்றொருவர்; இன்னுமொருவர் அடால்ஃப் ஹிட்லர்; இவரைப் பற்றிய விளக்கம் தேவையில்லை.
“காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தை” பிரித்தல்
“முற்காலங்களில், டான்யூப் நதி ஐரோப்பிய தீபகற்பத்தைப் பிரிக்கும் பெருங்கோடுகளில் ஒன்றாகத் திகழ்ந்தது” என நார்மன் டேவிஸ் கூறுகிறார். அவர் விளக்குவதாவது: “கி.பி. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசின் எல்லையாக எல்லாராலும் அறியப்பட்ட இது, லத்தீனில் டானுவியுஸ் என்று அழைக்கப்பட்டதால் காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நாகரிகத்தை வேறுபடுத்தியது.”
டான்யூப் நதிக்கரையில் அமைந்த நகரங்கள் பல, ரோமப் பேரரசு என்றும், பிற்காலத்தில் புனித ரோமப் பேரரசு என்றும் அழைக்கப்பட்ட வல்லரசின் சரித்திரத்தில் பெரும்பங்கு வகித்தன. உதாரணமாக, பிராட்டஸ்லாவா நகரம், ஸ்லோவாக்யாவில் கலாசார மையமாய் உள்ளது. இன்று இதுவே அதன் தலைநகராய் உள்ளது. இது 1526 முதல் 1784 வரை ஹங்கேரியின் தலைநகராக விளங்கியது. அதுமட்டுமின்றி சிலகாலமாக டான்யூப் நதியிலிருந்து 300 அடி உயரத்தில் கம்பீரமான அரண்மனையாய் வீற்றிருந்தது. இதுவே ஆஸ்திரிய நாட்டு அரச குடும்பத்தவரின் உறைவிடமாய் விளங்கியது. 1741-ல் பிரெஞ்சு மற்றும் பவெரிய சேனைகளால் வியன்னா அச்சுறுத்தப்பட்டபோது, பின்னர் பேரரசரின் மனைவியான மரிய தெரஸா அடைக்கலம்தேடி இங்குதான் ஓடினார்.
மரிய தெரஸா ஹேப்ஸ்பர்க்கின் பரம்பரையில் வந்தவர். இந்தப் பேரரச பரம்பரை ஐரோப்பாவில் கொடிகட்டிப் பறந்த வம்சங்களில் ஒன்று. வல்ஹல்லாவின் மார்பளவு உருவச்சிலைகளில் இதுவும் காணப்பட்டது. b இந்தப் பிரபலமான குடும்பத்தின் வம்சாவளியை 10-ம் நூற்றாண்டுவரை பின்னோக்கிச் சென்று கண்டுபிடிக்க முடியும். இக்குடும்பம் 13-ம் நூற்றாண்டில் ஆட்சிப்பீடத்தில் ஏறியது. காலப்போக்கில் மத்திய ஐரோப்பாவின் பெரும்பகுதியை வளைத்துக்கொண்டது. பெரும்பாலும் ராஜதந்திர முறைப்படி கலப்புத்திருமணம் செய்து தன் எண்ணத்தைச் சாதித்தது. ஹேப்ஸ்பர்க்கின் சிங்காசனத்துக்கு வாரிசாகிய பிரான்சிஸ் பெர்டினாண்ட், சரஜெவோவில் 1914-ல் படுகொலை செய்யப்பட்டார். இதுவே உலகப் போருக்குத் தீ மூட்டியது.
இரத்தக் கறைபடிந்த நதி
பேரரசுகள் வருவதும் போவதுமாய் இருந்திருப்பதால், டான்யூப் நதி தொடர்ந்து அரசியல் மாற்றத்துக்கு உட்பட்டது. இது 11-ம், 12-ம் நூற்றாண்டுகளில் பைசான்டைன் பேரரசின் எல்லையாக விளங்கியது. பின்பு, வழிநெடுக ஒட்டாமன் பேரரசின் வழியாகப் பாய்ந்தது. ஏனெனில் டான்யூப் நதிக்கரையில் அமைந்திருந்த பெல்கிரேட் புடாபெஸ்ட் போன்ற நகரங்களை துருக்கியர்கள் கைப்பற்றிவிட்டனர். 1529, 1683-ம் ஆண்டுகளில் வியன்னாவையும் முற்றுகையிட்டனர். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.
ஜெர்மானிய ஆசிரியர் வர்னர் ஹைடர் இவ்வாறு கூறுவதில் ஆச்சரியமில்லை: “ஐரோப்பாவில் டான்யூப்பைப் போல் எந்தவொரு நதியும் இந்தளவுக்கு சரித்திர முக்கியத்துவம் பெறவில்லை.” மற்றொரு ஆசிரியர், “நாடோடி இனத்தவரான ஹன்னியர்களும், தார்தாரியர்கள், மங்கோலியர்கள், துருக்கியர்கள் ஆகிய பிற இனத்தவரும் படையெடுத்துச் சென்றபோது இதன் வழியாகவே சென்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
சமீப காலங்களில் ஏற்பட்ட போர்களின்போதும் டான்யூப் நதி நாசம் செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் வில்லியம் எல். ஷைரர் எழுதுகிறார்: “[1941] பிப்ரவரி 28-ம் தேதி இரவில், ஜெர்மானிய படைகள் ருமேனியாவிலிருந்து டான்யூப் நதியைக் கடந்து பல்கேரியாவுக்குள் ராஜதந்திரமாய் நுழைந்தது.” நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1945-ல், “ஏப்ரல் 13-ல் ரஷ்யர்கள் வியன்னாவைக் கைப்பற்றி, டான்யூப் நதியில் எதிர்த்திசையில் போய்க்கொண்டிருந்தபோது, யு.எஸ். மூன்றாம் படை அவர்களைப் பிடிக்க கீழ்நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தது.”
டான்யூப் நதியின் கலாச்சார, கொள்கைகளைப் பற்றிய சரித்திரம் அனைத்துமே சச்சரவு நிறைந்ததுதான். இந்நதியின் நீரில், பெரும்பாலும் மனிதர் நடத்திய போர்களால் சிந்தப்பட்ட இரத்தம் கலந்துள்ளது. ஆனால் பிறவழிகளிலும் அது கறைபடிந்து இருக்கிறது.
நீலம் மறைந்தது
இளைய யோஹான் ஸ்டிரௌஸ் “நீல டான்யூப்” என்ற பாடலை 1867-ல் இயற்றியபோது, இந்நதியின் நீர் நீலநிறத்தில், வானத்தின் ஒளியை பிரதிபலித்தது. ஆனால் இன்று அதன் நிறம்?
டான்யூப் நதி, ஜெர்மனியிலுள்ள பிளாக் ஃபாரஸ்ட்டில் பிறந்து, தென்கிழக்கே சுமார் 2,850 கிலோமீட்டர் தூரம் தவழ்ந்து, கருங்கடலில் சங்கமிக்கிறது. வால்கா நதிக்கு அடுத்தபடியாக, ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான நதி இதுவே. இதிலிருந்து 8,17,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நீரேற்று வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சமீபத்தில் வியன்னாவுக்கும் புடாபெஸ்ட்டுக்கும் இடையில் பாயும் டான்யூப் நதியின் நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் ஒரு பகுதிதான் காப்சீகாவா அணை கட்டுவது. இது சுற்றுச்சூழலைப் பாதித்துள்ளது. ஒரு பத்திரிகையில் வெளிவந்த செய்தியின்படி: இந்த அணையால், “டான்யூப் நதியின் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. இதன் காரணமாக டான்யூப் நதியின் கீழ்ப்பகுதியில் நீண்ட தூரத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பிலுள்ள காடுகளும் சதுப்புநிலங்களும் வறண்டு, மீன்பிடி தொழிலும் கிட்டத்தட்ட 80% பாதிப்படைந்துவிட்டது.”
இந்நதிக்கு மட்டும் பேசும் சக்தி இருந்தால், மனிதனின் மடமைக்கும் பேராசைக்கும் உடந்தையாகவும் பலியாகவும் ஆகியிருப்பதைச் சொல்லவே அதன் வாய் கூசியிருக்கும். “உலகிலேயே அதிக மாசுபடிந்த கடல்” என்று கருங்கடலுக்கு பெயர் வாங்கித் தந்த பெருமை பெற்றவையும், அதில் கலப்பவையுமான மூன்று பெரிய ஆறுகளுடன் சேர்ந்து, டான்யூப் நதியும் அவற்றுக்குத் துணைபோயிருக்கிறது என்பதாக ரஷ்ய செய்தித்தாளான ராசிஸ்கயா காஸ்யட்டா வர்ணிக்கிறது. அதே செய்தித்தாள், கருங்கடலை, “அவல மரணம் அடைகிறது” என்றும் கூறுகிறது. மேலும், கடந்த 30 ஆண்டுகளில், “ஐரோப்பாவின் பாதிப்பாகத்திற்கு கழிவு நீர்நிலையாக ஆகிவருகிறது; அதாவது பாஸ்பரஸ் கூட்டுப்பொருள்கள், பாதரசம், டி.டி.டி., பெட்ரோலிய பொருட்கள், இன்னும் பிற நச்சுத்தன்மை வாய்ந்த கழிவுப்பொருட்கள் ஆகியவற்றின் பெரும்பகுதி கொட்டப்படும் குப்பைக் கிடங்காகி வருகிறது” என்றும் குறிப்பிடுகிறது.
டான்யூப் கழிமுகப் பகுதிக்கு ஏற்பட்டுள்ள சோகக்கதையைக் கேட்க எவ்வளவு வருத்தமாய் உள்ளது! கருங்கடலில் சங்கமமாகும் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ள இஸ்மேய்ல், உக்ரேன் நாடுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஒருகாலத்தில் கூழைக்கடாக்கள் இந்த இடத்தையே குத்தகைக்கு எடுத்திருந்தன. இப்போதோ அவற்றைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. “எண்ணற்ற தாவர வகைகள், விலங்கினங்கள் . . .” காணப்படும் பகுதிகளை நிரந்தர காப்பிடங்களாக மாற்றியிருப்பதிலிருந்தே, “சர்வதேச சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டின் நிலை என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது” என்று ஜெர்மானிய பத்திரிகையான கேயோ கூறுகிறது.
சோகக்கதை மாறுகிறது
டான்யூப் நதி உருவாகும் இடத்திற்கு வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரமான டைல்ஃபிங்கனில் 1902-ல் ஒரு பெண்மணி புதிதாக குடியேறினார். இந்நகரம் டான்யூப்பின் கிளைநதி ஒன்றின்மேல் அமைந்துள்ளது. அவர்தான் மார்கிரெட் டேமூட். ஜெர்மன் மொழியில் “டேமூட்” என்பதற்கு “தாழ்மை” என்று அர்த்தம். வரவிருக்கும் “பொற்காலம்” பற்றி அவர் பிரசங்கித்ததால், உள்ளூர்வாசிகள் அவருக்கு கோல்டன் கிரேட்டல் என்று பட்டப்பெயர் சூட்டிவிட்டனர். அதன்பிறகு விரைவிலேயே, ஜெர்மனியில் முதன்முதல் தோற்றுவிக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளது சபைகளில் ஒன்று டைல்பிங்கனிலும் ஸ்தாபிக்கப்பட்டது.
1997-ல், டான்யூப் நதி பாயும் பத்து நாடுகளில் பரவியுள்ள 258 சபைகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளில் 21,687 பேர் கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய இதே நற்செய்தியை ஒற்றுமையுடன் பிரசங்கித்து வந்தனர்.
பூமி என்றைக்கும் நிலைநிற்கும் என்றும், அதில் மக்கள் என்றென்றுமாக குடியிருப்பர் என்றும் கடவுளே வாக்கு கொடுத்திருக்கிறார். ஆதலால் டான்யூப் நதியும் கறையில்லாமல் புதுப்பொலிவுடன் காலமெல்லாம் கரைபுரண்டோடும். (சங்கீதம் 104:5; ஏசாயா 45:18) அப்படியானால், நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக காட்டுத்தனமான கலாசாரங்கள், முரண்பட்ட மனித கருத்துக்கள், இரத்தஞ்சிந்தும் மோதல்கள் ஆகியவற்றைப் பற்றியே சோககீதம் பாடிவந்த இந்நதி, முடிவில் இனியகீதம் பாடிவரும் என்பதை நினைத்தாலே இனிக்கிறதல்லவா! ஆரோக்கியமான, மகிழ்ச்சியுள்ள ஜனங்களே அதன் கரைகளில் குடியேறுவர். அரசியல், மொழி பாகுபாட்டிற்கு அங்கு இடமில்லை. அனைவருமே உச்ச ஸ்தாயியில் தங்கள் மகத்தான சிருஷ்டிகரைத் துதிப்பர். இறந்த மனிதரை கௌரவிக்கும் வல்ஹல்லா நினைவாலயத்தைப் போல் இனி ஒரு கட்டிடம் தேவைப்படாது. ஏனெனில் தகுதிவாய்ந்த அனைவருமே உயிர்த்தெழுந்திருப்பர்.—யோவான் 5:28, 29.
துள்ளிக்களிக்கும் டான்யூப் நதியைப் பற்றிய எண்ணம், சங்கீதம் 98:8, 9-ல் உள்ள பாடல் வரிகளை நமக்கு நினைப்பூட்டுகிறது. அது இவ்வாறு வாசிக்கிறது: “கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்[டக்கடவது]. . . . அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.” அப்போது நீல டான்யூப் நதி சொல்லும் சிலிர்ப்பூட்டும் கதையை சற்று கற்பனை செய்துபாருங்கள்!
[அடிக்குறிப்புகள்]
a ஜெர்மானிய புராணக்கதையில், வல்ஹல்லா என்பது தேவர்களின் இருப்பிடம்; நார்வே நாட்டு புராணக்கதையில், கொலையுண்ட ராணுவ வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவாலயம்.
b எனவே மரிய தெரஸா, முதலாம் ருடால்ஃப், முதலாம் மாக்ஸிமிலியன், ஐந்தாம் சார்லஸ் ஆகியோர் கௌரவிக்கப்படுகின்றனர்.
[பக்கம் 16, 17-ன் பெட்டி/படம்]
டான்யூப் நதிக்கரையினிலே
உல்ம், ஜெர்மனி
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், விஞ்ஞான உலகில் பல்வேறு உண்மைகளைக் கண்டுபிடித்தார். தற்போதைய உலக சரித்திரத்தை உருப்படுத்துவதற்கு இவை பெரிதும் உதவின. இவர் உல்ம் என்ற நகரில் 1879-ல் பிறந்தார். “இவரது காலத்தில் வாழ்ந்த சரித்திரப் புகழ்பெற்ற திறமைவாய்ந்த கலைஞர்களில் ஒருவராய் திகழ்ந்தார்” என்று சொல்லப்படுகிறது
[படம்]
வெல்டன்புர்க், ஜெர்மனி
வியன்னா, ஆஸ்திரியா
12-வது நூற்றாண்டில் டான்யூப் நதியில் ஸ்டைனெர்னா புரூக்கா (கற்பாலம்) கட்டப்பட்டது. அப்போது அற்புத கட்டுமானம் என்று கருதப்பட்டது. இது கட்டப்பட்ட நெடுநாளைக்குப் பிறகு, வானவியல் வல்லுநரான கெப்ளர் 1630-ல் அங்கு காலமானார்
மவுத்தவுசன், ஆஸ்திரியா
டான்யூப்பின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தில்தான், நாஸி கான்சன்ட்ரேஷன் முகாம் அமைந்திருந்தது. ஆயிரக்கணக்கான ஜனங்கள் இங்கே அடைத்துவைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் யெகோவாவின் சாட்சிகள். மார்ட்டின் போயட்ஸிங்கரும் ஒருவர். பின்பு இவர் ஆளும் குழுவின் உறுப்பினரானார்
பிரேட்டிஸ்லாவா, ஸ்லோவாகியா
Geopress/H. Armstrong Roberts
ஜூர்ஜூ, ருமேனியா
1869-ல் ருமேனியாவின் முதல் இருப்புப்பாதை ஜூர்ஜூவை நன்கு அறிமுகமான அண்டை நாடான புகாரெஸ்ட்டுடன் இணைத்தது. இது வடக்கே சுமார் 65 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 1954-ல் டான்யூப் நதிக்குக் குறுக்கே ஒன்றன்மேல் ஒன்றாக கட்டப்பட்ட இருப்புப்பாதையும் நெடுஞ்சாலையும் ருமேனியாவை பல்கேரியாவுடன் இணைத்தது. இது நட்புப் பாலம் என்று நம்பிக்கையுடன் பெயரிடப்பட்டது
பெல்கிரேட், யுகோஸ்லாவியா
பெல்கிரேட்டில் “அரசியல், ராணுவ போராட்டங்கள்” ஏற்பட்டன; இவை “நூற்றுக்கணக்கான ஆண்டுகள்” தொடர்ந்தன; முற்றுகையிட்ட ராணுவங்கள் “வெற்றிபெற்று பெல்கிரேட்டை 30-க்கும் மேற்பட்ட தடவை நாசமாக்கின” என தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது
நிக்காபோல், பல்கேரியா
பொ.ச. 629-ல் பைசான்டைன் பேரரசர் ஹெராக்ளியஸ் இந்நகரை ஒரு முக்கிய கோட்டையாக ஸ்தாபித்தார். 1396-ல், ஒட்டாமன் சுல்தான் முதலாம் பையஸிட் ஹங்கேரி அரசன் ஸிகிஸ்மண்ட்டை முறியடித்தார். இவ்வாறுதான் ஐந்து நூற்றாண்டுகளாக தொடர்ந்து ஆண்ட துருக்கிய ஆட்சி ஆரம்பித்தது
[பக்கம் 15-ன் படம்]
(தொடர்ச்சி 18-ம் பக்கம்)
[வரைப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஜெர்மனி
பிளாக் ஃபாரஸ்ட்
டெய்ல்ஃபிங்கன்
உல்ம்
வால்டன்பர்க்
ரீகன்ஸ்பர்க்
வல்ஹல்லா
ஆஸ்திரியா
மவுத்தவுசன்
வியன்னா
ஸ்லோவாகியா
பிரேட்டிஸ்லாவா
காம்ஸிக்கோவா அணை
ஹங்கேரி
புடாபெஸ்ட்
க்ரோயேஷீயா
யூகோஸ்லாவியா
பெல்கிரேட்
பல்கேரியா
நிக்காபோல்
ருமேனியா
ஜூர்ஜூ
புகாரெஸ்ட்
மால்டோவா
உக்ரேன்
இஸ்மேய்ல்
டான்யூப் கழிமுகம்
கருங்கடல்
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
புடாபெஸ்ட், ஹங்கேரி
டான்யூப் ராணி என்று முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்ட புடாபெஸ்ட், டான்யூப் நதியின் மேற்கே முக்கியமாய் புடா நகரும் கிழக்கே பெஸ்ட் நகரும் சேர்ந்தது. 1900-ம் ஆண்டு வாக்கில், இதன் ஜனத்தொகையில் கிட்டத்தட்ட கால்வாசிப் பேர் யூதர்களே. சொல்லப்போனால் இச்சமுதாயம் இரண்டாம் உலகப் போரின்போது அடியோடு அழிக்கப்பட்டது எனலாம்
ரீகன்ஸ்பர்க், ஜெர்மனி