வரைபடங்கள் கைகொடுக்காதபோது—பிரமிப்பூட்டும் க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம்
ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
கதிரவனின் கைவரிசை அத்தனை பலமானதாக இருந்ததால் நீண்ட தூரம் பயணம் செய்திருந்த அந்த நங்கையின் முகத்திலிருந்து வேர்வை துளிகள் பெருகி ஆறாய் ஓடத்தொடங்கியது. முதுகிலோ பெரிய மூட்டை, அத்தியாவசியப் பொருட்களே பாரமாக அழுத்தின. லேசாக உடலை அசைத்து சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். போக வேண்டிய தலத்தை அறிய வரைபடத்தை பிரித்த அந்த மங்கையின் முகத்தில் கலவர ரேகை ஓடியது. நம்பிக்கையற்ற உணர்வு அவளுக்குள் பொங்கியெழுந்தது. ஏனென்றால் தான் இருந்த இடத்திற்கும் படத்திற்கும் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றியது. இப்படித் “திக்குத் தெரியாமல் திண்டாடும்படி” ஆனதை எண்ணி வேதனையோடு தன்னையே நொந்து கொண்டாள் அவள்.
ஆனால், திடீரென அவள் முகம் பிரகாசமடைந்தது. அவள் முதுகில் சுமந்துகொண்டிருக்கும் மூட்டைக்குள் கையை விட்டு, ஏதோ ஒரு கருவியை எடுத்தாள். பாதுகாப்பாக ஓர் உறைக்குள் வைக்கப்பட்டிருந்த அந்தக் கருவியை சில தகவல்களுக்காக முடுக்கினாள். ஒருசில நொடிகளில் அவள் முகத்தில் புன்னகைக் கீற்று. தன் முதுகிலிருந்த மூட்டையை சரி செய்துகொண்டு, தான் போக வேண்டிய இடத்தைப் பற்றி தெளிவாக தெரிந்த ஒரு நபர் உறுதி கொடுத்ததுபோல் புதுத்தெம்போடு நடக்க ஆரம்பித்தாள்.
தான் போகவேண்டிய வழியைப் பற்றி தெரியாமல் நம்பிக்கையற்ற நிலையில் இருந்த அவள் எப்படி அவ்வளவு சீக்கிரமாக, சுலபமாக தெரிந்துகொள்ள முடிந்தது? ஏனென்றால், க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ் [GPS]) என அறியப்பட்ட, சிறப்புமிக்க கருவியை அவள் பயன்படுத்தியதாலேயே. அவள் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்துகொள்ளவும் அவள் எந்த வழியில் போகவேண்டும் என்பதையும் சரியாக தெரிந்துகொள்ள அது அவளுக்கு உதவியது. ஜிபிஎஸ் என்றழைக்கப்படும் இந்த பிரமிப்பூட்டும் அமைப்பு எப்படி செயல்படுகிறது?
நவ்ஸ்டார் க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் என்பதே ஜிபிஎஸ்-ன் முழுப்பெயர். நேவிகேஷன் சாட்டிலைட் டைம் அண்ட் ரேன்ஜிங் சிஸ்டம் என்பதன் சுருக்கமே நவ்ஸ்டார். யு. எஸ். ராணுவத்திற்காக முதன்முதலாக உருவாக்கப்பட்டதே ஜிபிஎஸ். ஆனால், இப்போதோ உலகின் எந்த பாகத்திலும் யார்வேண்டுமானாலும் இதை உபயோகிக்க முடியும். ஜிபிஎஸ்-ஐ இயக்குவதற்கான முதல் செயற்கைகோள் 1978-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது, 21 நவ்ஸ்டார் செயற்கைகோள்களையும், தேவை ஏற்பட்டால் உடனடியாக செயல்படுத்த, சுற்றுப்பாதையில் இருக்கும் 3 மாற்று செயற்கைகோள்களையும் இந்த அமைப்பு கொண்டிருக்கிறது. இவை அனைத்தும், 10,898 நாடிகல் மைல் உயர சுற்றுப்பாதைகளிலும், ஒவ்வொரு சுற்றுப்பாதையும் நிலநடுக்கோட்டிற்கு 55 டிகிரி சாய்விலும் இருக்கின்றன. இந்த அமைப்பில் உள்ளவற்றில் குறைந்தபட்சம் நான்கு செயற்கைகோள்களை பூமியில் எந்தவொரு இடத்திலிருந்தும் எல்லா நேரத்திலும் தொடர்புகொள்ள முடியும்.
துல்லியமான நேரகணிப்பு மிக அவசியம்
குறிப்பிட்ட, திட்டவட்டமான நேரங்களில் மின்காந்த அலைகளை இந்த செயற்கைகோள்கள் அனுப்புகின்றன. மின்காந்த அலை வரும் நேரத்தை சரியாக அளவிடுவதன்மூலம் செயற்கைகோள் இருக்கும் தூரத்தை நவ்ஸ்டார் அலைவாங்கி நிர்ணயிக்கும். பூமிக்கு வந்து சேர இந்த மின்காந்த அலை எடுக்கும் நேரம் ஒரு நொடியில் பதினொன்றில் ஒரு பாகமே. பின்னர் அலைவாங்கி, ஒளியின் வேகத்தோடு இந்த எண்ணை பெருக்கி, செயற்கைகோளுக்கு உள்ள தூரத்தை அசத்திடும் வகையில் துல்லியமாக கொடுக்கிறது. எனினும், நேரத்தை கணிப்பது மிக துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தூரத்தை கணக்கிடுவதில் பிழைகள் ஏற்படும். ஏனென்றால், மிக மிக குறைவாக, ஒரு நொடியில் பத்து லட்சத்தில் ஒரு பாகமே பிழை ஏற்பட்டாலும் அது சுமார் 300 மீட்டர் வரை வித்தியாசத்தில் அல்லது பிழையில் விளைவடையும்!
இந்த அளவுக்கு துல்லியமாக நேரத்தை எப்படி கணிக்க முடியும்? செயற்கைகோளில் பயன்படுத்தப்படும் அதிநவீன அணு இயக்கக் கடிகாரத்தின் உதவியால் இத்தகைய துல்லியம் பெற முடிகிறது. தி நவ்ஸ்டார் க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டம் என்ற தன் புத்தகத்தில் அதன் ஆசிரியர் டாம் லாக்ஸ்டன் இவ்வாறு விளக்குகிறார்: “ப்ளாக் II செயற்கைகோள்கள் . . . சீசியம் அணு இயக்கக் கடிகாரங்கள் இரண்டு, ருபிடியம் எனும் மென்மையான வெள்ளீய உலோகத் தனிம அணு இயக்கக் கடிகாரங்கள் இரண்டு என நான்கு அதிதுல்லிய கடிகாரங்களை கொண்டுள்ளன. இக்கடிகாரங்கள் நீடித்து உழைப்பவை. மிக துல்லியமானவையும்கூட. எனவே, இக்கடிகாரங்களில் ஒரு வினாடி கூடுவதோ குறைவதோ நிகழ்வது 1,60,000 வருடங்களுக்கு ஒரு முறையே”!
ஆரம்பத்தில் குறிப்பிட்ட இளம்பெண் உபயோகப்படுத்திய அலைவாங்கி, நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட செயற்கைகோள்களில் இருந்து சமிக்கைகளைப் பெறுகிறது. பின்னர், அவள் இருக்கும் இடத்திற்கும் ஒவ்வொரு செயற்கைகோளுக்கும் உள்ள தூரத்தை கணக்கிடுகிறது. இதன் உதவியோடு அந்த கையடக்கமான அலைவாங்கி இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை, உயரம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. பின்னர் சரியான குறிப்பை ஜிபிஎஸ் அலைவாங்கி காட்டுகிறது. இலக்கை துல்லியமாக கணக்கிட குறைந்தபட்சம் நான்கு செயற்கைகோள்கள் தேவை. கையடக்கமான இந்த அலைவாங்கிகள் லேசானவை. குறைந்த விலையில் கிடைக்கக்கூடியவை. அளவிலும் விலையிலும் தோராயமாக, கையில் எடுத்துச் செல்லக்கூடிய தொலைபேசியைப் போன்றவை.
வரைபடங்களைவிட உசத்தியா?
போய் சேரவேண்டிய இடத்தைப் பற்றிய தகவல்களை தெளிவாக குறிப்பிட்டால், அலைவாங்கியின் இடத்தை மட்டுமல்ல எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதையும் ஜிபிஎஸ் அலைவாங்கிகள் சுட்டிக்காட்டும். இந்த வகையில், ஜிபிஎஸ் போன்ற சாதனங்கள் துல்லியமான வரைபடங்களைவிட மேம்பட்டவையாக விளங்குகின்றன. உதாரணமாக: வரைபடங்களைப் பார்த்து இடத்தைக் கணிப்பதற்கு, உயரமான மரங்கள் அல்லது அடர்ந்த காடுகள் போன்றவை தடையாக இருக்கும். வரைபடங்களின் உதவியால் இடத்தை கணிப்பதற்கு அல்லது முழுவதுமாகவே கணிக்க முடியாதபடி செய்யும் மற்றும் சில தடைகள் வெட்டாந்தரை (முக்கியமாக சமுத்திரங்கள், பாலைவனங்கள்), இருள், பனிமூட்டம் போன்றவை. என்றாலும், ஜிபிஎஸ் அலைவாங்கிகள் இருந்தால் வரைபடங்களுக்கு வேலையே இல்லை என இது அர்த்தப்படுத்துகிறதில்லை. மாறாக, வரைபடங்கள், விளக்கப்படங்கள் உதவியோடு இந்த அலைவாங்கிகள் மிகச் சிறப்பாக பயனளிக்கின்றன. பனிமூட்டம் நிறைந்த துறைமுகங்களில் கப்பல்களை பாதுகாப்பாக செலுத்துவதற்கு இவை அதிகம் உதவுகின்றன. நெரிசல் நிறைந்த துறைமுகங்களில், சரக்கு கப்பல்களின் கண்டெய்னர்கள் எடுத்து செல்லப்படும் தடங்களை கண்காணிக்கவும் மற்றும் பல வணிக நோக்கங்களுக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.
ஜிபிஎஸ் துறை அடைந்துள்ள முன்னேற்றம், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற வழிகளிலும் பயன்தருகிறது.
● ஆபத்துமிக்க ஐஸ்கட்டிகள் நகரும் தடத்தை கண்காணித்தல்
● வானிலை பற்றி முன்கூட்டியே அறிவித்தல்
● விமானங்கள் துல்லியமாக தரையிறங்க உதவுதல்
● கடலில் மூழ்கிய கப்பல்களை கண்டுபிடித்தல்
● வாகனங்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், கண்காணித்தல்
● துல்லியமாக உரமிடுவதற்கு பயன்படுத்துதல்
இந்த தனிச்சிறப்புமிக்க செயற்கைகோள் அமைப்பின் மூலமாகத்தான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இளம்பெண் வழியை தெரிந்துகொண்டாள். அவள் இருக்கும் இடத்தைப் பற்றிய குறிப்புகளை தெளிவாகவும் அவளுக்கு மிகவும் அவசியமான சமயத்தில் அந்த தகவல்களை துல்லியமாகவும் அது தந்தது. மேலும், அவள் செல்ல வேண்டிய சரியான திசையை குறித்த தகவல்களை அவளுக்கு தந்தது. அவள் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாக போய்ச் சேர்ந்தாள். ஆம், வழிதெரியாமல் திண்டாடியபோது பூமிக்கு வெளியிலிருந்து இயங்கும் இந்த பிரமிப்பூட்டும் நவ்ஸ்டார் க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டமே அவளுக்கு கைகொடுத்தது!
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
1984-ல், ஓக்லஹாமாவில் உள்ள வர்த்தகர் ரான் ஃப்ரேட்ஸ் என்பவர், குவாதமாலா, பெலிஜ் ஆகிய பகுதிகளிலுள்ள அடர்ந்த காடுகளின்கீழே புதைந்து கிடக்கும் பண்டைய மாயா குடியிருப்புகளின் சிதைவுகளை கண்டுபிடிக்க இந்த க்ளோபல் பொஸிஷனிங் சிஸ்டத்தை பயன்படுத்தினார். லேண்ட்சட் என அழைக்கப்படும் செயற்கைகோள் அனுப்பும் ஃபோட்டோக்களையும் ஜிபிஎஸ்-ன் துல்லியமான தகவல்களையும் ஃப்ரேட்ஸ் இணைத்து ஆராய்ந்தார். “யுகேடன் தீபகற்பத்தில் மாயா நாகரீகம் எந்தளவு பரந்துவிரிந்து இருந்தது என்பதை சுமார் ஐந்தே நாட்களில் நாங்கள் வரைபடமாக உருவாக்க முடிந்தது. அந்த இடங்களுக்கெல்லாம் நாங்கள் நடந்து சென்றிருந்தால் குறைந்தது நூறு வருடங்களாவது ஆகியிருக்கும்” என ஃப்ரேட்ஸும் அவருடைய நண்பர்களும் அறிவித்தனர்.
[பக்கம் 22, 23-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஜிபிஎஸ் காண்பிப்பவை
நீங்கள் நிற்கும் இடம்
தீர்க்கரேகை, அட்சரேகை இவற்றை கிரமமாக இணைத்து நீங்கள் இருக்கும் இடத்தை துல்லியமாக காட்டுதல்
நேரமும் தேதியும்
வழிகாட்டும் காம்பஸ்
நீங்கள் இருக்கும் இடத்தின் உயரம்
வரைபடக் குறிப்பு
இதைப் பெரிதாக்கிக் கொள்ளலாம் அல்லது சிறியதாக்கிக்கொள்ளலாம். நீங்கள் வாகனத்தில் செல்கிறீர்களென்றால், முன்பின் தெரியாத இடத்திற்கு செல்ல வழிகாட்டவும் இதை உபயோகிக்கலாம்
நீங்கள் இருக்கும் திசை
நீங்கள் மறுபடியும் வீடுபோய் சேரவும் இன்னும் பிரயாணம் செய்ய வேண்டிய தூரத்தையும் காட்டும் காம்பஸ் கைடும் திசைகாட்டும் முள்ளும்
வான் அலை வாங்கி (ஆன்டனா)
உண்மை அளவு
செயற்கைகோளின் நிலை
இந்த அமைப்பில் உள்ள 24 செயற்கைகோள்களில் எவற்றை உங்கள் அலைவாங்கி “பார்க்கமுடியும்” என்பதைக் காட்டும் ஆகாயத்தோற்றம்
சமிக்கையின் வலிமை
சில செயற்கைகோள்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் (கருமையாக உள்ள பாகம்), உங்களுடைய இலக்கை நிர்ணயிக்க வேறே செயற்கைகோளை அலைவாங்கி பயன்படுத்துகிறது
[பக்கம் 22-ன் படத்திற்கான நன்றி]
Globes on pages 21-3: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.