உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 11/22 பக். 24-25
  • குட்டி ‘ஜிம்னாஸ்டிக் மன்னர்கள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குட்டி ‘ஜிம்னாஸ்டிக் மன்னர்கள்’
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • விமானத்தை விஞ்சும் ஈ!
    யாருடைய கைவண்ணம்?
  • செட்ஸி ஈ—ஆப்பிரிக்காவின் சாபமா?
    விழித்தெழு!—1996
  • அந்த அருவருக்கத்தக்க ஈக்கள்—நீங்கள் நினைப்பதைவிட அதிக பயனுள்ளவையா?
    விழித்தெழு!—1996
  • குட்டிக் காதின் இரகசியம் அம்பலம்
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 11/22 பக். 24-25

குட்டி ‘ஜிம்னாஸ்டிக் மன்னர்கள்’

ஸ்வ்ஷ்! என்ன சத்தம்? ஈயை அடிக்க ஃப்ளைஸ்வாட்டரை காற்றில் வேகமாக வீசியபோது ஏற்பட்ட சத்தமே அது. ஓர் ஈயை குறிவைத்து வேகமாக அடித்தபோதும் அந்த ஈயோ விசுக்கென்று விலகி விடுகிறது. திடீரென வேகமாக வீசிய காற்றால் குட்டிக்கரணம் அடித்து, திறம்பட்ட ஜிம்னாஸ்டிக் வீரனைப் போல தன்னுடைய பழைய நிலைக்கு வருகிறது. அதைக் கொல்ல நீங்கள் செய்யும் ‘வித்தைகள்’ வீணாய் போவதைப் பார்த்து ஏளனம் செய்யும்வகையில் மறுபடியும் ஜம்பமாக பறந்து வந்து கூரையில் தலைகீழாக அமர்ந்துகொள்கிறது. பறப்பதில் சூப்பர் ஸ்டாராகத் திகழும் அற்புதப் படைப்பு! அன்றாட வாழ்க்கையில் அழையா விருந்தாளியாக எல்லா இடங்களிலும் நாம் ஈக்களை சந்திக்கிறோம். பூச்சிகளின் உலகத்திலேயே பறப்பதில் படுகில்லாடிகள் என்ற பட்டத்தை இந்த ஈக்களின் குடும்பம் வாழையடி வாழையாக தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த சாகஸத்தை செய்ய இவற்றிற்கு பெரிதும் உதவுபவை அதிஅற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஹால்டர் என அழைக்கப்படும் சமநிலை உறுப்புகளே.

இந்த உறுப்புகள், திருவாளர் ஈயாரிடம் இரண்டு உள்ளன. அவை சின்னஞ்சிறு மெல்லிய கம்பியின் முனையில் குமிழ்கள் இருப்பது போன்று தோற்றமளிக்கின்றன. இந்த உறுப்புகள், ஈக்களின் இரண்டு சிறகுகளுக்கு கீழே, அதன் மார்புப்பகுதியில் இருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கின்றன. (அடுத்த பக்கத்திலுள்ள படத்தைக் காண்க) ஈக்கள் சிறகுகளை அடித்து எழும்போது, அதே வேகத்தில் இந்த ஹால்டர்களும் அடிக்க ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு நொடிக்கும் நூற்றுக்கணக்கான தடவை! சிறிய கைராஸ்கோப்கள் (gyroscopes) போல் இயங்கும் இந்த ஹால்டர்கள், ஈக்கள் பறக்க உதவுகின்றன. எப்போதெல்லாம் ஈ தன்னுடைய திசையை மாற்றுகிறதோ அப்போதெல்லாம் இந்த உறுப்புகள் அதன் மூளைக்கு சமிக்கைகளை அனுப்புகின்றன. உதாரணமாக, திடீரென வீசும் வேக காற்றாலோ அல்லது ஸ்வாட்டரின் அல்லது பேப்பரின் வீச்சாலோ மிக அருகில் தாக்கப்படும்போது இந்த உறுப்புகள் உடனடியாக சமிக்கைகளை ஈயின் மூளைக்கு அனுப்புகின்றன. நூற்றுக்கு நூறு அப்படியே இல்லாவிட்டாலும், பறக்கும்போது விமானத்தின் நிலையில் ஏற்படும் மாற்றங்களை விமானத்தில் உள்ள கைராஸ்கோப்கள் பைலட்டுக்கு உடனடியாக தெரிவிக்கின்றன. அப்படியே, ஈயின் உடல் மேலெழும்பியதையும் குட்டிக்கரணம் அடித்து முன்சென்றதையும் டைவ் அடித்ததையும் உடனடியாக ஹால்டர்கள் மூளைக்கு தெரிவிக்கின்றன. உடனே ஈ தன்னுடைய நிலையை சட்டென்று சரிசெய்துகொள்கிறது.

பழங்கால சுழலும் வேகமானிகளைப் போலன்றி, ஹால்டர்கள் பெண்டுலம் போன்று காட்சியளிக்கின்றன. ஆனால், அவற்றின் உடலில் இருந்து தொங்கிக்கொண்டோ அல்லது நேராக நின்றுகொண்டோ இல்லை. மாறாக, இரு பக்கங்களிலும் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இயங்க ஆரம்பித்ததும் இந்த ஹால்டர்கள் பெண்டுலத்தைப்போல் அசைவுகளின் விதிக்குட்பட்டு இப்படியும் அப்படியுமாக ஒரே திசையில் ஊஞ்சலாடிக்கொண்டிருக்கும். பறக்கும்போது ஈயின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால், ஆடிக்கொண்டிருக்கும் ஹால்டர்களின் அடிப்பகுதியை வெளியில் உள்ள அழுத்தம் முறுக்குகிறது. அப்போது, அடிப்பகுதியில் உள்ள நரம்புகள் இந்த மாற்றத்தை உணர்கிறது. இந்த நரம்புகளின் சமிக்கைகளை மூளை பகுத்தறிந்து, ஈ சரியாக பறப்பதற்கு உடனடியாக சிறகுகளுக்கு தகவல் அனுப்புகிறது. இவை அனைத்தும் கண்மூடி கண்திறப்பதற்குள் மின்னல்வேகத்தில் நடந்தேறுகின்றன.

வீட்டு ஈ, மாட்டு ஈ, மாமிச ஈ, பழ ஈ, செட்ஸி ஈ, கண் ஈ, ஊது ஈ என சுமார் 1,00,000 வகைகள் அடங்கிய இரண்டு சிறகுகளை உடைய இந்தக் குடும்பத்திற்கே உரிய தனிச்சிறப்புமிக்க சொத்துக்களில் ஒன்று ஹால்டர்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. அதிநுட்பம் வாய்ந்த இந்த சுழல் வேகமானிகள் பறக்கும் பூச்சியினத்தை சேர்ந்தவைகள் எவற்றிற்குமே இல்லாத அற்புதமான பறக்கும் திறமையை ஈக்களுக்கு அளிக்கிறது. இவை மனிதர்களால் அருவருத்து வெறுக்கப்படுபவை என்பது மெய்யே. என்றபோதிலும், எந்த மனித விஞ்ஞானிக்கும் சவால்விடும் படைப்பாளரின் விஞ்ஞான நுண்ணறிவுக்கு இது ஒரு சிறந்த நிரூபணம்.

[பக்கம் 24-ன் படம்]

மேலெழும்புதல்

[பக்கம் 24-ன் படம்]

பல்டி அடித்தல்

[பக்கம் 24-ன் படம்]

டைவ் அடித்தல்

[பக்கம் 25-ன் படம்]

சோல்ஜர் ஈ (பெரிதாக்கப்பட்டது), ஹால்டர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன

[படத்திற்கான நன்றி]

© Kjell B. Sandved/Visuals Unlimited

[பக்கம் 25-ன் படம்]

வீட்டு ஈ

க்ரேன் ஈ

[படத்திற்கான நன்றி]

Animals/Jim Harter/Dover Publications, Inc.

[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]

Century Dictionary

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்