உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 10 பக். 115-பக். 117 பாரா. 4
  • உற்சாகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உற்சாகம்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • உற்சாகத்தையும் கனிவையும் வெளிப்படுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • அறிவை வளர்க்கும் பொருள், தெளிவாக அளிக்கப்படுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • தகவல் நிறைந்த பேச்சு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 10 பக். 115-பக். 117 பாரா. 4

படிப்பு 10

உற்சாகம்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

சொல்லும் விஷயத்தை மிகுந்த மதிப்புவாய்ந்ததாக கருதுகிறீர்கள் என்பதற்கு அத்தாட்சியாக, உயிர்த்துடிப்புடன் பேசுங்கள்.

ஏன் முக்கியம்?

உங்கள் உற்சாகம், கேட்போரின் ஆர்வம் குன்றிவிடாதிருக்க உதவும்; செயல்படவும் அவர்களைத் தூண்டும். நீங்கள் உற்சாகமாக விஷயத்தைச் சொன்னால், கேட்போரும் உற்சாகம் அடைவார்கள்.

உற்சாகம், பேச்சிற்கு உயிரூட்டுகிறது. தகவல் நிறைந்த பேச்சைக் கொடுக்க வேண்டியது முக்கியம் என்றாலும், கேட்போரின் கவனத்தை ஈர்க்க உதவுவது உயிர்த்துடிப்புள்ள உற்சாகமான பேச்சே. உங்கள் கலாச்சார பின்னணி எதுவாக இருந்தாலும், ஆள்தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உங்களால் உற்சாகத்தை வளர்த்துக்கொள்ள முடியும்.

உணர்ச்சியோடு பேசுங்கள். யெகோவாவின் வணக்கத்தார் அவரை “ஆவியோடும் உண்மையோடும்” வணங்க வேண்டும் என ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசுகையில் இயேசு குறிப்பிட்டார். (யோவா. 4:24) அவர்கள் வணக்கம், போற்றுதலுள்ள இருதயங்களிலிருந்து பிறக்க வேண்டும், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சத்தியத்தோடு இசைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஆழ்ந்த போற்றுதல் ஒரு நபருக்கு இருந்தால், அது அவர் பேசும் விதத்தில் வெளிப்படும். யெகோவாவின் அன்பான ஏற்பாடுகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச அவர் ஆவலாக இருப்பார். அவரது முகபாவங்களும் சைகைகளும் குரலும் அவரது உண்மையான உணர்ச்சிகளை வெளிக்காட்டும்.

அப்படியென்றால், யெகோவாவை நேசித்து அவர் சொல்வதை நம்பும் ஒரு பேச்சாளர் எப்படி உற்சாகமில்லாமல் பேச வாய்ப்பிருக்கிறது? பேசப்போவதை மட்டும் அவர் தயாரித்தால் போதாது. அவர் அந்த விஷயத்தோடு ஒன்றிவிட வேண்டும், உணர்ச்சிப்பூர்வமாய் அதோடு கலந்துவிட வேண்டும். உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியைப் பற்றி அவர் பேச வேண்டும் என வைத்துக்கொள்வோம். பேச்சைக் கொடுக்கும்போது அவரது மனம் விவரங்களால் மட்டும் நிரம்பியிருக்க கூடாது; தனக்கும் தன் பேச்சைக் கேட்போருக்கும் இயேசுவின் பலி அளிக்கும் நன்மைகளுக்கான போற்றுதலாலும் அது நிரம்பியிருக்க வேண்டும். இந்த அருமையான ஏற்பாட்டிற்காக யெகோவா தேவனிடமும் கிறிஸ்து இயேசுவிடமும் தனக்கிருக்கும் நன்றியுணர்வை அவர் நினைவுகூர வேண்டும். மனிதகுலத்திற்கு அந்த ஏற்பாடு அளிக்கும் மகத்தான எதிர்பார்ப்பை​—⁠திரும்பவும் ஸ்தாபிக்கப்பட்ட பூமிக்குரிய பரதீஸில் பூரண ஆரோக்கியத்தோடு நித்தியத்திற்கும் சந்தோஷமாக வாழும் எதிர்பார்ப்பை​—⁠பற்றி அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்! இவ்வாறு அவருடைய இருதயமும் பேச்சோடு ஒன்றிவிட வேண்டும்.

வேதபாரகராகிய எஸ்றா, இஸ்ரவேலில் போதகராக இருந்தார்; அவர், “யெகோவாவின் சட்டத்தை ஆராயவும் அதன்படி செய்யவும் இஸ்ரவேலில் போதிக்கவும் தன் இருதயத்தை தயார்படுத்தினார்” என பைபிள் சொல்கிறது. (எஸ்றா 7:10, NW) அதேபோல் நாமும், தகவலை மட்டுமல்லாமல் நம் இருதயங்களையும் தயார்படுத்தினால் இருதயத்திலிருந்து பேசுவோம். சத்தியத்தை இவ்வாறு இருதயப்பூர்வமாக பேசுவது, அதன்மீது உண்மையான அன்பை வளர்க்க கேட்போருக்கு பெரிதும் உதவும்.

கேட்போரைக் குறித்து சிந்தியுங்கள். நீங்கள் சொல்லப் போவதை மற்றவர்கள் கேட்பது முக்கியமானது என உறுதியாக நம்புவது, உற்சாகத்துடன் பேசுவதில் உட்பட்டிருக்கும் மற்றொரு முக்கிய அம்சமாகும். அப்படியென்றால் உங்கள் பேச்சை தயாரிக்கும்போது, சிறந்த தகவலை சேகரிப்பதோடு, கேட்போருக்கு பயனளிக்கும் விதத்தில் அதைப் பயன்படுத்த உதவுமாறு யெகோவாவிடம் ஜெபிப்பதும் அவசியம். (சங். 32:8; மத். 7:7, 8) கேட்பவர்கள் இந்தத் தகவலை ஏன் அறிந்துகொள்ள வேண்டும், அது அவர்களுக்கு எப்படி பயனளிக்கும், அவர்கள் அதன் மதிப்பைப் போற்றும் விதத்தில் அதை எப்படி அளிக்கலாம் என்றெல்லாம் பகுத்தறியுங்கள்.

சொல்லத் துடிக்கும் விஷயம் எதையேனும் நீங்கள் கண்டடையும்வரை தொடர்ந்து பேச்சை தயாரியுங்கள். நீங்கள் புது விஷயத்தைத்தான் அளிக்க வேண்டும் என்பதில்லை, பழைய விஷயத்தைக்கூட புதிய கோணத்தில் அளிக்கலாம். யெகோவாவுடனான உறவை பலப்படுத்துவதற்கு, அவரது ஏற்பாடுகளை போற்றுவதற்கு, இந்தப் பழைய உலகில் வாழ்க்கையின் பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு, அல்லது ஊழியத்தில் திறம்பட்டு விளங்குவதற்கு கேட்போருக்கு உண்மையிலேயே உதவும் ஏதோவொன்றை நீங்கள் தயாரித்தால், உற்சாகத்தோடு பேச்சு கொடுக்க நியாயமான காரணம் உண்டு.

பொது வாசிப்புக்குரிய நியமிப்பைப் பெற்றால் என்ன செய்யலாம்? உற்சாகமாக வாசிப்பதற்கு, வார்த்தைகளை தவறின்றி சரியாக சொல்லவும் அவற்றைப் பொருத்தமாக இணைத்துச் சொல்லவும் தெரிந்திருப்பது மட்டுமே போதாது. அந்தப் பகுதியை ஆழ்ந்து படியுங்கள். பைபிளின் ஒரு பகுதியை வாசிக்கப் போகிறீர்கள் என்றால் அதன்பேரில் ஆராய்ச்சி செய்யுங்கள். அதன் அடிப்படை அர்த்தத்தை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கும் கேட்போருக்கும் அது எவ்வாறு பயனளிக்கிறது என சிந்தியுங்கள்; பிறகு, அதை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தோடு வாசியுங்கள்.

நீங்கள் வெளி ஊழியத்திற்காக தயாரிக்கிறீர்களா? கலந்தாலோசிக்கப்போகும் விஷயத்தையும் பயன்படுத்தப்போகும் வசனங்களையும் பற்றி சிந்தியுங்கள். மக்களின் மனங்களில் இருப்பதையும் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். என்ன செய்தி சமீபத்தில் அடிபடுகிறது? மக்களின் பிரச்சினைகள் என்ன? அவர்களுக்கு கவலையளிக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கடவுளுடைய வார்த்தை தருகிறது என்பதை மக்களுக்குக் காட்ட நீங்கள் தயாராக இருக்கையில், அதைச் செய்ய ஆவலோடு இருப்பீர்கள், உற்சாகமும் தானாக வந்துவிடும்.

உயிர்த்துடிப்புடன் பேசி உற்சாகத்தைக் காட்டுங்கள். உற்சாகத்தை மிகத் தெளிவாக வெளிக்காட்டுவதற்கு உயிர்த்துடிப்புடன் பேச வேண்டும். முகபாவனையில் இது வெளிக்காட்டப்பட வேண்டும். நீங்கள் நம்பிக்கையோடு பேச வேண்டும், ஆனால் அதிகாரத் தொனியில் அல்ல.

சமநிலை அவசியம். சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவர். இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு உண்மையை உணர்த்துவது அவசியமாக இருக்கலாம்; அதாவது வார்த்தை ஜாலங்களால் அல்லது அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பேசினால், கேட்பவர்கள் சொல்லப்படும் விஷயத்தைப் பற்றி சிந்திக்காமல் பேச்சாளரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள் என்ற உண்மையை அவர்களுக்கு உணர்த்துவது அவசியமாக இருக்கலாம். மறுபட்சத்தில், கூச்ச சுபாவமுள்ளவர்கள் உணர்ச்சிகளை இன்னுமதிகமாக வெளிப்படுத்த உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.

உற்சாகம் தொற்றக்கூடியது. கேட்போருடன் நல்ல விதமாக தொடர்புகொண்டு, பேச்சை உற்சாகத்தோடு கொடுக்கும்போது, கேட்போரும் உற்சாகமடைவார்கள். உயிர்த்துடிப்புடன் பேசிய அப்பொல்லோ, நாவன்மை மிக்கவர் என்று குறிப்பிடப்பட்டார். கடவுளுடைய ஆவி உங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்தால், உயிர்த்துடிப்புள்ள உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் அதற்கிசைவாக செயல்பட தூண்டப்படுவார்கள்.​—⁠அப். 18:24, 25; ரோ. 12:⁠11; NW.

தகவலுக்குப் பொருத்தமான உற்சாகம். ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சதா உற்சாகம் பொங்க பேசி கேட்போரை சோர்ந்து போக செய்யாதீர்கள். அப்படி செய்தால், கேட்பதை கடைப்பிடிப்பதற்கு நீங்கள் அளிக்கும் எந்த அறிவுரையும் களைப்புற்ற காதுகளிலேயே விழும். பேச்சில் பல்சுவையான தகவலை அளிப்பதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. அக்கறையில்லாத பாணியில் பேசுவதை தவிர்க்க முயலுங்கள். உங்கள் தகவலை கவனமாக தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் அதில் ஆழ்ந்த அக்கறை காட்டுவீர்கள். ஆனால் சில குறிப்புகள் மற்றவற்றைவிட அதிக உற்சாகமாக அளிக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகமில்லை; இவை பேச்சு முழுவதிலும் திறமையாக பின்னிப்பிணைந்திருக்க வேண்டும்.

விசேஷமாக முக்கிய குறிப்புகளை உற்சாகத்தோடு அளிக்க வேண்டும். உங்கள் பேச்சில் முக்கிய கருத்துக்கள் இருக்க வேண்டும். இவையே உங்கள் பேச்சிலுள்ள சிறப்புக் குறிப்புகள் என்பதால், பொதுவாக கேட்போரை செயல்பட தூண்டுவதற்கு சொல்லப்படும் குறிப்புகளாக இருக்கும். விஷயங்களை கேட்போருக்கு மெய்ப்பித்துக்காட்டிய பிறகு, அவர்களை செயல்பட தூண்ட வேண்டும்; கேட்டதை கடைப்பிடிப்பதன் நன்மைகளை எடுத்துக் காட்ட வேண்டும். நீங்கள் உற்சாகமாக பேசுவது கேட்போரின் இருதயங்களை எட்ட உதவும். உற்சாகத்தை வலிய வரவழைத்து பேசக்கூடாது. அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும், அந்தக் காரணத்தை உங்கள் தகவல் அளிக்கும்.

வளர்த்துக்கொள்வது எப்படி

  • சொல்ல வேண்டிய விஷயங்களை மாத்திரமல்லாமல் உங்கள் இருதயத்தையும் தயார்படுத்துங்கள்; இவ்வாறு உங்கள் உணர்ச்சிகளும் அதில் ஒன்றிவிடும்.

  • நீங்கள் சொல்லப்போகும் குறிப்புகள் கேட்போருக்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதற்கு ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள்.

  • விசேஷமாக உற்சாகம் தேவைப்படும் பகுதிகளை தேடி கண்டறியுங்கள்.

  • மிகுந்த உயிர்த்துடிப்புடன் பேசுங்கள். அகத்தில் உள்ள உணர்ச்சியை முகத்தில் காட்டத் தவறாதீர்கள். வலிமையோடும் விறுவிறுப்போடும் பேசுங்கள்.

பயிற்சி: யோசுவா அதிகாரங்கள் 1, 2-ஐ ஆராயுங்கள். இந்தப் பகுதியை வாசிக்கும்போது எங்கே எப்படி உற்சாகத்தை பொருத்தமான விதத்தில் வெளிக்காட்டலாம் என தீர்மானியுங்கள். பொருத்தமான உற்சாகத்தோடு அதை சத்தமாக வாசித்துப் பழகுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்