செய்திகளின் பேரில் உட்பார்வை
பிரிந்திருக்கும் ஒரு வீடு
“ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால்,” அது நிலைநிற்காது என்று இயேசு கூறினார். (மாற்கு 3:25) ஓரினப்புணர்ச்சியும் அப்படிப்பட்ட ஆண்களையும் பெண்களையும் மத குருக்களாக நியமிப்பதும் பற்றிய விவாதத்தின் பேரில் கானடாவின் மிகப் பெரிய புராட்டஸ்டன்ட் சர்ச்சாகிய கானடா ஐக்கிய சர்ச் தன்னை இந்நிலையில்தான் காண்கிறது.
கானடா ஐக்கிய சர்ச்சின் 32-வது பொது ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானம் ஒன்று ஓரினப்புணர்ச்சிக்காரராயிருப்பவர்கள் குருமார்களாகப் பணியாற்றுவதை அனுமதிக்கிறது. ஒரு கானடா தினசரியாகிய தி குளோப் அண்டு மெயில் குறிப்பிடுகிறபடி, பாலுறவுப் பழக்கங்கள் எத்தன்மையினதாயிருந்தாலும், “இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதாகவும் அவருக்குக் கீழ்ப்படிவதாகவும் உரிமைபாராட்டும் எவருமே சர்ச்சின் முழு உறுப்பினர்களாயிருக்க அல்லது உறுப்பினர்களாக ஆவதற்கு வரவேற்கப்படுகின்றனர்” என்றும் “சர்ச்சின் எல்லா உறுப்பினர்களுமே அதிகாரமளிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தின் நியமனத்திற்குச் சிந்திக்கப்பட தகுதியுள்ளவர்களாக இருக்கின்றனர்” என்றும் குறிப்பிடுகிறது. 125 பக்க ஐக்கிய சர்ச்சின் அறிக்கை ஒன்று இப்படியாகக் கூறுகிறது: “பாலுறவு பழக்கங்களில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன: ஓரினப்புணர்ச்சி, இருபாலர் புணர்ச்சி, பலபாலர் புணர்ச்சி. இவை இயல்பானவையாக, கடவுளிடமிருந்து கிடைத்திருக்கும் ஓர் ஈவாக நோக்கப்பட வேண்டும்.”
ஓரினப்புணர்ச்சிக்காரரை குருமார்களாக ஏற்றுக்கொள்ளும் சர்ச்சின் தீர்மானத்தின் பேரில் கருத்து தெரிவிக்கும் குளோப், “சர்ச் பிழைத்திருப்பதுதான் முக்கியமான பிரச்னை,” என்று விவரிக்கிறது. 1972 முதல் சர்ச் அதன் உறுப்பினர்களைப் படிப்படியாக இழந்துவந்திருக்கிறது, பொருளாதார பிரச்னையில் இருக்கிறது. காரணம்? “சர்ச் அதன் கிறிஸ்தவ வேர்களிலிருந்து வழிவிலகிச் சென்றுகொண்டிருப்பதை மக்கள் பார்ப்பதால் சர்ச்சிலிருந்து திரளாக வெளியேறுதல் இருப்பதை” ஜான் டுவீடி குறிப்பிடுகிறார். “எனவே ஓரினப்புணர்ச்சி, விவாகத்துக்குப் புறம்பான பாலுறவு, விருப்பத்தின்பேரில் கருச்சிதைவு, எளிதில் ரத்துசெய்யப்படக்கூடிய விவாகங்கள் போன்ற காரியங்கள் இளம் தலைமுறையினருக்கு ஒரு சலுகை அளிப்பாக அமைகிறது” என்று கானடாவின் தி போஸ்ட் அறிவிக்கிறது.
என்றபோதிலும், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் பைபிள் நியமங்கள் விட்டுக்கொடுக்கப்படுவதை அனுமதிக்கிறதா? மாறாகக் கடவுளுடைய வார்த்தை மிகத் தெளிவாகக் கூறுகிறது: “உங்களை வஞ்சித்துக்கொள்ள வேண்டாம்; ஒழுக்கங்கெட்டவர்களாக இருப்பவர்கள் . . . முறைகேடான ஓரினப்புணர்ச்சிக்காரர்கள் . . . இவர்களில் எவருமே கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க மாட்டார்கள்.”—1 கொரிந்தியர் 6:9, 10, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு.
பிரம்பைக் கையாளுதல்
“பிரம்பைக் கையாளாதே, ஆனால் விளைவுகளைக் கவனி,” என்பது தி நேட்டல் மெர்க்குரி என்ற ஒரு தென் ஆப்பிரிக்க தினசரியில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பாக இருந்தது. அது வீட்டிலும் பள்ளியிலும் பிள்ளைகளை உடல்பிரகாரமாக தண்டித்தலிலிருந்து பின்வாங்கும் இன்றைய போக்கைக் குறித்து புலம்புகிறது. பிள்ளையைப் பிட்டத்தில் அடிப்பதன்பேரில் மாறிவிட்டிருக்கும் இந்த மனப்பான்மைக்கு யார் காரணம்? தென் ஆப்பிரிக்காவில், நேட்டல் பல்கலைக்கழகத்தில் குழந்தை மருத்துவராயிருக்கும் பேராசிரியர் ஸ்மித் பிள்ளை உளநூலரையே முழுவதுமாய்க் குற்றப்படுத்துகிறார். “பொதுவாக உணர்ச்சிகள் சார்ந்த ஒரு பிரச்னையின் வேரைத் தோண்டியெடுக்கும்போது, பொதுவாக மனம் சார்ந்த ஒரு கொள்கையிடம் ஆரம்பிக்கும் மனப்பான்மையில் ஒரு மாற்றத்தையே ஒருவர் காண்கிறார்,” என்று ஸ்மித் விளக்குகிறார். “முதலில் எந்த வகையான சரீர தண்டனையும் கடுமையாக எதிர்க்கப்படுகிறது, பின்பு சலிப்பு இல்லை, கட்டுப்பாடுகள் இல்லை என்ற பிரமாணத்தின் பலனாகிய கட்டுப்பாடற்ற விளைவுகளைக் கண்டு வியந்து நிற்கின்றனர்.”
ஸ்மித் ஒரு சமநிலையை சிபாரிசு செய்கிறார். “மனம் போனப் போக்கில் செல்ல அனுமதிப்பதில் வெகு தூரம் சென்று விடுதல் தண்டித்தலின் எல்லைக்குப் போய்விடுதலைப் போன்று கெட்டது,” என்று குறிப்பிடுகிறார். “ஆனால் அளவுகடந்தவிதத்தில் சிட்சிக்கப்படுதலில் குறைவாக சிட்சிக்கப்படுதலைவிட பரிகாரங்கள் இருப்பதால், சந்தேகத்திலிருக்கும்போது சிட்சையினிடமாகத் திரும்புதலே ஆதரிக்கப்படுகிறது.” சரீர தண்டனை கொடுப்பதன் நோக்கம், பிள்ளையின் தற்கால மற்றும் எதிர்கால நலனில் அன்புள்ள அக்கறையாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் வலியுறுத்துகிறார்.
அப்படிப்பட்ட ஆலோசனை புதியது அல்ல, ஆனால் குறையற்ற பைபிள் கொடுக்கும் வழிநடத்துதலுக்குத் திரும்புதலாகவே இருக்கிறது: “பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன் மேல் அன்பாய் இருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.”—நீதிமொழிகள் 13:24; நீதிமொழிகள் 23:13, 14-ஐயும் பார்க்கவும்.
சூதாட்டம் பாவமல்ல?
அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், விஸ்கான்ஸினில் ஒரு ரோமன் கத்தோலிக்க சர்ச் பரிசுச் சீட்டுகளை விற்பனை செய்வதற்கு அனுமதி கோரிய முதல் மத நிறுவனமாக இருந்தது என்று தி ஷெபாய்கன் பிரஸ் அறிக்கை செய்கிறது. இது வாராந்தர காணிக்கை வசூலிப்பைப் “பெருக்குவதற்கான” முயற்சி என்று விளக்கப்பட்டாலும், இந்தப் பரிசுச் சீட்டுகளை விற்பனை செய்வதற்கு பின் இருக்கும் முக்கிய காரணம் “அதன் பிங்கோ சூதாட்ட விளையாட்டுகளில் பங்கு கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்” என்று பிரஸ் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு இரவும் “800 டாலர் முதல் 1,000 டாலர் வரை” லாபம் காணும் பிங்கோ விளையாட்டுகளை சர்ச் ஏற்கெனவே நடத்திவருவதாக அறிக்கைகள் காண்பிக்கின்றன.
சூதாட்டம் உண்மையிலேயே பாவமா என்று கேட்கப்படும்போது, மதகுரு ராபர்ட் ஃபிவீஷ்மன் பதில், “எனக்குத் தெரியாது,” என்றிருந்தது. சர்ச் பிங்கோவை அல்லது பரிசுச் சீட்டு விற்பனையை செய்துவருவது “நம்முடைய ஆவிக்குரிய அழைப்புக்குச் சற்று வெளியே செல்வதாயிருக்கிறது,” என்று ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில் அவர் மேலும் சொன்னதாவது, தங்கள் பணத்தைச் செலவழிக்க “அவர்கள் இங்கே வரவில்லை என்றால் வேறு எங்கேயாவது செல்வார்கள்.”
கிறிஸ்துவைப் பின்பற்றுவதாக உரிமைப்பாராட்டும் மதத் தலைவர் சூதாட்டத்தை ஊக்குவிக்கலாமா? கூடாது! சூதாட்டம் எந்த உருவில் இருந்தாலும் மனிதரில் இருக்கும் மிக மோசமான தன்மைகளில் ஒன்றாகிய பேராசையைத் தூண்டுகிறது. அதை ஊக்குவிப்பவர்கள், மற்றவர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தில் ஒருவர் லாபம் பெறுவது சரி என்பதை நம்பச் செய்கிறார்கள். என்றபோதிலும், கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை, பொருளாசைக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க மாட்டார்கள் என்று நேரடியாகச் சொல்லுகிறது.—1 கொரிந்தியர் 6:9, 10; எபேசியர் 4:19; 5:3. (w88 12/15)