உலகத்தின் புராணக்கதைகளில் ஜலப்பிரளயம்
நோவாவின் நாளின் ஜலப்பிரளயம் மனிதநவர்க்கம் ஒருபோதும் மறந்துவிட முடியாத அத்தகைய பாழாக்கின பெரும் பிரளயமாக இருந்தது. 2,400-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின்னர், இயேசு கிறிஸ்து அதைச் சரித்திர உண்மை நிகழ்ச்சியாகக் குறிப்பிட்டு பேசினார். (மத்தேயு 24:37-39) மலைப்பூட்டும் இந்தச் சம்பவம் மனித குலத்தின்பேரில் அழிக்க முடியாத அத்தகைய பதிவை விட்டுச் சென்றதால் இது உலகமுழுவதிலும் புராணக் கதைகளில் காணப்படுவதாயிற்று.
படைப்பைப் பற்றிய கற்பனைக்கதைகள், என்ற புத்தகத்தில் ஃபிலிப் ஃபுரூயென்ட், 250-க்கு மேற்பட்ட குலமரபினர்களாலும் ஜனங்களாலும் 500-க்கு மேற்பட்ட ஜலப்பிரளய புராணக்கதைகள் கூறப்படுகின்றனவென மதிப்பிடுகிறார். இயல்பாய் எதிர்பார்க்கக்கூடியபடி, பல நூற்றாண்டுகள் கடந்து செல்கையில், இந்தப் புராணக்கதைகள் வெகுவாய் கற்பனை சம்பவங்களும் ஆட்களும் சேர்க்கப்பட்டு சுவைபெருகச் செய்யப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும், அடிப்படையான சில ஒப்புமைகளைக் காணலாம்.
கவனத்தைக் கவரும் ஒத்தத் தன்மைகள்
ஜலப்பிரளயத்துக்குப் பின் மெசொப்பொத்தாமியாவிலிருந்து ஜனங்கள் இடம்பெயர்ந்து சென்றபோது, இந்தப் பேரழிவு நிகழ்ச்சியைப் பற்றிய விவரங்களை பூமியின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு சென்றனர். இவ்வாறு, ஆசியாவின், தென் பசுபிக் தீவுகளின், வட அமெரிக்காவின், மத்திய அமெரிக்காவின், மற்றும் தென் அமெரிக்காவின் குடியிருப்பாளர்கள், மனதில் ஆழ்ந்து பதியச்செய்யும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய கதைகளைக் கொண்டுள்ளனர். இந்த ஜனங்கள் பைபிளை அறியவருவதற்கு வெகுகாலத்துக்கு முன்பாகவே இந்த ஜலப்பிரளய புராணக்கதைகள் மிகப் பல இருந்தன. எனினும், பிரளயத்தைப்பற்றிய பைபிள் விவரப்பதிவுடன் ஒத்திருக்கும் சில அடிப்படை குறிப்புகளை இந்தப் புராணக்கதைகள் கொண்டுள்ளன.
ஜலப்பிரளயத்துக்கு முன்னால் பூமியில் வாழ்ந்துகொண்டிருந்த வன்முறைவாய்ந்த இராட்சதர்களைப் புராணக்கதைகள் சில குறிப்பிடுகின்றன. இதற்கு ஒத்தவாறு, பிரளயத்துக்கு முன்னால் கீழ்ப்படியாதத் தூதர்கள் கண்ணுக்குப் புலப்படக்கூடிய மாம்ச உடல்களை ஏற்று, பெண்களோடு கூடிவாழ்ந்து, நெபிலிம் எனப்பட்ட இராட்சத இனத்தைப் பிறப்பித்தனரென பைபிள் குறிப்பிடுகிறது.—ஆதியாகமம் 6:1-4; 2 பேதுரு 2:4, 5.
தெய்வீகத் தோற்றுமூலத்திலிருந்து வரப்போகும் ஒரு பிரளயத்தைப்பற்றி மனிதன் ஒருவன் எச்சரிக்கப்பட்டானென ஜலப்பிரளய புராணக்கதைகள் பொதுவாய்க் குறிப்பிடுகின்றன. பைபிளின்படி, யெகோவா தேவன் பொல்லாதவர்களையும் வன்னடத்தையில் ஈடுபடுவோரையும் தாம் அழிக்கப்போவதாக நோவாவை எச்சரித்தார். கடவுள் நோவாவிடம் பின்வருமாறு சொன்னார்: “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்.”—ஆதியாகமம் 6:13.
ஜலப்பிரளயத்தைப் பற்றிய புராணக் கதைகள், அது உலகளாவிய அழிவைக் கொண்டுவந்ததென பொதுவாய்க் குறிப்பிடுகின்றன. அதற்கு ஒத்தவாறு, பைபிள் சொல்வதாவது: “ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.”—ஆதியாகமம் 7:19, 22.
ஒரு மனிதன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மற்ற ஆட்களுடன்கூட அந்தப் பிரளயத்தைத் தப்பிப் பிழைத்தானென ஜலப்பிரளய புராணக்கதைகளில் பெரும்பான்மையானவை கூறுகின்றன. அவன் தான் கட்டின ஒரு படகில் அடைக்கலம் புகுந்தானெனவும், அது ஒரு மலையின்மேல் தங்கினதாகவும் புராணக்கதைகளில் பல குறிப்பிடுகின்றன. இவற்றிற்கொப்பாக, நோவா ஒரு பேழையைக் கட்டினானென வேத எழுத்துக்கள் கூறுகின்றன. மேலும் அவை: “நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன,” என்றும் கூறுகின்றன. (ஆதியாகமம் 6:5-8; 7:23) பைபிளின்படி, பிரளயத்துக்குப் பின்பு “பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று,” அங்கே நோவாவும் அவனுடைய குடும்பமும் தரையில் இறங்கினார்கள். (ஆதியாகமம் 8:4, 15-18) ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்தவர்கள் பூமியைத் திரும்பக் குடியேற்றுவிக்கத் தொடங்கினரெனவும் புராணக்கதைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன, நோவாவும் அவனுடைய குடும்பமும் அவ்வாறு செய்ததாக பைபிள் காட்டுகிறது.—ஆதியாகமம் 9:1; 10:1.
பூர்வ ஜலப்பிரளய புராணக்கதைகள்
முன்கூறப்பட்டக் குறிப்புகளை மனதில் கொண்டு, புராணக்கதைகள் சிலவற்றை நாம் கவனிக்கலாம். மெசொப்பொத்தாமியாவின் குடியிருப்பாளராக வாழ்ந்த பூர்வ மக்களான சுமேரியருடன் நாம் தொடங்குவதாக வைத்துக்கொள்வோம். பிரளயத்தைப் பற்றிய அவர்களுடைய விளக்கங்கள் நிப்பூரின் பாழடைந்த கட்டிடங்களின்கீழ் தோண்டியெடுத்த களிமண் பலகைகளில் காணப்பட்டன. இந்தப் பலகையில், சுமேரிய தெய்வங்களான அனுவும் என்லிலும் மனிதவர்க்கத்தை ஒரு மிகப் பெரிய ஜலப்பிரளயத்தைக் கொண்டு அழிக்கத் தீர்மானித்தரெனவும், என்க்கி தெய்வத்தால் எச்சரிக்கப்பட்டு, ஸீயுஸூத்ராவும் அவனுடைய குடும்பமும் ஒரு பெரிய படகில் தப்பிப் பிழைக்க முடிந்ததெனவும் கூறியுள்ளது.
பாபிலோனிய கில்காமேஷின் வீரகாவியம் பல நுட்பவிவரங்களைக் கொண்டுள்ளது. அதன்படி, கில்காமேஷ் தன் மூதாதை உட்னபிஷ்டிம்மைப் போய்ப் பார்த்தான், இவன் ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்தப் பின்பு நித்திய ஜீவன் அளிக்கப்பட்டிருந்தான். பின் நிகழ்ந்த உரையாடலில், உட்னபிஷ்டிம் தான் ஒரு கப்பலைக் கட்டும்படியும் கால்நடைகளையும், காட்டு மிருகங்களையும், தன் குடும்பத்தையும் அதற்குள் கொண்டுசெல்லும்படி கூறப்பட்டானென விளக்கினான். அவன் அந்தக் கப்பலை ஒவ்வொரு பக்கமும் 60 மீட்டர் நீளத்தையுடையதும், ஆறு மாடிகளைக் கொண்டதுமான ஒரு மிகப் பெரிய கனசதுரமாகக் கட்டினான். அந்தப் பெரும்புயல் ஆறு பகல்களும் ஆறு இரவுகளும் நீடித்ததென அவன் கில்காமேஷிடம் சொல்கிறான், பின்பு அவன் சொன்னதாவது: “ஏழாவது நாள் வந்தபோது, அந்தச் சூறாவளி, அந்தப் பிரளயம், போரின் அந்தத் திகிலதிர்ச்சி அடக்கப்பட்டது, அது ஒரு படையைப்போல் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டது. கடல் அமைதியாயிற்று, சுழற்காற்று அடங்கிபோயிற்று, பிரளயம் நின்றுவிட்டது. நான் கடலின்மீது நோக்கினேன் குரல்களின் தொனி அடங்கிவிட்டது. மனிதவர்க்கம் முழுவதும் கழிமண்ணுக்குத் திரும்பிவிட்டனர்.”
அந்தக் கப்பல் நிசிர் மலைமீது உறுதியாக நின்றபின், உட்னபிஷ்டிம் ஒரு புறாவை வெளிவிட்டான் அது அமர்வதற்கு இடத்தைக் காணமுடியாதபோது படகுக்குத் திரும்பி வந்துவிட்டது. இதற்குப் பின் ஒரு தூக்கணாங்குருவி அனுப்பப்பட்டது, அதுவும் திரும்பிவந்துவிட்டது. பின்பு ஒரு காகம் வெளிவிடப்பட்டது, அது திரும்பிவராதபோது, தண்ணீர் வற்றிவிட்டதென அவன் அறிந்தான். பின்பு உட்னபிஷ்டிம் மிருகங்களை வெளிவிட்டு ஒரு பலிசெலுத்தினான்.
இந்த மிகப் பழமையான புராணக்கதை ஜலப்பிரளயத்தைப் பற்றிய பைபிளிலுள்ள விவரத்துக்கு ஓரளவு ஒத்துள்ளது. எனினும், பைபிள் விவரத்தின் விளக்கமான நுட்பவிவரங்களும் எளிய நடையும் இதில் இல்லை, மேலும் அந்தப் பேழைக்கு நியாயமான நீள அகல உயர அளவுகளையும் கொடுக்கிறதில்லை வேத எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ள கால அளவையும் தருகிறதில்லை. உதாரணமாக, அந்தப் புயல் ஆறு பகல்களும் ஆறு இரவுகளும் நீடித்திருந்ததென கில்காமேஷ் வீரகாவியம் சொன்னது, பைபிளோவெனில், “நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது,” என்று சொல்கிறது—இது முடிவில் பூகோளம் முழுவதையும் தண்ணீரால் மூடின விடாதுதொடர்ந்த அடை மழை.—ஆதியாகமம் 7:12.
ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்த எட்டுப்பேர்களை பைபிள் குறிப்பிடுகிறபோதிலும், கிரேக்கப் புராணக்கதையில் டியுகாலியனும் அவனுடைய மனைவி, பைர்ஹாவும் மாத்திரம் தப்பிப் பிழைத்தார்களெனக் கூறப்படுகிறது. (2 பேதுரு 2:5) இந்தப் புராணக்கதையின்படி, இந்தப் பிரளயத்துக்கு முன்னால் இந்தப் பூமி வெண்கல மனிதர்கள் எனப்பட்ட வன்னடத்தையுள்ள ஆட்களால் குடியிருக்கப்பட்டிருந்தது. ஸீயஸ் தேவன் அவர்களை ஒரு பெரிய ஜலப்பிரளயத்தைக்கொண்டு அழிக்கத் தீர்மானித்து டியுகாலியனிடம் ஒரு பெரிய பெட்டியைக் கட்டி அதற்குள் செல்லும்படிக் கூறினான். ஜலப்பிரளயம் வற்றினபோது, அந்தப் பெட்டி பார்னாஸஸ் மலைமீது வந்து தங்கிற்று. டியுகாலியனும் பைர்ஹாவும் மலையிலிருந்து கீழிறங்கி மனிதவர்க்கத்தை மறுபடியும் தொடங்கினார்கள்.
தொலைக் கிழக்கின் புராணக்கதைகள்
இந்தியாவில் ஒரு ஜலப்பிரளய புராணக்கதை இருக்கிறது, அதில் மனு தப்பிப்பிழைத்த அந்த மனிதன். அவன் ஒரு சிறிய மீனுடன் நட்புக் கொள்கிறான், அது பெரிய உருவாக வளர்ந்து அழிவைக் கொண்டுவரப்போகும் ஒரு ஜலப்பிரளயத்தைப் பற்றி அவனை எச்சரிக்கிறது. மனு ஒரு படகைக் கட்டுகிறான், அது இமாலயத்திலுள்ள ஒரு மலைமீது செருகி தங்கும்வரை அந்த மீன் அதை இழுத்துச்செல்கிறது. பிரளயத் தண்ணீர் வற்றினபோது, மனு, தன் பலியின் உருவகமான ஐடாவுடன் மலையிலிருந்து இறங்கி, மனித குலத்தை மீண்டும் தொடங்குகிறான்.
சீன மக்களுக்குரிய புராணக்கதையின்படி, இடி தெய்வம், நூவா மற்றும் ஃபூஸி என்ற இரண்டு பிள்ளைகளுக்கு ஒரு பல்லைக் கொடுக்கிறான். அதை நடும்படியும் அதிலிருந்து வளரும் சுரைக்காய்க் கொடியினடியில் பாதுகாப்பாய்த் தங்கும்படி அவன் கட்டளையிடுகிறான். உடனடியாக ஒரு மரம் அந்தப் பல்லிலிருந்து வளர்ந்து ஒரு மிகப் பெரிய சுரைக்காயை விளைவிக்கிறது. இடி தெய்வம் சோனாவாரியாக மழைபெய்ய செய்கிறபோது, பிள்ளைகள் அந்தச் சுரைக்காய்க்குள் ஏறிக்கொள்கிறார்கள். மழையினால் உண்டாகும் ஜலப்பிரளயம் பூமியின் குடிமக்களான மற்ற எல்லாரையும் மூழ்க்கடிக்கிறபோதிலும், நூவாவும் ஃபூஸியும் தப்பிப்பிழைத்து பூகோளத்தை மீண்டும் குடியேற்றுவிக்கின்றனர்.
அமெரிக்காக்களில்
ஒருசில ஆட்களைத் தவிர எல்லாரையும் அழிக்கும் ஒரு ஜலப்பிரளயம் என்ற பொதுப்பொருளைக் கொண்ட பல்வேறு புராணக்கதைகள் வட அமெரிக்க இந்தியர்களுக்கு உண்டு. உதாரணமாக, அரிக்கரா, ஒரு கடூ மக்கள் பின்வருமாறு சொல்கின்றனர், ஒரு காலத்தில் இந்தப் பூமி அவ்வளவு அதிக பலத்த ஆட்களாலாகிய ஒரு குலத்தால் குடியிருக்கப்பட்டிருந்ததால் அவர்கள் கடவுட்களை ஏளனம் செய்தனர். நெசாரு கடவுள் ஒரு ஜலப்பிரளயத்தைக் கொண்டு இந்த இராட்சதர்களை அழித்தார், ஆனால் தம்முடைய ஆட்களையும், மிருகங்களையும், மக்காச்சோளத்தையும் ஒரு கெபியில் பாதுகாத்துவைத்தார். ஹாவசூப்பை மக்கள் சொல்வதாவது, ஹோக்கோமாட்டா கடவுள் மனிதவர்க்கத்தை அழித்த ஒரு பிரளயத்தை உண்டுபண்ணினார். எனினும், அந்த மனிதன் டோக்கோப்பா தன் மகள் பூக்கேஹியை உள்துளையையுடைய ஒரு மரக்கட்டையில் பத்திரமாக மூடிவைத்ததால் பாதுகாத்தான்.
மத்திய மற்றும் தென் அமெரிக்க இந்தியர்கள் அடிப்படை ஒப்புமைகளைக் கொண்ட ஜலப்பிரளய புராணக்கதைகளைக் கொண்டுள்ளனர். ஒரு பெரிய மழைப்பாம்பு கடும் விசைமாரிகளால் இந்த உலகத்தை அழித்ததென மத்திய அமெரிக்காவின் மாயா ஜனங்கள் நம்பினர். மெக்ஸிக்கோவில் சிமால்போபோக்கா விளக்கம் சொல்வதாவது, ஒரு ஜலப்பிரளயம் மலைகளை மூழ்க்குவித்தது. டாஸ்காட்லிபோக்கா கடவுள், நாட்டா என்ற மனிதனை எச்சரித்தார், அவன் ஒரு மரக்கட்டையை குடைந்தெடுத்து அதில் அவனும் அவனுடைய மனைவி நேனாவும், தண்ணீர் வற்றும் வரையில் அடைக்கலம் புகுந்தனர்.
பெருவில் சின்ச்சாக்கள் கொண்டுள்ள ஒரு புராணக்கதை, ஐந்து நாட்கள் ஜலப்பிரளயம் ஒருவனைத் தவிர எல்லா மனிதரையும் அழித்தது, அந்த ஒருவன் பேசும் லாமாவால் ஒரு மலையில் பாதுகாப்புக்கு வழிநடத்தப்பட்டானெனக் கூறுகிறது. பெரு மற்றும் பொலிவியாவின் ஐமாராக்கள் சொல்வதாவது, வீராகோக்கா கடவுள் டிட்டிக்காக்கா ஏரியிலிருந்து வெளிவந்து இந்த உலகத்தையும் இயல்புமீறிய பேருருவமுள்ள, பலத்த மனிதரையும் படைத்தான். இந்த முதல் குலம் அவனுக்குக் கோபமூட்டினதால் வீராகோக்கா அவர்களை ஜலப்பிரளயத்தால் அழித்தான்.
பிரேஸிலின் டூப்பினம்பா இந்தியர்கள், ஒரு பெரிய ஜலப்பிரளயம், தோணிகளில் அல்லது உயர்ந்த மரங்களின் உச்சியில் தப்பிப்பிழைத்தவர்களைத் தவிர, தங்கள் மூதாதைகள் எல்லாரையும் அழித்த ஒரு காலத்தைப்பற்றிப் பேசினார்கள். பிரேஸிலின் காஷினாவுவா, கயானாவின் மக்கூஷி, மத்திய அமெரிக்காவின் காரிபுகள், டயேரா டெல் ஃபுயூகோவின் ஓனா மற்றும் யாகென் ஆகியோர் ஜலப்பிரளய புராணக்கதைகளைக் கொண்ட மரபினர்களில் சிலர் ஆவர்.
தென் பசிபிக் மற்றும் ஆசியா
சிலர் தப்பிப்பிழைத்தனரெனக் கூறும் ஜலப்பிரளய புராணக்கதைகள், தென் பசிபிக் முழுவதிலும் பொதுவாயுள்ளன. உதாரணமாக, பீலீயையும் அவனுடைய மனைவியையும் தவிர எல்லாரையும் அழித்த பூர்வ காலங்களில் ஏற்பட்ட ஒரு ஜலப்பிரளயத்தைப்பற்றிய ஒரு புராணக்கதை சமோவாவில் உள்ளது. அவர்கள் ஒரு கற்பாறையில் பாதுகாப்பைக் கண்டடைந்தார்கள், மற்றும் ஜலப்பிரளயத்துக்குப் பின் அவர்கள் பூமியைத் திரும்ப குடியேற்றுவித்தார்களெனக் கூறுகிறது. ஹவாயன் தீவுகளிலுள்ள ஒரு புராணக்கதை, கேன் என்ற கடவுள் மனிதர்பேரில் எரிச்சலடைந்து அவர்களை அழிக்க ஒரு ஜலப்பிரளயத்தை அனுப்பினார். நூ மாத்திரம் ஒரு பெரிய படகில் தப்பிப் பிழைத்தான், அது முடிவில் ஒரு மலைமீது தங்கியது எனக் கூறுகிறது.
இரண்டு ஆண்களையும் ஒரு பெண்ணையும் தவிர எல்லாரையும் அழித்தத் தண்ணீரால் இந்தப் பூமி ஒருகாலத்தில் மூடப்பட்டிருந்ததென பிலிப்பைன் தீவுகளிலுள்ள மின்டானாவோவில் ஆட்டாக்கள் சொல்கின்றனர். மிக உயர்ந்த குன்றுகளுக்கு ஓடிப்போவதன்மூலம் சில ஆட்கள் மாத்திரம் ஒரு பிரளயத்தைத் தப்பினரென போர்னியோவின் சாரவாக்கிலுள்ள ஈபான்கள் சொல்கின்றனர். பிலிப்பைன் தீவுகளின் இகோரட் புராணக்கதையில், ஒரு சகோதரனும் சகோதரியும் மாத்திரம் போக்கீஸ் மலைமீது அடைக்கலம் புகுந்ததால் தப்பிப்பிழைத்தனரென்று சொல்லியிருக்கிறது.
பூமியைத் தாங்கிக்கொண்டிருந்த ஓர் இராட்சதத் தவளை, நகர்ந்து, பூகோளத்தை வெள்ளத்தில் மூழ்கச் செய்தது. ஒரு முதிர்வயதான மனிதனும் அவனுடைய குடும்பமும் அவன் செய்த ஓர் ஓடத்தில் தப்பிப் பிழைத்தனர். அந்தத் தண்ணீர் வற்றினபோது, அந்த ஓடம் ஓர் உயரமான மலையில் போய்த் தங்கினது என்று ரஷியாவின் சைபீரியாவிலுள்ள சோயாட் மக்கள் சொல்கின்றனர். மேற்கத்திய சைபீரியா மற்றும் ஹங்கேரியின் உக்ரேனியர்களும் அந்த ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்தவர்கள் ஓடங்களைப் பயன்படுத்தினரெனக் கூறுகின்றனர், ஆனால் பூமியின் வெவ்வேறு பாகங்களுக்கு மிதந்து சென்றனர் என்கின்றனர்.
பொதுவான தொடக்கம்
ஜலப்பிரளய புராணக்கதைகளான இவை பலவற்றிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? நுட்பவிவரங்களில் அவை வேறுபடுகிறபோதிலும், சில பொது அம்சங்களைக் கொண்டுள்ளன. இவை ஏதோ மிகப்பெரிய மற்றும் மறக்கமுடியாத பிரளயத்தில் தொடக்கத்தைக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. நூற்றாண்டுகளினூடே பல்வேறு முறைகளில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறபோதிலும், அவற்றின் அடிப்படை பொருள் அவற்றை ஒரே ஒரு பெரிய நிகழ்ச்சியுடன்—எளிதும் விளக்கமுமான பைபிள் விவரத்தில் கூறப்பட்டுள்ள பூகோள ஜலப்பிரளயத்துடன்—இணைக்கும் ஒரு நூலைப்போல் உள்ளது.
ஜலப்பிரளய புராணக்கதைகள், சமீப நூற்றாண்டுகள் வரை பைபிளுடன் தொடர்பில்லாத ஜனங்களுக்குள் பொதுவாய்க் காணப்படுவதால், வேத எழுத்துக்களிலுள்ள விவரம் அவர்களைப் பாதித்ததென்று வாதிடுவது தவறாகும். மேலும், தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு கூறுகிறது: “ஜலப்பிரளய விவரங்கள் உலகளாவி எங்கும் இருப்பதானது ஒரு ஜலப்பிரளயத்தால் மனிதகுலத்தின் உலகளாவிய அழிவுக்கு அத்தாட்சியாகப் பொதுவாய் ஏற்கப்படுகிறது . . . மேலும், பூர்வ விவரப் பதிவுகளில் சில எபிரெய-கிறிஸ்தவ பாரம்பரியத்தை வெகு அதிகமாய் எதிர்த்த ஆட்களால் எழுதப்பட்டன.” (புத்தகம் 2, பக்கம் 319) ஆகையால் இந்த ஜலப்பிரளய புராணக்கதைகள் பைபிள் விவரத்தின் உண்மையானத் தன்மையை உறுதிப்படுத்துகின்றனவென நாம் நம்பிக்கையுடன் முடிவுசெய்யலாம்.
வன்முறைச் செயல்களாலும் ஒழுக்கக்கேட்டினாலும் நிறைந்துள்ள உலகத்தில் நாம் இருக்கிறபடி வாழ்கையில், ஆதியாகமம் 6-லிருந்து 8 வரையான அதிகாரங்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பதை நாம் வாசிப்பது நல்லது. அந்த பூகோள ஜலப்பிரளயம் உண்டாவதற்கான காரணத்தின்—கடவுளுடைய பார்வையில் பொல்லாததாக இருந்ததைப் பழக்கமாய்ச் செய்ததன்—பேரில் நாம் ஆழ்ந்து சிந்தித்தால் அதில் ஒரு மிக முக்கிய எச்சரிக்கையைக் காண்போம்.
சீக்கிரத்தில், இந்தத் தற்போதைய காரிய பொல்லாத ஒழுங்குமுறை கடவுள் கொடுத்துள்ள ஆக்கினைத்தீர்ப்பைப் அனுபவிக்கும். எனினும், மகிழ்ச்சிதருவதாய், தப்பிப்பிழைப்போர் இருப்பர். அப்போஸ்தலன் பேதுருவினுடைய பின்வரும் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுத்தால் நீங்களும் அவர்களுக்குள் இருக்கலாம்: “அப்பொழுதிருந்த உலகம் ஜலங்களால் பிரளயத்தின்மூலமாய் அழிந்ததென்பதையும் அவர்கள் வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள். இப்பொழுதிருக்கிற வானமும் பூமியுமோ அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுத் தெய்வபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டு வருகின்றன. . . . இவைகளெல்லாம் இப்படி அழிந்துபோகிறவைகளாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தெய்வபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! கடவுளின் நாளுக்கு ஆவலோடு காத்திருந்து [யெகோவாவின் நாளின் வருகையை மனதில் நெருங்க வைத்துக்கொண்டு, NW].”—2 பேதுரு 3:6-12, தி.மொ.
யெகோவாவின் நாளின் வருகையை நீங்கள் மனதில் நெருங்க வைத்துக்கொண்டிருப்பீர்களா? அவ்வாறு நீங்கள் செய்து கடவுளுடைய சித்தத்துக்கு ஒத்திசைய நடந்தால், மிகுந்த ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வீர்கள். இவ்வாறு யெகோவா தேவனைப் பிரியப்படுத்துவோர் பேதுரு பின்வருமாறு மேலும் சொல்கையில் குறிப்பிடும் அந்தப் புதிய உலகத்தில் விசுவாசம் கொண்டிருக்கலாம்: “அவருடைய [கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13. (w92 1/15)
[பக்கம் 7-ன் படம்]
ஜலப்பிரளயத்தைப்பற்றிய பாபிலோனிய புராணக்கதைகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றொரு சந்ததிக்குக் கடத்தப்பட்டன
[பக்கம் 8-ன் படம்]
யெகோவாவின் நாளை மனதில் வைத்துக்கொண்டிருப்பதன் மூலம் பேதுருவின் எச்சரிக்கைக்குச் செவிகொடுக்கிறீர்களா?