“அவருடைய கிருபை பெரியது”
ஜோஸ் வெர்கரா ஓராஸ்கோ சொன்னபடி
உங்கள் வாழ்க்கையில் 70-வயதில் புதிய வேகம் ஏற்படக்கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனக்கு அவ்விதமாக ஏற்பட்டது. அது 35-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னால்.
யெகோவாவின் கிருபையினால் 1962 முதற்கொண்டு நான் ஒரு ஒழுங்கான பயனியராக சேவை செய்து வந்திருக்கிறேன். 1972 முதற்கொண்டு ஜேலிஸ்கோ ஸ்டேட்டில் யெகோவாவின் சாட்சிகளுடைய எல்கேரிசால் சபையில் ஒரு கண்காணியாக இருந்திருக்கிறேன். என்னுடைய பின்னணியைப் பற்றி நான் உங்களுக்குக் கொஞ்சம் சொல்லட்டும்.
நான் 1886, ஆகஸ்ட் 18, மெக்ஸிக்கோவில், மிச்சோக்கன் ஸ்டேட்டில் பிறந்தேன். என்னுடைய அப்பா ஒரு சகோதரத்துவ சங்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தால், என்னுடைய குடும்பம் கத்தோலிக்க சர்சுக்குப் போகவோ, அல்லது கத்தோலிக்க மத விழாக்கள் எதிலும் கலந்துகொள்ளவோ அல்லது எங்களுடைய வீட்டில் எந்த ஒரு மத விக்கிரகங்களையும் வைத்திருக்கவோ இல்லை.
எனக்கு 16 வயதாக இருக்கையில் என்னுடைய அப்பா ஐக்கிய மாகாணங்களில் வேலைக்காகச் சென்றார். ஆனால் எனக்கு ஒரு தொழில் கற்றுக்கொடுக்க ஒரு மனிதனை ஏற்பாடு செய்தார். என்றபோதிலும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஓர் இராணுவ கல்விச்சாலையில் பயிற்றுவிப்புக்காக அந்த மனிதன் என்னை மெக்ஸிக்கோ நகரத்துக்கு அழைத்துச் சென்றார். அதற்குப் பிற்பாடு மெக்ஸிக்கன் இராணுவத்தில் ஒரு வாழ்க்கைப்பணியை நான் எடுத்துக்கொண்டேன்.
பட்டாளத்திலும் அதன் பின்னும்
1910-ல் ஆரம்பமான மெக்ஸிக்கன் புரட்சியில் நான் கலந்துகொண்டேன். கல்விசாலையிலிருந்த இளம் மனிதர்களாகிய நாங்கள் அனைவருமே போர்பைரோ டயஸின் சர்வாதிகாரத்துக்கு எதிராக புரட்சியாளராக இருந்த ஃபிரன்சிஸ்கோ I. மாடிரோவுக்கு ஆதரவு தந்தோம். 1913-ல் அவர் மரிக்கும் வரையாக நாங்கள் மாடிரோவை ஆதரித்தோம். அதற்குப் பின்பு 1915 முதல் 1920 வரையாக குடியரசின் தலைவராக சேவித்த வெனஸ்டியானோ காரன்ஸாவுக்கு ஆதரவு தந்தோம். நாங்கள் காரன்ஸிஸ்டாஸ் என்றழைக்கப்பட்டோம்.
நான்கு வித்தியாசமான சமயங்களில், பட்டாளத்திலிருந்து விடுவிக்கப்பட நான் முயன்றும் வெற்றி பெறவில்லை. கடைசியாக, பட்டாளத்திலிருந்து அனுமதி பெறாமல் ஓடி வந்து ஒரு நாடோடியானேன். இதன் விளைவாக மெக்ஸிக்கோவுக்கு திரும்பியிருந்த என் அப்பா சிறையிலடைக்கப்பட்டார். ஒரு நாள், அவருடைய உடன்பிறந்தாரின் மகன் போல பாசாங்கு செய்து கொண்டு அவரைப் பார்க்க சிறைக்குச் சென்றேன். காவலாளி கேட்கமுடியாதபடி சிறிய பேப்பர் துண்டுகளில் நாங்கள் எழுதி பேசிக்கொண்டோம். நான் யார் என்பதை எவரும் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக நான் பேப்பரை சாப்பிட்டுவிட்டேன்.
என் அப்பா சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு, அவர் என்னை வந்து சந்தித்து நான் அதிகாரிகளிடம் சரணடைந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் அதைச் செய்தேன், பொறுப்பிலிருந்த படைத்தலைவர் என்னை கைது பண்ணாதிருந்தது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. மாறாக, ஐக்கிய மாகாணங்களுக்குச் சென்றுவிடுமாறு அவர் எனக்கு யோசனை தெரிவித்தார். அவருடைய யோசனையை ஏற்று 1916 முதல் 1926 வரை அங்கு வாழ்ந்தேன்.
1923-ல் நான் ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்து வந்த ஒரு மெக்ஸிக்கே நாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். கட்டிட வேலையில் ஒரு தொழிலை நான் கற்றுக்கொண்டேன், நாங்கள் ஒரு சிறு பெண்ணை எடுத்து வளர்த்தோம். அவள் 17 மாதமாக இருக்கையில், நாங்கள் மெக்ஸிக்கோவுக்கு திரும்பி வந்து டாபாஸ்கோ, ஜால்பாவில் வீடு எடுத்து தங்கினோம். அப்பொழுது ‘கிறிஸ்டரோ கிளர்ச்சி’ ஆரம்பமாகி அது 1926 முதல் 1929 வரை நீடித்தது.
கிறிஸ்டரோஸ் நான் அவர்களை சேர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள். என்றபோதிலும் என்னுடைய குடும்பமும் நானும், அகுவாஸ்காலியன்டிஸ் மாநிலத்துக்கு தப்பியோட விரும்பினோம். மெக்ஸிக்கன் குடியரசில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்துவிட்டப் பின்னர், 1956-ல் நாங்கள் டாமாலிபாஸிலுள்ள மாட்டமோரஸில் குடியேறினோம். இங்கே கட்டிட வேலைகளை நான் கண்காணிக்க ஆரம்பித்தேன்.
என் வாழ்க்கை மாறுகிறது
இப்போது தான் என் வாழ்க்கை மாற ஆரம்பித்தது. இதற்குள் திருமணம் செய்து கொண்டு அ.ஐ.மா. டெக்ஸாஸில், ப்ரெளண்ஸ்விலாவின் எல்லையோரத்தின் குறுக்கே வாழ்ந்து வந்த என் மகள், அடிக்கடி எங்களை வந்து பார்ப்பது வழக்கமாக இருந்தது. ஒரு நாள் அவள் சொன்னாள்: “அப்பா, இப்பொழுது சமுதாய மன்றத்தில் அநேக குடும்பங்கள் கூடியிருக்கிறார்கள். அது எதைப் பற்றி என்று நாம் போய் பார்க்கலாம்.” அது யெகோவாவின் சாட்சிகளுடைய ஓர் அசெம்ளியாக இருந்தது. என்னுடைய மகளும் மருமகனும் பேரனும் மனைவியும் நானும் நான்கு நாட்களும் அசெம்ளியில் ஆஜராயிருந்தோம்.
அந்த வருடம் முதற்கொண்டு யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராக ஆரம்பித்தோம். நான் மெக்ஸிக்கோவிலும் என் மகள் ஐக்கிய மாகாணங்களிலுமாக நாங்கள் ஆவிக்குரிய வகையில் முன்னேறினோம். விரைவில் நான் கற்றுக்கொண்டிருந்த பைபிள் சத்தியங்களை என் சக வேலையாட்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் ஒவ்வொன்றிலும் பத்து பத்திரிகைகளை நான் பெற்றுக்கொண்டு அவைகளை என் சகவேலையாட்களுக்கு விநியோகம் செய்தேன். அலுவலகத்திலிருந்தவர்களில் ஐந்து பேரும் மூன்று பொறியாளர்களும் இன்னும் மற்ற வேலையாட்களில் சிலரும் சாட்சிகளானார்கள்.
ஓ! 1959, டிசம்பர் 19-ம் தேதி ஆற்றில் நான் முழுக்காட்டப்பட்ட அந்தச் சமயம் குளிராக இருந்தது! அளவுக்கு அதிகமாக குளிர்ந்திருந்த தண்ணீரினால் அந்நாளில் முழுக்காட்டப்பட்ட அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்கள். எனக்கு முன்பே என் மகள் முழுக்காட்டப்பட்டாள், என்னுடைய மனைவி அவள் முழுக்காட்டப்படாத போதிலும் பைபிள் சத்தியங்களை தெரிந்துகொள்ளும் அளவுக்கு வந்திருந்தாள், அவள் மிகவும் ஒத்துழைத்தாள்.
முழு-நேர ஊழியம்
நான் கடவுளுக்கு அவருடைய எல்லா கிருபைக்காகவும் கடன்பட்டவனாக உணர்ந்தேன். ஆகவே 1962, பிப்ரவரியில், நான் 75 வயதாக இருந்தபோது, ஒரு பயனியராக முழு-நேர ஊழியத்தை ஆரம்பித்தேன். ஒரு சில வருடங்களுக்குப் பின், 1968-ல் என் மனைவி மரித்து போனாள். நான் வேறொரு தேசத்தில் சேவிக்க விரும்பினேன், ஆனால் என்னுடைய வயதின் காரணமாக, அது உசிதமாக இருக்கும் என்று சகோதரர்கள் நினைக்கவில்லை. என்றபோதிலும் ஒரு சிறிய சபை இருந்த இடமாகிய கொலாட்லனில் பயனியராக நான் நியமிக்கப்பட்டேன்.
செப்டம்பர் 1972-ல் வட்டார கண்காணி கொலாட்லனுக்கு அருகிலுள்ள எல் காரிசால் என்ற சிறிய பட்டணத்துக்கு என்னை இடம் மாறிச் செல்லும்படி யோசனை தெரிவித்தார். அந்த வருடம் நவம்பரில் அங்கே ஒரு சபை ஸ்தாபிக்கப்பட்டு நான் ஒரு மூப்பராக நியமிக்கப்பட்டேன். அது மிகவும் தனிமையாக ஒதுங்கியிருந்த ஒரு பட்டணமாக இருந்தபோதிலும் சபை கூட்டங்களுக்கு 31 பேர் வரை ஆஜராயிருந்தனர்.
என் வயதின் மத்தியிலும் நான் இன்னும் ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருந்து, தங்கள் நம்பிக்கைகளின் பேரில் காரண காரியத்தோடு சிந்திக்க மக்களுக்கு உதவி செய்ய கடினமாக முயற்சித்து வருகிறேன். உதாரணமாக உண்மை மனதுள்ள கத்தோலிக்கர் ஜெபமாலையை வைத்து சொல்லும் ஜெபத்தில் ‘கிருபை பொருந்தின மரியே வாழ்க! தேவன் உம்மோடிருக்கிறார்’ என்று சொல்கிறார். அந்த ஜெபம் மேலுமாக: ‘பரிசுத்த மரியே, கடவுளின் தாயே’ என்று சொல்கிறது. நான் அவர்களிடம், ‘அது எப்படி இருக்க முடியும்? மரியாளை இரட்சிப்பவர் கடவுளாக இருக்கையில், அவர் எப்படி அதே சமயத்தில், அவளுடைய குமாரனாகவும் இருக்க முடியும்?’ என்று கேட்பேன்.
எனக்கு இப்போது 105 வயதாகிறது. நான் ஜாலிஸ்கோவிலுள்ள எல் காரிஸாலில் ஏறக்குறைய 20 வருடங்களாக ஒரு மூப்பராகவும் ஒழுங்கான பயனியராகவும் சேவித்து வந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் நான் உயிரோடிருப்பது யெகோவாவின் சித்தமாக இருப்பதாக நான் உணருகிறேன், ஏனென்றால் இவ்விதமாக நான் அவரை சேவிக்காமல் இழந்துவிட்டிருந்த நேரத்தை இப்பொழுது என்னால் ஈடுசெய்ய முடியும்.
நம்முடைய உன்னத நியாயாதிபதி அவருடைய நீதியான சிங்காசனத்திலிருந்து நம்மை கவனித்துக் கொண்டு நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து வருகிறார் என்பதில் நாம் எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது நாம் கற்றுக்கொண்டிருக்கும் ஒரு காரியமாகும். சங்கீதம் 117:2 சொல்லும் வண்ணமாகவே: “அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது.” (w92 2/1)