ஜஸ்டின்—தத்துவ ஞானி, வாதம் செய்து சொந்த மதத்தை ஆதரித்து எழுதுபவர், இரத்தசாட்சி
“கிறிஸ்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆராயப்பட வேண்டும், இவை உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் தக்கவிதமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் . . . ஆனால் குற்றவாளி என எவராலும் எங்களை தீர்க்க முடியாமல், பொல்லாத வதந்தியின் காரணமாக குற்றமற்ற மனிதர்களுக்கு தீங்கிழைப்பதிலிருந்து, நல்ல நிதானம் உங்களை தடுத்து நிறுத்துமானால் . . . நீங்கள் உண்மையை அறிந்தும் நீங்கள் நீதியைச் செய்யாதிருந்தால், கடவுளுக்கு முன்பாக நீங்கள் சாக்குப்போக்கு இல்லாதவர்களாக இருப்பீர்கள்.”
இந்த வார்த்தைகளைக் கொண்டு, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவரென்று உரிமைப்பாராட்டின ஜஸ்டின் மார்டிர் ரோம பேரரசன் அன்டோனினஸ் பயஸிடம் மேல் முறையீடு செய்தார். கிறிஸ்தவர்களென்று உரிமைப் பாராட்டிக் கொள்கிறவர்களின் வாழ்க்கைப் பற்றியும் நம்பிக்கைப் பற்றியும் பொறுப்புணர்ச்சியோடு நீதிமுறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஜஸ்டின் கேட்டுக்கொண்டார். நீதிக்கான இந்தக் கோரிக்கை மிகவும் சுவாரசியமான ஒரு பின்னணியும் தத்துவமும் கொண்ட ஒரு மனிதனிடமிருந்து வந்தது.
ஆரம்ப கால வாழ்க்கையும் பயிற்றுவிப்பும்
சமாரியாவின் நகரமாகிய ஃபிளேவியா நெப்பாலிஸில், நவீன நபோலஸ்-ல் புறஜாதியானாகிய ஜஸ்டின் சுமார் பொ.ச. 110-ல் பிறந்தார். அவருடைய தகப்பனும் தாத்தாவும் ரோமராக அல்லது கிரேக்கராக இருந்தபோதிலும் அவர் தன்னை ஒரு சமாரியன் என்றழைத்துக் கொண்டார். புறமத பழக்கங்களில் வளர்க்கப்பட்டதும், சத்தியத்துக்கான தாகமும் சேர்ந்து, தத்துவத்தை ஊக்கமாக படிக்க அவரை வழிநடத்தியது. பண்டைய கிரேக்க அறிஞர்கள் சீனோ, அரிஸ்டாட்டில் மற்றும் பைத்தகோரஸை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் செய்த தன்னுடைய ஆராய்ச்சியில் திருப்தியற்றவராக, அவர் ப்ளேட்டோவின் கருத்துகளை பின்பற்றினார்.
அவருடைய படைப்புகள் ஒன்றில் ஜஸ்டின், தத்துவஞானிகளோடு சம்பாஷிக்க தனக்கிருந்த ஆசையைப் பற்றி இவ்விதமாகச் சொல்கிறார்: “கிரேக்க அறிஞர் சீனோவைப் பின்பற்றுகிற ஒருவரிடம் நான் சரணடைந்துவிட்டேன்; அவரோடு கணிசமான நேரத்தை செலவழித்தப் பின்பு, கடவுளைப் பற்றிய மேலுமான எந்த அறிவையும் பெற்றுக்கொள்ளாத போது, (அவர்தானே அதை அறியாதவராய் இருந்தார்) . . . நான் அவரை விட்டுவிட்டு மற்றொருவரை அணுகினேன்.”—யூதன் டிரைஃபோவோடு தத்துவஞானி, இரத்தசாட்சி, ஜஸ்டினின் உரையாடல்.
ஜஸ்டின் அடுத்து பண்டைய கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலை பின்பற்றிய, சத்தியத்தைவிட பணத்தில் அதிக அக்கறையுள்ளவராயிருந்தவரிடம் சென்றார். “இந்த மனிதன் என்னை முதல் ஒருசில நாட்களுக்கு ஏற்றுக்கொண்ட பிற்பாடு எங்கள் கருத்து பரிமாற்றம் அவருக்கு பிரயோஜனமற்றதாக இல்லாதபடிக்கு கணக்கைத் தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இவரையும்கூட இந்தக் காரணத்துக்காக அவர் ஒரு தத்துவஞானியே இல்லையென்று நினைத்து விட்டு விலகினேன்” என்று ஜஸ்டின் சொல்கிறார்.
“மிக நேர்த்தியான தத்துவத்தை” கேட்க ஆவலாய் ஜஸ்டின், “தன் சொந்த ஞானத்தைப் பற்றியே அதிகம் நினைத்துக் கொண்டிருந்த மிகவும் பிரசித்திப் பெற்ற பைத்தகோரஸின் ஆதரவாளர் ஒருவரிடம் வந்தார்.” ஜஸ்டின் சொல்கிறார்: “செய்தியுணர்த்தப்படவும் அவருடைய சீஷராகவும் விருப்பமுள்ளவனாய் அவரோடு ஒரு பேட்டியைக் கொண்டிருந்த போது அவர் சொன்னார், ‘அப்புறம் என்ன? உனக்கு இசையும் வானசாஸ்திரமும் வடிவியலும் தெரியுமா? [இவைகளைப் பற்றிய] தகவலை முதலில் அறிந்து கொள்ளாமல், மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு துணையாயிருக்கும் அந்தக் [தெய்வீக] காரியங்கள் எதையும் உணர்ந்து கொள்ள எதிர்பார்க்கிறீர்களா?’ . . . என் அறியாமையை நான் வெளிப்படுத்தின போது அவர் என்னை அனுப்பிவிட்டார்.”
சோர்வுற்ற போதிலும், ஜஸ்டின் புகழ்பெற்ற, கிரேக்க அறிஞர் பிளேட்டோவைப் பின்பற்றுகிறவர்களிடமாகத் திரும்பினார். அவர் சொல்கிறார்: “அதன்பின், அண்மையில் எங்கள் நதரத்தில் குடியேறிய, பிளேட்டோவை பின்பற்றுகிறவர்கள் மத்தியில் உயர்ந்த அந்தஸ்திலிருந்த ஓர் அறிவுக்கூர்மையுள்ள மனிதனோடு என்னால் இயன்ற அளவு நேரத்தை செலவழித்தேன்—நான் படிப்படியாக முன்னேறி, ஒவ்வொரு நாளும் அதிகமான முன்னேற்றங்களைச் செய்தேன் . . . , வெகு சீக்கிரத்தில் நான் ஞானியாகிவிட்டதாக நினைத்துக்கொண்டேன். இதுதானே, என் முட்டாள்தனமாக இருந்தது” என்று ஜஸ்டின் முடிக்கிறார்.
தத்துவஞானிகளோடு தொடர்பு கொள்வதன் மூலமாக சத்தியத்தை தேடிய ஜஸ்டினின் முயற்சி வீணாகப் போனது. ஆனால் கடற்கரையோரத்தில் அவர் தியானித்துக் கொண்டிருந்த போது வயதான ஒரு கிறிஸ்தவனை அவர் சந்தித்தார். “வயதான மனிதனாக இருந்த போதிலும், நிச்சயமாகவே வெறுக்கத்தக்க தோற்றமில்லாதவரும் சாந்தமும் பெருந்தன்மையுமுள்ள நடத்தைக் கொண்ட ஒரு மனிதராக” அவர் இருந்தார். இதன் விளைவாக ஏற்பட்ட உரையாடலில், கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவுக்கான அவசியத்தின் மீது கருத்தூன்ற வைத்த அடிப்படை பைபிள் போதகங்களுக்கு அவர் கவனம் திருப்பப்பட்டது.—ரோமர் 10:2, 3.
பெயர் குறிப்பிடப்படாத அந்தக் கிறிஸ்தவன் ஜஸ்டினிடம் இவ்வாறு சொன்னார்: “இந்தக் காலத்துக்கு வெகு முன்பாகவே, உயர்வாகக் கருதப்படும் தத்துவஞானிகளான அவர்கள் அனைவரையும்விட அதிக தொன்மையான சில மனிதர்கள், நீதியுள்ளவர்களும், கடவுளுக்குப் பிரியமானவர்களுமான மனிதர்கள், . . . சம்பவிக்கப் போவதும் இப்போது சம்பவித்து வருவதுமான சம்பவங்களை முன்னுரைத்தனர். இவர்கள் தீர்க்கதரிசிகள் என்றழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மாத்திரமே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு . . . சத்தியத்தைக் கண்டவர்களும் அதை மனிதர்களுக்கு அறிவித்தவர்களுமாக இருந்தனர்.” மேலுமாக ஜஸ்டினின் ஆர்வத்தைத் தூண்டுகிறவராய் கிறிஸ்தவர் இவ்வாறு சொன்னார்: “இந்த எழுத்துக்கள் இன்னும் இருக்கின்றன, இவைகளை வாசித்திருப்பவர் காரியங்களைக் குறித்த ஆரம்பம் மற்றும் முடிவு பற்றிய அறிவில் வெகுவாக உதவப்படுகிறார்.” (மத்தேயு 5:6; அப்போஸ்தலர் 3:18) தயவுள்ள அந்த மனிதன் ஊக்குவித்த வண்ணமாகவே, ஜஸ்டின் ஊக்கமாக வேதாகமத்தை ஆராய்ந்ததால் அவருடைய எழுத்துக்களில் காணப்படுகிற விதமாக, அவைகளுக்கும் பைபிள் தீர்க்கதரிசனத்துக்கும் ஓரளவு போற்றுதலைப் பெற்றுக்கொண்டதாக தெரிகிறது.
அவருடைய படைப்புகளின் மீது நெருங்கிய ஒரு கண்ணோட்டம்
மரணத்தின் முன்னிலையில் கிறிஸ்தவர்களின் தைரியம் ஜஸ்டினை வெகுவாக கவர்ந்தது. எபிரெய வேதாகமத்தின் உண்மையுள்ள போதனைகளையும்கூட அவர் போற்றினார். டிரைஃபோவோடு உரையாடல்-ல் தன்னுடைய தர்க்கங்களை ஆதரிப்பதற்கு ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், உபாகமம், 2 சாமுவேல், 1 ராஜாக்கள், சங்கீதம், ஏசாயா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், ஓசியா, யோவேல், ஆமோஸ், யோனா, மீகா, சகரியா, மல்கியா, சுவிசேஷங்கள் ஆகிய இந்தப் பைபிள் புத்தகங்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டினார். டிரைஃபோவோடு உரையாடலில் இந்த பைபிள் புத்தகங்களுக்கான அவருடைய போற்றுதல் காணப்பட்டது, மேசியாவை நம்பியிருந்த யூதேய மதத்தை பற்றி ஜஸ்டின் வாதிட்டார்.
ஜஸ்டின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நற்செய்தியை அறிவித்த ஒரு சுவிசேஷகனாக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. அவர் விரிவாக பயணம் செய்திருக்க வேண்டும். அவர் கொஞ்ச காலம் எபேசுவில் செலவிட்டார், அவர் கணிசமான காலப்பகுதி ரோமில் வாழ்ந்திருக்கக்கூடும்.
ஜஸ்டினின் இலக்கிய படைப்புகளில் கிறிஸ்தவத்துக்கு ஆதாரவிளக்கமளித்து அவர் எழுதிய எழுத்துக்கள் அடங்கும். அவர் தன்னுடைய முதல் ஆதார உரை-யில், வேதாகமத்திலிருந்து வரும் வெளிச்சத்தின் மூலமாக புறமத தத்துவத்தின் படுமோசமான இருளை அகற்ற முயற்சி செய்கிறார். கிறிஸ்துவின் வல்லமை வாய்ந்த வார்த்தைகளுக்கும் கிரியைகளுக்கும் நேர் எதிர்மாறாக தத்துவஞானிகளின் ஞானம் பொய்யாகவும் அர்த்தமற்றதாகவும் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். (கொலோசெயர் 2:8 ஒப்பிடவும்.) ஜஸ்டின், வெறுக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் சார்பாக வாதாடி அவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தன்னுடைய சமய மாற்றத்துக்குப் பிறகு, தான் ஒரே மெய்யான தத்துவத்தை முயன்று அடைந்துவிட்டதாக சொல்லிக் கொண்டு தொடர்ந்து தத்துவஞானியின் உடையை உடுத்திக் கொண்டிருந்தார்.
புறமத கடவுட்களை வணங்க மறுத்தமைக்காக, இரண்டாவது நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் நாத்தீகர்களென கருதப்பட்டனர். “நாங்கள் நாத்தீகர்கள் அல்ல” என்பதாக ஜஸ்டின் எதிர்ப்பு தெரிவித்தார். “சர்வலோகத்தை உண்டுபண்ணினவரை நாங்கள் வணங்குகிறோம் . . . இந்தக் காரியங்களைப் போதித்தவர் இயேசு கிறிஸ்து . . . அவர் உண்மையான கடவுளின் குமாரன்.” விக்கிரகாராதனையைக் குறித்து ஜஸ்டின் சொன்னார்: “ஒரு கடவுள் என்று அழைக்கப்படுகிறதை அவர்கள் உண்டுபண்ணுகிறார்கள்; இதை நாங்கள் முட்டாள்தனமாக மட்டுமல்லாமல், கடவுளை அவமதிப்பதாகவும் கருதுகிறோம் . . . ஒழுக்கமற்ற மனிதர்கள் நீங்கள் வணங்குவதற்காக கடவுட்களை வடிவமைத்து உண்டுபண்ணுவது என்னே முட்டாள்தனம்!”—ஏசாயா 44:14-20.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மிகப் பல குறிப்புகளோடு, ஜஸ்டின் உயிர்த்தெழுதல், கிறிஸ்தவ ஒழுக்கங்கள், முழுக்காட்டுதல், பைபிள் தீர்க்கதரிசனம் (விசேஷமாக கிறிஸ்துவை பற்றினது) மற்றும் இயேசுவின் போதனைகளில் தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவைக் குறித்து, ஜஸ்டின், “அரசாங்கம் [கிறிஸ்துவின்] தோளின்மேலிருக்கும்,” என்று சொல்லும் ஏசாயாவை மேற்கோள் காட்டுகிறார். ஜஸ்டின் மேலுமாக சொல்கிறார்: “மனித ராஜ்யத்துக்காக நாம் ஆவலோடு நாடிக்கொண்டிருந்தால் நம்முடைய கிறிஸ்துவையும்கூட நாம் மறுதலிக்கிறோம்.” கிறிஸ்தவர்களின் சோதனைகளையும் பொறுப்புகளையும் பற்றி கலந்தாராய்கிறார், கடவுளுக்குச் சரியான சேவை அவருடைய சித்தத்தைச் செய்கிறவராக இருப்பதைத் தேவைப்படுத்துகிறது என்று வற்புறுத்துகிறார், மேலுமாக “இந்தக் காரியங்களை அறிவிக்க ஒரு நபர் அவரால் எல்லா தேசத்துக்குள்ளும் அனுப்பப்பட வேண்டும்” என்று சொல்கிறார்.
ஜஸ்டினின் இரண்டாவது ஆதார உரை-யில் (முதல் ஆதார உரையின் தொடர்ச்சியாக மட்டுமே இருப்பதாக நம்பப்படுகிறது) ரோம ஆட்சி மன்றத்திடமாக பேசப்படுகிறது. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவை அடைந்தப் பிறகு, துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் அனுபவங்களை எடுத்துரைப்பதன் மூலம் ரோமர்களிடம் ஜஸ்டின் முறையிடுகிறார். கிறிஸ்தவ குடிமக்களின் நடத்தையில் பிரதிபலித்த இயேசுவின் போதனையின் நேர்த்தியான ஒழுக்கம் ரோம அதிகாரிகளுக்கு மதிப்பற்றதாகத் தோன்றியது. மாறாக சீஷனாக இருப்பதை ஒப்புக்கொள்வது தானே சாவுக்கேதுவான விளைவுகளை கொண்டிருக்கக்கூடும். கிறிஸ்தவ கோட்பாடுகளின் ஒரு முன்னாள் போதகரைக் குறித்து பின்வருமாறு கேட்ட லூஷியஸ் என்ற பெயர் கொண்ட ஒரு மனிதரை மேற்கோள் காட்டினார்: “ஒரு விபசாரக்காரனாகவோ, வேசிக்கள்ளனாகவோ, கொலைக்காரனாகவோ, திருடனாகவோ, கொள்ளைக்காரனாகவோ அல்லது எந்தக் குற்றச்செயலுக்காக குற்றவாளியாகவோ தீர்க்கப்படாமல், கிறிஸ்தவன் என்ற பெயரால் தான் அழைக்கப்படுவதை மாத்திரமே அறிக்கையிட்டதால் நீங்கள் ஏன் இந்த மனிதனுக்கு தண்டனை கொடுத்திருக்கிறீர்கள்?”
அந்தச் சமயத்தில் கிறிஸ்தவர்களென சொல்லிக் கொண்டவர்களுக்கு எதிராக இருந்த தப்பெண்ணத்தின் அளவை ஜஸ்டினின் கூற்று காட்டுகிறது: “ஆகவே நானும்கூட நான் பெயர் குறிப்பிட்டிருக்கும் அந்தச் சிலரோ அல்லது ஒருவேளை ஆர்ப்பாட்டத்திலும் தற்புகழ்ச்சியிலும் பிரியப்படும் க்ரசென்ஸ்களோ எனக்கு எதிராக சூழ்ச்சி செய்து என்னை கழுமரத்தில் அறைவார்கள் என எதிர்பார்க்கிறேன். பொது மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்களைப் பிரியப்படுத்தவும் வேண்டி கிறிஸ்தவர்கள் நாத்தீகர்களும் கடவுள் பற்றில்லாதவர்களுமாக இருப்பதாகச் சொல்லி, அவர்தானே புரிந்துகொள்ளாத விஷயங்களில் நமக்கு எதிராக பகிரங்கமாக சாட்சி கொடுக்கும் அவர் தத்துவஞானி என்ற பெயருக்கு தகுதியுள்ளவர் அல்ல. ஏனென்றால், கிறிஸ்துவின் போதனைகளை வாசிக்காமலே நம்மை அவர் தாக்குவாரேயானால், அவர் முற்றிலும் சீர்கெட்டவராகவும் தாங்கள் புரிந்துகொள்ளாத விஷயங்களைப் பற்றி கலந்து பேசுவதிலிருந்தோ சாட்சி கொடுப்பதிலிருந்தோ அநேகமாக விலகியிருக்கும் படிப்பறிவில்லாதவர்களைவிட மோசமானவராகவும் இருக்கிறார்.”
அவருடைய மரணம்
க்ரசென்ஸ்களோ அல்லது மற்ற வெறுப்பு வேதாந்திகளின் செயலினாலோ ஜஸ்டின் ரோம ஆட்சியை கவிழ்க்கிறவராக கண்டனம் செய்யப்பட்டு மரண தீர்ப்பளிக்கப்பட்டார். சுமார் பொ.ச. 165-ல் ரோமில் அவர் தலை வெட்டப்பட்டு அவர் ஓர் “இரத்தசாட்சி” (“சாட்சி” என்று பொருள்) ஆனார். ஆகவே அவர் ஜஸ்டின் மார்டிர் என அழைக்கப்படுகிறார்.
ஜஸ்டினின் எழுத்து நடையில் அவருடைய நாளிலிருந்த மற்ற கல்வி பயின்ற மனிதர்களின் மெருகும் சாதுரியமும் குறைவுபடலாம், ஆனால் சத்தியத்துக்கும் நீதிக்குமான அவருடைய வைராக்கியம் தெளிவாகவே உண்மையாக இருந்தது. எந்த அளவுக்கு வேதாகமம் மற்றும் இயேசுவின் போதனைகளுக்கு இசைவாக அவர் வாழ்ந்தார் என்பது நிச்சயமாக சொல்லப்பட முடியாது. என்றபோதிலும், ஜஸ்டினின் இலக்கிய படைப்புகள் சரித்திர பொருளடக்கத்துக்காகவும் அநேக வேதாகம குறிப்புரைகளுக்காகவும் உயர்வாக மதிக்கப்படுகின்றன. அவை இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்துவர்களென உரிமைப்பாராட்டிக் கொண்டவர்களுடைய வாழ்க்கை மற்றும் அனுபவங்களைப் பற்றிய உட்பார்வையை அளிக்கின்றன.
கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட துன்புறுத்தல் அநீதியானது என்பதை பேரரசர்களுக்கு காண்பிக்க ஜஸ்டின் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கதாகும். கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவின் சார்பாக அவர் புறமதத்தையும் தத்துவஞானத்தையும் நிராகரித்தது ஆதென்ஸில் அப்போஸ்தலனாகிய பவுல் எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளிடம் மெய்க்கடவுளைப் பற்றியும் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் தைரியமாக பேசியதை நமக்கு நினைப்பூட்டுகிறது.—அப்போஸ்தலர் 17:18-34.
ஆயிரம் வருட ஆட்சியில் உயிர்த்தெழுதலைப் பற்றி ஜஸ்டின் தானே ஓரளவு அறிந்தவராக இருந்தார். பைபிளின் உண்மையான உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வளவு விசுவாசத்தை பலப்படுத்துவதாக இருக்கிறது! அது துன்புறுத்தலின் போது கிறிஸ்தவர்களை தாங்கியிருக்கிறது, மரணம் வரையாகவும்கூட பெரும் சோதனைகளை சகித்திருக்க அவர்களுக்கு உதவியிருக்கிறது.—யோவான் 5:28, 29; 1 கொரிந்தியர் 15:16-19; வெளிப்படுத்துதல் 2:10; 20:4, 12, 13; 21:2-4.
ஆகவே ஜஸ்டின் சத்தியத்தை நாடி கிரேக்க தத்துவத்தை நிராகரித்துவிட்டார். வாதம் செய்து சொந்த மதத்தை ஆதரித்து எழுதுபவராக, கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்டவர்களின் போதனைகளுக்கும் பழக்கங்களுக்கும் விளக்கமளித்தார். அவர் தானே தன்னை கிறிஸ்தவத்தைச் சேர்ந்தவரென சொல்லிக்கொண்டதற்காக, உயிர்த்தியாகத்தை ஏற்றுக்கொண்டார். விசேஷமாக குறிப்பிடத்தக்கதாக இருப்பது, துன்புறுத்தலை எதிர்ப்படுகிற போதிலும் ஜஸ்டினுடைய சத்தியத்துக்கான போற்றுதலும் தைரியமான சாட்சி கொடுத்தலுமே ஆகும். ஏனென்றால், இந்தக் குணாதிசயங்கள் இயேசுவை இன்று உண்மையாகப் பின்பற்றுகிறவர்களின் வாழ்க்கையில் காணப்படுகின்றன.—நீதிமொழிகள் 2:4-6; யோவான் 10:1-4; அப்போஸ்தலர் 4:29; 3 யோவான் 4. (w92 3/15)