கிலியட் பட்டதாரிகள் மிஷனரி ஊழிய வெகுமதியை ஏற்றுக்கொள்கின்றனர்
மார்ச் 1, 1992-ல், 92-வது காவற்கோபுர கிலியட் பைபிள் பள்ளியின் பட்டத் தகுதிப் பெற்ற 22 அங்கத்தினர்கள் ஒரு வெகுமதியை ஏற்றுக் கொண்டனர்—மிஷனரி ஊழிய வெகுமதி. ஆளும் குழுவைச் சேர்ந்த லாய்ட் பேரி என்பவர் வகுப்பிலுள்ளோர்களை நோக்கி உரையாற்றிய போது இவ்வாறு குறிப்பிட்டார்: “அந்த அற்புதமான வெகுமதியை பெரும் மகிழ்ச்சியோடு நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு சந்தோஷத்தை கொண்டு வருவதற்கு நீங்கள் அதை பயன்படுத்துங்கள்.”
பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களும், அழைப்பு கொடுத்து வந்திருந்த 4,662 விருந்தினர்களும் பட்டமளிப்பு நிகழ்ச்சிக்காக நியு ஜெர்சியில் உள்ள ஜெர்சி நகர மாநாட்டு மன்றத்தில் ஒன்று கூடினர். நியூ யார்க்-ல் உள்ள புரூக்லின், வால்க்கில், பேட்டர்சன் ஆகிய இடங்களில் இருக்கும் காவற்கோபுர சங்கத்தின் வசதிகளில் 970 பேர் தொலைபேசி மூலம் இணைக்கப்பட்டனர். மிஷனரி ஊழிய வெகுமதியின் மதிப்பை உயர்வாகக் கருதுவதற்கும், அதை ஞானமாக உபயோகிப்பதற்கும் அவர்களுக்கு உதவியாயிருக்கும் பிரிவுரை புத்திமதி பட்டதாரிகளுக்கு கொடுக்கப்பட்ட போது அனைவரும் கவனமாக செவிகொடுத்துக் கேட்டனர்.
“ஒருவரையொருவர் வரவேற்பு செய்யுங்கள்!” என்ற 155-ஆம் பாட்டை ஆர்வத்தோடு பாடிய பின் நிகழ்ச்சி நிரல் ஆரம்பமானது. அதற்குப் பிறகு கிலியட் பள்ளியின் தலைவரான 98-வயது பிரெட்ரிக் W. ஃபிரான்ஸ் இருதயப்பூர்வமான ஜெபத்தை உருக்கமாய் ஏறெடுத்தார். பின்னர், அக்கிராசினர், ஆளும் குழுவைச் சேர்ந்த கேரி பார்பர் பட்டமளிப்பு விழாவுக்கு அனைவரையும் வரவேற்று இவ்வாறு சொன்னார்: “கிலியட் மிஷனரிகளுக்கான பெரும் தேவை இன்று இருப்பது போல் எப்போதும் இருந்ததில்லை.” அவருடைய குறிப்புகளைத் தொடர்ந்து, பயனளிக்கும் சிறு தொடர் பேச்சுகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
பெத்தேல் வீட்டு குழுவைச் சேர்ந்த கெர்ட்டிஸ் ஜான்சன் என்பவர் முதலில் பேசினார். “உங்களுடைய தோட்டத்தை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்ற பொருளின் பேரில் பேசினார். இந்தப் புதிய மிஷனரிகள் தங்கள் பிராந்தியத்துக்குச் சென்ற பின்னர், ஒவ்வொருவருக்கும் பண்படுத்துவதற்கு ஓர் ஆவிக்குரிய தோட்டம் இருக்கும். (1 கொரிந்தியர் 3:9) உலகமுழுவதிலும் இருக்கும் யெகோவாவின் ஜனங்கள் எல்லா தேசங்களுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் விளைவிக்கும் ஆவிக்குரிய தோட்டமாக இருக்கின்றனர். (ஏசாயா 61:11) ‘எதிர்காலத்தில் உங்களுடைய ஆவிக்குரிய தோட்டத்தை நீங்கள் எவ்வாறு கவனித்துக் கொள்வீர்கள் என்பது உங்களுடைய மிஷனரி ஊழியத்தில் நீங்கள் காணும் வெற்றியை முக்கியமாக பாதிக்கும்,’ என்று பேச்சாளர் அழுத்திக் காண்பித்தார். அவர்களுடைய ஆவிக்குரிய தோட்டத்தை நன்றாக கவனித்துக் கொள்வதற்கு எது அவர்களுக்கு உதவி செய்யும்? ‘உங்களுடைய ஆவிக்குரிய தோட்டத்தைச் சுற்றி யெகோவா பாதுகாக்கும் சுவராக இருப்பார். சரியான வேலைகளை விருத்தி செய்வதற்கு நீங்கள் உறுதியாகவும், ஜெபத்தில் அவரோடு நெருக்கமாகவும் இருந்து, பின்பு உங்களுடைய ஜெபங்களுக்கு இசைவாக வேலை செய்தால் யெகோவா உங்களுக்கு அவ்வாறாக இருப்பார்.’
அடுத்து, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்” என்ற பொருளின் பேரில் லாய்ட் பேரி என்பவர் பேசினார். (பிலிப்பியர் 4:4) ஜப்பானில் 25 வருடங்களுக்கும் மேலாக மிஷனரி அனுபவத்தைக் கொண்டிருந்த அவர் மிஷனரி ஊழிய வெகுமதியை அனுபவிப்பதற்கு பட்டதாரிகளுக்கு உதவி செய்ய சில நடைமுறையான ஆலோசனைகளை கொடுத்தார். அவர் குறிப்பிட்டார்: ‘நீங்கள் எதிர்ப்படப் போகும் அநேக அழுத்தங்கள், சில சரீரப்பிரகாரமான பிரச்னைகள் ஆகியவற்றை மேற்கொள்வதற்கு கடவுளுடைய சேவையில் நீங்கள் கொண்டிருக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு உதவி செய்வதாக நீங்கள் காணப் போகிறீர்கள்.’ (நீதிமொழிகள் 17:22) அவர்கள் பழக்கப்பட்டிருந்ததுக்கு முற்றிலும் வித்தியாசமான சூழ்நிலைகளையும், நெருக்கடி நிலைகளையும் அவர்கள் ஒருவேளை எதிர்ப்படலாம் என்று அவர் பட்டதாரிகளுக்கு நினைப்பூட்டினார். அவர்கள் ஒருவேளை ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ‘அந்த மொழியை கற்றுக் கொள்வதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஜனங்களோடு அவர்களுடைய சொந்த மொழியிலேயே தாராளமாக நீங்கள் பேச முடிந்தால், இதுவும் கூட உங்களுடைய மகிழ்ச்சியோடு அதிகத்தைக் கூட்டும்.’
“உங்களுடைய கண்களை பரிசின் மீது வையுங்கள்” என்ற பொருளின் பேரில் அச்சாலைக் குழுவைச் சேர்ந்த எல்டர் டிம் என்பவர் அடுத்ததாக பேசினார். அந்தப் பரிசு என்ன? நித்திய ஜீவன்! அதை பெற்றுக் கொள்வதற்கு நாம் நம்முடைய கண்களை அதன் மீது ஒருமுகப்படுத்த வேண்டும். ஜீவனுக்கான ஓட்டத்தில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும், முதல் நூற்றாண்டு உடற்பயிற்சிப் போட்டிகளில் ஓடியவர்களுக்கும் இருந்த சில வித்தியாசங்களையும், ஒத்த தன்மைகளையும் பேச்சாளர் கலந்தாலோசித்தார். ஓடுபவர்களைப் போன்று கிறிஸ்தவர்கள் சுறுசுறுப்பாக பயிற்சி செய்ய வேண்டும். விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். பெரும் பளுவான பாரத்தை தங்களிடமிருந்து களைந்து விட வேண்டும். வாழ்நாட்கால முழுவதும் ஓட வேண்டிய ஓட்டத்தில் கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். என்றென்றுமாக நிலைத்திருக்கும் ஒரு பரிசை நாடிச் செல்கின்றனர். ஆனால் இது சொல்லர்த்தமாக ஓடுபவர்கள் விஷயத்தில் இவ்வாறு இல்லை. அதில் ஒருவர்தான் வெற்றி பெறுகிறார். ஆனால் ஜீவனுக்கான ஓட்டத்தில் கடைசி வரை ஓடுபவர்கள் எல்லாரும் பரிசை பெற்றுக் கொள்வார்கள். ‘ஜீவ பரிசை பெற்றுக் கொள்வதற்கு, நாம் யெகோவாவோடு சமாதானமாக இருக்க வேண்டும். யெகோவாவோடு சமாதானமாக இருப்பதற்கு, நாம் நம்முடைய சகோதரர்களோடு சமாதானமாயிருக்க வேண்டும்,’ என்று டிம் முடிவாகச் சொன்னார்.
“தேவவசனத்தினால் உண்டாகும் ஆறுதலினால் நாம் நம்பிக்கை பெற்றிருக்கிறோம்” என்ற பொருளின் பேரில் ஆளும் குழுவைச் சேர்ந்த மில்டன் ஹென்ஷெல் என்பவர் அடுத்ததாக பேசினார். (ரோமர் 15:4) ‘கடந்த ஐந்து மாதங்களாக நீங்கள் பைபிளை படிப்பதில் அதிக சுறுசுறுப்பாய் இருந்தீர்கள்’ என்று அவர் ஆரம்பித்தார். ‘மிகப் பெரிய நெருக்கம் வளர்க்கப்பட்டிருக்கிறது. நீங்கள் பலமான நம்பிக்கையை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களுடைய பிராந்தியங்களுக்குச் செல்கையில், உங்களுடைய நம்பிக்கை ஏன் அவ்வளவு பலமாக இருக்கிறது என்பதை தயவுசெய்து நினைவுபடுத்திப் பாருங்கள். அது ஏனென்றால் வேதாகமத்துடன் வெகு நெருக்கமாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்.’ நம்பிக்கையைத் தூண்டும் ஒரு பைபிள் பதிவை உதாரணமாக காண்பிப்பதற்கு பேச்சாளர் நியாயாதிபதிகள் 6-8 அதிகாரங்களை குறிப்பிட்டுப் பேசினார். மீதியானிய ஒடுக்குதலிலிருந்து இஸ்ரவேலை மீட்டுக் கொள்ள கிதியோன் எவ்வாறு பொறுப்பு அளிக்கப்பட்டார் என்பதை அது விவரமாக சொல்கிறது. அந்தப் பதிவையும், நம்முடைய நாளுக்கான அதன் முக்கியத்துவத்தையும் கலந்தாலோசித்த பிறகு அவர் இவ்வாறு சொன்னார்: ‘வேதாகமத்தினிடமாக நெருங்கி வருவதற்கும், இந்தக் காரியங்களை பற்றி சிந்திப்பதற்கும் உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. நீங்கள் தைரியத்தை பெற்றுக் கொள்கிறீர்கள்.’
பள்ளியின் இரண்டு முக்கிய போதனையாளர்கள் மாணாக்கர்களுக்கு என்ன புத்திமதி கொடுக்கப் போகிறார்கள் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலாய் இருந்தனர். “சரியான காரியத்தைச் செய்யுங்கள்” என்ற பொருளின் பேரில் ஜாக் ரெட்போர்ட் என்பவர் முதலாவது பேசினார். அவர் பட்டதாரிகளுக்கு பின்வரும் விஷயங்களை நினைப்பூட்டினார்: ‘வேதாகமத்தின்படி எது சரி என்பதைப் பற்றி கிலியட் பள்ளியில் நீங்கள் முழுமையாக பயிற்றுவிக்கப்பட்டீர்கள். இப்போது நீங்கள் சவால் மிகுந்த மிஷனரி பிராந்தியங்களுக்கு செல்கிறீர்கள். கடினமான பிரச்னைகளை நீங்கள் எதிர்ப்படுவீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இதன் மத்தியிலும், உங்களுடைய சொந்த உணர்ச்சிகள் மத்தியிலும் நீங்கள் சரியான காரியத்தை செய்யக்கூடும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.’ எது உதவி செய்யும்? ஒரு காரியம், மற்றவர்களைக் குறித்து சரியான நோக்குநிலை. ‘அபூரணத்திலிருந்து பரிபூரணத்தை எதிர்பார்க்காதீர்கள்’ என்று பேச்சாளர் கூறினார். சோதனையான சூழ்நிலைமைகளைக் குறித்து சரியான நோக்குநிலையைக் கொண்டிருப்பதும்கூட உதவியளிக்கக்கூடும். ‘நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டார். ‘ஏற்றங்களை எல்லாருமே கையாள முடியும். தாழ்வுகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள் என்பது மிஷனரி சேவையில் நீங்கள் சகித்திருப்பீர்களா என்பதை தீர்மானிக்கும்.’—யாக்கோபு 1:2-4.
பள்ளியின் பதிவாளரான யுலிசெஸ் க்லாஸ் என்பவர் “எதிர்காலத்துக்கு என்ன நம்பிக்கை?” என்ற பொருளை தேர்ந்தெடுத்தார். பட்டதாரிகள் தங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பிரகாசமாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும் என்று அவர் தகப்பனைப் போன்ற தொனியில் உற்சாகப்படுத்தினார். (நீதிமொழிகள் 13:12) ‘நம்பிக்கையை இழந்து போக ஆரம்பமாவது முதலில் தெரிவதில்லை’ என்று அவர் விளக்கினார். ‘கடவுளோடு நம்முடைய உறவுக்குப் பதிலாக, நம்முடைய விவகாரங்களிலேயே நம் மனதை முற்றிலுமாக ஈடுபடுத்திக் கொள்ளும்படி சூழ்நிலைமைகள் செய்விக்கக்கூடும். நாம் வியாதியடையலாம். அல்லது மற்றவர்கள் நம்மை மோசமாக நடத்துகிறார்கள் என்பதாக நாம் உணரலாம். சிலருக்கு நம்மைக் காட்டிலும் அதிகமான பொருள் உடைமைகள் இருக்கலாம். அல்லது சிலர் ஊழியத்தில் மேலான பலன்களை பெறலாம். அதன் காரணமாக நாம் பொறாமை கொள்ளலாம். நம்முடைய சிந்தனையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் மேலோங்கியிருக்க நாம் அனுமதிப்போமேயானால், ராஜ்ய நம்பிக்கையின் மெய்ம்மை நம்முடைய இருதயத்திலும் மனதிலுமிருந்து மறைந்து விடும். ஜீவனுக்கான ஓட்டத்தில் சகித்திருப்பதை நாம் நிறுத்திவிடவும்கூடும்.’ என்ன செய்யப்படலாம்? ‘நம்முடைய நம்பிக்கையை நாம் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள உடன்பாடான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடவுளுடைய நிச்சயமான வாக்குகளால் நம்முடைய இருதயங்களையும் மனங்களையும் நாம் நிரப்ப வேண்டும். கடவுளுடைய ராஜ்யத்தின் மெய்ம்மையினிடமாக நம்முடைய முழு கவனத்தைத் திருப்ப வேண்டும். யெகோவாவோடு நம்முடைய பேச்சுத் தொடர்பை மீண்டும் நிலைநாட்ட வேண்டும். இது நிச்சயமாகவே சந்தோஷத்துக்கு வழிநடத்தும்.’
ஆளும் குழுவைச் சேர்ந்த கார்ல் க்லின் என்பவர் பட்டமளிப்பு பேச்சை கொடுத்தார். “ஏன் தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?” என்ற பொருளின் பேரில் பேசினார். அந்தக் கேள்விக்கு என்ன பதில்? ‘ஏனென்றால் அதுதான் செய்வதற்கு சரியான காரியம். நியாயமான காரியம். ஞானமான காரியம். அன்பான காரியம்,’ என்று அவர் தன்னுடைய ஆரம்ப வார்த்தைகளில் விளக்கினார். நாம் பார்த்து பின்பற்றத்தக்க மனத்தாழ்மையின் நான்கு உதாரணங்களை அவர் கலந்தாலோசித்த போது சபையாரின் ஆவலைத் தூண்டினார்: (1) ஆபிரகாமோடும் மோசேயோடும் கொண்டிருந்த செயல்தொடர்புகளில் யெகோவா தேவன் நிச்சயமாகவே மனத்தாழ்மையோடு இருந்தார் (ஆதியாகமம் 18:22-33; எண்ணாகமம் 14:11-21; எபேசியர் 5:1); (2) இயேசு கிறிஸ்து ‘சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத் தாமே தாழ்த்தினார்’ (பிலிப்பியர் 2:5-8; 1 பேதுரு 2:21); (3) அப்போஸ்தலனாகிய பவுல் ‘வெகு மனத்தாழ்மையோடு கர்த்தரைச் சேவித்தார்’ (அப்போஸ்தலர் 20:18,19; 1 கொரிந்தியர் 11:1); (4) சங்கத்தின் முதல் தலைவரான சகோதரர் ரஸல் போன்று ‘நம்மில் தலைமை தாங்கி வழிநடத்துபவர்கள்.’ அவர் ஒரு சமயம் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய தாழ்மையான திறமைகளை உபயோகிக்க கர்த்தர் மகிழ்ச்சி கொண்ட வேலையில் பெரும் பகுதி ஏற்கெனவே உள்ளதை சீரமைத்தலும், ஒழுங்குபடுத்தலும், ஐக்கியப்படுத்தலும் தான். நாமே ஆரம்பித்து வைத்தவை வெகு கொஞ்சமே.” (எபிரெயர் 13:7) தாழ்மையாய் இருக்க வேண்டியிருப்பதற்கான கூடுதலான பலமான காரணங்களை சகோதரர் க்லின் சுருக்கமாக கூறினார். தாழ்மையாய் இருக்க வேண்டும் என்ற புத்திமதிக்குச் செவிகொடுப்பது மிஷனரி ஊழிய வெகுமதியை ஞானமாக உபயோகிக்க பட்டதாரிகளுக்கு உதவி செய்யும்!
அந்தக் குறிப்புகளை பின்தொடர்ந்து, பூமியின் பல பாகங்களிலிருந்து பெற்றுக் கொண்ட வாழ்த்துக்களை அக்கிராசினர் பகிர்ந்து கொண்டார். பட்டதாரிகள் தங்கள் பட்டச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கான நேரம் இப்போது வந்தது. அவர்கள் ஏழு தேசங்களிலிருந்து வந்திருந்தனர்—கானடா, பின்லாந்து, ஃபிரான்சு, மொரிஷியஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், ஐக்கிய மாகாணங்கள். ஆனால் அவர்களுடைய மிஷனரி பிராந்தியங்கள் அவர்களை 11 தேசங்களுக்கு கொண்டு செல்கின்றன—பொலிவியா, எஸ்டோனியா, க்ரெனடா, குவாட்டமாலா, ஹான்டுரஸ், ஹங்கேரி, மொரிஷியஸ், பெரு, டோகோ, துருக்கி, வெனிசுவேலா.
இடைவேளைக்குப் பிறகு, ஊழிய இலாகா குழுவைச் சேர்ந்த ஜோயல் ஆடம்ஸ் என்பவர் காவற்கோபுரம் படிப்பை சுருக்கமாக நடத்தியதோடு பிற்பகல் நிகழ்ச்சி நிரல் ஆரம்பமானது. அதற்கு பிறகு, பள்ளி காலப்பகுதியின் போது அவர்கள் அனுபவித்த வெளி-ஊழிய அனுபவங்கள் சிலவற்றை பட்டதாரிகள் நடித்துக் காட்டினர். இறுதியில், தேவராஜ்ய ஏற்பாடுகளை ஏன் மதிக்க வேண்டும்? என்ற நாடகம் பட்டதாரிகள் உட்பட முழு சபையாருக்கும் போதனையாக அளிக்கப்பட்டது.
உண்மையிலேயே, இந்தப் பட்டதாரிகள் புத்திமதியோடும், உற்சாகத்தோடும் தங்கள் அயல்நாட்டு ஊழிய பிராந்தியங்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். மிஷனரி ஊழிய வெகுமதியை உபயோகித்து தங்களுக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொண்டு வரும்படி செய்ய அது அவர்களுக்கு உதவும்.
[பக்கம் 22-ன் அட்டவணை]
வகுப்பு புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 7
அவர்கள் அனுப்பப்பட்ட தேசங்களின் எண்ணிக்கை: 11
மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை: 22
சராசரி வயது: 33.4
சத்தியத்தில் சராசரி வருடங்கள்: 16.7
முழு-நேர ஊழியத்தில் சராசரி வருடங்கள்: 11.8
[பக்கம் 23-ன் படம்]
உவாட்ச் டவர் கிலியட் பள்ளியின் பட்டம் பெறும் 92-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல், முன்வரிசையிலிருந்து ஆரம்பித்து பின்வரிசை வரை கொடுக்கப்பட்டுள்ளது. பெயர்கள் இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் நோக்கி ஒவ்வொரு வரிசைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
(1) சான் சென் வா, M.; புஅன்ஷோ, N.; சாப்மான், B.; எஸ்ட்பெரி, A.; கோல், L.; ஜாக்சன், K.; மெர்விக், A. (2) ஸ்மித், J.; வோலன், K.; சாப்மன், R.; கேபர், N.; சான் சென் வா, J.; ஸ்மித், C.; எட்விக், L. (3) புஅன்ஷோ, E.; எஸ்ட்பெரி, S.; கோல், K.; ஜாக்சன், R.; கேபர், S.; எட்வெக், V.; மெர்விக், R.; வோலன், G.