உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை வெறுத்தொழித்து, ராஜ்ய உண்மைகளை நாடித்தொடருங்கள்
“அப்படியானால், முதலாவது ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள், இந்த மற்றக் காரியங்கள் எல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:33, NW.
1. அடையாளக் குறிப்பான இருதயத்தைப் பற்றி என்ன எச்சரிக்கையைக் கடவுளுடைய வார்த்தை கொடுக்கிறது, அது நம்மை வஞ்சிக்கும் முக்கிய வழிகளில் ஒன்று என்ன?
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” (நீதிமொழிகள் 4:23) ஞானமுள்ள அரசனான சாலொமோன் இந்த எச்சரிக்கை கொடுப்பது ஏன் தேவைப்பட்டது? ஏனெனில் “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” (எரேமியா 17:9) நம்முடைய அடையாளக்குறிப்பான இருதயம் நம்மை வஞ்சிக்கக்கூடிய முக்கிய வழிகளில் ஒன்று, உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளில் மனம்போனபோக்கில் சென்றுகொண்டிருக்கும்படி நம்மைச் செய்விப்பதாகும். ஆனால் மனக்கற்பனைகள் என்றாலென்ன? அவை உண்மையல்லாத கற்பனைகள், பகற்கனாக்கள், மனம் சோம்பித்திரிதலாகும். இந்தப் பகற்கனாக்கள் உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளாகையில், அவை வெறுமென நேரத்தை வீணாக்குவதுமட்டுமல்லாமல் வெகுவாய்த் தீங்கு செய்பவையாயும் இருக்கின்றன. ஆகவே, நாம் இவற்றை முற்றிலும் வெறுத்தொழிக்க வேண்டும். உண்மையில், இயேசு செய்ததுபோல், நாம் அக்கிரமத்தை வெறுத்தால், உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளில் மூழ்குவதற்கெதிராக நம்முடைய இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்வோம்.—எபிரெயர் 1:8, 9.
2. உலகப்பிரகாரமான மனக்கற்பனைகள் யாவை, நாம் ஏன் அவற்றை வெறுத்தொழிக்க வேண்டும்?
2 ஆனால் உலகப்பிரகாரமான மனக்கற்பனைகள் யாவை? அவை சாத்தானின் அதிகாரத்தில் கிடக்கும் இந்த உலகத்துக்குரிய இயல்பான கற்பனை கனாக்களாகும். இதைக் குறித்து, அப்போஸ்தலன் யோவான் பின்வருமாறு எழுதினார்: “மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” (1 யோவான் 2:16; 5:19) கிறிஸ்தவர்கள் ஏன் உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை வெறுத்தொழிக்க வேண்டும்? ஏனெனில் அத்தகைய மனக்கற்பனைகள் மனதிலும் இருதயத்திலும் தன்னல ஆசைகளைக் கிளறிவிடுகின்றன. தவறானதைச் செய்வதைப்பற்றி மனக்கற்பனையில் ஈடுபடுவது ஒருவன் உண்மையில் செய்யப்போவதை மனதில் ஒத்திகை நடத்திக் காணுதலாக இருக்கலாம். சீஷன் யாக்கோபு பின்வருமாறு நம்மை எச்சரிக்கிறார்: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15.
எச்சரிக்கைக்குரிய முன்மாதிரிகள்
3. தன்னல மனக்கற்பனைகளின் தீங்குள்ள தன்மைக்கு முதன்மையான எச்சரிப்பு முன்மாதிரியை யாருடைய காரியம் அளிக்கிறது?
3 உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை ஏன் வெறுத்தொழிக்க வேண்டுமெனக் காட்டும் முன்மாதிரிகளை நாம் ஆழ்ந்து கவனிக்கலாம். தன்னல மனக்கற்பனைகளில் மனம்போனபோக்கில் செல்வதினால் உண்டாகக்கூடிய தீங்குக்கு, பிசாசான சாத்தானின் காரியம் முதன்மையான முன்மாதிரியை அளிக்கிறது. தற்செருக்கான உணர்ச்சிகள் தன் இருதயத்தில் அவ்வளவு தீவிரமாக வளர அவன் இடமளித்ததால், சர்வலோகப் பேரரசராக இருக்கும் யெகோவாவின் ஈடற்ற ஸ்தானத்தில் அவன் பொறாமைகொண்டு, தான் வணங்கப்படும்படி விரும்பினான். (லூக்கா 4:5-8) மெய்ம்மைக்கு மாறான மனக்கற்பனையா? நிச்சயமாகவே அவ்வாறிருந்தது! சாத்தான் ஆயிர ஆண்டுகளுக்குக் கட்டப்பட்டு வைக்கப்படுகையில் முக்கியமாய் அவன் இரண்டாம் மரணமாகிய “அக்கினிக்கடலு”க்குள் தள்ளப்படுகையில், இது யாதொரு சந்தேகத்துக்கும் இடமில்லாமல் நிரூபிக்கப்படும்.—வெளிப்படுத்துதல் 20:1-3, 10.
4. சாத்தான் ஏவாளை எவ்வாறு வஞ்சித்தான்?
4 முதல் மனுஷியான ஏவாளின் காரியத்தில் மற்றொரு எச்சரிக்கையான முன்மாதிரி நமக்கு இருக்கிறது. சாத்தான் தன் பேராசையை நிறைவேற்றிக்கொள்ள முயற்சி செய்து, ஏவாளிடம், விலக்கப்பட்ட கனியை அவள் சாப்பிட்டால் தான் சாகமாட்டாள் ஆனால், நன்மை தீமை அறிந்து, கடவுளைப்போல் இருப்பாளென்ற மனக்கற்பனையை அவன் அவளுடைய மனதில் தோற்றுவிப்பதால் ஏவாளைக் குற்றஞ்செய்யும்படி தூண்டினான். அந்த மனக்கற்பனை மெய்யல்லாததாக, தன்னலமானதாக இருந்ததா? நிச்சயமாகவே அவ்வாறிருந்தது. இதை நாம், யெகோவா நியாயம் விசாரித்து ஏவாளுக்கும் அவளுடைய கணவனுக்கும் கண்டனத் தீர்ப்பளித்ததிலிருந்து, காணமுடிகிறது. இதன் விளைவாக, அவர்கள் தங்களுக்கும் தங்கள் அபூரண சந்ததியார் யாவருக்கும் பரதீஸில் வாழ்வதற்கான உரிமையை இழந்தார்கள்.—ஆதியாகமம் 3:1-19; ரோமர் 5:12.
5. கடவுளுடைய தூதர் குமாரர்கள் சிலரின் வீழ்ச்சியைக் கொண்டுவந்தது எது, அவர்களுக்கு உண்டான விளைவு என்ன?
5 தூதர்களான கடவுளுடைய குமாரர் சிலரின் எச்சரிக்கை முன்மாதிரியும் நமக்கு இருக்கிறது. (ஆதியாகமம் 6:1-4) பரலோகத்தில் யெகோவாவின் முன்னிலையில் தாங்கள் அனுபவித்து மகிழ்ந்த ஆசீர்வாதங்களோடு திருப்தியாயிருப்பதற்கு மாறாக, அவர்கள் பூமியிலுள்ள பெண்களைப்பற்றியும் அவர்களோடு பாலுறவுகள் கொண்டால் எவ்வளவு இன்பமாயிருக்கும் என்பதைப்பற்றியும் மனக்கற்பனைசெய்து காணத் தொடங்கினர். இந்த மனக்கற்பனைகளின்படி அவர்கள் நடந்ததால், இந்தக் கீழ்ப்படியாத தூதர்கள் இப்பொழுது ஆவிக்குரிய இருளாகிய டார்ட்டரஸில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர், இயேசு கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில் தாங்கள் முற்றிலும் அழிக்கப்படுவதையே எதிர்நோக்கியிருக்கின்றனர்.—2 பேதுரு 2:4; யூதா 6; வெளிப்படுத்துதல் 20:10.
உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை வெறுத்தொழித்துவிடுங்கள்
6, 7. பொருட்செல்வங்களைப்பற்றிய உலகப்பிரகாரமான மனக்கற்பனைகள் ஏன் தீங்குண்டாக்குபவையாயும் ஏமாற்றுபவையாயும் இருக்கின்றன?
6 சாத்தான் ஊக்குவித்துள்ள மிகச் சாதாரணமானதும் ஆபத்தானதுமான மனக்கற்பனைகளில் ஒன்றை இப்பொழுது நாம் சிந்திக்கலாம். எல்லா வகையான விளம்பர சாதனங்களின் மூலமும், நாம் உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளில் மனம்போனபோக்கில் மூழ்கும்படி கவர்ந்திழுக்கப்படுகிறோம். இவை அடிக்கடி செல்வத்துக்காக ஏங்கி நாடுவதால் உண்டுபண்ணப்படுகின்றன. செல்வத்தை உடையோராக இருப்பதில்தானே தவறு எதுவும் இல்லை. தெய்வபக்தியுள்ள ஆபிரகாம், யோபு, மற்றும் அரசன் தாவீது மிகுந்த செல்வந்தராயிருந்தனர், ஆனால் அவர்கள் பொருட்செல்வங்களுக்காகத் தீவிர நாட்டம் கொள்ளவில்லை. பொருள் ஏக்க மனக்கற்பனைகள், செல்வத்தை அடையும்படி பல ஆண்டுகளாகக் கடுமையாய் உழைக்கும்படி ஆட்களைத் தூண்டுவிக்கிறது. அத்தகைய மனக்கற்பனைகள், பந்தய குதிரைகளின்பேரில் பணையம் வைப்பது, லாட்டரி சீட்டுகள் வாங்குவது போன்ற சூதாட்டங்களின் எல்லா வகைகளிலும் கட்டுப்பாடற்று ஈடுபடவும் அவர்களைத் தூண்டுவிக்கிறது. செல்வத்தைப்பற்றி எந்தப் போலி நம்பிக்கைகளையும் நாம் மனதில் வைக்காமல் இருப்போமாக. பொருட்செல்வங்கள் பாதுகாப்பைத் தருமென நாம் எண்ணினால், உண்மைப்படியான பின்வரும் இந்த நீதிமொழியைக் கவனியுங்கள்: “கோபாக்கினைநாளில் செல்வம் உதவாமற் போம், நீதியோ மரணத்தினின்று விடுவிக்கும்.” (நீதிமொழிகள் 11:4, தி.மொ.) நிச்சயமாகவே, “மிகுந்த உபத்திரவத்தைத்” தப்பிப்பிழைப்பதற்குப் பொருளாதார செல்வங்கள் பயன்படா.—மத்தேயு 24:21; வெளிப்படுத்துதல் 7:9, 14.
7 பொருட்செல்வங்கள் நம்மை எளிதில் ஏமாற்றமடையச் செய்யக்கூடும். இதனிமித்தமே நமக்குப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் [மனக்கற்பனையில், NW] உயர்ந்த மதில்போலிருக்கும்.” (நீதிமொழிகள் 18:11) ஆம், “அவன் மனக்கற்பனையில்”தான் அவ்வாறிருக்கும், ஏனெனில், பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, அரசியல் கலவரம், அல்லது மரணத்தில் முடிவடையவிருக்கும் நோய் போன்ற கட்டுப்பாட்டுக்குமீறிய மாற்றத்துக்குரிய காலங்களில், பொருட்செல்வம் பாதுகாப்பு அளிக்க முடியாது. பொருட்செல்வங்களில் நம் நம்பிக்கையை வைப்பதன் மூடத்தனத்துக்கு எதிராக இயேசு கிறிஸ்து எச்சரித்தார். (லூக்கா 12:13-21) அப்போஸ்தலன் பவுலின் எச்சரிக்கை வார்த்தைகளும் நமக்கு இருக்கின்றன: “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.”—1 தீமோத்தேயு 6:10.
8. பாலுறவு இயல்பான உலகப்பிரகார மனக்கற்பனைகள் எவ்வளவு பரவலாக உள்ளன, என்ன ஆபத்துகளைக் கொண்டுவருகின்றன?
8 மற்ற மனக்கற்பனைகள் தகாத கள்ளப் பாலுணர்ச்சி சம்பந்தப்பட்டது. பாவ மனித இயல்பு பாலுணர்ச்சி சார்ந்த மனக்கற்பனைகளில் எந்த அளவாக ஆழ்ந்திருக்க விரும்புகிறதென்பதை, குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்குத் திருப்பி பாலுணர்ச்சி சார்ந்த இழிபொருள் செய்திகளுக்குச் செவிகொடுத்துக் கேட்டால் கிடைக்கக்கூடிய இழிவான பேச்சு பொதுமக்கள் விருப்பத்துக்குரியதாக இருப்பதிலிருந்து காணமுடிகிறது. ஐக்கிய மாகாணங்களில், தொலைபேசி இழிபேச்சு சேவை நூற்றுக்கணக்கான கோடி டாலர் வியாபாரமாயுள்ளது. நம் மனம், தகாத பாலுணர்ச்சி காரியங்களில் ஆழ்ந்திருக்க நாம் இடங்கொடுத்தால், தோற்றத்துக்கு மட்டுமே சுத்தமான கிறிஸ்தவர்களாகக் காட்டிக்கொள்ளும் பாசாங்குக்காரராக இருப்போமல்லவா? மேலும் இத்தகைய மனக்கற்பனைகள் ஒழுக்கக்கேடான கள்ளப்புணர்ச்சிகளுக்கு வழிநடத்தலாமல்லவா? இது நடந்திருக்கிறது மற்றும் வேசித்தனம் அல்லது விபசாரக் குற்றம் செய்ததற்காகச் சிலர் கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்படுவதில் முடிவடைந்துமிருக்கிறது. மத்தேயு 5:27, 28-லுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் கருதுகையில், இத்தகைய மனக்கற்பனைகளில் விடாது ஈடுபடும் எல்லாரும் தங்கள் இருதயங்களில் விபசாரக் குற்றஞ்செய்பவர்களாகிறார்கள் அல்லவா?
9. உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளுக்கு எதிராக நம்மை எச்சரிப்பதற்கு என்ன நல்ல அறிவுரைகள் வேத எழுத்துக்களில் அடங்கியிருக்கின்றன?
9 இத்தகைய மனக்கற்பனைகளில் தோய்ந்திருக்கும் நம் பாவ இருதயங்களின் போக்கைத் தடுத்துநிறுத்த, பவுலின் பின்வரும் எச்சரிக்கையை நாம் மனதில் வைக்க வேண்டும்: “அவருடைய [கடவுளுடைய] பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்.” (எபிரெயர் 4:13) நாம் எல்லா சமயங்களிலும் மோசேயைப்போல் இருக்க விரும்பவேண்டும், அவர் “காணமுடியாதவரைக் காண்கிறவன்போல் உறுதியாய்த்” தொடர்ந்தார். (எபிரெயர் 11:27, தி.மொ.) ஆம், உலகப்பிரகாரமான மனக்கற்பனைகள் யெகோவாவுக்குப் பிரியமில்லாதவை, நமக்குத் தீங்குசெய்வதிலேயே முடிவடையுமென்று நாம் விடாமல் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். கடவுளுடைய ஆவியின் கனிகள் எல்லாவற்றையும், முக்கியமாய்த் தன்னடக்கத்தை, நம்மில் வளர்த்துவருவதைப்பற்றி நாம் அக்கறையுடனிருக்க வேண்டும், ஏனெனில் நாம் மாம்சத்துக்கென்று விதைத்தால் மாம்சத்திலிருந்து அழிவை அறுப்போம் என்ற உண்மையைத் தப்பிக்கொள்ள முடியாது.—கலாத்தியர் 5:22, 23; 6:7, 8.
ராஜ்யத்தின் உண்மைகள்
10, 11. (எ) சிருஷ்டிகர் உண்மையில் இருக்கிறாரென என்ன காரியங்கள் நிரூபிக்கின்றன? (பி) பைபிள் உண்மையில் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு என்ன நிரூபணம் உள்ளது? (சி) கடவுளுடைய ராஜ்யத்தின் இந்த அரசர் உண்மையாக இருப்பதைப்பற்றி என்ன அத்தாட்சி உள்ளது?
10 உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை வெறுத்தொழிப்பதற்கு மிகச் சிறந்த வழி ராஜ்ய உண்மைகளை விடாது நாடித்தொடர்ந்து கொண்டிருப்பதேயாகும். கடவுள் உண்டுபண்ணியுள்ள ராஜ்யத்தின் உண்மைகள் உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளுக்கு நேர்மாறாக முனைப்பாய் நிற்கின்றன. கடவுள் இருப்பது உண்மையா? அவர் இருப்பதைப்பற்றி எவ்வித சந்தேகமுமில்லை. காணக்கூடிய சிருஷ்டிப்பு இந்த உண்மைக்குச் சாட்சிபகருகிறது. (ரோமர் 1:20) உவாட்ச் டவர் சொஸையிட்டி பிரசுரித்த, யுகங்களுக்குரிய தெய்வீகத் திட்டம் (The Divine Plan of the Ages) என்ற புத்தகத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்துக்கு முன்னால் சொல்லியிருந்ததைப்பற்றி நாம் நினைப்பூட்டப்படுகிறோம். அது கூறியதாவது: “தொலைநோக்கியைக் கொண்டு, அல்லது தன் சொந்த இயற்கையான கண்ணினால் மாத்திரமே வானத்துக்குள் நோக்கி, அங்கே சிருஷ்டிப்பின் எல்லையற்ற பேரளவை, அதன் சரிசீரமைவை, அழகை, ஒழுங்கை, ஒத்திசைவை மற்றும் பல்வகைமையை காணக்கூடியவனாயிருந்து, எனினும் இவற்றின் சிருஷ்டிகர் ஞானத்திலும் வல்லமையிலும் பேரளவாய்த் தனக்கு மேம்பட்டவரென்பதைச் சந்தேகிக்கிறவன், அல்லது அத்தகைய ஒழுங்கு, ஒரு சிருஷ்டிகர் இல்லாமல் தானாக வந்ததென எண்ணுகிறவன், பைபிள் அவனைக் குறிப்பிடும் சொல்லின்படி, மதிகெட்டவன் என சரியாய்க் கருதுவதற்கேதுவாக, அத்தகைய பேரளவாய்ப் பகுத்தறிவு சக்தியை இழந்துவிட்டிருக்கிறான்.”—சங்கீதம் 14:1.
11 இராஜ்யத்தைப் பற்றிய எல்லாவற்றையும் நாம் பரிசுத்த பைபிளில் கற்றறிகிறோம். பைபிள் உண்மையில் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையா? அதன் ஒத்திசைவு, அதன் விஞ்ஞானப்பூர்வ திருத்தமானத்தன்மை, மற்றும் ஆட்களின் வாழ்க்கையை மாற்றும் அதன் வல்லமையிலிருந்தும் மேலும் முக்கியமாய் அதன் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்களினாலும் காணக்கூடியபடி, மிக நிச்சயமாகவே அவ்வாறு இருக்கிறது.a கடவுளுடைய ராஜ்யத்தின் அரசர், இயேசு கிறிஸ்துவைப் பற்றி என்ன? அவர் உண்மையில் இருந்தாரா? கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களின் சுவிசேஷ விவரப் பதிவுகளும் தேவாவியால் ஏவப்பட்ட நிருபங்களும், இயேசு கிறிஸ்துவின் சரித்திர மெய்ம்மைக்கு சந்தேகத்துக்கிடமில்லாமல் தெளிவான மற்றும் உயிர்ப்புள்ள முறையில் சாட்சிபகருகின்றன. இயேசுவின் சரித்திர மெய்ம்மையைக் குறித்து, யூத வேதத்தின் (டால்முட்) சாட்சியமும் இருக்கிறது, அது அவரை ஓர் ஆளாகக் குறிப்பிடுகிறது. அவ்வாறே பொ.ச. முதல் நூற்றாண்டின் யூத மற்றும் ரோம சரித்திராசிரியர்களும் குறிப்பிடுகின்றனர்.
12, 13. என்ன மெய்யான நிகழ்ச்சிகள் கடவுளுடைய ராஜ்யம் உண்மையாக இருப்பதைப்பற்றி சாட்சி பகருகின்றன?
12 இராஜ்யத்தின் உண்மையைப் பற்றியதுதானே என்ன? முதன்மையான பிரஸ்பிட்டேரியன் சபை உறுப்பினர் ஒருவரின் பின்வரும் குறைதெரிவிப்பில் காட்டப்படுகிறபடி, இதைக் கிறிஸ்தவமண்டலம் பெரும்பாலும் புறக்கணித்துள்ளது: “ஒரு குரு தன் சபையாருக்கு அவர்களுக்கான ராஜ்யத்தின் உண்மையை விளக்க முயற்சி எடுத்ததை நான் செவிகொடுத்துக் கேட்டு நிச்சயமாகவே முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டிருக்கின்றன.” எனினும், ராஜ்யத்தைக் கருவியாகக் கொண்டு யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதே அவருடைய வார்த்தையின் பொருளாயுள்ளது. கடவுள்தாமே பின்வருமாறு கூறி அந்த முதல் ராஜ்ய வாக்கைக் கொடுத்தார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) இந்த ராஜ்யம் இஸ்ரவேல் ஜனத்தால், முக்கியமாய் அரசன் சாலொமோனின் ஆட்சியின்போது முன்குறித்துக்காட்டப்பட்டது. (சங்கீதம் 72) மேலும், ராஜ்யமே இயேசுவின் பிரசங்கத்தின் பொருளாக இருந்தது. (மத்தேயு 4:17) அதை அவர், மத்தேயு 13-ம் அதிகாரத்தில் இருப்பவற்றைப்போன்ற, தம்முடைய உவமைகள் பலவற்றில் முதன்மைப்படுத்திக் காட்டினார். அந்த ராஜ்யத்துக்காக ஜெபிக்கும்படியும் அதை முதலாவதாகத் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும்படியும் அவர் நமக்குக் கூறினார். (மத்தேயு 6:9, 10, 33) உண்மையில், கடவுளுடைய ராஜ்யம், கிறிஸ்தவ கிரேக்க வேத எழுத்துக்களில் கிட்டத்தட்ட 150 தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
13 இந்த ராஜ்யம், வல்லமையும் அதிகாரமுமுடைய உண்மையான அரசாங்கம், நியாயமான எல்லா எதிர்பார்ப்புகளையும் இது நிறைவேற்றும். இது பைபிளில் காணப்படுகிற, ஒரு தொகுப்பு சட்டங்களை உடையது. ராஜ்யம் ஏற்கெனவே பல காரியங்களை உண்மையாகும்படி நிறைவேற்றியிருக்கிறது. இதற்கு உண்மைபற்றுறுதியுள்ள குடிமக்கள் உள்ளனர்—யெகோவாவின் 40,00,000-க்கு மேற்பட்ட சாட்சிகள். மத்தேயு 24:14-ன் நிறைவேற்றமாக, இவர்கள் 211 நாடுகளில் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். இவர்களுடைய 1991-ன் ஊழிய ஆண்டின்போது, அவர்கள் ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதில் 95,18,70,021 மணிநேரங்கள் செலவிட்டனர். பேரெண்ணிக்கையான ஆட்கள் பைபிள் சத்தியத்தின் “சுத்தமான பாஷையைக்” கற்று வருகையில் இந்த நடவடிக்கை தெளிவாகக் கண்டுணரக்கூடிய, நிலையான பலன்களை உண்டுபண்ணுகிறது.—செப்பனியா 3:9.
இராஜ்ய உண்மைகளை நாடித் தொடருதல்
14. ராஜ்யம் உண்மையாக இருப்பதன்பேரில் நம்முடைய மதித்துணர்வை நாம் எவ்வாறு பலப்படுத்தலாம்?
14 அவ்வாறெனில், ராஜ்ய உண்மைகளை நாம் எவ்வாறு நாடித் தொடரலாம்? நம்முடைய நம்பிக்கை உறுதியாய் நிச்சயிக்கப்பட்டதில் திடமாக ஆதாரங்கொண்டிருக்க வேண்டும். கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகம் நமக்கு மெய்ம்மையாக இருக்க வேண்டும். (2 பேதுரு 3:13) கடவுள் நம்முடைய “கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா,” என்ற இந்த வாக்கில் நமக்கு விசுவாசம் இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 21:4, தி.மொ.) இது கற்பனையல்லவென நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்க முடியும்? இது கடவுள் குறித்துள்ள காலத்தில் நிச்சயமாக உண்மையாய் நிறைவேறும், ஏனெனில் அவருக்குப் பொய்யுரைப்பது கூடாதக் காரியம். (தீத்து 1:1, 2; எபிரெயர் 6:18) அந்த வாக்குகளின்பேரில் நாம் ஆழ்ந்து சிந்தனை செய்ய வேண்டும். நம்மைக் கடவுளுடைய புதிய உலகத்தில் அதன் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வோராய்க் காட்சிப்படுத்திப் பார்ப்பது உண்மையற்ற மனக்கற்பனை அல்ல, மாறாக விசுவாசத்தின் அத்தாட்சியைக் கொடுக்கிறது. பவுல் அதை விளக்கினபடி, “விசுவாசம் நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப்பற்றிய தெளிவான மெய்ப்பிப்பு.” (எபிரெயர் 11:1, NW) கடவுளுடைய வார்த்தையையும் அதைப் புரிந்துகொண்டு பொருத்திப் பயன்படுத்த நமக்கு உதவிசெய்யும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் தவறாமல் ஒழுங்காகப் படித்து உட்கொண்டு வருவதால் நாம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவோமாக. ராஜ்யத்தைப்பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்கு, முறைப்படியும் சந்தர்ப்ப தனிமுறையாயும், எவ்வளவு அதிக நேரத்தை நாம் செலவிடுகிறோமோ, அவ்வளவு அதிகமாய் நாம் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தி அதில் நம்முடைய நம்பிக்கையை மேலும் மகிழ்ச்சிமிக்கதாக்குகிறோம்.
15. கிறிஸ்தவ ஊழியத்தைக் குறித்ததில் நமக்கு இருக்கும் கடமை என்ன?
15 மேலும் நம்முடைய ஊழியத்தின் தன்மையை முன்னேற்றுவிப்பதன் மூலமும் நாம் ராஜ்ய உண்மைகளுக்கு ஒத்திசைவாக உழைக்க வேண்டும். அதிகமானவை இன்னும் செய்யப்படவிருப்பதால், இதை நாம் எவ்வாறு செய்ய முடியும்? (மத்தேயு 9:37, 38) கற்பதற்கு ஒருவர் ஒருபோதும் மீறிய முதிர்வயதானவராக இல்லை என்ற பழமொழி உண்மையே. சாட்சி கொடுக்கும் வேலையில் நாம் எத்தனை பல ஆண்டுகள் பங்குகொண்டிருந்தாலும் பரவாயில்லை, நாம் முன்னேற்றஞ்செய்ய முடியும். கடவுளுடைய வார்த்தையைக் கையாளுவதில் நாம் அதிக திறமைவாய்ந்தோராவதனால், அரசர் இயேசு கிறிஸ்துவின் குரலைக் கேட்கும்படி மற்றவர்களுக்கு மேலும் நன்றாய் உதவிசெய்யக் கூடியவர்களாகிறோம். (யோவான் 10:16-ஐ ஒத்துப்பாருங்கள்.) ஆட்களின் நித்திய முடிவுகள் உட்பட்டிருப்பதை நாம் கருதுகையில், அவர்கள் “செம்மறியாடுக”ளாக அல்லது “வெள்ளாடுக”ளாகத் தங்கள் நிலைநிற்கையை மெய்ப்பித்துக் காட்ட மறுபடியும் மறுபடியுமான வாய்ப்பு அவர்களுக்குக் கொடுக்கும்படி, நாம் நம்முடைய பிராந்தியத்தை முழுத்தீர்வாகச் செய்துமுடிக்க விரும்பவேண்டும். (மத்தேயு 25:31-46) நிச்சயமாகவே, இது, வீட்டில் இல்லாதவர்களையும், முக்கியமாய் ராஜ்ய செய்தியில் அக்கறை காட்டினவர்களையும் பற்றி கவனமான பதிவுகள் வைக்க வேண்டுமென பொருள்படுகிறது.
இராஜ்யத்தை விடாது நாடித்தொடருங்கள்
16. ராஜ்ய உண்மைகளை நாடித்தொடருவதில் யார் நல்ல முன்மாதிரியை வைத்திருக்கின்றனர், அவர்கள் எவ்வாறு இந்த ராஜ்யத்தைப் “பற்றிக்கொள்கின்றனர்”?
16 இராஜ்ய உண்மைகளை விடாது நாடித்தொடருவதற்கு ஊக்கமான முயற்சி தேவை. மீந்துள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் ஆர்வமான முன்மாதிரி நம்மை ஊக்குவித்துத் தூண்டுகிறதல்லவா? ராஜ்ய உண்மைகளை அவர்கள் பல பத்தாண்டுகளாக நாடித்தொடர்ந்துகொண்டிருக்கின்றனர். இந்த நாடித்தொடருதல் இயேசுவின் பின்வரும் வார்த்தைகளில் விவரிக்கப்பட்டுள்ளது: “முழுக்காட்டுபவனான யோவானின் நாட்கள் முதற்கொண்டு இதுவரையில் பரலோகங்களின் ராஜ்யமே மனிதர் நோக்கி விரைந்தேகும் இலக்காக உள்ளது, விரைந்து முன்னேகுவோர் அதைப் பற்றிக்கொள்கின்றனர்.” (மத்தேயு 11:12, NW) சத்துருக்கள் ராஜ்யத்தைக் கைப்பற்றும் எண்ணம் இங்கே குறிக்கப்படுகிறதில்லை. மாறாக, இது ராஜ்யத்தை அடையவிருக்கும் போக்கில் இருப்போரின் நடவடிக்கை சம்பந்தப்பட்டது. பைபிள் அறிவாளர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “நெருங்கிவந்துகொண்டிருக்கும் மேசியானிய ராஜ்யத்தை நோக்கி மிக ஆவல்கொண்டு, எதிர்த்துத் தடுக்கமுடியாத கடுமுயற்சி செய்வதும் போராடிக்கொண்டிருப்பதும் இம்முறையில் விவரிக்கப்பட்டுள்ளது.” அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் இந்த ராஜ்யத்தைத் தங்கள் சொந்தமாக்கிக்கொள்வதில் எந்த முயற்சியையும் தவறவிடவில்லை. “மற்றச் செம்மறியாடுக”ளும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் பூமிக்குரிய குடிமக்களாகத் தாங்கள் தகுதிபெற இதைப்போன்ற திட ஊக்கமான முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது.—யோவான் 10:16, NW.
17. உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை நாடித்தொடருவோரின் பங்கு என்னவாக இருக்கும்?
17 மெய்யாகவே, நாம் தனியியல்பான வாய்ப்புக்குரிய காலப்பகுதியில் வாழ்கிறோம். உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளை நாடித்தொடருகிறவர்கள் ஒரு நாள் கடுமையான உண்மைக்கு விழிப்பூட்டப்படுவர். அவர்களுடைய பங்கு பின்வரும் இந்த வார்த்தைகளில் நன்றாய் விவரிக்கப்பட்டுள்ளது: “பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்துத் தவனத்தோடிருக்கிறதுபோலவும் . . . இருக்கும்.” (ஏசாயா 29:8) நிச்சயமாகவே, இந்த உலகத்தின் மனக்கற்பனைகள் எவரையாயினும் ஒருபோதும் திருப்திப்படுத்தவோ சந்தோஷப்படுத்தவோ மாட்டா.
18. ராஜ்யம் உண்மையாயிருப்பதைக் கருதுகையில், நாம் என்ன போக்கைப் பின்தொடர வேண்டும், என்ன எதிர்பார்ப்பை மனதில் கொண்டு?
18 யெகோவாவின் ராஜ்யம் உண்மையானது. அது சுறுசுறுப்பாய்ச் செயற்பட்டு ஆண்டுகொண்டிருக்கிறது, இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையோ அண்மையில் உடனடியாக நிகழவிருக்கும் நிலையான அழிவை எதிர்ப்படுகிறது. ஆகையால், பவுலின் பின்வரும் அறிவுரையை இருதயத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்: “மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.” (1 தெசலோனிக்கேயர் 5:6) நாம் நம்முடைய இருதயத்தையும் மனதையும் ராஜ்ய உண்மைகளின்பேரில் ஒருமிக்க ஊன்றியிருக்கும்படி வைத்து, இவ்வாறு நித்திய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வோமாக. மேலும் அந்த ராஜ்யத்தின் அரசர் நம்மிடம் பின்வருமாறு சொல்வதைக் கேட்பது நம் பங்காக இருப்பதாக: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.”—மத்தேயு 25:34.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த The Bible—God’s Word or Man’s? என்ற புத்தகத்தைப் பாருங்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ உலகப்பிரகாரமான மனக்கற்பனைகள் யாவை, நாம் ஏன் அவற்றை வெறுத்தொழிக்க வேண்டும்?
◻ உலகப்பிரகாரமான மனக்கற்பனைகளில் மனம்போனபோக்கில் ஈடுபடுவதன் மடமையை என்ன முன்மாதிரிகள் காட்டுகின்றன?
◻ சிருஷ்டிகர், அவருடைய எழுதப்பட்ட வார்த்தை, இயேசு கிறிஸ்து, மற்றும் ராஜ்யத்தின் உண்மையை என்ன காரியங்கள் நிரூபிக்கின்றன?
◻ இராஜ்ய உண்மைகளில் நம்முடைய விசுவாசத்தை நாம் எவ்வாறு பலப்படுத்தலாம்?
[பக்கம் 15-ன் படம்]
உலகப்பிரகாரமான மனக்கற்பனைகள் பொருட்செல்வத்துக்காக ஏங்கி நாடுவதால் பெரும்பாலும் உண்டுபண்ணப்படுகின்றன
[பக்கம் 16-ன் படம்]
நற்செய்தியைப் பிரசங்கிப்பது ராஜ்ய உண்மைகளை நாடித்தொடருவதற்கு ஒரு வழி
[பக்கம் 17-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிப்பதால் நீங்கள் ராஜ்ய உண்மைகளை நாடித்தொடருகிறீர்களா?