உலகம் ஏன் பயத்தின் பிடியில் இருக்கிறது?
பயத்தில் வாழ விரும்புவது யார்? சராசரி மனிதன், தன் உயிருக்கோ சொத்துக்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லாத பாதுகாப்பை விரும்புகிறான். எனவேதான், அநேகர் குற்றச்செயலில் அமிழ்ந்துகிடக்கும் பகுதிகளிலிருந்து வெளியேறுகின்றனர். இருந்தாலும், பயத்திற்கான காரணங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன.
அணு ஆயுதங்கள் மற்றும் அணுமின் உலை விபத்துக்களிலிருந்து ஏற்படும் அபாயங்கள், மனிதவர்க்கத்தின் அழிவைப் பற்றிய பயத்தை எழுப்புகின்றன. விரைவாக அதிகரிக்கும் வன்முறை பயத்தை ஏற்படுத்துகிறது. இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சாவுக்கேதுவான கொள்ளைநோய் எய்ட்ஸாக இருக்கும் என்பதாக அநேகர் பயப்படுகின்றனர். நம்முடைய சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதும், பயத்திற்கான மற்ற காரணங்களில் அடங்கும். இந்தப் பயங்கள் விசேஷ முக்கியத்துவம் உடையவையாய் இருக்கின்றனவா? இப்படிப்பட்ட பயம் இல்லாத ஓர் உலகில் எப்போதாவது வாழலாம் என நாம் நம்ப முடியுமா?
உலகளாவிய பயம் முக்கியத்துவமுடையது
பைபிளில் என்ன முன்னுரைக்கப்பட்டிருக்கிறதோ அக்காரணத்தால், இன்றைய மிகப் பரவலான பயம் முக்கியத்துவம் உடையது. கடைசி நாட்களைப் பற்றிய தம்முடைய தீர்க்கதரிசனத்தில், பயத்தை உண்டுபண்ணக்கூடிய நிலைமைகளை இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” ‘அக்கிரமம் மிகுதியாவது’ பற்றியும் இயேசு பேசினார். 1914 முதற்கொண்டு, ஒப்பிடமுடியாத போர்கள், பஞ்சங்கள், பூமியதிர்ச்சிகள், அக்கிரமம் ஆகியவை பேரச்சத்திலும் உயிரிழப்பிலும் விளைவடைந்திருக்கின்றன.—மத்தேயு 24:7-14.
மக்களுடைய மனப்பான்மைகள்கூட இன்று பயத்தை எழுப்புகின்றன. 2 தீமோத்தேயு 3:1-4-ல் நாம் அப்போஸ்தலன் பவுலின் தீர்க்கதரிசன வார்த்தைகளை வாசிக்கிறோம்: “மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், தேவபிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,” இருப்பார்கள். இந்தக் கடைசி நாட்களில் நாம் இப்படிப்பட்ட மக்களால் சூழப்பட்டிருப்பதால், அவ்வளவு பயம் இருப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை!
இந்த உலகம் எதை எதிர்பார்க்க முடியும்
இயேசு இந்தக் காலப்பகுதியை நோவாவின் காலத்திலிருந்த உலகின் கடைசி நாட்களுடன் ஒப்பிட்டார். சந்தேகமின்றி, அப்போது அதிக பயம் இருந்தது; ஏனென்றால் பைபிளின் சரித்திர பதிவு சொல்கிறது: “பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.” எனவே, “தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது.” (ஆதியாகமம் 6:11, 13) அந்தப் பொல்லாத உலகம் அவ்வளவு வன்முறையானதாக இருந்ததால், ஓர் உலகளாவிய ஜலப்பிரளயத்தின் மூலம் கடவுள் அதை முடிவுக்குக் கொண்டுவந்தார். என்றாலும், அன்பின் காரணமாக, யெகோவா தேவன் நீதிமானாகிய நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தார்.—2 பேதுரு 2:5.
அப்படியானால், தற்போதைய வன்முறையான உலகம் எதை எதிர்பார்க்க முடியும்? மற்றவர்களுடைய நலனுக்கு வன்மையான அவமரியாதை காட்டுவதை கடவுள் வெறுக்கிறார். இது சங்கீதக்காரனுடைய வார்த்தைகளிலிருந்து தெளிவாக இருக்கிறது: “கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.” (சங்கீதம் 11:5) நோவாவின் நாளிலிருந்த வன்முறையான உலகிற்கு யெகோவா ஒரு முடிவைக் கொண்டுவந்தார். அப்படியானால், அச்சுறுத்தும் வன்முறையால் பீடிக்கப்பட்ட இந்த உலகிற்கு ஒரு முடிவைக் கடவுள் கொண்டுவரும்படி நாம் எதிர்பார்க்க வேண்டாமா?
கிறிஸ்துவின் வந்திருத்தலைப் பற்றி பேசவும், தற்போதைய பொல்லாத உலகிற்கு பெருந்துன்பத்தைப் பற்றி தீர்க்கதரிசனமுரைக்கவும் அப்போஸ்தலன் பேதுரு கடவுளால் ஏவப்பட்டார். அவர் எழுதினார்: “கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.” பின்னர் பேதுரு, ‘வானங்கள்’ என்ற பதத்தை மனிதவர்க்கத்தின் மீதான அபூரண ஆட்சியின் ஒழுங்குமுறையைக் குறிப்பதற்கும், “பூமி” என்ற வார்த்தையை அநீதியுள்ள மனித சமுதாயத்தைக் குறிப்பதற்கும் பயன்படுத்தினார். அவர் சொன்னார்: “பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது [நோவாவின் நாளில்] இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவ பக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.”—2 பேதுரு 3:3-7.
அதேவிதமான ஒரு நோக்கில், கிறிஸ்துவும் அவருடைய வல்லமையுள்ள தூதர்களும் “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை” கொண்டுவருவார்கள் என்பதாகவும் “அவர்கள் . . . நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்,” என்பதாகவும் பவுல் குறிப்பிட்டார். (2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10) பைபிளின் கடைசி புத்தகம், “தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்கு” தேசங்களைக் கூட்டிச்சேர்ப்பதைப் பற்றி பேசுகிறது. மேலும், யெகோவா ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்றும் நமக்கு உறுதியளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:18; 16:14-16.
சந்தோஷத்திற்கான ஒரு காலம், பயத்திற்கானதல்ல
இந்த உலகிற்காக பைபிள் முன்னறிவிப்பதைக் குறித்து, அச்சுறுத்தப்படுவதற்கு மாறாக, நேர்மையான மக்கள் சந்தோஷப்படுவதற்குக் காரணத்தைக் கொண்டிருக்கின்றனர். விரைவில் யெகோவா இந்தப் பொல்லாத உலகிற்கு முடிவைக் கொண்டுவருவார். ஆனால், இது நீதியை நேசிப்பவர்களின் நன்மைக்காகச் செய்யப்படும். தற்போதைய காரிய ஒழுங்குமுறைக்குக் கடவுளால் வரும் முடிவைப் பின்தொடருவது எது? ஏன், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின்கீழ் ஒரு புதிய ஒழுங்குமுறையே! இதற்காக ஜெபிக்கும்படியே, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்குக் கற்பித்தார். அவர் சொன்னார்: “நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) கடவுளுடைய சித்தம் பூமியில் செய்யப்படும்போது என்ன மாற்றங்களை எதிர்பார்க்க முடியும்?
போர்களும் அதன் பயங்கரங்களும் முடிவுக்கு வந்திருக்கும். சங்கீதம் 46:9 சொல்கிறது: “அவர் [யெகோவா தேவன்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; [போர்] இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.” அப்போது மக்களில் ‘ஒவ்வொருவரும் அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.’—மீகா 4:4.
சாவுக்கேதுவான நோய்கள் இனிமேலும் பயத்தை ஏற்படுத்தி உயிர்களைக் கொள்ளைகொள்வதில்லை. கடவுளுடைய வாக்குறுதி இதுவே: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) சந்தோஷத்திற்கு என்னே ஒரு காரணம்!
குற்றச்செயல் மற்றும் வன்முறையுடன் சம்பந்தப்பட்ட பயங்களும் கடந்தகால காரியங்களாகிவிடும். சங்கீதம் 37:10, 11 வாக்களிக்கிறது: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”
தற்காலத்து பயங்கள் எப்படி மெய் சமாதானத்தாலும் பாதுகாப்பாலும் மாற்றீடு செய்யப்படும்? ஒரு நீதியான அரசாங்கமாகிய கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாகவே. நம்முடைய காலத்தைக் குறித்து, தானியேல் 2:44 குறிப்பிடுகிறது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” யெகோவாவால் நியமிக்கப்பட்ட அரசர் இயேசு கிறிஸ்து, ‘எல்லாச் சத்துருக்களையும் கடவுள் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும் ஆளுகை செய்யவேண்டும்.’ (1 கொரிந்தியர் 15:25) ஒரு பரதீஸான பூமி சந்தோஷமுள்ள மனிதர்களால் என்றென்றுமாக குடியேற்றப்படவேண்டும் என்ற கடவுளுடைய ஆதி நோக்கத்தை இயேசுவின் ஆயிர வருட ஆட்சி நிறைவேற்றும்.—லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 20:6; 21:1-5.
அந்தப் பரதீஸான பூமியில், ஆரோக்கியமான பயம் ஒன்று இருக்கும். அது ‘யெகோவாவுக்கான பயமாக’ இருக்கும். (நீதிமொழிகள் 1:7, NW) உண்மையில், நாம் இப்போதும்கூட இந்தப் பயத்தை உடையவர்களாய் இருக்கவேண்டும். ஏனென்றால், கடவுளுடைய அன்பார்ந்த தயவையும் நற்குணத்தையும் நாம் மதித்துணருவதன் காரணத்தால், அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடக்கூடாது என்ற அச்சவுணர்வுடன் கூடிய ஆழ்ந்த மதிப்பும் பயபக்தியுமாக அது இருக்கிறது. இந்தப் பயம், யெகோவாவில் பற்றுமாறாத நம்பிக்கையையும் அவருக்கு உண்மையுள்ள கீழ்ப்படிதலையும் தேவைப்படுத்துகிறது.—சங்கீதம் 2:11; 115:11.
அச்சுறுத்தும் சம்பவங்கள் இவற்றையே கடைசி நாட்களாக அடையாளப்படுத்துகின்றன. என்றபோதிலும், கடவுளுக்கான நம்முடைய அன்பை நாம் நிரூபித்தால், பயமுள்ளவர்களாய் இருப்பதற்கு மாறாக நாம் களிகூரலாம். இந்த உலகிற்குக் கடவுளால் வரும் முடிவு சமீபத்தில் இருப்பதாக பைபிள் தீர்க்கதரிசனங்கள் காண்பிக்கின்றன. யெகோவா தேவனின் வாக்குப்பண்ணப்பட்ட நீதியான புதிய உலகால் இது மாற்றீடு செய்யப்படும். (2 பேதுரு 3:13) உண்மையாகவே, சீக்கிரத்தில் ஆரோக்கியமற்ற பயமில்லாத ஓர் உலகம் ராஜ்ய ஆட்சியின்கீழ் இருக்கும்.
[பக்கம் 6-ன் பெட்டி]
ஒரேவொரு பிரதியின் வல்லமை
போலாந்தைச் சேர்ந்த டாமாஷ் என்ற ஓர் இளைஞன், சட்டப்பூர்வ தொந்தரவிற்குள் சிக்கிக்கொண்டார். அது அவரை தன்னுடைய நாட்டைவிட்டு தப்பியோட வைத்தது. அவர் ஆறு மாதங்களுக்கு, ஐரோப்பாவினூடே, கடந்துசெல்லும் வாகனங்களில் இலவசப் பயணம் மேற்கொண்டார்; அப்போது ஒரு கூடாரத்தில் தூங்கிக்கொண்டும், பல்வேறு தொழில்களைச் செய்துகொண்டும் இருந்தார். இவற்றிற்கிடையில், ஒரு கேள்வி எப்போதும் அவருடைய மனதில் இருந்தது: வாழ்க்கையின் நோக்கம் என்ன?
டாமாஷுக்கு போலிஷ் மொழியில் காவற்கோபுர பிரதி ஒன்று கொடுக்கப்பட்டபோது, அவருடைய கேள்வி பதிலளிக்கப்பட்டது. அவர் அதைப் பலமுறை வாசித்து, தான் தேடிக்கொண்டிருந்த சத்தியம் இந்தப் பத்திரிகையில் இருந்தது என்பதை உணர்ந்தார். கடந்துசெல்லும் வாகனங்களில் 200 கிலோமீட்டர் இலவசப் பயணம் மேற்கொண்டு, ஜெர்மனியிலுள்ள செல்டர்ஸ்/டெளனுஸிலுள்ள உவாட்ச் டவர் கிளை அலுவலகத்திற்குச் சென்றார். ஒரு திங்கட்கிழமை மாலை அங்குச் சென்றடைந்து, தன் காவற்கோபுர பத்திரிகையை எடுத்து நீட்டி, இவ்வாறு சொன்னார்: “இந்தப் பத்திரிகையில் என்ன இருக்கிறது என்பதைப்பற்றி யாராவது எனக்கு அதிகமாக விளக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் என்ன செய்யவேண்டும்?”
அன்று மாலை, யெகோவாவின் சாட்சிகளில் இருவர், பைபிளைத் தங்கள் உரையாடலின் அடிப்படையாகக் கொண்டு, வாழ்க்கையின் நோக்கத்தைப்பற்றி டாமாஷிடம் பேசினர். இன்னுமதிகத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவராய், டாமாஷ் அந்த வாரத்தில் ஒவ்வொரு நாளும் கிளை அலுவலகத்திற்குத் திரும்பி வந்து, பைபிளையும் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தையும் படித்துக்கொண்டிருந்தார்.
டாமாஷ் போலாந்திற்குத் திரும்பிச் சென்றால் பிரச்சினைகளை எதிர்ப்படுவார் என்றாலும் அங்குத் திரும்பும்படி தீர்மானித்தார். இதனால், வெள்ளிக்கிழமை அன்று, செல்டர்ஸ் கிளை அலுவலகத்திற்கு வந்து நான்கே நாட்களில், டாமாஷ் தன் தாய்நாட்டிற்குப் புறப்பட்டார். உடனடியாக, போலாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் படிக்க ஆரம்பித்தார். டாமாஷ் விரைவான முன்னேற்றத்தைக் காண்பித்து, தான் கற்றுக்கொண்டிருந்தவற்றைப்பற்றி வைராக்கியத்துடன் மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தார். செல்டர்ஸுக்கு முதன்முதல் சென்றதற்குப்பின், நான்கே மாதங்களில், அக்டோபர் 1993-ல் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக முழுக்காட்டப்பட்டார்.
காவற்கோபுரத்தின் ஒரே ஒரு பிரதி இந்த இளைஞனுக்கு வாழ்க்கையின் நோக்கத்தை அலசியாராய உதவியது!
[பக்கம் 7-ன் படம்]
இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சியின்கீழ், இனி ஒருபோதும் உலகம் பயத்தின் பிடியிலிருக்காது