உத்தமத்தைக் காத்து உயிர்வாழுங்கள்!
“தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்”! இந்த வார்த்தைகளைக் கொண்டு யோபைத் தாக்கின அவருடைய மனைவியை நம்முடைய பத்திரிகையின் முன் அட்டை சித்தரித்துக் காட்டுகிறது. அது ஏறக்குறைய 3,600 ஆண்டுகளுக்கு முன்பாகும். எனினும் கடவுளுடைய உண்மையுள்ள ஊழியனின்பேரில் அந்த வாய்மொழி தாக்குதல் இந்நாள்வரையாக மனிதகுலம் எதிர்ப்படுகிற ஒரு விவாதத்தை முனைப்பாய்க் காட்டுகிறது. உண்மையுள்ள யோபு பயங்கர இழப்புகளை—தன் கால்நடைகளை, தன் வீட்டை, தன் பத்துப் பிள்ளைகளை இழப்பதை—அனுபவித்திருந்தார். இப்போது அவருடைய உடல் தீராத ஒரு நோயால் வாதிக்கப்பட்டு, சகிக்கமுடியாத நிலைவரையாக அவரைச் சோதித்தது. காரணம் என்ன? கடும் சோதனையின்கீழ் மனிதன் கடவுளிடமாகத் தன் உத்தமத்தைக் காக்க முடியாது என்ற ஒரு சவாலை, கடவுளுக்கும் மனிதனுக்கும் பெரும் சத்துருவான பிசாசாகிய சாத்தான் நிரூபிக்க முயற்சி செய்துகொண்டிருந்தான்.—யோபு 1:11, 12; 2:4, 5, 9, 10.
இன்று, யோபின் நாளில் இருந்ததுபோல், “உலகனைத்தும் தீயோனின் [பிசாசாகிய சாத்தானின்] பிடியில் இருக்கிறது.” (1 அருளப்பர் 5:19, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) நிச்சயமாகவே, இன்று அது இன்னும் அதிக உண்மையாயிருக்கிறது, ஏனெனில், “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட”வன் பரலோகங்களிலிருந்து கீழே இந்தப் பூமிக்கு இப்போது தள்ளப்பட்டிருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:9) இதுவே நம்முடைய காலத்தில் மனிதகுலத்தைத் தொல்லைப்படுத்தும் கடுமையான ஆபத்துக்களுக்குக் காரணமாயுள்ளது. 1914-ல் திடீரெனத் தொடங்கிய முதல் உலகப் போர், இந்த 20-வது நூற்றாண்டுக்குள் வெகு தொலைவுவரையாகத் தொடர்ந்துகொண்டிருக்கிற ‘வேதனைகளுக்கு ஆரம்பத்தைக்’ குறித்தது.—மத்தேயு 24:7, 8.
இந்தக் கொடூர, இழிந்த உலகத்தில், நீங்கள் மனித சகிப்பின் எல்லையை எட்டிவிட்டதாக என்றாவது உணருகிறீர்களா? ‘வாழ்க்கைக்கு ஏதாவது நோக்கமுள்ளதா?’ என்று நீங்கள் எப்போதாவது சோர்வுற்று சிந்திக்கிறீர்களா? யோபு அவ்வாறு உணர்ந்திருக்கலாம், ஆனால், அவர் தவறுகள் செய்தபோதிலும், கடவுளில் விசுவாசத்தை ஒருபோதும் இழக்கவில்லை. தன் திடத்தீர்மானத்தை இந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தினார்: “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.” கடவுள், ‘தன் உத்தமத்தை அறிந்துகொள்வார்’ என்ற திடநம்பிக்கை அவருக்கு இருந்தது.—யோபு 27:5; 31:6.
கடவுளுடைய சொந்த குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுங்கூட, இங்கே பூமியில் இருந்தபோது கடும் துன்பங்களைச் சகிக்க வேண்டியிருந்தது. இயேசுவைப் பல்வேறு வழிகளில் சாத்தான் தாக்கினான். மலையில் சோதிக்கையில் செய்ததுபோல், அவன் இயேசுவின் உடல்சம்பந்தமானத் தேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவரைச் சோதித்தான், மேலும், கடவுளுடைய வார்த்தையில் அவருடைய நம்பிக்கையைச் சோதித்தான். (மத்தேயு 4:1-11) விசுவாசதுரோக வேதபாரகரும் பரிசேயரும் இவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்களும் அவரைத் துன்புறுத்தும்படியும், தேவதூஷணம் செய்ததாக அவரைக் குற்றம் சாட்டும்படியும், அவரைக் கொல்லச் சதிசெய்யும்படியும் செய்விப்பதன்மூலம் அவன் இயேசுவை அலைக்கழித்தான். (லூக்கா 5:21; யோவான் 5:16-18; 10:36-39; 11:57) யோபுக்கு ஆறுதலளிப்பதாகப் பாசாங்குசெய்த அந்த மூவரைப் பார்க்கிலும் இவர்கள் இயேசுவை மிக மோசமாய் நடத்தினார்கள்.—யோபு 16:2; 19:1, 2.
கெத்செமனே தோட்டத்தில் இந்தச் சோதனையின் உச்சநிலையை இயேசு எட்டினபோது, தம்முடைய சீஷரிடம்: “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” என்று சொன்னார். பின்பு, “முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.” கடைசியாக வாதனையின் கழுமரத்தில், சங்கீதம் 22:1-ன் தீர்க்கதரிசன வார்த்தைகளின் நிறைவேற்றமாக, இயேசு: “என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று சத்தமிட்டுக் கூறினார். ஆனால் கடைசியில் கடவுள் இயேசுவைக் கைவிடவில்லை, ஏனெனில் இயேசு அவரிடமாகப் பரிபூரண உத்தமத்தைக் காத்தார். இவ்வாறு உண்மையானக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் பின்பற்றும்படி ஒரு மாதிரியை அளித்தார். இயேசு உத்தமத்தைக் காத்ததற்காக, யெகோவா அவரை உயிர்த்தெழுப்பி, எல்லாவற்றிலும் மிக உன்னதமான பரலோகங்களுக்கு அவரை உயர்த்துவதன்மூலம் பலனளித்தார். (மத்தேயு 26:38, 39; 27:46; அப்போஸ்தலர் 2:32-36; 5:30; 1 பேதுரு 2:21) அவ்வாறே தம்மிடமாக உத்தமத்தைக் காக்கும் மற்ற யாவருக்கும் கடவுள் பலனளிப்பார்.
இயேசு உத்தமத்தைக் காத்தது சாத்தானின் சவாலுக்கு ஒரு பூரண பதிலை அளித்ததுமட்டுமல்லாமல், தம்முடைய பரிபூரண மனித உயிரைப் பலியாகச் செலுத்தினது மீட்பின் கிரயத்தை அளித்தது. உத்தமத்தைக் காக்கும் மனிதர் இந்த ஆதாரத்தின்பேரில் நித்திய ஜீவனை அடையலாம். (மத்தேயு 20:28) முதலாவதாக, இயேசு, அபிஷேகம்பண்ணப்பட்ட ஒரு “சிறுமந்தை”யைக் கூட்டிச் சேர்க்கிறார், இவர்கள் பரலோகங்களின் ராஜ்யத்தில் அவரோடு உடன்சுதந்தரவாளிகளாகின்றனர். (லூக்கா 12:32) இதற்குப் பின்பு, ஒரு “திரள் கூட்டம்,” ‘பெரிதான உபத்திரவத்தைத்’ தப்பிப்பிழைக்கும்படி கூட்டிச் சேர்க்கப்படுகிறது. இவர்கள் பூமியில் கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சி எல்லையில் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்கும்படி அதிலிருந்து வெளிவருகின்றனர்.—தரிசனம் 7:9, 14-17, தி.மொ.
அந்தச் சமாதானமான ‘புதிய பூமிக்குரிய’ சமுதாயத்தின் பாகமாகும்படி உயிர்த்தெழுப்பப்படவிருக்கும் கோடிக்கணக்கான மரித்தோருக்குள், உத்தமத்தைக் காத்த யோபுவும் இருப்பார். (2 பேதுரு 3:13; யோவான் 5:28, 29) நம் பத்திரிகையின் பின்புற அட்டையில் சித்தரித்திருக்கிறபடி, உத்தமத்தைக் காத்ததனால் யோபு பலனளிக்கப்பட்டார். அப்போது யெகோவா “யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் . . . பின்னிலைமையை ஆசீர்வதித்தார்.” ‘தன் உதடுகளினால் பாவஞ்செய்யாத’ ஒருவராக அவர் ஆவிக்குரிய பலனடைந்திருந்தார். கடவுள் அவருடைய உயிரை மேலும் 140 ஆண்டுகள் நீடிக்கச் செய்தார். பொருளாதார வகையில், முன்பு அவருக்கிருந்த எல்லாவற்றிலும் இரட்டிப்பாய் அவருக்கு அருளினார். மேலும் யோபுக்கு “ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் . . . பிறந்தார்கள்.” அந்தக் குமாரத்திகள் தேசமுழுவதிலும் எவருக்கும் மேலாக மிக அதிக அழகுவாய்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். (யோபு 2:10; 42:12-17) ஆனால் இதெல்லாம், உத்தமத்தைக் காப்போர் “புதிய பூமி”யின் பரதீஸில் அனுபவிக்கவிருக்கிற அந்த ஆசீர்வாதங்களின் வெறும் முன்னுகர்வாக மாத்திரமே இருந்தன. பின்வரும் பக்கங்கள் விளக்கிக்காட்டப்போகிறபடி, நீங்களுங்கூட அந்த மகிழ்ச்சியில் பங்குகொள்ளலாம்!
[பக்கம் 4-ன் படம்]
உத்தமத்தைக் காத்தவராக இயேசு பரிபூரண முன்மாதிரியை வைத்தார்