ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை—கஷ்ட காலத்தில் பிரசங்கிப்பது
“கடைசிநாட்களில் [“கையாளுவதற்குக் கடினமான,” NW] கொடிய காலங்கள் வருமென்று” அப்போஸ்தலன் பவுல் முன்கூறினார். (2 தீமோத்தேயு 3:1) அந்த வார்த்தைகள் எவ்வளவு சரியாக நிரூபித்திருக்கின்றன! மத்திய அமெரிக்காவிலுள்ள எல் சால்வடார் மக்கள் இந்த வேதனைதரும் மெய்ம்மையை அனுபவித்திருக்கின்றனர். பத்தாண்டுக்கும் மேலாக அந்த நாடானது உள்நாட்டுப் போரில் மூழ்கியிருந்தது; இது பல்லாயிரக்கணக்கானோருக்குத் துன்பத்தையும் மரணத்தையும் கொண்டு வந்தது. அந்தப் போர் இப்போது முடிவடைந்துவிட்டாலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. போருக்குப் பிறகு குற்றச்செயல் மேலோங்கிவிட்டிருக்கிறது. உள்ளூர் டிவி உரையாளர் ஒருவர் சமீபத்தில் சொன்னார்: “வன்முறையும் களவும் இப்போது எங்களுடைய அன்றாட அப்பம்.”
இந்தக் குற்றச்செயல் அலையினால் யெகோவாவின் சாட்சிகள் விடுபட்டில்லை. அநேக ராஜ்ய மன்றங்களுக்குள் கள்வர்கள் பலவந்தமாகப் புகுந்து ஒலிபெருக்கி சாதனங்களைக் களவாடியிருக்கின்றனர். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயுதந்தரிக்கப்பட்ட இளைஞர் கும்பல்கள் கிறிஸ்தவ கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கையில், ராஜ்ய மன்றங்களைத் திடீரென தாக்கி, பணத்தையும் உவாட்ச்சுகளையும் ஆஜராயிருந்தவர்களின் இதர விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையாடி இருக்கின்றன. தங்களுடைய அன்றாட நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கையில், எண்ணிறந்த சாட்சிகள் திருடர்களால் கொல்லப்பட்டும் இருக்கின்றனர்.
இந்த இடையூறுகள் மத்தியிலும், எல் சால்வடாரிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் தொடர்ந்து கடினமாக உழைத்து வருகின்றனர். அவர்கள் இதை வேதப்பூர்வமான உத்தரவிற்குக் கீழ்ப்படிந்து செய்கின்றனர்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற்கு 13:10) பைபிள் அளிக்கும் ராஜ்ய நம்பிக்கைக்காக ஏங்கியிருக்கும் ஆட்கள் இந்த நாட்டில் இன்னும் அநேகம் பேர் இருக்கின்றனர், அவர்கள் யாவரையும் சென்றெட்ட சாட்சிகள் பிரயாசப்படுகின்றனர். சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல், பிரசங்க வேலையின் பலன்தரும் வழிமுறையாக நிரூபித்து வருகிறது.
ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை பெறும்போது, ஒரு சாட்சி பைபிளில் காணப்பட்டுள்ளபடி, எதிர்காலத்துக்கான கடவுளுடைய வாக்குறுதிகளைப் பற்றி இதர நோயாளிகளிடம் பேசக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டார். மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கிற ஒரு நபர் பரிதாபமாகப் புலம்பினார்: “சீக்கிரத்தில் நான் சாகப்போகிறேன்!” ஆனாலும் அந்த நோயாளியின் வாட்டமுள்ள தோற்றம், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பகருவதிலிருந்து அந்தச் சாட்சியைப் பின்வாங்கச் செய்யவில்லை. மாறாக, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்திலிருந்து அந்த மனிதனுக்கு அவர் சப்தமாக வாசித்துக் காட்டினார். சில நாட்கள் கழிந்த பிறகு, அம்மனிதன் மரண படுக்கையில் கிடப்பதாக விசனப்பட்டுக்கொண்டு சாட்சி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறினார்.
நான்கு வருடம் கழிந்து, இன்னொரு ஆஸ்பத்திரியில் அந்தச் சாட்சி மருத்துவ சிகிச்சை பெறவேண்டியதாக இருந்தது. அங்கே இருக்கையில் ஒரு நோயாளி அவரண்டை வந்து, “என்னை ஞாபகமிருக்கிறதா?” என்று கேட்டார். நான்கு வருடத்திற்கு முன்பு சந்தித்த நபராக அவர் இருந்தார், மரிக்கும் தறுவாயிலிருந்த அந்த மனிதனே! இந்த மனிதன் அவரைக் கட்டித்தழுவி, “நானுங்கூட இப்போது ஒரு யெகோவாவின் சாட்சி!” என்று சொன்னபோது என்னே ஓர் ஆச்சரியத் திளைப்பு. அந்த மனிதன் எதிர்காலத்தைப் பற்றி பைபிள் கூறும் நம்பிக்கையை ஏற்று, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து, யெகோவாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருந்தார். அவர் ஒரு சாட்சியாக மாத்திரமில்லாமல், சுமார் இரண்டு வருடங்கள், ஒழுங்கான பயனியராக முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டவராகவும் இருந்தார்.
இந்த விஷயத்தில், ஒரு சந்தர்ப்ப சாட்சி அமைப்பில் விதைக்கப்பட்ட சத்திய விதைகள், செயல்படும் இருதயத்தைச் சென்றெட்டியது. சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையப்பெறுவதற்கு மக்களுக்கு உதவும் இந்தச் சிலாக்கியம், ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களின்’ மத்தியிலும் பிரசங்க வேலையைத் தொடர மெய் கிறிஸ்தவர்களை உந்துவிக்கிறது.