பாரம்பரியம் சத்தியத்தோடு முரண்பட வேண்டுமா?
மார்ட்டின் லூத்தர், தான் சொல்வது சரி என்று உறுதியாக இருந்தார். பைபிள் அவர் சொல்வதை ஆதரித்ததாக நம்பினார். மறுபட்சத்தில், போலந்து நாட்டைச் சேர்ந்த வான்கணிப்பாளர் கோப்பர்னிக்கஸ் அந்நாளில் இருந்த பாரம்பரிய நம்பிக்கை தவறு என்று எண்ணினார்.
என்ன நம்பிக்கை? பூமி பிரபஞ்சத்தின் மையம், மற்றவை எல்லாம் அதைச் சுற்றி இயங்கியது என்ற நம்பிக்கை. பூமிதானே சூரியனைச் சுற்றிச் சென்றது என்பதுதான் உண்மை என்று கோப்பர்னிக்கஸ் கூறினார். லூத்தர் மறுத்து இவ்வாறு கூறினார்: “புதிதாக பெயர்பெற்ற வான்கணிப்பாளர் ஒருவர், பூமிதானே சூரியனைச் சுற்றிச் செல்கிறது, வானவெளியோ அல்லது வானவளாகமோ சூரியனோ அல்லது சந்திரனோ அல்ல என்பதைக் காண்பிப்பதற்கு முயற்சி செய்தபோது, அதை செவிகொடுத்துக் கேட்பதற்கு ஜனங்கள் இருந்தனர். —மேற்கத்திய தத்துவத்தின் சரித்திரம் (ஆங்கிலம்).
பாரம்பரிய நம்பிக்கைகள் பெரும்பாலும் உண்மைகளோடு, சத்தியத்தோடு முரண்பட்டன. அவை தீங்கு விளைவிக்கக்கூடிய காரியங்களையும்கூட ஜனங்கள் செய்யும்படி செய்விக்கமுடியும்.
ஆனால், பாரம்பரியம் எப்போதும் சத்தியத்தோடு முரண்படுகிறது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. உண்மையில், அப்போஸ்தலனாகிய பவுல், தான் அவர்களிடம் ஒப்படைத்திருந்த பாரம்பரியங்களைத் தொடர்ந்து பின்பற்றும்படி தன் நாளில் இருந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார்: “நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் [“பாரம்பரியங்களைக்,” NW] கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன்.”—1 கொரிந்தியர் 11:2; இதையும் காண்க: 2 தெசலோனிக்கேயர் 2:15; 3:6; NW.
‘பாரம்பரியங்கள்’ என்று பவுல் சொன்னபோது, எதை அர்த்தப்படுத்தினார்? வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 1118-ல் “பாரம்பரியம்” என்பதற்கு அவர் உபயோகித்த கிரேக்க வார்த்தை, பாரடாசிஸ், “வாய்மொழியாக அல்லது எழுத்து மூலம் கடத்தப்பட்டவை.” ஆங்கில வார்த்தையின் அர்த்தம், “தகவல், கோட்பாடுகள், அல்லது பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்பட்ட பழக்கவழக்கங்கள் அல்லது நிலைநாட்டப்பட்ட சிந்தனா முறைகளாக அல்லது செயல்களாக ஆனவை.”a ஏனென்றால் அப்போஸ்தலனாகிய பவுல் ஒப்புவித்த பாரம்பரியங்கள் ஒரு நல்ல ஊற்றுமூலத்திலிருந்து வந்தபடியால், கிறிஸ்தவர்கள் அதைக் கடைப்பிடிப்பது நன்மையானதாய் இருந்தது.
ஆனால், பாரம்பரியம் உண்மையானதாக இருக்கலாம் அல்லது பொய்யானதாக இருக்கலாம், நன்மையானதாக இருக்கலாம் அல்லது தீமையானதாக இருக்கலாம் என்பது தெளிவாயிருக்கிறது. உதாரணமாக, பிரிட்டிஷ் தத்துவஞானி பர்ட்ரன்ட் ரஸல், 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோப்பர்னிக்கஸ் போன்ற ஆட்களை பாராட்டுகிறார், ஏனென்றால் அவர்கள் பாரம்பரிய நம்பிக்கைகளைக் குறித்துக் கேள்வி கேட்பதற்கு தைரியமும் நேர்மையுமுடைய ஆட்களாய் இருந்தனர். “பண்டைய காலங்களிலிருந்து நம்பப்பட்டு வந்த காரியங்கள் பொய்யானவையாக இருக்கக்கூடும் என்ற அங்கீகாரத்தை” இவர்கள் வளர்த்துக் கொண்டனர். பாரம்பரியங்களை குருட்டுத்தனமாக பின்பற்றாமல் இருப்பதில் உள்ள ஞானத்தை நீங்களும் காண்கிறீர்களா?—மத்தேயு 15:1-9, 14-ஐ ஒப்பிடுக.
அப்படியானால், மத நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றியென்ன? அவை சரியானவை என்றும் தீங்கற்றவை என்றும் நாம் ஊகித்துக்கொள்ளலாமா? நாம் அதை எப்படி தெரிந்து கொள்ளலாம்? மத பாரம்பரியங்கள் உண்மையில் சத்தியத்தோடு முரண்படுகின்றன என்பதை நாம் கண்டுபிடித்தால் அப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அடுத்த கட்டுரை இக்கேள்விகளை ஆராயும்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்தது.
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
Cover: Jean-Leon Huens © National Geographic Society
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Universität Leipzig