பாரம்பரியம் சத்தியத்தோடு முரண்படும்போது
அபாயம்—தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. இப்படிப்பட்ட எச்சரிப்புகளைப் பார்த்து நாம் பழக்கப்பட்டிருக்கலாம். நஞ்சு கலக்கப்பட்ட “சூனியக்காரியின் கலவை” என்றழைக்கப்படும் கலவையால் சில தண்ணீர் வழங்கீடுகள் நச்சூட்டப்படுவதன் காரணமாக அநேக இடங்களில் வாழும் ஜனங்கள் தாங்கள் குடிக்கும் தண்ணீரைக் குறித்து கவனமாயிருக்கின்றனர். இந்த தூய்மைக்கேட்டின் காரணமாக, தண்ணீர் “உயிரை ஆதரித்து காப்பாற்றுவதற்கு” பதிலாக “நோய்க் கிருமிகளையும் . . . இரசாயன கறைபொருட்களையும் கடத்தும் தண்ணீராக” ஆகிவிடக்கூடும்.—தண்ணீர் தூய்மைக்கேடு (ஆங்கிலம்).
சத்திய தண்ணீர்களை மாசுபடுத்துதல்
சத்தியத்தோடு முரண்படும் பாரம்பரியங்கள் மாசுபடுத்தப்பட்டிருக்கும் தண்ணீர் வழங்கீடுகளைப் போன்று இருக்கின்றன. நாம் பேதைகளாக பாரம்பரியங்களை—ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்ட தகவல், எண்ணங்கள், நம்பிக்கைகள், அல்லது பழக்கவழக்கங்கள் போன்றவற்றை—உறுதியாகக் கடைப்பிடிக்கலாம். அவை உண்மையில் பொய்யான, தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் அடங்கிய “சூனியக்காரியின் கலவை”யால் மாசுபடுத்தப்பட்டிருக்கின்றன. மாசுபடுத்தப்பட்டிருக்கும் தண்ணீரைப் போன்று இவை சொல்லமுடியாத தீங்கை—ஆவிக்குரிய தீங்கை உண்டாக்கலாம்.
நம்முடைய பாரம்பரிய மத நம்பிக்கைகள் பைபிளின் பேரில் சார்ந்துள்ளன என்று நாம் உணர்ந்தாலும்கூட, நாம் அனைவரும் அவற்றை கவனமாக ஆராய்ந்து பார்க்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். மார்ட்டின் லூத்தர் தன்னுடைய நாளில் இருந்த பாரம்பரிய நம்பிக்கையை கடைப்பிடித்து கோப்பர்னிக்கஸை கண்டனம் செய்தபோது, தான் பைபிள் ஆதாரத்தைக் கொண்டிருந்ததாக நம்பினார். இருப்பினும், ‘இந்தக் காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால் நற்குணசாலிகளாய் இருந்த’ பண்டையகால பெரோயர்களின் சிறந்த முன்மாதிரியை லூத்தர் பின்பற்ற தவறினார்.—அப்போஸ்தலர் 17:10, 11.
பாரம்பரிய நம்பிக்கைகள் இயேசுவின் நாளில் இருந்த சில யூதர்களுக்கு ஏற்படுத்திய தீங்கை சிந்தித்துப் பாருங்கள். தங்கள் பாரம்பரியங்கள் உண்மை என்று அவர்கள் தீவிரமாக நம்பினர். இயேசுவின் சீஷர்கள் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கவில்லை என்று அவர்கள் எதிர்த்தபோது, “நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?” என்ற கேள்வியைக் கேட்பதன் மூலம் இயேசு அவர்களுக்கு சவால் விட்டார். (மத்தேயு 15:1-3) என்ன தவறு நடந்துவிட்டது? ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளை இயேசு எடுத்துக் கூறுகையில் அவர் அந்த பிரச்சினையை அறிந்து கொண்டார்: ‘மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் [கடவுளுக்கு] ஆராதனை செய்கிறார்கள்.’—மத்தேயு 15:9; ஏசாயா 29:13.
ஆம், கடவுளிடமிருந்து உதயமான சத்தியங்களுக்குப் பதிலாக, அவர்கள் மனிதர்களிடமிருந்து உதயமான கருத்துக்களை வைத்தனர், அல்லது, அதைவிட மோசமாக பேய்களிடமிருந்து உதயமான கருத்துக்களை கொண்டிருந்தனர். உதாரணமாக, வேதாகமங்களின் பேரில் உட்பார்வை, தொகுதி 1, பக்கம் 506, விளக்குகிறது: “ஒரு நபர் தன் உடைமைகளை ‘கொர்பான்’ அல்லது கடவுளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட வெகுமதி என்று அறிவித்துவிட்டால், அவருடைய பெற்றோர் எவ்வளவு தேவையில் இருந்தாலும் அவர் அதை அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்வதற்கென்று உபயோகிக்க முடியாது. ஆனால் அவர் அந்த உடைமைகளை தனக்கென்று தன் மரணம் வரையாக உபயோகிக்க வேண்டுமென்றால் உபயோகித்துக் கொள்ளலாம்.” சத்திய தண்ணீர்களை மாசுபடுத்திய மனித ஞானம் யூதர்கள் மீது ஆவிக்குரியப்பிரகாரமாய் கெட்ட பாதிப்புகளைக் கொண்டிருந்தது. நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த தங்கள் மேசியாவை பெரும்பான்மையர் வேண்டாம் என்று தள்ளியும் விட்டனர்.
கிறிஸ்தவமண்டலம் மாசுபடுத்துதலை மிகுதியாக்குகிறது
இயேசுவின் மரணத்துக்குப் பிறகு அதே போன்ற ஆவிக்குரிய தீங்கு ஏற்பட்டது. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள், புதிய போதனைகளுக்கான ஆதாரம் வாய்மொழியான பாரம்பரியங்களின் பேரில் சார்ந்துள்ளது என்று கூறி அதைப் பின்பற்றும்படி செய்தனர். மெக்ளின்ட்டாக் அண்ட் ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா ஆஃப் பிப்ளிக்கல், தியலாஜிக்கல், அண்ட் எக்லிஸியாஸ்டிக்கல் லிட்ரெச்சரின்படி, கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக்கொண்ட சிலர், அப்படிப்பட்ட பாரம்பரியம் “முதல் கிறிஸ்தவ சர்ச்சுகள் அப்போஸ்தலரிடமிருந்து வாய்மொழியாய் பெற்றுக்கொண்ட உபதேசம் என்றும் அப்போஸ்தலரின் காலத்திலிருந்து கடத்தப்பட்டவை என்றும் அவை அவர்களுடைய காலம் வரையாக சுத்தமாக பாதுகாக்கப்பட்டவை” என்றும் நம்பினர்.—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.
உண்மையில் இந்தப் பாரம்பரியங்களில் பெரும்பாலானவை கலப்படமான, தவறான எண்ணங்களாய் இருந்தன. சைக்ளோப்பீடியா விளக்குகிறபடி, இந்தப் புதிய தத்துவங்கள் “மற்ற பாரம்பரியங்களோடு வித்தியாசப்பட்டவையாய் மட்டுமல்லாமல், தங்கள் கைகளில் வைத்துக்கொண்டிருந்த அப்போஸ்தலருடைய எழுத்துக்களிலிருந்தே வித்தியாசமானவையாய் இருந்தன.” இது முழுவதுமாக எதிர்பார்க்கப்படாமல் இல்லை. அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை எச்சரித்திருந்தார்: “லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:8.
இன்றும்கூட, அநேக பாரம்பரிய நம்பிக்கைகள் ‘அப்போஸ்தலருடைய எழுத்துக்களிலிருந்தே வித்தியாசமானவையாய் இருக்கின்றன.’ கிறிஸ்தவமண்டலம் அதன் திரித்துவம், நரக அக்கினி, மனித ஆத்துமா அழியாமை, நாட்டுப்பற்று, விக்கிரக வணக்கம் போன்ற பேய்களால்-ஏவப்பட்ட அநேக கருத்துக்களைக்கொண்டு சத்திய தண்ணீர்களை நச்சுப்படுத்தியிருக்கிறது.a (1 தீமோத்தேயு 4:1-3) கிறிஸ்தவமண்டலத்தின் பாரம்பரிய போதனைகளாக ஆகியிருக்கும் பேய்களின் போதனைகளுக்கு பலியாகியிருப்பவர்களை மேற்கொண்டிருக்கும் ஆவிக்குரிய நோயைக் குறித்து சரித்திரம் சாட்சி பகருகிறது.—ஏசாயா 1:4-7-ஐ ஒப்பிடுக.
உண்மையில், இப்படி சத்தியத்தை மாசுபடுத்துதல் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. ஜனங்களின் மனங்களை பொய்களாலும் வஞ்சகத்தாலும் நச்சுப்படுத்துவதை ஏதேனில் ஆரம்பித்த சாத்தான், இந்த செயல்முறையை தொடர்ந்து நடப்பித்துக்கொண்டு வருகிறான். (யோவான் 8:44; 2 கொரிந்தியர் 11:3) நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தைப் பின்தொடர்ந்து மனித குடும்பம் பூமி முழுவதும் பரவ ஆரம்பிக்கையில், பேய்களால்-ஏவப்பட்ட தத்துவங்களாலும் கருத்துக்களாலும் மனித அறிவுக் களஞ்சியம் வேண்டுமென்றே நச்சுப்படுத்தப்படுவதன் விளைவுகளுக்கு எல்லா சமுதாயங்களிலும் உள்ள ஜனங்கள் பலியாகியிருக்கின்றனர்.
ஆவிக்குரிய மாசுபடுத்தலின் பாதிப்புகள்
அப்படிப்பட்ட ஆவிக்குரிய மாசுபடுத்தல் என்ன தீங்கை விளைவிக்க முடியும்? நம்முடைய உடல் ஆரோக்கியத்தின் மீது மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஏற்படுத்தும் பாதிப்புகளோடு நாம் அதை ஒப்பிடலாம். ஒரு வல்லுநர் சொல்கிறார்: “தோலின் மீது மாசுபடுத்தப்பட்ட தண்ணீர் ஏற்படுத்திய ஷிஸ்டோசோமியாசிஸ் நோய்க்கு (பில்ஹர்சியா) [இரத்தச்சோகை, அசௌகரியம், பொதுவாக உடல்நலமின்மை, மரணமும்கூட] சுமார் 20 கோடி ஜனங்கள் ஆளாகியிருக்கிறார்கள். குருடாவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாகிய டிரக்கோமா என்ற நோயினால் ஐம்பது கோடி ஜனங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், அது அசுத்தமான குளிக்கும் நீரினால் உண்டாகிறது. . . . சுமார் 200 கோடி மனித இனத்தின் அங்கத்தினர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் இல்லை.” (நம்முடைய தேசம், கோளம் [ஆங்கிலம்]) பொய்யான, பேய்த்தனமான போதனைகளால் கலப்படம் செய்யப்பட்டிருக்கும் பாரம்பரியங்களை பின்பற்றினதன் விளைவாக கோடிக்கணக்கான ஜனங்கள் ஆவிக்குரியப்பிரகாரமாய் சோர்வுற்றிருக்கின்றனர், குருடாக்கப்பட்டிருக்கின்றனர், கொல்லப்பட்டும்கூட இருக்கின்றனர்.—1 கொரிந்தியர் 10:20, 21; 2 கொரிந்தியர் 4:3, 4.
உதாரணமாக, அநேகர், இயேசு கிறிஸ்துவுக்கும் அவருடைய தகப்பனாகிய யெகோவா தேவனுக்கும் இடையே உள்ள உறவைக் குறித்து குழப்பமடைந்திருக்கின்றனர் அல்லது குருடாக்கப்பட்டிருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிக் கொண்ட சிலர் மத்தியில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களிலிருந்து யெகோவா என்ற கடவுளுடைய பரிசுத்த பெயரை எடுத்துவிடுவது ஒரு பழக்கமாக ஆனது. ஜெர்னல் ஆஃப் பிப்ளிக்கல் லிட்ரெச்சர் என்ற புத்தகத்தில் ஜார்ஜ் ஹாவர்ட் சொல்கிறார்: “எங்களுடைய எண்ணத்தின்படி, இந்த எபிரெய நான்கெழுத்துச் சொல்லை நீக்கிவிட்டதானது, ‘கர்த்தராகிய ஆண்டவர்’ மற்றும் ‘ஆண்டவராகிய கிறிஸ்து’ ஆகிய இருவருக்குமிடையே உள்ள உறவைக் குறித்து பூர்வ புறஜாதி கிறிஸ்தவர்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை உண்டாக்கியது.”
மனித ஆத்துமா அழியாதது என்ற வேதப்பூர்வமற்ற பாரம்பரியம் உண்டாக்கியிருக்கும் குழப்பம், மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றையும்கூட சிந்தித்துப் பாருங்கள். (ஒப்பிடுக: பிரசங்கி 9:5; எசேக்கியேல் 18:4.) மூதாதையர் வழிபாட்டுக்கு எவ்வளவு ஜனங்கள் அடிமைகளாகியிருக்கின்றனர் அல்லது மரித்தோர் அவர்களுக்குத் தீங்கு செய்வதற்கு மறுபடியும் வருவர் என்று எப்போதும் பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்? இந்த நம்பிக்கை ஜனங்கள் தங்களையும் மற்றவர்களையும் கொலை செய்வதற்கும்கூட உற்சாகப்படுத்தியிருக்கிறது.
மரணத்தின்போது தங்களை விட்டுப் பிரிந்துசென்ற ஆவிகள் மறுவாழ்க்கையில் மறுபடியும் சந்திக்கும் என்று அநேக ஜப்பானியர்கள் நினைக்கின்றனர். ஆகையால், தற்கொலை செய்துகொள்ளும் சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும்கூட கொலை செய்வது சிறந்தது என்று எண்ணியிருக்கின்றனர். ஜப்பானியர்கள் சிந்திக்கும் முறைகளின்பேரில் ஒரு ஆங்கில அகராதி பின்வருமாறு விளக்குகிறது: “ஜப்பானில் தற்கொலை எப்போதுமே கண்டனம் செய்யப்படுவதில்லை, ஆனால் ஒருவருடைய வினைமையான தவறுக்காக மன்னிப்புக் கேட்பதற்கு ஒரு ஏற்றுக்கொள்ளத்தக்க வழியாக பெரும்பாலும் கருதப்பட்டது . . . குடும்ப தற்கொலைகள்கூட பரிவிரக்கமான வார்த்தைகளால் பெரும்பாலும் அறிக்கை செய்யப்படுகின்றன.”
பாரம்பரியங்களை சோதித்து பாருங்கள்
பாரம்பரிய நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் குருட்டுத்தனமாக பின்பற்றுவதில் உட்பட்டிருக்கும் ஆபத்துக்களின் காரணமாக நாம் என்ன செய்ய வேண்டும்? முதல் நூற்றாண்டு முடிவில் அப்போஸ்தலனாகிய யோவான் தன் உடன் கிறிஸ்தவர்களுக்கு இந்தப் புத்திமதியைக் கொடுத்தார்: “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், [தண்ணீரை அதன் சுத்தத்துக்காக நீங்கள் சோதிப்பது போல] அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” (1 யோவான் 4:1; இதையும் காண்க: 1 தெசலோனிக்கேயர் 5:21.) ஒரு பாரம்பரியம் தீங்கானது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு ஏதோவொரு வகையான அதிகாரப்பூர்வமான அடிப்படை, நீங்கள் நம்புவதைப் பரிசோதிப்பதற்கு ஏதாவது ஒரு சுத்தமான தராதரம் தேவைப்படுகிறது.
பைபிள் அப்படிப்பட்ட ஒரு அடிப்படையாக உள்ளது. இயேசு கிறிஸ்து சொன்னார்: “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) அவர் கூடுதலாக சொன்னார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங் காலம் வரும். அது இப்பொழுதே வந்திருக்கிறது.” (யோவான் 4:23) கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையை உபயோகிப்பதன் மூலம், மானிட மற்றும் பேய்த்தனமான தத்துவங்களின் மாசுபடுத்தப்பட்ட தண்ணீர்களுக்குப் பதிலாக நீங்கள் சத்தியத்தின் தூய்மையான தண்ணீர்களைக் கண்டடைவீர்கள்.—யோவான் 8:31, 32; 2 தீமோத்தேயு 3:16.
சிறிதளவு மாசுபடுத்துகிற பொருட்களும்கூட அதிக பயங்கரமான கொடிய விளைவுகளைக் கொண்டு வரக்கூடும் என்பதை நினைவில் வையுங்கள். சில சமயங்களில் அதன் பாதிப்புகள் தெரிய வருவதற்கு அநேக வருடங்கள் எடுக்கலாம். “அசுத்தமான தண்ணீர் இந்த உலகில் அதிக ஆபத்தை விளைவித்து கொல்லும் அளவுக்கு ஆகியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இருபத்தைந்தாயிரம் மக்களாவது அசுத்தமான தண்ணீரை பயன்படுத்துவதால் மரித்துப் போகின்றனர்,” என்று உலக இயற்கை வளவாய்ப்பு பாதுகாப்பு யூனியனின் முன்னாள் பிரஸிடென்ட் ஷிரிடத் ராம்ஃபால் சொல்கிறார். ஆவிக்குரியப்பிரகாரமாய் கலப்படம் செய்யப்பட்டிருக்கும் பாரம்பரியங்கள் அதைக்காட்டிலும் இன்னுமதிக ஆபத்தானவை.
நீங்கள் ஒருவேளை பல வருடங்களாக பின்பற்றி வந்திருக்கும் பாரம்பரிய நம்பிக்கைகள் சத்தியத்தோடு முரண்படும் விஷயங்களாய் இருந்தால், அவற்றிலிருந்து விடுபட நீங்கள் தைரியம் உடையவர்களாய் இருக்கிறீர்களா? எச்சரிப்புகளுக்கு செவிகொடுங்கள். உங்களுடைய பாரம்பரியங்கள் கடவுளுடைய சுத்தமான சத்திய வார்த்தைக்கு இசைவாக உள்ளதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களையும் உங்களுடைய குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.—சங்கீதம் 19:8-11; நீதிமொழிகள் 14:15; அப்போஸ்தலர் 17:11.
[அடிக்குறிப்பு]
a அப்படிப்பட்ட போதனைகளுக்கு பைபிளில் ஆதாரம் இல்லை என்ற அத்தாட்சிக்காக வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பாருங்கள். இந்தப் புத்தகத்தை உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்திருக்கிறது.
[பக்கம் 7-ன் படம்]
கடவுளுடைய சத்திய வார்த்தை கலப்படமற்ற சுத்தமான தண்ணீரையுடைய நதியைப் போல் உள்ளது