ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
முன்னாள் எதிரிகள் யெகோவாவின் சேவையில் ஒன்றுபட்டனர்
“முதன்முதலில் யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி ஏதேனும் கேள்விப்பட்டிருந்தால், அது நான் பாஸ்னியாவில் ஆயுதம் தரித்த காவலனாக சேவை செய்தபோதுதான் இருக்கவேண்டும்,” என்று பிராங்கா விளக்குகிறார்.a
காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்பட்ட மருத்துவமனையில் காவல் பணியில் இருந்தார் பிராங்கா. டாக்டர்களில் ஒருவர் சாட்சிகளுடன் பைபிள் படித்துக்கொண்டிருந்தார், ஒருநாள் அவர் இரவுநேர வேலையில் இருந்தபோது பைபிளிலிருந்து தான் கற்ற அநேகத்தை பிராங்காவுக்கு விளக்கினார்.
அந்த இரவு பிராங்கா கேட்டக் காரியம், அவரை அவ்வளவாகத் தூண்டியதால், தன்னுடைய ஆயுதங்களை உடனடியாக ஒப்படைத்தார். அவர் சாட்சிகளுடன் தொடர்புகொண்டார், இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள விரும்பினார். கொஞ்ச காலத்திற்கு பிறகு, பிராங்கா ஐரோப்பாவின் வேறொரு நாட்டிற்கு சென்று ராஜ்ய மன்றத்தைத் தேடிக்கண்டுபிடித்து, யுகோஸ்லாவிய மொழியில் நடக்கும் சபை கூட்டத்திற்கு ஆஜரானார். அங்குதான் சிலாபாடானை பிராங்கா சந்தித்தார்.
சிலாபாடானும் பாஸ்னியாவிருந்து வந்தவர், பிராங்காவைப்போலவே அவரும் ஒரு விருப்பார்வ ஊழியராய் அதே போரில்—ஆனால் எதிரிகள் முகாமில்—பணியாற்றினார். சிலாபாடான் செர்பியர் சார்பில் க்ரோட்சனியருக்கு எதிராகப் போரிட்டார். அவர்கள் இருவரும் சந்திப்பதற்குள், சிலாபாடான் முழுக்காட்டப்பட்ட ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகிவிட்டிருந்தார். தன்னுடைய முன்னாள் எதிரியாகிய பிராங்கோவுக்கு பைபிள் படிப்பதற்கான அழைப்பைக் கொடுத்தார். படிப்பு முன்னேற முன்னேற, பிராங்கா யெகோவாவைப்பற்றி அதிகம் தெரிந்துகொண்டார், கடவுள்மீது அவருக்கிருந்த அன்பு வளர்ந்தது. இது, தன்னுடைய வாழ்க்கையைச் சிருஷ்டிகருக்கு ஒப்புக்கொடுக்க பிராங்காவை அசைவித்தது. அக்டோபர் 1993-ல் தன்னுடைய ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தினார்.
சிலாபாடான் எப்படி ஒரு யெகோவாவின் சாட்சியானார்? சிறிது காலத்திற்கு முன்பே பாஸ்னியாவில் போர்முனையை விட்டு வெளியேறினார். அவர் சாட்சிகளின் பிரசுரங்கள் சிலவற்றை படித்திருந்தார், ஆயினும் 1992-ன் ஆரம்பத்தில் தன்னுடைய வீட்டிற்கு சாட்சிகள் வரும்வரை கடவுளின் வார்த்தையில் அவருக்கு ஆர்வம் பெருகவில்லை. சிலாபாடானிடத்தில் பைபிள் படிப்பதற்கான அழைப்புடன் அவரைச் சந்தித்தது யார்? அவர்தான் மூயோ, அவரும்கூட பாஸ்னியாவிலிருந்து வந்தவர், ஆனால் ஒரு முகமதியராக வளர்க்கப்பட்டார். பைபிள் படிப்பு முன்னேறிக்கொண்டே இருக்கையில், ஒருகாலத்தில் எதிரிகளாக இருந்த மூயோவும் சிலாபாடானும், ஒருவருக்கொருவர் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரத்தைச் செலவிட்டனர்.
அன்றைய யுகோஸ்லாவியாவில் நடந்த போர் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்தது. ஆனால், யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரே சபையில் முழுநேர நற்செய்தி பிரசங்கிப்போர்களாக பிராங்கா, சிலாபாடான், மூயோ சேவிக்கிறார்கள். அவர்கள் இனம் மற்றும் வகுப்பு பூசலை மேற்கொண்டுவிட்டிருக்கின்றனர், இப்பொழுது சிருஷ்டிகராகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கையில், சமாதானத்தை நாடுகிறார்கள் அவர்கள்.
ஆனால், அத்தகைய மாற்றங்களை எவை கொண்டுவந்தன? யெகோவாவின்மீது அவர்களுக்கிருந்த அன்பு, பைபிளின் பேரில் அவர்களுக்கிருந்த மதிப்பு, பைபிள் சத்தியத்தை தங்கள் வாழ்க்கையில் பொருத்துவதற்கு அவர்களுக்கிருந்த ஆர்வம் ஆகியவையே மாற்றங்களைக் கொண்டுவந்தன. பரிசுத்த வேதாகமம் சொல்வதைப்போல்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.”—எபிரெயர் 4:12.
[அடிக்குறிப்பு]
a புனைபெயர் உபயோகிக்கப்பட்டுள்ளது.