எல்லாருக்கும் மனித உரிமைகள்—உலகளவில் நிழல் நிஜமாகும்!
அனுபவம் வாய்ந்த மனித உரிமைகள் வழக்கறிஞர் ஒருவரிடம், “மனித உரிமை மீறல்களுக்கு அடிப்படை காரணம் என்ன?” என்று கேட்டபோது: “பேராசை, அரசியலிலும் பொருளாதாரத்திலும் பலம் படைத்திருக்க வேண்டும் என்ற பேராசைதான் காரணம்” என பதிலளித்தார். பேராசை என்பது மனிதனின் மனதில் தோன்றுவதால் அவனுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதையே மனித உரிமை மீறல்கள் வெளிப்படுத்துகின்றன என்பது தெளிவு. மனித உரிமை மீறல்களுக்கு மற்றொரு காரணம் தேசப்பற்று. என் நாடுதான் முதன்மையானது என்ற எண்ணம் மனித உரிமை மீறல்களைத் தூண்டிவிடுகிறது. ஆகவே, ‘உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய ஓர் உலக அரசாங்கம் வந்தால்தான்’ மனித உரிமைகள் சாத்தியமாகும் என சட்டம் மற்றும் பொருளாதாரத்திற்கான டச் பேராசிரியர் யான் பெர்கௌர் கூறுகிறார்.
வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகமுழுவதிலும் உள்ள அனைவருக்கும் மனித உரிமைகள் கிடைப்பதற்கு குறைந்தபட்சம் இரண்டு காரியங்களில் மாற்றம் ஏற்படவேண்டும். அதாவது மனித மனமும் அரசாங்கமும் மாற வேண்டியது அவசியம். இவை ஏற்படும் என்று நம்புவதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா?
மாற்றத்திற்கான இரண்டு காரணங்கள்
ஐநாவின் மனித உரிமைகள் கல்விக்கான தசாப்தம் ஆரம்பித்து இப்போது ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால், ஒரு சர்வதேச தன்னார்வ அமைப்பு நடத்திவரும் கல்வித்திட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் மனங்களை மாற்றுவதில் பல பத்தாண்டுகளாக வெற்றி பெற்று வந்திருக்கிறது. இதன் விளைவாக இந்த தனிநபர்கள் தங்கள் அயலகத்தாரை கண்ணியத்தோடு நடத்துகின்றனர். யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்தத் திட்டம் உலகமுழுவதிலும் 230-க்கும் அதிகமான பிரதேசங்களில் நடைபெறுகிறது. அது வெற்றி பெறுவதற்கு காரணம் என்ன?
அதற்கு ஒரு காரணம், உலகளாவிய இந்தப் பைபிள் கல்வித்திட்டம் மனித உரிமைகளின் ஆரம்பத்தைப் பற்றி மக்களுக்கு தெளிவாக புரிய வைக்கிறது. நியாயத்தன்மையும் பகுத்தறிவும் இருப்பதால் மனிதனுக்கு உரிமைகள் இருக்கின்றன என்று மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழியும்கூட கூறுகிறது.
ஆகவே, நியாயத்தன்மை மற்றும் மனச்சாட்சிக்கான இந்தத் திறமையை மேலான, தெய்வீக ஊற்றுமூலத்திலிருந்தே மனிதன் பெற்றிருக்க வேண்டும். (பக்கம் 13-ல் உள்ள “மனித உரிமைகளின் ஊற்றுமூலம்” என்ற பெட்டியைக் காண்க.) இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் உங்கள் அயலகத்தாரை நிச்சயம் மரியாதையோடு நடத்துவீர்கள். உங்கள் மனதிருப்திக்காக மட்டுமல்ல, அதையும்விட முக்கியமாக உங்கள் சிருஷ்டிகரிடம் அன்பும் பயபக்தியும் இருப்பதால் அவருடைய சிருஷ்டிகளை கண்ணியத்தோடு நடத்தவேண்டும் என்று விரும்புகிறீர்கள். இவ்வாறு விரும்புவது, “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக” என்றும் “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என்றும் சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக இருக்கிறது. (மத்தேயு 22:37-39) சிருஷ்டிகர் மீது ஆழ்ந்த மரியாதையுள்ள ஒருவர் தன் அயலானுடைய உரிமைகளை அசட்டை செய்யமாட்டார்; ஏனென்றால் அவை கடவுளிடமிருந்து பெற்ற ஒரு சொத்தாகும். ஆகவே, மனித உரிமைகளை மீறுவது என்பது சொத்துக்களைத் திருடுவதாகும்.
கல்வியில் புதுமை
யெகோவாவின் சாட்சிகளுடைய இந்தக் கல்வி திட்டம் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதில் எவ்வளவு பலனுள்ளதாக இருக்கிறது? இதைக் கண்டுபிடிக்க சிறந்த வழி ஒன்று இருக்கிறது. “ஞானமானது அதன் செயல்களால் நீதியுள்ளதென்று தீர்க்கப்படும்” என்று இயேசு சொன்னதால் இந்தத் திட்டத்தினால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைக் கவனிப்பதே அந்த வழியாகும்.—மத்தேயு 11:19, NW.
நியூ யார்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் வளாகத்தின் சுவரில் புகழ்பெற்ற இவ்வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கின்றன: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” பைபிள் புத்தகமாகிய ஏசாயா 2-ம் அதிகாரம் 4-ம் வசனத்திலிருந்து இந்த மேற்கோள் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், மனித உரிமை மீறல்கள் பெருமளவில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான ஒரு முக்கிய வழி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதே என ஐநா சுட்டிக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல, யுத்தமானது ‘மனித உரிமைகளுக்கு எதிரிடையானது’ என ஐநா வெளியிட்ட பிரசுரம் ஒன்றும் ஒப்புக்கொள்கிறது.
யெகோவாவின் சாட்சிகளுடைய கல்வி திட்டம், ஏசாயாவின் வார்த்தைகளை வெறுமனே கற்சுவரில் எழுதி வைக்கவில்லை. அது, அந்த வார்த்தைகளை மனித இருதயங்களில் ‘எழுதுகிறது.’ (எபிரெயர் 8:10-ஐ ஒப்பிடுக.) எவ்வாறு? மனித இனம் என்ற ஒரேயொரு இனம் மட்டுமே இருக்கிறது என்ற பைபிளின் கருத்தை இந்தத் திட்டம் போதிக்கிறது. (அப்போஸ்தலர் 17:26) இதனால் இனம், தேசியம் போன்ற கண்ணாடிச் சுவர்கள் தகர்த்தெறியப்படுகின்றன. இந்தத் திட்டத்தில் கற்பவர்கள் ‘தேவனைப் பின்பற்ற’ வேண்டும் என்ற விருப்பத்தை வளர்த்துக் கொள்கின்றனர். தேவனைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: “[அவர்] பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—எபேசியர் 5:1; அப்போஸ்தலர் 10:34, 35.
பைபிளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கல்வி திட்டத்தின் பலனாக இன்றுள்ள கோடிக்கணக்கான மக்கள் ‘இனிமேலும் யுத்தத்தைக் கற்பதில்லை’ என்று தீர்மானித்துவிட்டனர். அவர்களுடைய மனதிலும் இருதயத்திலும் ஏற்கெனவே மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஏற்பட்ட மாற்றமும் நிலையான ஒன்று. (பக்கம் 14-ல் உள்ள “சமாதான கல்வி” என்ற பெட்டியைக் காண்க.) யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்படும் இந்த அடிப்படைக் கல்வி திட்டத்தினால் இப்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,000-க்கும் அதிகமான ஆட்கள் பயனடைகின்றனர்; பிறகு உலகமுழுவதும் இருக்கும் இந்தச் சமாதான பறவைகளின் கூட்டத்தில் சேர்ந்து கொள்கின்றனர்.
இவர்களின் மன மாற்றத்தினால் யுத்தத்தில் கலந்துகொள்ளாமல் மனித உரிமைகளை மதிக்க எடுக்கும் தீர்மானம் எவ்வளவு உறுதியானது? மிக மிக உறுதியானது. இதற்கு ஓர் உதாரணம், இரண்டாம் உலக யுத்தத்தின்போது முக்கியமாக நாசி ஜெர்மனியில், யெகோவாவின் சாட்சிகள் மனித உரிமைகளை மதிக்கிறவர்கள் என்பது முற்றுமுழுக்க சோதிக்கப்பட்டது. சரித்திர ஆசிரியர் பிரைன் டென் இவ்வாறு கூறினார்: “யெகோவாவின் சாட்சிகள் நாசிசத்திற்கு ஒத்துவராதவர்கள். அவர்கள் அரசியலில் நடுநிலைமை வகித்ததே நாசிக்களுக்கு மிகவும் கடுப்பாக இருந்தது. ஏனென்றால், விசுவாசிகளில் ஒருவர்கூட ஆயுதங்களைக் கையில் எடுக்கமாட்டார் என்பதை இது அர்த்தப்படுத்தும்.” (நாசிப்படுகொலைக்கு சர்ச்சின் பதில் [ஆங்கிலம்]) “ராணுவத்தில் வேலைசெய்ய மறுத்ததால் அநேகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது . . . , அல்லது பைத்தியக்கார ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்” என கிறிஸ்தவத்தின் சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் பால் ஜான்சன் கூறினார். அப்படியிருந்தும் அவர்கள் உறுதியாக நிலைநின்றனர். “கொந்தளிக்கும் சமுத்திரத்தின் மத்தியில் மூழ்கிவிடாமல் நிமிர்ந்து நின்ற ஒரு குட்டி தீவு” என சமூகவியலாளர் அன்னா பாவெல்ஸின்ஸ்கா அந்தச் சாட்சிகளை விவரித்தார்.
இன்றுள்ள எல்லா மக்களுமே இவர்களைப் போல உறுதியாக இருந்து ‘யுத்தத்தைக் கற்றுக்கொள்ளவில்லை’ என்றால் இந்த உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! மனித உரிமை மீறல்கள் எவ்வளவாய் குறைக்கப்படும் அல்லவா?
ஓர் உலக அரசாங்கம்—‘வெறும் கற்பனையா?’
‘மனித மனங்களை மாற்றுவது மிகவும் கடினம் என்றால் ஓர் உலக அரசாங்கத்தை அமைப்பது வெறும் கற்பனைதான்’ என ஐநா ஊழியர் ஒருவர் கூறினார். தேசங்கள் தங்கள் ஆட்சி உரிமையை ஐநாவிடமோ வேறெந்த அமைப்பிடமோ விட்டுக்கொடுக்க மனதில்லாதிருப்பது இதையே கோடிட்டுக் காட்டுகிறது. ஆனால் ஓர் உலக அரசாங்கம் என்ற எண்ணத்தையே நிராகரிப்பவர்கள், “உலக பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மாற்று ஏற்பாடுகளைப் பற்றியும் சொல்லவேண்டும்; இது அவர்களின் தார்மீக பொறுப்பு. என்றபோதிலும், மாற்று ஏற்பாடுகள் வேறு எதுவுமே இல்லை” என பேராசிரியர் பெர்கௌர் கூறுகிறார். அதாவது, மனித ஏற்பாடுகள் எதுவுமே இல்லை. ஆனால் மனிதனுக்கு அப்பாற்பட்ட ஊற்றுமூலத்திலிருந்து ஒரு தீர்வு இருக்கிறது. அது என்ன?
மனித உரிமைகளுக்கு அடிப்படையாக அமையும் திறமைகளுக்கு சிருஷ்டிகரே ஊற்றுமூலர் என பைபிள் கூறுகிறது. அதைப் போலவே, அந்த உரிமைகள் எல்லாருக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்தும் ஓர் உலக அரசாங்கத்தின் ஊற்றுமூலரும் அவரே எனவும் அது கூறுகிறது. இந்தப் பரலோக அரசாங்கத்தைப் பார்க்க முடியாது என்றாலும் அது நிஜமான ஒன்று. கர்த்தருடைய ஜெபம் என பொதுவாக அறியப்பட்டுள்ள ஜெபத்தைச் சொல்லும்போது லட்சக்கணக்கானோர் தங்களை அறியாமலேயே இந்த அரசாங்கத்திற்காகத்தான் ஜெபம் செய்கின்றனர்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:10) கடவுள், சமாதான பிரபுவாகிய இயேசு கிறிஸ்துவை அந்த ராஜ்ய அரசாங்கத்திற்கு அரசராக நியமித்திருக்கிறார்.—ஏசாயா 9:6.
மற்ற காரியங்களைச் செய்வதோடுகூட, யுத்தத்தை என்றென்றுமாக நீக்குவதன் மூலம் நிலையான உலகளாவிய மனித உரிமைகள் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதில் இந்த உலக அரசாங்கம் வெற்றி பெறும். “அவர் [சிருஷ்டிகர்] பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்” என பைபிள் தீர்க்கதரிசனம் உரைக்கிறது.—சங்கீதம் 46:9.
உலகளாவிய விதத்தில் இது எவ்வளவு சீக்கிரத்தில் நிகழும்? யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் படிப்பு திட்டம் இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலை அளிக்கும். இந்தத் திட்டத்தை அறிந்துகொள்ளுங்கள் என்று உங்களை உற்சாகப்படுத்துகிறோம்.a நீங்கள் மனித உரிமைகளைப் பற்றி அக்கறை உள்ளவர்களாக இருந்தால் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பைபிள் படிப்பு திட்டத்தைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால் இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்பவர்களை அல்லது நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலிருக்கும் யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்ளுங்கள். இத்திட்டம் இலவசமானதே.
[பக்கம் 13-ன் பெட்டி]
மனித உரிமைகளின் ஊற்றுமூலம்
“எல்லா மனிதர்களும் சுதந்திரத்துடனும், சமத்துவத்துடனும், சம உரிமையுடனும் பிறந்திருக்கிறார்கள்” என மனித உரிமைகள் பற்றிய அனைத்துலக உறுதிமொழி பிரிவு 1 கூறுகிறது. கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு தண்ணீரைச் சுமந்துசெல்லும் ஆற்றைப்போல, மனித உரிமைகள் என்பது பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படும் பிறப்புரிமையாக விவரிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் என்ற இந்த ஆறு எங்கிருந்து தொடங்கியது?
மனிதருக்கு உரிமைகள் இருப்பதற்கு காரணம் அவர்கள், “நியாயத்தன்மை மற்றும் மனசாட்சிக்கான திறமை” பெற்றிருப்பதே என அனைத்துலக உறுதிமொழி கூறுகிறது. “மனிதன், நியாயத்தன்மையும் பகுத்தறிவும் உள்ளவனாக இருப்பதால் பூமியிலுள்ள மற்ற சிருஷ்டிகளிலிருந்து வேறுபட்டவன். இதன் காரணமாகவே, மற்ற சிருஷ்டிகள் அனுபவிக்காத சில உரிமைகளையும் சுதந்திரங்களையும் அனுபவிக்க அவனுக்கு தகுதி இருக்கிறது” என ஐநா பிரசுரம் ஒன்று விளக்குகிறது. (சாய்வெழுத்துக்கள் எங்களுடையவை.) ஆகவே, நியாயத்தன்மையும் மனசாட்சியும் பெற்றிருப்பதே மனித உரிமைகளைப் பெறுவதற்கான அடிப்படை. விஷயம் இப்படியிருக்க, மனிதனின் நியாயத்தன்மை மற்றும் மனசாட்சிக்கான ஊற்றுமூலமே அவனுடைய மனித உரிமைகளுக்கான ஊற்றுமூலமாகவும் இருக்கவேண்டும்.
மனித உரிமைகள் நியாயத்தன்மையோடும் மனசாட்சியோடும் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்ற இந்தக் கூற்று, பரிணாம கோட்பாட்டை நம்புகிற மனித உரிமை ஆதரவாளர்களுக்கு ஒரு பிரச்சினையைக் கிளப்புகிறது. வளர்ந்துவரும் உயிர் என்ற பரிணாமத்தை ஆதரிக்கும் ஆங்கில புத்தகம் இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “படிப்படியான [பரிணாம வளர்ச்சியின்] விளைவாக . . . அழகிற்கும் சத்தியத்திற்குமான ஆவல், இரக்கம், சுதந்திரம், பரந்த மனம் போன்ற அருமையான குணங்கள் எப்படி தோன்றின என்ற கேள்வியை ஆராயும்போது நாம் வாயடைத்து நிற்கிறோம்.” அப்படி இருப்பதும் சரிதானே. மனிதனைவிட தாழ்வான, நியாயத்தன்மையும் மனசாட்சியும் இல்லாத மூதாதையரிடமிருந்து அவன் இந்தக் குணங்களைப் பெற்றான் என்று கூறுவது எப்படி இருக்கிறது தெரியுமா? தண்ணீர் இல்லாத கிணற்றிலிருந்து ஓர் ஆறு பாய்ந்தோடுகிறது என்று சொல்வதைப் போலிருக்கிறது.
நியாயத்தன்மை மற்றும் மனசாட்சிக்கான மனிதனின் திறமை அவனைவிட தாழ்வான ஊற்றுமூலத்திலிருந்து வந்திருக்க முடியாதாகையால் அவனைவிட உயர்வான ஓர் ஊற்றுமூலத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். மனிதர்கள், மிருகங்களைப் போலில்லாமல் கடவுளுடைய ‘சாயலில்’ படைக்கப்பட்டனர் என்று பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 1:27) ஆகவே, மனித உரிமைகளோடு சம்பந்தப்பட்ட குணங்களான நியாயத்தன்மையும் மனசாட்சியும் அவர்களுக்கு மட்டுமே இருக்கிறது. இதன் காரணமாகவே, மனிதனுக்கு தார்மீக உரிமைகள் இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு நியாயமான பதில், “அவர்களுக்கு இயல்பான தகுதி அல்லது கண்ணியம் இருக்கிறது அல்லது . . . அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள்” என்பதே என்று மனித உரிமைகள்—நியாயப்படுத்துதலும் பொருத்துதலும் பற்றிய கட்டுரைகள் என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது.
[பக்கம் 14-ன் பெட்டி/படங்கள்]
சமாதான கல்வி
சில வருடங்களுக்கு முன் பால்கன் நாடுகளில் யுத்தம் தலைவிரித்தாடியது. அப்போது, போஸ்னியாவின் குரோஷிய பகுதியிலிருந்த ஒரு கிளினிக்கில் பிராங்கோ என்பவர் ஆயுதம் தாங்கிய சிப்பாயாக வேலை செய்தார்.* அந்தக் கிளினிக்கில் இருந்த ஒரு டாக்டர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் இரவு, தான் படித்துத் தெரிந்துகொண்டவற்றை பிராங்கோவிடம் அவர் கூறினார். அதைக் கேட்ட பிராங்கோவின் உள்ளம் நெகிழ்ந்தது; ஆகவே இனி ஆயுதங்களை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சில காலம் கழித்து அவர் இன்னொரு ஐரோப்பிய நாட்டில் குடியேறினார். அங்கு யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் ஒன்றிற்கு சென்றபோது ஸ்லாபடான் என்பவரைச் சந்தித்தார்.
ஸ்லாபடானும் போஸ்னியாவைச் சேர்ந்தவரே. பிராங்கோ பங்கெடுத்த அதே யுத்தத்தில்தான் அவரும் பங்கெடுத்தார், ஆனால் எதிர் தரப்பில். ஸ்லாபடான், செர்பியர்களுக்கு ஆதரவாக குரோஷியர்களை எதிர்த்து போரிட்டார். இவர்கள் இருவரும் சந்திப்பதற்கு முன்னரே ஸ்லாபடான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார்; தன் முன்னாள் எதிரியான பிராங்கோவுக்கு பைபிள் படிப்பு நடத்த முன்வந்தார். பைபிள் படிப்பில் முன்னேற்றம் ஏற்படுகையில் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் மீது பிராங்கோவிற்கு இருந்த அன்பு அதிகரித்தது. சீக்கிரத்திலேயே, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக வேண்டுமென தீர்மானித்தார்.#
ஸ்லாபடான் எவ்வாறு ஒரு சாட்சியானார் தெரியுமா? தன்னுடைய முன்னாள் எதிரி ஒருவருடைய உதவியின் மூலமே. அதெப்படி? போஸ்னியாவில் போர் நடந்த பகுதியிலிருந்து ஸ்லாபடான் திரும்பி வந்தபிறகு மூயோ என்பவர் அவரைச் சந்தித்தார். மூயோவும் போஸ்னியாவைச் சேர்ந்தவரே; ஆனால், ஸ்லாபடானுடையதைப் போலில்லாமல் முற்றிலும் வித்தியாசமான ஒரு மதத்தைச் சேர்ந்தவராக அவர் வளர்க்கப்பட்டிருந்தார். இப்போது மூயோ யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தார். அவர்கள் இருவரும் முன்னாள் எதிரிகளாக இருந்தபோதிலும் மூயோவோடு பைபிளைப் படிக்க ஸ்லாபடான் ஒப்புக்கொண்டு பின்னர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார்.
ஆழமாக வேரூன்றிய இன வெறுப்பை பிடுங்கி எறிந்துவிட்டு முன்னாள் எதிரிகள் நண்பர்களாக மாறியது எப்படி? பைபிளைப் படித்து, யெகோவா தேவனுக்கான அன்பை வளர்த்துக்கொண்டு, ‘ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட’ விருப்பமுள்ளவர்களாக இருந்ததால். (1 தெசலோனிக்கேயர் 4:9) “பைபிளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நியமங்களை அவர்கள் இப்பொழுதே பின்பற்றுவதுதான் அவர்களிடையே சமாதானம் நிலவுவதற்கு அடிப்படை காரணம்” என யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி பேராசிரியர் வாய்ச்செக் மாஜெலெஸ்கீ கூறுகிறார்.
[அடிக்குறிப்புகள்]
*இந்தப் பெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லா பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.
#முதலில் தன்னோடு பேசிய டாக்டரும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார் என பிராங்கோ பின்னர் அறிந்தபோது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.
[பக்கம் 11-ன் படங்கள்]
மனித மனமும் அரசாங்கமும் எப்போதாவது மாறுமா?
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
பைபிள் கல்வி சாதகமான மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது